கா. செல்வம்
"பள்ளிப் படிப்பை முடித்தவர்கள் அல்லது
இடை நின்றவர்கள் பெரும்பாலானவர்களை அச்சுறுத்திய பாடங்களாக ஆங்கிலமும் கணிதமும்
இருக்கும். இவற்றில் ஆங்கிலமானது மொழிப் பாடமென்பதாலும் தற்போது ஆங்கில வழிக்
கல்வி பெருகி வருவதால் ஆங்கிலத்திற்குப் பதிலாக தமிழ்ப் பாடம் கடினமானதாக
உருவெடுத்து வருகின்றது. ஆனால் கணிதப் பாடம் அதே அச்சுறுத்தும் தன்மையுடன்
தொடர்ந்து நிலைத்து நிற்கிறது.
இதற்கான தீர்வாக மத்தியக் கல்வி
வாரியப் பாடத்திட்டத்தில் இரண்டு விதமான கணிதப் பாடங்கள் கொண்டுவரப்படுகின்றன.
அதன்படி கணிதம் தொடர்பில்லாத உயர்கல்வி அல்லது உயர்கல்வியில் நாட்டம்
இல்லாதோருக்காக வெறும் அடிப்படைத் திறன்கள் மட்டுமே கொண்ட எளிமையான பாடத்திட்டம்
ஒன்று; கணிதம் தொடர்பான உயர்கல்வி கற்பதற்கு ஏதுவாக
செறிவான திறன்களை உள்ளடக்கிய உயர்வகையான பாடத்திட்டம் இன்னொன்று என இரண்டு விதமான
பாடத்திட்டங்கள் மத்தியக் கல்வி வாரியத்தின் பள்ளிக்கல்வியில்
கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் காரணமாக கணிதப் பாடத்தின் மீதான அச்சம்
தவிர்க்கப்படும். ஆர்வமுள்ள, திறனுள்ள மாணவர்கள் மட்டும் முழுமையான
கணிதப் பாடத்திட்டத்தைப் பயில வேண்டியிருக்கும். இப்படியான நடைமுறை மாநிலக்
கல்வித் திட்டத்திலும் கொண்டுவரப்பட வேண்டும்." இவ்வாறு இரண்டு ஆண்டுகளுக்கு
முன் நடந்த ஊடக விவாதம் ஒன்றில் கருத்தாளர் ஒருவர் பேசினார்.
கணிதப் பாடத்தினால் பள்ளி வயதில்
பல்வேறு இன்னல்களைச் சந்தித்த பலருக்கும் இந்தக் கருத்துகள், காலங்கடந்த புன்னகையைத் தந்திருக்கும். சரி, இது நல்ல நடைமுறையாக இருக்கும் என்றால் இதன் பின்புலத்தையும்
எதிர்கால விளைவுகளையும் ஆராய வேண்டுமல்லவா? நம் ஒவ்வொருவருக்குமான விருப்பப் பாடங்கள் ஒரு சிலரைத் தவிர மற்ற
அனைவருக்கும் ஒவ்வொரு வகுப்புகளில் மாறியிருக்கும். ஒரு வகுப்பில் விருப்பப்
பாடமாக இருந்தது இன்னொரு வகுப்பில் அச்சுறுத்தும் பாடமாக மாறுவதும், அச்சுறுத்தும் பாடமாக இருந்தது விருப்பப் பாடமாக மாறுவதும் எப்படி
நடந்தது? அச்சுறுத்தும் பாடமாக பூதாகரமாக
நின்றது சிறு ஊசி உடைத்த பலூன் போன்று சட்டென்று காணாமல் போனது எப்படி? அந்த சிறு ஊசியாக அக்கறையுள்ள நண்பர்கள், ஆதரவான பெற்றோர், திறமையுள்ள ஆசிரியர்கள் என எவரேனும்
ஒருவர் அல்லது அனைவரும் இருந்திருக்கக்கூடும். அப்படியானால் தன்னை மாற்றிக்கொள்ள
வேண்டியது பாடத்திட்டமா அல்லது அதனைக் கையாளும் நபர்களா அல்லது இரண்டுமா என்பதை
ஆராய வேண்டும். அதனை விடுத்து இரண்டாம் தரப் பாடத்திட்டம் என்ற ஒன்றை உருவாக்கி,
வெகுமக்களை மறைமுகமாக கல்வி அமைப்பிலிருந்து
வெளியேற்றுவது பின்னோக்கிய நகர்வாகும். ஏனெனில் இந்த இரண்டு விதமான
பாடத்திட்டங்கள் உயர்கல்வியில் மட்டுமின்றி வேலைவாய்ப்பிலும் தகுதியின்மையை
உருவாக்கும். அதாவது இரண்டாம் தரப் பாடத்திட்டத்தில் பயின்றவர்களுக்கு இரண்டாம்
தரமான பணிவாய்ப்புகள் மட்டுமே கிடைக்கும்.
இம்மாதிரியான விவாதங்கள்
மாற்றுத்திறனாளிகளுக்கான கல்வி முறைகளிலும் தற்போது தொடங்கியிருக்கின்றன.
தமிழ்நாட்டின் மாநிலக் கல்வித் திட்டத்தின்படி அனைத்து மாணவர்களும் பின்பற்றும்
பாடத்திட்டம் மற்றும் பொதுத் தேர்வு முறைகளையே மாற்றுத்திறனாளி மாணவர்களும்
பின்பற்றுகின்றனர். இதில் பத்தாம் வகுப்பு அறிவியல் செய்முறைத் தேர்வு சொந்த
விருப்ப அடிப்படையில் மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது. மேலும்
செவித் திறன் மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டும் இரு மொழிப் பாடங்களுள் ஒன்றில் சொந்த
விருப்ப அடிப்படையில் விலக்கு அளிக்கப்படுகிறது. இதிலும் விலக்குப் பெற்ற பாடத்தைத்
தனியாகப் படித்துத் தேர்ச்சி பெறுவதற்கும் அனுமதி உண்டு. இவ்வாறு விலக்குப் பெற்ற
பாடத்திலும் தேர்ச்சி பெற்றிருப்பது உயர்கல்விக்கும் பணி வாய்ப்புகளுக்கும்
கூடுதல் தகுதியாக உதவுகிறது.
பாட விலக்கு ஏதுமின்றி அனைத்துப்
பாடங்களையும் பயிலும் பார்வை மாற்றுத்திறனாளிகள் உயர்கல்வியில் கணிதம் மற்றும்
அறிவியல் தொடர்பான பாடங்களைத் தவிர்த்துவிட்டு கலைப் பிரிவு பாடங்களையே
தேர்ந்தெடுக்கின்றனர். ஏனெனில் கணிதம் மற்றும் அறிவியல் தொடர்பான படிப்புகளில்
பயன்படுத்தப்படும் பலவகையான குறியீடுகள், செய்து பார்க்க
வேண்டிய பரிசோதனைகள் போன்றவை பார்வை மாற்றுத்திறனாளிகளுக்குப் பெரும் சவால்களை
ஏற்படுத்துகின்றன. இந்நிலையில் பார்வை மாற்றுத்திறனாளிகளின் உயர்கல்விக்குப்
பொருந்தாத கணிதப் பாடத்தை, செவித் திறன் மாற்றுத்திறனாளிகளுக்கு
மொழிப் பாடம் ஒன்றில் விலக்கு அளிக்கப்படுவது போன்று பார்வை மாற்றுத்திறனாளிகளுக்குக்
கணிதப் பாடத்தில் விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. அதாவது
உயர்கல்விக்குப் பொருந்தாத அல்லது உயர்கல்வியில் பயன்படாத கணிதப் பாடத்திலிருந்து
பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்பதே அந்தக்
கோரிக்கை. இதே கோரிக்கை பின்னாளில் அறிவியல் பாடத்திற்கும் எழுமா என்ற முன்கூட்டிய
சந்தேகத்தையும் இப்போதே இங்கேயே வைத்துவிட்டு விவாதங்களைத் தொடர்வோம்.
பார்வை மாற்றுத்திறனாளிகள்
உயர்கல்வியில் கணிதம் மற்றும் அறிவியல் தொடர்பான படிப்புகளைத் தவிர்க்கின்றனர்
அல்லது தவிர்க்க முடிகிறதே தவிர போட்டித் தேர்வுகளில் அப்படி முடியாது.
மாற்றுத்திறனாளிகளைப் பொருத்தவரை கை, கால்
மாற்றுத்திறனாளிகளுக்கு அடுத்தபடியாக பார்வை மாற்றுத்திறனாளிகள் மட்டுமே பெருமளவு
போட்டித் தேர்வுகளை எழுதுகின்றனர்; தேர்ச்சி பெறுகின்றனர். எந்தவொரு
தேர்வும் "எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்" என்ற வள்ளுவர் வழியில்
அமைக்கப்படுவதாகும். அதாவது மொழியறிவும் கணித அறிவும் போட்டித் தேர்வுகளுக்கான
அடிப்படைத் திறன்களாகும். இவற்றில் குறைந்தபட்சம் சராசரியான திறமை பெற்றிருப்பது
தேர்ச்சிக்கு உத்திரவாதம் அளிக்கும். சராசரியான திறமையே தேர்ச்சிக்கு உத்திரவாதம்
என்றால் சற்றே கூடுதலான திறமையை வளர்த்துக்கொள்வது வேலைவாய்ப்பை உறுதிப்படுத்தும்.
ஏனெனில் மற்ற பாடங்களின் அறிவு பெரும்பாலும் தகவல்களாக இருப்பவை; அவை தவறாக இருப்பதற்கும் தவறாகப் புரிந்துகொள்ளப்படுவதற்கும்
வாய்ப்புகள் அதிகமாக உள்ளவை. ஆனால் மொழியறிவும் கணித அறிவும் தர்க்க அடிப்படையில்
அமைந்தவை; அவற்றை நமக்கு நாமே ஒவ்வொரு முறையும்
சரிபார்த்துக்கொள்ள முடியும். அதனால் தான் மொழியறிவும் கணித அறிவும் தேர்ச்சிக்கு
உத்திரவாதம் அளிக்கின்றன.
பார்வை மாற்றுத்திறனாளிகள் பெரும்பாலான
போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெறுகின்றனர் என்று கூறுகின்ற நேரத்தில், தேர்ச்சிக்கு உரிய பணிவாய்ப்புகள் அளிக்கப்படுவதில்லை என்பதையும்
தெரிந்துகொள்ள வேண்டும். ஏனெனில் அந்தப் பணியை இந்தப் பார்வை மாற்றுத்திறனாளியால்
செய்ய முடியாது என்ற அடிப்படையில் விலக்கி வைக்கப்படுகின்றனர். ஆமாம், உண்மையில் கற்பித்தல் தொடர்பான ஆசிரியர், பேராசிரியர் பணியிடங்கள் தவிர ஏனைய பணிவாய்ப்புகளை தொடர்
போராட்டங்கள் மற்றும் நீதிமன்ற உத்தரவுகள் மூலமாகவே பெறுகின்றனர். அதாவது உரிய
கல்வித் தகுதியைப் பெற்று, போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற்றும்
இந்தப் பணிக்குத் தான் தகுதியானவர் என்பதை நீதிமன்றங்களில் பார்வை
மாற்றுத்திறனாளிகள் நிரூபித்த பின்னரே பணிவாய்ப்புகளைப் பெறுகின்றனர். பார்வை
மாற்றுத்திறனாளிகள் என்பதாலேயே எளிதாக அரசு வேலை கிடைத்துவிட்டது என்று
பொதுவெளியில் பேசிக்கொள்வது போல எந்த விதத்திலும் எளிதானதல்ல
மாற்றுத்திறனாளிகளுக்கான அரசு அல்லது தனியார் பணிவாய்ப்புகள்.
ஐந்து பாடங்களும் படித்த பின்னரும்
போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெறுவது கடினம் என்றால், கணிதப் பாடத்தில் விலக்கு அளிக்கப்பட்டால் போட்டித் தேர்வுகளை
எழுதுவதே கடினமாகிவிடும். கணிதப் பாடம் பயிலாமல் இருப்பது போட்டித் தேர்வுகள்
குறித்த தாழ்வு மனப்பான்மையை உருவாக்கிவிடும்.மாற்றுத்திறனாளி என்ற சவாலுடன்
கணிதப் பாடம் இன்மை என்ற இன்னொரு சவாலையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஒருவேளை
தனித்துவமான திறமை அல்லது முயற்சியின் மூலமாக போட்டித் தேர்வில் தேர்ச்சி
பெற்றாலும் பணிவாய்ப்புகளுக்காக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துப் போராட
முடியுமா? மிக முக்கியமான கணிதப் பாடத்தில்
தேர்ச்சி பெறாதவர் என்ற காரணத்தாலேயே பெருமளவு பணிவாய்ப்புகள் தொடக்க நிலையிலேயே
நீதிமன்றத்திலும் கூட நிராகரிக்கப்படும்.
கல்வி முறை என்பது அனைவரையும்
உள்ளிழுத்துக்கொள்ள வேண்டும். எவரேனும் ஒருவர் உள்ளே நுழைவதற்கு ஏதேனும் தடைகள்
இருந்தால் அவை நீக்கப்பட வேண்டும். தடைகளை மேலும் மேலும்உருவாக்குவதாக கல்வி முறை
இருக்கக்கூடாது. மாற்றுத்திறனாளி மட்டுமின்றி யாராக இருந்தாலும் ஒருவர் கல்வி
முறையை விட்டு வெளியேறும்படி கல்வி முறை இருக்கிறது என்றால், மிக அவசரமாக
கல்வி முறை சீரமைக்கப்பட வேண்டும். மிக எளிதாக வெளியேற்றுவது அல்லது விலக்கு
அளிப்பது என்பன கருணைக் கொலையைப் போன்றவை. அவை சூழலுக்கு ஏற்ப பரிணாம வளர்ச்சி
பெற்று கொடூரமான ஆணவக் கொலைகளாகவும் மாறிவிடும். ஆகவே மாணவர்களுக்கு ஏற்ற வகையில்
பாடத்திட்டமும் கற்பித்தல் முறைகளும் சமகாலத்தில், ஒரே நேரத்தில் சீரமைக்கப்பட வேண்டும்; எளிமைப்படுத்தப்பட
வேண்டும். குறிப்பாக பார்வை மாற்றுத்திறனாளிகள் கணிதப் பாடம் கற்பதில் உள்ள
சவால்கள் விவாதிக்கப்பட வேண்டும்.
இந்த விவாதங்கள் வழியாக கணிதப்
பாடங்களைப் கற்பதில் புதிய முறைகளை அறிமுகப்படுத்த வேண்டும்; இதற்கு நவீன
அறிவியல் கண்டுபிடிப்புகள் நிச்சயமாக உதவும். மாறாக கணிதப் பாடத்திலிருந்து பார்வை
மாற்றுத்திறனாளிகளை வெளியேற்றுவது என்பது கருணைக் கொலையாகவோ அல்லது ஆணவக்
கொலையாகவோ மட்டுமே முடியும். கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் நடைமுறைக்கு வரும்
காலச்சூழலில் மாற்றுத்திறனாளிகள் ஏதேனும் ஒன்றிரண்டு பாடங்களில் விலக்கு, பொதுத் தேர்வு
எழுதுவதில் விலக்கு என கருணைக் கொலையைப் போன்று மறைமுகமாக வெளியேற்றுவது அல்லது
வெளியேறத் தூண்டுவது ஒரு நூற்றாண்டு பின்னோக்கிச் செல்வதாகும்.
இவ்வளவு நவீன காலத்திலும்
மாற்றுத்திறனாளிகளுக்கு இதைக் கற்பிக்க முடியாது, அவர்களால் கற்றுக்கொள்ள இயலாது என்று
கூறுவது நமது அறிவு வளர்ச்சிக்கும் அறிவியல் வளர்ச்சிக்கும் அவமானம் இல்லையா? கட்டாயக் கல்வி
உரிமைச் சட்டம் என்ற சொல்லில் உள்ள "உரிமை" என்ற சொல் வெளியேறுவதற்கான உரிமை
அன்று; நமது தேவைகளைக் கேட்டுப் பெறுவதற்கான உரிமையாகும். ஏனெனில்
குறிப்பிட்ட பாடத்திலிருந்து விலக்கு என்பது ஒன்றையடுத்து ஒன்று என படிப்படியாக
நகர்த்தி முழுமையாக நம்மை வெளியேற்றிவிடும். ஆகவே விலக்கு எனும் எதிர்மறையான
எண்ணங்களைத் தவிர்த்து கற்பித்தல் முறைகளில் மற்றும் பாடத்திட்டங்களில் மாற்றம்
எனும் ஆக்கப்பூர்வமான வழிகளில் பயணிப்போம்.
கட்டுரையாளர் ஈரோடு செவித்திறன் குறையுடையோருக்கான அரசு உயர்நிலைப்பள்ளியின் கணிதப் பட்டதாரி ஆசிரியர், இவர் பார்வை மாற்றுத்திறனாளி அல்ல.
தொடர்புக்கு teacherselvam@gmail.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக