களத்திலிருந்து: நமக்கு நாமே. 2.0 - M. பாலகிருஷ்ணன்


graphic கீழே இருப்பவரை மேலே இருப்பவர்கள் கை கொடுத்து தூக்கிவிடுகின்றனர்

      சென்ற இதழில் வந்த நமக்கு நாமே கட்டுரைக்கு வாசகர்கள் வழங்கிய ஆதரவிற்கு நன்றி. இதோ அதன் அடுத்த பாகம்.

      இந்தக் கொரோனா இடர்பாட்டின்போது பார்வை உள்ள பலர் பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கு உதவியுள்ளார்கள். அவ்வாறு உதவிய பார்வையுள்ளவர்களின் அமைப்புகளைப் பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம். அதோடு முந்தய கட்டுரையில் விடுபட்ட சில பார்வையற்றவர்கள் நடத்தும் அமைப்புகளைப் பற்றியும் தெரிந்துகொள்ளலாம்.

அகில இந்திய பார்வையற்றோர் முற்போக்குச் சங்கம்:
      சென்னையில் இயங்கி வரும் இச்சங்கம் பார்வையற்றோருக்குத் தொழில் கல்வியை வழங்கி அவர்கள் வாழ்வில் தன்னம்பிக்கையோடு வாழ வழிச்செய்தது. மத்திய அரசு வழங்கும் தொழில் பயிற்சியைப் பார்வையற்றோர்களும் பெறவேண்டும் என்பதற்காக தொடங்கி நடத்தப்பட்டு வருகிறது இச்சங்கம். சென்னை, திருநெல்வேலி, கன்னியாகுமரி போன்ற இடங்களில் இப்பயிற்சி மையங்களைத் தொடங்கி நடத்தி வந்தார், அதன் தமிழகத் தலைவர் காலம் சென்ற திரு. அருனாசலம் அவர்கள். கட்டில், சேர் பின்னுதல் பயிற்சிகளைப் பார்வைமாற்றுத் திறனாளிகளுக்கு வழங்க வழிச்செய்தார். அதோடு பார்வையுள்ள மகளீருக்கும் தையல் பயிற்சி வழங்கியதாக அவருடன் பணியாற்றிய திரு. கனேசன் அவர்கள்  நம்மிடம் கூறினார். இந்தக் கொரோனா காலத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் போன்ற பகுதிகளுக்கு அவரே நேரடியாகச் சென்று மளிகை பொருட்களும், செலவிற்கு 200 ரூபாய் பணமும் வழங்கிருக்கிறார். இது தவிர திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட இதர மாவட்டங்களில் அவருக்குத் தெரிந்த நபர்களுக்கு 1000 ரூபாய் பணமாக அவர்கள் வங்கிக் கணக்கில் செலுத்தியுள்ளார். திரு அருனாசலம் அவர்கள் அனைவரிடமும் அன்பாக பழகக் கூடியவர். அன்பால் பார்வையற்றோர் மனதை வென்ற அவரைக் கொரோனா கூட்டிக்கொண்டது மிகப்பெரும் சோகம். அவருக்கு இதயப்பூர்வமாக அஞ்சலி செலுத்துவோம்.

மனசாட்சி அறக்கட்டளை
      சென்னையைத் தலைநகரமாக கொண்டு செயல் பட்டுவரும் இந்த அறக்கட்டளை அனைத்து விதமான மாற்றுத் திறனாளிகளின் நலனைக் கருத்தில் கொண்டு செயல்பட்டுவருகிறது. இந்த இடர்பாட்டின் போது இவர்கள் 77 நபர்களுக்கு உதவியுள்ளார்கள். இந்த அமைப்பு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளுக்கும் உதவிருக்கிறார்கள். வட சென்னை பகுதியில் கொரோனா புயல் மையம் கொண்டு இருக்கிறது. அதேபோன்று இங்கே தான் பார்வையற்ற மக்கள் அதிகம் வசித்து வருகின்றார்கள். இப்பகுதியில் வாழும் 2 குடும்பத்தினர் அரிசி கூட இல்லாமல் தவித்து வந்தார்கள். அதனை அறிந்து அவர்களுக்கு உதவினோம். இதற்கு தவழும் மாற்று திறனாளியான திரு. சரவணன் அவர்களது மோட்டார் வாகனத்தின் மூலம் உதவினார் என இந்த அறக்கட்டளையின் தலைவர் திரு. குமார் கூறினார்.  இது தான் நமக்கு நாமே என்பது.

அகல் அறகட்டளை
      சென்னையில் இயங்கிவரும் இந்த அறகட்டளை விழிச்சவால் உடைய மக்களுக்குப் பல உதவிகளைச் செய்துவருகின்றது. தேர்வு எழுத பதிலி எழுத்தர்கள், வாசிப்பாளர், மாணவர்களுக்குத் தேவையான உதவிகள், மேலும் பலவிதமான உதவிகளைப் புரிந்துவருகின்றார்கள். இவ்வமைப்புத் தொடங்கி 4 ஆண்டுகள் ஆயிற்று. உதவியாளர்கள் பலரின் துணை கொண்டு இதுவரை இந்த இடர்பாட்டின் போது கிட்டதட்ட 500 பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்குத் தேவையான மளிகை பொருட்கள் வழங்கியுள்ளனர். அகல் அமைப்பின் உரிமையாளர் திருமதி. அம்பிகா ராஜ் அவர்கள் கூறீயதாவது, பார்வையற்றவர்கள் எங்களிடம் எனக்கு உதவி பன்னுங்கள் எனக் கேட்டது இல்லை. மாறாக, நாங்கள் எப்பொழுது வேலை செய்ய தொடங்குவோம் என்று கேட்பார்கள். ஆக, இவ்வாறு தங்களுக்குத் தேவையானவற்றைச் சுயமாக உழைத்துப் பெற்றுகொண்ட இவர்களை இன்று பிறரிடம் கையேந்தும் அளவிற்கு கொரோனா கொண்டுவந்து விட்டுவிட்டதே என்பது எனக்கு கவலையாக இருக்கிறது எனக் கூறினார்.

சக்ஷம் தன்னார்வ தொண்டு நிருவனம்
      ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் மாற்றுத்திறனாளிகளுக்கான அமைப்பு இது. மாற்றுத்திறனாளிகள் நலச்சட்டம் 2016 வகைப்படுத்தியுள்ள 21 வகை மாற்றுத்திறனாளிகளையும் உள்ளடக்கிய அமைப்பு. இந்த அமைப்பு இந்தியா முழுவதும் அதன் பணிகளை அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும் செய்து வருகின்றது. கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு மக்களுக்குத் தேவையான அடிப்படைத் தேவைகளை அறிந்து அதனையும் நிறைவேற்றி வருகின்றது. தமிழகம் முழுவதும் ஏறத்தாழ 200 பார்வையற்ற மக்களுக்கு அவர்கள் உடல் தேவையான மருத்துவம் போன்ற தேவைகளுக்கு ரூபாய் 500 அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தியுள்ளார்கள். மேலும், அந்தந்த மாவட்டங்களின் தலைவர்கள் அங்கு உள்ள பார்வைமாற்றுத் திறனாளிகளுக்கு மளிகை பொருட்கள், குழந்தைகளுக்குப் பால், பிஸ்கேட் வாங்குவதற்கு 1000 ரூபாய் வழங்கியுள்ளார்கள். மேலும் கொரோனா காலத்தில் அனைத்து விதமான மாற்றுத் திறனாளிகளுக்கும் ஏறத்தாழ 1.5 கோடி ரூபாய் அளவிற்கு உதவிகளை வழங்கியுள்ளது. இது தவிர அவர்களுக்கான மருத்துவப் பொருட்கள், ரத்த தான முகாம்களை நடத்தி, அரசு மருத்துவமணைகளுக்கு வழங்கியுள்ளார்கள். இதில் ரத்தம் வழங்கியவர்களுல் மாற்றுத் திறனாளிகளும் அடங்குவர். நாங்கள் உதவி பெறுபவர்கள் மட்டும் கிடையாது கொடுப்பவர்களும் தான் என்பதைச் சத்தமில்லாமல் செய்துள்ளார்கள்.

      ஒரு பார்வைமாற்றுத் திறனாளி மகளீர் விடுதியில் இருந்து ஒரு விண்ணப்பம் எங்களுக்கு வந்தது. அதில் அவர்களுக்குத் தேவையான பொருட்களை வழங்க முடியுமா என்று கேட்டிருந்தார்கள். அதில் அவர்களுக்குத் தேவையான ஸ்டேஃபிரி முதல் ஃபேரவர் வரை இடம்பெற்றிருந்தது. அதில் நான் ஃபேரவர் கிரிம் அப்பெண்களுக்கு முக்கியம் தேவையா என்பதை நீண்ட யோசனைக்குப் பிறகு அதனை நீக்கிவிட்டேன். பிறகு யோசித்த போது தான் சாதாரண பெண்களும் இதனை வாங்குவார்களே அப்ப ஏன் நம்ம சமூதாயத்தைப் புறக்கணிக்கனும்? என்று எண்ணி அதனைப் பட்டியலில் சேர்த்து வழங்கினோம். என்று சக்ஷம் அமைப்பின் தேசிய இணைப் பொது செயலாலர் திரு கோவிந்தராஜ் தெரிவித்தார். திரு கோவிந்தராஜ் சாரிடம் பேசி முடித்தபோது தான் இரண்டு வாரமாக எனது மனதை உறுத்திக்கொண்டிருந்த விஷயம் மனதை விட்டு அகன்றது. இங்கே பார்வையற்றப் பெண்களுக்கு உணவு, உடை இருப்பிடத்திற்கே வழியில்லை என்ற போது ஸ்டேஃப்ரி போன்ற தேவைகள் எவ்வாறு கிடைக்கும்? பாராட்டுக்கள் சக்ஷம் அமைப்பினருக்கு.

தாய் கரங்கள் அறக்கட்டளை
      இந்த அறக்கட்டளை ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா மகளீர் கல்லூரியில் பணியாற்றி ஓய்வுபெற்ற பேராசிரியையான தாயாரம்மாள் அவர்களால் நடத்தப்பட்டு வருகிறது. தனது பார்வையையும், கேட்கும் திறனையும் இழந்த இவர் தனது பணி நிறைவு காலத்தில் வந்த பணப் பலன்களையும், ஓய்வூதியத் தொகையையும் இவ்வறக்கட்டளைக்கு வழங்கியிருக்கிறார்.
இவ்வமைப்புச்  சென்னையில் படிக்கும் மகளிருக்கு விடுதி வசதிகளைச் செய்துவருகின்றது. இந்த இடர்பாடு காலத்தில் பார்வைமாற்றுத் திறனாளிகளுக்கு 1.5 லட்சம் ரூபாய் அளவிற்கு உதவிகளை வழங்கியுள்ளனர். வட சென்னை பகுதியில் மீஞ்சூர் அருகில் வெல்லிவாயுல்சாவடி  என்ற ஊரில் வசித்து வரும் முருகன் அவரது துணைவியார், அவர்களது இரு குழந்தைகளும் பார்வைமாற்றுத் திறனாளிகள். இதனை அறிந்து அறகட்டளை மூலம் உதவச் சென்ற பொழுது அவரது வீடு மிகவும் உடைந்த நிலையில் இருந்திருக்கிறது. இவர்கள் சென்ற நேரத்தில் அவர்களது குக்கர் வெடித்தும் இருக்கிறது. வட சென்னை பகுதியை இயக்குநர் ரஞ்சித் படங்களில் பார்த்த நமக்கு உதவ சென்றவர்கள் சொன்னதைக் கேட்கும்போது படமும், நிஜ வாழ்க்கையும் ஒன்றாக தான் இருக்கின்றது என்பதை உணர முடிந்தது. அவர்களின் நிலையினை உணர்ந்த இவ்வமைப்பு அவர்களுக்கு 40,000 ரூபாய் மதிப்பில் வீடு ஒன்றைக் கட்டிக் கொடுத்துள்ளார்கள்.

தேசிய பார்வையற்றோர் இணையம்
[national federation for the blind-NFB]
      இவ்வமைப்பு கடந்த 48 ஆண்டுகளாக பார்வையற்றோர்களின் மறுவாழ்வைக் குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றது. ஊரடங்கின்போது தமிழகம் முழுவதும் 1000 பார்வையற்ற குடும்பங்களுக்கு மளிகை பொருட்களை வழங்கியுள்ளதாக அதன் தமிழ்நாட்டிற்கான தலைவர் திரு. மனோகர் அவர்கள் நம்மிடம் கூறினார்.

அணியம் அறக்கட்டளை
      தயார் என்ற  வட சொல்லிற்கு மாற்றாக தமிழில் அணியம் என்ற சொல்லால் பால்ப் புதுமையினர் இனைந்து இவ்வறக்கட்டளையை நடத்திவருகின்றார்கள். இந்த அறக்கட்டளையின் கீழ் இயங்கும் குழுக்களுக்கும் அவர்கள் வைத்துள்ள பெயர்களைக் கேட்டாலே தமிழ் தேன் காதில் பாயும். ”அக மகிழ்என்ற குழு ஏழை எளிய மக்களின் கல்வி குறித்து உதவிகளைச் செய்யும். ”எவ்விஎன்ற குழு ஒடுக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான அடிப்படைப் பொருளாதார வசதிகளைச் செய்யும். இந்த ஊரடங்கின்போது கிராமப் பகுதிகளில் சத்துணவை மட்டும் நம்பி வாழும் பள்ளி மாணவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு உணவு வழங்கி வந்து இருக்கின்றார்கள். மே மாதங்களில் அவர்களே சமைத்து மதுரையைச் சுற்றியுள்ள கிராம பகுதி மாணவர்களுக்கு வழங்கியுள்ளார்கள். அதே சமயம், மதுரையில் இயங்கி வரும் ஒரு பார்வையற்ற விடுதியில் சில பார்வையற்ற மாணவர்கள் தங்கியுள்ளார்கள். அவர்களுக்குத் தேவையான உணவு, காய்கறிகள், சுத்தத்திற்குத் தேவையான சோப்பு, எண்ணெய் போன்றவைகளை இந்த அறக்கட்டளை வழங்கியுள்ளது. இது தவிர, சில பார்வையற்ற குடும்பங்களுக்கும் பண உதவிகளைச் செய்துள்ளதாக அதன் நிறுவாகி திரு. அழகுஜெகன் கூறினார்.

      இந்த இரண்டு பகுதியிலும் பார்வையற்றவர்கள் பலர் குழுவாகவும், சங்கம் மூலமாகவும், அல்லது அவர்கள் சார்ந்த அமைப்புகள் மூலமாகவும் தங்கள் பார்வையற்ற நண்பர்கள், நண்பிகளுக்கு உதவி கரங்களைப் பார்வைமாற்றுத் திறனாளி  அல்லாதவர்கள் உதவியோடு நீட்டியுள்ளனர். கொரோனா தனது பரவலை விரைவு படுத்திய ஜூன் மாதத்தில் தமிழக அரசு மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை வைத்துருப்பவர்களுக்கு 1000 ரூபாய் வழங்குவதாக அறிவித்துள்ளதஎன்பது வரவேற்கத் தக்கதாக கருதுகிறேன். காரணம், இக்காலகட்டத்தில் தான் பார்வையற்றோர்களுக்கு உதவிகள் சற்றுக் குறைந்து காணப்படுகின்றது. ஆனால், இந்தத் தொகை எந்த அளவிற்கு கை குழந்தைகளை வைத்துருப்பவர்களுக்குப் போதுமான வகையில் பயன்படும் என்பது தெரியவில்லை. பணம் எனக்குப் போதும் என யாரும் கூறமாட்டார்கள் என்பது மனித உளவியல் ஆயிற்று. எனவே, இருப்பது எனக்குப் போதும் என நினைப்பவர்கள் இயலாதவர்களுக்குக் கொடுத்து உதவலாம் என்கிற எனது தாழ்மையான கருத்தை இக்கட்டுரையின் மூலம் உங்களிடம் சொல்ல விரும்புகிறேன்.

      இந்தப் பகுதியின் மூலம் பார்வையற்றவர்களின் வாழ்க்கையையும், அவர்களுக்காக இயங்கும் அமைப்புகள் குறித்தும் இயன்ற அளவிற்கு ஆவனப்படுத்தியுள்ளேன் என நம்புகிறேன்.

கட்டுரையாளர் திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் ஆய்வியல் நிறைஞர் (M.Phil) பட்டம் பெற்றவர்.
தொடர்புக்கு: m.bala10991@gmail.com

5 கருத்துகள்:

  1. பாலகிருஷ்ணன் அவர்களின் கட்டுரை அருமை. அறக்கட்டளைகளையும் அவர்களுடைய உதவிகளையும் ஆவணப்படுத்தி இருந்தது சிறப்பு. ஆனால் அறக்கட்டளைகளின் முகவரிகளை கட்டுரையில் குறிப்பிட்டு இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

    பதிலளிநீக்கு
  2. பாலகிருஷ்ணன் அவர்களின் கட்டுரை அருமை. அறக்கட்டளைகளையும் அவர்களுடைய உதவிகளையும் ஆவணப்படுத்தி இருந்தது சிறப்பு. ஆனால் அறக்கட்டளைகளின் முகவரிகளை கட்டுரையில் குறிப்பிட்டு இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

    பதிலளிநீக்கு
  3. பாலகிருஷ்ணன் அவர்களின் கட்டுரை அருமை. அறக்கட்டளைகளையும் அவர்களுடைய உதவிகளையும் ஆவணப்படுத்தி இருந்தது சிறப்பு. ஆனால் அறக்கட்டளைகளின் முகவரிகளை கட்டுரையில் குறிப்பிட்டு இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் விரல் மொழியர். திரு பாலகிருஷ்ணன் அவர்களின் கட்டுரை அருமை .அறக்கட்டளைகளின் பெயர்களை மட்டும் குறிப்பிட்டு இருக்கிறீர்கள் அதன் முகவரியையும் குறிப்பிட்டிருந்தால் மகிழ்ச்சியாகவும் விரிந்திருக்கும் அனைவருக்கும் பயனுள்ளதாக இருந்திருக்கும்.

    பதிலளிநீக்கு
  5. அல்லலுறும் பார்வையற்றவர்களுக்கு இயன்ற உதவிகளை நல்கும் அமைப்புகளை ஆவணப்படுத்தியுள்ள கட்டுரை அருமை.

    பதிலளிநீக்கு