நினைவுகள்: வெளிக்கு நினைவுகள்


ரா. பாலகணேசன்
மனிதன் உணவு உண்பது அவசியமானது. உண்டபிறகு வெளிப்படும் கழிவுகளை உடலிலிருந்து வெளியேற்றுவது மிகமிக அவசியமானது. அப்படி  வெளியேற்ற நான் பட்ட பாடுகளை பகிர்ந்துகொள்ளவேண்டும் என்று  திடீரென்று தோன்றியதன் விளைவு இந்தக் கட்டுரை. படிக்க  விருப்பமில்லாதவர்கள் தயவுசெய்து இதை விட்டுவிடலாம்.

அருப்புக்கோட்டை மிகச் சிறந்த நகரம். என் அம்மாவின் வார்த்தைகளில் கூறுவதானால் இங்கு அம்மா, அப்பா தவிர எல்லாவற்றையும் வாங்கிவிடலாம். அத்தகைய நகரத்தில் ஒரு சிறிய காம்பவுண்டு வீட்டில் நாங்கள் தங்கியிருந்தோம். எங்கள் ஊரில் அதனைப் பேட்டை என்று அழைப்பர். மொத்தம் 7 வீடுகள். ஒவ்வொரு வீட்டிலும் ஒரே அறை. சாப்பிட, படுக்க, களவி கொள்ள எல்லாவற்றிற்கும் அதுதான் இடம். 7 வீட்டாரும் குளிக்க ஒரு அறை; அருகிலேயே சிறுநீர் கழிக்க ஒரு வாய்க்கால். ஆனால் வெளிக்குப் போக இடமில்லை.

4 வயதிலேயே சிவகங்கை அரசு பார்வையற்றோர் பள்ளியில் சேர்க்கப்பட்ட நான், வீட்டிற்குச் செல்லும்போதெல்லாம் அதிகம் வெளியில் செல்வது வெளிக்கிருப்பதற்காகத்தான். பள்ளிக்குச் செல்வதற்கு முன் வீட்டுக்கு முன் இருக்கும் வேப்பமரத்தின் அடியிலேயே வெளிக்கிருப்பேன். அருகில் இருக்கும் சாக்கடைக்குள் அதைத் தள்ளிவிட்டுவிடுவார் என் அம்மா. அதற்குப் பிறகு ஒரு பாலம். அப்படித்தான் சொல்வார்கள். ஒரு பெரிய கூட்டுறவுச் சங்கக் கட்டடத்தின் பின்பகுதி. எங்கள் பேட்டையில் இருக்கும் என் வயதொத்தவர்கள் அனைவரும் பெண்களே என்பதால் அவர்களோடுதான் பயணம்.

அவர்கள் நிறைய கற்றுத்தந்தார்கள். பெருக்குவது, தண்ணீர் தெளிப்பது, கோலம் போடுவது என காற்று வெளியீடு, சிறுநீர் கழித்தல், வெளிக்கிருத்தல் ஆகியவற்றிற்குப் பெயரிட்டிருந்தார்கள். ஒவ்வொரு செயலை முடித்தவுடனும் பெருமையாய்ச் சொல்லிக்கொள்வோம்.’ ‘நான் பெருக்கீட்டேன்’. ‘நான் கோலம் போட்டுட்டேன்’. இப்படி.

ஒருநாள் இப்படித்தான். பெருக்கி, தெளித்து, கோலம் போடத் தொடங்குகையில் ஒருத்தி அவசர அவசரமாய் எழுப்பிவிட்டாள். ஊமாளு வர்றான்’. அருகிலிருக்கும் பணக்கார வீட்டு இளைஞந்தான் ஊமாளு. அவர் வாய் பேசமுடியாதவர் என்பதால் அந்தப் பெயர். வீட்டில் எல்லோரும் அவரை அடித்துத் துன்புறுத்துவார்கள். அதனால் வருவோர் போவோரிடம் கையேந்தத் தொடங்கினார். அவரைக் கிண்டல் செய்தும், பயத்திலும் நாங்கள் அவருக்கு இட்ட பெயர் ஊமாளு’.

6-ஆம் வகுப்பு வந்தவுடன் பெரிய பையனாகிவிட்டதாய் ஒரு நினைப்பு. பக்கத்து வீட்டுப் பெண்களிடம் பேசுவதைக் குறைத்துக்கொண்டேன். யாராவது இந்தப் பாட்டு பாடு, அந்தப் பாட்டு பாடுஎன்றால் வெட்கப்பட்டு மறுத்துவிடுவேன். அதற்குள் எங்களுக்கும், பக்கத்து வீடுகளுக்கும் வாய்த் தகராறு வேறு. எல்லாம் சேர்ந்து வெளிக்கு பிரச்சனையை இன்னும் தீவிரப்படுத்தியது.

அடுத்த பரிணாமமாக அம்மாவோடு போனேன். பெண்கள் செல்லும் மந்தைக் காட்டிற்கு அழைத்துச்சென்றார் அம்மா. ஊர்ப் புரணி எல்லாம் அங்கேதான் அரங்கேறும். முதலில் பலர் திட்டினர்; சிலர் பார்வையற்றவன் என்பதால் அனுமதித்தனர். சில நாட்களிலேயே அந்த ஏற்பாட்டை மறுத்துவிட்டேன்.

மந்தைக்காட்டிற்கு அருகிலேயே ஒரு ஓடையை இனம் கண்டார் என் அம்மா. அங்கு அமர்ந்து பன்றிகளுக்கு இரையிட்டேன். அக்காலத்தில்தான் கடவுள் நம்பிக்கை அதிகமானது. அம்மாவோடு செல்கையில் யாராவது ஒருவர் இடையில் நிறுத்திவிடுவார். என்னைப் பற்றியும், குடும்பம் பற்றியும் அப்போதுதான் அக்கறையாய் விசாரிப்பார். என் அவசரம் அவர்களுக்கு எப்படிப் புரியும்? அதனால்தான். போகும்வரை வெளிக்கு வந்துவிடக்கூடாதுஎன்று இறைவனை வேண்டிக்கொள்வேன்.

மழை தூற ஆரம்பித்தாலும், ‘நான் வீடு திரும்பும்வரை மழை வேண்டாம்என்று வேண்டுவேன். மழை விஷயத்தில் எனக்கு சில நேரங்களில் இறைவன் கருணை காட்டவில்லை; ஆனால் அந்த விஷயத்தில் என் மனதின் குரல் அவருக்குக் கேட்டது போலும்..

1998 தேர்தல். அப்பா, அம்மா, அக்கா எல்லோரும் வாக்களிக்கச் சென்றுவிட்டார்கள். தனியாக நான். ஒரே மகிழ்ச்சி. எப்படிக் கொண்டாடுவது? முடிவெடுத்தேன். சீனி நிரப்பப்பட்ட தூக்குச்சட்டியிலிருந்து கரண்டி கரண்டியாக அள்ளி வாயில் போட்டேன். மகிழ்ச்சி நிலைக்கவில்லை. ஒருமணிநேரம் ஆகியும் யாரும் வரவில்லை. திடீரென்று வந்த அம்மாவின் குரல் அன்றுதான் அமிர்தமாய் இருந்தது. அந்தப் பாடை நான் என்றென்றும் மறக்கமாட்டேன்.

கொஞ்சம் கொஞ்சமாய் பருவமடையத் தொடங்குவதை உணர்ந்தேன். அம்மாவுடன் செல்ல மறுத்துவிட்டேன். வெளிக்கு பிரச்சனையின் அடுத்த பரிணாமம் உருவானது. எங்கள் தெருவுக்கு அருகில் கட்டணக் கழிப்பறை அப்போதுதான் வந்தது. அப்பாவுடன் பயணமானேன். ஆண்களுக்கு ஒரு ரூபாய். பெண்களுக்கு கால் ரூபாய். இரவு நேரங்களில் 5 ரூபாய். அப்போது ஒரு ரூபாய், கால் ரூபாய் நாணயங்களுக்கு எங்கள் பேட்டையில் ஏகப்பட்ட கிராக்கி. அப்போதுதான் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. ஒரே ஒரு சிக்கல். வந்தாலும், அப்பா வேலையை விட்டு வரும்வரை காத்திருக்கவேண்டும். செய்தேன்.

வீட்டுக்குச் சென்றால் நன்றாகச் சாப்பிடலாம் என்றுதான் எல்லோரும் நினைப்போம். நான் சாப்பிடும்போதே அடுத்த நாள் பற்றி சிந்தித்துவிடுவேன். அளவைக் குறைத்துக்கொள்வேன். நான் கல்லூரி படிக்கும்போது பல விடுமுறைகளை வீட்டிற்குச் செல்லாமலேயே தவிர்த்திருக்கிறேன். விடுமுறைக் காலத்தில் நான் தங்கியிருந்த IAB-யில் சிறப்புப் பயிற்சி வகுப்பு ஏதாவது வைத்துவிட மாட்டார்களா என்றும் ஏங்கியிருக்கிறேன். தீபாவளி, பொங்கல் என்ற எந்த பண்டிகைக் கால விடுமுறையையும் நான் வீட்டிற்குச் சென்று கொண்டாட விரும்பியதில்லை. காரணம், இது ஒன்றுதான். இறுதியாக 2010-ல்தான் கழிப்பறையுடன் கூடிய வீட்டிற்கு வந்தோம். அதுவரை ஏகப்பட்ட சிரமங்கள்.

ஒருநாள் இரவு IAB-யில் நான்கைந்து நண்பர்கள் ஒன்றாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். அப்போது இந்தப் பிரச்சனை பற்றியும் பேசினோம். ஒவ்வொருவரும் பல சுவாரஸ்யமான அனுபவங்கலை வழங்கினார்கள். நம்மைப் போல் நிறைய பேர் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கை பிறந்தது.  தீர்வுகள் பற்றி யோசிக்கும்போது நடமாடும் கழிப்பறை என்ற ஒரு தீர்வை நான் முன்வைத்தேன். எல்லோரும் சிரித்தார்கள்; ஆனால் ஏற்றுக்கொண்டார்கள். அது இப்போது சாத்தியமாகியிருக்கிறது. முன்பே இருந்ததோ இல்லையோ. எங்களுக்குத் தெரியாது.

இப்போது நான் கட்டியிருக்கும் வீட்டில் இரண்டு கழிப்பறைகள். ஒன்று மேற்கத்தியக் கழிப்பறை; இன்னொன்று இந்தியவகை்க் கழிப்பறை. நான் வீடு கட்டிவிட்டேன் என்பதைவிட, எனக்கான கழிப்பறைகளை அமைத்துக்கொண்டுவிட்டேன் என்பதில்தான் நிம்மதி எனக்கு. இப்படி இன்னும் நிறைய அனுபவங்கள் இருக்கின்றன. சொல்லமுடிந்ததில் சிலவற்றைச் சொல்லியிருக்கிறேன். நீங்களும் சிரமப்பட்டவர்களாக இருந்தால் தொடர்ந்து பகிருங்கள். பேசுவோம்; வெளிப்படையாகப் பேசுவோம்.
தொடர்புக்கு: balaganesan2285@gmail.com

2 கருத்துகள்: