கருத்துக்களம்: ஆசைத்தம்பியும் அறிவுடை நம்பியும் - 3 - வினோத் சுப்பிரமணியன்

graphic இரண்டு நண்பர்கள் பேசிக்கொள்வது போல் அமைந்த கார்டூன் படம்

        ஊருக்கே கொரோனா வந்தாலும் அதைப் பற்றியெல்லாம் சிறிதும் கவலைப்படாதவர்கள் இந்த ஆசைத் தம்பியும் அறிவுடை நம்பியும். அதனால்தான் என்னவோ அன்லாக் முறை நாடு முழுவதும்  இப்போது அமலில் இருந்தாலும் அதே தெருவில் ஏதோ ஒரு இடத்தில் எதைப்பற்றியும் அலட்டிக்கொள்ளாமல் இந்தமுறையும் பொழுதைப் போக்க அமர்ந்திருந்தார்கள் இந்த இருவரும்.

 வாடா நம்பி! வழக்கம்போல லேட்டு. கொழந்தமாதிரி ஏதாச்சும் காரணம் சொல்லு பாப்போம்?”  என்றவாறே நம்பியை வரவேற்றான் தம்பி.

ஆமாம். ஆனா கொழந்த மாதிரி காரணம் இல்ல. கொழந்தைங்கதான் காரணம்.”

நானா எதையும் கேட்கிறதுக்கு முன்னாடியே நீயே சொல்லிடு பாப்போம்?”

என்னத்தச் சொல்ல?”

நீ என்னத்தச் சொல்லப்போற? வழக்கம்போல உன்னுடைய அடுத்த கட்டுரையப் பத்திதான் உலரப் போற.”

அடேங்கப்பா! வரவர உனக்கும் அறிவு அதிகமாயிடிச்சு ஆசை.”

அது ஒரு பக்கம் இருக்கட்டும் நீ சொல்லு. இந்தமுற என்ன தலைப்பு என்னமாதிரியான ரெஸ்பான்ஸ்?”

உங்களது பார்வையின்மையை உங்களுடைய குழந்தைகளோ அல்லது உங்களின் நெருக்கமான உறவினர்களின் குழந்தைகளோ எப்படி, எப்போது அடையாளம் கண்டுகொண்டதாக நீங்கள் உணர்ந்தீர்கள்.”

போச்சுடா.”

என்னடா?”

இல்ல நம்பி. பொதுவாவே கொழந்தைங்க ஒரு விஷயத்தத் துருவித் துருவிக் கேப்பாங்க. அதுவும் ஒரு பார்வையில்லாதவறு சிக்குனா அவ்வளவுதான் இல்ல?”

கிட்டத்தட்ட அப்பிடித்தான். ஆனா எல்லாரையும் அப்படி நினைச்சிர  முடியாது தம்பி.” என்று சொல்லி நம்பியே தொடர்ந்தான்.

வெங்கடேஷோட வாழ்க்கைல நடந்ததெல்லாம் நீ சொல்லுற மாதிரிதான்.”

யாரு நம்ம ஹெச் வெங்கடேஷா? அந்த எம்.சி.சி காலேஜு.”

ம்ம். அவரேதான். அவருக்கு பார்வையில்ல அப்படிங்குரத  அவருடைய வீட்டுக் கொழந்தைகளுக்கு அவருடைய  சொந்தக்காரங்கதான் சொல்லி வளத்திருக்காங்க. அதுவும் எப்படித் தெரியுமா? நீ சாப்புடலனா சாமி கண்ணக் குத்திடும். உங்க சித்தப்பாக்கு  குத்துனா மாதிரி. அப்பிடினு சொல்ல, அதவெச்சி அந்தக் கொழந்தைங்களும் இவர கேள்வி மேல கேள்வியா கேட்டு சங்கடப்படுத்தியிருக்காங்க.”

ஐயையோ! இந்த மாதிரியெல்லாம் எதுக்குப் பண்ணனும்?

கொழந்தையச் சாப்பிட வைக்கத்தான்.”

அதுக்கு! ஒரு கண் பார்வை இல்லாதவர கஷ்டப்படுத்திக் கொழந்தையச் சாப்பிடவைக்கணுமா?”

அவரக் கஷ்டப்படுத்தணும்னு செஞ்சிருக்கமாட்டாங்கணு தோணுது. ஆனாலும் அது தப்புதான். கொழந்தைங்கள சாப்பிடவைக்க  எவ்வளவோ வழி இருக்கு. ச்சே! சொல்லவந்தத விட்டு வேற எதையோ சொல்லிக்கிட்டிருக்கேன் பாரு. அதாவது வெங்கடேஷுக்கு அவருடைய சொந்தக்காரங்க சொல்லிதான்  நெறைய கொழந்தைங்களுக்கு இவருக்குப் பார்வை இல்லனு கண்டுபிடிக்க முடிஞ்சிதாம். ஒருமுற வெங்கடேஷ் ஒரு விருந்துல சாப்பிடும்போது, அங்க பந்தி பரிமாறுனவங்க இவருக்கு எது சாப்பாடு, எது சாம்பாரு, எது பொரியல் அப்படினு விளக்க, இன்னொரு நாள் அவருடைய சொந்தக்கார கொழந்த ஒண்ணு இவரு சாப்புடும்போது இது சாதம், இது இன்னொரு சாதம், இது சாம்பாரு, இது காய், அப்புறம் சாம்பார்ல இருந்த இன்னொரு காய்கறியக் காட்டி  இது இன்னொரு காய் அப்படினு காமடி பண்ணியிருக்கு.”

அதுசரி. செம்ம காமடிதான் போ. ஆனா அந்தக் கொழந்தைங்களே கண்டுபிடிச்ச மாதிரி எதுவும் சொல்லலையா வெங்கடேஷ்?

அவருடைய இன்னொரு அண்ணன் பொண்ணு அவருடைய கண்ண ஆழமாப் பாத்து என்ன கண்ணுல புன்னு?’ அப்படினு கேட்டு இவரு யோசிக்கும்போதே யாரடிச்சானு?’ கேக்க, அதுக்கு இவரு பதில் தேடும்போதே  மருந்து போட்டியா?’ அப்பிடினு மூனாவது கேள்விய கேக்க அதுக்கு அவரு போட்டேன்நு சொல்லியிருக்காரு.”

பொதுவா பார்வை இல்லாதவங்களோட கண்கள் கொழந்தைங்களுக்கு ஒரு ஆராய்ச்சிக் கூடம்தான் இல்ல?”

ஆமாம். அவங்க தெரிஞ்சிக்குற விதமும் கண்டுபிடிக்குற விதமும் எப்பவுமே வினோதமாதான் இருக்கும். சிலர் கேட்டு கண்டுபிடிப்பாங்க. சில குழந்தைங்க கண்டுபிடிச்சு நம்மளையே ஆச்சர்ய படுத்துவாங்க. ஆனா சிலபேருக்கு மத்தவங்க மூலமாத் தெரியுது. கிஷோர்னு ஒரு பார்வையற்றவர் கூட நம்மக்கிட்ட இந்த விஷயத்தப் பத்தி சொல்லும்போது, மத்தவங்களுக்கும் இவருக்கும் நடுவுல நடக்குற சம்பாஷணைய வெச்சி கண்டுபிடிச்சாங்கலாம். உதாரணமா இவருக்கு சட்டை எடுக்க போகும்போது இவர் அந்தச் சட்டையோட நிறம் என்னணு கேப்பாராம். அதவெச்சு கண்டுபிடிச்சாங்கலாம். அப்புறம் கிரிக்கட்ல பார்வை இல்லாதவங்களுக்கு ஒரு பந்து இருக்குல்ல?

ஆமாம். சத்தம் வருமே!”

ஆமாம். மேல பட்டா ரத்தம் கூட வரும். அதே பந்துதான். இவரு மட்டும் ஏன் இந்தப் பந்து வெச்சு விளையாடுராறு அப்பிடினு யோசிச்சுக் கண்டுபிடிச்சாங்கலாம். அப்போ அந்த குழந்த எல்.கே.ஜி.”

அடேங்கப்பா! அஞ்சி வயசு கொழந்தைக்கு இருக்குற அறிவு கூடஎன்று ஆசை ஆரம்பிக்க,

உனக்கில்லையேனு வருத்தப்படுற இல்லையா?” என்று அறிவு முடித்துவைத்தான்.

அதுசரி. இந்த விஷயத்த கிஷோர்  எப்போ கண்டுபிடிச்சாராம்?”

நேத்து நைட்டு நான் கேள்வி கேட்டப்போ.”

அப்பன்னா அந்த குழந்தைங்க கிட்ட போயி கேட்டுட்டு வந்து உன் கிட்ட சொல்லியிருப்பாரு.”

இப்போ வளந்துட்டாங்க.”

ஆனா கொழந்தையாவே இருந்திட்டா எவ்வளவு ஜாலியா இருக்குமில்ல?”

சரிதான். ஆனா நீ சொன்னது எந்த அளவுக்கு உண்மை அப்படினு கடைசியாச் சொல்லுறேன்.”

இல்ல இல்ல. நீ இப்பவே சொல்லு. இல்லன்னா நீ மறந்திடுவ.”

அதுசரி. போய் தொலையட்டும். நீ சொன்னையே கொழந்தையாவே இருந்திட்டா நல்லா இருக்கும்னு. இது யாருக்குப் பொருந்துதோ இல்லையோ, பார்வை இல்லாதவங்களுக்கு 100% பொருந்தும்”.

இதற்குத் தம்பி எதுவும் பேசவில்லை. ஏனென்றால் அவனுக்குத் தெரியும் நம்பி எதையோ சொல்லப்போகிறான் என்று. அதன்படியே நம்பியும் சொல்லத்  தொடங்கினான்.

பாலகிருஷ்ணன் சொல்லும்போது எவ்வளவு வருத்தமா இருந்திச்சுனா அவ்வளவு வருத்தம்”.

பாலகிருஷ்ணன் பார்வை இல்லாதவரா?”

ஆமாம். கேளு.”

சரி சொல்லு சொல்லு.”

அவரு சின்ன வயசுல விளையாடப் போகும்போது யாரும் அவரச் சேத்துக்க மாட்டாங்களாம். அதுவாச்சும் பரவாயில்ல. அவர் கண்ணப் பாத்தவுடனே சில குழந்தைங்க பயந்து அழ ஆரம்பிச்சிடுமாம். சில குழந்தைங்க இவன் கண்ணு பேய் மாதிரி இருக்குனு எல்லாம்  கிண்டல் பன்ன ஆரம்பிச்சிடுவாங்களாம். ஆனா இதக் கண்டிக்கவேண்டிய அந்தக் குழந்தைங்களோட பெற்றோர், உங்க பையனப் பாத்தா பூச்சாண்டினுதான் சொல்லுவாங்கணு சொன்னாங்களாம். இந்தத் தப்புக்குப்  பெரியவங்க சப்போர்ட்டு வேற. அது ஒரு பிரச்சினையா அப்போ தெரியல. ஆனா வளர வளர வலிக்குதுன்னு சொன்னாரு. அதனாலயே குழந்தைங்க பக்கமே அதிகம் போக மாட்டாராம் பாலகிருஷ்ணன். அந்த மாதிரி நெலைமை நெறைய பார்வையற்றவங்களுக்கு வந்திருக்கு.”

வளர வளர வலிக்குது. வளர வளர வலிக்குது.” என்று மனதிற்குள்ளே இருமுறை சொல்லிக்கொண்டான் தம்பி. ஆனால் அவனிடம் இருந்து எந்த மறுமொழியும் வரவில்லை. அதனால் நம்பியே தொடர வேண்டியதாய்ப் போயிற்று.

எல்லாக் கொழந்தைங்களும் அப்படித்தான்னு சொல்லிட முடியாது. சுபாவோட அண்ணன் பொண்ணு விழாக்காலங்கல்ல இவங்க எங்கிருந்தாலும் ஓடி வந்து இவங்க மடிமேல உட்காந்துக்குமாம். பேசாதாம்; சிரிக்காதாம். அதேமாதிரி இவங்களோட அக்கா பையன் இவங்களுக்கு மட்டும் சாப்பிடும்போது தட்டெல்லாம் கொண்டுவந்து வைப்பானாம். அத வெச்சிதான் இவங்களும் அந்தக் கொழந்தைங்களுக்கு ஏதோ தெரிஞ்சிருக்குன்னு கண்டுபிடிச்சாங்கலாம். இத்தனைக்கும் அவங்களுக்கெல்லாம் ரெண்டு வயசுக்கும் குறைவு. ஒண்ணேகால்தான் இருக்குமாம்

சூப்பர் இல்ல?”

இதவிட சூப்பர் என்னனா அவங்க வீட்டு நாய். சுபா வர்றாங்கனு தெரிஞ்சா வழியில படுத்திருந்தாக் கூட எழுந்து நகர்ந்து போயிடுமாம்.”

அப்படிப் போடு. நீ சொன்னதுலயே இதுதான் ஹைலைட். இதுல என்ன பெரிய வியப்புனா நாய்க்குக் கூட பார்வை இல்லாதவங்களைப் பத்தித் தெரிஞ்சிருக்கு. அவங்களைப் பத்தின புரிதல் இருக்கு!”

ஆமா நாய்க்குக் கூட இருக்கு. சரி அதவிடு. செலின் ஒருசில சுவாரசியமான அனுபவங்களைப் பகிர்ந்துக்கிட்டாங்க.”

செலின் புதுக்கோட்டைதானே?”

ஆமாம். அவங்களேதான்.”

என்ன சொன்னாங்க?”

நெறைய சொன்னாங்க. குறிப்பா பார்வை இல்லாதவங்கக் கிட்ட சின்னக்  கொழந்தைங்கள கையில குடுக்க பயப்படுவாங்களாம். அதுமட்டுமில்லாம இவங்களே இவங்களோட கொழந்தையத்தான் அதிகம் தூக்கி இருக்காங்களாம்.”

பொதுவா கைக்கொழந்தைங்களைத் தூக்க பார்வை தெரியாதவங்களுக்கே ஒருவித பயம் இருக்குறதா கேள்விப் பட்டிருக்கேன்.” என்றான் தம்பி.

ஆமா. தலை நிற்கிறவரைக்கும் சில பார்வை தெரியாதவங்க பயப்படதான் செய்யுறாங்க.”

சரி நீ செலின் கதையைச் சொல்லு.”

தன்னுடைய ஒன்னறை வயசுலேயே, சொல்லப்போனா அதுக்கும் கீழ செலினோட கொழந்த ஏதாச்சும் கீழ விழுந்தா அத செலின் தேடுறதைப்பாத்தா உடனே போயி எடுத்துக் கொடுக்குறதும், இவங்கக் கிட்ட மட்டும் சத்தமா சிரிக்குறதும்தான் இவங்களுக்கு கிடச்ச  முதல் சிக்னல். அதுலயே புரிஞ்சிக்கிட்டாங்க செலின். செலினுக்குப் பார்வை இல்லனு தேவைப்பட்டா தேவையானவங்களுக்கு மட்டும் அப்பப்போ சைகையிலேயே சொல்லிடுதாம் அந்தக் கொழந்த. இதுல ரொம்ப சுவாரசியமான விஷயம் என்னன்னா, ஒருமுற செலினோட சொந்தக்காரங்க வீட்டுல செலின் ஓரிடத்துல இடிக்கப் போகும்போது தூரத்திலிருந்து அம்மா இடிக்கப்போரிங்க அப்படினு கத்தி இருக்காம். அப்புறம்தான் எல்லாரும் செலினப் பாத்திருக்காங்க. பார்வையில்லாதவங்க தொடுதல் மூலமாதான் இந்த உலகத்தப் புரிஞ்சிக்க முடியும்னு தன்னுடைய மூனாவது வயசுக்குள்ளயே தெறிஞ்சிக்கிட்ட செலினோட பொண்ணு செலினோட பார்வையற்ற தோழிய ஒரு விழாவுல சந்திக்கும்போது அவங்களோட கையப் பிடிச்சு தன்னத் தொட்டுக்காட்டியிருக்காம்.”

இதுக்குமேல என்ன வேணும் நம்பி?

நிச்சயமா. இதேமாதிரிதான் ஜியா அப்படிங்குரவரோட ரெண்டு வயசுப் பையன் அவருக்கு எல்லாத்தையும் தொட்டுக்காட்ட ஆரம்பிச்சானாம். அவருடைய அலைபேசியில ஏதாச்சும் இமேஜ் தெரிஞ்சா தொட்டுக்காட்டுவானாம். அப்போதான் இவரு கண்டுபிடிச்சாராம். ஒருவாட்டி அவனே உங்களுக்கு எப்பிடி கண்ணு போச்சு அப்பிடினு கேட்டானாம். அது புரிதலுக்கான நேரடி முயற்சி. அதுக்கப்புறம் என்ன?  அப்புறம் எங்க போனாலும் கையய்ப்பிடிச்சு கூட்டிட்டுப்போறது, கடைசிவர ஜியா கூடவே இருந்து கூட்டிட்டு வருவது, யாராச்சும் வந்தா சொல்லுறதுனு அப்பாவுக்குத் தூணா நிற்க ஆரம்பிச்சிட்டானாம் இந்த துரு துரு கொழந்த.”

கேக்கவே ஆச்சர்யமா  இருக்கு. அதுசரி. எனக்குப் பொறக்குறதெல்லாம்  என்னைய என்ன பாடு படுத்தப்போகுதோ.” என்றான் தம்பி.

முதல்ல உனக்கு கல்யாணம் ஆகட்டும். அப்புறம் பிள்ளையப் பத்தி யோசிக்கலாம்.””

சரிடா எனக்கு ரொம்பநாளா ஒரு சந்தேகம்என்றான் நம்பி.

கேளு.”

இந்தத் தலைப்புக்குக் கொஞ்சம் தள்ளி நிற்கிற கேள்விதான்.”

கேளு கேளு. யாறுகிட்ட கேக்குற என்கிட்ட தானே தாராளமா கேளு.”

பார்வையில்லாதவங்களால மத்தவங்களை மாதிரி குழந்தைகளை வளர்க்க முடியுமா?

ரொம்ப கஷ்டம். ஆனா நிச்சயமா முடியும்னுதான் காட்டியிருக்காங்க எழிலரசி மாதிரியான ஆட்கள்என்றான் நம்பி.

புரியல.”

தான் மலம் கழிச்சத மழலைக் குரலில ஒரு ஒன்னறை வயசு கொழந்த சொல்ல அது புரியாம அந்தக் கொழந்தைய கழிப்பறை கூட்டிட்டுப் போக அங்கிருந்து தன்னுடைய அம்மா கையைப் பிடிச்சி தான் மலம் கழிச்ச இடத்தக் காட்டி அதுக்கான மொழியிலயே சொல்லியிருக்கு அந்தக் கொழந்த. அப்போதான் எழிலரசிக்கு தன்னுடைய குழந்த தன்னுடைய கையைப் பிடிச்சு கூட்டிட்டுப் போயி ஒரு விஷயத்தச் சொல்லுதுன்னா அதுக்கு தன்னையப் பத்திப் புரிஞ்சிருக்குனு புரிஞ்சிக்க முடிஞ்சிது.”

அதுசரி. ஒன்னறை வயசுலேயேவா!”

ஆமாம். ஒருமுற கொட்ற மழையில எழிலரசியும் அவங்க கணவரும் கொழந்தையத் தூக்கிட்டுப் போகும்போது, ஒதுங்க இடமில்லாம யாரும் அந்தச் சமையத்துல உதவிக்கும் வராம நனஞ்சிக்கிட்டே போயிருக்காங்க. அப்படிப் போகும்போதே ஏதோ ஒரு எடத்த தன்னுடைய கைவிரல் மூலமா காட்ட இவங்களும் சரி ஏதோ கொழந்தை காட்டுதுனு சொல்லி அந்த இடத்த நோக்கி நடந்து போனாதான் தெரியுது அங்க ஒதுங்க ஒரு கூடாரம் இருந்திருக்குனு. அது கொலுத்துவேல செய்யுரவங்களுடைய கூடாரம். நம்ம அப்பா அம்மாவுக்கு பார்வ தெரியாதுனு தெரிஞ்சிக்கிட்டு என்னுடைய அந்த ரெண்டு வயசு பையன் எங்களுக்குத் தன்னுடைய பாஷையில சொல்லி கைவிரலைக் காட்டிக் காட்டி சொன்னது  என்னால மறக்கவேமுடியாது அப்படினு பெருமையா பகிர்ந்துக்கிட்டாங்க எழிலரசி.” என்று சொல்லி ஒருநொடி நிறுத்திய நம்பி,

பார்வையில்லாதவங்க குழந்தைங்களை வளர்க்க முடியுமானு கேட்ட இல்ல? அது ரொம்ப ரொம்ப கஷ்டம். ஆனா துணிச்சலோடையும்  நம்பிக்கையோடையும் கடுமையா கவனமா முயற்சி செஞ்சா முடியும். எழிலரசி அவங்க பையனுக்கு எல்லாமே அவங்கதான் செய்வாங்களாம். மத்தவங்க கிட்ட இருந்தாலும் இவங்களே குழந்தைக்கு எல்லாமே செய்யனும் அப்படினு நெனச்சி செய்வாங்கலாம். அவ்வளவு ஏன்! பொறந்த கொழந்தைக்கு மூனாவது மாசம் தடுப்பூசி போடனும் அப்படிங்குரப்போ ஒரு கண்ணுல கொஞ்சமா பார்வை, ஒரு கையில பார்வை இல்லாதவங்க பயன்படுத்தும் அந்தக் குச்சி, அப்புறம் இன்னொரு கையில கொழந்த. ரோட்டுல நடந்து, கொழந்தையோடையே ஒரு பேருந்தைப் பிடிச்சு அப்புறம் இறங்கி, கொஞ்சம் தூரம் மறுபடியும் நடந்து, தடுப்பூசி போடுற எடத்தத் தேடிக் கண்டுபிடிச்சிருக்காங்க. தடுப்பூசி போடும்போது குழந்தையையும் அதுக்கேத்த மாதிரி பிடிச்சிருக்காங்க. அப்புரம் வீட்டுக்குத் தூக்கிட்டுவந்து ஒத்தடமும் குடுத்திருக்காங்க ஒத்தையில. அப்புறம் ஜுரம் வந்தா கொழந்தைக்கு மாத்திர தன்னிச்சையா குடுத்திருக்காங்க. பதினைஞ்சே நாள்ல இவங்களே குழந்தைய குளிப்பாட்டிவிட்டாங்களாம். ஒன்னறை மாசத்துலயே அவங்களுடைய குழந்தைக்கு தலைக்கும் குளிப்பாட்டிவிட ஆரம்பிச்சாங்கலாம் இந்த எழிலரசி. பார்வையில்லனாலும் எங்களாளையும் எல்லாத்தையும் ஒரு குழந்தைக்குச் செய்யமுடியும்அப்படினு சொன்ன எழிலரசி குழந்தைகளுடைய சத்தமில்லாத சிரிப்பைத் தவிர மத்த எல்லாத்தையும் பார்வை இல்லாதவங்களாள புரிஞ்சிக்கமுடியும்னு வேற சொல்லி முடிச்சாங்.”

ஆனா இதெல்லாம் உண்மையிலேயே பெரிய விஷயம்தான்என்றான் தம்பி.

அப்படியே இன்னொரு பெரிய விஷயத்தையும் கேட்டுட்டு கெளம்புஎன்ற நம்பி சொல்லத் தொடங்கினான்.

நான் எதையாச்சும் தேடும்போதே என் பொண்ணு அவளுடைய ஒன்னறை வயசிலேயே எடுத்துக் கொடுப்பாள். அதுல எனக்குக் கொஞ்சம் புரிஞ்சிச்சு. இருந்தாலும் நானே எனக்குப் பார்வையில்ல அப்படினு என் பொண்ணுக்கிட்ட சொல்லிட்டேன் அப்படினு அலைப்பேசியில என் கிட்ட பகிர்ந்துக்கிட்ட அவங்க எனக்கும் எல்லாரையும் போல வாட்ஸப் மூலமா பகிர்ந்திக்கிடணும்னுதான் ஆசை. ஆனா நான் பேசிக் மொபைல்தான் வெச்சிருக்கேன். மத்தவங்கள மாதிரி நானும் ஸ்மார்ட் போன் வாங்கிப் பயன்படுத்துனா என் பொண்ணு அதையே பாத்துக்கிட்டு இருப்பா. அப்புறம் அதுவே பழக்கமாகிக் கஷ்டமா போயிடும். நான்தான் இப்படி இருக்கேன். கண்ணுல பிரச்சினையோட கஷ்டப்படுறேன் அப்படினு சொல்லி முடிச்சாங் என்றான் நம்பி.

கண்ணு தெறிஞ்சவங்களே சின்னக் குழந்தைங்கக்கிட்ட செல்ஃபோண் தந்துட்டு நாம ரிலாக்சா இருக்கனும்னு நெனைக்குற இந்தக் காலத்துல  யாருடா அவங்க? அதுவும் கிளைமாக்ஸுல இண்ட்ரோ குடுக்குற? யாருடா அவங்க?” என்று தம்பி வியப்புடன் கேட்டான்.

அவங்களும் ஒரு பார்வையற்ற அம்மாதான். பேரு ரேணுகா”.

 

(கட்டுரையாளர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பணியாற்றுகிறார். ).

slvinoth.blogspot.com  என்ற தளத்தில் தொடர்ந்து எழுதிவருகிறார்)

தொடர்புக்கு: slvinoth91@gmail.com

3 கருத்துகள்:

  1. எதார்த்தமான உரையாடல் மூலமாக குழந்தைகளின் உளவியலை உணர்த்தியிருப்பது சிறப்பு
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. ஜெயராமன் தஞ்சாவூர்27 அக்டோபர், 2020 அன்று PM 10:06

    உண்மைகளின் தொகுப்பு உணர்த்த வரும் கருத்து

    பார்வை மாற்றுத்திறனாளிகள் அறிந்துகொள்ள வேண்டிய அருமையான அவசியமான கருத்துக்கள்
    அருமையான கட்டுரை

    தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு