அலசல்: பார்வையற்றோர் வாழ்வில் 2019 - ரா. பாலகணேசன்


2019 பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு எப்படி இருந்தது? கொஞ்சம் திரும்பிப் பார்ப்போமா?

ஆளுமை


இந்த ஆண்டில் மக்களால் பெருமளவில் அறியப்பட்ட ஆளுமை பாடகர் திருமூர்த்தி. கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஒரு குக்கிராமத்தில் பிறந்த இவர், தனக்குக் கிடைத்த பொருட்களை இசைக் கருவிகளாக்கி, கேள்வி ஞ்ானத்தால் பாடி, பலரையும் தன் பக்கம் ஈர்த்தவர். சமூக வலைதளங்களின் வளர்ச்சியால் D. இமான் அவர்களை இவர் குரல் சென்றடைய, ‘’சீறுஎன்ற படத்தில் ஒரு பாடலைப் பாடியிருக்கிறார் திருமூர்த்தி. இன்னும் இவர் பல பாடல்களைப் பாடவேண்டும் என்பது நமது விருப்பம்.

தேர்தல்

2019

graphic பிரெயில் எழுத்துகள் பொறிக்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்

இந்த ஆண்டு நடைபெற்ற இந்திய நாடாளுமன்றத் தேர்தல் பார்வையற்றோருக்கான பல செய்திகளைத் தந்துசென்றிருக்கிறது.
*இந்தத் தேர்தலில்தான் தேர்தல் ஆணையம் முதல் முறையாக பார்வையற்றோருக்கென பூத் ஸ்லிப்புகளையும், வாக்காளர் அடையாள அட்டைகளையும் பிரெயிலில் தருவதற்கு சோதனை அடிப்படையில் முயன்றது.

*பல கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கைகளில் மாற்றுத்திறனாளிகள் பற்றிய குறிப்புகளை வழங்கியிருந்தன. குறிப்பாக, மாக்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது தேர்தல் அறிக்கையை ஆங்கில மொழியில் ஒலி வடிவில் வெளியிட்டது.
*அக்கட்சியின் தமிழகப் பிரிவின் தேர்தல் அறிக்கையில் ஊராட்சி ஒன்றியம்தோறும் ஒரு சிறப்புப் பள்ளி அமைக்கப்படும் என வாக்குறுதி தரப்பட்டது.
*இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் பிரெயில் முறை மொழியாக அங்கீகரிக்க ஏற்பாடு செய்யப்படும், பிரெயில் பொருட்களுக்கான வரிகள் குறைக்கப்படும், மாற்றுத்திறனாளிகள் தொடர்பான தேசிய அளவிலான தரவு மையம் ஒன்று அமைக்கப்படும் உள்ளிட்ட பல கருத்துகள் இடம்பெற்றிருந்தன.
*திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் மாற்றுத்திறனாளிகளுக்கான வருமான வரி விலக்கிற்கான உச்ச வரம்பு ரூ. 1000000-மாக உயர்த்தப்படும் என கூறப்பட்டது. மாற்றுத்திறனாளிகளுக்கு மக்கள் பிரதிநிதிகளாக இட ஒதுக்கீடு வழங்கவேண்டும் என வலியுறுத்துவதாக விடுதலைச் சிறுத்தைகளின் தேர்தல் அறிக்கை தெரிவித்தது.
*தமிழகத்தில் பல மாற்றுத்திறனாளிகளுக்கான அமைப்புகள் ஒன்று கூடி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்கவேண்டாம் என கூட்டறிக்கை வெளியிட்டன. இதில் பார்வையற்றோருக்கான பிரதிநிதிகளும் கையெழுத்திட்டிருந்தனர்.

தமிழகம்


*பார்வைக் குறையுடையோருக்கான அரசுப் பள்ளியின் முழு அதிகாரம் வழங்கப்பட்ட முதல் பார்வை மாற்றுத்திறனாளி தலைமை ஆசிரியர் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார் திரு. வடிவேலன். இவர் புதுக்கோட்டை அரசு பார்வைத் திறன் குறையுடையோருக்கான நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் பொறுப்பைப் பெற்றது இந்த ஆண்டில்தான்.

graphic பெரியதுரை

*மாற்றுத்திறனாளிகள்  நல உரிமைச் சட்டம் 2016-இன்படி மாற்றுத்திறனாளி ஒருவர் அவமதிக்கப்பட்டதற்கு எதிராக முதல் முறையாக ஒரு முதல் தகவல் அறிக்கை இந்த ஆண்டுதான் பதிவுசெய்யப்பட்டது. திருநெல்வேலியைச் சேர்ந்த பார்வையற்ற பேராசிரியர் பெரியதுரை அவர்களை அவமதித்த காவல் துறை அதிகாரிக்கு எதிராக இந்த முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்யப்பட்டது.
*தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம்(TRB) நடத்திய மு்துநிலை ஆசிரியர்களுக்கான இணையவழித் தேர்வில் பார்வை மாற்றுத்திறனாளி தேர்வர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் குறித்து பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் & பட்டதாரிகள் சங்கம் (CSGAB) சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இதையடுத்து பார்வை மாற்றுத்திறனாளிகளுக்குக் கூடுதல் நேரம் உள்ளிட்ட பல உரிமைகளை வழங்குவதாக TRB உறுதியளித்தது.


*அமேசான் கிண்டில் என்ற இணையவழி புத்தகச் சந்தையில் முதலில் புத்தகம் வெளியிட்ட பார்வை மாற்றுத்திறனாளி என்ற பெருமையைப் பெற்றார் பார்வையற்றவன். இவரதுஎன்றேனும் ஒருநாள் நான் கவிதை எழுதக்கூடும்என்ற கவிதை நூல் இப்பெருமையைப் பெற்றுத்தந்தது. மேலும், இந்நூல் திராவிட வாசகர் வட்டம் என்ற அமைப்பினரால் காட்சிக்கு வைக்கப்பட்டது. இவரைத் தொடர்ந்து . சரவண மணிகண்டன், சோஃபியா, ரம்யா ஆகிய பார்வை மாற்றுத்திறனாளிகளும் தங்கள் படைப்புகளை கிண்டில் தளத்தில் வெளியிட்டனர். இவர்கள் நால்வருமே நம் இதழோடு தொடர்புடையவர்கள் என்பதில் இதழுக்குப் பெருமை.
*சென்ற ஆண்டு ஜனவரியில் நடத்தப்பட்ட ஜாக்டோ ஜியோ என்ற ஆசிரியர்கள் & அரசு ஊழியர்கள் கூட்டமைப்பினர் நடத்திய போராட்டத்தில் பார்வை மாற்றுத்திறனாளி ஆசிரியர்களும் பெருமளவில் கலந்துகொண்டனர்.
*கோயம்புத்தூரில் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கான மு்தியோர் இல்லத்தை நிறுவ இருக்கிறது பார்வையற்றோருக்கான தேசிய இணயம் (NFB). ஆறுமுகம் என்ற ஆசிரியர் தனது 32 சென்ட் நிலத்தை இதற்கு தானமாக வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
*பார்வை மாற்றுத்திறனாளிகளுக்குக் கணிதப் பாடத்தில் மாற்றம் செய்யலாமா என்று மாற்றுத்திறனாளிகள் நலத் துறையிடமிருந்து சிறப்புப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்குக் கடிதம் மூலம் கேள்வி எழுப்பப்பட்டது சர்ச்சையானது.
*நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் நாமக்கல் மாவட்டம் ராசம்பாலயம் ஊராட்சியின் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டார் G. சரண்யா என்ற பார்வை மாற்றுத்திறனாளி. 24  வயதே ஆன இவருக்கு மாநிலத் தேர்தல் ஆணையம் மூக்குக் கண்ணாடி சின்னம் வழங்கியது. ஆனாலும் தேர்தலில் இவர் வெற்றி பெறவில்லை.
*மதுரை IAB நிறுவனத்தால் வெளியிடப்பட்ட விழிச்சவால், பிரெயில் மஞ்சரி ஆகிய பிரெயில் இ்தழ்கள் காரணம் கூறப்படாமல் நிறுத்திவைக்கப்பட்டிருப்பது பல பிரெயில் வாசகர்களிடையே கவலையை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால், இவ்விரு இதழ்களும் மீண்டும் புதுப் பொலிவோடு வெளியிடப்படும் என்று IAB தரப்பு தெரிவிக்கிறது.

இந்தியா


*சத்தீஸ்கர் மாநிலத்தில் ஒவ்வொரு உள்ளாட்சிப் பகுதியிலும் மாற்றுத்திறனாளி ஒருவருக்கான இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டுளது.
*ராஜஸ்தான் மாநிலத்தில் தேர்வு அடிப்படையில் நியமிக்கப்படும் அரசுப் பணிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கென 20% மதிப்பெண் தளர்வு வழங்கப்பட்டிருக்கிறது.
*இந்திய ரயில்வேயில் பெரிய அளவில் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வழங்கப்பட்டது. 1132 காலி பணியிடங்களுக்குத் தேர்வு நடத்தப்பட்டுப் படிப்படியாக பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன.
*மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த பிரிஞ்சாலா பாட்டில் என்ற பார்வையற்ற பெண் IAS அதிகாரியாகப் பொறுப்பேற்றார். கேரளாவின் தலைநகரான திருவனந்தபுரத்தின் உதவி மாவட்ட ஆட்சியராக இவர் பொறுப்பேற்றிருக்கிறார்.
*மத்திய அரசு இந்த ஆண்டு இணையத்தில் வெளியிட்ட புதிய கல்விக் கொள்கை வரைவு பரவலாக விமர்சனத்திற்குள்ளானது. குறிப்பாக, இவ்வறிக்கையில் மாற்றுத்திறனாளிகளுக்கான கல்வி பற்றி 2 பக்க அளவிலேயே செய்திகள் உள்ளன. மேலும், ‘சிறப்புப் பள்ளி’ (special school) என்ற சொற்றொடரே இவ்வறிக்கையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து நமது இதழ் உள்ளிட்ட தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு அமைப்புகள் ஒன்றிணைந்து, பேரா. முருகானந்தன் அவர்கள் தலைமையில் ஒரு குழு அமைத்து மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்திற்குத் தங்கள் கவலைகளை, கருத்துகளைத் தெரிவித்துள்ளன.
*டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் கல்விக் கட்டண உயர்வுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றன. இதில் கலந்துகொண்ட பார்வை மாற்றுத்திறனாளி மாணவர்களும் காவல் துறையினரால் தாக்கப்பட்டது சர்ச்சையானது.
*டிசம்பர் இறுதியில் நடைபெற்ற குடியுரிமைச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் டெல்லி ஜாமியா மில்லியா பல்கலைக்கழகத்தில் காவல்துறை கடுமையாகத் தனது தாக்குதலை நிகழ்த்தியது. அத்தாக்குதலில் ஒரு மாணவரின் பார்வை பறிபோனது கண்டனத்திற்குரியதானது.
*ஐக்கிய நாடுகள் அவையின் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் நலச் சட்டமான UNCRPD இந்தியாவில் 18% மட்டுமே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக .நா தெரிவித்துள்ளது. இதற்கான கூட்டம் ஒன்றில் கலந்துகொண்ட இந்தியப் பிரதிநிதியான பார்வையற்றோருக்கான தேசிய இணையத்தின் NFB) தலைவர் ரூங்டா அவர்களிடம் இத்தகவல் தரப்பட்டது.

சினிமா


*இந்த ஆண்டில் பார்வை மாற்றுத்திறனாளிகளை முக்கியப் பாத்திரங்களாகக் கொண்ட திரைப்படம் எதுவும் வெளியானதாகத் தெரியவில்லை. 2020-இல் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட இரு திரைப்படங்களின் முக்கியப் பாத்திரங்கள் பார்வை மாற்றுத்திறனாளிகளாகச் சித்திரிக்கப்பட்டுள்ளனர். உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் சைக்கோ’, நயன்தாரா நாயகியாக நடிக்கும் நெற்றிக்கண்ஆகிய திரைப்படங்கள் தான் அவை. ‘நெற்றிக்கண்திரைப்படத்தின் முதல் பார்வை (first look) பிரெயில் எழுத்துகளோடு வெளியிடப்பட்டது என்பது கூடுதல் சிறப்பு.
* விஜய் நடிக்கும்மாஸ்டர்திரைப்படத்திற்கான படப் பிடிப்பு பூவிருந்தவல்லி பார்வைக் குறையுடையோருக்கான அரசுப் பள்ளியில் நடத்தப்பட்டது சர்ச்சையானது. இதற்கு முன்பே இப்பள்ளியில் பல படப்பிடிப்புகள் நடத்தப்பட்டிருக்கின்றன. ஆயினும், இந்தப் படப் பிடிப்பின்போது வந்தவர்கள் பார்வை மாற்றுத்திறனாளி மாணவர்களிடம் நடந்துகொண்ட முறை, வாக்குறுதியளித்துவிட்டுச் சந்திக்காமல் சென்ற நடிகர் விஜய் என சர்ச்சைகள் பொது ஊடகங்கள் வரை வலம் வந்தன.

அறிவியல்

தொழில்நுட்பம்

*இந்த ஆண்டில் அலைபேசி பேசும் மென்பொருளான எலெக்வன்ஸ் தனது ஆண்டிராய்டுக்கான சேவையை நிறுத்திக்கொண்டது.
*EnvisionAI என்ற PDF கோப்புகளை வரிகளாக மாற்றிப் படிக்கும் செயலியின் விலை உயர்ந்ததாக பார்வையற்றோரிடையே விவாதங்கள் எழுந்தன. இதன் விளைவாக, தற்பொது என்விஷன் தனது பல்வேறு விலைச்சலுகைகளை அறிவித்து செயல்படுத்திவருகிறது.
*பயணத்திற்கான வழிகாட்டுதல், நிறம் & நிழற்படங்களைக் கண்டறிதல், PDF  கோப்புகளை  படித்துக் காட்டுதல் முதலிய பணிகளைச் செய்த Eye d என்ற செயலி சிலகாலம் முடங்கியிருந்தது பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தற்போது செயலி இயங்கத் தொடங்கினாலும், பழைய நிலைக்கு அது திரும்பவில்லை.
*வாட்ஸப்பில் உணரிகள் (emergy) பேசும் மென்பொருளால் அடையாளம் காணப்படத்  தொடங்கிய ஆண்டு இதுதான்.
*முகநூலில் படமாக்கப்பட்ட தமிழ் எழுத்துகளைப் பேசும் மென்பொருள்கள் அடையாளம் கண்டதும் இந்த ஆண்டில்தான்.

விளையாட்டு


*இந்தியாவிற்கும் ஜப்பானுக்கும் இடையிலான பார்வையற்றோருக்கான கால்பந்து போட்டி இந்த ஆண்டு கொச்சியில் நடைபெற்றது. தொடரை இந்தியா வென்றது. மதுரை தியாகராசர் கல்லூரியில் இளங்கலை தமிழ் படித்துக்கொண்டிருக்கும் வினோத் இந்திய அணியில் இடம் பிடித்த ஒரே தமிழகப் பார்வையற்றவர் என்ற பெருமைக்குரியவரானார்.
*தேசிய அளவிலான ஜூடோ போட்டியில் வெண்களப் பதக்கம் பெற்றார் தமிழகத்தைச் சேர்ந்த பார்வை மாற்றுத்திறனாளியான மலைச்சாமி. இவர் மதுரை தியாகராசர் கல்லூரியில் இளங்கலை ஆங்கிலம் படித்துக்கொண்டிருக்கிறார்.
*2020 பாராலிம்பிக் போட்டிகளுக்கான இந்திய அணிக்கான தேர்வு இந்த ஆண்டில் காரைக்குடியில் நடைபெற்றது. இதில் பல பார்வையற்றவர்கள் கலந்துகொண்டனர்.

எதிர்பார்ப்பு


*ரூபாய் தாள்கள் பார்வையற்றோரும் கண்டறியும் வகையில் வடிவமைக்கப்படும் என AICB உள்ளிட்ட அமைப்புகள் தொடுத்த வழக்கு தற்போது முக்கிய நிலையை எட்டியுள்ளது. இதனால் பார்வை மாற்றுத்திறனாளிகள் புரிந்துகொள்ளும் வகையில் ரூபாய் தாள்கள் வடிவமைக்கப்படும் என எதிர்பார்க்கலாம்.
*தமிழக அரசு பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கென வெண்கோல், கண்ணாடி, கைக் கடிகாரம் ஆகியவற்றை விலையில்லாமல் வழங்கிவருகிறது. இவற்றிற்கு மாற்றாக, பிரெயில் மீ, ஆர்பிட் ரீடர் முதலிய பிரெயில் எழுத, வாசிக்க உதவும் கருவிகள் வழங்கப்பட வேண்டும் என பல அமைப்புகள் தொடர்ச்சியாக வலியுறுத்திவருகின்றன. இவ்வாண்டு இந்த எண்ணம் நிறைவேறும் என நம்புவோம்.

தொடர்புக்கு: balaganesan2285@gmail.com

1 கருத்து:

  1. that's a fantastic round up of 2019.! I'm dam sure many would have waited for this annual report of yours, and you did it with your usual dam-good finish Balaganesan sir!

    பதிலளிநீக்கு