கவிதை: வரம் எனக்கு வேண்டுமய்யா


பேரா. வே. சுகுமாரன்

புத்தன் இயேசு காந்திஎன்று
புவியில் பலர் பிறந்தார்
இத்தனை பெரியோர் பிறந்தா
லென்ன புவியோர் திருந்திலரே!

சத்திய வேந்தன் கண்ணைத்
திறந்து கருணை செய்வானா?
நித்திய மாக மக்கள்
செய்யும் தீமை யழிப்பானா?

வெற்றிக் கொடியோன் வேலைக்
கையில் ஏந்திப் பிடிப்பானா?
பற்றிய தீமை பாரில்
நீங்கப் போரைச் செய்வானா?

பெண்ணைக் கற்பின் பிறப்பிட
மென்று பேசு மாடவரே!
தன்னைக் கற்பெனும் தளையில்
படுத்தத் தயங்கக் கண்டோமே!

ஆடவர் வழியே அமையும்
உலகென அன்றே தெளிவாக
பாடிய செந்தமிழ்ப் பாட்டை
மறந்து பாவிக ளானோமே!

ஏட்டில் கற்பு எழில்பெறச்
சொல்லி வாழ்வில் கைவிட்டால்
வீட்டில் கற்பு விடைபெற்
றிடுமே! உண்மை தெரியாதோ?

இத்தனை குறையை எப்படிப்
போக்க, இறைவா வருவாயோ!
வந்தால் வரந்தான் தந்தால்
கடுகிக் குறைகள் மாயாதோ?

ஓடாய்த் தேய்ந்து உடல்தான்
நோக உழைக்கும் தொழில்வர்க்கம்
கூடே காணாப் பறவை
போலக் குன்றிப் போனாயே!

நாடே வாழ நாளு
முழைத்தாய்; நடுத்தெரு கண்டாயே!
மாடாய் உன்னை உழைக்கச்
செய்தோர் மாடிகள் கொண்டாரே!

செந்நீர் சிந்திச் செழுமை
செய்தார் உலகில் எந்நாளும்
கண்ணீர் வெள்ளம் கரைபுரண்
டோட வாழ்தல் நன்றாமோ?

சூரர் செய்த கொடுமைகள்
கண்டு குமரா நீவந்தாய்
கோரக் காட்சி கண்ணால்
கண்டும் என்கொல் நீநின்றாய்?

கல்லா நெஞ்சில் நில்லான்
ஈசன்’, கவின்பெற மொழிந்தாரே!
கல்லா மக்கள் கற்கும்
வழியைக் கருதா தொழிந்தாரே!

எல்லா உயிரும் வாழ்ந்திட
வேண்டும் என்றே சொன்னாரே!
எல்லாப் பொருளும் தம்முடைக்
கையில் ஏந்திக் கொண்டாரே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக