அனுபவம்: கொரோனாவிலிருந்து மீண்டது எப்படி? - முனைவர் U. மகேந்திரன்

graphic கொரோனாவை மருத்துவத்தின் உதவியுடன் எதிர்த்து போராடும் கார்டூன் படம்

ஆரம்பமும் அறிகுறியும்

     ஜூலை மாதத்தின் தொடக்கத்தில், எனது அன்பிற்குரிய சித்தி மகளின் நிச்சயதார்த்த விழாவில் கலந்துகொள்ளச் சென்றதுதான் எனது உடல்நலக்  குறைபாட்டிற்கு அடிப்படையாக அமைந்தது. நான் இருப்பது வடபழனி அருகே உள்ள திருநகர் என்கிற இடத்தில். பிறகு சென்னையில் பணிபுரியும் என் தம்பி கிஷோருடன்  இருசக்கர வாகனத்தில் நிச்சயதார்த்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்த எங்களின் சொந்த ஊரான காஞ்சிபுரத்திற்குச் சென்றோம்.

      அரசு வகுத்துத் தந்திருக்கிற விதிகளுக்கு உட்பட்டு எல்லா கிராமங்களிலும் நிகழ்ச்சிகள் நடைபெறுவதில்லை என்பது அரசாங்கம் உட்பட அனைவரும் அறிந்த உண்மை. நான் சென்றிருந்தபொழுது அவ்வளவு கூட்டம் அங்கு திரளும்  என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை. சென்னையில் இருந்து சென்றதால் நானும் என் தம்பியும் முடிந்தவரை கூட்டத்தோடு சேராமல் தனித்து இருக்க விரும்பினோம். ஆனால் அந்த எண்ணம்  பலவேளைகளில் மீறப்பட்டபொழுது எனக்குள் ஒரு அச்சம் மேலோங்கியது. என்னையாவது சிலவேளைகளில் தனியே இருக்க அனுமதித்து விட்டார்கள். ஆனால் என் தம்பி பார்வை உள்ளவர் என்பதால் பல பொறுப்புகளைக் கவனிக்கவேண்டியதாக இருந்தது. அவரால் கூட்டத்தோடு கலந்து இயங்காமல் தனித்து இருக்க முடியவில்லை.

    அப்படியென்றால், நீங்கள்தான் அந்த நுண்ணிய உயிரியை  இருசக்கர வாகனத்தில் உடன் அழைத்துச் சென்றீர்களா என்று நீங்கள் கேட்பது புரிகிறது.  கொஞ்சம் பொறுங்கள்; இன்னும் சில செய்திகளைப் பார்க்கவேண்டியிருக்கிறது.

      நாங்கள் வெள்ளி அன்று சென்றிருந்தோம். ஞாயிறு வரை யாருக்கும் எவ்வித உடல்நலக் குறைபாடும் ஏற்படவில்லை. முதலில் சமையல் உள்ளிட்ட பல பணிகளைத் துரிதமாகச் செய்த எனது தங்கைகள் இருவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. முதலில் நான்தான் சற்று அதிர்ந்து போனேன். இருந்தாலும் பயத்தை வெளிக்காட்டிக்கொள்ளாமல் அவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல என் தம்பி உள்ளிட்டோரை வலியுறுத்தி, அவ்வாறே நடந்தது. அவர்களும் அடுத்த நாளே  மீண்டு விட்டார்கள்.

      அத்தோடு மாப்பிள்ளை வீட்டார் ஒரு வாகனத்தில் நிகழ்வில் கலந்துகொள்ள வந்திருந்தனர். அவர்களில் சிலருக்குக் காய்ச்சல், இருமல் சளி உள்ளிட்ட பிரச்சினைகள் இருந்ததாக பிறகு பரவலாகப் பேசிக்கொண்டார்கள். சிறப்பான உணவு பரிமாறப்பட்டது, எல்லோரும் நீண்ட நாட்களுக்கு பிறகு ஒன்று கூடிய உவகையில்  இருந்தனர். விளக்கிச் சொல்ல இயலாத பல இன்னல்களுக்கு மத்தியில் தங்கைக்குத் திருமணம் நிச்சயமானது உள்ளிட்ட நல்ல சமிக்ஞைகளுக்கு  மத்தியில் இந்த ஜுரம் உள்ளிட்ட சலனங்களை எவரும் பெரிதாகப் பொருட்படுத்தவில்லை.

      இரண்டு நாள் கொண்டாட்டங்கள் முடிந்து அவரவர் இல்லம் திரும்பிய பிறகு தான் ஒவ்வொரு செய்தியாக கேள்விப்படத் தொடங்கினேன். ஜுறத்தில்  இருந்து மீண்ட என் தங்கைகள் இருவர், வாசனை முன்புபோல் தெரியவில்லை, நாக்கு சுவையை உணர மறுக்கிறது உள்ளிட்ட இக்கால அபாய அறிகுறிகளைச் சொன்ன பிறகுதான் எல்லோரும் சற்று பதறிப் போனோம். அந்த நிகழ்வு அரங்கேறிக் கொண்டிருந்த அதே காலகட்டத்தில்தான் அந்த கிராமத்தில் ஒருவர் கொரோனா  பாசிட்டிவ் எனக் கண்டறியப்பட்டு காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு முகாமில் சிகிச்சை பெற்று வருகிறார் என்று தகவல் வந்தது.  

      இதில் வேடிக்கை யாதெனில், கொரோனா பரவுவதற்கு ஏழு அல்லது 14 நாட்கள் ஆகும் என்று அரசாங்கம் குறிப்பிட்டிருந்த எதுவும் அங்கு உபயோகப்பட்டதாகத் தெரியவில்லை. நான்கு அல்லது ஐந்து நாட்களுக்குள்ளாக எல்லோரிடமும் ஒரு வித ஜுரம் உள்ளிட்ட உடல்நலக் குறைபாடுகள் பரவத் தொடங்கின. இது கொரோனாவாகத் தான் இருக்க முடியும் என்று அறிகுறிகளை வைத்து அனுமானிக்கமுடிந்தாலும், நான் உள்ளிட்ட எவருமே இதை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. காரணம் அது ஏற்படுத்தியிருந்த உயிர் பயம் அத்தகையது. கொரோனாவிடம்  இருந்துகூட மீண்டு விடலாம். ஆனால், பரிசோதனை, தனிமை முகாமுக்கு இட்டுச் செல்லுதல்  என்கிற பெயரில் அதிகாரிகள் நடத்துகிற மருத்துவச் சடங்கிலிருந்து அவ்வளவு எளிதாக தப்பி உயிர் பிழைக்க முடியாது என்கிற பயமும் பிடித்து உலுக்கியது.

முதிய மருத்துவரின் முதிர்ச்சியான சிகிச்சை

      இந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடைபெற்ற கிராமத்தின் பெயர் ஜம்போடை. அங்கிருந்து சற்று தொலைவில் இருக்கிறது பிள்ளைச் சத்திரம் என்னும் முக்கியச் சந்திப்பு. நான் குறிப்பிட்ட அந்தக் கிராமம் உள்ளிட்ட பல கிராமங்களைப் பெருநகரங்களோடு இணைக்கிற மையப் பகுதியாக பிள்ளை  சத்திரம் இருந்துவருகிறது. அதற்குக் காரணம் அது அமைந்திருக்கிற பெங்களூரு நெடுஞ்சாலை.

      அவ்விடத்தில் சில ஆண்டுகளாக லோபதியும், ஹோமியோபதியும் ஒருங்கே கற்ற ஒரு முதிய மருத்துவர் சிறு கிளினிக் ஒன்றை நடத்தி வருகிறார் என்று எல்லோரும் பேசக் கேள்விப்பட்டேன். சிகிச்சைக்கு ஏற்ற பணம் பெற்றுக்கொண்டு, அன்பு கலந்து இவர் கொடுக்கிற மருந்து அவ்வளவு சிறப்பாக உடல் சார்ந்த சிக்கல்களைக்  குணப்படுத்திவிடுகிறது. எல்லோரிடமும் இன்முகத்தோடு இவர் பேசி அவர்களுக்குள் கடத்துகிற  நேர்மறைச் சிந்தனை மருந்தோடு இணைந்து மகத்துவம் செய்துவிடுகிறது.    அந்தக் கிராமம் உள்ளிட்ட அங்கு இருக்கக்கூடிய பாமர மக்களால் அவர் கை  ராசிக்காரர் என்று அறியப்படுகிறார்.

    இவர் ஜம்பொடை  கிராமத்தில் வேகமெடுக்கத் தொடங்கிய ஆபத்தான ஜுரத்தை ஒரு ஊசியின் மூலம் மூன்று அல்லது நான்கு நாட்களில் குணப்படுத்தினார். எங்களின் நிகழ்ச்சிக்கு வந்து சென்ற ஏறத்தாழ 50க்கும் மேற்பட்டோர் இப்படி ஒரு காய்ச்சலுக்கு ஆட்பட்டாலும்,  அவர்கள் அனைவருமே இவரின் சிகிச்சையால் மீண்டனர் என்பது பத்திரிகைகள் எவையும் பதிவு செய்யாத உண்மை. நல்லவேளை பத்திரிகைகளில் இவரைப் பற்றிய செய்தி வெளிவரவில்லை. அப்படி நடந்திருந்தால், அவர் மற்றும் சுற்றுப்புற கிராமத்தில் இருந்த ஜுரத்தில் பாதிக்கப்பட்ட பாமர மக்கள் அனைவருமே இத்தகையப் நெருக்கடி  காலத்துத் தனிமை முகாமிற்கு பலவந்தமாக அழைத்துச் செல்லப்பட்டு, தினசரி வெளிவருகிற கொரோனா பட்டியல்களில் சேர்க்கப்பட்டிருப்பர்.

      நானும் எனது தம்பியும் கொரோனா  சிகிச்சையில் இருந்தோம். அதைக்குறித்து விவரிப்பதற்கு முன் இத்தோடு ஒரு முக்கிய செய்தியைச் சொல்ல விரும்புகிறேன். என் தந்தையும், தாயும் பாதிக்கப்பட்டது கொரோனாவில்  என்று தெரிந்தும் அவர்களுக்குச் சிகிச்சை தர எங்களால் இயலாமல் போனது மிகுந்த வேதனையைத் தந்தது. எவ்வளவு சொல்லியும் என் தந்தை நாங்கள் சிகிச்சை பெறும் இடத்திற்கு வர மறுத்துவிட்டார். பிறகு என் சித்தப்பாவிடம் சொல்லி அவரை இந்த முதிய மருத்துவரிடம் அழைத்துச் செல்லச் செய்தோம். இரண்டொரு நாட்களில் என் பெற்றோர் இருவருமே கொரோனாவில் இருந்து மீண்டது எங்களுக்கு நிம்மதியைத் தந்தது.

      அவர்களுக்கு இருந்தது கொரோனாதான்  என்பதை ஏராளமான அறிகுறிகளின் மூலம் உறுதிப்படுத்திக் கொள்ள முடிந்தது. கிராமத்துச் சூழலும், அவர்தம் வாழ்க்கை மற்றும் உணவு முறை உள்ளிட்ட ஆற்றலுக்கு உரிய காரணிகளும், ஊர்க்காவல் தெய்வத்தின் மீது அவர்கள் கொண்டிருந்த அளவிட முடியாத  நம்பிக்கையும் எல்லோரையும் பேராபத்திலிருந்து மீண்டுவரச் செய்தது என்றுதான் குறிப்பிடத் தோன்றுகிறது. மிக முக்கியமாக அந்த முதிய மருத்துவரின் அரிய சேவை அவர்களை அரண் போல்  இன்றும் காக்கிறது. 

சார் உங்களுக்கு பாசிட்டிவ்!

      இந்தக் களேபரங்களுக்கு மத்தியில், எனது தம்பி, நாங்கள் அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் ஜூலை ஏழாம் தேதி செவ்வாய் அன்று சென்னைக்குப் புறப்பட்டபொழுது சொன்ன செய்தி பீதியைக் கிளப்பியது. கை கால் உள்ளிட்ட  உடல் முழுவதும் பெரும் வலி  இருப்பதாக முதலில் தெரிவித்தார். அந்த நேரத்தில் மழைப் பொழிவும் சற்று இருந்ததால், கொஞ்சம் களைப்பு  ஏற்பட்டிருக்கும் என்று சொல்லி அவரைத் தேற்றினேன். அவர் தீயணைப்புத் துறையில் பணிபுரிவதால், அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்றுக்கொள்ள அறிவுறுத்தி அனுப்பிவைத்தேன். அவர் பெற்ற சிகிச்சையால் எவ்வித பலனும் ஏற்படவில்லை. மாறாக குரலில் மாற்றம், சுவை அற்றுப்போதல், வார்த்தையில் சொல்ல இயலா உடல் வலி போன்றவை பாடாய்ப் படுத்திக்கொண்டே  இருந்ததாகத் தெரிவித்தார். 

      அவர் என்னை எனது இல்லத்தில் விட்டுவிட்டுச் சென்ற அடுத்த நாளில், அதாவது ஜூலை 8 புதன் எனக்குக் காய்ச்சல் தொடங்கியது. அப்படி ஒரு விசித்திரமான காய்ச்சலை நான் அதற்கு முன் எதிர்கொண்டது இல்லை. காரணம் அது மாலை தொடங்கி இரவு முழுவதும் உடலைத் தாளித்து எடுத்துவிடும்; காலையானதும் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும். ஆனால் அது ஏற்படுத்திய பாதிப்பால் உடலில் வலி  மட்டும் பகல் முழுவதும் இருந்துகொண்டே இருக்கும். அஜீரணக் கோளாறு, அடிக்கடி மலம் வெளியேறுதல், மயக்கம் போன்றவை பகல் முழுவதும் பாடாய் படுத்திவிடும். முதல் நான்கைந்து நாட்களில் எனக்கு சுவையற்றுப் போதல் அல்லது தொண்டை சார்ந்த எவ்வித சிக்கலும் ஏற்படவில்லை. வாசனை அறிதல் கூட நன்றாகவே இருந்தது.

      அந்தக் குறிப்பிட்ட வாரம் முழுவதும் ஜுரம் தொடர்ந்தது. கோடம்பாக்கத்தில் நம் மக்கள் மத்தியில் பிரசித்தி பெற்ற JV  மருத்துவமனைக்குச் சென்று ஊசி போட்டுக்கொண்டேன் அதனால் சற்று ஜுரம்  குறைந்ததாக இரண்டு நாட்கள் உணர்ந்தேன். அதாவது ஜூலை 11-இல் இருந்து 19 வரை இரவில் ஜுரத்தொடும்  பகலில் அது ஏற்படுத்தும் உடல் சார்ந்த பாதிப்புகளோடும் போராடியபடி நாட்களை நம்பிக்கையோடு கடத்திக் கொண்டிருந்தேன்.

      இந்தக் காலகட்டத்தில் மனதில் வேதனையைச்  சுமந்தபடி, அதே வேளையில் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் நம்பிக்கையை எனக்கு உணர்த்தியபடி  என் மனைவி கொடுத்த பக்கபலம் என் உயிர் இருக்கும் வரை மறக்க முடியாத ஒன்று. அதிலும் ஒரு நாள் காலையில் எனக்கு இருந்த ஜுரத்தைத் தொட்டு உணர்ந்து அவள் சிந்திய கண்ணீர் என் நெஞ்சைப் பிசைந்தது. கதறி அழுது விட்டாள். இது நடந்தது  ஜூலை 16 வியாழன் அதிகாலை. அப்பொழுது அவளுக்கு உறுதி கூறினேன். கட்டாயம் நான் இது எப்படிப்பட்ட ஜுரமாக  இருந்தாலும் மீண்டு வருவேன் என்று. அந்த நாட்களில் தான் என் மனைவி சுவை அற்றுப்போதல், வாசனை உணரமுடியாமல் இருத்தல், உடல் வலி போன்றவற்றை அனுபவித்திருக்கிறாள். ஆனால் எதையும் என்னிடம் தெரிவிக்கவில்லை. காரணம் எனக்கு இருந்த மிகப்பெரிய உடல்நலக் குறைபாடு.

      18, 19 ஆகிய வார இறுதி நாட்களில் சரியானது போல் இருந்த காய்ச்சல் மீண்டும் 20 திங்களன்று அடுத்த பாய்ச்சலைத் தொடங்கியது. இம்முறை என்னால் தாங்கிக் கொள்ள இயலவில்லை. செவ்வாயன்று அதாவது 21 ஜூலை பிற்பகலில் என் தம்பிக்குத் தொலைபேசி செய்து கேட்டபொழுது அவர் சொன்ன செய்தி என்னைத் திடுக்கிடச் செய்தது.

      அவருக்குக் கொரோனா பாசிட்டிவ் இருந்ததாகவும், பிறகு  சாலிகிராமத்தில் மரியாதைக்குரிய  மருத்துவர் வீரபாபு  அவர்களின் தலைமையில் இயங்கி வரும் அரசு சித்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்தார். அப்படித் தெரிவித்ததும், உடனடியாக நானும் கோவிட்  பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று தீர்மானித்துவிட்டேன்.

      பிறகு சுகாதாரத்துறையில் இளநிலை ஊழியராகப் பணியாற்றிவரும் தம்பி பழனிச்சாமி அவர்களிடம் தொடர்பு கொண்டு ஆலோசனை கேட்டேன். அவர் கார்ப்பரேஷன் முகாமிற்கு சென்று பரிசோதனை செய்துகொண்டால் முடிவு வர  இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நாட்கள் ஆகலாம் என்று தெரிவித்ததும், வேறு ஏதேனும் வழி இருக்கிறதா என்று சிந்தித்தபடியே நானும் என் மனைவியும் இருந்தோம். பிறகு எங்களின் குடும்ப நண்பர்களாகவும், வழிகாட்டியாகவும் இருக்கக்கூடிய தோழர்  பாண்டியராஜன் மற்றும் அக்கா முத்துச்செல்வி இணையரிடம் ஆலோசனை பெற்றோம். அவர்கள் இருவரும் உரிய பரிசோதனை செய்து சிகிச்சை முறையாக தொடர அன்போடு வலியுறுத்தினர்.  அப்பொழுது என் மனைவியின் வகுப்புத் தோழியின் அக்கா செவிலியர் பயிற்சி முடித்திருப்பதை அறிந்து அவர்களிடம் தொடர்பு கொண்டு பேசியதன் பயனாக, அவர்களின் நண்பர் தாம்பரத்தில் இருக்கிற பிரசித்தி பெற்ற நீரிழிவு மருத்துவமனையில் ஆய்வக உதவியாளராகப் பணியாற்றிவருகிறார் என்று அறிந்தோம். 

    ஜூலை 22 காலை நாங்கள் இருவரும் சென்று கொரோனா பரிசோதனை செய்துகொண்டோம். அதிர்ஷ்டவசமாக நாங்கள் வீடு வந்து சேரும் முன் பரிசோதனை முடிவு வந்து சேர்ந்துவிட்டது. என் மனைவிக்கு முன்னரே தகவல் வந்திருப்பினும், அவள் சொல்லத் தயங்கியதை எங்களுக்குப் பரிசோதனை மேற்கொண்ட விஜயகுமார் அவர்கள் எனக்குத் தெரிவித்துவிட்டார். சார் உங்களுக்குப் பாசிட்டிவ்! உங்கள் மனைவிக்கு நெகட்டிவ் என்றது  அவரின் குரல். என் மனைவிக்கு நெகட்டிவ் தானே என்பதை மட்டும் மீண்டும் மீண்டும் கேட்டு உறுதி செய்துகொண்டு பிறகு ஒரு முடிவினை எட்டி விட்டேன். 

சித்த வைத்திய முகாம் என்னும் நம்பிக்கைக் கீற்று

      நான் எடுத்த முடிவு இரண்டு வகையாக இருந்தது. ஒன்று வீட்டில் இருந்தபடி தனிமைப்படுத்திக்கொண்டு முறையாக மருந்துகளை எடுக்க முயல வேண்டும் என்பது. இரண்டாவது என் தம்பி சிகிச்சை பெறும் சித்த மருத்துவ முகாமிற்குச் சென்று சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதாகும். முதலாவது முடிவை கைவிடச் சொல்லி வலியுறுத்தினார் தோழர் பாண்டியராஜன் அவர்கள். காரணம் அவரிடம் நமது பெரும் மதிப்பிற்குரிய ஐயா சங்கர் சொன்ன செய்தி. அதாவது தொடர் காய்ச்சல் இருப்பின் அது நுரையீரலை பாதித்து  விடும்எனவே மருத்துவமனைக்குச் சென்று விடுவது நல்லது என்பது சங்கர் ஐயா அவர்கள் தெரிவித்த மிக முக்கியமான ஆலோசனை.

      இரண்டாவது தீர்மானத்திற்குச் சில மணித்துளிகள் முட்டுக்கட்டை நிலவியது. சித்த மருத்துவ முகாமில் போதிய படுக்கை வசதி இல்லை. நீ இங்கு வந்தால் உன்னால் முறையாக சிகிச்சை பெற இயலாது என என் தம்பி தெரிவித்ததே அது. பிறகு என்ன செய்வதென்று தெரியாமல் மிகவும் குழப்பமாக இருந்தது.

    அப்பொழுது எனக்கு இருந்த பயம் யாதெனில், மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெறத் துவங்கவில்லை என்றால், எனது பாசிட்டிவ் முடிவை அடிப்படையாகக் கொண்டு அதிகாரிகள் வீட்டிற்கு வந்துவிடுவார்கள். நான் இருப்பதோ வாடகை வீடு. பிறகு ஏற்படும்  ஆபத்தை நான் உங்களுக்கு விளக்கத் தேவையில்லை. எனது முடிவு இன்று மாலையே  சி எம் ஆர் வழியாக உரிய அதிகாரிகளைச் சென்றுசேர்ந்துவிடும். எனவே, ஏதோ ஒரு மருத்துவமனைக்குச் சென்றுவிடும்படி ஆலோசனை வழங்கினார் என்னைப் பரிசோதித்த ஆய்வக உதவியாளர் விஜயகுமார் சார்.

      பரிசோதனை எடுத்துக்கொண்ட ஆய்வகம் தாம்பரத்தில் இருந்ததால் நான் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்குச் சென்றாக வேண்டும். ஆனால் எனக்கு அரசு மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெறுவதில் துளியும் உடன்பாடு இல்லை. அதற்கு எக்காரணம் கொண்டும் ஒப்புக்கொள்ள வேண்டாம் என்று என் மனைவியும் வலியுறுத்தினார்.

      மதியம் ஒன்றரை மணி அளவில் மீண்டும் என் தம்பி என்னைத் தொலைபேசியில் அழைத்து உடனடியாக வரும்படி தெரிவித்தார். நான் கேட்டுக் கொண்டபடி அவர் நேரடியாக வீரபாபு ஐயாவிடம் பேசி அனுமதி பெற்றதாகவும், இப்பொழுது தனக்கு அருகே ஒரு படுக்கை காலியாக இருப்பதால் அதனை அரும்பாடுபட்டு பாதுகாத்து வைத்திருப்பதாகவும் சொல்லி, உடனடியாகக் கிளம்பி வரச் சொன்னதுமே, எனக்குள் நம்பிக்கை மலரத் தொடங்கியது. அதுவரை நிலவி வந்த குழப்பங்கள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் சென்றுவிட்டன. ஒரு வாரமாவது  அங்கு தங்க நேரிடும் என்பதால் அதற்கு தேவைப்படும் உடைகளை எடுத்து வைத்துக்கொண்டு புறப்பட்டேன். தனியாக இருக்கவேண்டாம் என வலியுறுத்தி என் மனைவியை அவர்தம் பெற்றோர் வீட்டிற்கு அனுப்பிவிட்டு, அன்று மாலை மூன்றரை மணி அளவில் உரிய படிவத்தைப் பூர்த்திசெய்த பின் உள்ளே அனுமதிக்கப்பட்டேன்.

graphic சாலிகிராமம் மருத்துவமணையின் படம்
சாலிகிராமம் மருத்துவமணை

    நான் பார்வையற்றவன் என்பதைவிட முனைவர் பட்டம் பெற்று பேராசிரியராக பணிபுரிகிறேன் என்பதை அறிந்து அவர்கள் தனி கவனம் எடுத்துக் கொண்டது சிறு நிம்மதியைத் தந்தது.       அனுமதிக்கப்படும் இடத்தில் ஒவ்வொருவருக்கும் ஒரு பிளாஸ்டிக் வாலி, தலையனைக்கான  இரண்டு  உரைகள் மற்றும் போர்வை  வழங்கப்பட்டு அவரவர் படுக்கை ஒதுக்கப்பட்ட அறைக்கு அனுப்பப்படுகிறார்கள். அவ்வாறே நானும் சென்றேன்.

    என் தம்பி மட்டும் என்னுடன் இல்லாவிடில் நான் அங்கு நாட்களை எப்படிக் கடத்தியிருப்பேன் என்பதை இப்பொழுது நினைத்துப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது. காரணம் அங்கே பார்வையற்றவர் எளிதில் தனித்து இயங்கி விட முடியாது என்கிற சூழல் நிலவியது

graphic மருத்துவமணையில் கசாயம் வழங்தும் படம்

      ஒரு நாளைக்குக் கிட்டத்தட்ட ஆறுமுறை கசாயம் வழங்குவார்கள். அவற்றை வரிசையில் சென்று பெற்றுக்கொள்ள வேண்டும். அவ்வாறேதான் மூன்று வேளை உணவு, காலை மற்றும் மாலை தேநீர், பகலில் வழங்கப்படும் மாத்திரை போன்ற தருணங்களிலும் வரிசையில்தான் நின்றாக வேண்டும்.

    அதைக்கூட ஓரளவுக்குச் சமாளித்து விட முடிந்திருக்கும். ஆனால் அங்கிருந்த கழிப்பறை எனக்கு பெரிய சவாலாக இருந்திருக்கும். அந்த முகாம் செயல்பட்டது தினசரி மாணவர்கள் வந்துசெல்லும் பொறியியல் கல்லூரி என்பதால், குளியலறை  மற்றும் கழிப்பறை எனத் தனித்தனியே அங்கு இருக்கவில்லை. இதில் கொடுமை யாதெனில், கழிப்பறையில்தான் குளிப்பது, துவைப்பது உள்ளிட்ட அத்தனை வேலைகளையும் உடல்நலம் பாதிக்கப்பட்ட அனைவரும் செய்துகொள்ள வேண்டும் என்பதே. அதிலும் அங்கிருந்த மொத்த கழிப்பறைகளில் மூன்று மட்டுமே நல்ல முறையில் இருக்கும். மற்றவற்றில் தண்ணீர் முறையாக வராது. மிகச் சிறிதாக இருக்கும், அல்லது கதவே இருக்காது. இவற்றைக் கூடச் சமாளித்துவிடலாம். ஆனால் அந்த கழிப்பறை அமைந்திருந்த பகுதி போதுமான அளவிற்கு காற்றோட்டம் பெற்றிருக்கவில்லை. மூச்சுத் திணறல் ஏற்பட்டு அங்கு சிகிச்சை பெறுபவர்களின் நிலை கழிப்பறையைப் பயன்படுத்தும் பொழுது மிகவும் கடினமாக இருக்கும். எப்பொழுதும் யாரோ ஒருவர் மிகத் தீவிரமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டு  இருமியபடி  அங்கு இன்னல் படுவதைக்  காணலாம். இன்னொன்று, எங்கும் கைபட்டுவிடக் கூடாது. எதிரில் யாரேனும் இருமிக்கொண்டே வந்தாலோ, வழியில் எதையாவது போட்டுவைத்திருந்தாலோ மிதிக்காமல் கவனமாக இருந்தாக வேண்டும்.  இப்படிப்பட்ட இடத்தை ஒரு பார்வையுள்ள நபரின் துணை இல்லாமல் நான் எப்படிக் கடந்திருக்கமுடியும்?

      எனக்கு முன்னரே என் தம்பி அனுமதிக்கப் பட்டதால்  அங்கு நிலவிய அத்தனை சூழல்களையும் தெரிந்து வைத்திருந்து என்னை முழுமையாகக் கவனித்துக்கொண்டார். மூன்று வேளை அங்கு கொடுக்கப்பட்ட  உணவும் மிகச் சிறப்பாகவே இருந்தது. அங்கு கொடுக்கப்படும் கசாயம், இருமல், சளி, காய்ச்சல், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தல், உடல் சோர்வை போக்குதல், தொண்டை சார்ந்த பிரச்சனைகளை குணப்படுத்துதல் போன்ற காரணங்களுக்காக தொடர்ச்சியாக வழங்கப்பட்டன. இந்த கஷாயத்தை நான்கு நாட்கள் தொடர்ந்து எடுத்துக்கொண்டாலே அடிப்படைக் கொரோனா அறிகுறிகளோடு வருபவர்கள் குணமாகிவிடுகிறார்கள். அங்கு சிகிச்சை பெற ஏழு நாட்கள் மட்டுமே ஒருவருக்கு அனுமதி வழங்கப்படுகிறது. அந்த ஏழு நாட்களுக்குள் கட்டாயம் உடல்நலம் தேறிவிடுகிறது. அங்கு சிகிச்சை பெற்றுக்கொள்ள தினசரி வருகிற எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் இருந்தது.

      அங்கு அனுமதிக்கப்பட்டிருந்த நாட்களில் 22 புதன் முதல் 26 ஞாயிறு வரை என்னை ஜுரம் உருக்கி எடுத்தது. வியாழன் முதல் மூச்சுத் திணறலும் அதிகரிக்கத் தொடங்கியது. நான் மிகவும் கலக்கத்தில் இருந்தேன். என்னால் தொடர்ச்சியாக பேச இயலவில்லை. அதனால் யாரிடமும் பேசாமல் தவிர்க்க வேண்டிய முடிவினை எடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டேன். அதனால் நண்பர்கள் சிலர் கோபித்துக்கொண்டதாகவும் அறிந்தேன். தலைவலி கூடுதலாக சேர்ந்துகொள்ள என்னால் அந்த நாட்களை நகர்த்துவது பெரும்பாடாக இருந்தது.

      ஐயா வீரபாபு அவர்கள் தினமும் மாலை சில வினாடிகளாவது என்னோடு உரையாடி என் ஐயங்களைப் போக்கி நம்பிக்கை வார்த்தை ஊட்டினார். அவரைக் குறித்து ஒரு தனிக் கட்டுரை எழுதவேண்டும். அந்த அளவிற்கு அவரின் அணுகுமுறை தனித்த கவனம் பெற்றது. அலோபதி மருத்துவர்கள் போல் அவர் நோயாளிகளிடம் இருந்து தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளவில்லை. மாஸ்க்கை தவிர வேறு எந்தப் பாதுகாப்பு உடையும் அவர் உடுத்தவில்லை. அருகில் வந்து, தேவையிருப்பின் கைகளைத் தொட்டு அவர் பேசிய விதம் பல நோயாளிகளின் மனதிற்கு சிகிச்சையாக இருந்து வருகிறது என்று குறிப்பிட வேண்டும். கசாயம் ஒருபுறமிருக்க, பகலில் மற்றும் இரவில் தொடர்ச்சியாக மாத்திரைகள் எடுத்துக் கொண்டதன் விளைவாக ஞாயிறு இரவோடு  எனது ஜுரம் என்னை விட்டு விலகி விடுதலை தந்தது.

      கூடுதலாக இரண்டு நாட்கள் இருந்து நன்கு கசாயம் எடுத்துக் கொண்டபின் ஜூலை 29 புதனன்று நாங்கள் இருவரும் அங்கிருந்து சான்றிதழ் பெற்று டிஸ்சார்ஜ் ஆனோம். சான்றிதழில் கையெழுத்து இடுகிற வேளையில் வீரபாபு ஐயா என் உடல் நலன் குறித்து கேட்டு அவர் அடைந்த ஆனந்தத்தை என்னால் இப்போதும் நினைத்துப் பார்த்து வியக்காமல் இருக்க முடியவில்லை. அவர் முகத்தில் அப்படி ஒரு சிரிப்பு. அந்த முகாமின் சிறப்பு யாதெனில் ஜூலை மாதத்தின் இறுதி வரை அங்கு ஒருவர் கூட இறக்கவில்லை என்பதே. ஆகஸ்ட் மாதத்தின் பிற்பகுதியில்தான் ஒரு 87 வயது மதிக்கத்தக்க பெரியவர் அங்கு இறக்க நேரிட்டதைச் செய்தியில் பார்த்து அறிந்து கொண்டேன். அங்கு நிலவிய நேர்மறையான சூழல் உடல்நலம் சரியாவதற்கு மிக முக்கியமான பங்கு வகிக்கிறது

graphic மருத்துவமணையில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் விளையாடி மகிழும் படம்

     மாலை வேளையில் சிறுவர்கள், இளைஞர்கள், பெண்கள், பெரியவர்கள் என வயதுப் பாகுபாடின்றி மைதானத்தில் கூடி பலதரப்பட்ட விளையாட்டுகளில் ஈடுபட்டு ஆனந்தப்படுவது அங்கு நான் கண்ட மறக்க இயலாக் காட்சி. சிகிச்சை பெறுபவர்கள் இருக்கும் அறையில் கூட யாரும் எதிர்மறையாகப் பேசி நான் கேள்விப்படவில்லை. அதிலும் ஒரு அறையில் பத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் கேரம் போர்டு விளையாடுவது, செஸ் விளையாடுவது என்று கொண்டாடித் தீர்த்துவிட்டார்கள். அங்கு என்னைப்பொறுத்தவரை உடலுக்கு அளிக்கப்படும் சிகிச்சையைக் காட்டிலும் மனதுக்கு அளிக்கப்படும் சிகிச்சைக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. சக நோயாளிகள் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்வது, அனுசரணையாகப் பேசுவது என உறவு பாராட்டுகிற முறையும் அங்கு அதிகம் உண்டு. அதிலும் குறிப்பாக அங்கு பணியாற்றிய இளைஞர்கள் 12 மணி நேரம் கலைப்பைப்  பொருட்படுத்தாமல் மெனக்கெடுவதை  நினைத்துப் பார்த்து அவர்களைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

என்னை பற்றிக்கொண்ட கொரோனாவிடம் நான் பெற்றுக் கொண்டவை

      இதனை விளக்கிச் சொல்வதற்கு முன் சில கருத்துகளைப் பதிவிட ஆசைப்படுகிறேன். எனக்கு பாசிட்டிவ் என வந்தவுடன் இதைக் குறித்து வெளியில் அதிகமாகப் பேசிக் கொள்ளக் கூடாது என்று முடிவெடுத்தேன். அதிலும் குறிப்பாக வாட்ஸ்அப், டெலிகிராம் உள்ளிட்ட நண்பர்கள் பயணிக்கும் தளத்தில் விவாதிப்பதற்கு வாய்ப்பைத் தந்துவிடக்கூடாது என்பது எனது உறுதியான நிலைப்பாடாக இருந்தது. காரணம், நிறைய நண்பர்களிடம் எனக்குத் தொடர்பு உண்டு என்பதனால், அனைவரும் அழைத்துப் பேசத் தொடங்கிவிட்டால் ஓய்வெடுக்க முடியாமல் போய்விடும் அல்லது அது சில வேளைகளில் நம்மைப் பலவீனப்படுத்திவிடும் என்பதால் அந்த முடிவை எடுப்பதே சரி என  உறுதியாக நம்பினேன். ஒருவேளை எந்த முயற்சியும் பலன் தரவில்லை என்றால் நம் சமூகத்தை அணுகி எனக்கு உரிய வசதியைச் செய்துதரக் குரல் கொடுக்கச் செய்யலாம் என்கிற எண்ணமும் என் மனதில் இருக்கத்தான் செய்தது.

      பரிசோதனை செய்துகொள்வதற்கு முன் நம் மாற்றுத்திறனாளிகள் துறையால் அறிமுகப்படுத்தப்பட்டு நிர்வகிக்கப்படுகிற உதவி எண்ணை (18004250111) அழைத்து, எனக்குப் பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்ய முடியுமா என்று கேட்ட பொழுது, அவர்கள் ஆயிரம் ரூபாய் தருவதற்கு மட்டுமே அந்த உதவி எண்ணை இயக்கி வருவதாகச் சொல்லி, ஆபத்தில் இருந்த எனக்கு எந்த உதவியும் செய்யவில்லை என்பது துர்பாக்கியமான ஒன்று. நான் மீண்ட அந்தச் செயலில் நமது துறையின் ஒரு துளி பங்களிப்புக் கூட இருக்கவில்லை என்பது முக்கியமாகப் பதிவுசெய்யப்பட வேண்டிய ஒன்று.

      நோய்த்தொற்று இருந்த அந்த நாட்களில் நான் சற்றும் தைரியத்தை இழக்கத் தயாராக இல்லை. பரவலாகப் பேசப்படுவது போல அச்சப்படுவது அல்லது அதிக பயத்தை வளர்த்துக்கொள்வது உடல் நலத்தை மேலும் மோசமாக ஆக்கி  விடுகிறது. உடல் ஜுரத்தை வெளிப்படுத்திய நாளில் இருந்து நான் குணமாகி வீடு திரும்பிய நாள் வரை உணவைக் கொஞ்சம் கூட  குறைத்துக் கொள்ளவில்லை. முடியவில்லை என்றாலும், இயன்றவரை  தேவைப்படுகிற அளவு உணவை மூன்று வேளையும் எடுத்துக் கொண்டே இருந்தேன். அது மிக முக்கியமான காரணமாக இருக்கலாம் நான் மீண்டு வந்ததில். கட்டாயம் மீண்டு வரத்தான் போகிறேன் என்று எனக்குள் சொல்லிக்கொண்டே இருந்தேன்.

      நான் உட்பட நம்மில் பலருக்கு உடல் சார்ந்து அக்கறை பெரிதாக இருப்பதில்லை. அதனைக் கட்டாயம் நாம் ஒவ்வொருவரும் வழக்கமாக்கி கொள்ள முயன்றே ஆகவேண்டும். ஒருவேளை ஊரடங்கு தொடங்கிய நாள் முதல் நடை பயிற்சி உள்ளிட்ட ஏதேனும் ஒன்றில் அக்கறை செலுத்தி இருந்தால் இவ்வளவு  மோசமாக நான் பாதிக்கப்பட்டிருக்க மாட்டேன் என்பது நிதர்சனம்.

      என் மனைவி சமையலில் எவ்விதக் குறைபாடும் வைக்காமல் கவனித்துக் கொண்டது என்னை நோய் எதிர்ப்பு சக்தியுடன் வைத்திருக்கப் பெரிதாக உதவியது. அதுவே நான் மீண்டுவர மிக முக்கியப் பங்காற்றியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

      மருத்துவர் ஐயா வீரபாபு அவர்கள் என்னிடம் குறிப்பிட்டது உடல் பருமனைக் குறைக்க வேண்டும். அது இருந்தால் எல்லா விதமான உடல் உபாதைகளும் இருக்கும், மேலும் பல தீவிரச் சிக்கல்களுக்கும் அது காரணமாக அமைந்து விடும் என்பதே. அந்த ஆலோசனைக்குப் பிறகு என்னால் முடிந்த உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன் அதையே நண்பர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என என் அனுபவத்தின் வாயிலாக உங்களை உரிமையோடு கேட்டுக்கொள்கிறேன்.

      கொரோனா நம்மைப் பற்றிக்கொண்டபின் சிகிச்சைக்காக சென்றால் கட்டாயம் நமக்கு ஒரு உதவியாளர் இருப்பது நல்லது. நமக்கு மட்டுமல்ல; நான் சிகிச்சை பெற்றுக் கொண்ட சித்தா  முகாமில் கணவனைக் கவனித்துக்கொள்ள மனைவியும், பிள்ளைகளைக் கவனித்துக்கொள்ள பெற்றோரும், பெற்றோரைக் கவனித்துக்கொள்ள பெரிய பிள்ளைகளும் எனக் குடும்பத்தார் உதவிக்கு இருக்கவே செய்தார்கள். நமக்கு மட்டும்தான் உதவியாளர்கள் தேவைப்படுகிறார்கள் என்று நினைத்து அச்சப்பட வேண்டாம் என்பதே நான் சொல்ல விரும்பும் மிக முக்கியமான செய்தி.

      என் அனுபவத்தின் வாயிலாக மட்டுமல்ல; கொரோனா முகாமிற்குப் பொறுப்பாளராகவும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உதவி வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகவும் பணியாற்றி வரக்கூடிய என் உறவினர் சொன்ன மிக முக்கியமான செய்தி ஒன்றினை குறிப்பிட்டே ஆகவேண்டும். இந்த கோவிட் வைரஸ் ஒருவரின் உடலில் ஏழில் இருந்து அதிகபட்சம் 15 நாட்களுக்கு மேல் இருப்பதில்லை. இதற்கு சில உதாரணங்களைக் கூட என்னால் குறிப்பிட முடியும். சமீபத்தில் மறைந்த பெருமதிப்பிற்குரிய நாடாளுமன்ற உறுப்பினர் திரு வசந்த குமார் அவர்களுக்கு இறுதியாக பரிசோதித்தபோது நெகட்டிவ் என இருந்ததை நீங்கள் கவனித்திருப்பீர்கள். பாடகர் திரு பாலசுப்பிரமணியம் அவர்களுக்கும் நெகட்டிவ் என வந்ததாக சில நாட்களுக்கு முன் செய்தி கசிந்தது. அவர்கள் ஆபத்தை நோக்கிச் சென்றதற்குக் காரணம் உடலில் இருக்கிற இதர பிரச்சனைகள் என்பது கவனிக்கத்தக்கது. குறிப்பாக சர்க்கரைத் தொந்தரவு, நுரையீரல் உள்ளிட்ட உறுப்பு தொடர்பான சிகிச்சை எடுத்து வருபவர்கள், அடிக்கடி சளித்தொல்லையால் அவதிப்படுபவர்கள், இயற்கையான முறையில் உடலைப் பராமரித்துக்கொள்ள கட்டாயம் முயல்வது இந்த தொற்றிலிருந்து காத்துக்கொள்ள உதவியாக இருக்கும். 

      அதுபோலவே  இந்தத் தொற்று இருக்கும் நாட்களில் நம்மை தைரியத்தோடு வைத்துக் கொண்டுமுறையான சிகிச்சையை எடுத்துக் கொண்டால் கட்டாயம் நம்மைவிட்டு இந்த வைரஸ் சென்று விடுகிறது. கொரோனா  தொற்றினால் பாதிக்கப்பட்டு இருந்த நாட்களில் நாம் எல்லாவற்றையும் கவனிக்க வேண்டியிருக்கிறது. தொண்டைக்குச் சிகிச்சை காய்ச்சலுக்குச் சிகிச்சை, (இருந்தால் மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும்), சளி இருந்தால் அதை முற்றிலும் ஒழிக்க ஆவி பிடித்தல் போன்றவற்றை அவரவர் உடல் தன்மையைப் பொறுத்து மேற்கொள்ள  வேண்டும்.

      எல்லோருக்கும் ஜுரம் எல்லாம் வருவதில்லை என்பது நினைவில் கொள்ளத்தக்கது. இது தொற்றுகிற  பொழுது அவரவர் உடல் தன்மையைப் பொறுத்தே அறிகுறிகளை தெரிந்து கொள்ள முடிகிறது. எனவே அது தொடர்பாக எவ்வித கவலையும் கொள்ளவேண்டாம்.

      அச்சம் தவிர் என்பதுதான் இதனை வெல்ல நாம் அவ்வப்பொழுது உச்சரிக்கவேண்டிய தாரக மந்திரம். 

மீண்ட பிறகு தொடரும் விளைவுகளும் அவற்றைச் சரிசெய்யும் முறைகளும்

      ந்த நோய்த் தொற்றிலிருந்து நான் மீண்டு வர எனக்கு மன தைரியத்தைக் கூட்டி தகுந்த ஆலோசனை வழங்கியதில் சங்கர் சார் அவர்களின் பங்கு மிக முக்கியமானது. அதாவது 29 ஜூலை அன்று டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வந்த பிறகும் என்னை விடாமல் துரத்தியது உடல் சோர்வு மற்றும் மூச்சுத்திணறல் தொந்தரவுகள். என்னால் முறையாகச் சாப்பிட இயலவில்லை. சாப்பிட்டாலும் அஜீரணக் கோளாறு பாடாய் படுத்தியது. சிகிச்சை பெற்ற நாட்களில் ஏறத்தாழ ஐம்பதுக்கும் மேற்பட்ட மாத்திரைகள் எடுத்துக் கொண்டதால் வயிற்றுப்புண்ணும் கூடுதலாக இணைந்துகொண்டது. போதாக்குறைக்கு உடல் உஷ்ணமும் இவற்றோடு கைகோர்த்துக்கொண்டது. முதலில் மூச்சுப் பிரச்சனையை சரிசெய்ய இடைவிடாது மூச்சுப் பயிற்சியில் ஈடுபட்டேன். அது நல்ல பலனைக் கொடுத்தது. இப்பொழுது அந்தத் தொந்தரவு முற்றிலும் இல்லை.

      மருத்துவர் ஐயா  வீரபாபு அவர்கள் ஆலோசனை கொடுத்ததற்கு இணங்க ஒரு வாரம் நிலவேம்பும் மற்றும் கபசுர குடிநீர் தொடர்ச்சியாக எடுத்துக்கொண்டேன். அவர் யூடியூப் வலைதளத்தில் தெரிவித்திருப்பது போல, அதிமதுரம் உள்ளிட்ட கலவையால் தயாரிக்கப்பட்டு நாட்டு மருந்துக் கடையில் விற்பனைக்குக் கிடைக்கும் பவுடரை வாங்கி வந்து இன்றுவரை தேநீரில் கலந்து எடுத்து வருகிறேன். தேயிலை கலந்த தேநீர் பருகும்  முறை  இப்பொழுது எனக்கு ஏறக்குறைய மறந்தேவிட்டது.

      கிட்டத்தட்ட பதினைந்து அல்லது இருபது நாட்கள் கொரோனாவிலிருந்து மீண்ட பிறகும் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதே மருத்துவர்கள் வழங்கும் முக்கிய ஆலோசனை. அந்தக் காலகட்டத்தை நாம் உடலை மீட்டுருவாக்கம் செய்யப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். டிஸ்சார்ஜ் செய்கிற பொழுது மீண்டும் கொரோனா பரிசோதனை எதுவும் எடுப்பதில்லை. இந்த வைரஸ் கொடுக்கும் அறிகுறிகள் குறைந்த உடனேயே அவர்கள் நம்மை டிஸ்சார்ஜ் செய்துவிடுகிறார்கள். அவ்வளவுதான்.

      வயிற்றுப் புண்ணை ஆற்ற சஞ்சீவினி செயலியின் வழியாக மருத்துவர் பரிந்துரைத்த டானிக் எடுத்துக் கொண்டேன். தொடர்ச்சியாக மணத்தக்காளி கீரையை எடுத்துக் கொண்டதும் நல்ல விளைவைக் கொடுத்தது. உடல் உஷ்ணத்தைத் தணிக்க துத்தி இலை பவுடர் காய்ச்சி  ஆறிய நீரில் கலந்து பருகியதால் அதுவும் இப்பொழுது மட்டுப்பட்டுவிட்டது. 

      இப்பொழுதெல்லாம் முன்புபோல் வெந்நீரில் குளிக்கிற முறையைக் கைவிட்டுவிட்டேன். குடிப்பதற்கு வெந்நீர் தான் பயன்படுத்தவேண்டும் என்ற நிலை இருந்தால் கூட மிகவும் சூடாக இருக்கிறபொழுது எடுத்துக்கொள்வதைத் தவிர்ப்பது நல்லது.

      தொண்டையைச் சரிசெய்ய உப்பு மற்றும் மஞ்சள் கலந்து கார்குள்  செய்வது உகந்தது.

      நான் மேலே குறிப்பிட்ட ஆலோசனைகளை அவரவர் உடல் தன்மையைப் பொறுத்து மேற்கொள்ள வேண்டும் என்பதே எனது பணிவான வேண்டுகோள்.

      நாம் அனைவரும் அரசிடம் வலியுறுத்தி நமக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது. குறிப்பாக, நம்மைப் பரிசோதிக்க அரசு தனித்த ஏற்பாடு செய்தாக வேண்டும். அவரவர் உடல் ஏற்றுக்கொள்ளும் சிகிச்சையைப் பொறுத்து சித்தா  அல்லது அலோபதி சிகிச்சைக்கு நாம் உடனடியாக சென்று அனுமதிக்கப்படுவதை  அரசு உறுதிப்படுத்த அழுத்தம் தந்தாக வேண்டும். அதுபோல் சித்தா உள்ளிட்ட பாரம்பரிய மருத்துவ முறைகளைப் பாதுகாத்துப் பேணிட நாமும் இடைவிடாது முயன்றிட வேண்டும்.

நன்றிகளும் வேண்டுகோளும்

      நான் குணம் பெற தைரியம் ஊட்டிய அனைவருக்கும், என்னோடு தொடர்புகொண்டு பேசாவிடினும், பிரார்த்தனை மற்றும் வாழ்த்தினை வழங்கிய ஒவ்வொரு நல்ல உள்ளங்களுக்கும்  எனது நன்றி காணிக்கையாக்கப்படுகிறது.

      நண்பர்களே! தயவுசெய்து உடல் பயிற்சியை மேற்கொள்ள நாம் எல்லோரும் உறுதிமொழி ஏற்க வேண்டும் என்பதை என் அன்பு வேண்டுகோளாக உங்கள் ஒவ்வொருவருக்கும் தர விரும்புகிறேன்.

      என் மனைவி இல்லாமல் இதிலிருந்து நான் மீண்டிருக்க முடியாது. எனவே நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் இணையுடன்அல்லது நம்பிக்கைக்குரிய உறவினர்களுடனும் உங்கள் உடலில் ஏற்படும் மாற்றத்தை நம்பிக்கையோடு விவாதித்துத் தீர்வு காண தயங்காதீர்கள்!

 

(கட்டுரையாளர்: சென்னை சர் தியாகராயர் கல்லூரியில்  ஆங்கில உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்துவருகிறார்).

 தொடர்புக்கு: mahendranbefrank@gmail.com

4 கருத்துகள்:

  1. காலத்திற்கேற்ற தகுந்த அனுபவ கட்டுரையை வழங்கியமைக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  2. தங்களது கட்டுரையானது எங்களுக்கு மிகச்சிறந்த அனுபவத்தையும் நல்ல விழிப்புணர்வையும் ஏற்படுத்தி உள்ளது என்பதில் எவ்வித ஐயமும் இல்லை தாங்கள் இந்த நோயிலிருந்து மீண்டு வந்ததற்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் ஐயா

    பதிலளிநீக்கு
  3. தளர்ந்தவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் கட்டுரை.வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு