வணக்கம் வாசகர்களே!
இதுவரை அரசியல் ஆளுமைகளாகத் திகழும் பார்வையற்றவர்கள் சிலரை அறிந்துகொண்டோம். இந்த இதழில் ஓர் அமைப்பைக் குறித்து விரிவாக அறிந்துகொள்ள இருக்கிறோம்.
போராட்டங்களின் வழியாக பார்வை மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளைப் பெற்றுத்தர பல அமைப்புகள் இருக்கின்றன. பள்ளி மாணவர்கள் தொடங்கி, வயதுவந்த வணிகர்கள் வரை பல தரப்பினருக்கும் உதவி புரிந்து அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட தொண்டு நிறுவனங்களும் இங்கு நிறைய இருக்கின்றன. இத்தனை அமைப்புகள் இருந்தும், நமக்காகச் சிந்திப்பதை மட்டும் நோக்கமாகக் கொண்ட ஏதேனும் ஒரு அமைப்பு இருக்கிறதா என்ற கேள்விக்கான ஒரே ஒரு விடையாக வந்து நிற்கிறது ‘பார்வையற்ற முற்போக்குச் சிந்தனையாளர் பேரவை’ (progressive thinkers forum of the blind).
ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்காகப் போராடுவதும், அத்தகையவர்களுக்குத் தொண்டு செய்து அவர்களது வாழ்வை மேம்படுத்துவதும் முக்கியமான தேவைதான். ஆயினும், அவர்களைப் பற்றி சிந்திப்பது, அவர்கள் நலனில் நாம் இன்னும் என்னென்ன விதங்களில் எல்லாம் அக்கறை காட்டமுடியும் என்பதை ஆராய்வது முதலிய பணிகள் முக்கியமானவை; அவசியமானவை. எல்லாச் செயல்பாட்டு அமைப்புகளுக்கும் சிந்தனை அமைப்புகளின் (think tanks) வழிகாட்டல்களும், ஆலோசனைகளும் அவசியம் என்பதைப் பல இயக்கங்களின் வாயிலாக நம்மால் அறிந்துகொள்ளமுடியும். இந்த அவசியத் தேவையைப் பார்வையற்றவர்களுக்காகப் பூர்த்திசெய்யத் தொடங்கியிருக்கிறது பார்வையற்ற முற்போக்குச் சிந்தனையாளர் பேரவை. இந்த அமைப்பின் பெயரில் இருக்கும் ‘முற்போக்குச் சிந்தனையாளர்’ என்ற தொடரே ‘அரசியலில் நாம்’ பகுதியில் இவ்வமைப்பை இடம்பெற வைத்திருக்கிறது.