தலையங்கம்: ஆணைகள்+அறிக்கைகள்= அந்நியமாகும் மாற்றுத்திறனாளிகள்:


graphic உணர்ந்ததைச் சொல்கிறோம் உலகிற்கு என்ற வாசகம் பொறிக்கப்பட்ட விரல்மொழியரின் சின்னம்
 பள்ளிக்கல்வித்துறையின் சார்பில், மாணவர்களுக்கு 14 வகையான விலையில்லாத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் இயங்கும் சிறப்புப் பள்ளிகளில் இந்த திட்டமானது முறையாக சென்று சேர்வதில்லை. காரணம் நலத்துறையின் மேம்போக்கான அணுகுமுறை.

பள்ளிக்கல்வித்துறையோடு இணைந்து  இதனை முறையாகக் கண்காணித்து ஒருங்கிணைக்க வேண்டிய மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையரகம், தனக்கும் அதற்கும் தொடர்பில்லாததுபோல நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள், எங்களுக்கு அறிக்கை மட்டும் தவறாமல் அனுப்பிவிடுங்கள்என்றுசிறப்புப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்குப் பொறுப்பைக் கைமாற்றும்  ரீதியில் ஒரு சுற்றறிக்கை அனுப்பியதோடு தன் கடமையை முடித்துக்கொண்டுவிட்டது.

அனைவருக்கும் கல்வித்திட்டம், எமிஸ் போன்ற ஒருங்கிணைப்புகளால் மேல்நிலை, உயர்நிலை, நடுநிலை சிறப்புப் பள்ளிகள், தொடர்புடைய மாவட்ட கல்வி அலுவலகங்களைத் தொடர்புகொண்டு விலையில்லாத் திட்டங்களில் பயன்பெறுகிறார்கள். அதுவும் அந்தந்த தலைமை ஆசிரியர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களின் ஒத்திசைவையும் பொருத்தது. கல்வி அலுவலர்கள் வழங்கித்தான் ஆகவேண்டும் என்ற எந்தக் கட்டாயமும் இல்லை.

தொடக்க நிலை  சிறப்புப் பள்ளிகளில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் இந்தத் திட்டத்திலிருந்து முழுமையாகவே விலக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதே கள எதார்த்தம். அத்தோடு பள்ளிக்கல்வித்துறையால் மாணவர்களுக்கு வழங்கப்படும் எழுது பொருட்கள், கணிதம் தொடர்பான வடிவியல் பொருட்கள், குறிப்பேடுகள் போன்றவை பார்வை மாற்றுத்திறனாளி குழந்தைகள் பயன்படுத்த இயலாதவை. அவர்களுக்கென்று பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட எழுது பலகைகள், கணிதம் தொடர்பான வடிவியல் பொருட்களைத் தருவித்து தருவதுதானே சம வாய்ப்பு.

இந்த வாய்ப்பினை தொடர்புடைய பள்ளிக்கல்வித்துறையோடு இணைந்து செயலாற்றி, உறுதி செய்ய வேண்டியது மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் தலையாய பணி. ஆனால், இந்தப் பணியின் அவசியம் குறித்து துறையின் தலைமையோ, அதன் அதிகாரிகளோ உணர்ந்ததாகவே தெரியவில்லை.

இப்படித்தான் கஜாப்புயல் சேதங்களின்போதும், ஒரே ஒரு ஆணையின் மூலம் பொறுப்பை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்களுக்கு நகர்த்திவிட்டு இருந்துவிட்டது மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகம். தொடர் கண்காணிப்போ, நேரடிக் கள ஆய்வுகளோ இல்லாததால், நிவாரணம் பெறுவதில் மாற்றுத்திறனாளிகள் அடைந்த துயரம் சொல்லில் அடங்காதது.

இத்தகைய அணுகுமுறைகளால்தான், துறைக்கும் மாற்றுத்திறனாளிகளுக்குமிடையே ஒருவித அந்நியத்தன்மை மேலோங்கி காணப்படுகிறது. ஆணைகள் பிறப்பிப்பதும், அறிக்கைகள் கேட்பதுமே நலத்துறையின் பணியல்ல, அதற்குச் சமமான களப்பணிகளிலும் துறை தன்னைஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். அத்தகைய களப்பணிகள் மூலம்தான், பொதுச்சமூகத்திடம் மாற்றுத்திறனாளிகளுக்கான சம வாய்ப்பைக் கோரி, உண்மையான சம பங்கேற்பை உறுதி செய்ய இயலும்.

உணர்ந்ததைச் சொல்கிறோம் உலகிற்கு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக