தலையங்கம்: வாழ்த்துகளும் ஆலோசனையும்

graphic உணர்ந்ததைச் சொல்கிறோம் உலகிற்கு என்ற வாசகம் அடங்கிய விரல்மொழியரின் சின்னம்
விரல்மொழியர்-25 வெற்றி விழா கொண்டாட்டம் இனிதே நடைபெற்று முடிந்தது. வெற்றி விழாவை வெற்றிகரமான விழாவாக  மாற்றிய வாசகர்களுக்கும், போட்டிகளில் கலந்து கொண்ட பங்கேற்பாளர்களுக்கும், பரிசு மற்றும் இணையத்தில் விழா நடத்துவதற்கான வசதிகளை வழங்கிய கொடையாளர்களுக்கும், கலைநிகழ்ச்சிகள் வாயிலாக விழாவை களைகட்டச் செய்த படைப்பாளர்களுக்கும் விரல்மொழியர் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது...
     அண்மையில் வெளியான இந்தியக் குடிமைப் பணிகளுக்கான தேர்வு முடிவுகளின்படி தமிழகத்தைச் சேர்ந்த இரு பார்வை மாற்றுத்திறனாளிகள் தேர்ச்சியடைந்து சாதனை படைத்துள்ளனர். அவர்கள் இருவருக்கும் தனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவிக்கிறது விரல்மொழியர்.


      மதுரையைச்  சேர்ந்த பூரணசுந்தரி, சென்னையைச் சேர்ந்த பாலநாகேந்திரன் ஆகிய இந்த இரு சாதனையாளர்களும் தங்கள் கல்லூரிக் காலத்தில்தான் விரிவான ஆங்கில அறிவை வளர்த்துக்கொண்டதாகக் கூறுகின்றனர். பூரணசுந்தரி  தமிழிலேயே குடிமைப் பணித் தேர்வை எழுதியுள்ளார்; பாலநாகேந்திரன் தான் ஒரு முதல் தலைமுறை பட்டதாரி  என்று  தெரிவிப்பதோடு, 11-ஆம் வகுப்பில் ஒரு பாடத்தில் தோல்வியடைய நேர்ந்ததையும்  ஒரு நேர்காணலில் குறிப்பிடுகிறார்

      இத்தகைய சாதாரனமானவர்கள் வெற்றி பெற்று இந்தியக் குடிமைப் பணியாளர்களாகத் திறம்படச் செயலாற்றவேண்டும் என்றுதான் நம் மனம் எண்ணுகிறது. இனிமேல், இத்தகைய தோல்விக் கதைகளைக் கொண்டிருப்பவர்களால் சாதிக்கமுடியுமா என்ற பொருள் பொதிந்த கேள்வியைக் கேட்கிறார்கள் கல்வியாளர்கள்.
இந்திய ஒன்றிய அரசு தற்போது அறிமுகப்படுத்தியிருக்கும் புதிய கல்விக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டுதான் இந்தக் கேள்வி எழுகிறது. இக்கொள்கையில் இடம்பெற்றுள்ள மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத் தேர்வு, மும்மொழித் திட்டம் முதலியவை தமிழகத்தில் பரவலான எதிர்ப்பைப் பெற்றுள்ளன என்பது நாம் அறிந்ததே.

      இவை ஒரு புறமிருக்க, புதிய கல்விக் கொள்கையில் மாற்றுத்திறனாளிகள் குறித்த கருத்துகள் எங்கே என்று தேடித் தேடிப் பார்க்கிறார்கள் மாற்றுத்திறனாளி அறிஞர்கள். சிறப்புத் தேவையுடைய, நாட்டின் மக்கள் தொகையில் ஒரு சதவிகிதமாக இருக்ககூடிய ஒரு தொகுப்பினர் குறித்து மிகக் குறைந்த அளவிலேயே இக்கொள்கை பேசியிருக்கிறது என்று அவர்கள் அங்கலாய்க்கிறார்கள்.

      ஏற்கெனவே இக்கொள்கையின் வரைவு சென்ற ஆண்டு வெளியிடப்பட்டபோதே நமது இதழ் உள்ளிட்ட பல அமைப்புகள் இது குறித்த கருத்துகளை ஒன்றிய அரசிற்கு அனுப்பியிருந்தோம். தற்போதும் அதற்கான முயற்சிகளை ஒத்த கருத்துடைய அறிஞர்களும், அமைப்புகளும் மேற்கொள்வர் என்பதில் மாற்றுக்கருத்து இலை. அவர்களுக்கு விரல்மொழியரின் சில ஆலோசனைகள்:

1. ஒவ்வொரு மாநிலமும், யூனியன் பிரதேசமும் இக்கல்விக் கொள்கையை அவை எப்படிச் செயல்படுத்த இருக்கின்றன என்று அறிக்கைகளை வழங்கும். அந்த வகையில் தமிழக அரசிற்கு நம்முடைய சிக்கல்களை எடுத்துரைத்து, இந்தக் கல்விக் கொள்கையின் அடிப்படையில் நமக்கான கல்வி வளர்ச்சியை உறுதிப்படுத்துமாறு கேட்கலாம். அனைவருக்குமான சமூக நீதியைத் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கும் தமிழகம் நம் ஆலோசனைகளை முழுமையாகப் புறக்கணித்துவிடாது என்று நம்புவோம்.

2. ஒன்றிய அரசின் சமூக நீதி & அதிகாரம் வழங்கல் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஊனமுற்றோர் நலத் துறையிடம் புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் மாற்றுத்திறனாளிகளுக்கான கல்வியை இந்திய அரசு எப்படி வழங்கப்போகிறது என்ற விரிவான அறிக்கையை வழங்க அழுத்தம் தரலாம். அந்த அறிக்கையில் நம் சிக்கல்களையும், அதற்கான தீர்வுகளையும் இடம்பெறச் செய்யலாம்.
நமக்கான பிரதிநிதித்துவம் இல்லை என்ற ஆதங்கமும், நம்மைப் பற்றிய குறைவான கருத்துகளே இக்கொள்கையில் இடம்பெற்றிருக்கின்றன என்ற குமுறலும் இரண்டாவது ஆலோசனை நிறைவேறினால் இல்லாமல் போகும்.

      இந்த முயற்சிகளோடுஒன்றிய கல்வி அமைச்சகத்திற்கும் (மனித வள மேம்பாட்டுத் துறை  என்பது தற்போது இப்படி பெயர் மாற்றப்பட்டு விட்டது) நம்முடைய கருத்துகளைத் தெரிவிக்கவேண்டும்.

      இந்த அடிப்படையிலோ, வேறு எவ்வகையில் முயன்றாவது மாற்றுத்திறனாளிகளுக்கான கல்வியை, குறிப்பாக சிறப்பு வளங்கள் தேவைப்படக்கூடிய பார்வைக் குறையுடையோருக்கான தரமான கல்வியை உறுதிப்படுத்த வேண்டியது கல்வியறிவு பெற்றிருக்கும் நம் கடமை.

      எதிர்காலத்திலும் பூரணசுந்தரிகளும், பாலநாகேந்திரன்களும், அவர்களைக் காட்டிலும் கீழ் நிலையில் இருப்பவர்களும் உயர்நிலையை அடையவேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இல்லையே! 

4 கருத்துகள்:

 1. ஆட்சிப் பணித் தேர்வில் வெற்றிபெற்ற இந்த இரு நண்பர்களுக்கும் எனது இனிய மனமார்ந்த நல்வாழ்த்துக்களை உரித்தாக்கிக் கொள்கிறேன்

  பதிலளிநீக்கு
 2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 3. விரல் மொழியரின் ஆலோசனைகள் சிறப்பானது.

  பதிலளிநீக்கு
 4. மாற்றுத்திரணாளிகளுக்கு கல்வி வழங்கினால்தானே நீங்கள், எல்லா இடங்களிலும் இடஒதிக்கீடு கேட்கிரீர்கள். அதனால் உங்கள் கல்வியில் கைவைத்தால் போதும் என்று முடிவுச் செய்துவிட்டார்கள்போலும். இந்த மங்குனி அரசு.

  பதிலளிநீக்கு