அமைப்புகள் அறிவோம்: பார்வையற்றோருக்கான விளையாட்டுப் போட்டிகளை முன்னெடுத்ததில் ஒய்எம்சிஏ உடற் கல்வியியல் கல்லூரியின் பங்கு - கே. பழனிசாமி.


Graphik: ஒய்எம்சிஏ

முன்பு ஒரு காலத்தில் ஆங்காங்கே பல்வேறு விதமான விளையாட்டுகளைப் பல்வேறு தரப்பினர் தெரு முனையிலும், பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், ஆனந்தமாகவும், உற்சாகமாகவும் விளையாடி வந்தனர். இதனை நம் பார்வை மாற்றுத்திறனாளிகள் ஏக்கத்தோடும், அதே நேரத்தில் நாமும் பிற்காலத்தில் எப்படியாவது விளையாட வேண்டும் என்கிற வெறியோடும் அதனை தினந்தோறும் பார்த்துக் கொண்டிருந்தனர். அதே நேரத்தில் படிப்பதற்கே நமக்கெல்லாம் இடம் கிடைப்பது சிரமமாக இருந்தபோது,  இந்த விளையாட்டுகளை எல்லாம் நாம் கற்றுக் கொள்வது சாத்தியமா? என்றும் வருத்தப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில். பார்வை மாற்றுத்திறனாளிகளாகிய நீங்களும் விளையாடுவதும், விளையாட்டுத்துறையில் மற்றவர்களைப் போல்  சாதிப்பதும் சாத்தியமே என்பதனை மெய்ப்பிக்கும் வகையில். சென்னையின் மையப்பகுதியான நந்தனத்தில் 64.5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஒய்எம்சிஏ (YMCA) உடற்கல்வியியல்  கல்லூரி அதற்கு அச்சாரமாக இருந்தது.

அதன் தோற்றம் மற்றும் வளங்கள்: 

            ஒய்எம்சிஏ கல்லூரியானது 1920-ஆம் ஆண்டு ஹாரி குரோவ் பக். என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது. இக்கல்லூரியில் கிரிக்கெட், வாலிபால், டென்னிஸ், கபடி, ஹாக்கி மற்றும் தடகளம்  உள்ளிட்ட பல்வேறு வகையான விளையாட்டு மைதானங்கள் இருக்கின்றன.
அதோடு மட்டுமல்லாமல் நீச்சல் குளம், நடன அரங்கு. படப்பிடிப்புச் செய்வதற்கான உள்ளரங்கு போன்றவையும் இருக்கின்றன.
அத்தகைய பெருமை வாய்ந்த கல்லூரியில்தான் பார்வை மாற்றுத்திறனாளிகளை விளையாட்டுத்துறையில் ஜொலிக்க வைக்க வேண்டும் என்ற ஓர் உன்னத முயற்சியும் முன்னெடுக்கப்பட்டது.

            இன்று பார்வை மாற்றுத்திறனாளிகள் பலர் பல்வேறு வகையான விளையாட்டுகளில் சிறந்த விளையாட்டு வீரர்களாக இருக்கிறார்கள். அத்தகைய விளையாட்டு வீரர்கள் இன்றைக்குத் தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் பல்வேறு  சாதனைகளை நிகழ்த்தி வருகின்றனர். இவர்கள் தங்களது திறமையின் அடிப்படையில் இத்தகைய உயரத்தை எட்டி கொண்டிருக்கிறார்கள் என்றாலும் கூட. இதற்கு அச்சாரமாக இருந்தது 1979-ஆம் ஆண்டுகளில் ஒய்எம்சிஏ கல்லூரியில் பணிபுரிந்து கொண்டிருந்த பேராசிரியர்களும் மற்றும் சில கல்லூரி நிர்வாகிகளும் என்பதனை எந்த விதத்திலும் மறுக்க முடியாது. அன்றைய காலகட்டத்தில் தான் பார்வை மாற்றுத்திறனாளிகளும் மற்றவர்களைப் போல் எல்லாவித விளையாட்டுகளிலும் தனித்துவமாக சிறந்து விளங்க வேண்டுமென்று விளையாட்டுப் பயிற்சி மையத்தை 1979ஆம் ஆண்டு அக்கல்லூரியில் துவங்கினார்கள்..

முயற்சி: 

            எந்த ஒரு செயலையும் நம்பிக்கையோடும், விடா முயற்சியுடனும் முயன்றால் முடியாதது  ஒன்றுமில்லை என்பதற்குச் சான்றாக ஒய்எம்சிஏ கல்லூரியில் ஆரம்பிக்கப்பட்ட பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் பயிற்சி மையத்தைக் கூறலாம். இக்கல்லூரியில் பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் பயிற்சி மையம் ஏற்படுத்த வேண்டும் என்ற முயற்சி 1979-ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்டுப், பல்வேறு சோதனைகள் செய்யப்பட்டுப் பின்னர் 1985-ஆம் ஆண்டு தான் அதற்கு ஒரு இறுதிவடிவம் கிடைத்தது.

            இந்த விளையாட்டுப் பயிற்சி மையம். பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கென்று துவங்கப்பட வேண்டும் என்ற எண்ணம் எப்படி வந்தது. அது ஏன் தற்பொழுது செயல்பாட்டில் இல்லை என்பதனைப் பற்றி அக்கல்லூரியில் உதவிப் பேராசிரியராக பணியாற்றிவரும்  பேராசிரியர் எஸ். ஜான்சன் பிரேம்குமார் அவர்களிடம் பேசினோம். அப்பொழுது அவர் பல்வேறு தகவல்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

            இதற்கான ஆர்வம் முதன் முதலில் ஒய்எம்சிஏ கல்லூரியில் பேராசிரியராக இருந்து பின்னர் ஓய்வு பெற்றுக் கல்லூரி தாளாளர் ஆக உயர்ந்த பேராசிரியர். ஜெய மித்ரா ஐயா அவர்களுக்குத் தான் வந்தது என்பதனைத் தெரிவித்தார். பேராசிரியர்.  ஜெய மித்ரா ஐயா இதற்காகவே. அமெரிக்காவில் உள்ள பாஸ்டன் நகருக்குச் சென்று, அங்கு பார்வை மாற்றுத்திறனாளிகளுக்காகவே பிரத்தியேகமான பயிற்சி மையம் இருக்கிறது. அந்தப் பயிற்சி மையத்தில் பார்வை மாற்றுத்திறனாளிகள் விளையாடக்கூடிய விளையாட்டுப் போட்டிகள் குறித்த பயிற்சிகள் மற்றும் அன்றாட நடவடிக்கைகளைத் துல்லியமாக தெரிந்து கொள்ளக்கூடிய பயிற்சிகள் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை அவருக்கு வழங்கியதாகவும் தெரிவித்தார். அந்தப் பயிற்சிகளை முழுவதுமாக தெரிந்து கொண்டு வந்து பாஸ்டன் நகரில் இருப்பது போன்றே பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கென்று  ஒய்எம்சிஏ கல்லூரியிலும் ஒரு பயிற்சி மையம் இருக்க வேண்டும் என்பதனைத்  திட்டமிட்டு கல்லூரியில் ஒரு பயிற்சி மையத்தைத் துவங்கியதாகவும். அதற்கு அந்தக் கல்லூரியில் இருந்த சில பேராசிரியர்களும், நிர்வாகிகளும் பக்கபலமாக இருந்ததாகவும் சொல்லி முக்கியமான சில பெயர்களையும் நமக்காக அவர் பட்டியலிட்டார். அதன்படி பேராசிரியர். ஜோதிகரன், டாக்டர். நாகராஜன் அவர்கள், திருமதி. மேகி அவர்கள், திருமதி. சகாயமேரி அவர்கள், திரு. பாலா அவர்கள் மற்றும் அவர்களோடு மேலும் சிலர் இருந்ததாகவும் நம்மிடம் தெரிவித்தார்.

            மேலும் அவர் கூறிய பொழுது, இந்தப் பயிற்சி மையங்கள் தொடங்கி முழு வடிவம் பெறுவதற்கு ஆறு ஆண்டுகள் தேவை பட்டதாகவும், அதன்பின்னர் இதற்கு ஒரு முழு வடிவம் கிடைத்ததாகவும் சொன்னார்.

நாங்கள் இன்னும் பல வினாக்களை அவரிடம் முன்வைத்தோம்.
கேள்வி: பார்வை மாற்றுத்திறனாளிகள் விளையாடக்கூடிய எந்தெந்த  போட்டிகள் ஒய்எம்சிஏ வில் தொடங்கப்பட்டது?
பதில்: பார்வை மாற்றுத் திறனாளிகள் விளையாடக்கூடிய கைப்பந்து, கபடி, டேபிள் டென்னிஸ், கொக்கோ மற்றும் தடகள விளையாட்டுப் போட்டிகள் போன்ற போட்டிகள் ஒய்எம்சிஏ வில் இருந்து தொடங்கப்பட்டது.

கெ: முதன் முதலில் எந்த ஆண்டு இந்தப் போட்டிகள் செயல்வடிவம் பெற்றன?
: 1986-ஆம் ஆண்டு முதன்முதலில் தென்னிந்திய அளவில் உள்ள பார்வை மாற்றுத்திறனாளி பள்ளிகளை ஒன்றுதிரட்டி இந்தப் போட்டிகளை நடத்தினோம். அதன் பிறகு ஆண்டுதோறும் பொங்கல் விழாவின்போது இப்போட்டிகள் நடைபெறும் என்றும், அவை 2002 வரை தொடர்ச்சியாக நடைபெற்றது என்றும் தெரிவித்து விட்டு மேலே தொடர்ந்தவர்; சி.பி.எம் என்று சொல்லக்கூடிய கிறிஸ்டியன் பிளைண்ட் மிஷன் அதன் மூலமாக 1976-ஆம் ஆண்டு முதல் 2002-ஆம் ஆண்டு வரை நிதி வந்ததாகவும். அதன் பிறகு அவர்கள் நிதியை நிறுத்தி விட்டதாகவும் அதனால் தொடர்ந்து போட்டிகளை நடத்த முடியவில்லை என்பதனை வருத்தத்தோடு நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

கெ: தற்பொழுதும் அந்தப் பயிற்சி மையம் கல்லூரியில் இயங்குகிறதா?
: அது தற்போதும் இருக்கிறது ஆனால் அந்தப் பயிற்சி மையம் இருந்த இடத்தில் ஒய்எம்சிஏ வில் பணிபுரிகின்ற அலுவலர்களுக்கான குடியிருப்பு கட்டபட்டிருக்கிறது. எனினும், வேறோரிடத்தில் மனவளர்ச்சி குன்றியோருக்கான ஒரு சிறப்புப் பள்ளி ஒன்று கல்லூரி வளாகத்தில் இயங்கிவருகிறது.
அந்தப் பள்ளி 2006-ஆம் ஆண்டு முதல் ஒய்எம்சிஏ வளாகத்தில் இயங்கி வருவதாகவும், இன்றும் அந்தப் பயிற்சி மையத்திற்கு பதிலாக மனவளர்ச்சி குன்றியோருக்கான பள்ளி இயங்கிக் கொண்டிருப்பதாகவும் நம்மிடம் தெரிவித்தார்.

            மேலும் கூறிய அவர். பார்வை மாற்றுத் திறனாளிகள் விளையாடக்கூடிய போட்டிகள் அனைத்தையும். நடத்தித் தருவதற்கு கூப்பிட்டால் மனமுவந்து செல்வதாகவும், வாய்ப்புகள் வந்தால் இன்று ஒய்எம்சிஏ கல்லூரியில் பேசி முன்பு போல் பெரிய அளவில் போட்டிகளை நடத்த விரும்புவதாகவும் நம்மிடம் தெரிவித்திருந்தார். இன்றும் பார்வை மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு உதவிக்கரம் நீட்டத் தயாராய் இருப்பது ஒய்எம்சிஏ நம் சமூகத்தின் மீது அவர்கள் கொண்டிருக்கும் அக்கரையைக் குறிக்கிறது.

சி.பி.எம் ( கிறிஸ்டியன் பிளைண்ட் மிஷன் ) தோற்றம் மற்றும் செயல்பாடுகள்: 

            சி.பி.எம் ( கிறிஸ்டியன் பிளைண்ட் மிஷன் ) என்ற அமைப்பு  ஜெர்மன் ஆயர் எர்ன்ஸ்ட் ஜேகப் கிறிஸ்டோபல் என்பவரால் 1908 -ஆம்  ஆண்டு நிறுவப்பட்டது.  இது  ஒரு சர்வதேச கிறிஸ்தவ மேம்பாட்டு அமைப்பாகும். உலகில் ஏழ்மை நிலையில் இருப்பவர்களுக்காகவும் ஊனமுற்றோரின்  வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் தோற்றுவிக்கப்பட்டது.  உலகின் பழமையான மற்றும் மிகப்பெரிய அமைப்புகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது. மேலும், இந்த அமைப்பு ஊனமுற்றோர் மற்றும் இயலாமை நிலையில்  உள்ள மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்காக தொடர்ந்து  செயல்பட்டு வருகிறது. அவர்களுடைய கல்வி மற்றும் விளையாட்டிற்கு முக்கியத்துவம் கொடுத்து அதில் அவர்களுடைய திறமையை வெளிக்கொணரும் வகையிலும்வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும்  சி.பி.எம் முக்கிய பங்காற்றி வருகிறது. சர்வதேச கொள்கை உருவாக்கும் அமைப்புகளில் ஐ.நா. வழிகாட்டுதல்களைப் பின்பற்றி வருகிறது. 2018-இல் மொத்தம் 11 மில்லியனுக்கும் மேற்பட்டோரைச்  சென்றடைந்தது.  இந்த அமைப்பு  55 நாடுகளில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆதரவற்றோர்க்காக தொடர்ந்து  செயல்பட்டு வருகிறது.

அனுபவம்: 

            1989-90-ஆம் ஆண்டு ஒய்எம்சிஏ கல்லூரியில் நடைபெற்ற போட்டியில் கலந்து கொண்ட திருநெல்வேலியில் உள்ள திரு. கணேசன் அவர்களிடம் தங்களுடைய அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளுமாறு கூறினோம். அதற்கு அவர், தமிழகத்திலிருந்து கிட்டத்தட்ட அனைத்துச் சிறப்புப் பள்ளிகளும் போட்டிக்கு வந்ததாகவும், போட்டிகள், தங்குமிடம் மற்றும் உணவு அனைத்தும் சிறப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்ததாகவும் நம்மிடம் தெரிவித்தார். 

            மேலும் அவர், ஒரு சின்ன வருத்தமான நிகழ்வு ஒன்று நடந்ததாகவும் கூறினார். அது என்ன அனுபவம் என்று அவரிடம் கேட்டபொழுது, எவ்வித முன்னறிவிப்புமின்றி போட்டிகளை அறிவித்து அந்தப் பள்ளியை உடனடியாக தயாராக சொல்லும்படி வற்புறுத்துவார்கள் நாம் அந்த நேரத்தில் எதிர்ப்பார்க்க மாட்டோம். திடீரென்று அழைப்பதால் நாம் முழு மனதோடு அதில் பங்கேற்பது கொஞ்சம் கடினமாக இருந்ததாக தெரிவித்திருந்தார்.

            இன்றும் அரசாங்கம் நடத்தக்கூடிய பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கான அனைத்துப் போட்டிகளும் இந்த ஒரு அவசரமான நிலையிலேயே நடத்தப்படுகிறது என்பதில் மாற்று கருத்தில்லை.

            தமிழகத்தின் முன்னாள் தடகள வீரரும், தற்பொழுது பள்ளியில் தமிழாசிரியராகவும் இருக்கக்கூடிய வெங்கடேசன் அவர்களிடம் தங்களுடைய அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொண்டோம். அவர் 1997 முதல் 2000-ஆம் ஆண்டு வரையிலும் தொடர்ச்சியாக ஒய்எம்சிஏ வில் நடைபெற்ற போட்டி திருவிழாவில் பங்கு கொண்டதாகவும் அப்பொழுது எல்லாம் வருடத்தில் இரண்டு முறை போட்டிகள் நடத்தப்படும் என்பதனையும் மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொண்டார். பிப்ரவரி மாதத்தில் ஒரு முறையும் ஆகஸ்ட் மாதத்தில் ஒரு முறையும் போட்டிகள் நடத்துவார்கள் என்பதனைத் தெரிவித்த அவர், ஆகஸ்ட் மாதம் நடைபெறும் போட்டிகள் திருவிழா போன்று இருக்கும் என்பதனையும் தெரிவிக்க தவறவில்லை. தென்னிந்திய அளவில் கபடி போட்டியில் அவர் பங்கேற்ற  தமிழக அணி முதலிடம் பெற்றதாகவும், அவர் ஓட்டப்பந்தயத்தில் தென்னிந்திய அளவில் இரண்டாம் இடம் பெற்றதாகவும் மகிழ்ச்சியோடு நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

            மேலும் கூறிய திரு. வெங்கடேசன் அவர்கள், ஆகஸ்ட் மாதம் நடக்கும் போட்டிகளில் பார்வை மாற்றுத்திறனாளிகள் மட்டுமே கலந்து கொள்வார்கள். தமிழகம் முழுவதும் உள்ள பார்வை மாற்றுத்திறனாளிகளைச் சந்தித்துப் பழகுவதற்கு இந்நிகழ்வு ஒரு பெரிய வாய்ப்பாக அமைந்தது. அந்த ஐந்து நாளும் காலையில் யோகா சொல்லித் தருவார்கள் என்றும் எல்லாவற்றிற்கும் மேலாக ஒய்எம்சிஏ வில் பணிபுரிந்து கொண்டிருந்த திருமதி. மேகி அம்மையார் அவர்கள் ஊன்றுகோல் இல்லாமலேயே செல்வது எப்படி என்பதற்கான பயிற்சியையும் சொல்லித் தந்ததாகவும் உற்சாகமுடன் தெரிவித்தார்.

            இன்றைய காலத்திற்கு இவையெல்லாம் கிடைக்காமல் போனதைப் பற்றி வருத்தமாக பகிர்ந்துகொண்ட அந்தச் செய்திகள் நம்மையும் சற்று சிந்திக்க வைத்தது.

            அத்தகைய விளையாட்டு போட்டிகள் இன்றைய காலத்தில் நடைபெறாமல் போனதன் விளைவாக பார்வையற்றோருக்கு இடையே உள்ள ஒற்றுமை சற்றுக் குறைந்து இருப்பதாகவே கருதுவதாகவும், இன்றைக்கு இருக்க கூடிய இளைய தலைமுறையினர் மொபிலிட்டி தெரியாமல் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாகவும் கூறி மிகுந்த வருத்தப்பட்டார்.

            இவையெல்லாம் களைய வேண்டுமானால் எல்லா சிறப்புப் பள்ளிகளிலும் உடற்கல்வி ஆசிரியர்கள் பணியில் இருக்கிறார்களா? என்பது தெரியவில்லை ஒருவேளை பணியில் இல்லாமலிருந்தால், உடனடியாக உடற்கல்வி ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட வேண்டும். இப்படிச் செய்வது சிறப்புப் பள்ளி மாணவர்கள் போட்டியில் சிறந்தவர்களாகவும், மோபிலிட்டி தெரிந்தவர்களாகவும் வலம் வருவதற்கு ஏதுவாக இருக்கும் என்று சொல்லி முடித்துக் கொண்டார் திரு. வெங்கடேசன்.

            இன்றைக்கும் பல்வேறு அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் பல போட்டிகளை நடத்திக் கொண்டுதான் இருக்கின்றன. ஆனாலும், அந்தக் காலகட்டத்தில் ஒய்எம்சிஏ கல்லூரியில் நடத்திய போட்டி திருவிழா போல் இதுவரையிலும் எந்த அமைப்பும், நிறுவனமும் நடத்தவில்லை என்பது வருத்தத்திற்குரிய ஒன்றாகும். இதன் பிறகாவது ஏதேனும் ஒரு அமைப்போ அல்லது நிறுவனமோ பார்வை மாற்றுத் திறனாளிகள் விளையாடக்கூடிய அனைத்துப் போட்டிகளையும் ஒன்றுதிரட்டி அனைவரும் பங்கேற்கும் வகையில் ஒரு போட்டித் திருவிழா போல் ஏற்பாடு செய்து நடத்த வேண்டும் என இக்கட்டுரையின் வாயிலாக வேண்டுகோள் விடுக்கிறோம்.

            விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கக்கூடிய விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் எவ்வாறு முன்னுரிமை வழங்குகிறதோ அதுபோலவே, மாற்றுத் திறனாளிகளிலும் சிறந்து விளங்கக்கூடிய விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டுத்துறையில், அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்பதனை அரசுக்கு வலியுறுத்துகிறோம்.

            மற்றவர்களைவிட பார்வை மாற்றுத்திறனாளிகள் எந்த விதத்திலும் சளைத்தவர்கள் அல்ல என்பதனை ஒவ்வொரு துறையிலும், ஒவ்வொரு நேரத்திலும் தங்களை நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. எனவே, அவர்களுக்கு உரிய அங்கீகாரத்தைக் கொடுத்து திறமையை ஊக்கப்படுத்துமாறு இந்த அரசை வலியுறுத்துகின்றோம். 


கட்டுரையாளர் : கே. பழனிசாமி.
இளநிலை உதவியாளர் 
பொது சுகாதாரத்துறை சென்னை.  மற்றும் பார்வையற்றோர்க்கான கைப்பந்து சங்கத்திற்கான பொதுச்செயலாளர்.

தொடர்புக்கு : palanisamykaliyappan@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக