ஆளுமை: தொடர்புக் கண்ணி அறுந்தது - முனைவர் வே. சுகுமாரன்

graphic திரு. கோவை ஞானி
திரு. கோவை ஞானி

      கனத்த இதயத்துடனும் குற்ற உணர்வுடனும்தான் இக்கட்டுரையை எழுதத் தொடங்குகிறேன். முன்னையது அவருடைய இழப்பால் ஏற்பட்ட சோகம். பின்னையதோ கடந்த சில மாதங்களாக தொலைபேசியில் பேசவும் நேரில் சென்று காணாமலும் இறுந்துவிட்ட மன உறுத்தல்.

      என் கட்டுரைத் தொகுப்பு ஒன்றிற்காக அணிந்துரை கேட்டிருந்தேன். “பிப்ரவரி 17ஆம் தேதிக்குப் பிறகு வைத்துக்கொள்ளலாமா?” என்றார். நானும் சம்மதித்தேன். பிப்ரவரி 17, 2019 அன்று தி இந்து தமிழ் திசை இதழ் அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கத் தீர்மானித்தது. அதற்காக அவரைப் பற்றிய ஆவணப்படம் ஒன்று கலந்துரையாடல் வடிவில் தயாரிக்கப்பட்டது.  அந்த ஆவணப்பட கலந்துரையாடலில் நானும் கலந்துகொண்டேன். இந்நிகழ்வுக்குப் பிறகு விருது விழாவில்தான் அவரைச் சந்தித்தேன். அதன் பிறகு நான் அவரைச் சந்திக்கவுமில்லை; பேசவுமில்லை. என் குறு நாவலை அவரிடம் காட்டிக் கருத்துக் கேட்க ஆசைப்பட்டேன். இதோ எல்லாம் காற்றில் கலந்த கனவாயிற்று. காலம் கண்ணீர் துளிகளை மட்டும் கன்னத்தில் ஓடவிட்டது.

முதல் சந்திப்பு

graphic முனைவர் வெ. சுகுமாரன்
முனைவர் வெ. சுகுமாரன்

      அது 1990-களின் முற்பகுதி என்று நினைக்கிறேன். நான் சார்ந்திருந்த ஒரு பார்வையற்றோர் அமைப்பின் சார்பில் ‘புதிய பார்வை’ என்னும் ஒரு காலாண்டிதழ் கொண்டுவருவதென தீர்மானித்திருந்தோம். முதல் இதழில் கோவை ஞானி அவர்களின் நேர்காணல் ஒன்றும் வெளியாயிற்று. அதற்காகத்தான் அவரைச் சந்தித்தேன். கேள்விகள் பல கேட்டார். நான் வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியர் என்பதனால், ‘வரலாற்று நூல்கள் எழுதலாமே!’ என்று வற்புறுத்தினார். அத்தகைய கேள்வியின் காரணமாகவே ஒரு வகை அச்சத்தால் அவரைச் சந்திப்பதைத் தவிர்த்துவந்தேன்.

      எந்த மனிதனையும் முதல் சந்திப்பிலேயே கவரச்செய்யும் சக்தி அவரிடம் இருந்தது. மிக நெருக்கமானவராகப் பேசுவார். தாம் எடுத்துக் கொண்ட விடயத்தைப் பற்றி விளக்கம் வேண்டும் என்றால் தன் கேள்வியின் மூலம் நம் விடைகளில் இருந்து அதை பெற்றுவிடுவார். அவரிடம் பழகும் எல்லோரையுமே வாசிக்கவும், எழுதவும் சொல்வார். ஒருவரைப் பார்த்தால் அவரிடம் இருந்து வரும் முதல் கேள்வி ‘என்ன வாசிக்கிறீர்கள்?’.  இரண்டாம் கேள்வி ‘என்ன எழுதுகிறீர்கள்?’ என்பவைதான். 

படைப்பின் தரம்

      அவரது கவனத்துக்கு வந்த எந்தப் படைப்பும் தரமானதாக இருக்க வேண்டும் என்பதில் மிகக் கண்டிப்பானவர். 2005 ஆம் ஆண்டு வெளிவந்த ‘நெருப்பு நிஜங்கள்’ எனும் எனது முதல் கவிதைத் தொகுப்பில் வந்த அனைத்துக் கவிதைகளுக்கும் விளக்கம் கேட்பதற்காக ஏறத்தாழ ஒரு வாரம் எடுத்துக்கொண்டார். ஒவ்வொரு நாளும் ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரம் என்னை விவரிக்கச் சொன்னார். தாலி இல்லாமல் வாழ்வது அரிதா? என்ற என் கவிதை வரிக்குத் திரும்பத் திரும்ப விளக்கம் கேட்டார். நான் சொன்ன விடைகளை வைத்துக்கொண்டு பெண் தாலி இல்லாமல் வாழ முடியும் என்பதை ஒப்புக்கொண்டார். என் கவிதைக்கான அணிந்துரையில் இது ஒரு மதம் சாராத அறநூல் என்று எழுதியிருந்தார்.

      அவ்வப்போது தொலைபேசியில் பேசும்போதும் நேரில் காணும்போதும் என் கவிதைகளில் தத்துவம் தூக்கலாக இருக்கிறது என்று விமர்சிப்பார். இன்றைய தமிழ் சூழலுக்கு இத்தகைய தத்துவம் தேவைதான் என்று சொல்வார். பிறரை எழுத ஊக்குவிப்பதில் அவருக்கு நிகர் அவர்தான்.

தேடல் வேட்கை

      மனிதகுல வரலாற்றில் தேடல் ஒரு தொடர் நிகழ்வு. அந்த மானுடத் தேடல் கோவை ஞானியிடம் மிகுதியாக இருந்தது. அவர் ஒவ்வொன்றிலும் தனக்கான மார்க்சியத்தைத் தேடினார். மார்க்சியம் அவர் உள்ளக்கிடங்கின் மையம். அந்த மையப்புள்ளியில் இருந்துதான் ஆரங்களையும், விட்டங்களையும் வரைந்து வட்டங்களை உருவாக்கினார். நிருவனமாக்கப்பட்டு மனிதர்களைப் பல கூறுகளாக பிரித்துப் போட்டு சின்னாபின்னமாக்கியிருக்கும் மதங்களைக் கேள்வி கேட்டார். ஆனால் கடவுளிடத்தில் ஒரு ரசிப்புத் தன்மை அவரிடம் இருந்தது. ‘கடவுள் ஒரு அழகான கற்பனைக் கவிதை’ என்பது அவரது கருத்தாக இருந்தது. வில்டூரெண்ட் சொல்வது போல கடவுளும் சாமானியர்களால் உருவாக்கப்பட்டவர். அந்தச் சாமானியர்கள் மீது ஞானியின் மார்க்சியத்திற்கு ஈடுபாடு வந்தது.

      ஆழமான அவருடைய தமிழ் வாசிப்பு தமிழுக்குள் அவரை மார்க்சியத்தைத் தேடவைத்தது. தமிழ்நாட்டில் மார்க்சியத்தின் அன்னியமாதலை பரவச் செய்தவர் தோழர் எஸ். என். நாகராஜன் என்றால், தமிழ் செவ்விலக்கியத்தில் மார்க்சியத்தை மூலை முடுக்கெங்கும் தோண்டிப் பார்த்து நுனுக்கமாகத் தேடியவர் கோவை ஞானி தான்.

      நான் மேலே குறிப்பிட்ட ஆவணப்பட உரையாடலில் கூறியதையே மீண்டும் சொல்கிறேன். கிராமம் என்பது ஒட்டுமொத்த அலகையும் உள்ளடக்கிய ஓர் உறுப்பு. கிராமத்தில் எந்த ஒரு வீட்டில் நல்லது கெட்டது எது நடந்தாலும் அதில் ஒட்டுமொத்த கிராமமும் பங்கேற்கும். இது நம் புத்தியில் பதியமிடப்பட்டுள்ள கருத்து. மாறுபட்டு சிந்திக்கிறார் கோவை ஞானி. இன்னாது அம்ம இவ்வுலகம்!
இனிய காண்க அதன் இயல்புணர்ந்தோரே! எனும் பக்குடுக்கை நன்கணியார் பாடிய புறநானூற்றுப் பாடலைக் கையில் எடுத்துக்கொள்கிறார். ஒட்டுமொத்த கிராமமும் ஒரு இடத்தில் கூடும் என்றால், மேற்சொன்ன இந்தப் பாடலில் ஒரு வீட்டில் சாவு மேளமும் மற்றொரு வீட்டில் திருமண மேளமும் கேட்பது எப்படி? அப்படியானால் சங்ககாலத்திலேயே நகரமயமாக்கல் தொடங்கிவிட்டதா?” என்கிறார். இந்த ஊடுருவும் பார்வைதான் அவருடைய தனித்துவம்.

இணைப்புப் புள்ளி

      சொல்பவரைப் பற்றி கவலைப்படாமல், சொல்லப்படுவதைப் பற்றி கவலைப்பட்டார் கோவை ஞானி. படைப்பாளிகளை விட படைப்பின் மீது ஈடுபாடு காட்டினார். ஜெயமோகனின் ‘விஷ்ணுபுரம்’ நாவல் வெளிவந்தபோது அந்நூலின் அட்டைப் படத்தைப் பற்றி எல்லோரும் பேசிக் கொண்டிருந்தார்கள் ஆனால் கோவை ஞானி விஷ்ணுபுரம் நாவலை ஊடுருவிப்பார்த்தார். அதன் வழி ஜெயமோகன் என்னும் படைப்பாளியை அடையாளப்படுத்தினார். மார்க்சியம் ஆதிக்க சக்திகளை எதிர்க்கிறது. அம்பேத்கர் வழி நடப்போர் சாதி ஆதிக்கத்தை எதிர்க்கிறார்கள். அப்படியானால் இவர்களை மார்க்சியம் ஏற்றுக் கொள்வதில் என்ன தவறு? பெண்களை ஆண்கள் சுரண்டுவதையும், அடிமைப்படுத்துவதையும் பெண்ணியம் எதிர்க்கிறது. அப்படியானால் இதை எதிர்க்கும் மார்க்சியமும் பெண்ணியத்தை ஏன் சேர்த்துக்கொள்ளக்கூடாது?

      காந்தியம் சமதர்ம சமுதாயத்தை முன்மொழிகிறது. மார்க்சியமும் இதைத்தான் செய்கிறது எனில், காந்தியமும் மார்க்சியமும் ஒரு புள்ளியில் இணையலாம் இல்லையா? இப்படி ஒவ்வொரு தனிப்பட்ட குழுவினரையும் தன் மார்க்சியப் புள்ளிக்குள் இணைத்துக் கொண்டிருந்தார் கோவை ஞானி.    

      இந்த இணைப்புக் கண்ணி இன்று அறுந்துவிட்டது. அரசியல்வாதிகள் இரங்கல் அறிக்கையில் ‘அன்னாரது இறப்பு ஈடுசெய்யமுடியாதது’ என்று எழுதுவார்கள். இங்கே கோவை ஞானியின் இழப்பும் உண்மையில் ஈடுசெய்ய முடியாது. இனி யார் எப்போது இப்படி ஒரு இணைப்புக் கன்னியாக தமிழகத்தில் உலாவமுடியும்? சூழல் அவருக்குச் சற்று ஒத்துழைப்புத் தந்திருந்தால் கோவை ஞானி இன்னும் சில ஆண்டுகள் நம்மோடு இருந்திருப்பார். இன்னமும் சில காத்திரமான நூல்கள் நமக்குக் கிடைத்திருக்கும். என்ன சொல்லி என்ன பயன்? ‘விதியின் கை எழுதி எழுதி மேற்செல்லும்’ என்னும் உமர்கயாமின் கவிதையை எண்ணிக் காலத்தைச் சபிப்பதைத் தவிர வேறு என்ன வழி?

 

(கட்டுரையாளர்: ஓய்வுபெற்ற வரலாற்றுத் துறை பேராசிரியர். கோயம்புத்தூரில் வசித்துவரும் இவர், ‘காத்திருப்பு’, ‘நெருப்பு நிஜங்கள்ஆகிய கவிதைத் தொகுப்புகளின் ஆசிரியர். பல சிற்றிதழ்களில் தொடர்ந்து எழுதிக் கொண்டிருப்பவர்).

தொடர்புக்கு: sukumaran97@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக