சந்திப்பு: "பார்வையற்றோர் கூட்டத்தோடு இருக்கும்போது கொஞ்சம் அசௌகரியமாகவே உணர்கிறேன்" திருநங்கை சனா


தொகுப்பு: ஜோ. யோகேஷ்

graphic சனா
 பல வித்தியாசமான பார்வையற்ற மனிதர்களை அறிமுகம் செய்துவரும் விரல்மொழியரின் சந்திப்பு பகுதியில் இந்த இதழுக்காக நாம் சந்திக்கவிருப்பது சனா என்கிற  பார்வையற்ற திருநங்கையை. திரு. பாலகணேசன் சனாவுடன் நிகழ்த்திய அலைபேசி உரையாடலை சுவாரசியம் குறையாமல்  வரியாடலாக கொடுக்க முயற்சித்திருக்கிறேன்.

பாலகணேசன்: வாசகர்களுக்கு உங்களை அறிமுகம் செய்துகொள்ளலாமா?
சனா: எனது பெயர் மருதமுத்து [சனாவின் எதிர்காலம் கருதி மாற்றப்பட்டுள்ளது]. சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகிலுள்ள வெல்லாரம். பிறவியிலே குறைப்பார்வையால் பாதிக்கப்பட்டதால் ஒன்று முதல் பத்தாம் வகுப்புவரையிலான கல்வியை தென் தமிழகத்தின் ஒரு பார்வையற்றோர் பள்ளியிலும் மேல்நிலைப் படிப்பை ஒருங்கிணைந்த கல்விமுறையில் மற்றொரு பள்ளியிலும் படித்தேன். இளங்கலை வரலாறு முடித்திருக்கிறேன்.

பாலகணேசன்: உங்களுக்குள் பெண் தன்மையை எப்போது உணரத் துவங்கினீர்கள்?
சனா: பதிமூன்று வயதிலிருந்து என நினைக்கிறேன். பள்ளி கலைநிகழ்ச்சிகள் அனைத்திலும் விரும்பி பெண் கதாப்பாத்திரங்களை ஏற்று சிறப்பாகப் பங்குபெறுவேன்.

பாலகணேசன்: உங்களுக்குள் இருக்கிற வித்தியாசத்தை அறிந்துகொண்ட சக பள்ளிக்கூட  மாணவர்களால் உங்களுக்கு ஏற்பட்ட சங்கடங்கள் பற்றி சொல்லுங்களேன்?
சனா: நிறைய தொல்லைகளை அனுபவித்திருக்கிறேன். அவைகளைப் பெரிதாக எடுத்துக்கொண்டதில்லை. பள்ளியில் பாலியல் ரீதியாக என்னை அனுகியவர்களை முடிந்தவரை தவிர்த்தே வந்திருக்கிறேன். சில தவிர்க்கமுடியாத சூழலில் நெருங்கிய நண்பர்களோடு இணங்கியிருக்கிறேன்.

பாலகணேசன்: பள்ளி நாட்களில் உங்களுக்கு ஆசிரியர்களால், பணியாளர்களால் ஏதேனும் அசௌகரியங்கள் ஏற்பட்டிருக்கின்றதா?
சனா: மனம் திறந்து சொல்கிறேன். ஒருவர் கூட என்னைத் தவறாக நடத்தியதில்லை. எல்லோருமே எனது எதிர்காலம் குறித்த அக்கறையோடு நிறைய அறிவுரைகள் வழங்குவார்கள். எனது இந்த நிலை குறித்து வருந்தி, இது சரியாக வராது என மிகுந்த கரிசனத்தோடு அறிவுரை வழங்குவார்கள்.

பாலகணேசன்: திருநங்கையாக உங்களுக்கு மிகுந்த மன உளைச்சலை கொடுத்த சம்பவம், மிகுந்த நெகிழ்ச்சியான  சம்பவம்?
சனா: நிறைய இருக்கிறது. கல்லூரி படிப்பு முடித்து எனது வீட்டைவிட்டு வெளியேறி திருநங்கையாக வாழத் துவங்கியிருந்த சமயத்தில் பெண் உடையணிந்து  ஒருநாள் இரவு திருநெல்வேலியில் தனியாக நடந்துபோய்க்கொண்டிருந்தேன். அப்போது மிகுந்த குடிபோதையிலிருந்த ஒரு லாரி ஓட்டுநர் என்னைப் பாலுறவிற்காய் வற்புறுத்தி அழைத்தார். அவரோடு உடன்பட மறுத்ததால் அவர் என் கன்னத்தில் ஓங்கி அறைந்ததில் கீழே விழுந்துவிட்டேன். நான் தனியாக இருந்ததாலும், இரவுநேரத்தில் பார்வை சரியாகத் தெரியாது என்பதாலும் அங்கிருந்து தப்பிக்கமுடியவில்லை. அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த ஒருவர் அந்தக் கொடும்பாவியிடமிருந்து என்னை மீட்டு, தனது வண்டியிலேயே பேருந்துநிலையத்தில் என்னை இறக்கிவிட்டு, இரவுச் சாப்பாடும் வாங்கி தந்தார்.
கெட்டவர்கள் இருக்கும் அதே சமூகத்தில் சில நல்ல மனம் கொண்டவர்களும் இருக்கிறார்கள் என்பதை எனக்கு உணர்த்திய மறக்கமுடியாத, மிகுந்த மன உளைச்சலைக் கொடுத்த சம்பவம் அது. நெகிழ்ச்சியான சம்பவமும் அதே காலகட்டத்தில் நிகழ்ந்ததுதான்.

graphic ரேனுகா அம்மா
 இந்த ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் நாளன்று பொதுவிடுமுறை. ஆகையால்  கடைவீதிகளில் கூட்டம் குறைவாகவே இருக்கும் என்பதால் அன்று எங்கள் வீட்டில் யாரும் வசூலுக்குச் செல்லவில்லை.
மதியம் சமைப்பதற்காக மீன் வாங்க சந்தைக்குச் சென்றுவந்த எனது திருநங்கை அம்மா ரேணுகா காலை உணவிற்கு எனக்குமட்டும் தோசை வாங்கிவந்தார். அன்று காலை உணவு தயார் செய்யப்படவில்லை என்றாலும் பழைய சாதம் வீட்டிலுள்ள அனைவருக்கும் போதுமான அளவு இருந்த நிலையில், எனக்கு மட்டும் ஏனம்மா தோசை வாங்கி வந்தீர்கள் எனக் கேட்டபோது, நா சாப்பிட்டுக்குவேன் ஆனா எம்பிள்ளைக்கு எப்படி  பழையசாதம் கொடுக்கமுடியும் என சொன்னார். இந்த நிபந்தனையற்ற அன்பால் உன்மையிலேயே நான் மகிழ்ச்சியாக உணர்ந்தேன்.

பாலகணேசன்: உங்களுக்குள் பெண் தன்மையை உணர்ந்தாலும், நீண்டகாலமாக  ஆணாகவே வாழ்ந்துவந்த நீங்கள் ஒரு திருநங்கையாக மாறியே ஆகவேண்டுமென்கிற கடினமான முடிவிற்கு வந்ததன் பின்னணியில் ஏதேனும் தனிப்பட்ட  காரணங்கள் இருக்கிறதா?
சனா: தனிப்பட்ட காரணம் எல்லாம் இல்லை. நீண்ட நாட்களாகவே பெண்களைப் பார்க்கும்போது நம்மால் ஏன் அவர்களைப்போல சிகை, உடையலங்காரங்கள் செய்துகொள்லமுடியவில்லை என ஏக்கமாக இருக்கும். அந்த ஏக்கம் சில சமயங்களில் என்னை தற்கொலைக்குக்கூட தூண்டியிருக்கிறது. அந்தத் தொடர் ஏக்கமே எனது கல்லூரிப் படிப்பிற்குப் பிறகு தைரியமாக வீட்டைவிட்டு வெளியேறி திருநங்கையாக வாழத் தூண்டியது.

பாலகணேசன்: திருநங்கையாக வாழத்துவங்கியபோது உங்களுக்கு ஆதரவான குழுவினரை எப்படி நீங்கள் கண்டடைந்தீர்கள்?
சனா: பெரிதாக எந்தத் தேடலும் இல்லை. அவ்வப்போது நண்பர்கள் மூலமாகக் கிடைக்கும் செவிவழிச் செய்திகள்தான். அதை வைத்துக்கொண்டு சென்னைக்குச் சென்றால் ஒரு திருநங்கையாக எனக்கு சிறந்த எதிர்காலம் இருக்கும் என முடிவுசெய்துகொண்டு எந்தவித முன் தயாரிப்புகளும் இல்லாமல்  முதல்முறையாக வீட்டைவிட்டு வெளியேறி சென்னைக்கு சென்றேன். அங்கு எனக்கு அடைக்கலம் தந்தவர் திருநங்கையான பாரதி ஆயா. நிபந்தனையற்ற அன்போடு அவர்கள் என்னைப் பார்த்துக்கொண்டார்கள். நீ விரும்பும்வரை இங்கு தங்கிக்கொள்ளலாம் என எனக்கு முழுச் சுதந்திரம் அளித்ததோடு அங்கு நான் தங்கியிருந்த 2 நாட்களில் வெளியே சென்று வசூல் செய்துவந்த பணத்தையும் பெருந்தன்மையாக வாங்க மறுத்துவிட்டார்கள். வீட்டு ஞாபகம் வந்துவிட்டதால் இரண்டு நாட்களில் அங்கிருந்து கிளம்பிவிட்டேன்.

சில நாட்கள் வீட்டிலிருந்துவிட்டு மதுரைக்குக் கிளம்பினேன். அங்கு நான் சேர்ந்த திருநங்கைகள் குழுவில் ஒரு நாளைக்கு உணவு, தங்குமிடம் இரண்டிற்கும் சேர்த்து ரூபாய் 500 கட்டணமாக செலுத்தவேண்டும். அந்த கட்டணம் எனக்கு அதிகமாக இருந்ததாலும் அந்த சூழலோடு என்னால் பொருந்திப்போக முடியாததாலும் சில நாட்களிலேயே அங்கிருந்து வீடுதிரும்பிவிட்டேன்.

கடைசியாக சில மாதங்களுக்குமுன்பு திருநெல்வேலியில் உள்ள ஒரு திருநங்கைகள் குடும்பத்தோடு இணைந்தேன். அங்கு ரேணுகா, பூமிகா, பூர்னிமா போன்ற பல நல்ல உள்ளங்கள் என்னை அன்போடு கவனித்துக்கொண்டார்கள். நாங்கள் தங்கியிருந்த வீட்டின் ராணியைப்போல  நான் கவனிக்கப்பட்டேன்.

மூன்றுமாதமாக வீட்டிற்கு வராததால் என் பெற்றோர் என்னைத் தேட ஆரம்பித்துவிட்டார்கள். அதனால் அவர்களே என் பெற்றோருடன் பேசி என்னை வீட்டிற்கு அனுப்பிவைத்துவிட்டார்கள்.

பாலகணேசன்: நீங்கள் ஒரு திருநங்கையாக வாழத்துவங்கியிருப்பது உங்களின் பெற்றோருக்கு எப்போது தெரிந்தது? அதற்கு அவர்களின் எதிர்விணை எவ்வாறு இருந்தது?
சனா: நான் வீட்டைவிட்டு வெளியேறி  மதுரையில் வசித்துவந்தபோது வசூலிற்காக வெளியே சுற்றிக்கொண்டிருந்த சமயத்தில் உறவினர் ஒருவர் பார்த்து எனது பெற்றோரிடம் சொல்லிவிட்டார். அப்போதுதான் அவர்களுக்கு எனது இந்த மாற்றங்கள் குறித்து தெரியவந்தது. அதன்பிறகு பல அறிவுரைகளை கூறி என்னை மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்தினார்கள். சிகிச்சைக்கு என் மனம் ஒப்புக்கொள்ளாததால் அதனைப் பாதியிலேயே நிறுத்திவிட்டேன்.

பாலகணேசன்: பெற்றோர் தவிர உங்கள் குடும்பத்தினர் இதனை எப்படி பார்க்கிறார்கள்?
சனா: எல்லோருக்குமே இது வருத்தம்தான். நான் இப்படி இருப்பதை என் பெற்றோர் உட்பட குடும்பத்தினர் எல்லோரும் கேவலமாக நினைக்கிறார்கள். அவர்கள் அப்படி நினைக்காமல் இருந்தால்தான் ஆச்சரியமே. சமுதாயத்தின் பொதுபுத்தி இப்படித்தானே இருக்கிறது. அதனால் அதுகுறித்து பெரிதாக நான் வருத்தப்படுவதில்லை.
நானும் யாரிடமும் போய் வலிய பேசுவதில்லை. வீட்டிலிருக்கும் பெரும்பாலான சமயங்களில் தொலைபேசி, தொலைக்காட்சி என பொழுதை கழித்துவிடுவேன்.

பாலகணேசன்: முழு திருநங்கையாக மாறுவதற்கான  சடங்கு சம்பிரதாயங்கள் மற்றும் சிகிச்சைகளை நீங்கள்  முடித்துவிட்டீர்களா? அவற்றைப் பற்றிச் சொல்லலாமா?
சனா: நான் இன்னும் அத்தகைய சிகிச்சை மற்றும் சடங்குகளை முடிக்கவில்லை. இருந்தாலும் அதுபற்றி எனக்குத் தெரிந்ததைச் சொல்கிறேன்.
திருநங்கையாக வாழ விரும்பும் ஒரு நபர் முதலாவதாக  தனக்கான ஒரு திருநங்கைகள் குடும்பத்தை கண்டறிந்து அவர்களுடன் இணைந்து வாழவேண்டும். அச்சமயத்தில் குறைந்தபட்சம் ஒரு வருடம் தான் சம்பாதிக்கும் பணத்தை அந்த குடும்பத் தலைவியிடம் கொடுக்கவேண்டும். இந்தத் தொகை அவர்களின் உறுப்புமாற்று அறுவைசிகிச்சைக்காய் பயன்படும். சிகிச்சைக்கான நிதி பற்றாக்குறையாக இருக்கும் பட்சத்தில் அந்தக் குடும்பத்தில் இருக்கும் அனைவரும் சேர்ந்து தேவையான நிதிப் பங்களிப்பை செய்வார்கள்.

சிகிச்சை முடிந்து நாற்பது நாட்கள் பத்திய உணவுமுறையை கடைபிடிக்கவேண்டும். இந்த நாட்களில் அவர் வெளியே செல்ல அனுமதிக்கப்படமாட்டார். நாற்பது நாள் கழித்து வயதுவந்த பெண்ணுக்கு செய்யும் பூப்புனித நீராட்டு விழாவைப்போல  அனைத்துத் திருநங்கைகளையும் அழைத்து  விமரிசையாக  விழா நடைபெறும். மேற்சொன்ன இந்த சடங்குகளையும் சிகிச்சைகளையும் முடித்த ஒருவரே மனதளவில் மட்டுமல்லாமல் உடலளவிலும் ஒரு முழுமையான திருநங்கையாகக் கருதப்படுவார்.

பாலகணேசன்: உறுப்புமாற்று அறுவைசிகிச்சை குறித்துக் கொஞ்சம் விரிவாகச் சொல்லுங்களேன்?
சனா: மனதளவில் மாற்றுப்பாலினத்தவராக  தன்னை உணரும் ஒருவர் உடலளவிலும் தான் விரும்பும் பாலினத்தவராக மாற்றிக்கொள்வதற்காக செய்யப்படும் சிகிச்சையே உறுப்புமாற்று சிகிச்சை. பாலுறுப்புகள் மாற்றமே இதில் முதன்மை. ஆணாகப் பிறந்து தன்னைப் பெண்ணாக உணர்பவருக்கு  ஆணுறுப்பை நீக்கிவிட்டு செயற்கைப் பெண்ணுறுப்பைப் பொருத்துவதும் செயற்கை மார்பகங்கள் பொருத்துவதும் இந்த உறுப்பு மாற்று அறுவைசிகிச்சையின் மூலமாக செய்யப்படும். பெண்ணாகப் பிறந்து தன்னை ஆணாக உணரும் திருநம்பிகளுக்கு பெண்ணுறுப்பிற்கு பதிலாகச் செயற்கை  ஆணுறுப்பு பொறுத்தப்படும்.

பாலகணேசன்: திருநங்கைகள் குடும்பத்தில் ஒவ்வொருவரையும் ஒரு உறவுமுறை சொல்லி அழைக்கும் வழக்கம் இருப்பதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். இந்த உறவுமுறைகள் எதன் அடிப்படையில் முடிவு செய்யப்படுகிறது?
சனா: இங்கு வயதிற்கு மதிப்பு கிடையாது. எத்தனை வருடமாக ஒருவர் அந்த குடும்பத்தில் இருக்கிறார் என்பதை பொறுத்து அவருக்கும் நமக்கும் அந்த குடும்பத்தில் இணைந்த ஆண்டு வித்தியாசத்தின் அடிப்படையில் உறவுமுறைகள் தீர்மானிக்கப்படும்.
நம்மைவிட ஒன்று முதல் நான்கு வருடங்கள் மூத்தவர்களை எத்தனை வருடங்கள் மூத்தவர் என்பதன் அடிப்படையில்  அம்மா, சித்தி, பெரியம்மா போன்ற உறவுமுறை சொல்லி அழைக்கலாம்.  ஐந்து வருடங்கள் மூத்தவர் பாட்டி; பத்து வருடங்கள் மூத்தவர் பூட்டி. நாம் சேர்ந்த அதே வருடத்தில் நமக்கு முன்பாக சேர்ந்தவர் அக்கா; நமக்கு பின்பு சேர்ந்தவர்கள் தங்கை இதுதான் அடிப்படையான உறவுமுறைகள்.

பாலகணேசன்: ஒரு குடும்பத்தில் இணைந்து வாழும் ஒருவர் தான் விரும்பினால் அந்தக் குடும்பத்தை விட்டு செல்ல அனுமதிக்கப்படுமா?
சனா: நிச்சயமாக. இவ்வாறு தனியாக சென்று பலர் திருநங்கைகளுக்கான தொண்டுநிறுவனங்கள் நடத்திவருகிறார்கள். உறுப்புமாற்று அறுவைசிகிச்சை செய்துகொண்ட பலர் இவ்வாறு குடும்பத்திலிருந்து வெளியேறி  திருமண வாழ்க்கை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். அனைத்திற்கும் இங்கு முழுச் சுதந்திரம் உண்டு.

பாலகணேசன்: புதிதாகக் குடும்பத்தில் இணைந்துகொள்ள வருபவரை எதனடிப்படையில் இணைத்துக்கொள்வீர்கள்? எதும் பரிசோதனை முறைகள் கடைபிடிக்கப்படுமா?
சனா: பரிசோதனைகள் எதுவும் செய்யப்படாது. எல்லாம் ஒரு நம்பிக்கையின் அடிப்படையில்தான். ஒருவரை பார்த்த சில மணி நேரங்களுக்குள்ளாகவே அவர் உன்மையாகவே ஹார்மோன்  மாற்றங்களால் திருநங்கையாக இருக்கிறாரா இல்லை போலியாக நடிக்கிறாரா என்பதைத் தெரிந்துகொள்ளமுடியும். அதையும் தாண்டி குடும்பத்தில் இணைந்த சில நாட்களுக்குள் ஒருவர் போலியானவர் என கண்டறியப்பட்டால் அவரது புகைப்படம் தமிழ்நாட்டின் அனைத்து திருநங்கைகள் சங்கத்திற்கும் அனுப்பிவைக்கப்பட்டு வேறெங்கும் இவர் இதுபோன்று ஏமாற்றாதவகையில் தடுக்கப்படும்.

பாலகணேசன்: ஒருபால் உறவு கொள்பவர்களிலிருந்து திருநங்கைகள் எந்தவிதத்தில் வேறுபடுகிறார்கள்?
சனா: எல்லோரும் தெரிந்துகொள்ளவேண்டிய விடயமிது. தான் எந்த பாலினத்தவராக  பிறந்தோமோ அதாவது ஆண்/பெண்  அந்த  பாலினத்திற்குரிய   அனைத்து உடலமைப்புகளையும் உள்ளுறுப்பு செயல்பாடுகளையும் பெற்றிருக்கும் ஒருவர் ஹார்மோன்கள் மாற்றத்தால் மனதளவில் தன்னை மற்றொரு பாலினத்தவராக உணர்பவரே திருநங்கை/திருநம்பியாக மாறுகிறார்.

அதாவது ஆணாகப் பிறந்த ஒருவர் ஹார்மோன் மாற்றத்தால்  மனதளவில் தன்னைப் பெண்ணாக உணர்ந்தாலும் அவருக்கு பாலுறுப்பு விரைப்புத் தன்மைவிந்து வெளிப்படுதல் போன்றவை  இயல்பாக  வேலைசெய்யும். அதேபோல பெண்ணாகப் பிறந்து மனதளவில் தன்னை ஆணாக உணர்பவர்களுக்கு மாதவிடாய் உள்ளிட்ட அனைத்து உடலியல் செயல்பாடுகளும் நிகழும்.

பெறும்பான்மை பொதுச்சமூகத்தில் இணைந்து வாழவும் குடும்பத்தினரின் வருங்காலச் சந்ததிகள் வேண்டுமென்கிற விருப்பத்தை நிறைவேற்றவும் இந்த உடல்தகுதிகள்தான் தேவை என்பதால் ஹார்மோன்களால் தனக்குள் ஏற்படும் மனமாற்றங்களை கட்டுப்படுத்திக்கொண்டு உடலளவில் தனக்கு எதிர்பாலினத்தவரை திருமணம் செய்து குழந்தை குட்டி என நிறையபேர் வாழ்கிறார்கள்.

ஆணாகப் பிறந்த ஒருவர் உறுப்புமாற்று அறுவைசிகிச்சைக்குப் பிறகு ஆண்களுடன் உடலுறவு கொள்வதாலேயே சமூகத்தில் பலரிடம் இந்த கேள்வி எழுகிறது. அவரது உடலமைப்புதான் ஆண்தன்மை கொண்டதே தவிர மனதளவில் அவர் தன்னை ஒரு பெண்ணாக உணர்வதாலேயே ஒரு ஆணோடு அவர் உடலுறவுகொள்ள வேண்டிய தேவை ஏற்படுகிறது. ஆனால் ஒருபாலின உறவு என்பது அப்படி நிகழ்வதில்லை. பாலியல் உந்துதலை தீர்த்துக்கொள்ள எதிர்பாலினத்தவர் கிடைக்காத சூழலில் உடனிருக்கும் சக நண்பரோடு பாலுறவுகொள்ள ஆரம்பித்து, அதுவே தொடர்ச்சியாக நடைபெறுவதால் எதிர்பாலினம் மீதான ஈர்ப்புக் குறைந்து சக பாலினத்தவரோடே உறவுகொள்ளும் முறைக்கு அவர்களது மனம் பழக்கப்பட்டுவிடுகிறது. இதுதான் இருவருக்குமிடையேயான வித்தியாசம்.

பாலகணேசன்: பார்வையின்மை, திருநங்கையாக உணர்தல் என இரண்டு சவால்களை எதிர்கொண்டுவருகிறீர்கள்.  திருநங்கைகள் கூட்டத்தில் பார்வையின்மையும்  பார்வையற்றோர் கூட்டத்தில் திருநங்கைத் தன்மையும் உங்களுக்குச் சுமையாக இருந்திருக்கிறதா? இதன் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டதாக உணர்ந்திருக்கிறீர்களா?
சனா: திருநங்கைத் தன்மையை நான் சுமையாக அல்லாமல் சுகமாகவே கருதுகிறேன். எனக்கு ஓரளவுக்கு பார்வை தெரியும் என்பதால் பார்வையின்மைக்காகவும் நான் வருத்தப்பட்டதில்லை.
திருநங்கைகளோடு இருக்கும்போது எனது பார்வையின்மை சில கூடுதல் சலுகைகளைத்தான் பெற்றுத்தந்திருக்கிறது. அதனாலேயே எனது திருநங்கைகள் குடும்பத்தில்  நிறைய அன்பும் கவனிப்பும் கிடைக்கிறது. ஆனால் பார்வையற்றோர் கூட்டத்தோடு இருக்கும்போது ஒரு திருநங்கையாக  நான் கொஞ்சம் அசௌகரியமாகவே உணர்கிறேன்.

பாலகணேசன்: சனா காதலிக்கிறாரா?
சனா: காதல் இல்லாமலா? எனது காதல் வெற்றிபெறும்போது எனது காதலனை உங்களுக்கு அரிமுகம் செய்கிறேன்.

பாலகணேசன்: பலரும் விடை சொல்லத் தயங்கும் கேள்விகளுக்கும், நிதானமாக, தயக்கமின்றி பதிலளித்தீர்கள். நன்றி சனா.
சனா: உங்களுக்கும், விரல்மொழியர் மின்னிதழுக்கும் நன்றி. நான் தொடர்ச்சியாக இந்த இதழில் என் படைப்புகளை வழங்க முயல்கிறேன். நன்றி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக