மடல்: அன்புள்ள பார்வை மாற்றுத்திறனாளி ஆசிரியர்களுக்கு,

ரா. பாலகணேசன் 
graphic வகுப்பெடுக்கும் பார்வையற்ற ஆசிரியர்
 அன்புள்ள பார்வை மாற்றுத்திறனாளி ஆசிரியர்களுக்கு,
வணக்கம். உங்கள் சக ஆசிரியராய் நான் எழுதும் அன்பு மடல். இம்மடலை பல மூத்த முன்னோடிகள் படிக்கக்கூடும். என்னிலும் இளையவர்களும் படிக்கக்கூடும். எனக்குத் தெரிந்ததை, எழுதத் தோன்றியதை, சமூக அக்கறையோடு எழுதுவதில் தவறில்லை என்ற அடிப்படையில் ஆசிரியர் பணியில் 5 ஆண்டுகள் மட்டுமே அனுபவம் உள்ள நான் இம்மடலை எழுதுகிறேன்.

தமிழகத்தில் அதிக பார்வையற்றவர்கள் மேற்கொள்ளும் பணி ஆசிரியர் பணி.  இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் பார்வை மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் அதிகம் என்கின்றன புள்ளிவிவரங்கள். இது நமக்குப் பெருமை தரும் செய்திதான். இந்நிலையை நாம் அடைந்திருப்பதற்குக் காரணமான நம் முன்னோரின் போராட்டங்களை, உழைப்பை, நமக்குக் கல்வியும், வேலை வாய்ப்பும் நல்கிய நல்ல உள்ளங்களை நாம் எந்நாளும் நினைத்துப் போற்ற வேண்டும்.

மாறிவரும் தொழில்நுட்பத்திற்கேற்ப நம்மவர்கள் பலரும் விரைவுக் குறியீடு, கணினி, பட வீழ்த்தி என்று பரபரப்பாக இயங்கிவருவதாக நம்மோடு பணியாற்றும் பார்வையுள்ள ஆசிரியர்கள் அங்கங்கே பகிர்ந்துகொள்கிறார்கள். இந்த ஆண்டு தொடக்கத்தில் ஜாக்டோ ஜியோ அமைப்பு நடத்திய போராட்டங்களில் நம்மவர்கள் நிறைய கலந்துகொண்டதைப் பற்றி பலரும் பேசிக்கொள்கிறார்கள். இந்த மகிழ்ச்சி தொடரவேண்டும்.

இத்தனை பெருமைகள் இருந்தபோதிலும், நம்மவர்கள் பலர் சிக்கல்களைத் தொடர்ச்சியாகச் சந்தித்துவருகிறார்கள் என்பதை நான் அறிவேன். அவர்கள் அதிலிருந்து மீள சக ஆசிரியர்களாகிய நாம் தோள் கொடுப்போம். நண்பர்களே! நாம் நம் கடமையைச் சரியாகச் செய்யவேண்டும்; உரிமைகளையும் சரியாகப் பெற்றுக்கொள வேண்டும். கடமையும் உரிமையும் இரு கண்களைப் போலக் கருதப்பட வேண்டும். நம் கடமையைச் சரியாகச் செய்ய என்னென்ன செய்யலாம்? என்னுடைய ஆலோசனைகள் கீழே.

1. புத்தகங்களை நாம் கட்டாயம் பயன்படுத்தியே ஆகவேண்டும். மை அச்சுப் புத்தகங்களைப் படிக்கும் திறனுள்ள நம்மவர்கள் அவற்றைப் பயன்படுத்தலாம்; மற்றவர்கள் பிரெயில் புத்தகங்களைத் தான் பயன்படுத்தியாக வேண்டும். ஏனென்றால் பிரெயில் தவிர வேறு வரி வடிவம் நம்மிடம் இல்லை. நீங்கள் ஒலித் தொழில்நுட்பத்தில் வல்லவராக இருந்தாலும், மனனம் செய்வதில் கில்லாடியாக இருந்தாலும் பிரெயில் புத்தகங்களைப் பயன்படுத்துவது அவசியம் என்பது என் கருத்து. ஏனெனில், பார்வையுள்ள மாணவர்களுக்கு நாம் அதிசயமாகத் தெரியக்கூடாது. அவர்களைப் போலவே, ஏதோ ஒரு புத்தகத்தைப் பின் தொடர்பவராகத் தெரியவேண்டும்.

2. நம்முடைய உலகம் தனித்துவமானது. ஆனால் இந்த உலகம் நம் வரையறைகளுக்கு அப்பாற்பட்டது. எனவே, பார்வை மாற்றுத்திறனாளிகளாகிய நாம் பார்வையுள்ள மாணவர்களைக் கையாள்கிறோம் என்பதை மறந்துவிடக்கூடாது. பார்வை சார்ந்த அவர்களது புலனுணர்வுகளைப் புரிந்துகொண்டு நாம் செயல்படவேண்டும். வெறுமனே புத்தகம் வாசித்தல், கேள்வி கேட்டல் என்று கேட்டல் தொடர்பான வேலைகளை மட்டும் செய்யாமல், அவர்களை எழுதவைத்தல், படங்கள் காட்டல், கரும்பலகைக்கு மாற்றாகக் கணினியைப் பயன்படுத்துதல் முதலியவற்றையும் நாம் மேற்கொள்ளலாம்.

3. பார்வை மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் தனக்கென உதவியாளர்களை வைத்துக்கொள்வதா, வேண்டாமா என்ற விவாதம் தொடர்ச்சியாக நம்மிடையே நடந்துவருகிறது. பள்ளிகளில் உதவியாளர்கள் வைத்துக்கொள்வதும், வைத்துக்கொள்ளாததும் அவரவர் விருப்பம். பள்ளியில் உதவியாளரை வைத்துக்கொண்டால், நமக்கும் மாணவர்களுக்குமான தொடர்பு இல்லாமல் போய்விடும் என்பது எனது பார்வை. மேலும், உதவியாளர்களின் தவறுகளுக்கு நாம் தான் தார்மீகப் பொறுப்பேற்க வேண்டும் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். ஆனாலும், நமக்கென்று உதவியாளர் கட்டாயம் வேண்டும். மாணவர்களின் தேர்வுத் தாள்களைத் திருத்த, குறிப்பேடுகளைச் சரிபார்க்க, நம் தொடர்பான தகவல்களைத் தெரிந்துகொள்ள, இன்னும் நிறைய படிக்க உதவியாளர்கள் அவசியம். அவர்கள் பள்ளிக்கு வந்தாகவேண்டியதிலை. உங்கள் வீட்டில் இருப்பவரோ, மற்றவரோ உதவியாளராக இருக்கலாம். பள்ளி நேரத்தைத் தாண்டி, நாம் இந்த உதவியாளரின் பணிக்காக நேரம் ஒதுக்கியாகவேண்டும்.

4. மாணவர்களின் பெயர்களை நாம் முழுமையாக அறிந்துவைத்தல் நலம். அவர்கள் பெயர்களை நமக்கு உகந்த வகையில் பிரெயிலிலோ, கணினியிலோ எழுதிவைத்துக்கொள்ளவேண்டும். அவர்கள் ஒவ்வொரு தேர்விலும் பெறும் மதிப்பெண்ணையும் நமக்கு உகந்த வகையில் எழுதிவைத்துக்கொள்ளவேண்டும். அப்படி எழுதினால்தான் அவர்களைப் பற்றி நாம் பகுப்பாய்வு செய்ய முடியும். ஆம். நீங்கள் நினைப்பது சரிதான். அலுவலகப் பயன்பாட்டிற்காக நாம் பல ஆவணங்களை மை எழுத்தில் தயாரித்துத் தரவேண்டும். அதே ஆவணங்களை நம் புரிதலுக்காக நாம் நமக்கு உகந்த வகையிலும் வைத்துக்கொள்ள வேண்டும்.

5. பார்வை மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் பிறரைக் காட்டிலும் மாணவர்களிடம் நெருக்கமாகப் பழகுகிறார்கள் என்று ஒரு கருத்து உண்டு. இதில் இருக்கும், பலம், பலவீனங்களை நாம் அறிந்து சிந்திக்கவேண்டும். நமக்கு எப்படி உதவவேண்டும் என்பதை மாணவர்கள் புரிந்துகொள்ள வேண்டிய அதே வேளை, அவர்களை நம் முழுமையான உதவியாளர்களாக மாற்றிவிடக்கூடாது. ஒரே ஒரு மாணவன்/மாணவியை மட்டும் தொடர்ச்சியாக உதவிக்கு அழைப்பதைத் தவிர்க்கவேண்டும். வெவ்வேறு மாணவர்களைப் பயன்படுத்திக்கொள்ளலாம். அதற்கும் ஓர் அளவுண்டு; எல்லையுண்டு. பள்ளிக்கு வெளியே அவர்களோடு நெருக்கம் காட்டுவதை முடிந்தவரை தவிர்க்கலாம்.

6. பிற ஆசிரியர்களைப் பொறுத்த அளவிலும், ஒரே ஒரு ஆசிரியரை மட்டும் உதவிக்கு அழைக்கும் பழக்கத்திலிருந்து நாம் விடுபடவேண்டும். ஒவ்வொருவரின் இயல்பை அறிந்து வெவ்வேறு உதவிகளை வெவ்வேறு ஆசிரியர்களிடம் நாம் கேட்டுப் பெற்றுக்கொள்ளலாம்.

7. பணியாளர் அறையில் கவனமாகப் பேசவேண்டும். பார்வையின்மையில் இருக்கும் மிக முக்கியச் சிக்கல் புரணி பேச இயலாமை. இதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

8. பிறரது அறியாமையையும், கிண்டலையும் வேறுபடுத்தக் கற்றுக்கொள்ள வேண்டும். அறியாமையை அறியவைத்து வெல்லவேண்டுமே தவிரஎல்லா இடங்களிலும் பொங்கிவிடக்கூடாது.

9. ஏற்கெனவே நான் கூறியது போல, ஊதிய விவரம், PAN எண், பிற எண்கள் மு்தலியவற்றை நமக்குப் புரியும் வகையில் பிரெயிலிலோ, கணினியிலோ எழுதிவைத்துக்கொள்ள வேண்டும்.

10. நம்மால் செய்ய முடியாத பணிகளுக்காகத் தான் பிறர் உதவியை எதிர்பார்க்கிறோம். அதற்காக அப்பணியை அவர்கள் பார்த்துக்கொள்வார்கள் என்று நாம் அமைதியாக இருந்துவிடக்கூடாது. அப்பணி நடைபெறுகிறதா என்பதையும், அது குறித்த அறிவையும் நாம் முழுமையாக அறிந்துவைத்தல் வேண்டும். குறிப்பாக, வருமான வரி தாக்கல் குறித்த தெளிவான அறிவு நமக்கு வேண்டும்.

11. தேர்வுப் பணி, தேர்தல் பணி முதலியவற்றிலிருந்து நமக்கு விலக்கு அளிக்கப்படுகிறது. இருந்தாலும், அப்பணிகளின் நடைமுறைகளைப் பிற ஆசிரியர்களிடம் கேட்டுத் தெரிந்துகொண்டு, அவை குறித்த முழுமையான அறிவை வளர்த்துக்கொள்ளவேண்டும்.

12. பிற ஆசிரியர்களைப் போல நம்மால் அலுவலகப் பணிகளை அதிகம் மேற்கொள்ள முடியாது என்பது உண்மை. அதனால், போட்டிகளுக்கு ஏற்பாடு செய்தல், மாணவர்களை ஒருங்கிணைத்தல், அன்றாடம் ஒன்றுகூடலில் (assembly) மாணவர்களுக்கான செயல்பாடுகளைக் கண்காணித்தல் முதலிய பணிகளை நாம் மேற்கொள்ளலாம்.

13. அலுவலகப் பணிகளை நம்மால் முழுமையாக மேற்கொள்ள முடியாதுதான் என்றாலும், அவை குறித்த அறிவை நாம் வளர்த்துக்கொள்ளவேண்டும். நம்முடைய பதவி உயர்விற்கு இவை உதவும். நம்மவர்கள் பலர் தலைமை ஆசிரியர்களாக வெற்றிகரமாகப் பணியாற்றிவருகிறார்கள் என்பது நீங்கள் அறிந்ததே.

14. நாம் அனைவரும் பார்வை மாற்றுத்திறனாளிகள்; ஆசிரியர்கள். இவ்விரு நிலைகளில் ஆசிரியர் என்ற தகுதியைவிட, பார்வை மாற்றுத்திறனாளி என்ற எதார்த்தமே முன்நோக்கி நிற்கும். நம் ஒவ்வொரு நல்ல, மோசமான செயல்பாடுகளும் பிற பார்வை மாற்றுத்திறனாளிகளைப் பாதிக்கும் என்பதைப் புரிந்து செயல்படவேண்டும்.

15. சிறுபான்மையினர் ஒன்றுபட்டால்தான் வெற்றி பெற முடியும். எனவே நம் உரிமைகளைப் பாதுகாக்க, வென்றெடுக்க நமக்கான அமைப்புகளில் பங்கேற்று, அவர்களோடு இணைந்து செயல்படவேண்டும்.

மேற்கண்ட எனது ஆலோசனைகள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன். இவற்றை உங்களுக்காக எழுதுகிறேன் என்று நினைத்துவிடாதீர்கள். எனக்காகவும், அடுத்து பணி ஏற்கவிருக்கும் நம் தம்பி, தங்கைகளுக்காகவும்தான் எழுதுகிறேன். அனைவருக்கும் என் தாமதமான ஆசிரியர்கள் தின நல்வாழ்த்துகள்.
நன்றி.
தொடர்புக்கு: balaganesan2285@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக