நம்பிக்கையென்னும் ஒற்றை குத்தால் தடைகளைத்
தகர்த்தவர். சர்வதேச
போட்டிகளில் பாரா ஜூடோவில் பல பதக்கங்களை வென்றவர். தற்போது பாரா
ஒலிம்பிக் போட்டிக்குத் தயாராகிக் கொண்டிருக்கும் பார்வை மாற்றுத்திறனாளி ஜூடோ
வீரர் மனோகரன் அவர்களை விரல்மொழியர் மின்னிதழுக்காக பேட்டி காணுகின்றனர்
வெங்கலமூர்த்தி மற்றும் பொன். சக்திவேல்.
பொன்.சக்திவேல்: வாசகர்களுக்கு
உங்களைப் பற்றிய சிறு அறிமுகத்தைத் தாருங்கள்.
மனோகரன்: எனது பெயர்
மனோகரன். திருவள்ளூர்
மாவட்டத்தில் உள்ள சோழவரத்தில் 1988-ஆம் ஆண்டு
பிறந்தேன். என் குடும்பம்
விவசாய பின்னணியைக் கொண்டது என் கூடப் பிறந்தவர்கள் இரண்டு தம்பி மற்றும் ஒரு
தங்கை. சோழவரம் அரசு
உயர்நிலைப்பள்ளியில் 10-ஆம் வகுப்பு வரை படித்தேன்.
வெங்கலமூர்த்தி: பார்வையுள்ளோருக்கான
பள்ளியில்தான் படித்தீர்களா? உங்களுக்குப் பார்வைகுறைபாடு எப்போது ஏற்பட்டது?
ம: ஆம். எனக்கு
பிறவியிலிருந்தே பார்வைகுறைபாடு இருந்தது. ஆனால், நானும் எனது
பெற்றோரும் அதைப்பற்றி பெரிதாக உணரவில்லை. தொடக்கத்தில் எனக்கு
வாசிக்கும் அளவிற்கு பார்வை தெரிந்தது.பிறகு கரும்பலகையில்
எழுதுவது தெரியாமல் போகவே, கரும்பலகையில் எழுதுவதை நண்பர்கள் நோட்டில்
எழுதுவார்கள், அதைப்பார்த்து எழுதிக்கொள்வேன். எட்டாம் வகுப்புப்
படிக்கும் போதுதான், நிர்மலா டீச்சர் எனக்குப் பார்வை குறைபாடு
இருக்கிறது என்பதைக் கண்டுபிடித்தார். அவர்தான் என் பெற்றோரிடம்
சொன்னார். கீழே ஒரு பொருள்
கிடந்தால் நீண்ட நேரம் தேடிக்கொண்டே இருப்பான். விளையாட்டாகத்தான்
அப்படிச் செய்கிறான் என்று நினைத்தோம் டீச்சர் என்றனர் என் பெற்றோர். அதன்பிறகுதான் என்னை
சங்கர் நேத்ரோதயாவிற்கு அழைத்துச்சென்றனர். இது மரபணு
பிரச்சனை என்பதால் பார்வை குறைபாட்டைச் சரி செய்ய
இயலாது என மருத்துவர்கள் கூறினர். எங்கள் நண்பர் குழுவில் நான் மட்டும்தான்
ஒன்பதாம்
வகுப்பிலிருந்து
பத்தாம் வகுப்பிற்கு பாஸாகிச் சென்றேன். என்னைப்
புரிந்துகொண்ட நண்பர்கள் அருகில் இல்லாததாலும்,
புதியவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் என்னைப் பற்றிய புரிதல்
இல்லாததாலும் பத்தாம் வகுப்பை முடிக்கவே சிரமப்பட்டேன். அதனால் பத்தாம்
வகுப்பிற்கு மேல் படிப்பைத் தொடரவில்லை.
ம: சொல்லவில்லை. 20 ஆண்டுகளுக்கு
முன்பு சங்கர் நேத்ரோதயா சிறிய மருத்துவமனைதான். எனவே
அவர்களுக்கும் சிறப்புப் பள்ளிகள் பற்றித் தெரியாமல் இருந்திருக்கலாம். 2012-ஆம் ஆண்டு தான்
சிறப்புப் பள்ளிகள் குறித்து எனக்குத் தெரியவந்தது.
ச: ஜூடோ
விளையாட்டின் மீது உங்களுக்கு எப்படி ஆர்வம் வந்தது?
ம: பத்தாம் வகுப்பு
முடித்துவிட்டு பிளாஸ்டிக் மறுசுழற்சி செய்யும் நிறுவனத்தில் மூட்டை தூக்கும்
வேலைக்குச் சென்றேன். 8 ஆண்டுகள் அங்கு வேலை பார்த்தேன். 2004-ஆம்
ஆண்டு எங்கள் ஊரில் கராத்தே வகுப்புகள் நடக்கத் தொடங்கின. அதில்
கலந்துகொண்டு கராத்தே கற்று, 2009-இல் பிளாக்பெல்ட் முடித்தேன்.
வெ: பார்வையுள்ளவர்களோடு
எப்படிக் கராத்தே கற்றீர்கள்? உங்களுக்கென மாஸ்டர் தனிக்கவனம் செலுத்திக்
கற்பித்தாரா?
ம: பார்வை குறைபாடு
உடையவன் என்று சொன்னால் சேர்த்துக்கொள்ள மாட்டார்களோ என்ற அச்சத்தால், எனக்குப் பார்வை
குறைபாடு உள்ளது என்பதைச் சொல்லவில்லை. என்னால் உருவ
அசைவுகளை ஓரளவு கவனிக்க முடியுமென்பதால், அதைக் கவனித்துக்
கராத்தேவை கற்கத் தொடங்கினேன். கராத்தேவில் கடாஸ் எனப்படும் கற்பனை தாக்குதல், நேரடியாக எதிராளியோடு
மோதுதல் என இரு படிநிலைகள் இருக்கின்றன. அவற்றிற்கான மூமண்ட்
எனப்படும் செய்கைகளைக் கற்கும்போது சிக்கலை எதிர்கொண்டேன். அதனால் என்
பார்வை குறைபாட்டை மாஸ்டரிடம் சொன்னேன். உடனே அவர்
திருத்தங்களை எனக்கு நேரடியாகச் சொல்லிக்கொடுத்தார். எங்களோடு
கராத்தே வகுப்புக்குப் பயிற்சி செய்ய வந்த சித்தா டாக்டர், என்னைப்
பார்த்துவிட்டு, பார்வையுள்ளவர்களோடே நீ சிறப்பாக
சண்டையிடுகிறாய். பார்வைமாற்றுத் திறனாளிகளுக்கென
தனியே ஜூடோ இருக்கிறது. அதில் கலந்துகொண்டால் நீ நிச்சயம் சாதிப்பாய்
என்று கூறி, பிளைன்ட் ஜூடோவை
எனக்கு அறிமுகப்படுத்தினார். அப்போது தமிழகத்தில் பார்வையற்றோருக்கான ஜூடோ
பெரிய அளவில் பிரபலமாகவில்லை. 2010-இல் தான் தமிழகத்தில் பாரா ஜூடோ
அசோசியேசன் தொடங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன 2011-ஆம் ஆண்டுதான் பார்வையற்றோருக்கான ஜூடோ போட்டிகள் நடைபெறத் தொடங்கின. தமிழகத்தில் பாரா
ஜூடோவில் சேர்ந்த முதல் நபர் நான்தான்.
வெ: இந்த அமைப்பில் பார்வை
மாற்றுத்திறனாளி யாரேனும் பொறுப்பிலிருக்கின்றனரா?
ம:
அந்நிறுவனத்தில் சேர்ந்த முதல் நபர் என்பதால் என்னைச் செயற்குழு உறுப்பினராகச்
சேர்த்திருக்கின்றனர். இந்த விஷயம் கூட அண்மையில்தான் எனக்குத் தெரியும். முக்கியப் பொறுப்பில்
பார்வை மாற்றுத்திறனாளி யாருமில்லை.
ச: தொடக்க
காலத்தில் எத்தனைப் பார்வை மாற்றுத் திறனாளிகள் பங்கேற்றனர்?
ம: 2012-இல் தேசிய அளவில் நடைபெற்ற போட்டியில் 30 பேர் தமிழகம்
சார்பாக கலந்துகொண்டோம். கலந்துகொண்ட முதல் போட்டியிலேயே தேசிய அளவில் 2-ஆம்
இடம்பிடித்தோம்.
ச: இங்கே பார்வை
மாற்றுத்திறனாளிகளுக்கென தனியே பயிற்சிகள் தரப்படுகின்றனவா?
ம: தொடக்கத்தில்
பார்வையற்றோருக்கும், செவித்திறன் குறையுடையோருக்கும் ஒன்றாக
பயிற்சிகள் தரப்பட்டன. 2012-ஆம் ஆண்டிலெல்லாம், பார்வையற்றோர்
மற்றும் செவித்திறன் குறையுடையோருக்கான ஜூடோ என்று குறிப்பிட்டுதான் போட்டிகள்
நடைபெற்றன. அதன் பிறகுதான்
பாரா ஜூடோ போட்டிகள் என அது மாற்றம் கண்டது. அசோசியேசனில்
பார்வை மாற்றுத்திறனாளி
போட்டியாளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததும், பார்வையற்றோருக்கென
தனிப் பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
வெ: தொடக்க
காலத்தில் பாரா ஜூடோவில் எந்த மாநிலம் ஆதிக்கம் செலுத்தியது?
ம: தமிழகம் மற்றும்
உத்திரப்பிரதேசம். நாம் முதலிடம் பிடித்தால் உத்திரப்பிரதேசம்
2-ஆம் இடம் பிடிக்கும். அவர்கள்
முதலிடம் பிடித்தால் தமிழகம் 2-ஆம் இடம் பிடிக்கும். இப்படித் தொடக்க காலத்தில்
தமிழகம் மிகச் சிறந்து விளங்கியது. ஆனால் தமிழக அணியின் இன்றைய நிலை வருத்தத்துக்குறியதாக
இருக்கிறது. அடுத்தநிலையில் மகாராஷ்டிரா, டெல்லி, ஹரியானா போன்றவை
ஆதிக்கம் செலுத்தின.
ச: சென்னையில் பாரா
ஜூடோவில் இத்தனைச் சாதனைகள் நிகழ்ந்திருக்கின்றன. ஆனால்
இதைப்பற்றி தென் தமிழகம் உள்ளிட்ட பகுதிகளுக்கு எதுவுமே தெரியவில்லையே?
ம: நீங்கள் சொல்வது
உண்மைதான். 2017-இல் மணிகண்டன்
என்பவர் மதுரையில் ஒரு அணியைத் தயார் செய்தார். பிறகு அதன் நிலை
என்னவென்று தெரியவில்லை. தற்போது விஸ்வநாதன் என்பவர் மதுரை அணிக்குப்
பயிற்சியளிக்கிறார் என்றும் கேள்விப்படுகிறேன்.
வெ: ஜூடோவில் நீங்கள்
பெற்ற பதக்கங்கள் பற்றி சொல்லலாமே?
ம: 2019-இல்
லண்டனில் நடந்த பொதுநலவாய போட்டியில் தங்கப் பதக்கத்தையும், தென்னாப்பிரிக்காவில்
நடந்த பொதுநலவாயப் போட்டியில் வெண்கலப் பதக்கத்தையும், தென்கொரியாவில்
நடந்த உலக பாரா ஜூடோ போட்டியில் வெண்கலப் பதக்கத்தையும் வென்றிருக்கிறேன். தேசிய அளவில் 6
தங்கப் பதக்கங்களைப் பெற்றிருக்கிறேன். தற்போது பாரா
ஒலிம்பிக் தகுதிகான் போட்டிக்குத் தேர்வாகியிருக்கிறேன்.
வெ: போட்டிகளுக்குச்
செல்வதற்கான பயணச் செலவைப் பாரா ஜூடோ அமைப்பே ஏற்றுக்கொள்கிறதா?
ம: இல்லை. பயணச்செலவுதான்
பெரும் பிரச்சனையாக இருக்கிறது. தேசிய அளவிலான போட்டிக்கே எங்களது சொந்த
செலவில்தான் செல்கிறோம்.
ச: அப்படியென்றால்
பாரா ஜூடோ அசோசியேசனின் பணிதான் என்ன?
ம: வீரர்களுக்குப் பயிற்சியளிப்பார்கள். போட்டிக்கான
தகவல்களைத் தருவார்கள். இப்போது பயிற்சியளிப்பதிலும் தொய்வு
ஏற்பட்டுவிட்டது. போட்டிக்கான தகவல்களையும் தாமதமாகத்தான்
தருகின்றனர். சர்வதேச போட்டிகளுக்குச் செல்ல பெருந்தொகை
திரட்ட வேண்டும். போட்டிக்கான தகவலைத் தாமதமாகத் தருவதால், பணம்
திரட்டுவதில் பெரும் சிரமத்தை எதிர்கொள்கிறோம். பாரா ஒலிம்பிக்
தகுதிகாண் போட்டி லண்டனில் நடைபெற இருந்தது, அதற்குச் செல்ல
பணமில்லாமல் உதவிக் கேட்ட செய்தியைத் தொலைக்காட்சிகளிலும், செய்தித்தாகளிலும்
பார்த்திருப்பீர்கள். எனவே போட்டிக்கான செலவை முழுமையாகவோ அல்லது
பகுதி அளவாகவோ தமிழக பாரா ஜூடோ அமைப்பு ஏற்க வேண்டும் அல்லது போட்டிக் குறித்த
தகவலை முன்கூட்டியே சொன்னால் பணம் திரட்ட வசதியாக இருக்கும்.
வெ: பயணத்திற்கான
செலவை நீங்கள் எவ்வாறு ஏற்பாடு செய்கிறீர்கள்?
ம: தன்னார்வ தொண்டு
நிறுவனங்களின் உதவியால்தான் சர்வதேச போட்டிகளுக்குச் சென்றுவருகிறேன். 2 பொதுநலவாய
போட்டிகளுக்குச் செல்ல ‘லிட் த லைட்’
அமைப்பு உதவியது. அபுதாவியில் பணியாற்றும் குமார் என்ற நண்பரும் போட்டிகளுக்குச் செல்வதற்கான
தொகைகளைத் திரட்டி உதவியிருக்கிறார். என்னைப் பற்றிய கட்டுரைகள் ஏதேனும்
புத்தகத்தில் வந்தால் அதைப் பார்த்துவிட்டும் எனக்குச் சிலர் உதவியிருக்கின்றனர்.
ச: சர்வதேச
போட்டிகளுக்குச் செல்ல இந்திய அரசு உதவாதா?
ம: இந்திய அரசு பாரா ஆசிய போட்டிகளுக்கும்
பாரா ஒலிம்பிக் போட்டிகளுக்குமே அரசு தனது சொந்த செலவில் அழைத்துச் செல்லும். பிற சர்வதேச
போட்டிகளுக்குச் செல்வதற்கான செலவை நாம்தான் ஏற்பாடு செய்யவேண்டும்.
ச: பல சாதனைகளைச்
செய்திருக்கிறீர்கள் ஆனால் உங்களைப் பற்றிய செய்திகளைத் தமிழ்
செய்தித்தாள்களில் பார்த்ததில்லையே?
ம: உண்மையில் இவை
எல்லாம் சாதனையாகத் தெரியவில்லையோ என்னமோ! சச்சின்
டெண்டுல்கர் வீட்டில் ஒரு நாய் காணாமல் போனால் அதைச் செய்தியாக
பிரசுரிக்கின்றனர். நாம் எத்தனை சாதனைகள் செய்தாலுங்கூட நம்மைப்
பற்றிய செய்திகள் இங்கே பெரிதாக செய்தித்தாள்களில் வெளிவருவதில்லை.
ச: பத்தாம்
வகுப்பிற்கு மேல் படிப்பைத் தொடர ஆர்வம் இருக்கிறதா?
ம: படிக்கும்
ஆர்வம் இருக்கிறது. படிப்பதற்காக எப்படி விண்ணப்பிப்பது போன்ற
நடைமுறைகள் எனக்குத் தெரியாது. அதனால் யாரேனும் உதவினால் படிப்பைத் தொடர
ஆர்வமாக இருக்கிறேன். என்னைப் பற்றிக் கேட்டுவிட்டு பலரும் படிக்க
உதவுவதாகச் சொல்லித் தொலைபேசி எண்களைப் பரிமாற்றிக்கொள்வர். அதன்பிறகு நான்
தொடர்புகொண்டாலும் தொலைபேசியை எடுக்கமாட்டார்கள். தற்போது
தமிழ்நாடு விளையாட்டுச் சங்கம் நான் படிப்பைத் தொடர்வதற்கான ஏற்பாடுகளைச்
செய்துவருகின்றனர்.
வெ: தற்போது ஏதேனும்
வேலை பார்க்கிறீர்களா?
ம: இல்லை. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு
ஜூடோ பயிற்சியளித்து வருகிறேன்.
வெ: பார்வையுள்ள
மாணவர்களுக்குப் பயிற்சியளிப்பதைப் பற்றி வாசகர்களுக்குக் கூறுங்கள்?
ம: என்னிடம் 25
மாணவர்கள் ஜூடோ பயிற்சி பெற்றுவருகின்றனர். ஜூடோ அதிகச்
செலவைக்கோரும் விளையாட்டு. மாணவர்களுக்குப் பயிற்சியளிப்பதற்குக்கூட போதிய
உபகரணங்களை வாங்க இயலாமல் மனலில்தான் பயிற்சியளித்து வருகிறேன். அதனால்
மாணவர்களுக்குக் காயங்கள் ஏற்படுவதுண்டு. இருந்தபோதும், என்னிடம் படித்த பல மாணவர்கள் மாநில அளவில் தங்கப் பதக்கங்களைப் பெற்றிருக்கின்றனர். தேசிய அளவிலும் பிரகாசித்து வருகின்றனர். எனது
குறைப்பார்வை பார்வையுள்ள மாணவர்களுக்குப் பயிற்சியளிக்க உதவுகிறது. ஜூடோவில்
தேசிய அளவில் சாதித்தால், 15 நாட்களுக்குள் அரசு
வேலையில் சேர்ந்து விடலாம். ஆனால் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு அத்தகைய
வாய்ப்புகள் ஏதும் இல்லை.
ம: அதற்கான
முயற்சியை இப்போதுதான் எடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள். form-1 என்பது சர்வதேச போட்டிகளில் வென்றதற்கும், form-2 என்பது தேசிய போட்டிகளில் வென்றதற்கும்
கொடுக்கப்படும் சான்றிதழ்களின் உண்மை தன்மைக்காக அரசு தரும் ஆவணம். ஏனெனில்
சான்றிதழ்களை யார் வேண்டுமானாலும் அச்சிட்டு வழங்கலாம். எனவேதான் வெற்றி சான்றிதழ்களை விட form-1 form-2 போன்றவையே அரசு
வேலைவாய்ப்பைப் பெறுவதற்கு உதவுகின்றன. இங்கே பார்வை
மாற்றுத்திறனாளி வீரர்களுக்கும், பார்வை மாற்றுத் திறனாளிகளுக்காக
இயங்கும் விளையாட்டு சங்கங்களுக்கும் இது பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லை.
ச: பார்வையுள்ள
மாணவர்களுக்குப் பயிற்றுவிக்க வேண்டும் என்ற எண்ணம் எவ்வாறு
தோன்றியது?
ம: எனக்குத்
தெரிந்ததை நாலு பேருக்குக் கற்றுக்கொடுக்க வேண்டுமென்ற ஆர்வத்தில்தான் மாணவர்களுக்குப்
பயிற்றுவிக்கத் தொடங்கினேன். கராத்தேயை முழுமையாக கற்றுக்கொண்டதுமே 2007-லிருந்து
மாணவர்களுக்குப் பயிற்றுவித்து வருகிறேன்.
ச: மாணவர்களுக்குப்
பயிற்றுவிக்கத் தொடங்கும்போது கிராமத்தில் எத்தகைய வரவேற்பு இருந்தது?
ம: பார்வை தெரியாத
இவனுக்கு ஏன் வேண்டாத வேலை என்றார்கள். கா... கூ... என மாணவர்கள் வீணே கத்திக் கொண்டிருக்கிறார்கள்
என்றார்கள். இதுபோன்ற அவமானங்கள் நமக்கு இயல்பானதுதானே. அதனால் அதைப்
பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. மாணவர்களுக்குப் பயிற்றுவிக்க இடமில்லாததால்
கோவில் முன்பாக கற்றுக் கொடுத்தேன். அதற்கு கிராமத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். கோவில் முன்பு
கலைகளைக் கற்றுக் கொடுப்பதில் தவறில்லையே என்றெல்லாம் சொல்லிப்பார்த்தேன். கிராமத்தினரோ இந்தப்
பிரச்சனையை இந்து அறநிலையத்துறை வரை கொண்டுசென்றுவிட்டனர். அதிலிருந்து தனியே ஒரு வாடகை இடத்தில் மாணவர்களுக்குப் பயிற்றுவித்து வருகிறேன். சிவகுமார் என்ற
கராத்தே மாஸ்டர் தான் இடத்திற்கான வாடகையை மாதம்தோறும் செலுத்திவருகிறார். மேலே
குறிப்பிட்டது போல இன்னும் பல இடையூறுகளைச் செய்தனர். இத்தகைய
இடையூறுகள் நான் சர்வதேச அளவில் சாதித்த பிறகே நின்றது. அதன் பிறகே
கிராமத்தினர் ஜூடோவின் முக்கியத்துவத்தை உணர்ந்தனர்.
ச: ஜூடோவில் முழுப்பார்வையற்றவருக்கும், குறை
பார்வையுடையவர்களுக்கும் தனித்தனியே போட்டிகள் நடைபெறுமா?
ம: அனைவருக்கும்
ஒன்றாகத்தான் போட்டி நடைபெறும். அனைத்து அசைவுகளையும் கைகளின் வாயிலாக உணர
முடியும் என்பதால் தனித்தனிப் போட்டிகள் தேவையில்லை என்று சர்வதேச பாரா ஜூடோ
அமைப்புக் கூறிவிட்டது. இருப்பினும் இப்போட்டிக் குறை பார்வை
உடையவருக்குச் சாதகமாகவே இருக்கின்றது. அசைவுகளை முழுப்பார்வையற்றவர்
கைகளின் வழியாக உணர்வதற்கு முன்னமே குறைபார்வையுடையவர் சைகைகளைப் பார்த்து, அதற்கேற்றார்போல்
ஆட்ட உத்திகளை மாற்ற அவகாசம் கிடைக்கிறது. இச்சிக்கலைச்
சர்வதேச பாரா ஜூடோ அமைப்பின் கவனத்திற்குக் கொண்டு சென்றிருக்கின்றனர். எதிர்காலத்தில்
இருபிரிவுகளுக்கும் தனித்தனிப் போட்டிகள் நடக்க வாய்ப்பிருக்கிறது.
வெ: சர்வதேச அளவில்
சாதித்திருக்கிறீர்கள்! அரசு வேலைக்கு முயற்சித்திருக்கிறீர்களா?
ம: எனக்கு அதற்கான
வழிமுறை எதுவும் தெரியவில்லை. தமிழ்நாடு பாரா ஜூடோ அசோசியேசனிடம் கேட்டால்
உங்களுக்குக் கல்வித்தகுதி போதாது அதனால் வேலைக்கு முயற்சிக்க இயலாது என்ற
பதில்தான் வருகிறது.
வெ: ஜூடோ எவ்வாறு நடக்கும்? அதில் வெற்றி
எவ்வாறு தீர்மானிக்கப்படும் என்பது குறித்து வாசகர்களுக்குக் கூறலாமே?
ம: போட்டிக்கான
நேரம் 5 நிமிடங்கள். சண்டை போடுபவர் 2 நொடியில்
வெற்றி பெற்றாலும் ஆட்டம் முடிவுக்கு வந்துவிடும். கொடுக்கப்பட்ட 5 நிமிடங்களில்
போட்டியாளர் இருவரும் புள்ளிகள் எதுவும் எடுக்காமலிருந்து, அதேபோல தவறான
சைகைகள்மூலம் மைனஸ் புள்ளிகளைப் பெறாமலிருந்தால், வெற்றி
பெரும்வரை போட்டிக்கான நேரம் நீண்டுகொண்டே செல்லும்.
வெ: உங்களது
லட்சியம் என்ன?
ம: இரு லட்சியங்கள்
உண்டு. வரவிருக்கும்
பாரா ஒளிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்வது. அடுத்ததாக
பார்வை மாற்றுத்திறனாளிகளுக்குப் பயிற்றுவித்து ஜூடோவில் பாரா ஒலிம்பிக்கில் பதக்கம்
வெல்ல வைப்பது.
ச: வீட்டில்
உங்களுக்கான ஆதரவு எப்படி இருக்கிறது?
ம: எல்லா
பெற்றோரையும் போலத்தான் அடிப்பட்டுவிடுமோ என்ற அச்சத்தால் விளையாட எதிர்ப்புத்
தெரிவித்தனர். ஊரூராய் போய் அடிவாங்கிட்டு வரப்போறியா
என்றெல்லாம் என் தம்பி கேலி செய்வான். நான் சர்வதேச
அளவில் சாதித்த பிறகு, என் அண்ணனைப் போல யாருமில்லை எனப் பெருமையாகச்
சொல்கிறான்.
ச: தமிழக பாரா ஜூடோ
அமைப்பிலிருந்து உங்களிடம் தமிழகத்தில் பார்வையற்றோருக்கான
ஜூடோவை மேம்படுத்துவது தொடர்பாக ஏதேனும் ஆலோசனை கேட்டிருக்கிறார்களா?
ம: அசோசியேசன் தொடங்கி 8
ஆண்டுகளாகிவிட்டது. ஆனால் அதில் இதுபோன்ற விவாதங்கள் பெரிதாக நடைபெறவில்லை. தேசிய அளவில்
நடைபெற்ற போட்டியில் என் மாணவன் சிறப்பாக விளையாடியதைப் பார்த்து, உன் மாஸ்டர்
யாரெனக்கேட்டு, அவனிடமிருந்து என் எண்ணை வாங்கி, தமிழக ஜூடோ அசோசியேசன்
செயளர் என்னிடம் பேசுகிறார். உங்கள் பகுதியில் ஜூடோவை மேம்படுத்த என்னென்ன
தேவை என என்னிடம் ஆலோசனை கேட்கிறார். ஆனால் பாரா ஜூடோ அசோசியேசன் பார்வையற்றோருக்கான
ஜூடோவை மேம்படுத்த கவனம் செலுத்துவதில்லை.
வெ: உங்களது
திருமணம் பற்றி சொல்லுங்கள்?
ம: அது ஒரு
விபத்துபோல நடைபெற்றுவிட்டது. ஒரு வயதில் எனக்கு மகள் இருக்கிறாள். மனைவியாரும் எனக்கு
உறுதுணையாக இருக்கிறார்.
ச: பார்வையற்றோரோடு
தொடர்பில் இருக்கிறீர்களா?
ம: பெரிய அளவில் இல்லை. 2012-க்குப் பிறகுதான் பார்வை மாற்றுத்திறனாளிகளோடு பழகும் வாய்ப்புக்கிடைத்தது. அப்போதுதான்
சிறப்புப் பள்ளிகள் குறித்துத் தெரிந்துகொண்டேன். ஜூடோ
போட்டிகளுக்குச் செல்வதற்காகத்தான் மாற்றுத்திறனாளி அடையாள அட்டை வாங்கினேன்.
ம: எனது சாதனைகள்
அரசின் கவனத்திற்குச் சென்றதா என்றே தெரியவில்லை. அதனால் அரசு
சார்பாக எனக்குக் கௌரவங்கள் ஏதும் கிடைக்கவில்லை. தன்னார்வ தொண்டு நிறுவனங்களான ‘லிட் த லைட்’, ‘கோல்டன்
ரோசஸ்’, ‘அரிமா சங்கம்’
போன்றோர் என்னைக் கௌரவித்திருக்கிறார்கள்.
ச: இளைய
தலைமுறையினருக்கு நீங்கள் கூற விரும்புவது?
ம: தன்னம்பிக்கையையும்
விடா முயற்சியையும் ஒருபோதும் கைவிடாதீர்கள். வெல்ல
வேண்டுமென்றால், உடம்பில் ரத்தம் ஓடுவதுபோல எப்போதும் உங்கள்
எண்ணத்தில் உங்களது லட்சியம் ஓடிக்கொண்டிருக்க வேண்டும்.
ச: பாரா ஜூடோ தொடர்பாக
பல புதிய செய்திகளை வாசகர்களோடு பகிர்ந்துகொண்டமைக்காக விரல்மொழியர் சார்பாக
நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
ம: உங்களுக்கும், உங்கள் இதழுக்கும் என் நன்றிகள்
மனோகரன்
அவர்களைத் தொடர்புகொள்ள: 6382795496
பேட்டி அருமை.
பதிலளிநீக்குபேட்டி அருமை.
பதிலளிநீக்குபேட்டி அருமை.
பதிலளிநீக்குஇதுவரை இப்படிப்பட்ட விளையாட்டு வீரர் குறித்து அறிந்ததில்லை. அறிய வாய்ப்பளித்த இதழுக்கு நன்றிகள்
பதிலளிநீக்கு