சமூகம்: சாதி எனும் சதி


ரா. பாலகணேசன் 
graphic சாதிக்கயிறு கட்டியிருக்கிற மாணவர்கள்
 ‘மாணவர்கள் தங்கள் கைகளில் சாதிக் கயிறு கட்டுவதை பள்ளிகள் முழுமையாக தடுக்கவேண்டும்என பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை தரப்பட்டுள்ளது. இது அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டிய, நம் அரசின் கொள்கைக்கு உட்பட்ட ஒரு முடிவுதான். இருந்தபோதிலும், இம்முடிவிற்கு ஒரே ஒரு இடத்திலிருந்து எதிர்ப்பு கிளம்பியது. அதுவும் வழக்கமான இடம்தான். அந்த எதிர்ப்புக்கு ஊடகங்கள் கொடுத்த முக்கியத்துவமும், அமைச்சரின் நடுக்கமும் தான் நம்மை அச்சமடையச் செய்கின்றன.

ஒருவழியாக, “பள்ளிக்கூடங்களில் சாதிக் கயிறு கட்டுவது தடுக்கப்படும்என அமைச்சர் உறுதியளித்துவிட்டார். என்றாலும், திராவிட இயக்கத்தின் நூறாண்டு கால உழைப்பின் பலன் கொஞ்சம் ஆட்டம் காண்கிறது என்கிற அச்சம் கலந்த உண்மையை நாம் மறுத்துவிட முடியாது. முற்போக்கு இயக்கங்கள் தங்கள் வலிமையை, ஒற்றுமையை உறுதிப்படுத்தவேண்டிய காலம் இது என்பதை உணர்த்தும் இன்னொரு நிகழ்வாக இது அமைந்துவிட்டது.

graphic கயிறு கட்டிய கை
 பள்ளிக்கூடங்களில் சாதிக் கயிறு கட்டும் பழக்கம் கடந்த சில ஆண்டுகளாகத்தான் அதிகரித்துவருகிறது. இந்த அடிப்படையில் பல பள்ளிகளில் குழு உருவாக்கமும், சண்டைகளும் நிகழ்கின்றன. இந்தப் புற அடையாளத்தை நீக்குவதில் அரசு முனைப்பு காட்டுவது வரவேற்கத்தக்கதே என்றாலும், சாதிக் கிருமியின் ஊடுருவும் தாக்கத்தை இதன் மூலம் மட்டும் நாம் நிறுத்திவிடமுடியாது; அதே சமயம் மட்டுப்படுத்தலாம் என்கிற உண்மையையும் மறுத்துவிடமுடியாது.
ஆம். அரசால் சாதிக் கிருமியின் ஊடுருவலை புற அடையாள நீக்கத்தின் மூலம் மட்டுப்படுத்த முடியும்; முற்போக்கு இயக்கங்களும், அறிவாளிகளும் மட்டுமே இவற்றின் வேர்களைக் கிள்ளி எறியமுடியும்.

எங்கெங்கு காணினும் சாதி
இந்தியா முழுக்க எங்கெங்கு காணினும் சாதீய மயமாகவே உள்ளது. தமிழகத்தில் அது மற்ற மாநிலங்களை விட குறைவாக உள்ளதே தவிர, இன்னும் இல்லாமல் போய்விடவில்லை.
மாணவர்கள் தங்களுக்குள் நட்பு பாராட்டுவதை நம்மால்  தடுக்கமுடியாது. அந்நட்பு பல நேரங்களில் சாதி சார்ந்ததாக அமைந்துவிடுவது கெடுவாய்ப்புதான். காரணம், பெரியவர்களாகிய நாம்தான்.

பிறந்ததிலிருந்தே அவன் சாதி மூலமாகத்தான் அறியப்படுகிறான். அவனுக்கு மூத்தவர்கள் முன்னோடிகளாக இருக்கிறார்கள். அவர்கள் குறிப்பிட்ட தலைவரை, நடிகரை தமக்கான ஆளுமையாகக் கொண்டாடுகிறார்கள். அதை அறிந்து இவனும் அவர்களைக் கொண்டாடித் தீர்க்கிறான். தமக்கான நாயகர்களை உருவாக்கிக்கொள்ளும் அவர்கள் எதிர் நாயகன் ஒருவரையும் வேறு சாதியிலிருந்து கட்டமைக்கிறார்கள். இங்குதான் இவன் சாதீய வலைக்குள் சிக்குகிறான்.

ஒரு நண்பனின் வீட்டுத் திருமணத்திற்கு, திருவிழாவிற்கு, இறப்பிற்குச் செல்லும்போது அவன் வேறு சாதிக் காரனா, இல்லையா என்பதை அவனால் தெரிந்துகொள்ள முடிகிறது. அரசியலில் தங்கள் பலத்தைக் காட்டி அழுத்தம் (Lobby) தருவதற்காகத் தன் சாதித் தலைவர்கள், நடிகர்கள் தொடர்பான விழாக்களை சிற்றூர் தொடங்கி பெருநகரம் வரை பிரம்மாண்டமாக நடத்துகிறார்கள் பெரியவர்கள். அதில் கலந்துகொள்ளும் சிறுவர்களுக்கு சாதீய எண்ணம் வராமல் என்ன செய்யும்?

சில மாதங்களுக்கு முன், குறிப்பிட்ட சாதிப் பெண் சத்துணவு சமைத்தால் எங்கள் பிள்ளைகள் சாப்பிட மாட்டார்கள் என்று போராடியவர்கள் பெரியவர்கள்தானே! அவர்களை நாம் என்ன செய்யப் போகிறோம்?
ஒரு பள்ளி மாணவன் தன் அக்காளைக் காதலித்த மாற்றுச் சாதி ஆண் ஒருவரைத் தன் நண்பர்களான பிற மாணவர்களோடு சேர்ந்து கொலை செய்தான். இந்த எண்ணம் எங்கிருந்து வருகிறது? மூத்தவர்களான நம்மிடமிருந்து தானே!!
இக்கால இளைய தலைமுறையினர் தங்களுக்கென நல்ல முன்னுதாரணமற்றவர்களாக இருக்கிறார்கள். முன்னுதாரணமாகத் திகழவேண்டிய மூத்தவர்கள் இவர்களைப் பலியாடுகளாக்கி மனம் மகிழ்கிறார்கள்.

பாடத்திட்டத்தில் சாதி
தமிழக அரசு பாடப் புத்தகங்களில் இடம்பெறும் சாதிக் குறியீடுகளை இயன்றவரை தடுத்தே்வருகிறது. அதுவும் பகுத்தறிவுக் கண்ணோட்டத்தோடே மேற்கொள்ளப்படுகிறது.
தலைவர்களின் பெயர்களில், படைப்பாளிகளின் பெயர்களில் இருந்த சாதிப் பெயர்கள் பாடப் புத்தகங்களிலிருந்து நீக்கப்பட்டிருக்கின்றன. அவர்களின் பெற்றோர் பெயர்கள் கூட தற்போது தரப்படுவதில்லை. தனியார் கொடைகளால் உருவான அரசுப் பள்ளிகளுக்கு அவர்களின் பெயர்களைச் சூட்டும்போது உடனிருக்கும் சாதிப் பெயர் இடம்பெறுவது தடுக்கப்பட்டிருக்கிறது. இன்னும் அரசு செயவேண்டிய பணிகள் நிறைய இருக்கின்றன. எனினும்,  பாடப் புத்தகம் வழியாக சாதிப் பெருமிதம் மாணவர்களின் மனதிற்குள் செல்வதை அரசு முழுமையாகத் தடுத்துவிட்டது என்றுதான் சொல்லவேண்டும்.

graphic பலப்பரிட்சையில் ஈடுபடும் கயிறு கட்டிய கைகள்
 வருங்காலம்?
சாதிப் பின்னொட்டுகளைத் தங்கள் பெயர்களிலிருந்து தூக்கி எறிந்த மனிதர்கள் வாழ்ந்த மாநிலத்தில் மீண்டும் சாதிப் பெருமிதங்கள் துளிர்விடத் தொடங்கியிருக்கின்றன. சமூக வலை தளங்களும், இளைஞர்களின்  அணி சேர்ப்பும் இதில் முக்கியப் பங்காற்றிவருகின்றன. அவர்கள் தங்களுக்கான நாயகர்களைத் தேடி அலைகிறார்கள். சாதித் தலைவர்கள் அவர்களுக்கான நாயகர்களாகத் தென்படத் தொடங்கிவிட்டார்கள் அல்லது நல்ல தலைவர்கள் அவர்கள் சாதிச் சிமிழுக்குள் அடைக்கப்பட்டு விட்டார்கள்.

 இவற்றை அரசு ஒன்றும் செய்யமுடியாது. ஆனால் அரசியல்வாதிகள் மாற்றி அமைக்கலாம்; திரைப்பட நட்சத்திரங்கள் மாற்றி அமைக்கலாம். ஆனால் அவர்கள் அதைச் செய்யத் தயாராக இல்லை..
எனவே, முற்போக்கு இயக்கங்கள்தான் இன்றைய இளைஞர்களை நாயக வழிபாட்டிலிருந்து விடுவிக்க வேண்டும்; முடியவில்லை என்றால், நல்ல நாயகர்களை அவர்களுக்கு அடையாளம் காட்டவேண்டும். பள்ளி ஆசிரியர்கள் வேற்றுமையால் விளையும் தீமைகளையும், சாதிக் கிருமியால் உருவாகும் அறியாமை நோய் குறித்தும் தொடர்ந்து அவர்களிடம் எடுத்துரைக்க வேண்டும்.

திராவிட இயக்கங்களின் முயற்சியின் பலனாக, தமிழகத்தில் சாதீயம்  ஒழிந்துவிட்டதா என்றால், ‘இல்லைஎன்கிற உண்மையைச் சொல்வதில் தயக்கமில்லை. அதே நேரம், அவ்வியக்கம் சாதிப் பெருமையை வெளிப்படுத்துவதைத் தவிர்ப்பவர்களாகவும், பொது இடங்களில் அது குறித்து பேசுவதைத் தவிர்ப்பவர்களாகவும் தமிழ் மக்களை வைத்திருக்கிறது. அந்நிலை தொடருவதை நாம் உறுதிப்படுத்தவேண்டும்.

பிறப்பொக்கும் எல்லா  உயிர்க்கும்என்ற குறள் தரும் சமத்துவக் குரலை இன்றைய தலைமுறையின் இதயங்களில் எதிரொலிக்கவைப்போம்.
தொடர்புக்கு: balaganesan2285@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக