ராகரதம் (19) எவரும் கேட்கும் கேள்வி


ப. சரவணமணிகண்டன் 
தமிழ்த்திரையிசைப் பாடகர்களுக்குக்கூட டாப் டென் போட்டுவிடலாம். ஆனால், தமிழ்த்திரையிசைப் பாடகிகளைப் பொருத்தவரை அது சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது. சில பாடல்களே பாடியிருக்கிற ஜென்சியாகட்டும், தலைமுறைகள் பல கடந்து நிலைபெற்ற ஜானகியாகட்டும் அவரவர் பாவத்தில் அவரவர் நிச்சயம் உச்சம் தொட்டவர்கள் என்றுதான் சொல்லவேண்டும். ஒன்றை மற்றொன்றுக்கு இடம் மாற்றிப் பொருத்துவதான நினைப்பே அபத்தமானது.

ஒருவேலை பெண் ரசிகைகள் எனது இந்தக் கருத்தை அப்படியே  தமிழ்த்திரையிசைப் பாடகர்களுக்கே பொருத்திக்கொள்ளக்கூடும். அதுதானே திரையிசை நிகழ்த்திக்காட்டுகிற ஜாலம். அதனால்தானே, “உனக்கென உனக்கென பிறந்தேனே” பாடலை s.p.b.யைக் காட்டிலும் சுஜாத்தாவின் குரலில் கேட்பதையே முதல்த்தெரிவாகக் கொள்கிறேன். ஆனாலும் பால்பேதமற்ற மனநிலையைத் தருகிற குரல்களும், பாடல்களும் தமிழ்த்திரையிசைஇல் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால், அவையும் தனியாள் ரசனைக்குட்பட்டு மாறக்கூடியவையே.

என்னைப் பொருத்தவரை, ஆண் பாடினால், தானே பாடுவதாகவும், பெண் பாடினால் அது தனக்காகப் பாடப்படுவதாகவும் நினைத்துக் கிளர்ச்சி கொள்கிற என் மனது, அந்த ஒரு குரலில்  மட்டும் எளிதாக பால்பேதங்களைக் கடந்துவிடுகிறது. அது பெண் குரல்தான் என்றாலும், எண்ணங்களின் மூலையில் எங்கோ மறைந்துகிடக்கிற பெண் தன்மையை என் முழு சம்மதத்தோடே அழைத்துவந்து அம்பலத்தில் நிறுத்துகிற வல்லமை அந்தக் குரலுக்கு வாய்த்த அபூர்வச் சிறப்பு.

சுகமோ, சோகமோ அந்தக் குரலொலியில் குன்றாது நிறைந்திருக்கிற ஒருவித கம்பீரம் கலந்த பளிங்குத் தூய்மை தமிழ்த்திரையிசை வரலாற்றில் இதுவரை வேறெந்தப்  பாடகிக்கும் வாய்க்கவில்லை. “ணானா, பாடுவது நானா?” என 40 வயது பாத்திரம் ஏற்ற சரிதாவையும், “அன்பே உனை ஆராதனை செய்கின்றவள் மனது” என 20 வயது நாயகியாய் கொஞ்சிய ஸ்ரீபிரியாவையும் கண்முன் நிறுத்துகிற காந்தசக்தி செறிந்த குரல் அது.

graphic வாணிஜெயராம்
 “மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ” என்ற பாடலைக் கேட்கிற ஆண்களுக்கு, பூச்சூடுகிற ஆசை பிறந்தால், அதற்கு வாணிஜெயராம்தான் முழுப்பொறுப்பு. இசை இரட்டையர்களான சங்கர் கணேஷ் இசையை உச்சம் தொடச்செய்த “மேகமே, மேகமே” பாடலில், “பாவையின் ராகம் சோகங்களோ” எனக் கேட்டபடி, தன் குரலைக் கீழிருந்து மேலாகக் கொஞ்சம் கொஞ்சமாய் எடுத்துச் சென்று உச்சம் தொட்டு, அவர் நம் மனதில் விதைக்கிற சோகம் பெண்களுக்கு மட்டுமே சொந்தமானதா என்ன?

பிற பாடகிகளின் குரலுக்கு தனது இசையின் மூலம் ஒரு புதிய நிறத்தைக் கொடுக்கிற வழக்கம் ராஜாவினுடையது. ஆனால் அவர் இசையில் வாணி பாடும்போதெல்லாம், அந்த இசையில் வழக்கத்திற்கு மாறான வேறொரு நிறம் தோன்றுவதை அவதானிக்க முடியும். அழகை ஆராதிக்கிறேன் “நானே நானா?, “ “என் கல்யாண வைபோகம் உன்னோடுதான்”, காற்றினிலே வரும் கீதம் “கண்டேன் எங்கும் பூமகள் நாட்டியம்”, , புன்னகை மன்னன் “கவிதை கேளுங்கள்” போன்ற பாடல்கள் மேற்சொன்ன கூற்றிற்கு சில உதாரணங்கள்.

“வாய்க்கா வரப்புக்குள்ள” என மலேசியாவோடு மல்லுக்கு நின்றாலும், “பூவான ஏட்டத்தொட்டு” என மனோவோடு மருகும்போதும், “இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே” என ஜெயச்சந்திரனோடு உருகினாலும்,  “சொர்க்கத்தின் திறப்பு விழா” எனஜேசுதாசோடு இணைந்து நம்மை சொக்கவைத்தாலும், “ஒரே நாள், உனை நான்” என s.p.b.யோடு உறவாடினாலும் ஒற்றை ராக ராணியாய் உரத்து ஒலிப்பதென்னவோ இவரது குரலும் சுதியுமே என்பதால், இணைந்து பாடும் ஜோடிகள் எவரின் கதியும் “அம்மம்மா சரணம் சரணம் உன் பாதங்கள்” என்பதுதான்.

“நித்தம் நித்தம் நெல்லுச்சோறு” கேட்கும்போதேல்லாம், “அட தீனிப்பண்டாரமே!” என நமது அக்காவைக் கோபிக்கிற உரிமையையும், “கட்டிக் கரும்பே கண்ணா” காதில் விழும்போதெல்லாம் “அழாதே அம்மா!” எனச் சொல்லத்தோன்றுகிற பரிவையும் ஒன்றாக நமக்குப் பரிசளிக்கிறது அவரது குரல். சரி எந்தப் பாடல்தான் ரதம் ஏறப்போகிறது என்கிற உங்களின் கேள்விக்கு இன்னொரு கேள்விதான் பதில். அது முதன்முறையாக வாணிமாவின் பாடலைக் கேட்க வாய்க்கும்  எவரும் கேட்கும் கேள்விதான்.

அந்தக் கேள்வி ...
“யாரது? சொல்லாமல் நெஞ்சல்லிப் போறது?”
 பாடலைக் கேட்க
ரதம் பயணிக்கும்.
இத்தொடரின் முந்தைய பகுதிகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக