கவிதை: கானல் நீர்!


சோஃபியா 
graphic மருட்சியோடு காணப்படும் ஒரு குழந்தையின் புகைப்படம்
பேசா மடந்தைகள் இனி
பேசித் தான் பழகட்டுமே!
தத்தி நடக்கும் செல்ல கிளிகள் கொஞ்சம்
தடைகளை மீறட்டுமே! 

வாழப் பிறந்த வண்ணக் குயில் - கதறி
விம்மல் கொண்டதுவோ!
பூத்துக் குலுங்கும் சின்னஞ்சோலை – இங்கு
கானல் நீராய் போச்சுதுவோ?-

ஐயகோ! ஐயகோ! என்
வம்சம் வரண்டு போச்சுதே..
   வான் நட்சத்திரம் இங்கு வந்து
மலர்ந்து கறுகல் ஆச்சுதே.. 

என்னருகே கிடந்த உன்னை
கவ்வியது நரி ஒன்று.
நம்பி அதை விட்டதற்கு
துரோகம் பல செய்ததுவோ?

தூக்கிச் செல்கையிலே
அன்னையென நினைத்தாயோ?
அப்பன் சுவாசம் இது
அல்ல என்று புரிந்தாயோ?

வலியால் நீ அழுகையிலே - உன்
வாய்தனை அடைத்தானோ
ஓங்கி நீ கதறுகையில்
கழுத்தைத்தான் பிடித்தானோ?

ஓ! என் மகளே! நீ,
பிறந்தது இந்த சிலுவையை சுமந்திட தானோ?
தெரிந்திருந்தால் நான்,
கர்பம் தவிர்த்திருப்பேனோ

வெறும்  சில காலம் என
உன் கணக்கை எழுதியவனுக்கு,
அவன் கணக்கை முடிக்க
மனமில்லாமல் போனது ஏனோ

தாய்மையை தந்த தாயே! 
உனை காக்க மறந்திட்ட பேயென  உணர்கிறேன் நான். 
    மன்னிப்பாயடி மகளே!
இனி மீண்டும் ஒரு பெண் குழந்தை
இல்லையடி எனக்கு!

கங்கையென வந்தவளே.. என் 
கருவறையை நிறைத்தவளே! 
கானல் நீராய் போனதெங்கே? –என்னை
கலங்க வைத்து போனதெங்கே?
***
வன்புணர்வுக்கு ஆளான அத்துனை இளம் மொட்டுகளுக்கும் சமர்ப்பனம்...
      கனத்த இதயத்துடன்            சோபியா
தொடர்புக்கு sophiamalathi77@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக