அரசியலில் நாம்-12: மல்லை கோ. மோகனன் - ரா. பாலகணேசன்

graphic கோ. மோகனன் அவர்கள் மு.க. ஸ்டாலினுடன் இருக்கும் படம்
கோ. மோகனன்

  வணக்கம் வாசகர்களே!

      இந்த இதழில் நாம் சந்திக்கவிருக்கும் பார்வை மாற்றுத்திறனாளி அரசியலாளர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாமல்லபுரம் நகர இலக்கிய அணிச் செயலாளரான மல்லை கோ. மோகனன் அவர்கள்.

கவிஞர்; பேச்சாளர்; செயல்பாட்டாளர் என்று தீவிரமாக இயங்கிவரும் இவருக்கு வயது 64.

குடும்பப் பின்னணி

      தேநீர் கடை நடத்திக்கொண்டிருந்த திரு. கோபால் அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது தீவிரப் பற்று கொண்டவர். அவரது மகன்தான் திரு. மோகனன் அவர்கள். திரு. கோபால் கழகப் பணி மேற்கொண்டு ஒரு கட்டத்தில் மாமல்லபுரம் நகர அவைத் தலைவராகவும் இருந்திருக்கிறார்.

      மோகனன் மட்டுமல்ல; அவரது தம்பியான திரு. அன்புராஜன் அவர்களும் பார்வை மாற்றுத்திறனாளிதான். அன்புராஜன் தற்போது தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் சென்னை மாவட்ட அலுவலகத்தில் தொழில் வழிகாட்டி அலுவலராகப் (vocational guidance officer) பணியாற்றிவருகிறார்.

      8 வயதில்தான் தனக்குப் பார்வை குறைபாடு இருப்பதை உணர்ந்ததாகக் குறிப்பிடுகிறார் திரு. மோகனன். ஆனாலும், வழக்கமான பள்ளியிலேயே PUC வரை படித்து முடித்திருக்கிறார்.

      இவருக்குப் பார்வை கிடைக்கவேண்டும் என இவரது தந்தை தொடர்ந்து பல விதங்களில் முயன்றிருக்கிறார். ஒரு கட்டத்தில் அது இவரையே சோர்வுக்குள்ளாக்கியதால், ஒத்துழைக்க மறுத்துவிட்டார். மூத்த தி.மு. செயல்பாட்டாளர் ஆர்க்காடு வீராச்சாமி, மாவட்டச் செயலாளராக இருந்த கன்டோன்மென்ட் சண்முகம் ஆகியோர் தனக்குப் பார்வை கிடைக்க பல வகைகளில் முயன்றதாகக் குறிப்பிடுகிறார்.

      இவருக்கு 2 மகள்கள்.  2 மகன்கள் விபத்தில் இளம் வயதிலேயே இறந்துவிட்டனர் என்பது பெருஞ்சோகம். 

தேநீராய் முரசொலி

graphic முரசொலி நாளிதழின் முகப்பு படம்

     தனக்குத் தந்தை தினமும் காலையில் செய்தி வாசிப்பதன் மூலமே தமிழ் எழுத்துகளைக் கற்றுத்தந்ததாக நினைவுகூரும் இவர், முரசொலி படிப்பது தினமும் தேநீர் குடிப்பதைப் போல தவிர்க்கமுடியாதது என்கிறார்.

      காஞ்சி, திராவிடநாடு, தீப்பொறி, மாலைமணி, போர்வாள் முதலிய திராவிட இயக்க இதழ்களை அப்பா தனக்குப் படித்துக்காட்டியது தன் நெஞ்சில் ஆழமாகப் பதிந்திருப்பதாகக் கூறுகிறார். 25 வயது வரை தினமும் முரசொலி படித்துக்கொண்டிருந்த இவரால் தொடர்ந்து படிக்க இயலவில்லை; அப்பாவின் உதவியை மீண்டும் நாடத் தொடங்கினார். ஆம். அதுவரை இவரிடம் இருந்த குறைவான பார்வையும் அப்போது இல்லாமல் போய்விட்டது.

      இவரைக் கவிஞராக்கியதும் முரசொலிதான் என்கிறார் இவர். அந்த இதழில் வெளியான இளந்துறவி, பொன்னிவளவன் முதலியோரின் கவிதைகளே தன்னைக் கவிஞனாக்கியதாகக் கூறுகிறார்.

கவிஞர் மோகனன்

      1990-களில் மாமல்லபுரத்தில் இயங்கியமல்லை முத்தமிழ் மன்றம்என்ற அமைப்பின் துணைச் செயலாளராகப் பணியாற்றியிருக்கிறார். முன்னாள் அமைச்சர் காளிமுத்து, புகழ்பெற்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர், கவிஞர் இளந்தேவன், நிர்மளா சுரேஷ், கவிஞர் மு. மேத்தா  முதலியோரோடு மேடையைப் பகிர்ந்திருக்கிறார்.

      இவரது திருமணத்தைத் தலைமையேற்று நடத்திவைத்தவர் உவமைக் கவிஞர் சுரதா. அவர் நடத்திய படகுக் கவியரங்கிலும் கலந்துகொண்டு பரிசு பெற்றிருக்கிறார்.

      ஒரு முறை சென்னையில் கலைஞர் பிறந்தநாளை ஒட்டி கலைவாணர் அரங்கில் நடத்தப்பட்ட கவியரங்கிற்குப் பார்வையாளராகச் சென்ற இவரை அழைத்துக் கவி பாட வைத்திருக்கிறார் சுரதா. இவர் உடனடியாக அங்கு பாடிய கவிதையால் ஈர்க்கப்பட்ட அப்போதைய சென்னை மாவட்டச் செயலாளர் திரு. T.R. பாலு இவருக்கு வெகுமதி அளித்ததையும், கலைஞர் இவரைப் பாராட்டியதையும் மகிழ்வோடு நினைவுகூர்கிறார்.

      இத்தனை கவிதைகளையும் மனதிலிருந்துதான் ஒப்பித்திருக்கிறார் திரு. மோகனன். தனக்குக் குறைபார்வை இருக்கும்போதே சென்னை கிண்டியில் உள்ள நிறுவனத்தில் இலகு பொறியியல் (light engineering) படிக்கச் சென்ற இவர், அங்கு கற்பிக்கப்பட்ட பிரெயிலையும், இயங்குவதற்கான பயிற்சியையும் (Mobility training) சரியாகக் கற்றுக்கொள்ளாதது தவறு என மிகத் தாமதமாகவே உணர்ந்ததாகக் குறிப்பிடுகிறார். இவர் சென்னைக்குச் சென்று பயிற்சி பெற்றதால்தான் தன் தம்பிக்குக் கல்விக் கண்ணை வழங்க முடிந்திருக்கிறது என்பதையும் குறிப்பிடுகிறார்.

      தி.மு..வின் வரலாற்றைக் கவிதை வடிவில் நூலாக எழுதியிருக்கிறார் மோகனன். அந்நூல் இன்னும் வெளியிடப்படவில்லை. அந்நூலை முழுமையாக முடித்து, வெளியிடுமாறு வேண்டிக்கொள்கிறது விரல்மொழியர். 

பேச்சாளர் மோகனன்

graphic தி.மு.காவின் உதயசூரியன் சின்னமும், கட்சி கொடியும்
 

      தனது 14 வயதிலேயே தந்தைக்குத் துணையாக உதய சூரியனுக்கு ஓட்டு கேட்கத் தொடங்கிவிட்டார் மோகனன்.  ஆனாலும், முதல்முறையாக மேடை ஏறியது 1976-இல்தான். நெருக்கடி நிலைக்குப் பிந்தைய காலத்தில் கலைஞரை ஒரு உள்ளூர் கூட்டத்தில் மிக மோசமாகப் பேசிய காங்கிரஸ் காரருக்கு எதிராகக் களமிறங்கியிருக்கிறார். இவர் பேசிய அனல் தெறிக்கும் பேச்சை அனைவரும் பாராட்டினர். பேசிய அடுத்த நாள், யாரை எதிர்த்துப் பேசினாரோ அந்தக் காங்கிரஸ் காரரே வந்து இவரைப் பாராட்டியதை மறக்கவே முடியாது என்கிறார்.

      1998-இல் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் இவர் உரையாற்றியதைத் தொடர்ந்து, கட்சியின் தற்போதைய தலைவரான மு.. ஸ்டாலின் அவர்கள் இவருக்குக் கணையாழி அணிவித்ததைப் பெருமையோடு நினைவுகூர்கிறார்.

      தொடர்ந்து தி.மு.கவிற்காக மேடையில் களமாடிவருகிறார். தி.மு.கவின் முன்னாள் பொதுச்செயலர் பேராசிரியர் . அன்பழகன் அவர்கள், “மோகனன் மட்டும் சென்னையில் இருந்திருந்தால் அவருக்கு தினமும் ஒரு கூட்டத்தில் பேச ஏற்பாடு செய்து தந்திருப்பேன்என்று கூறியிருக்கிறார். மேலும், மூத்த தி.மு. செயல்பாட்டாளரான பரிதி இளம் வழுதி அவர்களும், இவரைத் தலைமை நிலையப் பேச்சாளராகப் பரிந்துரைப்பதாகக் கூறியிருக்கிறார். இவற்றையெல்லாம் மறுத்துவிட்டார் மோகனன்.       ஒருவேளை பார்வையற்றோருக்கான இயங்குமுறையை இவர் நன்கு அறிந்திருந்தால், நிச்சயம் தி.மு..வின் முக்கியப் பேச்சாளராக அடையாளம் காணப்பட்டிருப்பார்.

      வட்டப் பிரதிநிதி, நகர அவைத் தலைவர் என்றெல்லாம் பதவிகளில் இருந்த இவர், தற்போது மாமல்லபுரம் நகர இலக்கிய அணிச் செயலாளராகப் பொறுப்பில் இருக்கிறார்.

 இந்திய மாற்றுத்திறனாளி மக்கள்  நல அறக்கட்டளை

      இது இவர் நடத்தும் தொண்டுநிறுவனம். இந்த அறக்கட்டளையின் சார்பில் உள்ளூரில் இருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு இயன்ற உதவிகளைச் செய்துவருகிறார். திருமணங்களை நடத்திவைத்தல், அவர்களுக்கான சலுகைகளை வழங்குதல், பிற அமைப்புகளோடு இணைந்து நலத் திட்ட உதவிகளை வழங்குதல் முதலிய பணிகளை மேற்கொள்வதாகத் தெரிவிக்கிறார்.

கழகம் தொடர்பாக இவரிடம் சில கேள்விகளை முன்வைத்தேன். அவற்றிற்கு இவர் தந்த பதில்கள் இவை.

கேள்வி: தி.மு. இலக்கிய அணி மேற்கொள்ளவேண்டிய முக்கியப் பணி என்று நீங்கள் எதை நினைக்கிறீர்கள்?

பதில்: நமது இன உணர்வை வலியுறுத்தவேண்டும். அண்ணா கட்சி தொடங்கியதன் நோக்கம் சாதி, மதப் பிரிவினை அற்ற தமிழகத்தை உருவாக்குவதுதான். ஆனால், தற்போது இந்தத் தலைமுறையினர் சாதி, மதம் என்ற குறுகிய மனப்பான்மையில் வளர்ந்துவருவதாகத் தெரிகிறது. இவற்றை மாற்றவேண்டும். மேலும், இட ஒதுக்கீடு குறித்த தெளிவான புரிதலையும், அதற்குக் கழகம் ஆற்றியிருக்கும் முக்கியப் பங்களிப்பையும் மக்களிடம் எடுத்துரைக்கவேண்டும்.

கே: நீங்கள் கட்சிக்குள் வந்தபிறகு கட்சி .தி.மு., .தி.மு. என்ற இரு பெரிய பிளவுகளைச் சந்தித்தது. அந்தக் கட்சிகளுக்குச் செல்லவேண்டும் என்று உங்களுக்குத் தோன்றவில்லையா?

: இல்லை. நான் கொள்கையை அறிந்து கட்சிக்குள் வந்தவன். பதவிகளுக்காக ஆசைப்பட்டவன் இல்லையே!

கே: வாரிசு அரசியல் பற்றி

: அப்பா ஒரு இயக்கத்திலும், மகன் ஒரு இயக்கத்திலும் இருப்பதுதானே தவறு. ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஒரே கட்சியில் இருப்பதில் தவறு இருப்பதாக நான் கருதவில்லை. என் அப்பா கட்சிக் கொள்கைகளை எனக்குள் விதைத்திருக்கிறார். நான் கட்சிக்குள் வருகிறேன். இதில் என்ன பிழை இருக்கிறது? கலைஞரின் மகன் என்பதற்காகத் தளபதி மிசா காலத்தில், சிறையில் எவ்வளவு துன்பங்களை அனுபவித்தார் என்பது எல்லோர்க்கும் தெரியும்தானே! செயற்குழு, பொதுக்குழு ஆகிய அமைப்புகள் மூலம்தான் நாங்கள் தலைவர்களைத் தேர்ந்தெடுக்கிறோம். இன்னொன்று, எல்லா வாரிசுகளும் மக்களிடம் சென்று நின்றுதானே வாக்குகளைப் பெறமுடியும்.

கே: ஸ்டாலின் அவர்கள் கட்சித் தலைமைப் பொறுப்பில் இருப்பதைக் குறை சொல்லிவிடமுடியாதுதான். ஆனால், உதயநிதி அவர்களுக்கு இத்தனை எளிதாக இளைஞரணிச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

: ரஜினி, கமல் என்று திரைப்படத்தில் பார்த்த முகங்கள் அரசியலுக்குள் வரும்போது எங்கள் கட்சிக்கும் மக்கள் அறிந்த ஒரு திரை பிரபலம் அவசியம் என்றுதான் நான் கருதுகிறேன்.

கே: திரு. சாதிக் பாஷா அவர்கள் பொருளாளராக இருந்த கட்சி தி.மு.. தற்போது தி.மு. உயர்மட்ட நிர்வாகக் குழுவில் சிறுபான்மையினரின்  பங்களிப்பு பெருமளவில் குறைந்திருப்பதாகத் தெரிகிறதே!

: ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தப்பட்டுதான் பொறுப்புகள் வழங்கப்படுகின்றன. இதில் சிறுபான்மையினர் வருவதற்குக் கட்சியில் எந்தத் தடையும் இல்லை. இருந்தாலும், இது கவனிக்கப்படவேண்டிய ஒன்றுதான்.

கே: திராவிட இயக்கம் பெண்களுக்கென ஆற்றிய பணிகள் முக்கியமானவை. இருந்தாலும், தி.மு..வில் பெண்களின் பங்களிப்பு மிகக் குறைவாக இருப்பதாகவே தோன்றுகிறது. தொலைக்காட்சி விவாதங்களில் தி.மு..வைப் பிரதிநிதித்துவப் படுத்தும் பெண் ஒருவர் கூட கலந்துகொள்வதில்லை.

: ஊடகங்களில் முகம் காட்டுபவர்கள் இல்லை என்பதற்காக கழகத்திற்குப் பெண்களின் பங்களிப்பு இல்லை என்று கருதிவிடமுடியாது. களப்பணியில் நிறைய பெண்களைச் சந்திக்கமுடிகிறது. பெண்களின் ஆதரவு கட்சிக்குத் தற்போது அதிகரித்திருக்கிறது  என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இருந்தாலும், உங்கள் கருத்தைப் புறக்கணித்துவிடமுடியாது.

கே: தி.மு.கவின் சித்தாந்த எதிரியான பாஜக தற்போது பெரிய சக்தியாக வளர்ந்துவருகிறது. தொடர்ந்து தன்னைத் தக்கவைத்துக்கொள்ள தி.மு. என்ன செய்யவேண்டும் என நினைக்கிறீர்கள்?

: நான் ஏற்கெனவே சொன்னதுதான். நம்முடைய இன உணர்வு, மொழி உணர்வு, பகுத்தறிவு என்று அண்ணா வலியுறுத்தியவற்றை இன்னும் தீவிரமாக மக்களிடம் எடுத்துச்செல்லவேண்டும்.

கே: என்னதான் இருந்தாலும், பாஜக ஒரு தேசியக் கட்சி. தி.மு. ஒரு மாநிலக் கட்சி. உங்களைக் காட்டிலும் அவர்களின் எல்லையும், அதிகார பலமும் விரிவானவை.

: அப்படியெல்லாம் நினைத்துவிடாதீர்கள். 1947 முதல் 1967 வரை இதை விட வலிமையாக இருந்தது காங்கிரஸ். அந்தப் பெரிய கட்சியையே எதிர்த்து வெற்றி பெற்று ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த இயக்கம் இது. மேலும், பாஜகவால் இங்கு ஒருபோதும் நிலை பெற முடியாது. இது பெரியார், அண்ணா, கலைஞர் முதலியோரால் பதப்படுத்தப்பட்ட மண். சாதிப் பற்றும், மதப் பற்றும் நம் மக்களிடம் இருந்தாலும் பாஜகவின் ஆதிக்க உணர்வை அவர்கள் புரிந்துவைத்திருக்கிறார்கள் என்பதை மறுத்துவிடமுடியாது. மொழித் திணிப்பும் இங்கு எடுபடாது. பாஜக தேசிய அளவில் இப்படியே தொடர்ந்து வெற்றி பெறுமானால், இந்திய அளவில் அனைத்து மாநிலக் கட்சிகளையும் ஒருங்கிணைக்கக்கூடிய தேவையும், வலிமையும் தி.மு.கவிற்கு இருக்கிறது என்றுதான் நான் கருதுகிறேன்.

கே: இன்றைய இளைஞர்களை ஈர்க்கும் இன்னொரு முக்கியப் பாதை தமிழ் தேசியம். தி.மு. இதை எப்படி சமாளிக்கப்போகிறது?

: எத்தனையோ பெரிய எதிர்ப்புகளைச் சந்தித்து வளர்ந்த இயக்கம் இது. இது ஒன்றும் பெரிய எதிர்ப்பு அல்ல. இன்று நன்கு வடிவமைக்கப்பட்ட சாலையில் அவர்கள் கார் ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள். அந்தச் சாலையை வடிவமைத்தது திராவிட இயக்கங்கள் தானே! இன்று என்னென்னவோ பேசுபவர்கள் நேற்று எங்கிருந்தார்கள், என்ன செய்துகொண்டிருந்தார்கள் என்பது முக்கியம்.

கே: தி.மு.கவின் மூத்த உறுப்பினர் நீங்கள். தற்போது பொறுப்பில் இருப்பவர்களால் உங்களுக்கு உரிய மரியாதை தரப்படுகிறதா?

: நி்ச்சயமாகக் கிடைக்கிறது. எங்கள் மாவட்டச் செயலாளர் தா.மோ. அன்பரசன் அவர்கள் என்னை நன்கு அறிந்துவைத்திருக்கிறார். அவர் உட்பட எங்கள் களப்பணியாளர்கள் அனைவருமே எனக்கு நல்ல மரியாதை அளிக்கிறார்கள்.

கே: 2021-இல் தி.மு. ஆட்சிக்கு வந்தால் செய்யவேண்டிய முக்கியப் பணியாக நீங்கள் நினைப்பது

: மக்கள் தொகை அடிப்படையில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கப்படவேண்டும்.

 

மல்லை கோ. மோகனன் அவர்களைத் தொடர்புகொள்ள: 9500064541

 

வாசகர்களே!

உங்களுக்குத் தெரிந்த பார்வை மாற்றுத்திறனாளி அரசியலாளர்களை எங்களுக்கு அறிமுகம் செய்யுங்கள். அவர்கள் தேர்தல் அரசியலிலோ, கொள்கை அரசியலிலோ ஈடுபாடு கொண்டவராக இருக்கவேண்டும். களப்பணி ஆற்றியவராக இருக்கவேண்டும். அப்படிப்பட்ட பார்வை மாற்றுத்திறனாளிகள் உங்களுக்குத் தெரியும் என்றால், 9894335053 என்ற எனது தொலைபேசி எண்ணுக்குத் தொடர்புகொள்ளுங்கள். ஆவணப்படுத்துவோம்.

 

தொடர்புக்கு: balaganesan2285@gmail.com

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக