களத்திலிருந்து: நமக்கு நாமே - M. பாலகிருஷ்ணன்

graphic கீழே இருப்பவரை மேலே இருப்பவர்கள் கை கொடுத்து தூக்கிவிடுகின்றனர்


        நம் நாட்டில் கொரோனா தொற்றால் ஊரடங்கானது 1.o, 2.o, 3.o, 4.o என வெப் சிரீஸ் (Web Series) போல அடுத்தடுத்து கூடிக்கொண்டே போகிறது. ஆனால், மக்கள் படும் துன்பமோ தொலைக்காட்சி நாடகம் போல தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இந்த இடர்காலம் நமக்குப் பலவற்றைக் கற்றுக் கொடுத்திருக்கிறது. அதுபோலவே நம் வாழ்வில் மாற்றங்களையும் ஏற்படுத்தி இருக்கிறது. குறிப்பாக OTT தளங்களைப் பயன்படுத்துவது, வீட்டிலிருந்து கொண்டு வேலைபார்ப்பது, குடும்பத்தினர்களோடு பேசுவதற்கு நிறைய நேரம் ஒதுக்குவது. அதோடு ஏழை மக்களுக்கு உதவுவது போன்றவையும் பலரின் வாழ்வியலாக மாறியிருக்கிறது.

            இக்காலத்தில் பார்வையற்றோரின் வளர்ச்சி, அவர்களது துயர் என இரு நிலைகளைப் பற்றியும் பேசவேண்டிய தேவை இருக்கிறது. பார்வை மாற்றுத் திறனாளிகளுக்குச்  சமூக ஊடகங்கள் அறிவை வளர்த்துக் கொள்வதற்கும், தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வதற்கும் களம் அமைத்துத் தருகின்றன. கொரோனா ஊரடங்கு அறிவித்த போதே ஹெலன்கெலர் மாற்றுத்திறனாளிகள் அமைப்புப் பல நல்லுள்ளங்களிடம் இருந்து நன்கொடை பெற்று 500000 ரூபாய்பாய்க்கு உதவிகளைச் செய்துள்ளார்கள் என சென்ற இதழில் வெளியான பேட்டியில் படித்திருப்பீர்கள். அந்த நற்செயலைச் சமூக ஊடகங்கள்தான் சாத்தியமாக்கின.

       தமிழகம் முழுவதும் உள்ள பார்வையற்றோர் பலரை அறிவார்ந்தவர்களாக வளர்த்தெடுத்ததில் சென்னை மற்றும் மதுரை நகர்களுக்கு முக்கிய பங்குண்டு. தமிழ்நாட்டில் இந்த இருநகரங்களும் பார்வையற்றோருக்கு அடைக்கலம் தந்து அவர்களின் வாழ்வை ஒளிரச் செய்தது என்றால் மிகை இல்லை. அதற்கு முக்கியக் காரணம் இந்த இரு நகரங்களிலும் இருக்கும் பல பார்வையற்றோருக்கான அமைப்புகள் பார்வைமாற்றுத் திறனாளிகளுக்குக் கல்வி பயிலும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தன. இங்குள்ள பல அமைப்புகளின் புகழ் இந்தியா முழுமைக்கும் பரவி உள்ளது. அதை அறிந்து பல்வேறு பகுதிகளில் உள்ளவர்களும் இவ்வமைப்புகள் மூலம் பயன் பெற்றனர்.

       ஆனால், அருகாமையிலிருந்தும் சிலர் அறியாமையால் பயன்பெறாமல் இருப்பதுதான் வருத்தத்தைத் தருகிறது. மதுரையில் உள்ள மூன்றுமாவடி அருகில் கன்னநந்தலூர் என்ற ஊரில் வாழ்ந்து வரும் பாண்டி என்ற 40 வயது நபரின் வாழ்க்கைதான் என்னை இந்தக் கட்டுரை எழுதத் தூண்டியது. பாண்டி ஒரு பார்வைமாற்றுத்திறனாளி. அவரது பெற்றோரும் மாற்றுத்திறனாளிகள். இவர் ஊனமுற்றோருக்கான அடையாள அட்டை மட்டும் வாங்கியிருக்கிறார். மாற்றுத்திறனாளிகளுக்கான அரசு சலுகைகள் குறித்து அவருக்கு எதுவும் தெரியவில்லை. குறிப்பாக பார்வையற்றோருக்கு இலவச பேருந்து பயண அட்டை இருக்கிறது என்பதுகூடத் தெரியாமல் இருக்கிறார். அவருக்குச் சொந்தமாக வீடுகூட இல்லை. குளக்கரையில் குடிசை அமைத்து அப்பகுதிகளில் உள்ள குளங்களில் மீன் பிடித்து வாழ்க்கை நடத்திவருகிறார்.

       என்னைப்போல குக்கிராமங்களிலிருந்த பல பார்வைமாற்றுத் திறனாளிகள் மதுரை வந்து, படித்துப் பயன்பெற்றோம். ஆனால், மதுரையிலேயே இருந்தும் பாண்டி பார்வையற்றோர் தொடர்பாக விழிப்புணர்வு இல்லாமலிருந்தால், தமிழகம் முழுவதும் பாண்டி போல இன்னும் எத்தனைபேர் இருப்பார்கள் என்பதை நினைக்கும்போது பெருந்துயரம் சூழ்கிறது.

       பொது மக்களோ, பார்வையற்றவர்களுக்கு அரசே அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்துவிடும் என நினைத்துக் கொள்கிறார்கள். எங்கள் கிராமத்தில் ஒருபடி மேலேபோய் எனக்கு அரசு ஓசியிலேயே வேலை தந்துவிடும் என்றெல்லாம் சொல்கிறார்கள். இத்தகைய சூழலை உணர்ந்து, இந்த இடர் காலத்தில் தமிழகம் முழுவதிலும் அல்லலுறும் பார்வையற்றவர்களுக்குப் பார்வையற்றவர்களே உதவியுள்ளார்கள். எனவே, அது போன்ற அமைப்புகளைக் கண்டறிந்து, அவர்கள் மூலம் பார்வையற்றோர் சந்திக்கும் கஷ்டங்களைப் பொதுவெளியில் பதிவுசெய்யவே இக்கட்டுரையை  எழுதுகிறேன்.

உதவும் சொந்தங்கள்:
       தமிழகம் முழுவதும் கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட உடன் இரயிலில் வியாபாரம் செய்துவந்த, சுயதொழில் செய்து வந்த, தனியார் நிறுவனங்களில் வேலைபார்த்து வந்த நம் பார்வைமாற்றுத்திறனாளிகள் இந்தப் பொதுமுடக்கக் காலத்தில் தங்கள் வாழ்வை எப்படி நகர்த்த போகிறார்கள் என்கிற கேள்விதான் இந்தக் குழு உருவாக காரணமாக அமைந்தது. உதவும் மனம் படைத்தவர்களை ஒன்றிணைத்து உருவான இக்குழு கடந்த இரண்டு மாதங்களில் சுமார் 260 குடும்பங்களுக்குப் பண உதவியும் 85 குடும்பங்களுக்குப் பொருளுதவியும் செய்துள்ளது. மேலும், கூடுதலாக 150 நபர்களுக்கு உதவ இருக்கிறோம் என்று அதன் நிர்வாகிகளுள் ஒருவராகிய திரு. பழனிச்சாமி கூறினார்.

       கோயம்புத்தூர் பெரியநாயக்கம் பாளையம் பகுதியில் வாழ்ந்து வரும் கலாவதி என்ற பார்வையற்ற பெண்ணின் வாழ்க்கை பெரிய சோகத்தை ஏற்படுத்தியது என்று கூறுகிறார் திரு. பழனிச்சாமி. அந்தப் பெண் படிக்கவில்லை. இரயிலில் ஊதுபத்தி விற்று தனது வாழ்க்கையை நடத்திவருகிறார். இருந்தாலும், வீட்டு வேலையையும், தனது வேலையையும் செய்வார். அவரது பெற்றோர்கள் அப்பெண்ணிற்கு வாழ்க்கைத் துணையாக இருக்கட்டும் என ஒரு மனவளர்ச்சி குறைவாக இருப்பவரைக் கல்யாணம் முடித்து வைத்தார்கள். இருந்தாலும் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தார்கள். அதன் பிறகு அந்தப் பெண்ணின் பெற்றோர்கள் இறந்துவிட்டார்கள். அந்த இறப்பிற்கு வந்த அப்பெண்ணின் மாமனார் மற்றும் மாமியார் இருவரும் தங்கள் மகனை அந்தப் பெண்ணுக்கே தெரியாமல் அவரது வீட்டில் விட்டுவிட்டுச் சென்றுவிட்டார்கள். அதன்பிறகு அவரது வாழ்க்கைப் பயனம் நாள்தோறும் சவாலாகத் தான் இருந்து வருகின்றது. முடி திருத்துபவரை அழைத்து வந்து முடியை வெட்டவைத்தாலும் அவரது கணவன் ஒத்துழைப்பது இல்லை. இவ்வாறு அந்தப் பெண் அவரது வாழ்க்கையை உதவும் சொந்தங்கள் குழுவிடம் கூறியுள்ளார். சில மாற்றுத்திறனாளிகளின் பெற்றோர்களைப் பொருத்தவரை தங்களது பிள்ளைகளுக்குத் திருமணம் முடித்து வைப்பது என்பது வெறும் கடமையாக மட்டும் இருந்திருக்கிறது.

I.A.B முன்னால் மாணவர்கள் சங்கம்
       மதுரையிலுள்ள இந்திய பார்வையற்றோர் சங்கத்தில் படித்த முன்னாள் மாணவர்கள் ஒன்றிணைந்து பணம் திரட்டி அங்கு படித்த ஏழை பார்வை மாற்றுத்திறனாளி குடும்பங்களுக்கும், வேலை தேடிக் கொண்டிருக்கும் தங்கள் நண்பர்களுக்கும் உதவியிருக்கின்றனர். அவர்கள் இது வரை 160 பயனாளிகளுக்கு உதவியிருக்கின்றனர். நான் ஒரு மாற்றுத்திறனாளி என்று கூறிக் கொள்வதில் எனக்குத் தயக்கம் இல்லை. காரணம், எந்த மாற்றுத்திறனாளியாக இருந்தாலும் எங்களுக்குள் ஒரு வலைப்பின்னல் இருக்கும். யாரையாவது தொடர்பு கொள்ள வேண்டும் என்றாலோ, யாரைப் பற்றியாவது தகவலைத் தெரிந்துகொள்ள விரும்பினாலோ எங்களால் முடியும்.

       ஆனால் இந்தக் கொரோனா காலத்தில் என்னுடைய இந்த நம்பிக்கை உடைத்து எறியப்பட்டு இருக்கிறது. காரணம், எங்களோடு பேசிச், சிரித்து, விளையாடிய ஒருவனை; கட்டி, உருண்டு சண்டை போட்ட நண்பனை; ஒன்றாக உட்கார்ந்து உணவு உண்ட தோழனைக் கிட்டத்தட்ட 5 வருடங்கள் தேடாமல் ஏன் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட 40 நாட்களாகத் தேடாமல் ஊரடங்கு 4.o அறிவிப்பு வந்ததும் தேடியது என்ன ஒரு என்னம் என்று சொல்ல முடியவில்லை. அவ்வாறு தேடியதில் மகிழ்ச்சியில் தொண்டையிலிருந்து சத்தம் வருவதற்குப் பதிலாகத் துக்கம் தொண்டையை அடைத்துக் கொண்டது. நாங்கள் தேடிய 4 நாட்களுக்கு முன்பு எங்களது நண்பன் முகேஷ் கண்ணன் இறந்துவிட்டான் என்ற செய்தி தான் கிடைத்தது. இம்மாதிரியான இக்கட்டான இடையூறுகளில் உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் தொலைபேசியில் அழைத்து நலம் விசாரியுங்கள் என்ற வாட்சாப் ஃபார்வேடு வழக்கமாக ஸ்குரோல் செய்யப்பட்டு விட்டது.

அகவிழிதர்ம அறக்கட்டளை. சேலம்:
       “எங்கள் அறக்கட்டளை மூலமாக, கொரோனா ஊரடங்கால் தங்களது வாழ்வாதாரத்தை இழந்த மதுரை, சிவகங்கை, சேலம், கோவை, ஈரோடு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 120 பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கு 200000 ரூபாய் அளவிற்கு உதவிகளைச் செய்துள்ளோம். அடுத்த கட்டமாக உதவ நன்கொடையாளர்களைத் தேடிக் கொண்டிருக்கிறோம். அதுமட்டுமல்லாது, பார்வையுள்ள ஏழை எளியவர்களுக்கும் சில அரசியல்வாதிகள் மூலம் உதவி கிடைக்கச் செய்துள்ளோம்” என்கிறார் அறக்கட்டளையின் நிர்வாகி திருமதி. உமாமகேஷ்வரி.

       நாமக்கல் மாவட்டம் ராசி புரம் அருகில் 47 வயது மதிக்கத்தக்கப் பெண். அவருக்குப் பார்வை இல்லை; வாய் பேச முடியாது; அப்படியென்றால் காதும் கேட்காது; கால்களில்லை. என்ன? படிக்கிற உங்களுக்குப் பள்ளிக்கூடத்தில் படித்த ஹெலன்கெலர் ஞாபகத்திற்கு வருகிறாரா? அவரை நாம் நேரில் பார்த்தது கிடையாது. ஆனால் இப்பெண்மணியை நேரில் கண்டவர்கள் உண்டு. பாத்திரம் விலக்க பயன்படுத்தும் பொடியைப் பாக்கேட் போடுவதுதான் இவரது தொழில். இதன்மூலம் ஒரு நாளைக்கு 150 ரூபாய் சம்பாதிக்கிறார். இவரது கணவர் இவரைவிட்டு பிரிந்து சென்றுவிட்டார். இருந்தபோதும், தன் மகளைக் கல்லூரிவரை படிக்கவைத்துத், திருமணம் செய்து கொடுத்திருக்கிறார். இவருக்கு இந்த அறக்கட்டளை மூலம் உதவச் சென்ற திரு. ரஜினிகாந்திடம்டம் பேசிய போது, என்னால் அவரிடம் பேச இயலவில்லை. ஏனெனில், பார்வைமாற்றுத் திறனாளியான நான் செவித்திறன் குறையுடைய அவரோடு எப்படித் தொடர்புகொள்வது. இருந்தாலும் அவருக்கு உதவியதை விட அவர் எங்களை ஆச்சரியப்படுத்திவிட்டார். அவர் தவழ்ந்து சென்று எங்களுக்கு எலுமிச்சை ஜூஸ் போட்டுக் கொடுத்து  எங்களை உபசரித்தது எங்களுக்கு நெகிழ்ச்சியாக இருந்தது” என்றார். தமிழர்கள் எவ்வளவு கஷ்டத்தில் இருந்தாலும் உதவும் மனப்பான்மையும், உபசரிக்கும் பண்பாடும் இன்னும் நம்மை விட்டுப் போகவில்லை என்பதற்கு இந்த நிகழ்வுகளே சாட்சி.

அன்பாலயம் பள்ளி முன்னாள் மாணவர்கள் குழு-கரூர்
       இந்த ஊரடங்குக் காலத்தில் புலம்பெயர் தொழிலாளர்களின் வாழ்க்கை நம்முடைய மனதை உறைய வைத்தாலும் அவர்களது பிஞ்சுக் குழந்தைகள் வெறும் காளோடு 200 கி.மீ. 300 கி.மீ நடந்து வருவது அந்தக் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு எவ்வளவு மன உளைச்சலைத் தந்திருக்கும் என்பதை நம்மால் நினைக்க முடியவில்லை. சேலம் அருகில் வாழ்ந்து வரும் லோகநாதன் என்பவர் ஒரு பார்வைமாற்றுத் திறனாளி. அவர் குடும்பத்தில் அவர், அப்பா, அத்தை மூவரும் பார்வைமாற்றுத் திறனாளிகள். அவருக்குத் திருமணம் ஆகி 2 குழந்தைகள் இருக்கின்றனர். அவர் குடும்பத்தை இரயிலில் கடலை மிட்டாய் விற்றுக் காப்பாற்றி வருகின்றார். அவர் தனது வியாபாரத்தை முடித்து விட்டு வீடு திரும்புகையில் அவரது 2 குழந்தைகளும்டேய்! அப்பா வந்துட்டார்டா! அப்பா!! என்னப்பா திங்கிறதுக்கு வாங்கிட்டு வந்த? எங்கப்பா பைய காணோம்? டேய்! நான் அப்பாவைப் புடுச்சுக்கிறேன், நீ போயி வெளியில் இருக்கானு பாரு!” ஆனால் அங்கே எதுவும் இல்லை. குழந்தைகள் தனது அப்பாவின் இடுப்பில் ஏறி அமர்ந்துகொண்டு,என்னப்பா பாக்கேட்டில் காசை காணோம்? அப்ப இன்னக்கி திங்கிறதுக்கு எதுவும் வாங்கிட்டு வல்லையா?” என்று கேட்பார்களாம். இப்படி தனது குழந்தையின் ஏக்கம் தோய்ந்த கேள்வியை எதிர்கொள்ளவேண்டிய சூழ்நிலை எந்தத் தகப்பனுக்கும் வரக்கூடாது.

            திரு. லோகநாதனிடம் பேசிய பேராசிரியர்  முருகானந்தன் அவர்கள், மே மாதம் முழுதும் இரயில் ஓடாது சார். என்று கூறியதும் மேற்கண்ட நிகழ்வினைச் சொல்லி வருத்தப்பட்டிருக்கிறார். முருகானந்தம் அவர்கள் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் 50 பார்வை மாற்றுத் திறனாளிகளை அடையாளம் காட்டி அவர்களுக்கு உதவி கிடைக்கச் செய்துள்ளார். மேலும், கரூர் அன்பாலயம் முன்னாள் மாணவர்கள் மூலம் 50 பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி செய்துள்ளார்கள்.

அக தீப ஒளி பார்வைமாற்றுத் திறனாளிகளுக்கான அறக்கட்டளை:
       சென்னையில் உள்ள பட்டாபிராம் என்ற இடத்தில் செயல்பட்டு வரும் இந்த அறக்கட்டளை, வியாபாரம் செய்யும் பார்வைமாற்றுத் திறனாளிகள், பார்வையற்ற முதியோர்கள், கைவிடப்பட்ட பார்வையற்றோர் போன்றோருக்கு அடைக்களம் தந்து வருகிறது. இதுவரை இவர்கள் தமிழகம் முழுவதும் 660 பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கு உதவியுள்ளார்கள். அனைவருக்குமே மளிகை பொருட்களாக வழங்கியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஏன் பணமாக வழங்கவில்லை என்பதற்கு இந்த அறக்கட்டளையின் தலைவர் திரு. சந்திரசேகர் கூறியதாவது:

       திருநெல்வேலியைச் சேர்ந்த பார்வை மாற்றுத்திறனாளி பெண் திருமதி. ரேகா கணவனை இழந்தவர். இவருக்கு 2 மகன்கள். இருவரும் பள்ளியில் படிக்கின்றனர். இவர் இரயிலில் வியாபாரம் செய்துதான் தன் வாழ்வை நடத்துகிறார். ஊரடங்கால் இரயில்கள் ஓடாததால் உணவு வாங்கக்கூட பணமின்றி, 2 நாட்கள் தன்னீரை மட்டும் குடித்து வாழ்ந்திருக்கிறார்கள். இதைக் கேட்டதுமே அவர்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்களைக் கிடைக்கச் செய்தோம். பணமாக அவர்கள் வங்கியில் செலுத்தினால், ஊரடங்கு காலத்தில் வங்கி அல்லது .டி.எம். செல்லவும், அதன் பிறகு மளிகை கடை செல்லவும் உதவிக்கு ஒருவரை நாட வேண்டி இருக்கிறது. அதனால்தான் மளிகை பொருட்களைக் கொடுக்கும் முடிவை எடுத்தோம். மேலும், திருமதி. ரேகாவின் மகன்களின் கல்விச் செலவை எங்களது அறக்கட்டளையே ஏற்றுக்கொண்டோம் என நம்மிடம் கூறினார்.

ஐரனிபுரம் பார்வையற்றோர் பழைய மாணவர்கள் குழு-நாகர்கோவில்
       கன்னியாகுமரி மாவட்டத்தில்  உள்ள ஐரனிபுரம் பார்வையற்றோருக்கான பள்ளியைச் சேர்ந்த பழைய மாணவர்கள் ஒன்றிணைந்து அப்பள்ளியில் படித்துவிட்டு இரயிலில் வியாபாரம் செய்யும் தங்களது நண்பர்களைக் கண்டு அவர்களுக்கு உதவியுள்ளார்கள். இதுவரை 2 கட்டமாக 50 நபர்களுக்கு உதவியுள்ளார்கள். நாகர்கோவில் கூந்தங்கோடைச் சேர்ந்த சத்தியபாமா என்ற பார்வையற்ற பெண் தூத்துக்குடியில் படித்து வருகிறார். தனது அம்மாவிற்கு டயாலிஸிஸ் செய்யவேண்டிய சூழ்நிலை. அதனால் அங்கிருந்து கிளம்பி வருகின்ற தனது தாயைக் கவனித்துக்கொள்ள வேறு யாரும் இல்லை. அந்த நேரம் பார்த்து அரசு நாடு முழுவதும் ஊரடங்கை அறிவிக்கின்றது. உதவிக்கு யாரும் இல்லை. ஒரு வழியாக அவரது அம்மாவிற்கு டயாலிஸிஸ் முடிந்தது, ஆனால், இனிமேல் இவர்களுக்கான உணவு  உள்ளிட்ட தேவைகளை எவ்வாறு நிறைவேற்றிக் கொள்வார்கள்? இது இவர்களுக்கு இருக்கும் பெரிய சவால். தங்களுக்கு அரசால் வழங்கப்படும் ஓய்வூதியத் தொகையைக் கூட எடுக்க வங்கிக்குச் செல்ல துணையாய் யாரும் இல்லை என்று அவர்கள் சொல்வதுதான் நம் மனதை மேலும் நெருடச் செய்கிறது. கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். நாடு முழுவதும் ஊரடங்கு. உணவுக்கும் வழியில்லை. சரி சில நல்ல உள்ளங்கள் வழங்கிய பணத்தை எடுத்துப் பொருட்கள் வாங்கிச் சமைக்கலாம் என்றால் வங்கிக்குச் செல்லவும் முடியவில்லை. இவ்வாறு இருக்க எப்படி அந்த அம்மாவும் அவரது பார்வையற்ற மகளும் இந்தக் காலகட்டத்தில் உயிர் வாழ முடியும்?

ஐரனிபுரம் வாட்சாப் குழுவின் நிர்வாகியான திரு. ரமேஷ் பானுவிடம் பேசியபொழுது அவர் கூறியதாவது:சத்தியபாமா என்ற பெண் சார் எங்களுக்குப் பணம் வேண்டாம். காரணம், எங்களால் வங்கிக்குச் சென்று எடுக்க முடியாது, இங்கிருக்கும் அம்மா உணவகத்தில் எங்களுக்கு உணவு கிடைக்க செய்யமுடியுமா?’ என்று கேட்டார். ஆனால், அவர்கள் பகுதியில் அம்மா உணவகம் இல்லை என்று வருத்தம் கலந்த குரலில் கூறினார். ‘நாங்கள் எத்தனை பேருக்கு உதவி இருந்தாலும் இந்தப் பெண்ணிற்கு உதவ முடியவில்லை என்பது எங்களது மனதை உறுத்துகின்றது என்றார்.

காவேரி பூக்கள் குழுமம்:
       திருச்சி அரசு பார்வையற்றோருக்கான மகளிர் பள்ளியைச் சேர்ந்த பழைய மாணவிகள் ஒன்றிணைந்து தங்கள் சக தோழிகளுக்கு உதவியுள்ளனர். தங்கள் மூலம் சுமார் 48 நண்பர்களுக்கு ரூபாய் 72000 வரை உதவியுள்ளதாக அதன் உறுப்பினர் திருமதி. கிருஷ்ணவேனி கூறினார்.

       மேலும் அவர் கூறியதாவது: “ராமநாதபுரம், உத்திராவையைச் சேர்ந்த சத்தியகலா என்ற 40 வயது பெண் தாய் தந்தை இல்லாமல், தங்க வீடு இல்லாமல் வாழ்ந்து வருகின்றார். இவர் தனக்கு வழங்கப்படும் ஓய்வு ஊதியத் தொகையில் 700 ரூபாய் தனது அத்தையிடம் தந்துவிடுவார். மீதம் இருக்கும் 300 ரூபாயை அவரின் அன்றாடச் செலவுக்காக வைத்துக்கொள்வாராம். கிராமங்களில் வாழும் பார்வைமாற்றுத்திறனாளிகளுக்குக் கழிப்பறை என்பது அடிப்படைத் தேவையாகும். ஆனால், இங்கு இவருக்கு இத்தேவைகூட கிடைக்கவில்லை என்றால் என்ன சொல்லுவது என்பது எனக்குத் தெரியவில்லை. பெண்கள் பொதுவாகவே பாதிக்கப்படுகின்றார்கள் என்றால் அதிலும் பார்வையற்ற பெண்கள் அவர்களைவிட அதிகமாகத் தான் பாதிப்பு அடைகின்றார்கள். மேலும், “எனக்கு நீங்கள் எந்த உதவியும் செய்ய வேண்டாம். ஒரு கழிப்பறை மட்டும் கட்டித் தருவீர்களா?” என்று கேட்டார் இந்தப் பெண். இவரைப் போன்று இன்னும் எத்தனை பெண்கள் அவர்களின் கஷ்டங்களைச் சொல்லாமல் மறைத்து வாழ்ந்து வருகின்றார்கள் எனத் தெரியவில்லை”.

இனையத்தென்றல் அறக்கட்டளை:
       முதன்முதலில் மின்னஞ்சல் குழுவாக தொடங்கிய இவ்வமைப்பு, இந்தக் கொரோனா ஊரடங்கில் பாதிக்கப்பட்ட பார்வையற்ற வியாபாரிகளுக்கு உதவியுள்ளார்கள். இதுவரை 56 நபர்களுக்கு உதவியுள்ளதாக அவ்வமைப்பின் திரு. பார்த்திபன் மற்றும் வினோத் பெஞ்சமின் ஆகியோர் கூறினார்கள். தர்மபுரியைச் சேர்ந்த பெயர் குறிப்பிடாத நபர் இவ்வமைப்பிற்குத் தன்னைக் காட்டாமல் 10 முதல் 15 வரையிலான கஷ்டப்படும் பார்வையற்றோர்களை அடையாளம் காட்டியுள்ளார். பிறகு இவரைப் பற்றிக் கேட்டபொழுது நீங்கள் அவர்களுக்கு உதவுங்கள் சார் பார்த்துக்களாம் என்றார்.

       ஆனால், இவர் வாரத்தில் 3 நாட்கள் வியாபாரமும், 3 நாட்கள் தேவாலயத்திலும் வேலை செய்வார். இந்தக் காலத்தில் இவை இரண்டும் இயங்கவில்லை. இவர் தனது உணவு தேவையையும், அன்றாட தேவையையும் எவ்வாறு பூர்த்தி செய்துகொள்வார்?

இது இணையத் தென்றல் அமைப்பினர் வழங்கிய தகவல். இவ்வளவு கஷ்டத்திலும் தான் உழைத்து வாழவேண்டும் என்ற அவரது தன்னம்பிக்கைக்கும், தனக்காக எதையும் எதிர்பார்க்காத இந்த மனிதரின் பெருந்தன்மைக்கும் ஒரு சல்யூட்.

தாய் பள்ளி சேலம்-பார்வையற்றோருக்கான அரசு நடுநிலைப் பள்ளி முன்னாள் மாணவர்கள் அமைப்பு:
       சேலம் பார்வையற்றோருக்கான அரசு நடுநிலைப் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் அமைப்பு தங்களது பள்ளியில் படித்துவிட்டு வேலை இல்லாமல் இருப்பவர்கள், இரயிலில் வியாபாரம் செய்பவர்கள், பொது மக்களிடம் பணம் வாங்கி தனது வாழ்க்கையை நடத்துபவர்கள் முதலியோர்க்கு இதுவரை 125 நபர்களுக்கு உதவியிருக்கிறது. இவ்வமைப்பின் தலைமை நிர்வாகி திருமதி. மதினா அவர்களிடம் பேசியபோது, “எங்களது பள்ளியில் படித்த சந்தியா மற்றும் யோகேஷ்வரன் ஆகியோரின் பெற்றோர் மிகவும் வறுமையிலிருந்து வருகிறார்கள். இவர்களது தந்தைக்குக் கூலி தொழில். அம்மாவிற்கு கிட்னி செயல் இழந்து டயாலிஸிஸ்க்குப் பணம் இல்லாததைத் தெரிந்து கொண்டு அவர்களுக்கு உதவினோம். அதன் பிறகு அவர்கள் அம்மா தொலைபேசியில் தொடர்பு கொண்டு டீச்சர் நீங்கள் கொடுத்த பணத்தை வைத்துதான் அரிசி, சிலிண்டர் வாங்கினோம். என்று கூறியது இன்னும் காதுகளில் ஒலித்துக்கொண்டிருக்கிறது” என்றார்.

       மேலும்,வேறு யாரையும் விட்டுவிடக் கூடாது என்பதில் நாங்கள் கவனமாக இருந்து, அனைவரையும் கண்டறிந்து உதவினோம். அரசாங்கம் அறிவிக்கும் எந்தத் திட்டம் ஒரு கடைக் கோடி கிராமத்தில் வாழும் மனிதனுக்குப் போய்ச் சேர்கிறதோ அதுவே சிறந்த திட்டமாகும். கிராமப் பகுதிகளில் வசிக்கும் பார்வை மாற்றுத்திறனாளிகள் இடையே பலரிடம் நியாயவிலைக்கடை அட்டை இல்லை. அவர்களைக் கண்டு அவர்களுக்கு உதவியது தான் எங்களுக்கு மனநிறைவைத் தந்தது” என்றார்.

இந்தியப் பார்வையற்றோர் சங்கம் மதுரை:
       தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் புகழ்பெற்ற பார்வையற்றோர்க்கான  தொண்டு நிறுவனம் இந்தியப் பார்வையற்றோர் சங்கம் IAB. இங்கு பள்ளிக்கல்வி மற்றும் பார்வையற்றோர்க்கான வேலைவாய்ப்பையும் வழங்கி வருகின்றார்கள். இந்தக் கொரோனா காலத்தில் தமிழகம் முழுவதும் 200 நபர்களுக்கு 5000 ரூபாயும், மதுரையைச் சுற்றி வாழும் பார்வையற்ற குடும்பங்களுக்கு அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்கள் அடங்கிய ஒரு காம்போவும் வழங்கப்பட்டுள்ளதாக அதன் பொதுச் செயலாளர் திருமதி. ரோஷன்ஃபாத்திமா அவர்கள் கூறினார்.

மதுரைK.K. நகரைச் சேர்ந்த கண்ணன் ஒரு பார்வையற்றவர். அவர் குடும்பத்தில் அவரது மனைவி, மகன் ஆகியோர் பார்வையற்றவர்கள். கண்ணன் இரயிலில் வியாபாரம் பார்த்து தான் இவர்களது குடும்பத்தைப் பார்க்க வேண்டும். இதனிடையில் இரயில் இயங்காததால் இவர்களுக்கு அடுத்தவேளை உணவுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனைக் கேள்விப்பட்ட பிறகுதான் நாங்கள் வழங்கிய 200 நபர்களில் பார்வையற்ற வியாபாரிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்கள் வங்கிக் கணக்கில் செலுத்தினோம் என நம்மிடம் கூறினார் ரோஷன் ஃபாத்திமா.

பார்வையற்றோர் கவனக கல்வி நல அறக்கட்டளை
 [The Blind Care Educational Charitable Trust]
       சென்னையில் இயங்கிவரும் இந்த நிறுவனம் பார்வையற்ற இஸ்லாமியர்களுக்கு குர்ரான், கணினிப் பயிற்சி, பிரெயில் முதலியவற்றைக் கற்பிக்கிறது. மேலும் இவர்கள் காலத்திற்கு ஏற்றார் போல ஏழை எளிய மக்களைக் கண்டுபிடித்து உதவி வருகின்றார்கள். இந்தக் கொரோனா காலத்தில் சுமார் 40 பார்வையற்ற மக்களுக்கு உதவியுள்ளார்கள். அதன் நிர்வாகி திரு. அகமது அலி அவர்களிடம் பேசியபொழுது,மக்கள் பலர் கஷ்டப்படுகின்றார்கள். எல்லா கஷ்டங்களையும் நம்மால் தீர்க்க முடியாது. ஆனால், சிறுசிறு உதவிகளைச் செய்வதன் மூலம் அதிலிருந்து அவர்களுக்கு விடுதலை அளிக்கலாம். இது தற்காலிகமானது தானே தவிர நிரந்தரம் அல்ல. என்னிடம் ஒருவர் தனது குழந்தைக்குப் பால் வாங்கக் கூட பணம் இல்லை என்று கூறினார். ஒரு குழந்தை வளர பால் அடிப்படைத் தேவை, அதனை வாங்க அவருக்கு ஒரு மாதம் எவ்வளவு தொகை ஆகப்போகிறது? இது போன்று அவர்களின் அடிப்படைத் தேவையைப் பூர்த்திசெய்வதே எங்களது நோக்கம்” எனக் கூறினார்.

பார்வையற்றோருக்கான பழைய மாணவர்கள் சங்கம் பாளையங்கோட்டை
       பாளையங்கோட்டையில் இயங்கிவரும் பார்வையற்றோர் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் ஒன்றிணைந்து அதே பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மட்டும் இதுவரை 100 பேருக்கு உதவி வந்துள்ளனர். தொடர்ந்து ஐந்தாம் கட்டமாகவும் உதவுவதற்கு அவர்கள் திட்டமிட்டு வருகின்றனர். இவ்வேளையில் அவர்களை நான் தொடர்பு கொண்டு பேசிய பொழுது அவர்கள் சந்தித்த பார்வை மாற்றுத் திறனாளிகளின் கஷ்டங்களை என்னிடம் கூறினர்.

       “பாளையங்கோட்டை பார்வையற்றோர் பள்ளியில் படித்த நாங்கள் இன்று பல இடங்களில் பணிபுரிந்து வருகிறோம். இந்தப் பேரிடர் காலத்தில் எங்கள் பள்ளியில் படித்துத் தங்கள் வாழ்க்கையை நடத்த கஷ்டப்படுபவர்களைக் கண்டறிந்து எங்களால் இயன்ற சிறு தொகையினை அவர்களது வங்கிக் கணக்கில் வரவு  வைத்து வருகிறோம். அவ்வாறு பயன்பெற்ற எனது நண்பர்கள் கூறியதாவது: எங்களுக்குப் பொருள்கள் பல தன்னார்வலர்கள் மூலமும், பல எங்களைப் போன்ற பார்வையற்றவர்கள் நடத்திவரும் குழுக்கள் மூலமும் எங்களுக்குப் பொருளுதவிகள் நிறையவே கிடைத்திருக்கிறது. இருந்தாலும், எங்களின் அன்றாட தேவைகளான காய்கறிகள், குழந்தைகளுக்குப் பால் போன்றவை வாங்குவதில் சிக்கல் இருந்து வந்துள்ளது. கையில் காசு இல்லாத பொழுது நீங்கள் கொடுத்த இந்தப் பணம் எங்களுக்குப் பெரும் உதவியாக இருக்கிறது என்று கூறினார்கள்”.

உன்னைப்போல் ஒருவன் பிலைன்ட்கிராம் குழு:
       இங்கே பிலைன்ட்கிராம் (blind Gram) என்பது டெலிகிராம் (Telegram) செயலிக்கு மாற்றாகப் பார்வை மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்துவதற்கு தோதாக மாற்றி அமைக்கப்பட்ட செயலி தான் இது. இந்த உன்னைப்போல் ஒருவன் குழுவானது சாதாரனமாக தொடங்கப்பட்டது.  2015- ஆம் ஆண்டில் ஏற்பட்ட இயற்கை பேரிடரின் பொழுது பல்வேறு பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு இந்தக் குழுவைச் சேர்ந்தவர்கள் உதவி இருக்கிறார்கள். இந்தக் கொரோனா ஊரடங்கு காலத்திலும்  மற்ற பார்வையற்றவர்கள் உடைய வாட்ஸ்அப் குழு போலவே இவர்களும் உதவி வருகின்றார்கள். இதுவரை ஏறத்தாழ 80 பார்வையற்றோர் குடும்பங்களுக்கு உதவி உள்ளார்கள் இந்த உன்னைப்போல் ஒருவன் குழு. இந்தக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு. நாகராஜன் பேசியபொழுது,வாட்சாப்பில் ஆரம்பித்த இந்தக் குழு தற்பொழுது 350 நண்பர்களைக் கொண்டு டெலிகிராமில் இயங்கிவருகிறது.  இந்த ஊரடங்கு காலங்களில் நாங்கள் சிலபேருக்கு உதவி இருந்தாலும், தஞ்சாவூரைச் சேர்ந்த மாரியப்பன் என்பவருக்கு உதவியது நெகிழ்ச்சியானது. ஆம். மாரியப்பன் ஒரு பார்வை மாற்றுத்திறனாளி.  அவரது மனைவி, அவருடைய இரண்டு குழந்தைகள் மற்றும் அவருடைய மைத்துனன், மைத்துனரின் மனைவி, அவர்களுடைய இரண்டு குழந்தைகள் என அந்தக் குடும்பத்திலேயே 8 பேர் பார்வை மாற்றுத்திறனாளிகள். இவர்களுக்கு நாங்கள் கொடுக்கும் ஆயிரம் ரூபாய் எவ்விதத்திலும் போதாது என்பது எங்களுக்குத் தெரியும். இருந்தாலும் வேறு வழியில்லை. இரயிலில் வியாபாரம் செய்து, அதில் வருகின்ற வருமானத்தில் தான் அவர்கள் தங்களது குடும்பத்தை நடத்துகின்றார்கள். இம்மாதிரியான காலத்தில் எப்படி அவர்கள் வாழ்க்கையை ஓட்டுவார்கள் என்பதற்கு நம்மிடம் பதில் இல்லை” என்றார்.

பார்வையற்றோர் உரிமைக்கான அமைப்பு-கோவை:
       கோயம்புத்தூரில் செயல்பட்டு வரும் இந்த அமைப்பு அதனைச் சுற்றியுள்ள பார்வை மாற்றுத் திறனாளிகளது உரிமையை மீட்கவும், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் உருவாக்கப்பட்டுச் செயல்பட்டு வருகின்றது. இவ்வமைப்பின் தலைவர் திரு. மயில்சாமி அவர்களிடம் பேசியபொழுது, “இந்த ஊரடங்கு அறிவித்த பிறகு எங்களுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. பேசியவர் திருமதி. ஜெய ஶ்ரீ, அவர் பெரியநாயக்கம்பாளையம் என்ற பகுதியில் வாழ்ந்து வருவதாக கூறினார். மேலும், அவருக்குக் குழந்தை பிறந்து 10 நாட்கள் ஆன நிலையில் இந்த ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அவரது கணவர் இரயிலில் வியாபாரம் பார்த்து வருகிறார். இவர்களுக்கு ஏற்கனவே 2 குழந்தைகள் இருக்கின்றனர். இதற்கு இடையில் தாங்கள் சாப்பாட்டிற்கு கஷ்டப்படுவதாக எங்களிடம் கூறினார். இவர் தான் நாங்கள் இந்த நேரத்தில் சுயதொழில் செய்யும் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு உதவலாம் என்ற எண்ணத்தை எங்களுக்குள் விதைத்தார்” என்று தெரிவித்தார்.

       இதுவரை  இந்த 2 மாதத்தில் 60 பார்வையற்றவர்களுக்கு உதவி செய்துள்ளோம் எனக் கூறுகின்றார். ஒரே மாதமாக மொத்தமாக பணத்தைச் செலுத்தினால் செலவாகிவிடும் எனக் கருதி ஏப்ரல் மற்றும் மே மாதம் தனித் தனியாக வழங்கினோம் என்று கூறினார்.


வெளிப்படுத்த விரும்பாதவர்கள்

       இது தவிற நான் பல பார்வையற்றவர்களிடம் பேசி இருக்கிறேன். ஆனால், அவர்கள் என்னிடம் அவர்கள் செய்யும் உதவி வெளியே தெரிய வேண்டாம் எனக் கூறிவிட்டார்கள். நான் இக்கட்டுரையின் நோக்கம் குறித்து எடுத்துக் கூறியும் அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை.

       நான் இதுவரை தொடர்பு கொண்டு பேசிய பல அமைப்புகள் சமூக ஊடகங்களை அடிப்படையாக வைத்து உருவானவையே. பல மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் முகநூல், யூடியுப் போன்றவை நன்கொடை வருவதற்கும், அதனை பார்வைமாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கிடவும் உதவியதாகக் கூறலாம். இந்தக் காலத்தில் வதந்திகளின் ஊற்றாகக் கருதப்பட்ட  வாட்சாப், மாற்றுத் திறனாளிகளைப் பொறுத்தவரை சிறந்த தகவல் பரிமாற்ற தளமாக இருந்துள்ளது. இதனைப் பயன்படுத்திப் பல பள்ளிகளில் படித்த அதன் முன்னாள் மாணவர்கள் அமைப்புகளும், பல பார்வையற்றோர்கள் இனைந்து குழுவாகவும் உதவமுடிந்தது.

       என்னதான் பார்வையற்றவர்கள் ஒன்றிணைந்து தங்களைப் போன்றவர்களுக்கு உதவினாலும் நமது மாநில அரசு ஒரு இலவச எண்ணைத் தொடர்பு கொண்டு அடிப்படைத் தேவையைக் கேட்டுப் பெற்றுக்கொள்ளலாம் என அறிவித்தது. இருந்தாலும், இது இடத்திற்கு இடமும், வழங்கிய பொருட்களின் அளவும், எண்ணிக்கையும் மாறுபட்டது. இதோ இப்போது நாம் ஊரடங்கு 5.o என்ற நிலைமைக்கு வந்துவிட்டோம். தொடக்கத்தில் அவர்களுக்கு வழங்கப்பட்ட பொருட்கள் இன்னும் செலவாகாமலா இருக்கும்? இந்த ஊரடங்கு முடிந்ததும் சுயதொழில் செய்யும் பார்வையற்றோர்களின் நிலை என்ன? அவர்களிடம் யார் இனிமேல் நம்பி பொருட்களை வாங்கப் போகிறார்கள்? இனிமேல் இவர்கள் இரயிலில் வியாபாரம் செய்ய அனுமதிக்கப்படுவார்களா? என்று பலப்பல கேள்விகள் நம்மிடம் இருக்கின்றன.. உங்கள் முன்பு நான் வைத்துள்ள பார்வையற்றவர்களின் பிரச்சனைகள் அத்தனையும் உன்மை.

       இதுவரை மக்களைப் பொறுத்தவரைப் பார்வையற்றவர்கள் என்றால் கருனை, இரக்கத்திற்குரியவர்கள். அவர்கள் சாலையைக் கடக்கக்கூட கஷ்டப்படுவார்கள் என்பதைத் தாண்டி யோசிக்கவில்லை. நமது அரசாங்கமோ மாற்றுத்திறனாளிகளை மறந்துவிட்டு  ‘ஐயையோ மறந்துட்டோமே’ என்பது போல கடைசியாக தான் எங்களைப் பார்க்கிறார்கள். எனக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்தக் கட்டுரையை எழுதி இருக்கிறேன். இதில் கூறியுள்ள பார்வையற்ற அமைப்புகளைத் தவிற வேறு ஏதேனும் அமைப்புகள் நம்மவர்களுக்கு உதவியிருந்தால் நீங்கள் கீழ்க்கண்ட மின்னஞ்சல் முகவரியில் தொடர்புகொண்டு கூறலாம். ஆனால் இவ்வளவு தான் எங்களது பிரச்சனையா? என்று எண்ணிவிட வேண்டாம். இன்னும் அதிகம் இருக்கின்றன. கட்டுரையின் நீளம் கருதி அவற்றை இங்கே குறிப்பிடவில்லை.

((கட்டுரையாளர் திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் ஆய்வியல் நிறைஞர் (M.Phil) பட்டம் பெற்றவர்().

தொடர்புக்கு: m.bala10991@gmail.com

9 கருத்துகள்:

  1. மிக்க மகிழ்ச்சி. ஆனால் ஏறத்தாழ 120 பேருக்கு உதவி செய்தும். தற்போது மீஞ்சூரை அடுத்த உள்ள வெள்ளி வாயில் சாவடி என்னும் பகுதியில் ஒரு பார்வையற்ற குடும்பத்திற்கு சின்ன அளவிலான இருக்கும் வீடு கட்டித் தந்து கொண்டிருக்கும் தாய் கரங்கள் அறக்கட்டளையை பற்றியும் எழுதி இருக்கலாம். ஏனோ உங்கள் கவனத்திற்கு அது தெரியவில்லை போலும் ‌ சிறப்பு

    பதிலளிநீக்கு
  2. மிகச்சிறந்த களப்பணி செய்து தகவல்களை ஒன்று திரட்டி வழங்கியிருக்கிற இந்த பதிவு மிக முக்கியமான அவசரகால ஆவணம். உதவி செய்ததை மட்டுமின்றி நமது பார்வையற்ற சமுதாயம் படக்கூடிய இன்னலை இணைத்து சொன்னவிதம் கல எதார்த்தத்தை வெளிப்படுத்துவதாக இருக்கிறது. வலி நிறைந்த அனுபவங்களை பதிவு செய்திருக்கிற உங்களின் எழுத்துக்கு எனது சல்யூட். தொடரட்டும் உங்கள் எழுத்துப் பணி. வாழ்த்துக்கள் தோழரே!

    பதிலளிநீக்கு
  3. பார்வையற்றோருக்கு கல்வி தேவையா பார்வை உள்ளவர்கள் படித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கிறார்கள் பார்வையற்றோர் இதற்கு படிக்க வைக்கிறார்கள் இவர்கள் படித்து என்ன சாதிக்கப் போகிறார்கள் போன்ற கேள்விகள் நாம் பத்தாம் வகுப்பு பதினொன்றாம் வகுப்பு படிக்கும்போது என்னை நோக்கி சிலரால் ஏற்கப்பட்டது அப்போதே நான் என் கொள்கையை எல்லாம் மறந்து நாம் படிப்பது தேவையற்ற வேலை என்று மனதில் நினைத்துக்கொண்டேன் ஏனென்றால் பார்வை உள்ளவர்கள் பலர் வேலையில்லாமல் இருக்கிறார்கள் நமக்கு எங்கே வேலை தரப் போகிறார்கள் என்று நினைத்து விட்டேன் கல்லூரி ஆசிரியர் பயிற்சி கல்லூரி பட்டப்படிப்பு பட்டயப்படிப்பு இது எல்லாம் நமக்கு சாத்தியம் இல்லை என்று நினைத்து விட்டேன் பள்ளியை விட்டு வெளியே வந்த பிறகு தான் நமக்கு இருக்கின்ற வாய்ப்புகள் குறித்தும் இட ஒதுக்கீடு குறித்தும் அறிந்து கொண்டேன் அதன் பிறகு படித்து ஒரு வேலையில் சேர்ந்து விட்டேன் எப்படி நாம் படிக்கும்போது நம்மாலும் சாதிக்க முடியும் என்று நம்பிக்கை வைத்து பல நல்ல தொண்டு உள்ளங்கள் நமக்கு உதவி செய்தார்கள் நமக்கு படித்துக் காட்டுவது நமக்கு தேவையான போது பண உதவிகள் பொருள் உதவிகள் செய்வது இதுபோல தெய்வ குணம் படைத்த பலர் நமக்கு உதவியதால் என்று நாமே நம்மை போன்ற பலருக்கும் உதவும் சூழலும் வாய்ப்பும் நமக்கு கிடைத்திருக்கிறது இவ்வளவு பார்வை மாற்றுத்திறனாளிகள் பல குழுக்களாக ஒன்று சேர்ந்து உதவி செய்திருக்கிறார்கள் என்று படிக்கும் போது உண்மையிலேயே மனம் நெகிழ்கிறது தன்னம்பிக்கையும் அதிகமாக இருக்கிறது இப்போது நாம் பார்வை மாற்றுத்திறனாளியாக இருந்தாலும் நம்மாலும் பலருக்கு உதவ முடியும் என்ற ஒரு தன்னம்பிக்கை பிறக்கிறது எல்லா தகவல்களையும் ஒன்று திரட்டி அருமையாக வழங்கிய ஐயா அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள் நம்மால் முடிந்தவரை உதவுவோம் பிறரின் கண்ணீரைத் துடைக்கும் நமக்கு பிரதிபலன் பார்க்காமல் உதவி செய்தோம் இந்த தகவல்களை அறியும் போது நாம் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு உதவியது வீண்போகவில்லை என்று மனம் மகிழ்வார் கள் குறிப்பாக சென்னையில் கோடம்பாக்கம் பகுதியில் ஞாயிறுதோறும் படித்துக் காட்ட வரும் தன்னார்வலர்கள் உண்மையிலே மகிழ்வார்கள்

    பதிலளிநீக்கு
  4. மிகச்சிறந்த கலப்பணி. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  5. அருமையான தொகுப்பு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  6. Editing, வெளுச்சத்திற்கு வராத பல அமைப்புகளை வெளுச்சத்திற்குக் கொண்டுவந்த முயற்சிக்கு வாழ்த்துகளும், பாறாட்டுகளும். , Edit box, உங்கள் கருத்தை உள்ளிடுக...

    பதிலளிநீக்கு
  7. குமரிமுதல் சென்னைவரையிலான கழுகு பார்வை சிறப்பு.

    பதிலளிநீக்கு
  8. உதவிய அமைப்புகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ள விதமும், நம் பார்வை மாற்றுத்திறனாளிகள் படும் இன்னல்களை வார்த்தைகளில் படம் பிடித்துக் காட்டிய விதமும் அருமையாக இருந்தது ஐயா.
    நன்றி தங்களின் பதிவிற்கு.
    தொடர்க தங்களின் எழுத்துப் பணி.

    பதிலளிநீக்கு
  9. ஜெயராமன் தஞ்சாவூர்6 ஜூன், 2020 அன்று PM 6:03

    கடுமையான முயற்சி செய்து,
    களத்தில் இறங்கி ஆய்வினை செய்து,
    நம்மவர்களின் கஷ்டங்களைப் போக்க,
    நம்மவர்களே முன்வந்து உதவிய

    நல்ல உள்ளங்களைப் படம் பிடித்துக் காட்டி;
    அவர்களுக்கு நன்றி செலுத்தவும்,

    மேலும் உதவக்கூடிய மனப்பான்மையை தூண்டுவதற்கும்;
    துணை நிற்கக்கூடிய
    இந்த ஆவண கட்டுரையின் ஆசிரியர்

    அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்களைத்
    தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு