சிறப்புக் கூறு: சிறப்புப் பள்ளிக்குப் பின் சிறகொடிந்த பறவை- மு. முத்துச்செல்வி


graphic தொடக்கக்கல்வி பயிலும் காலத்தில் பரிசு பெறும் முத்துச்செல்வி

      என்  வாழ்க்கையின்  மிக சந்தோஷமான  தருணம் எதுவென்று கேட்டால் சிறிதும் தயக்கமறச் சொல்வேன் அது நான் படித்த சிறப்புப் பள்ளிச் சிறுமலர்ச் சோலையில் மட்டும் தான் என்று.  காரணம் என்   பள்ளி    எனக்குக் கல்வியை மட்டும்தானா  புகட்டியது? நிச்சயம் இல்லை! பார்வையற்ற பெண் என்ற  போர்வையில் விளையாட்டை  எனக்கு என் பள்ளி ஒருபோதும் எட்டாக் கனியாய் ஆக்கியதே  இல்லை. ஆம்! விளையாட்டைத் தவிர்த்துவிட்டு என் பள்ளிப் பருவப் பயணத்தை எழுதிவிடுவது சாத்தியமாகாததே.

      அந்த வட்டத் தோட்டம்! அதில்தான் எங்கள் விளையாட்டுக் கொண்டாட்டம்! என் அனுபவத்திற்குள் செல்லும் முன்,  வாருங்கள் எங்கள் விளையாட்டு மைதானத்திற்குள் சற்று வலம் வருவோம்.

      இந்த வட்டத் தோட்டத்தில் தடம் பதிக்காமல் எவரும்  வகுப்பறைக்குச் செல்வது சாத்தியமாகாது. எங்கள்  காலைப் பிரார்த்தனை நடைபெறுவதும் இவ்விடத்திலேதான்.  பாற்வையற்றோர்  பயன்படுத்தும் விளையாட்டு உபகரணங்கள்  அடுக்கடுக்காய் இங்கிருக்கும். கைப்பந்து விளையாடும் கைப்பந்து ஆடுகளம்  ஒருபுறம், டென்னிஸ் விளையாட்டிற்கான சிமெண்டிலான ஆடுகளம்  இன்னொருபுறம்.  நீளம் தாண்டும் பயிற்சிக்கான மிக நீளமான  கடல் போன்ற மணல் பரப்பான  சமதளம். அதில் ஓடிச்சென்று சரியான இடத்தில் நின்று தாவி குதிப்பதற்காக  இடையிலே ஒரு மேடு. இதோடு முடியவில்லை இந்த வட்டத் தோட்டம். பார்வையற்றவர்கள் ஏறுவதற்கும், இறங்குவதற்கும் தங்கள் உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதற்கும்  ஏதுவாக  அமைந்திருக்கும்  கம்பி போன்ற ஜிம்கள். நாங்கள் உடற்பயிற்சி செய்யும்பொழுது ஒருவர் மீது ஒருவர் இடித்து விடாமல்  இருக்கும்    வன்னம்   ஒரே நீளமுடைய  மேடு போன்ற அமைப்பு  ஆங்காங்கே   கட்டப்பட்டிருக்கும். நிழல் தரும் மரங்களும், இளைப்பாறுவதற்கு ஆங்காங்கே கல்லால் ஆன மேடைகளும்!  இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம் எங்கள் விளையாட்டு மைதானத்தின் விந்தைகளை.

      இக்கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும்போதே, என் மனதை விட்டு நீங்காத  சில நினைவுகளுக்குள் பயணிக்க  என் மனம்  என்னைப் பின்நோக்கி இழுத்துவிட்டது. சுறுசுறுப்பை  ஊட்டும்  musical chair, கைகளை ஒருங்கிணைக்கும்  passing the ball  என் பள்ளியில்  விளையாடிய பிஞ்சுப்  பருவ விளையாட்டுகள் இவை.

Fire in the mountain Run, Run, Run!”
      இது ஒரு அற்புதமான விளையாட்டு. வட்ட வடிவில் நின்று கைகளைக் கோர்த்துக்கொண்டு  fire in the mountain run, run, run  என்று ஒருசேர கூறியபடியே  நாங்கள் ஓட, எதிர்பாராத நேரத்தில் ஆசிரியர் இரண்டு என்று கூற இரண்டு பேர் கைகோர்த்து இணைந்து நிற்க, மூன்று என்று கூற மூவர்  இணைந்து கைகோர்த்து நிற்க, இணை இல்லாமல் தனித்து நிற்பவர் விளையாட்டிலிருந்து  வெளியேற்றப்படுவார்.  சுறுசுறுப்பை  மட்டுமல்ல; சற்று எச்சரிக்கையுடன் இல்லையென்றால் வாழ்க்கையில் தனித்து விடப்படுவோம் என்ற எதார்த்தத்தை  அல்லவா  எடுத்துச் சொல்லியிருக்கிறது இந்த விளையாட்டு. இப்படி அடுக்கடுக்கான  விளையாட்டுகளால் எங்களை வலுவூட்டிக்கொண்டிருந்தது எங்கள் சிறப்புப் பள்ளி.

      இரண்டாம் வகுப்பில் தவளை ஓட்டத்தில் இரண்டாம் பரிசு வாங்கியது முதல் தொடங்கியது என்னுடைய முதல் விளையாட்டுப் பயணம். தவளை போல் அமர்ந்து இரண்டு கைகளாலும், கால்களாலும் தாவித்தாவிக், குதித்துத் குதித்து விளையாடும் விளையாட்டு அது. அடுத்த நாள் தமிழக அரசால்  சென்னையிலுள்ள ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில்  நடத்தப்படும்  மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டி. அந்த ஏழு வயதில் எனக்கு  என் பள்ளிக்காக விளையாடப்போகிறேன் என்ற  புரிதல் வரவில்லை. ஆனால் முந்தைய நாள்  இரவில் எனக்கு உறக்கம் இல்லை. ஒரு இனம்புரியாத இன்பம்; உணர்ச்சி முழுக்க உத்வேகம். எப்படியேனும் மூன்றில் ஏதாவது  ஒரு பரிசை வெல்ல வேண்டும் என்ற உணர்ச்சி என் விளையாட்டு ஆசிரியர் கொடுத்த பயிற்சியினால் ஆழமாய் வேரூன்றி இருந்தது. அடுத்த நாள் மாலை நான் பெற்ற இரண்டாம் பரிசுக்கான சான்றிதழையும், தண்ணீர்க் குடுவையினையும் என் பெற்றோரிடம் காட்டி மகிழ்ந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அடுத்த வருடம் முதல்  தவளை ஓட்டத்தில் முதல் பரிசை நான் தவறவிட்டதாக  என் நினைவில் இல்லை.

சங்கிலி புங்கிலி கதவத் தொற
 நான் மாட்டேன் வேங்கப் புலி
ஆட்டுக்குட்டிய கண்டீங்களா?
கண்டோம்.
எங்கே?
வீட்டுக்குள்ளே.
வரலாமா? வரக்கூடாதா?” - திடீரென்று என்ன பிதற்றுகிறேன் என்று தானே எண்ணிக்கொண்டிருக்கீறீகள்.

      குழுவாக விளையாடும் ஒரு விளையாட்டைக் குறித்து  தான் சொன்னேன்.    இதில் புலி, ஆட்டைத் துரத்தும். ஆடாக மாறிய   நான் புலியிடம் சிக்காதபடிச் சுற்றிச்சுற்றி ஓடிக்கொண்டிருந்தேன். என் விளையாட்டு ஆசிரியர் என்னுள் ஒளிந்து கொண்டிருக்கும் ஓட்டப்பந்தயத் திறமையை எனக்கே தெரியாமல் எனக்கு   அறிமுகப்படுத்திவிட்டார்.

      எங்கள்  பள்ளி ஆண்டுவிழா,   ஒரு வருடம்  கலைநிகழ்ச்சியாகவும், அடுத்த ஆண்டு  விளையாட்டு விழாவாகவும்  மாறிமாறி அலங்கரிக்கப்படும்.  அதுவும் விளையாட்டு விழாவிற்கான வருடம் என்றால் ஒரு இனம்புரியாத பரவசத்துடன் கூடிய பரபரப்பு  என்னை தொற்றிக்கொள்ளும்.  ரோஸ், லோட்டஸ்,  வுட்பெக்கர்ஸ்  என்ற 3 குழுக்களாக பிரிக்கப்பட்டு வெற்றியைக் கண்டு துள்ளமாட்டோம். தோல்வியைக் கண்டு துவளமாட்டோம்என்ற உறுதி மொழியுடன்  எங்கள்  விளையாட்டுப் பயிற்சி  உற்சாகமாக   தொடங்கும். இவ்விளையாட்டுப் பயிற்சி நடப்பதில் இரட்டிப்புச் சந்தோஷம் என் போன்ற சிலருக்கு. விளையாடும் சந்தோஷம் ஒருபுறம்.  தினசரி வகுப்பிலிருந்து  தப்பிப்பதிலும் ஒருவித சந்தோஷம் கிடைப்பதும் இயல்புதானே!

      ஓட்டப்பந்தயம் தொடங்கி எண்ணற்ற விளையாட்டுகளால் எங்கள் விளையாட்டு விழா வீறுநடை போட்டுக் கொண்டிருக்கும். இவ்விடத்தில்  இரண்டு முக்கியமான பயிற்சிகளைப் பற்றி குறிப்பிடாமல் நகர்ந்து செல்ல இயலாது. ஒன்று உடற்பயிற்சி மற்றொன்று யோகப்பயிற்சி.  அப்போதைய என் உடல் ஆரோக்கியத்திற்கும், உடல் கட்டமைப்புடன் இருந்ததற்குமான காரணம் இப்பொழுது நன்கு விளங்குகிறது. எங்கள் பள்ளியில் நடக்கும் ஓட்டப்பந்தயம் காண்பவர்களுக்குச் சற்று வித்தியாசமாகவே தென்படும். 

      முற்றிலும்  பார்வையற்ற நால்வர் ஒரே நேரத்தில் ஓடும் பொழுது ஒருவர் மீது ஒருவர் மோதி காயம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.  அதை முறியடிக்க முற்பட்டனர் எம் பள்ளிப் பயிற்றுனர்கள்.   விளையாட்டு மைதானத்து  மரத்தில் கயிற்றின் ஒரு  முனையையும்,  மற்றொரு கோடியில் இருக்கும் மற்றொரு மரத்தில் மற்றொரு முனையையும் கட்டி அந்தக் கயிற்றினுள்  ஒரு வளையம் தொங்கவிடப்பட்டிருக்கும். இப்படி நால்வருக்கும் குறிப்பிட்ட இடைவெளியில் ஒவ்வொரு கயிறு ஒதுக்கப்பட்டிருக்கும்.   அந்தக் கயிற்றின் ஊடே தொங்கவிடப்பட்டிருக்கும் வளையத்தை விரலினுள்    கோர்த்தபடி ஓடும்படியாக இந்தப் போட்டி அமைந்திருக்கும். அந்த வளையம் கயிற்றுடன் உராயும் சத்தமே யார் முதலில் ஓடுகிறார்கள், யார் இரண்டாமிடத்தில் ஓடுகிறார்கள் என்ற தகவலைத் துல்லியமாக எங்களுக்குச் சொல்லிவிடும். இதர விளையாட்டுகள் குறித்து மற்றொரு சந்தர்ப்பத்தில் பகிர்ந்துகொள்கிறேன்.
graphic வட்டத் தோட்டம்!

      அப்போது நான் 9-ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். ஒய்எம்சிஏ வில் மாநிலங்களுக்கு இடையே நடைபெறும் தடகளப் போட்டி.  என் பள்ளி சார்பாக ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்கும் பெறும் வாய்ப்பு கிட்டியது. இப்பொழுது நான் முதல் பரிசு பெறவேண்டும் என்பதைவிட, என் பள்ளிக்கு வெற்றி தேடித் தரவேண்டும் என்ற புரிதலைக் கொடுத்திருந்தது என் வயது.  அந்த வருட ஓட்டப்  பந்தயத்தில்  கிட்டத்தட்ட   எட்டுப் பேர் கலந்துகொண்டதாக எனக்கு நினைவிருக்கிறது. முதலில் எட்டுப் பேரும் ஒரே நேரத்தில் விசில் சத்தம் கேட்டவுடன் மணி ஒலிக்கும் திசையைக் குறிபார்த்து எங்கள் வேட்டையைத் தொடங்கினோம். ஆனால் அது இடையிலேயே  நின்றுவிட்டது. ஒருவர் மீது ஒருவர் மோதிக்கொண்டு கீழே விழுந்து விட்டோம். எதிர்பாராத விதமாக என் கைகளில் காயம் ஏற்பட்டுவிட்டது. இவ்விபத்தைத் தடுக்க ஒரு முடிவு எட்டப்பட்டது. எண்வரையும் தனித்தனியாக ஓடவிட்டு அதில் யார் குறைந்த நொடிகளில்  ஓடுகிறார்களோ  அவர்களே  முதல், இரண்டாம், மூன்றாம் பரிசுக்குச் சொந்தக்காரர்கள் என்று அறிவிக்கப்பட்டது. காயத்தின் காரணமாக நான் கடைசியாக ஓட வைக்கப் பட்டேன்.  அந்த இடைப்பட்ட நேரத்தில் என்  தோழிகளுடன் நானும் இணைந்து  என் வெற்றிக்காக எங்களுக்குத் தெரிந்த ஜெபத்தையெல்லாம் சொல்லி முடித்துவிட்டிருந்தோம். மற்றவர்களை விட குறைந்த நொடியில் ஓடி முதல் பரிசு பெற்றுவிட்டேன். அந்த மகிழ்ச்சியான தருணத்தை இன்று வரை எந்த  ஒரு தருணமும் தோற்கடிக்க முடியாது.

      ஆம்! படிப்பில் முதல் மாணவியாக வரவில்லை என்றாலும் அதற்காக நான் வருந்தியதில்லை. ஆனால், ஓட்டப்பந்தயத்தில் முதல் இடத்தைத் தவிர வேறெவ்விடத்தையும் என் மனம் ஏற்றதில்லை. இப்படி ஓடினேன்... ஓடினேன்... வாழ்க்கையின் ஓரத்திற்கே.... இல்லை இல்லை. நான் 12-ஆம் வகுப்பு முடிக்கும் வரை மட்டுமே. ஆம். அதற்குப் பின்னும் பலமுறை ஓட்டப் பந்தயத்தில்  கலந்துகொண்டிருக்கிறேன் உறக்கத்தில்  காணும்  கனவுகளின் மூலம் மட்டுமே!

      கல்லூரிப் படிப்பில்  கனவுகளுடன் காலடி எடுத்து வைத்தேன்.  எனக்கு ஒரு பேரதிர்ச்சிக் காத்துக் கொண்டிருந்தது. இந்தப் பார்வையுள்ள சமூகம் நான் நடப்பதையே பெரும் சாதணையாகப் பார்க்கும் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை. நான்  ஒரு ஓட்டப் பந்தய வீராங்கணை  என்ற  அடையாளத்தை, இந்தச் சமூகமும், அரசாங்கமூம்  இணைந்து அகற்றிவிட்டது. நானாவது வெறும் ஓட்டப் பந்தய வீராங்கணையாக மட்டுமே  என்  பள்ளியில் வலம் வந்துகொண்டிருந்தேன். என் பள்ளியில் படித்த பவுலின் மேரி  அக்கா  சகல விளையாட்டுக்களையும் தன் வசம் வைத்திருந்தார். கைப்பந்து தொடங்கி கொக்கோ, டென்னிஸ் என அத்தனை விளையாட்டுகளிலும் முன்னணி வீராங்கனை. தன் விளையாட்டுப் பயணமும் பள்ளியோடு நின்றதை எண்ணி அவரும் தன் வருத்தத்தை என்னிடம் பலமுறை பதிவு செய்திருக்கிறார். இப்படி எத்தனையோ பார்வையற்ற பெண்கள்  என்றாவது   ஒருநாள்   தன்னை  இந்தச்  சமூகம்  ஒரு விளையாட்டு வீராங்கணையாக  அடையாளம் காணும் என்ற கனவைச் சுமந்து கொண்டுதான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

      சமீபத்தில் ஒரு பார்வையற்ற கல்லூரி மாணவி என்னைத் தொடர்புகொண்டு  தன்னுடைய குடும்பச் சூழ்நிலையைக் குறித்து விவரித்துக் கொண்டிருந்தாள். இந்தக் கொரோனா சமயத்தில் அவளுக்கு எவ்வாறேனும் உதவ இயலுமா என்று  சிந்தித்தபடியே    அவளிடம் பேச்சைத் தொடர்ந்து கொண்டிருந்தேன்.  அவளுடைய  அடுத்த கேள்வி என் சிந்தனையை இடை மறித்தது. தான்  விளையாட்டுத் துறையில் சாதிப்பதற்கான சாத்தியக்கூறுகளை குறித்த  வினாக்களை அடுக்கடுக்காய் தொடுத்துக் கொண்டிருந்தாள்.   இப்படி எத்தனையோ பார்வையற்ற பெண்கள் ஜூடோ போன்ற விளையாட்டுகளில் சத்தமில்லாமல் சாதனை  படைத்துக் கொண்டிருக்கிறார்கள்.  அரசாங்கத்திடமிருந்து   அவர்களுக்கு உரிய வாய்ப்பும், அங்கீகாரமும் கிட்டவில்லை என்பதுதான் இங்கே பதிவு செய்யப்பட வேண்டிய விடயமாக இருக்கிறது.

      அதே சமயத்தில், பார்வையற்றவர்களை விளையாட்டு வீரர்களாக உருவாக்கிக் கொண்டிருக்கும் பல்வேறு சங்கங்களைத் தலை வணங்குகிறேன். நம்முடைய மாற்றுத்திறனாளிகள் துறை மட்டும் நம்மை ஏன் இவ்விளையாட்டுத் துறையில் மாற்றாந்தாய் போல நடத்த வேண்டும்  என்ற  கேள்விதான் எழுகிறது.  பள்ளிக் குழந்தைகளுக்கு மட்டும் விளையாட்டுப் போட்டிகளை நடத்தும்  நம் துறை  கல்லூரியில் பயிலும் பார்வையற்றவர்களுக்கு விளையாடும் வாய்ப்பைப்  பறித்துவிட்டது.

      மாற்றுத்திறனாளிகளின் உரிமைச் சட்டம் 2016-இல் விளையாட்டிற்காகவே ஒரு தனிப் பிரிவை ஒதுக்கிய இந்த அரசாங்கமே பார்வை குறைபாடு உடையவர்களை விளையாட்டிலிருந்து விலக்கி வேறுபடுத்திப் பார்ப்பது உரிமைமீறலின் உச்சக் கட்டம். அரசினால் மற்ற விளையாட்டு   வீரர்களுக்கு  வழங்கப்படும்  வேலைவாய்ப்பு உட்பட அனைத்துச்  சலுகைகளும் பார்வையற்ற  விளையாட்டு வீரர்களுக்குச் சமமாகக்  கிடைக்கப்பெறும் நிலை வரும்வரை,  நம் பார்வையற்ற சகோதர சகோதரிகளை இந்தச் சமூகம் விளையாட்டு வீரர்களாக  அடையாளம் காணும்வரை நம்  பார்வையற்ற சங்கங்களின்  ஒருமித்த குரல்   ஓயாமல் ஒலித்துக்கொண்டிருக்கும் என்பதில் ஐயமில்லை.

      இக்கட்டுரை நான் படித்த சிறுமலர் பார்வையற்றோர் மேல்நிலைப் பள்ளிக்கும், என் விளையாட்டு ஆசான் திருமதி. சுப்பம்மாள் அவர்களுக்கும் சமர்ப்பனம்.

கட்டுரையாளர்: இந்தியன் வங்கியில் மேலாளராகப பணிபுரிந்து வருகிறார். இவர் அகில இந்திய பார்வையற்றோர் கூட்டமைப்பின் (All India confederation of the blind-AICB) துணைத்தலைவர்).
தொடர்புக்கு: muthump2007@gmail.com

12 கருத்துகள்:

 1. மிகச்சிறந்த அனுபவப் பகிர்வு. உங்களுடைய எழுத்துநடை மிகவும் அருமை.

  பதிலளிநீக்கு
 2. மிக்க நன்றி தங்களுடைய பெயரை அறிந்து கொள்ளலாமா

  பதிலளிநீக்கு
 3. அகச்சுடர்கவியொளி, மா. மாணிக்கச்சந்திரசேகர்10 ஜூலை, 2020 அன்று PM 3:41

  எளிமையான நடை; இனிமையான அனுபவம்; அருமையான கட்டுரை. இளமைகால நினைவுகளின் ஏக்கம் பீரிட்டு வழிந்தோடிய இக்கட்டுரையைப் படிக்கப் படிக்க இறுதிவரை சுவாரசியம் குறையவே இல்லை.

  பதிலளிநீக்கு
 4. அனுபவம் அருமை எழுத்த்து நடை அதை விட

  பதிலளிநீக்கு
 5. வணக்கம் மேடம் என்னுடைய பெயர் முனிய பிள்ளை இளங்கலை ஆங்கிலம் இரண்டாம் ஆண்டு மன்னர் சரபோஜி அரசு கல்லூரி தஞ்சாவூரில் படித்து வருகிறேன் என்னுடைய சொந்த ஊர் விருதாச்சலம் உங்களுடைய இந்த படைப்பு மிகவும் அருமையாக இருக்கிறது அதைப் போன்று ஒரு விளையாட்டுக்கு ஒரு நல்ல ஒரு சுறுசுறுப்பை உண்டாக்கக்கூடிய கருத்துக்களை நீங்கள் எழுதி இருக்கிறீர்கள் அது மிகவும் அருமையாக இருக்கிறது நன்றி மேடம் என்னுடைய பெயர் முனிய பிள்ளை மேலும் இது போன்ற இன்னும் நிறைய படைப்புகளை நீங்கள் கட்டுரை வடிவில் எழுத வேண்டும் அதை நாங்கள் எல்லா மாணவர்களும் எல்லா ஆசிரியர்களும் இக்கட்டுரைகளை படிப்பதற்கு மிகவும் ஆர்வமாக இருக்கிறோம் நன்றி

  பதிலளிநீக்கு
 6. புதுச்சேரியை பொருத்தவரை சமூக நலத் துறையால் இன்றும் அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளுக்கு போட்டிகள் நடத்தி அனைத்து வயதினருக்கும் ஆன பரிசளிப்பு விழாவாக இன்றும் ஊனமுற்றோர் தினத்தன்று கொண்டாடப்பட்டு வருகிறது உங்கள் கட்டுரையின் மூலமாக அன்றைய செயல்பாடுதான் இன்றைக்கு உங்களை ஒரு துடிப்புமிக்க பெண்ணாக மாற்றி இருக்கிறது என்பதை அறியமுடிகிறது நல்லதொரு வழிகாட்டல் எழுத்து நடை மிகவும் அருமை தொலைநோக்கு சிந்தனை உடைய நீங்கள் பார்வையற்ற பெண்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டி இவன் புதுவையிலிருந்து நாகராஜ்

  பதிலளிநீக்கு
 7. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 8. கட்டுரை மிகவும் அறுமை. சிருமளர் சிறப்புப்பள்ளி கொடுத்த சிரகுதான்! சிரகடித்துசிரகடித்து உயர்வதர்க்குக் காறணம் என்பதை உங்களின் அணுபவப்பகிர்வு சொல் ளியது. இதை படிப்பவர் சிளருக்கு! சிருவயது நினைவூட்டியும்,! இந்த வாய்ப்பு கிடைக்காதவர்க்கு ஏக்கத்தை கூட்டியும்! இன்றைய மானவர்களுக்கு ஊக்கத்தை ஊட்டியும் வரும். தொடரட்டும். உங்களின் எழுத்துப்பனி. வாழ்த்துக்கள்..

  பதிலளிநீக்கு
 9. அருமையான அனுபவ கட்டுரை.

  பள்ளியின் விளையாட்டு தோட்டமும், முழு பார்வையற்றவர்களையும் குறை பார்வையற்றவர்களையும் முதல்முதலில் இனங்கண்டு, விளையாட்டு திறனை ஊக்குவிக்கும் விளையாட்டு ஆசிரியரையும், விளையாட்டு போட்டிகளின்போது அடித்தொண்டையில் அலறி நம்மை வழிநடத்தும் அணைத்து ஆசிரியர்களும்,
  போட்டிகளில் பெற்ற பாத்திர பரிசுகளும், முழு பார்வையற்றவர்களுக்கான ஓட்டப்பந்தயத்தில் முந்தய அணியாக ஓடுவதற்கு தயாராக நின்றுகொண்டிருக்கும் தருணமும், கட்டுரையை படிக்கும்போதே நினைவுகள் ஒவ்வொன்றாய் நிழலாடுகிறது.

  பதிலளிநீக்கு
 10. சுப்பம்மாள் சீதாராமன்14 ஜூலை, 2020 அன்று PM 6:08

  மிகவும் அருமையான வலைப்பதிவு முத்துசெல்வி, வாழ்த்துக்கள்.உன் எழுத்துக்கள் பள்ளியின் நினைவுகளையும் உன் போன்ற மாணவிகளோடு நான் கழித்த நாட்களையும் என் மனக்கண்ணின் முன் கொண்டு வந்து மகிழ்வித்தது.
  விளையாட்டு ஆர்வமிக்க ஒவ்வொரு சிறப்பு திறனாளியின் ஏக்கத்தையும் எதிர்பார்ப்பையும் தெளிவாய் இச்சமுதாயத்தின் பார்வைக்கு எடுத்துக்காட்டும் உன் உணர்வை பாராட்டுகிறேன்.
  ஒரு மாணவியின் திறமையை கண்டறிந்து ஊக்குவித்து பிரதிபலன் எதிர்பாராமல் ஆற்றிய பணிக்கு , அந்த ஆசிரியரை மகிழ்விப்பது தன் மாணவிகள் சமுதாய அக்கறையோடும் , சக மனிதன் நலன் கருதும் மனித நேயத்துடனும் வாழ்ந்துகாட்டுவதே ஆகும்.
  உன் வலைப்பதிவு எனக்கு இந்த இரண்டையும் உணர்த்தியது, மிகவும் மகிழ்ச்சி.
  உன்னைப் போன்ற ஒவ்வொரு மாணவியின் கனவும் நினைவாகவேண்டும் என்பதற்காக என்றும் இறைவனை பிரார்த்திக்கிறேன்.

  திருமதி சுப்பம்மாள் சீதாராமன்.

  பதிலளிநீக்கு
 11. அற்புதமான படைப்பு உன்னுடைய பள்ளி விளையாட்டு அனுபவங்களை மிக அழகாக வர்ணித்துள்ளாய். You were a very competitive sprinter. When you were on field ,we teachers have to be very alert to prevent accidents. பலவினத்தை பின் தள்ளி வெற்றி பெற வேண்டும் என்ற குறிக்கோள்ளோடு ஓடிய முத்துசெல்வியை நாங்கள் மறவோம். Muthuselvi,a bold and a bubbly girl with an aim to succeed and not to lose.
  Well done Muthuselvi,you have achieved a lot. As a teacher I am proud of you. Don't rest. There is miles to go more and lots to achieve.Good luck.
  LFC school Tr
  Latha. S

  பதிலளிநீக்கு