நினைவுகள்: கொரோனாவும் நானும் - X. செலின்மேரி


       உலகையே ஆட்டிப் படைக்கும் கொரோனா என்னும் கொள்ளை நோயிடமிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ள  அமல்படுத்தப் பட்டிருக்கும் ஊரடங்கு உத்தரவு அசாதாரண சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்டோர், பாதுகாப்பாக இருப்போர் என்று பட்டியலிட்டுக் கூற முடியாத அளவுக்கு, பாதுகாப்பாக இருப்போர் சில பாதிப்புகளையும், பாதிக்கப்பட்டோர் சில பாதுகாப்பான சூழ்நிலைகளையும் அன்றாடம் கடந்து வருகின்றனர். வீட்டுக்குள்ளேயே பூட்டிக் கொள்ளும் நிலை உருவாகிய போதும் ஒவ்வொருவரும் தங்கள் பொழுதைப் பயனுள்ள முறையில் கழிக்கும் விதமாக சில ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், என்னுடைய குடும்பத்தோடு நேரத்தைச் செலவிடுவதில் நான் கடந்துவந்த குறிப்பிட்ட சில மனம் நெகிழ்ந்த தருணங்களையும், வருத்தம் தந்த நிகழ்வுகளையும் உங்களோடு பகிர்ந்துகொள்ள   விழைகிறேன்.
அறிமுகம்:
       என் கணவர் மற்றும் குழந்தையை உள்ளடக்கிய 7 பேர் கொண்ட கொஞ்சம் சிறிய கூட்டுக் குடும்பம் எங்களுடையது. பெரிதாகக் கட்டுப்பாடுகள் ஏதும் இல்லாததால் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப  செயல்பட அனுமதி கொடுக்கப்படுகிறது. பரபரப்பாக பள்ளிக்குக் கிளம்ப வேண்டிய சூழல் இல்லாததால் பெரும்பாலான நாட்களில் சூரிய உதயத்தைக் காண முடிந்ததில்லை. வழக்கம்போல அதிகாலையில் எழுந்துவிடும் என் கணவர் 7 மணி நியூஸ் போட்டு எங்களை எழுப்பி விடுவார்.
       காலையில் காஃபி, மற்றும் சூடான இட்லி, தோசை, மேகி, உப்புமா போன்ற டிபன்களுடன் எங்கள் பொழுது இனிதே ஆரம்பம் ஆகும்.  எங்கள் வீட்டு ஸ்மார்ட் டிவிக்கு மட்டும் ஓய்வு மிகக் குறைவாகவே கொடுக்கப்படுகிறது. சீரியல்கள் புதிதாக முதலில் இருந்தே போட தொடங்கப்பட்டு விட்டதால் வழக்கமான சீரியல் நேரம் சீரியலில் கழிந்து விடுகிறது. மேலும் அவ்வப்போது யூடியூபுடன் கணெக்ட் செய்யப்பட்டுப் பாடல்கள், படங்கள் ஆகியவை பார்க்கப்படுகின்றன. அதிகம் ஆதிக்கம் செய்வது என் குழந்தையைக் கவரும் புதிய புதிய பேய்ப் படங்கள் தாம்.
எங்கள் வீட்டுச் செல்லக்க் குட்டி
        4 வயதான பெண் குழந்தை ஆலியாவைச் சமாளிக்க வேண்டிய முக்கியமான பொறுப்பு என்னிடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. காலையில் எழுப்பி விடுவது கொஞ்சம் சிரமம் தான். அப்போதே சேட்டைகளும் விழித்துக் கொள்ளும்.
       அவளது துடுக்கான பேச்சுக்கும், துருதுரு சேட்டைகளுக்கும் தகுந்த பாராட்டுக்களும், வசவுச் சொற்களும் கிடைத்த வண்ணம் இருக்கும். அவள் தொடர்ந்து வினோதமான கேள்விகளை எழுப்பிக்கொண்டே   இருப்பது எனக்கு மிகப் பிடித்த ஒன்று தான். அவளுக்குப் பதில் தர நான் ஒருபோதும் சலித்துக் கொண்டதாக நினைவில்லை.
       சில சமயங்களில் விளையாடிக்கொண்டே அதிக நேரம் உணவு உண்ணும் குழந்தையைச் சமாளிப்பது கொஞ்சம் கோபமும் மகிழ்ச்சியும் சங்கமிக்கும் நிலையை  உருவாக்கும்.   அவளுக்கு வரைவதில் ஆர்வம் அதிகம் ஆதலால் நிறைய வரைபடங்களையும் வரையும் பகுதிகளையும் உள்ளடக்கிய புத்தகங்களைப் புத்தக கண்காட்சிக்குச் சென்று வாங்கி வீட்டில் வைத்திருக்கிறேன். அவளுக்கு விருப்பம் ஏற்படும் போதெல்லாம் அதை எடுத்து வரைந்து மகிழ்ச்சி அடைவாள்.
        கையெழுத்தை வளப்படுத்த கரும்பலகையும் வீட்டிலேயே அமைக்கப்பட்டிருக்கிறது. கொஞ்சம் எழுதுவதிலும் வரைவதிலும் அவளுக்கு நேரம் சென்று விடுகிறது. செல்போன் ரைம்ஸ், கேம்ஸ், செஸ் விளையாடுவது, டீவி பார்ப்பது    தாயம் விளையாடுவோர் மற்றும் சமையல் செய்வோரை டிஸ்டர்ப் செய்து வாங்கிக் கட்டிக் கொள்வது ஆகியவை அவளது முக்கியமான வேலைகள்..
என் கணவரது நிலை:
        பள்ளி வேலைநாள் தவிர மற்ற சமயங்களில் வெளியில் நண்பர்களுடன் மகிழ்ச்சியோடு பொழுதைக் கழிக்கும் என்னுடைய கணவர் வீட்டில் ஒரே சாய்வு நாற்காலியில் அமர்ந்திருப்பது கொஞ்சம் பரிதாபமாகவே இருக்கிறது. புத்தகங்கள், படங்கள், செய்தித்தாள்கள் இவற்றுடனும், நண்பர்களோடு அலைபேசியில் உரையாடுவதிலும் அதிக நேரத்தைச் செலவிடுவதைக் காண முடிகிறது.
graphic தந்தை, அவர் கரம்பற்றியபடி குழந்தை, அடுத்து தாய் என மூவரும் முகக்கவசம் அணிந்தபடி நிற்கின்றனர். அவர்களைச் சுற்றி கொரோனா படங்கள் இருக்கின்றன.

       மளிகைப் பொருட்கள் மற்றும் காய்கறிகள் தேவைப்படும் சமயத்தில் மட்டும் முகக் கவசத்தை அணிந்து கொண்டு தன் தம்பியுடன் சென்று வாங்கி விட்டு உடனடியாக  வீடு திரும்பி  விடுவார். ஒரே ஒருமுறை சம்பளப் பட்டியல் தயாரிப்பதற்காகப் பள்ளிக்குச் சென்று வந்தார்  அவ்வளவுதான்.
       ஒரு பொறுப்பான குடும்பத் தலைவராக கொரோனா என்னும் குடும்பப் பிரச்சினைகளிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ள கடைபிடிக்க  வேண்டிய சமுக விலகல், தனிமைப்படுத்திக் கொள்ளுதல் போன்ற வழிமுறைகளை அவரைக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்..
புதிய உணவுப் பதார்த்தங்கள்
       இந்த அசாதாரண ஊரடங்கு கால கட்டத்தை விதவிதமான உணவுப் பொருட்களை வீட்டிலேயே சமைத்து உண்பதற்கு பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். ஆம். ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு சிறப்புப் பதார்த்தம் இடம்பெறும்.
       புதுமையான உணவுகளுக்கு அதிக வரவேற்பு இருப்பதுண்டு. அடை ரவா பணியாரம், ரவா கேக், பின்னல் பணியாரம், பானி  பூரி, பரோட்டா,  புதுமையான குழம்புகள், சப்பாத்திகள், பலவித பிரியாணிகள், பஜ்ஜிகள், பாயாசங்கள் எனப் புதுவகைப் பதார்த்தங்கள் சுவைபடச் சமைக்கப்படுவதோடு, குடும்பமாக அமர்ந்து உண்ணும் வழக்கமும் நடைமுறையில் இருக்கிறது.   யூடியூப் போன்ற வலைதளங்களில் சமையல் குறிப்புகளைப் பார்த்தும் சமையல் செய்யப்படுவதுண்டு.
       என் கணவருக்குப் பிடித்த, சாப்பிட்டு பல நாட்கள் கடந்த உணவுகளைச் சமைக்கச் சொல்லி எல்லோரும் சாப்பிட்டு மகிழ்வோம். அசைவ உணவுகளின் பயன்பாடு முன்பைவிடக் குறைந்திருக்கிறது.  சுட்ட கருவாடு, திருக்கை மீன் குழம்பு, குட்டி இடியாப்பம், அதிரசம், அரிசிப் புட்டு, குழாய் புட்டு, ஓலைக் கொழுக்கட்டை, சீடை உருண்டை, எள்ளுருண்டை, சுடச்சுட கிடைக்கும் வறுத்த வேர்க்கடலை, கடைந்த கீரைகள், அவித்த பனங்கிழங்கு மற்றும் சர்க்கரைவள்ளிக் கிழங்கு போன்ற அம்மா செய்யும் பதார்த்தங்கள் எதுவும் இங்கே இடம்பெறாமல் போனது சிறிதளவு ஏமாற்றத்தைத் தருகிறது..
பழங்களின் ஆதிக்கம்
       பொதுவாக கோடைக்காலங்களில் பழங்களின் பயன்பாடு அதிகம் என்றாலும் இந்தக் காலகட்டத்தில் ஆதிக்கம் செலுத்துகின்றன என்று சொன்னால் அது மிகை ஆகாது. தினமும் பழங்களை ஏற்றிக் கொண்டு பல்வேறு வண்டிகள் எங்கள் தெருவில் செல்வதுண்டு. அவற்றை ஒவ்வொன்றாக நிறுத்தி, தேவைக்கேற்பப் பழங்கள் வாங்குவதும், வாங்கிய நிமிடத்திற்குள் காலியாவதுமாக இருக்கின்றன.
       அத்தோடு அவரவர் விருப்பத்திற்கு ஏற்பப் பழங்களின் எண்ணிக்கையும் அமைந்திருக்கும். மேலும் ஒரே பழமாக வாங்காமல் வேறு வேறு பழங்களாக தேவைக்கு ஏற்ப வாங்கிப் பயன் பெற்றுக் கொண்டிருக்கிறோம். ஜூஸ் போடும் பழக்கம் இல்லாமல் அடிக்கடி ஒரு பழத்தைக் கையில் எடுத்து எல்லோருக்கும் பகிர்ந்து உண்ணும் பழக்கம் வெகுவாக பெருகி வருகிறது. வீட்டில் கூடை காலி ஆகாத அளவுக்கு அடுத்தடுத்து பழங்கள் நிரப்பப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.  ஆரஞ்சு, திராட்சை, சப்போட்டா, வெள்ளரி, பப்பாளி உள்ளிட்ட பழங்கள் அதிகமாகவே கிடைப்பதால் அவற்றை வாங்கிக் குடும்பத்தோடு உண்டு வருகிறோம். பழங்களை வாங்கும்போதும், சாப்பிடும்போதும் பாப்பா செய்யும் சேட்டைகள் கொஞ்சம் நஞ்சமல்ல..
மாலைப் பொழுதுகள்
       இந்தக் கால கட்டத்தின் மகிழ்ச்சியான தருணங்கள் என்றால் அவை மாலை நேரங்கள் தாம். எங்கள் வீட்டில் கடிகாரம் மணி ஆறைத் தொடுவதற்குள் அடுத்த இரண்டு மணி நேரத்துக்குத் தேவையான தண்ணீர், பாய், நாற்காலிகள், பழங்கள், மற்றும் விளையாட்டுப் பொருட்கள் மொட்டை மாடியைச் சென்றடைந்து விடும். எங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் அழைப்பு மணி அடிப்பது எங்கள் குழந்தையின் குட்டி சைக்கிள் தான்.
       பக்கத்து வீடு, அடுத்த வீடு, எதிர் வீடு, பின் வீடு என பலரும் சந்தித்துக் கொள்வது இந்த மாலை நேரங்களில்தான். அதிலும் ஒவ்வொரு மாடியில் இருந்தும் விதவிதமான கலர்கலரான பட்டங்கள் பறக்க விடப்படும். அதுவே கண்ணுக்குக் குளிர்ச்சியான மிகச் சிறந்த பொழுதுபோக்காக அமையும். இந்த நாட்களில் எங்கள் குழந்தை சிறப்பாகச் சைக்கிள் ஓட்டப் பழகி விட்டாள். சைக்கிளில் சாமான்கள் விற்பது போலப் பாவனை செய்து சில பொருட்களை அடுக்கிக் கொண்டு வீட்டில் எல்லோரையும் மகிழ்விப்பாள். நாங்கள் செல்போன் மற்றும் ப்ளூடூத் ஸ்பீக்கரில் அவரவர்க்கு பிடித்த பாடல்களைக் கேட்டு இன்புறுவோம்.
       எல்லாவற்றையும் விட ஹைலைட் என்னவென்றால் ஆலியா, லாரா சந்திப்புதான். இருவரும் ஒரே பள்ளியில் அடுத்தடுத்த வகுப்புகளில் பயில்கின்றனர். லாரா எங்கள் வீட்டுப் பக்கத்து மாடிக்கு அடுத்த மாடியில் வசிப்பவள். இருவரின் மாலைநேர உரையாடல்கள் பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கின்றன. ஹாய் ஹலோவில் ஆரம்பித்து அவரவர் விருப்பங்களைப் பரிமாறிக் கொள்வர். தினமும் இருவரும் வீட்ட விட்டு வெளிய போகாத. கொரோனா வந்துறும்என்ற அறிவுரைகளைப்  பகரத் தவறியதில்லை..
திரையிசை பாடல்களில் கவனம்
       திரையிசை பாடல்களை விரும்பிக் கேட்கும் ஆர்வம் எனக்கு இருந்த போதிலும் திருமணத்திற்குப் பின் அதுவும் குழந்தை பிறந்த பின், பாடல்களைக் கேட்கவோ, தேடித் தரவிறக்கம் செய்யவோ நேரம் இருந்ததில்லை. இந்தக் காலகட்டத்தில் எனக்கு மிகப் பிடித்த பாடல்களை யூடியூப் போன்ற வலைதளங்களில் கேட்டும், மனம் கவர்ந்த பாடல்களைத் தேவையான வடிவத்தில் தரவிறக்கம் செய்தும் வருகிறேன்.
       குறிப்பிட்டுச் சொல்வதென்றால் பார்வையற்றோர் அதிகம் பயன்படுத்தும் பிளைன்ட் கிராம் செயலியில் சகோதரர் இராஜதுரை அவர்கள் உருவாக்கி இருக்கும் நிலா நட்சத்திர கானம் என்ற சேனலில் சிறந்த ஒலித் தரத்துடன் கூடிய இடைக்கால பாடல்கள் அதிகம் இடம் பெற்றுள்ளன. அவற்றை ஒவ்வொன்றாக கேட்டு, ஒன்று விடாமல் அனைத்தையும் தரவிறக்கம் செய்திருக்கிறேன். அதிகம் பரிட்சயம் இல்லாத இடைக்காலப் பாடல்களைக் கேட்டு இடைக்கால இசையிலேயே என்னுடைய பெரும் பொழுதைக் கழித்து வருகிறேன். தரமான கருத்துக்களையும், சிறப்பான வரி அமைப்புகளையும்  உள்ளடக்கிய பழைய பாடல்களும் விருப்பப் பாடல்கள் பட்டியலில் எப்போதும் இடம் பெறுவதுண்டு.
வாசிப்புப் பழக்கம்
       அமேசான், வாட்ஸ்அப், யூட்யூப் மற்றும் டெலிகிராம் போன்ற வலைதளங்களில் புத்தகங்களைத் தேடித் தேடிப் பதிவிறக்கி நேரம் கிடைக்கும்போது படித்து வந்த எனக்கு, இந்தக் காலகட்டத்தில் வாசிக்கும் எண்ணம் தோன்றவே இல்லை. பரபரப்பான சூழலிலும் பேருந்துப் பயணங்கள், உணவு இடைவேளைகள், பேருந்துக்காகக் காத்திருக்கும் நிமிடங்கள், இரவில் விழித்திருக்கும் நேரங்கள் என ஒவ்வொன்றிலும் புத்தகங்கள் முக்கிய பங்கு வகித்து வந்த நிலை மாறி விட்டது.
       தேவைப்படும் அளவுக்கு நேரம் கிடைக்கப் பெற்றப் போதிலும், புத்தக வாசிப்பை மனம் ஏனோ விரும்பவில்லை. எனினும்  விரல் மொழியரின் இருபத்திரண்டாம் இதழுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டது. எடுத்த கையோடு எல்லாக் கட்டுரைகளையும் படித்து முடித்து விட்டேன்..
அத்தியாவசியப் பொருட்கள்
        மொத்தக் குடும்பத்திற்கும் தேவையான மாதாந்திரப் பொருட்கள் முதல் முறையாக டோர் டெலிவரி மூலம் பெறப் பட்டது. மற்றபடி பொருள்களின் தேவைக்கேற்ப மளிகைக் கடைகள்  திறந்திருக்கும் சமயங்களில் கடைக்குச் சென்று வாங்கிப் பயன்படுத்துகின்றோம். பலரது வெறுப்பையும் சம்பாதித்த காய்கறி விலை உயர்வு எங்கள் வீட்டில் எவரது கவனத்தையும் ஈர்த்ததாகத் தெரியவில்லை.
அமைதியான விழாக்கள்
       வீட்டிலிருந்து வெளியே செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால் அனைத்து விழாக்களும் அமைதியான முறையில் வீட்டிலேயே கொண்டாடப்பட்டன. கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் அனைத்துமே நிசப்தத்தை நிலைநாட்டின. சமூக வலைதளங்களில் வாழ்த்துப் பரிமாற்றங்களின் அளவு குறைந்ததாகத் தெரியவில்லை.
மாத்திரை மருந்துகள்

       பிற மாவட்டங்களிலிருந்து மாத்திரை மருந்துகளைப் பெறுவதில் சிரமம் ஏற்பட்டது. என்னுடைய மாமியாருக்குத் தேவையான கால் வலி மாத்திரை திருச்சியிலிருந்து என் கணவரின் காவலர் நண்பர்கள் மூலம் பெறப்பட்டது. மேலும் வீட்டில் உள்ளோருக்குக், குறிப்பாக குழந்தைக்குத் தேவையான முக்கியமான மருந்துகள் அவ்வப்போது வாங்கப்படுகின்றன. வருமுன் காப்போம் என்ற முறையில் நோய் வராமல் தடுப்பதற்கான நிலவேம்பு உள்ளிட்ட கசாயங்களும் வாரத்தில் இரண்டு மூன்று முறை தயாரிக்கப்பட்டு அனைவராலும் பருகப் படுகிறது.

பேருந்துப் பயணங்கள்/

       மாணவர்களுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்ட கால கட்டத்தில் பேருந்தில் 30 கிலோமீட்டர் பயணிக்க வேண்டிய நிலை இருந்தது. பேருந்தில் ஏறும்போதே, "டீச்சர் உங்களுக்கு லீவு இல்லையா? ஒங்கள எதுக்கு வரச் சொல்ராங்க?” போன்ற டிரைவர், கண்டக்டர்கள் கேள்விகளுக்கு அரசின் உத்தரவுஎன்று சுருக்கமாக பதில் சொல்லி விடுவதுண்டு. ஒரு  முறை பள்ளியிலிருந்து திரும்பும் போது, பேருந்து வருவதில் தாமதம் ஏற்பட்டது. அப்போது அந்த பஸ் டிரைவர், "டீச்சர் இது கிராமம்,  இந்தப் பஸ் வரலைன்னா என்ன செய்வீங்க? அடங்கி வீட்டோட பாதுகாப்பா இருக்க முடியாதா? நல்லா இருக்றவங்களே வர்றதில்ல; உங்களுக்கென்ன?” என்று கேட்டது இன்னும் என் மனதை விட்டு அகல மறுக்கிறது.
       பள்ளியில் பேருந்தை விட்டு இறங்கும்போது, "இந்தக் கண்ணு தெரியாத டீச்சர்லாம் எதுக்கு வருது? என்ற கிராமத்தாரின் பேச்சுக்கள் பழக்கப்பட்டதே என்றாலும் வருத்தத்தைத் தரத் தவறவில்லை. அனைவருக்குமான ஊரடங்கு உத்தரவு கொஞ்சம் அமைதியான சூழலை உருவாக்கி உள்ளது. ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்ட பின், மாற்றுத் திறனாளிகள் பணிக்குச் செல்லவேண்டாம் என்பதை வலியுறுத்தும் அரசாணை பிறப்பிக்கப் பட்டது குறிப்பிடத் தக்கது.

வறுத்தெடுத்த இ.எம் ஐ/

        ஸ்டேட் பேங்கில் ஹோம் லோன் வாங்கி இருப்பதால் ஒவ்வொரு மாதமும் 5-ம் தேதி தவணைத் தொகையாக ரூபாய் 26 ஆயிரம் கட்டி வருகிறேன். இந்த மாதத்திற்குரிய தவணைத் தொகையை வேறு பர்பஸ்காக செலவிடலாம் என்று முடிவு செய்து, ஏப்ரல் 4-ம் தேதி இரவே ஸ்டேட் பேங்கில் இருந்த மொத்தத் தொகையையும் வேறொரு வங்கிக் கணக்கிற்கு மாற்றி விட்டேன்.
       ஏப்ரல் 7 எல்.ஐ.சி இ.சி.எஸ்க்குரிய தேதி என்பதால் அதற்கான தொகையை மட்டும் அன்று காலை ஸ்டேட் வங்கிக்கு டிரன்சாக்சன் செய்து பின் பேலன்ஸ் செக் செய்த போது ஜீரோ என்று காட்டியது.. பிறகு இ.எம்.ஐக்கான  மீதமுள்ள தொகையை போன்பே மூலம் டிரன்சாக்சன் செய்ய முயற்சித்தபோது 10 ஆயிரம் ரூபாய்க்குக் குறைவான பணத்தை மட்டுமே அனுப்ப முடியும் என்ற புது நோட்டிபிகேஷன் வந்தது. உடனே கூகுள் பேயில் லாக்காகியிருந்த அக்கவுண்ட்டை அன்லாக் செய்து டிரான்சாஷன் செய்ய முற்பட அதுவும் சாத்தியப்படவில்லை.
       பிறகு போன்பே மூலமே ஒவ்வொரு முறையும் ஒன்பது ஒன்பது ஆயிரங்களாக அனுப்பி ஒரு வழியாக எல்.ஐ.சிக்குரிய பணத்தை ஸ்டேட் பேங்க் அக்கவுண்டிற்கு அனுப்பி விட்டேன். ஒவ்வொரு டிரான்சாக்ஷனுக்கு பிறகும் பேலன்ஸ் செக் செய்யும்போது ஜீரோ என்று காட்டியது ஆச்சர்யத்தையும், அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும்  ஒருசேர தந்தது.
       அரசுப்  பணியாளர்களுக்கே இந்த நிலை என்றால் தனியார்  மற்றும்  சுயதொழிலில் உள்ள  நண்பர்களின் நிலை என்ன?  இதே நிலை எத்தனை மாதம் தொடரும்? வங்கிகளில் இ.எம்.ஐ மூன்று மாதங்களுக்குத்  தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக  வலைதளங்களில்  பரப்பப்பட்டச்  செய்தியில்  எத்தனை சதவிகிதம் உண்மை  இருக்கிறது? என்ற கேள்விகளுக்கான விடையைத் தேடிக் கொண்டுதான் இருக்கிறேன்.

பொதுவான பிரச்சனைகள்/

       எங்கள் கூட்டுக் குடும்பத்தின் மூன்றாவது வாரிசு மார்ச் 27 அன்று திண்டுக்கல்லில் பிறந்திருக்கிறது. என்னதான் போட்டோஸ், வீடியோ கால் என்று குழந்தையைப் பார்த்த போதும் நேரில் செல்ல இயலாதது அனைவருக்கும் மிகுந்த ஏக்கத்தையும், வருத்தத்தையும் தருகிறது.
       எங்கள் குழந்தைக்கு விளையாட ஆள் இல்லாமல் அவ்வப்போது ஒவ்வொருவரையும் தொந்தரவு செய்து கொண்டே இருப்பாள். அப்போது எரிச்சல் படுவதால் ஏற்படும் விளைவுகளை நீங்களே யூகித்துத் தெரிந்து கொள்ளலாம். இதுதவிர விடுமுறை கொடுக்கப்பட்டும் இந்தியாவுக்கு வர முடியாத வெளிநாட்டு உறவுகள், புதுக்கோட்டைக்கும், சீர்காழிக்கும் அடிக்கடி பயணப்படும் என் மாமனார் சீர்காழியிலேயே தங்கிவிட்ட நிலை, வாக்கிங் என்ற பெயரில் கூட மாலை நேரங்களில் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத நிலை, புதிதாக ஆரம்பித்த ஹோட்டல் பிசினஸைத் தொடர முடியாத என் கணவரின் தம்பியின் நிலை, மகளிரின் உடல்சார் தொடர் பிரச்சினைகளுக்குக் கூட மருத்துவமனைகளுக்குச் செல்ல இயலாத நிலை மற்றும் அதிக நாட்கள் விடுமுறை இருந்தும் அம்மா வீட்டிற்குச் செல்ல முடியாத நிலை போன்றவை எங்கள் குடும்பத்தின் பொதுவான பிரச்சினைகள்.

அலைபேசி உரையாடல்கள்/

       ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட காலத்தில் இருந்து உறவினர் மற்றும் நண்பர்களின் நலனை அலைபேசியில் விசாரிக்கும் படலம் எல்லா இடங்களையும் போல எங்கள் வீட்டிலும் தொடர்ந்து அரங்கேறியபடியே இருந்தது. காலத்தின் வேகத்தால் மறந்துபோன பழைய நண்பர்களின் நட்பை மீட்டெடுக்கும் விதமாக பள்ளி, கல்லூரி உள்ளிட்ட பல காலங்களில் எங்களோடு பயணித்த நண்பர்களின் தொலைபேசி எண்களைத் தேடி அவர்களது தற்போதைய நிலைமையை அறிந்து கொள்ள முடிந்தது. பெரும்பாலோர் பாதுகாப்பான நிலையில் இருப்பது மகிழ்ச்சியைத் தந்தாலும், சிலரது நிலை மனதை என்னவோ செய்தது.
       பாதிக்கப்பட்ட நண்பர்களுக்குத் தனிப்பட்ட வகையில் எங்களால் இயன்ற உதவிகளைச் செய்வதிலும், அன்றாடம்  சுயதொழில் மூலம் பிழைப்பு நடத்தும் பார்வையற்றோர் நலனுக்காக உதவிகளை முன்னெடுக்கும் அமைப்புகளைத் தொடர்பு கொண்டு எங்கள் பங்களிப்பைச் செலுத்துவதிலும் எங்கள் பொழுதுகள்  மிக வேகமாக கரைகின்றன..

போட்டிகளில் பங்கேற்பு/

       இந்தியப் பார்வையற்றோர் சங்கத்தில் பயின்ற முன்னாள் மாணவர் சங்கம் உருவாக்கியுள்ள வாட்ஸ்அப் குழுமத்தில் பார்வையற்றோரின் குழந்தைகளுக்கான போட்டிகள் அவ்வப்போது நடைபெற்றன. கதை சொல்லுதல், பாடல் பாடுதல், வரைபடம், திருக்குறள், நகைச்சுவை கூறுதல், மாறுவேடப் போட்டி உள்ளிட்ட பல போட்டிகள் அன்றாடம் நடத்தப்பட்டன. போட்டிகளுக்கு எங்கள் வீட்டுக் குழந்தையைத் தயார் செய்வதிலேயே சில பொழுதுகள் கரைந்தன. போட்டிகளுக்கான கருப்பொருளைத் தேர்ந்தெடுப்பதும், குழந்தையைப் பயிற்றுவிப்பதும் பெரும் சவாலாக இருந்தது.  இரண்டு மூன்று முறை ஒலிப்பதிவு செய்வதை விரும்பாத குழந்தை தானே அதைக் கற்றுக் கொண்டதும் மிகப் புதிய அனுபவம்தான்.

ஜூம் செயலியின் பயன்பாடு/

        இந்த விடுமுறை கால கட்டத்தைப் புதுவகையான அப்ளிகேஷன்களை இன்ஸ்டால் செய்து பயன்படுத்தும் முறையைக் கற்றுக் கொண்டிருக்கிறேன். அந்த வகையில் ஜூம் செயலி குறித்த தகவல் ஒருமுறை நமது விரல் மொழியர் வாட்ஸ்அப் குழுமத்தில் பகிரப்பட்டது. தகுந்த விளக்கங்கள் பெற்று ஜூம் மூலம் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்டேன்.  கருத்தரங்கின் ஒருங்கிணைப்பு, பங்கேற்பாளர்களின் ஆர்வம், சிறப்பு விருந்தினர்களின் கருத்துக்கள், சட்ட ஆலோசனைகள், களப்பயண அனுபவங்கள், கேள்வி நேரம் என ஒவ்வொன்றும் மிகச் சிறப்பாகவே அமைந்திருந்தது. முழுமையாகக் கலந்து கொள்ள இயலவில்லை என்றாலும் அது புதுமையான அனுபவமாக அமைந்தது.
       மனித குலம் அழிவின் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது. போட்டிகள் நிறைந்த உலகில், அளவில் சிறிய கொரோனா என்னும் கோவிட் 19 வைரஸ் போட்டி போட்டுக் கொண்டு மனித உயிர்களைப் பழி வாங்கிக் கொண்டிருக்கிறது.  உலக நாடுகளின் அறிவியல் வளர்ச்சியும், பொருளாதார முதிர்ச்சியும் உயிர்காக்கும் மருந்தின் அறிமுகத்திற்குப்  பயன்பட்டதாகத் தெரியவில்லை.
       ஜாதி, மத பேதமின்றி மரணபயம் அனைவரையும் தொற்றிக் கொண்டு விட்டது. எவ்வளவு நாள் வாழ்க்கை என்று தெரியாத நாம் இருக்கின்ற நிமிடங்களை இன்பமாய் கழிப்போம். சுகமான அனுபவங்களைச் சுதந்திரமாய் பகிர்ந்திடுவோம். மனிதத்தின் உதவி கொண்டு மனிதர்களை வாழவைப்போம்.
       அறிவியலை மீறிய அரியதோர் சக்தி புறப்பட்டு வந்து நம்மை அழிவிலிருந்து மீட்டுப் புதியதோர் வாழ்வுக்கு  வழிவகை செய்யட்டும்!


(கட்டுரையாளர் புதுக்கோட்டை மாவட்டம் வெள்ளாள விடுதி அரசு நடுநிலைப் பள்ளியின் ஆங்கில ஆசிரியர்).
தொடர்புக்கு: celinmaryx@gmail.com

4 கருத்துகள்:

 1. தேர்ந்த கட்டுரையாளரின் ஆற்றலோடு எளிய நடையில் உங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை தொகுத்து அளித்து இருக்கிறீர்கள் உங்களுக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் பாராட்டுக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே!

   நீக்கு
 2. அருமையான அதேசமயம், சில இந்தப் பேரிடர் காலங்களில் குடும்பங்களுக்குத் தேவையான சில வழிகாட்டல்களையும் சொல்லாமல் சொல்லிச் சென்றது கட்டுரை வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 3. தெளிவான புரிதலுடன் சுருக்கமான மற்றும் பொருத்தமான பின்னூட்டத்தை அளித்த சகோதரருக்கு நன்றி

  பதிலளிநீக்கு