நூல் அறிமுகம்: செவியில் மட்டுமல்ல செவிட்டிலும் விழும் நல்ல கவிதை.

பேரா. முஹம்மது அஸ்கர்
தோழர் கண்மணி ராசா சென்ற வாரம் தான் முகநூலில் லட்சுமி குட்டி pdf  வடிவில் வந்து விட்டாள் என்று பதிவிட்டிருந்தார். தோழரை அழைத்து கேட்ட  மாத்திரத்தில் pdf அனுப்பி வைத்துவிட்டார். ஒரு பேருந்துப் பயணத்தில் லட்சுமி  குட்டியை வாசித்து முடித்து விட்டேன்.

தோழர் கண்மணி ராசா தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற மாநிலத்  துனைத்தலைவர். ராஜபாளையத்தை பூர்வீகமாக கொண்ட தோழர், தொழிலாளர்  அமைப்புகளில் தீவிரமாக பணியாற்றி வருகிறார். பஞ்சாலை பணி என்றாலும் தம் உழைப்புக்கான நேரம் போக மீதத்தை தொழிலாளர் அமைப்புகளுக்காகவும்,  இலக்கிய அமைப்பிற்காகவும் ஒதுக்கி சிறப்பாக இயங்கி வருகிறார். லட்சுமி குட்டி என்ற ஒரு சிறந்த கவிதைத் தொகுப்பை நம் கரங்களுக்குத் தந்திருக்கிறார்.

தான் வாழும் சாதாரணப் பாட்டாளி மனிதர்களின் முன்னேற்றத்திற்காகப்
பாடுபடும் தோழர்
"உணவருந்தும்; உதவிகள் செய்யும்; வரவேற்கும்; வழியனுப்பும்; ஆசீர்வதிக்கும்;
அரவணைக்கும்; கைகுலுக்கும்; கவிதைகள் எழுதும்
வரிசையாய் சொல்லிய ஆசிரியர் கேட்டார் வலதுகை வேறென்ன செய்யும் ?
வகுப்பறையே மெளனமாய் யோசிக்க
ஓற் சிறுவன் சொல்வான்
மலம் அள்ளும்"
என்று சமூகம் சார்ந்த என்ன மணப்பாடுகளை லட்சுமி குட்டியைக் கூட்டி வந்து பேசியிருக்கிறார்.

வறுமையின் கொடுமையை, விரக்தி தரும் வெறுமையை, பாட்டாளியின் ஓலத்தை
"சாணிப்பால் முற்றத்தில் தினக்காயும் இரவொளியில்
உன்னோடு கவிதை பேச ஆசை
பகலெல்லாம் பாரவண்டி இழுத்த களைப்பில் நானும்
, தீப்பெட்டி ஆபிசில் தீயாய் பறந்த களைப்பில் நீயும்
, கண்ணயர்ந்து உறங்குகையில் கவிதையாவது ? கழுதையாவது"
என்று தன்னோடு வாழும் சக மனிதர்களின் இதயங்களுக்குள் இருந்து உரக்கக்  குரல் எடுத்துப் பேசுகிறார்.

குழந்தைகளின் உலகம் அலாதியானது. அந்த தனித்த உலகத்தை
"சத்தமிட்டபடியே சாலையில் போகும் வாகனங்களை நோக்கி உதடுகள் குவித்து
" உஷ் " என்கிறாள் லட்சுமிக்குட்டி
அவள் மடியில் உறங்கிக் கொண்டிருந்தது குரங்குப் பொம்மை"
என்று சித்திரமாய் லட்சுமி குட்டியின் வழி வெளிப்படுத்தியிருக்கிறார்.

சமூகப் போராட்டத்தைப் பேசும் அதே குறளோடு
"நான் காவேரி ஆறு
நீ கரையோர வீடு
என்றேனும் ஓர் நாள் இழுத்துச் செல்வேன்
என்னோடு உன்னை" என்று  அழகிய காதல் மொழியும் பேசுகிறார்.

லட்சுமி  குட்டியில் இடம்பெற்றிருக்கும் 2 ,3 நாட்டுப்புற பாடல்கள், அவர் மண்சார்ந்த  வாசனையை நமக்கு நுகரத் தருகிறது.
மொத்தத்தில், லக்ஷ்மி குட்டி (அழைத்து முத்தமிடக் கூடியச்  செல்லக்குழந்தை)
வாழ்த்துக்கள் தோழர்.
 (கட்டுரையாளர் கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடு முஸ்லிம்
கலைக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியர். பல்வேறு ஊடகங்களில் தொடர்ந்து
பங்காற்றிவருபவர்)..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக