சிறுகதை: கண்ணம்மா கண்ட கனவு - பரிபூரணி

graphic ஒரு பெண் தூக்கத்தில் கனவு காண்பது போன்றமைந்த படம்

        மறுநாள்  பள்ளியில் மாணவர்களுக்குக் கற்பிக்கவேண்டிய பாடங்களுக்குக் குறிப்பெடுத்துவிட்டு, இரவு உணவை உண்டு, உறங்கச் செல்கிறாள் கண்ணம்மா. அன்றய அலைச்சலில் அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்தவள், அவளது அலைபேசி அலார ஒலி அலறியவுடன் எழுந்துவிட்டாள்.

      அன்று அமாவாசை என்பதால் வடை பாயாசத்துடன் கூடிய உணவைச் சமைக்கத் தயாராகிறாள். காய்கறிகளைக் குளிர்சாதனப்  பெட்டியிலிருந்து எடுத்து, நறுக்கவேண்டிய அளவினைத்  தானியங்கி காய்கறி நறுக்கி இயந்திரத்தில் தேர்வுசெய்துவிட்டு இயக்குகிறாள்.  இயந்திரத்தின் சார்ஜ் தீர்ந்துவிட்டது. கடிகாரத்தைப் பார்க்கிறாள்; சார்ஜ்  ஏற்றி இயந்திரத்தை இயக்குமளவுக்குப் போதிய நேரமில்லை என்றுணர்ந்து, கத்தியைக் கொண்டு காய்கறிகளை நறுக்கிவிட்டு, வதக்கி கூட்டு சமைத்துவிட்டு, வேகவைத்திருந்த பருப்பினைக் கொண்டு மணக்க மணக்க சாம்பார் தாளித்துவிட்டு, முந்திரியையும் திராட்சையையும் நெய்யில் இதமாய் வறுத்து, பாலில் வேகவைத்திருந்த சேமியாவுடன் பதமாய் கலந்து, சரியான அளவில் சர்க்கரையையும் பொடியாக்கிவைத்திருந்த ஏலப்பொடியையும் சேர்த்து நன்கு கொதித்தவுடன் பாயசத்தை இறக்கிவைத்துவிட்டாள்.

       ஸ்மார்ட்  அரவை இயந்திரத்தை உயிர்ப்பித்து, ஊறவைத்திருந்த சுத்திகரிக்கப்பட்ட உளுந்தை நிரப்பி மாவரைக்கிறாள்.  அடுத்த அரையில் உறங்கிக்கொண்டிருந்த தனது புதல்விகள்  ஹஹானா மற்றும் சஹானா இருவரையும் எழுப்பி, பொங்கிய பாலைப் பருக கொடுத்துவிட்டு, விரைவில் பள்ளிக்குச் செல்லத் தயாராகும்படிக் கூறுகிறாள். இயந்திரத்தின் சத்தம் ஓய்ந்ததால், விரைந்து சென்று அரைந்திருந்த  மாவுடன் கருவேப்பிலை, மிளகு, உப்பு சேர்த்து, ஸ்மார்ட்  நுண்ணலை அடுப்பில் எண்ணையையும், மாவையும் உரிய தட்டில் பூர்த்திசெய்துவிட்டு, வடை என்று தட்டச்சு செய்து, அளவினைத் தெரிவுசெய்துவிட்டு இயக்குகிறாள்.

      உணவு அனைத்தும் தயாரானவுடன், விளக்குகளில் எண்ணையைவிட்டு, சிறிய அளவிலான பேட்டரி  லைட்டரை விளக்கு முன் காட்டுகிறாள். விளக்கு ஒளிரூட்டப்பட்டவுடன் லைட்டர் vibrate  ஆகிறது.  சமைத்த உணவை இலையில் இட்டு, மூதாதையரை வணங்கிவிட்டு, தனது அலைபேசியில் smart detector  என்னும்  செயலியைத் திறந்துவிட்டு, சிறு இலையில் உணவெடுத்துக்கொண்டு காகத்திற்குப் பிண்டமிட மொட்டைமாடிக்கு விரைகிறாள். காகம் உனவை  எடுத்துவிட்டதை அவளது செயலிவழி உறுதிசெய்துகொண்டபின் அனைவரும் காலை உணவை உட்கொண்டு,  மதிய உணவை எடுத்துக்கொண்டு பள்ளிக்குப் புறப்படத்  தயாராகிறார்கள்.

      அன்று மகள்களின் பள்ளி வாகனம் வராததால், அவர்களையும் அழைத்துக்கொண்டு, தனது தானியங்கி மகிழூர்தியில் மகள்களின் பள்ளியைத் தெரிவுசெய்துவிட்டு இயக்குகிறாள். சாலை விதிகளைப் பின்பற்றி, சிக்னல் பார்த்து, ஜிபிஏசின் வழிகாட்டுதல்படி, செல்லும்வழியைக் குரல்வழி அறிவிப்புகளுடன், ஓட்டுநர் இல்லாமல், எந்த இடர்பாடும் இன்றி, இதமாய் செல்கிறது அந்த வாகனம்.

graphic தானியங்கி மகிழுந்தில் ஒரு பெண் புத்தகம் வாசித்தபடி பயணிக்கும் படம்

      பள்ளியின் வாயிலை அடைந்தவுடன்  பீம் என ஒலிஎழுப்பி, வாகனம்  நின்றுவிடுகிறது. இருவரிடமும் விடைபெற்றுக்கொண்டு ஊர்தியைத் தனது பள்ளிக்கு விரைந்து செலுத்துகிறாள். பள்ளியின் பயோமெட்ரிக் இயந்திரம் பழுதடைந்திருந்தமையால், தனது ஸ்மார்ட் பேனாவால் வருகைப் பதிவேட்டில்  சுறுக்கொப்பம் இட்டுவிட்டு, தான் திருத்தவேண்டிய காலாண்டு விடைத்தாள்களைப் பெற்றுக்கொண்டு, வகுப்பிற்கு விரைகிறாள்.

      வகுப்பில் நுழைந்து, வருகைபுரிந்துள்ள மாணவர்களின் பெயர்களை Smart டிடெக்ஷன் என்னும்  செயலியில் உள்ள Person Detection என்னும்  மெனுவைப் பயன்படுத்தி உறுதிசெய்துகொண்டு, மின்னணு  வருகைப் பதிவேட்டைப் பூர்த்திசெய்கிறாள். கணிப்பொறி அறிவியலைக் கனிவுடன் கற்பித்து, மாணவர்களின் ஐயங்களைத் தெளிவுபடுத்துகிறாள்.

      கிடைத்த ஓய்வு வேளையில் மாணவர்களின் வீட்டுப் பாடக் குறிப்பேடுகளை நுண்ணறிவு எழுத்துணரி செயலியின்வழி  விரைந்து திருத்தி, இடவேண்டிய குறிப்புகளைத் தனது ஸ்மார்ட் பேனாவால் சரியான இடங்களில் குறிக்கிறாள். அன்று மாணவர்களுக்கு வழங்கவேண்டிய வீட்டுப்பாடத்தினைப் புலனக் குழுவில் பதிவிட்டுக்கொண்டிருக்கையில், தலைமை ஆசிரியர் அழைப்பதாக அலுவலக உதவியாளர் கூறியதைக் கேட்டு, ஸ்மார்ட் வெண்கோளை எடுத்துக்கொண்டு  அவரது அலுவலகம் நோக்கி நடக்கிறாள். வழக்கத்திற்கு மாறாக மேசைகள் மாற்றி அமைந்திருந்தபோதும் வெண்கோலுடன் இணைத்து பொருத்தப்பட்டிருந்த ear போனில் பெறப்பட்ட அறிவிப்புகளைக் கேட்டு, தடுமாறாமல், தடம்மாறாமல், மோதாமல் சென்று, காலியாக இருந்த நாற்காலியில் அமர்கிறாள்.

      இம்மாத இறுதியில் பள்ளி வளாகத்தில் நடைபெறவுள்ள பார்வையற்றோருக்கான மாநில அளவிலான பல்வேறு  விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் குறித்து விவாதிக்கவும், மேற்கொள்ளவேண்டிய முன்னேற்பாடுகளை மேற்பார்வையிடும் பொறுப்பினை அவளுக்கு பணிக்கவும் அழைத்திருந்தார் தலைமை ஆசிரியர்.

      கூட்டம் முடிந்தவுடன், அவரிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு, நிர்வாகக் கண்காணிப்பாளராகப் பணிபுரியும் தன்னைப் போன்ற பார்வையற்ற தோழியான ரக்ஷிதாவைச் சந்திக்கச் செல்கிறாள். நிர்வாகப் பிரிவில் மூன்று பணிக்காலியிடங்கள் பல நாட்களாக பூர்த்திசெய்யப்படாமல் உள்ளதால், பள்ளியின் அனைத்துக் கடிதங்களை எழுத்துணரி மூலம் படித்துவிட்டு, உரிய நடவடிக்கை மேற்கொள்ளும்பொருட்டு கடித வரைவைத் தட்டச்சு செய்வது, சம்பளம் மற்றும் இதர பட்டியல்கள் தயாரிப்பது, பணியாளர்களின் விடுப்புகளை வரன்முறைப்படுத்துவது, பணிப் பதிவேடு மற்றும் இதர பதிவேடுகளை மின்னணு முறையில் பராமரிப்பது உள்ளிட்ட அனைத்துப் பணிகளையும் தன்னந்தனியே மேற்கொண்டு, பம்பரமாய்  சுழன்றும், முடிவுபெறாத சில பணிகளை வீட்டில் சென்று செய்ததாகவும்  அவள் கூறியிருந்ததை நினைவுகூர்ந்தபடி அவளது அரையில் நுழைந்தாள்.

      மாவட்டக் கல்வி அலுவலகத்திற்கு அனுப்பப்படவேண்டிய ஐந்து கடிதங்களையும், தலைமை கல்வி அதிகாரியால்  மேற்கொள்ளப்பட்ட ஆய்விற்கான இணக்க அறிக்கையையும் தயார்செய்து கையொப்பம் பெறுவதற்காக தலைமை ஆசிரியர் அறைக்குப் புறப்பட்டுக்கொண்டிருந்தாள் ரக்ஷிதா. அவளிடம், “இன்று  பரதநாட்டியம் வகுப்பு முடிந்தவுடன் இருவரும் இணைந்து  திரைப்படம் பார்க்கச் செல்வோம்” எனத் தெரிவித்துவிட்டு, அடுத்தவேளை வகுப்பிற்கு விரைந்தாள்.

      திட்டமிட்டபடி இருவரும் பள்ளி முடிந்து பரதநாட்டிய பயிற்சி வகுப்பிலிருந்து மெட்ரோ ரயில் நிலையத்திற்குச் சென்று தன் கைப்பையிலிருந்து பிரெயில் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்த நாணயங்களைச் செலுத்தி பயண அட்டையினை எடுத்துக்கொண்டு, பயணம் மேற்கொண்டு, திரையரங்கை அடைகிறார்கள்

graphic திரையங்கின் படம்

    திரையரங்க நுழைவாயிலின் இருபுறமும் இருந்த பிரெயில் வழிகாட்டும் பலகையைப் படித்துவிட்டு திரையறையில் நுழைகிறார்கள். இருக்கை எண்கள் பிரெயில்லிலும் அச்சிடப்பட்டிருந்ததால், அவர்களின் இருக்கையை அவர்களே தேடி அமர்கிறார்கள். படத்தில் ஒவ்வொரு  அசைவுகளையும், காட்சிகளையும் ஒருவர் பின்னணியிலிருந்து  விளக்கி, பதிவுசெய்யப்பட்டு வெளியிடப்பட்டிருந்ததால் திரைப்படத்தை முழு மனநிறைவோடு அவர்களால் ரசிக்கமுடிந்தது.

      பிறகு இருவரும்  பேருந்து நிறுத்தத்திற்குச் சென்று, அவரவரது வீட்டை நோக்கிச் செல்லும் பேருந்து எண், நிற்கும் புறம் மற்றும்  தூரம், மக்கள் நெரிசல் போன்ற விவரங்களை தனது அலைபேசியின் ஸ்மார்ட் டிடெக்ஷன் என்னும் செயலியில் உள்ள டிரான்ஸ்போர்ட் டிடெக்ஷன் என்னும் மெனுவின்வழி தெரிந்துகொண்டு, ஸ்மார்ட் வெண்கொல் உதவியுடன் பேருந்தில் ஏறி, காலியாகயிருந்த இருக்கையில் அமர்ந்து பயணிக்கிறார்கள்.

      தனது வீட்டிற்குச் செல்லும் வழியில் அமைந்திருந்த பல்பொருள் அங்காடிக்குச் சென்று லெட்டர் டிடெக்ஷன் என்னும் மெனுவைப் பயன்படுத்தி, தேவையான பொருட்களை (காலாவதி காலம்) உட்பட அனைத்து விவரங்களையும் சரிபார்த்துவிட்டு, வாங்கிச்செல்கிறாள் கண்ணம்மா.

      வீட்டை அடைந்ததும், மகள்கள் வீட்டுப்பாடம் செய்துமுடித்துவிட்டதை உறுதிப்படுத்திக்கொண்டு, தனது வீட்டு வேளைகளில் ஈடுபடச் செல்கிறாள். அப்பொழுது சாம் விஷால் என்னும் பார்வையற்றவர் தமிழக ஆளுநராக பதவியேற்கிறார் என்னும் செய்தியையும், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் விஞ்ஞானியாக புண்யா என்னும் பார்வையற்ற பெண் பணியமர்த்தம் செய்யப்பட்டுள்ள செய்தியையும்   ஒளிபரப்பிக்கொண்டிருக்கிறது ஒரு பிரபல தொலைக்காட்சி.

      வேலைகளை முடித்துவிட்டு, தொலைக்காட்சியை அணைத்துவிட்டு, அலைபேசி புலனக் குழுக்களில் வரும்  செய்திகளைப் படித்துக்கொண்டிருக்கையில், இந்திய குடிமைப் பணி தேர்வில்  தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏழு பார்வையற்றவர்கள் தேர்ச்சிபெற்றுள்ளதாகவும், இதுவரை மொத்தம் தமிழ்நாட்டில் இருபத்தியெட்டு பார்வையற்ற இந்திய ஆட்சி பணி அலுவலர்கள் பணியாற்றுவதாகவும் வெளிவந்திருந்த செய்தியைப் படித்துவிட்டு, பார்வையற்ற பெண் ஷிவாங்கி நிறுவி, பல பார்வையற்றவர்கள் பணிபுரியும், விஷன் என்னும் நிறுவனம் வெளியிட்ட ஸ்மார்ட் தொலைக்காட்சி குறித்து தனது அனுபவத்தைச் செய்தியாளர்களின் சந்திப்பில் பகிர்ந்துகொள்ளும் காணொளியைக் கேட்டும்  உவகையுடன் உறங்கச் செல்கிறாள்.

      தன் தாய் அடுக்களையில் பாத்திரம் உருட்டும் சத்தத்தைக் கேட்டு, உறக்கம் விழித்து, அமர்ந்து சிந்திக்கையில்  தான் கண்டது கனவென உணர்கிறாள் கண்ணம்மா. தான் கண்ட கனவெல்லாம் நிஜமாய் நிகழ்ந்து நிலைத்திருக்கவேண்டும். இந்த இணைய உலகில் பார்வையுள்ளவர்களுக்கு இணையாய் இச்சமூகத்தில் வாழ இவையெல்லாம் நம் எல்லோரின் எதிர்பார்ப்புகள், ஏக்கங்கள், எய்தவேண்டிய ஏற்றங்கள் என்பதை எண்ணியபடி படுக்கையிலிருந்து எழுகிறாள் கண்ணம்மா.

 

தொடர்புக்கு: paripoorani2410@gmail.com

7 கருத்துகள்:

 1. நிச்சயம் ஒரு நாள் உங்கள் கனவுகள் மெய்ப்படும்.
  நல்ல சீரான எழுத்து நடை.
  தொடரட்டும் உங்கள் பணி பரிபூரணமாய்.

  பதிலளிநீக்கு
 2. உங்கள் கனவு நிறைவேற வாழ்த்துக்கள். உங்களின் எழுத்து நடை அற்புதமாக அமைந்துள்ளது தொடரட்டும் உங்களது எழுத்துப் பணி. உங்கள் கனவுகள் மெய்ப்படும் உங்கள் கனவில் பயணிக்க நாங்களும் காத்திருக்கிறோம்.

  பதிலளிநீக்கு
 3. கண்டிப்பாக ஒருநாள் இது சாத்தியமாகும்

  பதிலளிநீக்கு
 4. அற்புதமாக எழுதியுள்ளீர்கள். வாழ்த்துக்கள். சீக்கிரமே இவையெல்லாம் சாத்தியமாக வேண்டும்.

  பதிலளிநீக்கு
 5. இதை போன்று பல சகோதர,சகோதரிகளின் கனவுகள் பலிக்க வேண்டும் வாழ்த்துகள்....

  பதிலளிநீக்கு