கருத்துக்களம்: ஆசைத்தம்பியும், அறிவுடை நம்பியும் - வினோத் சுப்பிரமணியன்

graphic இரண்டு நண்பர்கள் பேசிக்கொள்வது போல் அமைந்த கார்டூன் படம்
           
      ஆசைத்தம்பியும் அறிவுடை நம்பியும் நண்பர்கள். நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஏதாவது ஒன்றைப் பற்றி விவாதித்துக் கொண்டிருப்பார்கள். இருவரும் ஒரு தனியார் மென்பொருள் கம்பெனியில் வேலை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்பது கூடுதல் தகவல். அதைத் தவிர்த்துப் பார்த்தால் இணையதளத்தில் ஆய்வுக் கட்டுரைகளை எழுதிக் கொண்டிருப்பார்கள். அது அவர்கள் விரும்பிச் செய்வது என்பதால் அதைப்பற்றிய விவாதம் இப்போதெல்லாம் அதிகமாகிவிட்டது. அப்படித்தான் எதைப்பற்றியோ ஆய்வு செய்துவிட்டு வருகிறேன் என்று  சென்ற அறிவுடை நம்பியை எதிர்பார்த்து ஒரு பூங்காவில் காத்திருந்தான் ஆசைத்தம்பி. நேரம் அதிகமாகவே முகநூலைப் புரட்டிக்கொண்டிருந்தான்.

யாருடா அந்தப் பொண்ணு? இவ்வளவு நேரமா பாத்துக்கிட்டே இருக்க?” என்று கேட்டபடியே தம்பியின் பின்னால் வந்து நின்றான் நம்பி.

வாடா நம்பி வா.” என்று பின்னால் திரும்பி கூறிய தம்பி, “இந்தப் பொண்ணு ஒரு சமூக சேவகிப்பா. அதனாலத்தான் பாத்துக்கிட்டே இருக்கேன். கட்டுனா இந்த மாதிரி ஒருத்தியதான் கட்டனும்னு நாளைக்கு நம்ம டிப்பார்ட்டுமெண்டுல புதுசா வந்து எறங்க போர கம்பியூட்டர் மேல கூட சத்தியம் பன்னாலாம்னு இருக்கேன்.”

அப்படி என்ன பன்னிட்டா இந்தப் பொண்ணு?”

ஒரு பார்வை இல்லாதவருக்குப் பதிலி எழுத்தரா போயிருக்கா. அதுதான் ஸ்கிரைப்னு சொல்லுவாங்களே. அந்த மாதிரி.”
graphic தேர்வறையில் பார்வையற்றவர்கள் பதிலி எழுத்தருடன் தேர்வெழுதும் படம்

அடப்பாவி! அந்தச் சம்பவம் எந்த மாதிரி நடந்ததுனு தெரியுமா டா உனக்கு?” என்று அந்த முகநூல் பக்கத்தைப் பார்த்தபடியே தம்பியிடம் வினவினான் நம்பி.

ஏதோ பக்கத்துல இருந்து பாத்த மாதிரியே சொல்லுர? அந்தப் பொண்ணு பார்வையில்லாத யாரோ ஒருத்தருக்குப் பக்கம் பக்கமா எழுதிட்டு வந்துதான் இந்தப் போஸ்ட போட்டிருக்காங்க. போட்ட ஒருமணிநேரத்திலேயே 296 லைக்குத் தெரியுமா? இது நடந்து ஒரு வருஷம் ஆயிடுச்சு. இப்போ மறுபடியும் அந்தப் போஸ்டு ஷேர் ஆகவே பாத்துக்கிட்டு இருந்தேன்.”

உனக்கு தெரிஞ்சவங்களா தம்பி?”

இல்லடா. ஏதோ ஒரு குழுவுல பாத்த போஸ்டு.”

ஓஹோ. அதுக்கே இவ்வளவு அலப்பறையா? இருக்கட்டும். ஆனா ஒன்னுமட்டும் புரிஞ்சுக்கோ தம்பி. சோஷியல் மீடியாவுல போஸ்டு போடுரவங்க எல்லாம் சோஷியல் மைண்டட் கெடையாது. பெறகு பக்கம் பக்கமா எழுதிட்டு வந்துன்னு சொன்னியே, அவங்க எழுதுனது ஒரே ஒரு எழுத்து மட்டும் தான். அதுவும் அந்தப் பார்வை இல்லாதவரோட இனிஷியல். உடனே அங்கேயே வெச்சு ஒரு செல்ஃபி எடுத்து ஃபேஸ்புக்ல போட்டுட்டு கிளம்பிட்டாங்க அந்தப் பொண்ணு.”

என்னடா சொல்லுற நம்பி!” என்று ஆச்சர்யத்துடன் கேட்ட ஆசைத்தம்பி மறுபடியும் தொடர்ந்தான்.

பெறகு அவருக்கு யாருதான் பரிட்ச எழுதுனா? அவரு பேரு என்ன? எங்க நடந்துச்சு? எல்லாம் போகட்டும். இதெல்லாம் உனக்கு எப்படித் தெரியும்?” என்று தம்பி கேள்விகளை அடுக்க அவனது பக்கத்தில் வந்து அமர்ந்த நம்பி அமைதியாய் தன் பேச்சைத் தொடங்கினான்.

அந்தப் பார்வயில்லாதவரு பேரு ஹெச். வெங்கடேஷ். ஒரு பிரைவேட் காலேஜில எம்.. படிச்சிட்டு இருந்தப்போதான் ஒரு பரிட்சைல இந்தச் சம்பவம் நடந்துச்சு. அவருடைய இனிஷியலான ஹெச்ச மட்டும் எழுதிட்டு பெறகு செல்ஃபி எடுத்து போட்டதோட ஔட்கம்தான் இந்தப் போஸ்டு. அவருடைய சீனியருங்கதான் அவருக்கு அந்தப் பரிச்ச எழுதுனாங்க. ஒருத்தர் ரெண்டு பேரு இல்ல. நாலஞ்சு பேரு. எனக்கு கைவலிக்குது நீ எழுது, உனக்கு கை வலிக்குது நான் எழுதுறேன்னு மாத்தி மாத்தி ஒரு வழி பண்ணிட்டாங்க.”

என்னடா சொல்லுற? அப்பிடி எல்லாம் பண்ணா எப்பிடிடா ஒரு பார்வை இல்லாதவரு எக்சாம் எழுதுரது?”

பார்வையில்லாதவங்களுக்கு அதுதான் பெரிய பிரச்சின. ஸ்கிரைப் நால எத்தனையோ பார்வை இல்லாதவங்களோட லைஃபே மாறி இருக்கு. அதப்பத்தி விசாரிச்சு ஒரு கட்டுர எழுதலாம்னுதான் போனேன். ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு அனுபவம். சில பேருக்கு ஒரே மாதிரி அனுபவம். அதெல்லாம் கேட்கும்போது ஏதோ மாதிரி இருந்திச்சு.”

எனக்கு இதக் கேட்கும்போதே ஏதோ மாதிரி இருக்கு. ஒரே ஆளுக்கு ஒரே எக்சாமுக்கு நாலு பேரு. அதுவும் ஜாலியா வந்து போனாங்கனு சொல்லுற. அவங்களுக்கு வேணும்னா இது எக்ஸ்பீரியன்சா இருக்கலாம். ஆனா பார்வையில்லாதவங்களுக்கு இது எக்சாமாச்சே! அவங்க என்னடான்னா பாதியிலேயே போராங்கனு சொல்லுறஎன்று சீறினான் ஆசைத்தம்பி.

பாதியில இல்ல தம்பி. ஆரம்பத்துலேயே. நீ வேற நாளைக்கு சத்தியமெல்லாம் பண்ணப்போரனு சொல்லுற. நல்லா இரு நல்லா இரு.”

அடே! தெரியாம சொல்லிட்டேண்டா சாமி. நீ மத்த கதையச் சொல்லு.” என்றான் தம்பி அந்த முகநூல் பக்கத்தைப் பார்த்தபடி ஒருவித பயத்துடன்.

எல்லாருடைய கதைகளும் ஒரே மாதிரி இருக்கத்தான் செய்யுது தம்பி. அதுவும் குறிப்பா எல்லாருக்கும் அவங்களுடைய பொதுத் தேர்வுலதான் ஏடாகூடமான ஸ்கிரைபெல்லாம் வந்து சேர்ந்துடுராங்க.” என்ற நம்பி தொடர்ந்தான்.

லஷ்மி நாராயனன்னு ஒருத்தருக்கு வயசான ஒரு ஸ்கிரைப். தூரமா உக்காந்துக்கிட்டு இவர கத்தவிட்டுட்டாங்க. அதேமாதிரி மகேந்திரன் னு ஒருத்தரு. அவரு பன்னிரெண்டாவது பரிச்ச எழுதுனப்போ எழுத வந்தவருக்குச் சரியா காது கேட்கலையாம்.”

என்னது? என்னது!”

கரக்ட். இப்பிடி நீ கேட்ட மாதிரியேதான் அன்னைக்கு அந்த மகேந்திரன் அப்பிடிங்குரவருக்கு எழுதவந்தவரும் கேட்டுக்கிட்டே இருந்தாராம். இவர் என்ன சொல்லுராருனு புரியாம அவர் கத்த, எப்படியாச்சும் எழுதிரனுமேனு இவர் கத்த, எதுக்குடா கத்துரீங்கனு அவருடைய நண்பர்கள் இவர பாத்துக் கத்த, வருஷம் ஃபுல்லா கற்ற கற்றல் எல்லாம் கத்தலாயிப்போச்சு அந்த எக்சாம் நடந்த எடத்துல.”

எது காது கேக்காதவரா! அப்போ ரிசல்ட்டு?”

தப்பிச்சிட்டாரு. ஆனா நெறைய பேரு அவங்க நெனச்ச மார்க் வராம இது மாதிரியான ஸ்கிரைப்னால கொறஞ்ச மார்க்தான் வாங்கி இருக்காங்கலாம். முதல் மார்க் வாங்குறவங்க பின்னாடி போரதும், சுமாரா படிக்குறவங்க முதல் மார்க் வாங்குரதுமெல்லாம் ஸ்கிரைபால நடந்திருக்கு. வத்சலா அப்பிடிங்குரவங்களுக்கெல்லாம் ரெண்டு பொதுத் தேர்வுலையும் ஸ்கிரைப்னால மார்க் அடி வாங்கிடிச்சு. இத்தனைக்கும் நல்லா படிக்குறவங்கலாம். ஸ்கூல்ல ஃபர்ஸ்டு வர ஸ்டூடண்டாம்.”

ஏன், அவங்களுக்கும் காது கேக்காத ஸ்கிரைப் வந்தாங்களா?”

இல்ல. நல்ல ஸ்கிரைப்தான். ஆனா இவங்க சொன்னத எழுதாம சுருக்கி சுருக்கி எழுதி இருக்காங்க. அதுவும் எல்லா பரிட்சையும் முடிஞ்சதுக்கப்புரம்தான் வத்சலாவுக்குத் தெரியுமாம். நீ நெறைய சொன்ன நான் சுருக்கிட்டேன் அப்படினு கூலா சொன்னாங்கலாம் அவங்களுக்கு எழுத வந்தவங்க.”

மனசாட்சி இருக்குற யாரும் இப்படி எல்லாம் செய்யவே மாட்டாங்க டா அறிவு. எவ்வளவு எழுதனும், எந்த அளவுக்கு எழுதனும் அப்படிங்குரதெல்லாம் எழுதுறவங்க முடிவு செய்யனுமா? இல்ல எழுத வர்றவங்க முடிவு செய்யனுமா?”

எழுதுறவங்கதான். அப்படி எழுத வந்தவங்க முடிவு செய்யாம இருந்திருந்தா முன்னாடி சொன்னேனே மகேந்திரன். அவரு முதல் முறையே அந்த நெட் பரிட்சைய க்லியர் பண்ணி இருப்பாரு.”

ஏன்? என்னாச்சு?”

அவருக்கு எழுத வந்தவங்களும் அதே பரிட்சைக்கு தயார் செஞ்சவங்கதான். அதனால இவரோட பேப்பர்ல அவங்க மனசுல இருந்ததெல்லாத்தையும் கொட்டிட்டாங்க.”

ஓஹோ. இப்போ கஷ்ட பட்டு படிச்சு க்லியர் பண்ண முடியாம போச்சே. இவர் மனசுல இருக்குறத இப்போ இவர் எங்க போயி கொட்டுறது?”

எங்கேயும் போயி கொட்ட முடியாது. கொட்டுனாலும் பயனில்ல. எப்படியோ இன்னுமொரு ரெண்டு மூனு அட்டெம்ப்டு போட்டு க்லியர் பண்ணிட்டாரு. அதுவாச்சும் பரவாயில்லயே. ஷியாமலானு ஒருத்தங்க. அவங்க காலேஜ் படிக்கும்போது படிக்கவே தெரியாத ஒரு ஸ்கிரைப்னால எக்சாம் ஒழுங்கா எழுத முடியாம அரியர் வாங்குனாங்க. அவங்களுக்கு அப்பா கெடையாது. அப்பா இல்லாம அரியரில்லாம கல்லூரி படிப்ப முடிக்குறவங்களுக்கு அந்தக் காலேஜ் ஏதோ காசு கொடுக்கும் போல இருக்கு. ஒரு ஊக்கத்தொக மாதிரினு வெச்சிக்கோயேன்.”

அது அவங்களுக்குக் கெடைக்காம போச்சா?”

ஆமா. எப்பிடிக் கெடைக்கும்? இத்தனைக்கும் நல்லா படிக்குற பொண்ணாம். இப்போ நல்ல வேலையில இருக்காங்க.”

நல்லது. ஆனா இப்படி ஒழுங்கா வாசிக்கத் தெரியாம, ஒழுங்கா எழுதத் தெரியாம ஏதோ கடமைக்குனு எழுத வரவங்கள வேணாம்னு அந்தப் பார்வயில்லாதவங்க சொல்லலாம்ல?”

சொல்லலாம்தான். ஆனா யாரு கேட்குறது? பெரும்பாலான எடத்துல சொன்னாலும் அங்க இருக்கவங்க என்ன பதில் சொல்லுவாங்க தெரியுமா? இப்போ இருக்குற நெலமைல இன்னொரு ஆள தேட முடியாது. அட்ஜச்ட் பண்ணிக்கோங்கனு சிம்பிலா சொல்லிடுவாங்க.”

ஒரு காலேஜில என்னடானா ஒரே ஆளுக்கு நாலு பேரு வந்து எழுதுறாங்கனு சொல்லுற. இன்னொரு எடத்துல என்னடான்னா ஆளு கெடைக்குறதே கஷ்டம்னு சொல்லுற.” என்று சலித்துக்கொண்டான் ஆசைத்தம்பி.

நெஜமாதாண்டா. மலர்னு ஒருத்தங்க, முத்துதுரைனு ஒருத்தரு, அனாசீர்னு ஒருத்தரு. இவங்க எல்லாம் எழுதுறதுக்கு ஆளத்தேடியே அவங்களோட காலேஜ் டேச கழிச்சிருக்காங்க. நமக்கெல்லாம் பரிட்சை எழுதும்போது பதில்லதான் சந்தேகம் வரும். ஆனா ஆள் கெடைக்குறவரைக்கும் அவங்களுக்கெல்லாம் பரிட்சையே சந்தேகம்தான். அதையும் மீறி யாராச்சும் கெடச்சாலும் ஒரு சிலருக்கு இந்த மாதிரி மாட்டிடுறாங்க. எப்பிடியாச்சும் பரிட்சைய எழுதிடலாம்னு ஒரு நம்பிக்கைல விஷுவலி இம்பேர்டும் தைரியமா எக்சாம ஃபேஸ் பண்ணிடுறாங்க. பெரும்பாலான நேரத்துல மோசமான ஸ்கிரைப் வந்தா கூட அவங்க மனசு கஷ்டப்படக் கூடாதுனு இவங்க அமைதியா இருந்திடுறாங்க. நெலம ரொம்ப மோசமாம் போனா மட்டும்தாண் பார்வையில்லாதவங்க எழுத வந்தவங்களுக்கு எதிரா செயல்படுறாங்க. அப்போ மட்டும் ஆள மாத்தித் தருவாங்க.”

அப்படியா? எழுத வந்தவங்கள இவங்க வேணாம்னு சொன்னா ஆள மாத்திக் குடுக்குறாங்களா என்ன? நீதான் பெரும்பாலான நேரத்துல அது நடக்குறது இல்லனு சொன்னியே!”

ஆமா. ஆனா நெலம கைமீறி போச்சுனா என்ன பண்ணுறது? அவ்வளவுநாள் கஷ்டப்பட்டுப் படிச்சதெல்லாம் யாரோ ஒருத்தரால காலியாகுதுனா எவ்வளவு பேரு சும்மா இருப்பாங்க? சங்கிலின்னு ஒருத்தரு எழுதவந்தவங்களுக்கு வாசிக்கவே தெரியலனு சொல்லி, ‘என் வாழ்க்கையே உங்க கைலதான் இருக்கு. நீங்க இன்னைக்கு ஏதோ எழுதிட்டு போயிடுவீங்க. நாளைக்கு அரியர் விழுந்திச்சுனா நாந்தான் அலையனும்அப்பிடினு ஓப்பனாவே எழுத வந்தவங்க கிட்ட சொல்ல அந்தப் பொண்ணு எழுந்து போக இன்னொரு பையன் வந்து எழுதுனானாம். அந்த மாதிரி ஷியாமலா சொல்லல. எழுத வரவங்க மனசு கஷ்டப்பட கூடாதுனு விட்டிருப்பாங்க.”

எது எப்படி இருந்தாலும்என்று ஏதோ சொல்லவந்து என்ன சொல்வதென்று தெரியாமல் அமைதியானான் ஆசைத்தம்பி.
அதன் பின் நம்பியும் சில நிமிடங்கள் பேசாமல் எதையோ யோசித்துக்கொண்டிருந்தான்.

எதப்பத்திடா யோசிக்குற?” என்று தம்பி கேட்க,

சுபா அப்பிடினு ஒருத்தங்க. அவங்கள பத்திதான் யோசிச்சுக்கிட்டிருந்தேன்.” என்றான் நம்பி.

நீ இவ்வளவு தூரம் யோசிக்குற அப்பிடினா ஏதோ ரொம்ப கசப்பான அனுபவம் அவங்களுக்கு இருந்திருக்கும் போல இருக்கே.”

ஆமாம். ரொம்ப கசப்பான அனுபவம்தான். ஒருத்தங்களுக்கு ஸ்கிரைப் நல்லா அமையலனாக் கூட பரவாயில்ல. ஆனா அத வெளிப்படுத்தும்போது அந்தப் பார்வை இல்லாதவங்கள அவமானப் படுத்ததான் நெறைய பேரு முயற்சிக்கிறாங்க.”

விஷையத்தச் சொல்லுடா .”

அந்த சுபாவுக்கு எழுத வந்தவங்களுக்கு தமிழ் தெரியல. ரொம்ப மெதுவா எழுதுறாங்க. ஒரு லைனே அரை மணி நேரம் போகுது. இவங்க எழுந்து சூப்பர்வைசர் கிட்ட புகார் குடுக்குறாங்க.”

சரி.”

ஆனா அந்த மேற்பார்வையாளர் மேலோட்டமா பாத்துட்டுஇவங்க நல்லாத்தான் எழுதுறாங்க. உங்களுக்குப் பாக்க முடியாததுனால தெரியலஅப்பிடினு சொல்லிட்டுப் போயாச்சு.

ஓஹோ.”

பெறகு சுபாவால சிச்சிவேஷன கண்ட்ரோல் பண்ண முடியல. வந்தவங்களும் வேகமா எழுதல. அப்போ அந்தப் பக்கமா போய்க்கிட்டிருந்த கண்ட்ரோலர கூப்பிட்டு விஷயத்தச் சொல்லியிருக்காங்க. அவங்களும் பேப்பர பாத்துட்டு எழுத வந்தவங்களுக்குதான் சப்போர்ட்.”

ம்ம்... எனக்குப் புரியுது. எழுதவந்தவங்க ரொம்ப ஸ்லோவா எழுதுனாலும் கரக்டா எழுதியிருக்காங்க. அதனால சூப்பர்வைசராலேயோ இல்ல கண்ட்ரோலராலேயோ சுபாவோட பிரச்சினைய புரிஞ்சிக்க முடியல.”

கரக்ட். ஆனா சுபா மட்டும் தொடர்ந்து ஆர்க்யூ பண்ணியிருக்காங்க. இந்த ஸ்கிரைப் வேணாம்னும் அரியர் வந்தாலும் பரவாயில்லனும் சொல்லி இருக்காங்க. எதுக்கு இப்பிடி பிஹேவ் பண்ணுறீங்கனு அந்த ஸ்கிரைபே கேட்டிருக்காங்க.”

பின்ன, ஒரு எழுத வந்தவங்கள இன்சல்ட் பண்ணா, ஏதாச்சும் ஒரு எடத்துல ரியாக்ட் பண்ணத்தானே செய்வாங்க. பத்தாததுக்கு அங்கிருந்தவங்க அந்த ஸ்கிரைப்கு ஃபுல் சப்போர்ட் வேற. எல்லாத்துக்கும் மேல ஸ்கிரைபும் ஒரு பெண்தானே? அவங்களுக்கும் ஒரு அச்சம், ஒரு நாணம், ஒரு அவமானம் எல்லாம் இருக்கத்தானே செய்யும்?”

நீ அடங்கு.”

சரி சரி, நீ விட்டதுல இருந்து தொடங்கு.”

அவங்களோட ஆசிரியரக் கூப்பிடச் சொல்லி சுபா வாதிட்டிருக்காங்க. கடைசியா சுபா மேல புகார் கொடுக்கவே அந்த ஆசிரியரக் கூப்பிட்டிருக்காங்க. கொஞ்ச நேரத்துல அவங்களும் வந்து சேந்தாங்க.”

சுற்றி வளைக்கப்பட்டாரா சுபா?”

நீ என்ன நெனைக்குறனு புரியுது. அதுதான் இல்ல. அந்த ஆசிரியர் இவங்கள ஒரு அஞ்சு நிமிஷம் எழுதச் சொல்லியிருக்காங்க. நீ எழுது நான் பாக்குறேன்னு சொல்லியிருக்காங்க.”

சூப்பர்! அப்புரம் என்னாச்சு?”

தீர்ப்பு சுபாவுக்குச் சாதகமாதான் வந்திச்சு. அஞ்சு நிமிஷமா அவங்க எழுதுனத கவனிச்ச அந்த ஆசிரியர், ‘இந்தப் பொண்ணு நல்லா எழுதுற பொண்ணு. இவ்வளவு ஸ்லோவா எழுதுனா எல்லாத்தையும் எழுதி முடிக்க முடியாது. அதனால ஆள மாத்துங்க.’ அப்பிடினு சொல்லி மாத்திக் குடுத்தாங்களாம்.”

போடு. அவங்க டீச்சரில்ல. ஒரு நீதி தேவத.”

நீ நீதினு சொன்னதும்தான் எனக்கு இன்னொரு சம்பவம் ஞாபகம் வருது. அது ஒரு ஹைகோர்ட் சம்பவம்.”

யாருக்கு?”

இவங்களுக்கேதான்.”

! இந்தச் சம்பவம் ஹைகோர்ட் வரைக்கும் போயிடுச்சா?”

இன்னொரு சம்பவம்னு சொன்னேன்ல.”

சரி சொல்லு.”

ஹைகோர்ட்ல ஒரு கட்டுரைப் போட்டி. சுபாவும் கலந்திருக்காங்க. அந்தப் போட்டிக்குப் பொறுப்பான மேடம் ஒருத்தங்க சுபா கூட படிக்குறவங்களையே எழுத வெச்சிருக்காங்க. நெறைய எழுத்துப்பிழை வந்துச்சாம். அந்தக் கட்டுரையப் பாத்த ஹைகோர்ட்டச் சேந்த கரக்ஷன் பண்ணுர சார் ஒருத்தரு, ‘இவ்வளவு நல்லா எழுதியிருக்காங்க ஆனா ஏன் இவ்வளவு ஸ்பெல்லிங் மிஸ்டேக்அப்பிடினு கேட்டிருக்காரு. இந்த மேடம் விஷயத்தச் சொல்லியிருக்காங்க. ’பாய்ண்ட்ஸெல்லாம் ரொம்ப நல்லா இருக்கு ஆனா எழுத்துப்பிழை நெறைய இருக்குறதுனால பரிசு தர முடியாது. சிறப்புப் பரிசா ஒரு 1000 ரூபாய் வேணும்னா தரலாம்அப்பிடினு சொல்லி இருக்காரு.”

முதல் பரிசு எவ்வளவாம்?”

”25,000. அன்னைக்குத் தேதிக்கு அந்தக் குடும்பத்துக்கு அந்தப் பணம் ரொம்ப உதவியா இருந்திருக்கும்னு சொன்னாங்க சுபா. காம்படிஷன் தான? அவங்களையே ஸ்கிரைப கூட்டிட்டுப்போக அனுமதிச்சிருக்கலாம்.”

ச்சே. நான் மட்டும் அவங்களுக்கு எழுதி இருந்தா

அந்த ஆயிரமும் கிடைக்காம போயிருக்கும். அதுதான?”

அடேய்! என்னையப் பாத்தா எப்பிடித் தெரியுது உனக்கு? ஆனா ஒன்னுமட்டும் புரியுது. என்னதாண் படிச்சிருந்தாலும் பார்வையில்லாதவங்களப் பொருத்தவரைக்கும் பரிட்ச விஷயத்துல அதிஷ்டம் வேணும்ல?”

ஆமா. அது உண்மைதான். அவங்களப் பொருத்தவரைக்கும் ஸ்கிரைப்தான் எல்லாமே. அவ்வளவு ஏன், தமிழ்மணினு ஒரு பிலைண்ட் கேண்டிடேட் பரிட்ச எழுதும்போது ரூட் ஆஃப் அப்பிடிங்குற வார்த்தைய பல முற சொல்லியும் அந்த ஸ்கிரைபுக்குப் புரியாம ஏதோ ஒரு குறியீடப் போட்டிருக்காரு. அந்தப் பக்கமா வந்த இன்னொரு வாத்தியாருதான் ரூட் ஆஃப் னா இப்பிடி போடனும்னு சொல்லிக்கொடுத்திருக்காரு. அவ்வளவுதான். எழுத வந்தவருமேல தமிழ்மணிக்கு நம்பிக்க போச்சு. ஒரு மணி நேரமா அந்த ரூட் ஆஃப் அப்பிடிங்குற குறியீட பல முற பயண்படுத்தினாராம். எல்லா முறையும் அந்த ஸ்கிரைப் தப்பாத்தான் போட்டிருக்காரு. தமிழ்மணி கடுப்பாகியிருக்காரு. அடுத்துவந்த கேள்விக்கெல்லாம் தெரியாது தெரியாதுனு சொல்லியே தமிழ்மணி அந்த மொத்த பரிட்சையையும் விட்டுட்டு வந்திருக்கிறாரு. மொத்தமே 17 மார்க் தான் வாங்கியும் இருக்காரு.”

ஆனா இந்த விஷயத்துல அந்த கேண்டிடேட் டென்ஷனாகாம இருந்திருக்கலாம். அவரால முடிஞ்ச முயற்சிய கடைசிவரைக்கும் செஞ்சிருக்கலாம்னு தோனுது.”

எனக்கும் அப்பிடித்தான் தோனுச்சு. ஆனா அந்த நேரத்துல தமிழ்மணியோட மனநிலை எப்படி இருந்துச்சோ அவருக்குதானே தெரியும். ஆனா இதே மாதிரி நெலம செலின் அப்பிடிங்குறவங்களுக்கு வந்துச்சாம். அன்னைக்கு அவங்களுக்குக் கணக்குப் பதிவியல் பரிட்சையாம். இந்த மாதிரியான பாடத்த எழுத வர்றவங்களுக்குக் கொஞ்சம் அதப்பத்தின புரிதல் இருக்கனும். ஆனா செலினுக்கு எழுத வந்தவங்களுக்குக் கணெக்குப் பதிவியல்  பத்தி எதுவுமே தெரியாதாம். ’போனமுற நான் அக்கவுன்ட்ஸ் எழுதி ஒரு பையன் ஃபெயிலாயிட்டானே!’ அப்படினு செலின் கிட்ட சொல்லி இருக்காங்க. செலினுக்குப் பகீருனாகிப்போயிருக்கு. சரி இதுதான் விதினா என்ன பண்ணமுடியும்னு நெனச்சி பரிட்சைய எழுதி இருக்காங்க. 40 மார்க் விட்டுட்டாங்களாம். எழுதுன 160 மார்க் 145 வாங்கி இருக்காங்க. மத்த பாடத்துல எல்லாம் 190க்கு மேல. இதுக்கு என்ன சொல்லுற?”

அடப்பாவமே. நல்ல எழுத்தர் கெடச்சு எழுதியிருந்தா பள்ளியிலயாச்சும் முதல் மார்க் வந்திருப்பாங்க இல்ல?”

நிச்சயமா. அந்தச் சம்பவம் அவங்களுக்குள்ள எவ்வளவு பெரிய வலிய உண்டாக்கியிருந்திருக்கும்னு தெரியல. ஆனா சிரிச்சிக்கிட்டேதான் அவங்களோட இந்த வலிய நம்மக்கிட்ட பகிர்ந்துக்கிட்டாங்க செலின்.”

பேசாம இந்த மாதிரி ஆளுங்க எல்லாம் எழுத வராம வீட்டிலேயே தூங்கிட்டா கூட நல்லா இருக்கும்னு தோனுது.”

அதனாலதான் ஒரு பதிலி எழுத்தர் பரிட்சை அரங்குக்கு வந்து நீ சொன்னத அப்படியே செஞ்சிருக்காரு தம்பி.”

புரியல.”

ராகேஷ் அப்பிடிங்குறவருக்கு வந்த ஸ்கிரைப் இவர் சொல்ல சொல்ல அமைதியாவே இருந்திருக்காரு. ஒரு இம், ஒரு உம் அப்பிடிங்குற ரியாக்ஷனெல்லாம் ஒன்னுமில்லையாம். எழுதுறாங்களா இல்லாட்டி எழுதிட்டாங்களா னு தெரிஞ்சாதான அடுத்தவார்த்தைய சொல்ல முடியும்? ஆனா இவர் கிட்ட இருந்து எப்பவுமே நோ ரியாக்ஷந்தானாம். பத்தாத கொறைக்கு அறிவியல் பரிட்சைல தூங்கியே தூங்கிட்டாராம் ராகேஷுக்கு எழுத வந்தவரு.”

என்னது தூங்கிட்டாரா?”

ஆமா.”

இப்பிடியெல்லாம் பண்ணதுக்கு அவரப் பாத்து யாராச்சும் சிரிக்கல?”

அது எனக்குத் தெரியாது. ஆனா இன்னொரு சம்பவமொன்னு நினைவுக்கு வருது. முத்துச் செல்வினு ஒருத்தங்க அவங்க பரிட்சைல ஆங்கிலத்துல ஏதோ சொல்லும்போது அவங்களுக்கு எழுத வந்தவங்க ஏளனமா அவங்களோட இங்கிலீஷப் பாத்து சிரிச்சிருக்காங்க.”

உடனே அந்த முத்துச் செல்வி இங்கிலீஷ வெருத்திருப்பாங்களே?”

அத நீ வேணும்னா செய்வ. ஆனா அதுக்கப்புரம்தான் அவங்க ஆங்கிலத்த நல்லாக் கத்துக்கிட்டு இப்போ அதுல சரளமா பேசவும், எழுதவும் செய்யுறாங்க.”

சூப்பர் டா அறிவு. சூப்பர் சூப்பர். ஆனா எல்லாருக்குமே மோசமான பதிலி எழுத்தர்தான் அமையுறாங்களா? வந்ததுல இருந்து நீ அப்படிப்பட்ட அனுபவமாத்தான சொல்லிக்கிட்டிருக்க?”

நிச்சயமா இல்லடா ஆச. இல்லவே இல்ல. எவ்வளவோ நல்ல பதிலி எழுத்தர்களெல்லாம் வந்து கண் பார்வை இல்லாதவங்களோட வாழ்க்கைய பெரிய பெரிய உயரத்துக்கெல்லாம் கொண்டு போயிருக்காங்க. ஜானி னு ஒரு ஸ்கிரைப். மணிகண்டன் அப்பிடிங்குறவர எக்சாம் ஹால்ல மோட்டிவேட் பண்ணியே திருவண்ணாமலை மாவட்டத்துல இரண்டாவதா வரவெச்சிருக்காங்க. வீரபாகுனு ஒருத்தர். நசுருதீன்னு ஒருத்தருக்கு வந்த ஸ்கிரைப் கணக்குப்பாடம் எழுதத் தினற, ரிசோர்ஸ் டீச்சரா இருந்தாலும் ரிஸ்க் எடுத்து எழுதிக் கொடுத்திருக்காரு. இதவிட நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்னு இருக்கு. ராணினு ஒருத்தங்க பூபதினு ஒருத்தருக்கு அவரோட பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுல பதிலி எழுத்தரா வந்து எழுதியிருக்காங்க. ஆனா அவங்களுக்கு முதுகுத் தண்டுல பிரச்சன இருந்திருக்கு. இருந்தாலும் வலி மாத்திர, ஊசி எல்லாம் போட்டுட்டுவந்து எழுதியிருக்காங்க. உட்காந்தா வேகமா எழுத முடியாதுனு அந்த கேண்டிடேட் பூபதிய மட்டும் உட்காரச் சொல்லிட்டு நின்னுக்கிட்டே எழுதி இருக்காங்கன்னா பாத்துக்கோயேன்.”
ஆசைத்தம்பியின் கண் கலங்கியது.

graphic பார்வையற்ற ஓருவர் பதிலி எழுத்தரின் துணையுடன் தேர்வெழுதும் படம்

வரதராஜன்னு ஒருத்தருக்கு ஒரு பஞ்சாப்காரப் பொண்ணு வந்து பரிட்ச எழுதியிருக்காங்க. இவங்க பரிட்ச எழுதிக்கிட்டிருந்த நேரத்துல சில கண்ணு தெரிஞ்ச பசங்க வந்து சும்மா சீன் போட்டுக்கிட்டு இருந்திருக்காங்க. இந்த பொண்ணு மொரச்சிருக்குப் போயிட்டாங்கலாம். பரிட்ச முடியறுதுக்குள்ளையே அந்த இன்விஜிலேட்டர் அவருக்குத் தெரிஞ்ச ஆங்கிலத்துல வந்து இவங்கள முடிக்கச் சொல்லியிருக்காரு. ’யூ டோண்ட் பாதர் அபௌட் தீஸ் இடியாடிக் பீப்புல். யூ கீப் டெல்லிங் வரதராஜன்அப்பிடினு அந்தப் பஞ்சாப்கார ஸ்கிரைப் சொல்லியிருக்காங்க. வரதராஜனும் தொடர்ந்து சொல்லிக்கிட்டிருந்திருக்காரு. மறுபடியும் அந்த இன்விஜிலேட்டர் வந்து தொல்ல கொடுக்க. ஒருவாட்டி மொரச்சாங்களாம் இந்தப் பஞ்சாப் ஸ்கிரைப். அமைதியாப் போயிட்டாராம் அந்த இன்விஜிலேட்டர்.”

இன்விஜிலேட்டரையேவா? அதுசரி. ஆனா இந்த உலகம் ஒட்டுமொத்தமா தப்பா புரிஞ்சிக்கிட்டிருக்க உண்மை ஒன்னு இருக்கு நம்பி. அதுதான் வரலாறுன்னு நீங்களும் நம்பிக்கிட்டிருக்கீங்க.”

இப்போ நான் சொன்னதுக்கும் நீ பேசுரதுக்கும் என்ன சம்மந்தம்னு தெரியலயே. அது என்னடா தம்பி வரலாறு? அதையும் நாங்க எல்லாரும் நம்புறோம்னு வேற சொல்லுற.”

ஆமாம் நீங்க எல்லாரும்தான். என்ன மாதிரி ஆளுங்க அதெல்லாம் நம்ப மாட்டோம். அது என்ன தெரியுமா. நெருப்பு. அந்த நெருப்பு முதன்முதலா கல்லுல இருந்து உருவானதா நீங்க நம்புறீங்க. ஆனா அது பொய். ஏதோ ஒரு பொண்ணோட கண்ணுல இருந்துதான் நெருப்பு உருவாகியிருக்கனும். அந்தக் காலத்திலேயே ஏதோ ஒரு பொண்ணோட கண் பார்வையிலிருந்து உருவான பவர்ஃபுல் ப்ராடக்டுதாண்டா நெருப்பு.”

இதைக்கேட்டு கடுப்பான நம்பி அன்று அந்தப் பஞ்சாப் ஸ்கிரைப் இன்விஜிலேட்டரை என்ன செய்தாரோ அதையே தம்பிக்கும் செய்துவிட்டு பேச்சைத் தொடர்ந்தான்.

லலிதானு ஒரு பதிலி எழுத்தர் வெங்கடேசன்னு பதினொன்றாம் வகுப்பு படிக்குற மானவனுக்கு எழுதப் போனாங்க. (இவர் B. வெங்கடேசன்) வெங்கடேசனுடைய ஏழ்மையான நிலையப் பாத்துட்டு அவருடைய பன்னிரண்டாம் வகுப்பு, அவருடைய காலேஜ், அப்புரம் அவருடைய பி.எட். கல்விக் கட்டனத்தையெல்லாம் இவங்களே முழூசாக் கட்டிப் படிக்க வெச்சிருக்காங்க. அப்பிடினா அவங்களுக்கு எவ்வளவு பெரிய மனசு இருந்திருக்கனும்? அதுக்கப்புரம் வெங்கடேசன் வேலைல சேந்தாரு. முதல் மாசச் சம்பளத்த அப்படியே கொண்டுபோயி அந்த லலிதா மேடம் கிட்ட கொடுத்து அவங்களோட பாதத்துல விழுந்திருக்காரு. அவங்க இதெல்லாம் இவர் கிட்ட எதிர்பாக்கல. நீதான் என் மூத்தமகன் அப்படினு ரொம்ப நெகிழ்ச்சியாப் பேசியிருக்காங்க.”

ஆசைத்தம்பியின் கண்கள் மீண்டும் ஒருமுறை கலங்கின. கண்களைத் துடைத்துவிட்டு ஆசைத்தம்பிதான் பேச்சை ஆரம்பித்தான்.

சரி நம்பி. நெறையா கசப்பான அனுபவமும் இருக்கு. இந்த மாதிரி நேர்மறையான அனுபவமும் இருக்கு. தவிர பார்வையில்லாதவங்க தன்னிச்சையா கணினிய இயக்குற வசதி எல்லாம் வந்திடிச்சு. ஸ்கிரைப் இல்லாமலேயே இவங்களால தேர்வு எழுதிற முடியும். இப்போ இந்த ஸ்கிரைப் சிஸ்டம் வேணும்னு உன்னுடைய கட்டுரைய முடிக்கப் போறியா இல்ல வேணாம்னு முடிக்கப் போறியா?” என்று கேட்டான்.

இன்னைக்குத் தேதிக்குத் தேர்வு விஷயத்துல கண் பார்வையில்லாதவங்க அடுத்தவங்களச் சார்ந்து இருக்கவேண்டிய அவசியம் இல்லனுதான் நான் நினைக்கிறேன். அவங்க எல்லாரும் தன்னிச்சையா கணினி கத்துக்கிட்டு தன்னிச்சையாத் தேர்வு எழுதுனா அவர்களுக்குத் தன்னம்பிக்கையும் வளரும் சமூதாயத்துல அவர்களுடைய மதிப்பும் உயரும்னு தோனுது.” என்று சொல்லியபடி எழுந்தான் அறிவுடைநம்பி. இருவரும் அங்கிருந்து கிளம்பினர்.

(கட்டுரையாளர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பணியாற்றுகிறார். ). slvinothblogspot.com  என்ற தளத்தில் தொடர்ந்து எழுதிவருகிறார்)
தொடர்புக்கு: slvinoth91@gmail.com

3 கருத்துகள்:

 1. அனைவரது கருத்துக்களையும் அருமையாக தொகுத்துளீர்கள்

  பதிலளிநீக்கு
 2. அருமையான பதிவு எத்தனையோ பேரின் அனுபவங்களை ஒருங்கிணைத்த ஒரு பதிவு. மகேந்திரன் அண்ணன் அவர்களுக்கு ஏற்பட்ட அனுபவம் போலவே எனக்கும் பனிரெண்டாம் வகுப்பில் ஒரு பரிட்சைக்கு ஏற்பட்டது நானும் அந்த பரீட்சையில் 123 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றேன். இதுபோன்றே நான் கல்லூரி படிக்கும் பொழுதும் எனக்கு எழுத வந்தவர்கள் நான் சொல்ல சொல்ல எழுதாமல் போனை நோண்டிக் கொண்டு கொண்டிருந்தார்கள். அதை நான் பார்த்த மாத்திரத்திலேயே எனக்கு கோபம் வந்துவிட்டது பேப்பரைக் கொடுத்து விட்டுச் செல்லலாம் என்று கூறினேன் அவர்களும் கொடுத்து விட்டுச் சென்று விட்டார்கள் நான் கல்லூரியில் வைத்த ஒரு ஸஅறிஞர் அதுதான். இந்த கட்டுரையை படித்த பொழுது எனக்கு அந்த இரு சம்பவங்களும் நினைவுக்கு வந்தன.

  பதிலளிநீக்கு
 3. சிரப்பான உரையாடல். தம்பிக்கும், நம்பிக்கும் வாழ்த்துக்கள்.
  உங்கள் உரையாடல்களில் நெரய சமூக பிரச்சனைகள் வெடித்து சிதரட்டும்.

  பதிலளிநீக்கு