வரலாறு: வெளிச்சத்தின் கண்கள் - சிதம்பரம் இரவிச்சந்திரன்

graphic வெண்கோலின் உதவியுடன் சாலையைக் கடக்கும் 4 பார்வை மாற்றுத்திறனாளிகளின் புகைப்படம். அதற்கு கீழ், International White Cane Day என எழுதப்பட்டுள்ளது.

      அரிது அரிது மானிடராய் பிறப்பது அரிது. அதிலும் கூண், குருடு இல்லாமல் பிறப்பது அரிய ஒரு வரமாக கருதப்பட்டு வந்த காலம் இருந்தது.  ஆனால் இப்போது மாற்றுத்திறனாளிகள் வாழ்வில் எத்தனையோ துறைகளில் அற்புதமான முன்னேற்றம் அடைந்து, மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்துவருகிறார்கள். ஒருவிதத்தில் சொல்லப்போனால் எல்லா உறுப்புகளையும் ஒழுங்காகப் பெற்றிருந்தும் எதையும் சாதிக்காமல் வாழ்க்கையை வீணாக்கும் மனிதர்கள் நம்மைச் சுற்றிலும் வாழ்ந்துகொண்டிருக்கும் சூழ்நிலையில் இத்தகைய உடல் குறைபாடுகள் இருந்தாலும் வாழ்வில் என்றும் நம்பிக்கை ஒளியை மனதில் ஏற்றி, அதைச் சாகும்வரை அணைந்துபோகாமல் பாதுகாத்து தன்னையும், தன்னை சார்ந்துள்ள சமுதாயத்தையும் இவர்கள் வளர்ச்சியடையச் செய்கிறார்கள்.

      விழித்திறன் இல்லாதவர்கள் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் ஒரு இடத்தில் இருந்து மற்ற இடங்களுக்குச் செல்வதற்குரிய ஒரு எளியவழி வெண்கோல். பார்வையற்றவர்கள் சுதந்திரமாக நடமாடுவதற்கு மூன்று வழிகள் உள்ளன. முதலாவது பார்வையுள்ளவர்களின் வழிகாட்டுதல் (sighted guide technic).  பார்வையுடைய ஒருவரின் உதவியோடு அவருடைய கையைப் பிடித்து நடமாடும் முறை இது.  மற்றொருமுறை வழிகாட்டும் நாயைப் பயன்படுத்துவது (guide dog technic).  பயிற்சி பெற்ற நாயின் உதவியுடன் பார்வை திறன் அற்றவர்கள் நடமாடுகிறார்கள். இந்த முறை இந்தியாவில் இல்லை.  மேலை நாடுகளில் குறிப்பாக அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் இந்த முறை பிரபலமாக உள்ளது.  மூன்றாவது வழி வெண்கோல் முறை (white cane technic). இந்த வெண்கோலைப் பயன்படுத்தி பார்வை குறைபாடுள்ளவர்கள் சுதந்திரமாக நடமாடுகிறார்கள்.  ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்குச் சென்றுசேர்வதற்கு இந்த முறை உதவுகிறது.  இந்தக் கோலை கையில் வைத்துக்கொண்டு தட்டித் தட்டி சுற்றுப்புறத்தில் இருப்பதை அறிந்து நடமாட இது உதவுகிறது. விழித்திறன் மாற்றுத்திறனாளிகளின் முன்னேற்றத்திற்கு சுதந்திரமான நடமாட்டம் மிகவும் அவசியம்.

      விழிகள் ஒளியில்லாமல், இருண்டுபோனாலும் இவர்களின் உள்ளத்தில் உள்ள முன்னேற வேண்டும் என்ற அடங்காத ஊக்கமும், உற்சாகமும் என்றும் இருண்டுபோவதில்லை. மற்றவர்களின் பரிதாபத்திலும், கருணையிலும் வாழ்வை நடத்த விரும்பாத இந்த மனிதர்கள் நமக்கு எத்தனையோ பாடங்களைக் கற்றுக்கொடுக்கிறார்கள். வாழ்க்கையில் அதுவரை இருந்த வெளிச்சத்தை விதி வந்து தட்டிப் பறித்துக்கொண்டுபோனபோது இவர்கள் யாரும் தோல்வியை ஒத்துக்கொள்வது இல்லை. துரதிர்ஷ்டத்துடன் போராடி பெறும் வெற்றிகளுக்கு என்றும் பத்தரை மாற்றுத்தங்கத்தின் பிரகாசம் இருக்கும். எந்தவித உடல் குறைபாடும் தங்களுக்கு இல்லை என்று செயல் மற்றும் வாழ்க்கை மூலம் இவர்கள் எடுத்துக்காட்டுகிறார்கள். வாழ்வின் வெற்றிக்குரிய பயணத்தை ஒரு சக்தியாலும் தடுத்து நிறுத்தமுடியாது. இன்று அறிவியல் தொழில்நுட்பம் இவர்களுக்கு ஆதரவாகவும், ஆறுதலாகவும் விளங்குகிறது. மற்ற எவரைப்போல அறிவியலின் துணைகொண்டு எல்லா பிரிவுகளிலும் தங்களாலும் முன்னேறமுடியும் என்று இவர்கள் நிரூபித்துக் காட்டிவருகிறார்கள்.

      வெண்கோல் வெறும் குச்சியில்லை. அது விழிகளில் பார்வையிழந்தவர்களுக்கு கண்களைப் போன்றது. இந்த வெண்கோலிற்கும் ஒரு சுவையான வரலாறு உள்ளது.

      1921ல் ஜேம்ஸ் டிக்ஸ்  என்ற பார்வை இழந்த போட்டோகிராபரின் கற்பனையில் உருவானதுதான் வெண்கோல். அதற்கு முன்வரை உலகம் முழுவதும் உள்ள பல பார்வையற்றவர்கள், கறுப்புநிறத்திலான ஒரு கோலைப் பயன்படுத்திவந்தனர். ஜேம்ஸ் டிக்ஸ் பார்வையிழந்தபின் இந்த வெண் நிற கோலை உருவாக்கினார். கறுப்பு நிறக்கோலைவிட வெள்ளைநிறத்தில் இருக்கும் கோலை வாகன ஓட்டிகள் எளிதில் அடையாளம் காணமுடியும். ரிச்சர்ட் ஹூவர் என்பவர் இதை பரவலாக்குவதற்காக இதில் சிறிய மாற்றங்களை ஏற்படுத்தினார்.  முழுவதும் வெள்ளைநிறத்தில் இல்லாமல் ஒரு பக்கம் சிகப்புநிறத்தையும் சேர்த்து அதை உருவாக்கினார். இவ்வாறு இந்த வெண்கோல் பார்வையற்றவர்களின் ஒரு அடையாளமாக மாறியது. இதன் பின் இது பிரபலமடைந்து, உலகமெங்கும் வெண்கோல் பழக்கம் நடைமுறைக்கு வந்தது.

      காலம் செல்லச்செல்ல,வெண்கோல் பார்வை இல்லாதவர்களின் அடையாளமாகச் சமுதாயத்தில் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்தக் கோலைப் பயன்படுத்தி நடப்பவர்களுக்குச் சட்டப்பூர்வமான அங்கீகாரம், பாதுகாப்பு, இதைப் பயன்படுத்துபவர்களுக்கு மற்றவர்கள் உதவி செய்யவேண்டும் என்ற விழிப்புணர்வு போன்றவை சமுதாயத்தில் ஏற்பட்டது.  1963ல் அமெரிக்க பார்வையற்றோர் கூட்டமைப்பு (American Federation of the Blind) அமெரிக்காவின் 50 மாகாணங்களின் கவர்னர்களையும் அழைத்து பார்வையிழந்தவர்களின் வெண்கோல் பற்றி அவர்களிடம் எடுத்துக்கூறியது. இதனை நாடு முழுவதும் பார்வையற்றவர்கள் பயன்படுத்தும் ஒன்றாக அங்கீகரிக்கவும், அதற்குச் சட்டப்பூர்வமான பாதுகாப்பு தருவதற்கும், விழித்திறன் அற்றவர்களின் மேம்பாட்டுத் திட்டங்களை உருவாக்கி, செயல்படுத்துவதற்கும் இந்தக் கூட்டம் வழிவகுத்தது. 50மாகாணங்களின் கவர்னர்களும் இதை ஏற்றுக்கொண்டனர்.

      1964 அக்டோபர் 6 அன்று அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் (பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் அவை) ஒரு முழுமையான அமர்வை நடத்தியது. இந்த அமர்வில் வெண்கோல் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது. பார்வையற்றவர்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களின் வாழ்வை மேம்படுத்துவதற்கான திட்டங்களைத் தீட்டுவதற்கும் இந்த அமர்வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அமெரிக்க அதிபராக அப்போது இருந்த லின்டன் பிக் ஜான்சன் இந்த வெண்கோலைச் சட்டப்படி அங்கீகரித்துச் சொற்பொழிவு நிகழ்த்தினார். இந்த வெண்கோல் உலகம் முழுவதும் பரவ வழிகோலினார். 1969ல் சர்வதேச பார்வையற்றவர்களின் கூட்டமைப்பு (International Federation of the Blind) கொழும்புவில் நடத்திய மாநாட்டில், அக்டோபர் 15 சர்வதேச வெண்கோல் தினமாகக் கடைப்பிடிக்கப்படவேண்டும் என்றும், எல்லா நாடுகளும் போக்குவரத்து விதிகளிலும், வாகனம் ஓட்டுவதற்கான சட்டதிட்டங்களிலும் மாற்றங்களைக் கொண்டுவரவேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது. இந்த வெண்கோலைப் பயன்படுத்தி பார்வையற்றவர்கள் நடந்துவரும்போது வீதிகளில் அவர்களுக்கு போதுமான பாதுகாப்பு தரவேண்டும், இதற்காக சட்டங்கள் கொண்டுவரவேண்டும் என்று அந்த மாநாட்டில் முடிவு செய்யப்பட்டது. 1970 முதல் சர்வதேச வெண்கோல் தினம் அக்டோபர் 15 அன்று கடைபிடிக்கப்படுகிறது.  1972ல் தான் இந்தியாவில் இந்த தினம் கொண்டாடப்பட்டது. 

      வெண்கோல் என்று சொல்லப்படுவது இன்று இந்தியாவில் மூன்றுவிதங்களில், நடைமுறையில் உள்ளது.  நான்கு அல்லது ஐந்து துண்டுகளாக மடக்கி கையில் வைத்துக்கொள்ளும்வகையில் ஒரு கோல் உள்ளது. இதன் ஒருபக்கம் கீழேயுள்ள பகுதியில் சிகப்பு நிறம் இருக்கும்.  இந்தக் கோலை வைத்து நடப்பதற்குரிய பயிற்சி அந்தந்த மாநிலங்களில் செயல்படும் பார்வையற்றவர்களுக்கான சங்கங்களால் வழங்கப்படுகிறது.  பயிற்சியின் போது இந்தக் கோலை வைத்துக்கொண்டு தெருவில் இறங்கி வெவ்வேறு நிலைகளில் நடப்பதற்குரிய செய்முறைகள் (mobility & orientation training) வழங்கப்படுகிறது. இதைப் பயன்படுத்தி அங்குமிங்கும் தரையில் தட்டிக்கொண்டு நடக்கும்போது இயல்பான தைரியமும் தன்னம்பிக்கையும் பார்வையற்றவர்களுக்கு உளவியல் ரீதியாக ஏற்படுகிறது. இதனால் அவர்களும் சமுதாயத்தில் மற்றவர்களைப்போலவே மாறமுடிகிறது. இந்தக் கோலை வைத்துக்கொண்டு ஒருவர் தெருவில் நடந்துவரும்போது மற்றவர்களுக்கு அவர் பார்வையிழந்தவர் என்பது புரியும். கோலை பயன்படுத்தி நடப்பவர் எந்த ஒரு விபத்தையும் சந்திக்காமல் பாதுகாப்புடன் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்குச் சென்றுவரமுடியும்.  இந்தக் கோல் சென்னையிலும், கோயம்புத்தூரிலும், பெங்களூரிலும் செய்யப்படுகிறது.  இந்தக் கோலைப் பயன்படுத்தி முதலில் நடக்கும்போது விழித்திறன் குறைபாடுள்ள ஒருவர், இதன் மூலம் மற்றவர்கள் தான் ஒரு பார்வை குறைபாடுடையவர் என்று தெரிந்துகொண்டு விடுவார்களோ என்ற தாழ்வு மனப்பான்மை ஏற்பட வாய்ப்பு உண்டு.  இதுபோன்ற எண்ணங்கள் தகுந்த பயிற்சிகளின்போது அவரிடம் இருந்து அகற்றப்படுகிறது.

      பலர் விழித்திறன் குறைபாடு இருந்தபோதிலும் வாழ்வில் பல துறைகளிலும் முன்னேறியுள்ளனர். ஆனால், இன்னமும் பலர் வீடுகளுக்குள் முடங்கிக்கிடக்கிறார்கள். இதற்கு முக்கியக் காரணம் பெற்றோர்கள் வீட்டில் இவர்களை முடக்கிப்போட்டு வைக்காமல் வெளியில் இறங்குவதற்குரிய தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் ஏற்படுத்தித்தராததே. இந்தக் கோலைக் கொண்டு ஒருவர் உலகையே சுற்றிவரமுடியும்.

     பார்வை இல்லாதவர்களைச் சமூகத்தில் அங்கீகரிக்கவும், அவர்களின் திறமைகளை மதிக்கவும், அதை வளர்க்கவும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அக்டோபர் 15ல் அனுசரிக்கப்படும் சர்வதேச வெண்கோல் தினம் பெரிதும் உதவுகிறது.

    சாலைகளை அமைக்கும்போதும், கட்டிடங்களை கட்டும்போதும், பார்வையற்றவர்களையும் மனதில் வைத்து அவர்களுக்கேற்றமாதிரி சிறுசிறுமாறுதல்களை ஏற்படுத்தவேண்டும். வெவ்வேறு காரணங்களுக்காக தெருக்களில் தோண்டப்படும் குழிகள் உடனுக்குடன் மூடப்படவேண்டும். எப்போதும் இத்தகைய நபர்களை அவர்களின் உடல் ஊனங்களைச் சுட்டிக்காட்டி பெயரிட்டு அழைப்பது அநாகரீகமான செயல். இதை மற்றவர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.  உதவி செய்யாவிட்டாலும், உபத்திரவம் செய்யாமல் இருப்பதே பெரிய உதவி. போக்குவரத்து நெரிசலில் மாட்டிக்கொண்டு அவசரகதியில் ஓடும்போது வெள்ளைக்கோலும் கையுமாக வரும் இந்தச் சகோதர சகோதரிகளுக்கு நம்மால் முடிந்த சிறு உதவியைச் செய்வோம். காட்சியின் வண்ணங்கள் இல்லாத இவர்களுடன் இதயத்தின் மொழியில் பேசலாம். ஏனென்றால், அவர்களும் நம்மில் ஒருவர்.

**     **     **

(கட்டுரையாளர் ஓய்வுபெற்ற அறிவியல் ஆசிரியர். பல மலையாளச் சிறுகதைகளைத் தமிழில் மொழிபெயர்த்தவர். அறிவியல் இதழ்களில் தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கிறார்).

தொடர்புக்கு: nrvikram19@gmail.com

3 கருத்துகள்:

 1. கொலும்பு மாநாடு என்ற தகவல் புதிது. மிக்க நன்றி ஐயா உங்களுக்கு.

  பதிலளிநீக்கு
 2. வெண்கோல் குறித்த சிறப்பான விழிப்புணர்வு கட்டுரை
  வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 3. ஜெயராமன் தஞ்சாவூர்27 அக்டோபர், 2020 அன்று PM 9:37

  வென் கோல் பற்றிய வரலாற்றை விரிவாக எடுத்துரைத்து

  விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களும் நன்றிகளும்

  பதிலளிநீக்கு