தலையங்கம்: ஒற்றையடிப் பாதைகளை வழித்தடங்கள் ஆக்குவோம்.


graphic உணர்ந்ததைச் சொல்கிறோம் உலகிற்கு என்ற வாசகம் அடங்கிய விரல்மொழியரின் சின்னம்

      உங்கள் பேராதரவோடு விரல்மொழியர் 25-ஆவது இதழில் அடியெடுத்து வைக்கிறது. இப்பயணத்தில் எங்களோடு இணைந்திருக்கும் படைப்பாளிகளுக்கும், வாசகர்களுக்கும், உதவிய மற்ற அனைவருக்கும் இதழின் நன்றிகளும், வாழ்த்துகளும். எங்கள் வெற்றிப் பயணத்தில் தொடர்ந்து இணைந்து ஊக்கமளிப்பீர்கள் என நம்புகிறோம்.

            25-ஆம் இதழ் வெளிவருவதை ஒட்டி வாசகர்களை மகிழ்விக்க பல விரிவான ஏற்பாடுகளைச் செய்திருக்கிறோம். அவற்றில் பங்கெடுத்து உற்சாகமடைந்து, உற்சாகப்படுத்தி வரும் உங்கள் அனைவருக்கும் நன்றி.


படிக்கும் காலத்தில் பார்வை மாற்றுத்திறனாளிகள் பலருக்கும்.விளையாட்டு மீது அதீத ஈடுபாடு இருக்கிறது. கல்விப் பயணம் முடியும் போது அவர்கள் விளையாட்டை விட்டு விலகிச் சென்றுவிடுகின்றனர். படிக்கும்போது பள்ளி மற்றும் கல்லூரி வளாகங்களில் அவர்களுக்கு விளையாடக் கிடைத்த மைதானங்கள் போன்ற விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகள் கல்வியை முடித்த பிறகு கிட்டாதது அதற்கான முதன்மைக் காரணமாக இருந்தாலும், அதன் மறு கண்ணியையும் கவனப்படுத்துவது அவசியம்.

      நாம் எப்போதுமே விளையாட்டிற்கு இரண்டாவது இடத்தையே கொடுத்து வந்திருக்கிறோம். ஏனெனில் விளையாட்டு என்பது பொழுது போக்கிற்கான ஒன்று என நம் மனதில் புரையோடிப் போயிருக்கும் எண்ணமே அதற்குக் காரணம். விளையாட்டைத் தொழிலாக பார்க்கும் கண்ணோட்டமே நம்மவர்களிடம் இன்னும் வளரவில்லை. விளையாட்டு என்பதும் ஒரு பொருளீட்டும் தொழில்தான். ஒரு வீரர் சர்வதேச மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் வெல்வதன் மூலம் பொருளீட்டலாம் அல்லது விளம்பர ஒப்பந்தங்கள் மற்றும் அரசு வேலைவாய்ப்புப் போன்ற பொருளீட்டும் வாய்ப்புகளைப் பெறலாம். பார்வை உள்ளவர்களோடு ஒப்பிடும்போது இது போன்ற வாய்ப்புகள் நமக்கு மிகக் குறைவுதான் என்றாலும், முற்றிலும் இல்லாமல் இல்லை என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

      விளையாட்டில் சாதிக்க விரும்புபவர்கள் விளையாட்டை உங்கள் வாழ்வில் முதன்மையானதாக மாற்றுங்கள். விளையாட்டுக்கென்றே முழுநேரமும் பயிற்சி கொடுக்கும் அமைப்புகள் அண்டை மாநிலங்களில் இருக்கின்றன. அது போன்ற இடங்களைத் தேடிச் செல்லுங்கள். வெற்றிச் சான்றிதழ்களை அரசு அங்கீகாரம் பெற்றதாக மாற்றுவதற்கான வழிகளை அறிந்து கொள்ளுங்கள். அதுதான் அரசுப் பணிவாய்ப்பைப் பெற உதவும்.

      மிக முக்கியமாக நம் பகுதியில், குறைவான நபர்கள் மட்டுமே விளையாடும் விளையாட்டையோ அல்லது யாரும் விளையாடாத சர்வதேச விளையாட்டையோ தேர்ந்தெடுத்துப் பயிற்சி செய்யுங்கள்.அவ்விளையாட்டில் எளிதில் சாதிக்கமுடியும். அதனால் அவ்விளையாட்டின் முகமாக நீங்கள் அறியப்படுவீர்கள். உங்கள் பகுதியில் அவ்விளையாட்டை மேம்படுத்துவதற்கான வாய்ப்பு உங்கள் கைகளுக்கு வரலாம். அதன் மூலம் நீங்கள் ஒரு தொழில் வாய்ப்பைப் பெற இயலும்.

      கொரோனா, அதனைத் தொடர்ந்து  அதிகரித்துவரும் தனியார் மயமாக்கம் முதலியவை நமது பாரம்பரியத் தொழில் வாய்ப்புகளை அழித்துவருகின்றன. எனவே நாம் மாற்றுத் தொழில் வாய்ப்புகளான விளையாட்டுப் போன்றவற்றின் பக்கம் நம் கவனத்தைத் திருப்புவது காலத்தின் கட்டாயம்.

      பார்வை மாற்றுத்திறனாளி இளைஞர்களே விளையாட்டின் மீது உங்கள் கவனத்தைத் திருப்புங்கள். ஒற்றையடிப் பாதைகள்தான் பின்னாளில் பெரும் வழித்தடங்களாகும்.

      எப்போதும் சமூக அக்கறையுடனான புதுமையைச் செயல்படுத்தத் துடித்துக் கொண்டிருக்கும் விரல்மொழியர் தனது 25-ஆம் இதழை விளையாட்டுச் சிறப்பிதழாக வழங்கியிருக்கிறது. படித்துப் பயன் பெறுவீர்.


3 கருத்துகள்:

  1. இருபத்தைந்தாவது இதழை விளையாட்டு சிறப்பிதழாக வெளியிட முனைந்த முயற்சிக்கு பாராட்டுக்கள் .

    பதிலளிநீக்கு
  2. விளையாட்டு மூலம் பொருள் ஈட்ட முடியும் என்ற கருத்தினை எடுத்து உரைத்தமைக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  3. பார்வையற்ற மக்கள் விளையாட்டையும் விளையாட்டாய் கருதி விடக்கூடாது எண்ணும் கருத்தை தாங்கி இருக்கும் தலையங்கத்திற்கு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு