தலையங்கம்: பத்திரம் பத்திரம் பத்திரம்

 


      பொதுவாகவே தமிழகத்தைஅமைதிப் பூங்காஎன்பர். மற்ற பல மாநிலங்களோடு ஒப்பிடுகையில் இங்கு நடக்கும் வன்முறைகளும், குற்றங்களும் குறைவு. காரணம், பிற மாநிலங்களை விட இங்கு பொருளாதார ஏற்றத்தாழ்வு குறைவாக இருப்பதுதான்.

பல பொருளாதார அறிஞர்களின் இத்தகைய கூற்றிற்குச் சோதனையை ஏற்படுத்தித் தந்திருக்கிறது கொரோனா.

            கொரோனா பரவல் அச்சத்தாலும், ஊரடங்கு காரணமாகவும் பெரும்பாலானோர் வேலையிழந்துள்ளனர். பள்ளிகளும், கல்லூரிகளும் முறையாகச் செயல்படாததால் மாணவர்கள் தங்கள் பொழுதைப் போக்கிக் கொள்ளப் பெரியவர்களோடு வேலைக்குச் செல்கின்றனர் அல்லது தங்கள் வயதொத்தவர்களோடு அதிக நேரத்தைச் செலவழிக்கின்றனர். இன்னும் சிலர் தனிமையில் உழல்வதால், அவர்கள் மனதிற்குள் பல மாறுபட்ட சிந்தனைகள் எழுகின்றன. வறுமையும், வேலையின்மையும் சமூகத்தில் ஏற்படுத்தவிருக்கும் நீண்டகாலத் தாக்கம் அச்சத்தைத் தருவதாகவே உள்ளது.

      இப்படி கொரோனா ஏற்படுத்திய பொருளாதார பாதிப்பால் ஏற்படும் உளவியல் மாற்றம் தனது அதிர்வலைகளைக் காட்டத்தொடங்கியுள்ளது. இதனால் பல இடங்களில் கொலை, கொள்ளை, பாலியல் வல்லுறவு முதலிய குற்றங்கள் அதிகரித்துவருகின்றன. தாங்கள் பிழைத்துக்கொள்ளவும், தங்கள் உளவியல் ஏக்கங்களைப் பூர்த்திசெய்யவும் வலிமை மிகுந்தவர்கள் வலிமை குறைந்தவர்களை இலக்காக்கிவருகின்றனர். இதற்கான சான்றுகளை அன்றாடச் செய்திகளைப் பார்த்தாலே தெரியும்.

      அப்படி வலிமை வாய்ந்தவர்களின் இலக்காக பார்வை மாற்றுத்திறனாளிகள் இருக்க வாய்ப்புகள் அதிகம். பொது இடங்களில் நடமாடும் பார்வை மாற்றுத்திறனாளிகள், குறிப்பாக பார்வை மாற்றுத்திறனாளி பெண்கள், வீட்டில் தனிமையில் இருக்கும் பார்வை மாற்றுத்திறனாளிகள் என எல்லோருமே மிகக் கவனமாக  இருக்கவேண்டிய காலகட்டம் இது. தங்களை, தங்கள் உடைமைகளைப் பத்திரப்படுத்திக்கொள்வதில் முழு கவனமும் செலுத்தவேண்டிய காலகட்டம் இது.

      பார்வை மாற்றுத்திறனாளிகளை இலக்காகக் கொண்டு சில கொள்ளைச் சம்பவங்கள் நிகழ்ந்திருப்பது நம்மிடையே பேசுபொருளாக இருக்கிறது. அண்மையில் காலமான பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் & பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் முத்துசாமி அவர்களின் மரணம் இன்னும் சந்தேகத்திற்கு இடமானதாகவே இருக்கிறது.

      எனவே, உங்களை, உங்கள் குடும்பத்தாரை, உங்கள் உடைமைகளை நீங்கள் பத்திரப்படுத்திக்கொள்ளுங்கள். வழக்கமான மன உறுதியோடு பொது இடங்களில் தனியாக நடமாடுவதை முடிந்தவரை தவிருங்கள். தற்காப்பு ஏற்பாடுகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். நம்பிக்கைக்குரியவர்களோடு தொடர்ந்து தொடர்பில் இருங்கள். இத்தகைய ஆலோசனைகளை உங்கள் நண்பர்களுக்கும் வழங்குங்கள். நமக்கான அமைப்புகள் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு இத்தகைய ஆலோசனைகளைக் கொண்டுசேர்க்க முயலுங்கள்.

      கொரோனா காலம் நம் வாழ்வியலில் ஏற்படுத்தியிருக்கும் மாற்றங்களுக்குள் வாழப் பழகிக்கொள்வோம் வாருங்கள்.

3 கருத்துகள்:

  1. ஜெயராமன் தஞ்சாவூர்24 அக்டோபர், 2020 அன்று PM 1:17

    தமிழகத்தில் பொருளாதார ஏற்றத்தாழ்வு
    குறைவு என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது
    இருந்தாலும் சரியான காலத்தில் தரப்பட்டுள்ள சரியான கடைபிடிக்க வேண்டிய அறிவுரைகள் பாராட்டுக்கள்.
    ஜெயராமன் தஞ்சாவூர்

    பதிலளிநீக்கு
  2. முன்னெச்சரிக்கையும், பாதுகாப்பான சூழலில் நம்மை நிறுத்திக் கொள்ளுதலும் இதுபோன்ற நோய்த்தொற்று காலங்களில் தவிர்க்க முடியாத அம்சங்கள் ஆகிவிட்டன. ஆபத்துகள் எந்த ரூபத்தில் வரும் என்பதை யூகிக்க முடியாத சூழலில் நம்மை நாம் தான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். நல்ல எழுத்தாக்கம் பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
  3. கால சூழலுக்கு ஏற்ற பதிவு. நமது பாதுகாப்பினை நாம் உறுதி செய்து கொள்ள வேண்டிய காலகட்டம் இது.
    அதிலும் குறிப்பாக பார்வையற்ற பெண்கள் ஆபரணங்கள் அணிவதையும், அப்படி அணிந்துகொண்டால் தனியே வெளியே செல்வதையும் தவிர்ப்பது அவசியம். பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் தமிழகத்தில் இப்போதைய சூழலில் பெரிய அளவில் ஏற்பட்டு இருக்கின்றது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

    பதிலளிநீக்கு