ஆளுமை: காலத்தினால் செய்த நன்றி - ரா. பாலகணேசன்


graphic தமிழ் மணி

       பார்வை மாற்றுத்திறனாளி பட்டதாரி தமிழாசிரியர்கள் அனைவருக்கும் தெரிந்த பெயர்தமிழ்மணி’. கடந்த இரு ஆண்டுகளாக அவர்கள் அடைந்த மன உளைச்சலுக்கு மருந்து தந்தவர் இவர். ஆம். கடந்த இரு ஆண்டுகள் பார்வை மாற்றுத்திறனாளி ஆசிரியர்களுக்கு வழக்கத்திற்கு மீறிய சோதனைக் காலம்.

               2018-19 கல்வியாண்டில் 6, 9-ஆம் வகுப்புகளுக்கான பாடப் புத்தகங்கள் மாற்றப்பட்டன. 2019-2020 கல்வியாண்டில் 7, 8, 10 ஆகிய வகுப்புகளுக்கான பாடப் புத்தகங்கள் மாற்றப்பட்டன.  இவ்விரு ஆண்டுகளிலும் கோடை விடுமுறை முடிந்த பிறகு புதிய புத்தகத்தின் வாசனையை முகர மாணவர்களும், ஆசிரியர்களும் தயாராகிக்கொண்டிருந்தனர். அதே நேரம், பார்வை மாற்றுத்திறனாளி மாணவர்களும், ஆசிரியர்களும் நமக்கேற்ற வகையிலான புத்தகங்கள் எப்போது கிடைக்கும் என்ற கேள்வியை மனதிற்குள்ளும், நண்பர்களிடமும் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தனர்.

       பிரெயில் அச்சகங்கள் தங்கள் பணியை ஆமை வேகத்தில் நிகழ்த்திக்கொண்டிருந்தன. Bookshare, வாசிப்போம் முதலிய பார்வையற்றோருக்கான வாசிப்பு வலை தளங்கள் புத்தகங்களைப் பார்வையற்றோருக்கு ஏற்ற வகையில் மாற்றிட முயன்றுகொண்டிருந்தன. பல பார்வையற்ற ஆசிரியர்கள் தங்களுக்கு நெருக்கமானவர்களைக் கொண்டு ஒலிப்பதிவு செய்து படிக்கலாம் என்றும் சிந்தித்துக் கொண்டிருந்தனர்.

       ஆனால், இத்தகைய எல்லா முயற்சிகளும் விறுவிறுப்பாக நடைபெறவில்லை. காரணம், தமிழக அரசு தனது பாடப்புத்தகங்களுக்கான மூலப்பதிப்பையும்  (Soft copy) வெளியிடவில்லை; அச்சடிக்கப்பட்ட புத்தகங்களையும் முன்கூட்டியே வெளியிடவில்லை. இந்நிலையில், பள்ளி திறந்ததும் பார்வையற்ற ஆசிரியர்கள் பதைபதைத்துப் போயினர். அப்போது மட்டுமல்ல. ஒவ்வொரு பருவம் தொடங்கியபோதும் அவர்கள் பதைபதைப்பு புதுப்பிக்கப்பட்டது.

       இந்த மன உளைச்சலைப் போக்க தன் மணியான குரலில் தமிழ்ப் பாடங்களை ஒலிப்பதிவு செய்து அனைத்துத் தமிழாசிரியர்களின் காதுகளில் தேன் பாய்ச்சியவர் தமிழ்மணி.

       9-ஆம் வகுப்பு தமிழ்ப் பாடம் தனக்கு மிகவும் பிடித்திருந்ததாகவும், அதனால் அதில் இருந்து ஓர் இயலைத் தான் ஒலிப்பதிவு செய்து புலனக் குழு வழியே வெளியிட்டதாகவும், அது இத்தனை தூரம் பயனளிக்கும் என்று தான் அப்போது நினைக்கவில்லை என்றும் தெரிவிக்கிறார் தமிழ்மணி.

       தமிழ்மணி 2014-ஆம் ஆண்டு அரசு ஆசிரியர் பணிக்கு வந்தவர். தற்போது செங்கல்பட்டு மாவட்டம், சிட்லபாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவர் குறைபார்வை உடையவர் என்பது முக்கியமான, கூடுதல் தகவல்.

       பார்வையற்ற ஆசிரியர்கள் சங்கத்தின் புலனக் குழுவில் தனது முதல் ஒலிப் பதிவைப் பகிர்ந்தார் தமிழ்மணி. மற்ற பார்வை மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் அதைப் பெரும் வரமாகக் கருதினர். பிறகு இது மெல்ல மெல்ல சேவையாக உருமாறியது. தற்போது இவரிடம், இவர் குரலில் 6 முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான அனைத்துத் தமிழ்ப் பாடப் புத்தகங்களும் இருக்கின்றன.

       தமிழ்க் கூடல்என்ற பார்வையற்ற தமிழாசிரியர்களுக்கான புலனக் குழுவை நடத்திவருகிறார் T. முத்துசாமி. அவரிடம் இது பற்றி கேட்டபோது, “நான் எங்கள் குழுவில் அவரது ஒலிப்பதிவுகளை வழங்குமாறு கேட்டுக்கொண்டேன். அவர் உடனடியாக ஒப்புகொண்டு குழுவில் சேர்ந்தார். தனது ஒலிப் பதிவுகளைக் குழுவில் பகிர்ந்தார். அது தற்போது நூற்றுக்கணக்கான பார்வை மாற்றுத்திறனாளி ஆசிரியர்களுக்குப் பயனளிக்கிறதுஎன்றார்.

       மேலும், “நம் ஆசிரியர்கள் எப்போது வேண்டுமானாலும் அவரிடம் கேட்பார்கள்.  ஐயா, ஏழாம் வகுப்பில் 2-ஆம் இயல் அனுப்புங்கள்’, 9-ஆம் வகுப்பில் 4-ஆம் இயல் அனுப்புங்கள்என்றெல்லாம் அவ்வப்போது கேட்கும்போதும் சலிக்காமல் அனுப்புவார்என்றார். தற்போது தமிழ்க்கூடல் புலனக் குழு இவர் வழங்கியிருக்கும் ஒலிப் புத்தகங்களை தனது புதிய டெலகிராம் சேனலில் பதிவேற்ற இருக்கிறது. இவரது ஒலிப் புத்தகங்களோடு, திக்ஷா செயலியில் உள்ள காணொலிகள், முக்கிய வினாத்தாள்கள் முதலியவையும் பதிவேற்றப்பட இருக்கின்றன.

       தமிழ்மணியின் இத்தகைய முயற்சி பாராட்டிற்குரியதுஎன்று கூறும் து. சதீஷ்குமார், “எங்கள் சங்கத்தின் சார்பில் அவருக்குப் பாராட்டு வழங்கி கௌரவிக்க விரும்பினோம். அவர் அதை உறுதியாக மறுத்துவிட்டார்என்று வருத்தத்தோடு குறிப்பிடுகிறார். சதீஷ்குமார் பார்வையற்ற ஆசிரியர்கள் சங்கத்தின் கடலூர்-விழுப்புரம்-கள்ளக்குறிச்சி மாவட்டக் கிளையின் தலைவர்.

       அன்றாடம் தனது பள்ளிப் பணியாளர் அறையில் தமிழ்மணியின் குரல் தான் ஒலித்துக்கொண்டிருக்கிறது என்று கூறும் ராமநாதபுரம் மாவட்டம் திருப்புள்ளாணி அரசு மேல்நிலைப்  பள்ளித் தமிழாசிரியர் கிருஷ்ணவேணி, அவர் தன் சேவைகளை மென்மேலும் தொடரவேண்டும் என்று வாழ்த்துவதாகத் தெரிவிக்கிறார்.

       காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரைப் பிறப்பிடமாகக் கொண்டவர் தமிழ்மணி. சிறுவயதிலேயே தனது பெற்றோரை இழந்தவர். பின்னர் தன் அத்தைகளின் அரவணைப்பில் வளர்ந்தார். தொடக்கக் கல்வியை உள்ளூர் பள்ளியில்தான் படித்தார். 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பூவிருந்தவல்லி பார்வைக் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்தார். இளங்கலை (B.A) தமிழ்  சென்னை மாநிலக் கல்லூரியிலும், இளங்கல்வியியல் (B.Ed)  SRM கல்வியியல் கல்லூரியிலும் படித்து முடித்தார்.

       பள்ளிக் காலங்களிலேயே நண்பர்களுக்குப் புத்தகங்களை வாசித்துக் காட்டும் பழக்கம் இவருக்கு இருந்திருக்கிறது. ஆனால் அதை ஒரு வரம்பிற்குள்ளும், தொடர் இயக்கமாகவும் இவர் கொண்டு வந்ததில்லை. தற்போது தனது இந்தச் சேவை இத்தனை பேருக்குப் பயன்படும் என்று தான் எதிர்பார்க்கவில்லை என்று குறிப்பிடும் இவர், பார்வை மாற்றுத்திறனாளிகள் ஒன்றுகூடும் இடங்களில் தன் குரலைக் கேட்டவுடனேயே பலரும் அடையாளம் கண்டு தன்னுடன் பேசுவது மிகவும் மகிழ்ச்சியைத் தருவதாகத் தெரிவிக்கிறார்.

       பொதுவாக இரவு நேரங்களில் மொட்டை மாடியில் அமர்ந்து படித்து ஒலிப்பதிவு செய்வதை இவர் வழக்கமாக்கியிருக்கிறார். பள்ளி விடுமுறைக் காலங்களில் பகல் பொழுதிலும் ஒலிப்பதிவு செய்திருக்கிறார்.  இயல்பான குரலில்தான் பதிவு செய்திருக்கிறார். வேறு எந்தத் தொழில்நுட்ப  உதவியையும் இவர் பயன்படுத்தவில்லை.

       பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கென புத்தகங்களை ஒலிப்பதிவு செய்யும்போது சில சிக்கல்களைக் களையவேண்டும். அவ்வாறு எழும் சிக்கல்களை இவர் எப்படிக் களைந்திருக்கிறார்? பார்ப்போம்.

1. செய்யுளைச் சந்தம் சிதையாமல் படிக்கவேண்டும். ஆனால் அது புத்தகம் படிப்போர்க்குச் சரியாக இருக்கும். கேட்டுத் தெரிந்து கொள்வோருக்குச் சிரமம்தான். இந்தச் சிக்கலை எதிர்கொண்ட தமிழ்மணி சந்தம் சிதையாமல் ஒருமுறை செய்யுளைப் படித்துவிட்டு, பொருள் விளங்குமாறு ஒருமுறை படித்திருக்கிறார். சான்றாக, 10-ஆம் வகுப்பில் உள்ள முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் பாடலை இந்த வகையில் இரு முறை படித்து ஒலிப்பதிவு செய்திருப்பதாகக் கூறுகிறார்.
2.  சில செய்யுள்களில் தொடர்ச்சியாக ஐந்தாறு பாடல்கள் தரப்பட்டிருக்கும். அந்தப் பாடல்கள் அனைத்தும் முடிந்த பிறகுதான் பாடலின் பொருள் புத்தகத்தில் தரப்பட்டிருக்கும். புத்தகம் படிப்போர் பக்கத்தைப் புரட்டி பாடலின் பொருளை பாடலின் எண்ணைக் கொண்டு எளிதாக அறிந்துகொளலாம். ஆனால் ஒலிப்பதிவில் அது சிரமம்தான். இதைப் புரிந்துகொண்ட தமிழ்மணி ஒவ்வொரு பாடலின் நிறைவிலும் அதற்கான பொருளை வழங்கியிருக்கிறார்.
3. பாடங்களுக்கிடையே இருக்கும் பெட்டிச் செய்திகளைக் கேட்போருக்குப் புரியும் வண்ணம் அடையாளப்படுத்தியிருக்கிறார். பெட்டிச்செய்தி தொடங்கும்போதும், முடியும்போதும் அடையாளப்படுத்தியிருக்கிறார்.
4. ஒரு சுவையான கதைக்கு இடையே பெட்டிச்செய்தி வருவதாக வைத்துக்கொள்வோம். அது கேட்போரின் தொடர் கவனத்தைத் திசை திருப்பிவிடும். அதனால் கதைகளுக்கு இடையே இருக்கும் பெட்டிச் செய்திகளைக் கதை முடிக்கப்பட்டவுடன் மொத்தமாகப் படித்திருக்கிறார்.
5. அட்டவணைகளைப் படிக்கும்போது கேட்போரைப் புரியவைப்பது சிரமம். அட்டவணையில் இருக்கும் ஒவ்வொரு செய்தியைச் சொல்லும்போதும் அதற்கான கிடைவரிசைத் தலைப்பையும் (column heading) சேர்த்துச் சொல்லியிருக்கிறார்.
6. பார்வை மாற்றுத்திறனாளிகள் புத்தகம் படிப்பதில் எதிர்கொள்ளும் முக்கியப் பிரச்சனை படங்கள். கேட்போருக்குப் புரிந்துகொள்ள வேண்டிய, அதற்கான அவசியமுள்ள, தகவல்கள் இடம்பெற்றுள்ள படங்களை மட்டும் தான் விளக்கியிருப்பதாகக் கூறுகிறார் தமிழ்மணி.

       ஆறாம் வகுப்பில் எர்னஸ்ட் ஹெமிங்வே எழுதியகிழவனும் கடலும்கதையின் ஒரு பகுதி தரப்பட்டுள்ளது. அது படக்கதையாகத் தரப்பட்டுள்ளது. உரையாடல்கள் மட்டும் வரி வடிவில் இருக்கும். மற்றவை படங்களாக இருக்கும். இந்தப் பாடத்தை மிகவும் கவனத்துடன் படித்திருக்கிறார் தமிழ்மணி. இவரது உழைப்பிற்குச் சான்றாக இந்தப் பாடத்தின் ஒலிப்பதிவை இங்கே தருகிறோம்.

       பார்வை மாற்றுத்திறனாளி ஆசிரியர்களுக்கு மட்டுமல்ல; ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதும் பார்வையற்றவர்களுக்கும், பார்வையற்ற மாணவர்களுக்கும் தனது ஒலிப்பதிவு பயன்படவேண்டும் என்று விரும்புவதாகக் கூறுகிறார் தமிழ்மணி.

       சத்தமில்லாமல் சேவை செய்வோரைச் சத்தம் போட்டு வாழ்த்த வேண்டியது நமது கடமை. இந்த 27 வயது இளைஞர் இன்னும் நூறாண்டுகாலம் தன் பார்வையற்ற சகாக்களுக்கு உதவவேண்டும் என வாழ்த்துவோம்.

       கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அரசு மகளீர் மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரியும் பாரதிராஜா அவர்களின் கருத்தோடு இக்கட்டுரையை முடிக்கிறேன். தன்னிடம் இருக்கும் குறைந்தபட்ச ஒளியைக் கொண்டு, முழுமையாக இருளில் தவித்துக் கொண்டிருப்பவர்களை ஒளியை நோக்கி அழைத்துச் செல்பவர் தமிழ்மணி”.

தமிழ்மணி அவர்களைத் தொடர்புகொள்ள: mtmani17@gmail.com

தொடர்புக்கு: balaganesan2285@gmail.com

10 கருத்துகள்:

  1. தம்பி அவர்களின் சேவை மிகவும் மகத்தானது. வாசித்தல் பணியோடு நிற்கவில்லை. அவர் ஒரு சிறந்த சேவகரும் கூட. அவர் இருக்கும் இடத்தில் எந்த ஒரு முற்றிலும் பார்வையற்ற வரும் பணி செய்து விடக்கூடாது. இது அவருக்கு அவரே வகுத்துக்கொண்ட நியதி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி அண்ணா

      நீக்கு
  2. தன்னை சேவையில் கரைத்துக் கொண்ட தமிழ்மணி என்னும் இளைஞனை, தன்னிகரற்ற மனிதனை, பாராட்டை விரும்பா பண்பு கொண்டவனை, காலம் அறிந்து புத்தகங்களை படித்து குரல் கொடை செய்த சான்றோனை, யார் மனமும் கோனார் அதேவேளையில், தான் கருதுவதை அழுத்தமாய் சொல்லும் நல்லோனை மிக சிறப்பாகவும் சரியாகவும் அங்கீகரித்து இருக்கிற நமது மின் இதழுக்கு நெஞ்சார்ந்த பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் தமிழ் தொய்ந்த வாழ்த்து வரிகள் மிக்க மகிழ்ச்சி தருவதாய் அமைந்தது நன்றி அண்ணா.

      நீக்கு
  3. இந்தத் தகவல் எனக்குப் புதிது. வாழ்த்துகள் தமிழ்மணி.

    பதிலளிநீக்கு
  4. தமிழ்மணி குறித்து ஒரு கட்டுரையை நமது இதழில் வெளியிட்டதற்கு இதை ஆசிரியர்களுக்கு எனது நன்றி தமிழ்மணி அவர்களால் பயனடைந்த பயனாளிகளில் நானும் ஒருவன்.
    ஒருவன் அவருடைய பதிவுகள் என்னிடம் சேமிக்கப்பட்டு பத்திரமாக இருக்கின்றன அவர் படிகின்ற விதம் மிக தெளிவாக புரியும் குரல் வளம் நன்றாக இருக்கின்றது அவருடைய சேவை நமது பார்வையற்ற சமூகத்திற்கு தேவை மிக நல்ல ஒரு திறமைசாலி ஒரு பார்வை உள்ளவர் படிப்பது போலவே மிகச் சிறப்பாக படித்து காட்டுவதில் வல்லவர் திறமைசாலி அவரை நமது இதழ் மூலம் அங்கீகரிப்பதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி

    பதிலளிநீக்கு
  5. ஜெயராமன் தஞ்சாவூர்7 ஜூன், 2020 அன்று AM 11:29

    பிரதி பலன் கருதாத

    தன் பொது நல சேவையின் மூலம்

    பார்வையற்ற ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும்

    உதவி வருகின்ற திரு தமிழ்மணி அவர்களை

    சத்தம் போட்டு வாழ்த்திய தன் மூலம்

    விரல் மொழியர் மின்னிதழில் தனித்துவம் புலனாகிறது

    திரு தமிழ்மணி அவர்களின் சேவையும்

    விரல் மொழியர் மின்னிதழின் சமூகப் பணியும் மேலும் மேலும் தொடர என் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  6. கணினிப் பயிலரங்குகளில் தமிழ்மணி அயராமல் தன்னார்வத் தொண்டுகள் புரிந்ததை நேரில் பார்த்திருக்கிறேன், ஆனால் இப்படியொரு தேர்ந்த வாசிப்பாளர் அவருக்குள் இருப்பதை இதுவரை நான் அறியவில்லை. கிழவனும் கடலும் கேட்டேன், மிகச் சிறந்த ஒலிப்பதிவு! வாழ்த்துக்கள் தமிழ்மணி, கட்டுரைக்குப் பாராட்டுக்கள் பாலகணேசன் சார்!
    முருகானந்தன்

    பதிலளிநீக்கு