சினிமா: காலம் தந்த கடைசி பெரும் பாடகர் - ரா. பாலகணேசன்

graphic S.P. பாலசுப்ரமணியம் அவர்களின் படம்

            S.P. பாலசுப்பிரமணியன் காலமானார். இச்செய்தியை இப்படியும் கூறலாம்; நமக்கெல்லாம் பிடித்த S.P. பாலசுப்பிரமணியன் 25-09-2020 அன்று தான் பாடுவதை நிறுத்திக்கொண்டார். கலையுலகத்திற்குள் வந்தது முதல் கடைசியாக மருத்துவமனைக்குச் செல்லும் வரை தொடர்ந்து பாடிக்கொண்டிருந்தவர் SPB.

      இவர் 40000-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றவர்; 16 மொழிகளில் பாடியிருக்கிறார்; கிட்டத்தட்ட 54 ஆண்டுகளாகத் தொடர்ந்து பாடிக்கொண்டிருப்பவர்; தன் குரலுக்காக 6 முறை தேசிய விருதுகளைப் பெற்றவர்; பின்னணி குரல் கொடுப்பவர்; நடிகர்; இசையமைப்பாளர்; தயாரிப்பாளர். இந்த எல்லாப் பெருமைகளையும் தாண்டி, இவரிடம் வியக்க ஒன்று உண்டு. இந்த எல்லாப் பெருமைகளையும் தன் தலைக்குள் ஏற்றிக்கொண்டு தன்னை மற்றவர்களிடமிருந்து அந்நியப்படுத்திக்கொள்ளாதவர். இன்றைய இளைய தலைமுறையினருக்குத் தெரிந்த SPB இவர்தான். இவர் கலந்துகொண்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் வழியாக இன்றைய இளைஞர்கள் இவரை இப்படியே அறிந்து வைத்திருக்கின்றனர்.

      சங்கராபரணம்பாடலுக்காக தேசிய விருது பெற்றபோது, “கர்நாடக இசையை முறையாகப் படித்ததில்லைஎன்றார்; ஏக் துஜே கேலியே பாடலுக்கென தேசிய விருது பெற்றபோதுஎனக்கு ஹிந்தி தெரியாதுஎன்றார். ஆனாலும், இவர் கர்நாடக இசை அடிப்படயில் அமைந்த திரைப் பாடல்களைப் பாடினார்; ஹிந்தி திரையுலகிலும் வலம் வந்தார். 2015-இல் வெளியானசென்னை எக்ஸ்பிரஸ்வரை பாலிவுட்டில் பாடிக்கொண்டிருந்தார். இதுதான் இவரது தன்னம்பிக்கை; அர்ப்பணிப்பு; தனித்தன்மை.

      இப்படி இவரிடம் நாம் அறிந்துகொள்ள நிறைய சிறப்புகள் உண்டு.  அவற்றுள் சிலவற்றை இங்கே தர முயல்கிறேன்.

உணர்வுகளைக் கடத்திய உன்னதப் பாடகர்

      திரைப்படங்களில் கதையின் உணர்வுகளை இன்னும் கனமாக்கவும், கவனப்படுத்தவும்தான் பாடல்கள் உருவாக்கப்படுகின்றன. அப்படி உருவாகும் பாடல்களிலேயே கதையின் உணர்வுகளை, பாடலுக்கான காட்சி தரும் உணர்வுகளை நமக்குச் செவி வழியே மிகத் துல்லியமாகக் கடத்திய ஒரே பாடகர் SPB மட்டும்தான். இவர் அளவிற்கு பாடல்களில் உணர்வுகளைக் கடத்திய வேறொரு பாடகரையோ, பாடகியையோ என்னால் குறிப்பிடமுடியவில்லை.

      சிரிப்பு, அழுகை, கோபம், வெட்கம், கொஞ்சல், கெஞ்சல், காமம் என்று அனைத்தையும் தன் குரல் வழியே கடத்தும் வல்லமை மிக்கவர் SPB.  ஆயிரம் நிலவே வா’ (அடிமைப் பெண்) பாடலிலிருந்தே இந்த வேலையைத் தொடங்கிவிட்டார். அது இவர் வளர வளர மிகச் சிறப்பாய் மெருகேறியது.

      கலைவாணர் N.S. கிருஷ்ணன் ஒரு பாடலில் குறிப்பிட்டிருப்பதைப் போல, பல வகையான சிரிப்புகளை அறிந்துவைத்திருந்தார் SPB. வெவ்வேறு உணர்வுகளுக்கான பாடல்களில் வெவ்வேறு விதமாய் சிரித்து நம்மைக் கிரங்கடித்துவிடுவார். இதற்கென பல பாடல்களைச் சான்று காட்டமுடியும். ‘உனக்கென்ன மேலே நின்றாய்’ (சிம்லா ஸ்பெஷல்),‘பனி விழும்  மலர்வனம்’ (நினைவெல்லாம் நித்யா), ‘என்னவென்று சொல்வதம்மா’ (ராஜகுமாரன்), ‘பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ’ (உழவன்), ‘புதுச்சேரி கச்சேரி’ (சிங்காரவேலன்)  மு்தலியவை அப்படி நான் ரசித்த பாடல்களில் சில.

கண்களா மின்னலா’ (என்றென்றும் காதல்), ‘தழுவுது நழுவுது’ (அன்பே ஆருயிரே) ஆகிய பாடல்களைக் கேட்டுப்பாருங்கள்இவர் கூறும்ம்என்ற ஒற்றை எழுத்து நம்மைக் காமக் கோட்டைக்குள் இழுத்துச் செல்லும் மாயத்தை உணர்ந்துகொள்ளமுடியும்.

      மணி ஓசை கேட்டு எழுந்து’ (பயணங்கள் முடிவதில்லை) பாடலில் நிஜமாய் இருமுவதைப் போலவே இருமியிருந்தார். அதை விட முக்கியமாக, இருமலின்போது குரலில் ஏற்படும் தடுமாற்றத்தை மிகச் சரியாகக் காண்பித்திருப்பார்.

      வா மச்சான் வா’ (வண்டிச் சக்கரம்), ‘ஜோடி ஜோடி ஜோடிதான்’ (குரு) ஆகிய பாடல்களில் மது போதையில் இருப்பவர் பாடுவதைப் போல சிறப்பாகப் பாடியிருப்பார். இப்படி கதையின் உணர்வுகளை, பாத்திரங்களின் உணர்வுகளை ரசிகர்களுக்குக் கடத்திய முதன்மைப் பாடகர் SPB.

சிம்மக் குரலோன்

      1966-இல் தொடங்கி 2020 வரை கனீர் குரலில் தெளிவான உச்சரிப்போடு பாடியவர் இவர். பின்னணிப் பாடககர் ஸ்ரீனிவாஸ் குறிப்பிட்டதைப் போல, தான் கூறும் ரகசியத்தையும் கனீர் குரலில்  நம் மனதில் அழுத்தமாய் பதியவைத்தவர். ‘காதலின் தீபமொன்று’ (தம்பிக்கு எந்த ஊரு) பாடலில் இவர் பாடும்காதல் வாழ்கஎன்ற வரி இதற்குச் சரியான சான்று

      தனது குரலை மிகவும் கீழிறக்கிமலரே மௌனமா’ (கருணா) என்று இவரால் பாடமுடியும்; அதே குரலை மேலுயர்த்திதங்கத் தாமரை மகளே’ (மின்சாரக் கனவு) என்றும் இவரால் கூவமுடியும்.

பலகுரல் மன்னன்

      இவர் திரையிசையில் பல புது முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார். அதில் முக்கியமானது வெவ்வேறு குரல்களில் பாடுவது..

      இயல்பாகவே பலகுரலில் பேசுவதில் ஆர்வமுள்ளவர் இவர். M.S. விஸ்வநாதன் தொடங்கி, G.V. பிரகாஷ்குமார் வரை பல பிரபலங்களைப் போல நேர்காணல்களில், நிகழ்ச்சிகளில் பேசியிருக்கிறார். அந்தக் கூடுதல் திறமையைத் திரையிசை ராகம் என்ற சட்டகத்திற்குள் வளைத்து நமக்குள் கொண்டுவந்து சேர்த்திருப்பது சிறப்பானது.

      கடவுள் அமைத்து வைத்த மேடை’ (அவள் ஒரு தொடர்கதை) பாடலில் இடம்பெறும் வெவ்வேறு குரல்களில் பெரும்பாலானவற்றைத் தானே தந்திருக்கிறார் இவர்.

      பல வித்தியாசமான நடிகர்கள் குரலில், மாறுபட்ட பாத்திரங்களின் குரலில் பாடியிருக்கிறார் SPB. ‘எங்கெங்கும் கண்டேனம்மா’ (உல்லாசப் பறவைகள்), ‘அப்பன் பேச்ச கேட்டவன் யாரு’ (சூரக்கோட்டை சிங்கக்குட்டி), ‘மாமன் ஒருநாள் மல்லிகைப்பூ கொடுத்தான்’ (ரோசாப்பூ ரவிக்கைக் காரி), ‘என் ஜோடி மஞ்சக் குருவி’ (விக்ரம்) முதலிய பாடல்கள் இதற்கான ஆதாரங்கள்.

      இந்திரன் சந்திரன்படத்தின் தெலுங்கு பதிப்பிற்காக இவர் மாறுபட்ட குரலில் ஒரு பாடலைப் பாட, அது தொண்டை அறுவை சிகிச்சை வரை இவரைக் கொண்டுபோயிருக்கிறது. அதற்குப் பின்பும் வழக்கம் போலவே தனது புது முயற்சிகளைத் தொடர்ந்தார்.

      கமல்ஹாசன் நடிப்பில் வெளியான தசாவதாரம் படத்தின் தெலுங்கு வடிவத்தில், அதில் இடம்பெறும் 10 கமல் பாத்திரங்களில் 7-க்கு S.P.B தான் குரல் கொடுத்திருக்கிறார் என்கிறது விக்கிபீடியா.

நகல்களை வளர்த்த அசல்

      SPB அவர்கள் புதிய பாடகர்களிடம் அடிக்கடி கூறும் ஒரு செய்திநீங்கள் இன்னொரு பாடகரைப் போல பாட முயலாதீர்கள்என்பதுதான். அதே நேரம், தன்னைப் போலவே பாடிய பாடகர்களையும் எளிதாய் கடந்துசென்றவர் இவர்.

      ஒவ்வொரு பாடகரும் தன் தனித்துவமான குரலால் அடையாளம் காணப்படுவார். அந்த வகையில், S.P. பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு அமைந்த  குரல் ஒன்றும் கடினமானதல்ல. குறைந்தபட்சமாகப் பாடத் தெரிந்த ஒவ்வொருவரும் இயல்பாகப் போலச்செய்யவல்ல குரல் அது. இத்தகைய குரலோடுதான் இமாலயச் சாதனைகளைப் புரிந்திருக்கிறார் SPB.

      தமிழக அரசியலில் அண்ணாவின் குரலை, அவரது பாணியை அவர் இறந்து 50 ஆண்டுகள் கழித்தும் தற்போதைய தலைவர்கள் பின்பற்றிவருகிறார்கள். அதே போலதான் இவர் குரலும், பாணியும் பிரபல பாடகர்கள் முதல் இசைக்குழுவில் பாடும் சாதாரணர் வரை அனைவருக்கும் விருப்பமானதாக இருக்கிறது. அதேநேரம், முழுமையாக அடையமுடியாத லட்சியமாகவும் இருக்கிறது.

      மனோவ், ராஜேஷ் என்று இவர் குரலை எதிரொலிக்கும் பாடகர்கள் திரையுலகிள் வெற்றிக் கொடி நாட்டினாலும், அவர்களையும் தாண்டி தன் திறமையால் முன் சென்றார் SPB. தற்போது சில ஆண்டுகளாகப் பாடிவரும் பம்பா பாக்யா வரை இவர் பாதிப்பு தெரிகிறது.

      சாமி வருது சாமி வருது’ (உடன்பிறப்பு) பா்டலை மனோவோடு இணைந்து பாடியிருப்பார் SPB. இருவரையும் குரல் வழியாக நம்மால் அடையாளம் காண்பது கடினம்தான் என்றாலும், பாடலின் உணர்வைக் கடத்தும் முறையில் SPB-யை நம்மால் அடையாளம் கண்டு கொள்ளமுடியும்.

என்றென்றும் இளமை

      MGR, ஜெமினிகணேசன் முதலியோருக்குப் பின்னணி பாடுபவராக வாழ்க்கையைத் தொடங்கியவர் SPB. பிறகு ரஜினி, கமல் ஆகியோருக்கான குரலாக மாறினார். இசை ஞானியின் அவைப் பாடகராகவே மாறிப்போனார். ஹிந்தியிலும் சல்மான் கானின் பாடலுக்கான குரலாகக் கருதப்பட்டார். அடுத்து, மோகன் ஒலிவாங்கிக்கு முன்னால் பாடும் பாடல்கள் எல்லாம் இவர் குரலில் வெளிவந்தன.

      1990-களில் தமிழ் திரையிசையின் வடிவமும், தொழில்நுட்பமும் மாறிய நிலையில் இவர் குரலும் மெருகேறியது. ராஜாவின் காலத்தில் உச்சத்தில் இருந்த SPB ரஹ்மான் காலத்தில் தன்னிடமிருந்த மிச்ச திறமைகளையெல்லாம் இறக்கிவைத்தார்.

      வந்தேன்டா பாலுகாரன்’ (அண்ணாமலை) பாடல் தொடங்கி ரஜினிக்கான அறிமுகப் பாடலைப் பாடுபவராக ஆனார். பாபா, குசேலன் ஆகிய திரைப்படங்களில் இவர் குரலில் இல்லாமல் வெளிவந்த ரஜினி அறிமுகப் பாடல்கள் அந்த அளவிற்கு வெற்றிபெறவிலை. (கபாளி, காலா விதிவிலக்கு). மீண்டும் தொ்டர்ந்து ரஜினிக்கான அறிமுகப் பாடலைப் பாடிவருகிறார். விரைவில் வெளியாகவிருக்கும் அண்ணாத்த திரைப்படத்தில் SPB பாடியிருக்கிறார் என்று அறிவித்திருக்கிறார் இசையமைப்பாளர் D. இமான்.

      ரஜினியோடு நின்றுவிடவில்லை இவர். அஜித்குமாருக்கான பின்னணிப் பாடகராக இசையமைப்பாளர்களால் அறியப்பட்டிருக்கிறார். (அஜித் இவரது மகனான SPB சரணின் வகுப்புத் தோழர் என்பது குறிப்பிடத்தக்கது).

      அந்த வகையில்உன்னைப் பார்த்த பின்பு நான்’ (காதல் மன்னன்), ‘மேகங்கள் என்னைத் தொட்டு’ (அமர்க்களம்), ‘கண்ணைக் கசக்கும் சூரியனும்’ (ரெட்), ‘வத்திக்குச்சி பத்திக்காதுடா’ (தீனா) முதலிய பாடல்கள் நமக்குக் கிடைத்தன.

      1979-இல் வெளியானநினைத்தாலே இனிக்கும்திரைப்படத்தில் இவர் பாடிய பாடல்எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம்’. M.S. விஸ்வநாதன் இசையில் உருவான இப்பாடல், வெளியான 27 ஆண்டுகளுக்குப் பிறகு மீள் கலவை (remix) செயப்பட்டது. 2007-இல் G.V. பிரகாஷ்குமார் இசையில் வெளியானபொல்லாதவன்திரைப்படத்தில் இதே பாடலைப் பாடியிருப்பார் SPB. இவர் குரலில் அதே இளமையும், டிஜிட்டல் தெளிவும் இருந்ததை யாரால் மறுக்கமுடியும்?

      SPB-ஜானகி, SPB-சித்ரா, SPB-ஸ்வர்ணலதா, SPB-சுஜாதா, SPB-ஹரினி, SPB-சாதனாசர்கம் என்று இவர் பாடிய ஜோடிப் பாடல்களுக்கென தனித்தனி ரசிகர் கூட்டம் உண்டு. அவரோடு இணையாகப் பாடியவர்கள் மாறினாலும், அதே இளமைத் துடிப்போடு பாடிக்கொண்டிருந்தார் SPB.

      ஆம். அவர்காதலெனும் தேர்வெழுதி’ (காதலர்தினம்) என்று ஸ்வர்ணலதாவின் குரலுக்கு இணையாகக் குழைந்து கொண்டிருக்கும்போது 50 வயதை நெருங்கிவிட்டார். அதற்குப் பிறகுதான் ஷ்ரேயா கோசலுடன் இணைந்துதழுவுது நழுவுது’ (அன்பே ஆருயிரே) என்று சிருங்காரமாய் பாடினார். தனது 60-களில்தான்கண்ணால் பேசும் பெண்ணே! என்னை மன்னிப்பாயா?’ (மொழி) என்று இறைஞ்சிக்கொண்டிருந்தார். அதற்கும் பிறகுதான்என் காதல் தீ’ (இரண்டாம் உலகம்) பாடலை காதல் சுவை நனி சொட்டச் சொட்ட பாடினார். தனது 70-களில்தான்நான்தான்டா இனிமேலு’ (தர்பார்) என்று அனிருத் இசையில் துள்ளல் ஆட்டம் போடவைத்தார்.

SPB தான் இருக்கும் வரை இயங்கினார்; இளமையோடு இயங்கினார்; இளையவர்களையும் அணைத்துக்கொண்டு இயங்கினார்.

காலம் தந்த கடைசி பெரும் பாடகன்

      கட்டுரைக்கு இடப்பட்டிருக்கும் இத்தலைப்பு கவிஞர் வைரமுத்து S.P. பாலசுப்பிரமணியம் அவர்களுக்கான தனது இரங்கல் குறிப்பில் குறிப்பிட்டிருப்பது. இவை சாதாரண வார்த்தைகள் அல்ல; சத்தியமான வார்த்தைகள்.

      1980-களில் ஒரே நாளில் 20 பாடல்களைப் பாடி ஒலிப் பதிவு செய்ததை ஒரு நேர்காணலில் நினைவுகூர்கிறார் SPB. ஒரு தீபாவளி அன்று வெளிவந்த திரைப்படங்களில் இவர் பாடிய பாடல்கள் மட்டுமே 75 இருந்ததாகத் தெரிவிக்கிறார். இத்தகைய வாய்ப்பு இனி யாருக்கும் கிடைக்கப்போவதில்லை.

      ஒருவேளை ஒருவர் SPB அளவிற்கோ, அவருக்கும் அதிகமாகவோ திறமையானவராக இருந்தாலும், ‘பெரும் பாடகன்என்ற பெயரைப் பெற இனி வாய்ப்பே இல்லை.

      மாறிவரும் தமிழ் சினிமா சூழலில் பாடகர்கள் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது. பாடல்களின் அமைப்பும் மாறிவிட்டது; வணிக உத்திகளும் மாறியிருக்கின்றன. எனவே, இனி பெரும் பாடகர்கள் தமிழ் சினிமாவில் உருவாக வாய்ப்பே இல்லை.

      அதனால்தான், கவிப்பேரரசின் வார்த்தைகள் தமிழ்த் திரையிசை வரலாற்றுப் பெட்டகத்தில் பொறிக்கப்படவேண்டியவை. ‘S.P. பாலசுப்பிரமணியன் காலம் தந்த கடைசி பெரும் பாடகன்’.

      A.R. ரகுமான் தனது அஞ்சலிக் குறிப்பில் குறிப்பிட்டிருக்கும்கோச்சடையான் படப் பாடல் வரிகளோடு கட்டுரையை முடித்துக்கொள்கிறேன்.

காற்றின் பாடல்கள் என்றுமே தீராது

வெற்றிச் சங்கொலி என்றுமே ஓயாது”.

 

(தொடர்புக்கு: balaganesan2285@gmail.com

5 கருத்துகள்:

 1. மாறுபட்ட கோணத்தில் அலசியிருந்தீர்கள் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 2. ஒரு பாடகன் கொண்டாடப்படுவதற்கு பாடல் மட்டுமல்ல பண்பும் காரணம் என்பதை பதிவு செய்த நல்ல கட்டுரை வாழ்த்துக்கள் உங்களுக்கு. கட்டுரையின் கவிப்பேரரசு சொற்கள் போல சுட்டுவது இது போன்ற ஒரு பெரும் பாடகன் இனி வாய்க்கப் போவதில்லை என்பது நிதர்சனம். எண்ணற்ற பாடல்களை அவரின் திறமைக்கு சான்றாக சுட்டிக்காட்டி எடுத்துச் சொன்ன விதம் மிகவும் முத்தாய்ப்பாக இருந்தது இந்த கட்டுரையில். மேலும் சிறக்கட்டும் உங்கள் எழுத்துப்பணி பாராட்டுக்கள்!

  பதிலளிநீக்கு
 3. அவர் இல்லை என்பதை இன்னும் ஏற்க முடியவில்லை
  வாழ்க அவரது புகழ்

  பதிலளிநீக்கு
 4. கவிப்பேரரசு கூறியபடி காலம் தந்த கடைசி பெரும்பாதகர் என்னும் தலைப்பிலான தங்களது கட்டுரை பற்பல நிச்சயமான பல கருத்துக்களை உள்ளடக்கியிருந்தது. கடின உழைப்பு, தனித்தன்மை, பன்முகத்திறமைகள் உள்ளிட்டவற்றுக்கு ஆதாரங்களாய் எடுத்துக்காட்டியிருந்தவை மிக அருமை.

  வாழ்த்துக்கள் ஐயா

  பதிலளிநீக்கு
 5. கருத்து தெரிவித்த அனைவருக்கும் என் நன்றிகள்.

  பதிலளிநீக்கு