களத்திலிருந்து: எப்போது செயலாற்றப்போகிறோம்? - பார்வையற்றவன்

graphic தமிழ்நாடு பார்வையற்றோர் விளையாட்டுச் சங்கம் (TABSA) சின்னம்
 

     ஆகஸ்ட் மாதம் வாட்ஸ்அப்பில்பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கான மாபெரும் உடற்பயிற்சி சவால் போட்டிஎன்ற அறிவிப்பைப் பார்த்துவிட்டு பலர் கடந்திருப்பீர்கள், சிலர் அந்தப் போட்டிகளில் கலந்திருப்பீர்கள்.

      ஆகஸ்ட் மாத மத்தியில் தமிழ்நாடு பார்வையற்றோர் விளையாட்டுச் சங்கம் (TABSA), பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கான உடற்பயிற்சி சவால் போட்டியினை அறிவித்திருந்தது. 18 வயதிற்கு உட்பட்டவர்கள், 18 வயதிற்கு மேற்பட்டவர்கள், ஆண்கள், பெண்கள், குறை பார்வை உடையவர்கள், முழு பார்வையற்றவர்கள் என்ற பகுப்புகளின் அடிப்படையில் 8 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.  ஒவ்வொரு பிரிவிற்கும் நான்கு உடற்பயிற்சிகள் தரப்பட்டிருக்கும். அதில் ஏதேனும் மூன்று உடற்பயிற்சிகளைப் போட்டியாளர்கள் செய்யவேண்டும். ஒவ்வொரு உடற்பயிற்சியினையும் ஒரு நிமிட கால  அளவில் செய்து,அதனை காணொளியாக ஒளிப்பதிவு செய்து அனுப்ப வேண்டும். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப்பரிசும் சான்றிதழும் வழங்கப்பட்டன.

      தமிழ்நாடு பார்வையற்றோர் விளையாட்டுச் சங்கம் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டியைக் காணொளிப் போட்டியாக அறிவித்தது ஒரு புது முயற்சி. ஆனால், அவர்கள் அறிவிப்போடு நின்றுவிடவில்லை. பார்வையற்றவர்களின் சிக்கலை உணர்ந்து, அவர்களுக்கு வழிகாட்டும் விதத்தில்,  போட்டிக்கான உடற்பயிற்சிகளைச் செய்து, அதன் அசைவுகளை ஒலிவடிவில் விவரனையாகப் பதிவுசெய்து, தங்களது

யூட்யூப்

பக்கத்தில் பதிவேற்றியிருந்தனர். அதுமட்டுமல்லாமல் காணொளிகளைப் பார்வை மாற்றுத்திறனாளிகள் எவ்வாறு சிக்கலின்றி பதிவு செய்யலாம் என்ற வழிமுறைகளையும் போட்டிக்கான அறிவிப்புகளோடு இணைத்து வழங்கியிருந்தனர்.

      இப்போட்டிக்கான பரிசளிப்பு விழா 30/8/2020 அன்று இணையவழியில் நடந்தேறியது. இவ்விழாவில், டேவிட் அப்சலம் (பொதுச்செயலர், இந்திய பார்வையற்றோர் விளையாட்டுச் சங்கம்-IBSA), நரேஷ் (பயிற்சியாளர், இந்தியப் பார்வையற்றோர் கால்பந்துச் சம்மேலனம்-IBFF), மகேந்திரன் (செயலாளர், தமிழ்நாடு பார்வையற்றோர் கிரிக்கேட் சங்கம், உமாசங்கர் DSo (நிறுவனர், தமிழ்நாடு பேராஜூடோ சங்கம்), ஜெயபிரகாஷ் (துணைத்தலைவர், தமிழ்நாடு பார்வையற்றோர் சதுரங்கச் சங்கம்), பழனிச்சாமி (செயலாளர், தமிழ்நாடு பார்வையற்றோர் கைப்பந்துச் சங்கம்), பாரதிராஜா  (தமிழ்நாடு பார்வையற்றோர் கால்பந்துச் சங்கம்), முனைவர். N.C.ஜீசஸ் ராஜ்குமார் (பேராசிரியர், SRM பல்கலைக்கழகம்), கிஷோர் (ஆத்மேஸ்வரா அறக்கட்டளை) ஆகியோர் கலந்துகொண்டனர். சுருக்கமாகச் சொன்னால் இந்த விழாவானது,தேசிய மற்றும் மாநில பார்வையற்றோருக்கான விளையாட்டுச் சங்கங்கள் சங்கமிக்கும் விழாவாக நடைபெற்றது. இவ்விழாவின் ஊடகப் பங்காளராக விரல்மொழியர் மின்னிதழ் கைகோர்த்திருந்தது. நிறைய பேர் கலந்துகொண்டு நீண்ட நேரம் நடைபெற்ற விழா என்பதால், சிறப்பான தருணங்களை இங்கே சுருக்கமாகப் பார்க்களாம்.

graphic சரவணராம்
சரவணராம்

      விழாவில் சுட்டுரையில், “பார்வை மாற்றுத்திறனாளிகள் பொதுவாகவே  உடற்பயிற்சியில் ஆர்வமற்று இருக்கிறார்கள். கொரோனா காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டியது அவசியமாக இருக்கிறது. எனவே இச்சூழலில் பார்வை மாற்றுத்திறனாளிகள் உடற்பயிற்சியின் பால் கவனத்தைச் செலுத்த வேண்டும். அதற்காகவே இப்போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. இப்போட்டியில் பார்வை மாற்றுத்திறனாளிகள் காணொளி பதிவு செய்வதில் சிக்கல்களை எதிர்கொண்டனர். அதை நிறைய உடற்பயிற்சி வீடியோக்களில் காணமுடிந்தது. அல்பியா மற்றும் மனோகரன் போன்றோர் சர்வதேச வீரர்களுக்கு நிகராக மிகச் சிறப்பாக உடற்பயிற்சிகளைச் செய்தனர் என்று தமிழ்நாடு பார்வையற்றோர் விளையாட்டுச் சங்கச் செயலர் சரவணராம் அவர்கள்  கூறினார்.

      அடுத்ததாக சிறப்பாக உடற்பயிற்சி செய்த அல்பியா மற்றும் மனோகரன் இருவரது காணொளிகளும் ஒளிபரப்பப்பட்டன.

graphic டேவிட் அப்சலம் அவர்களின் படம்
டேவிட் அப்சலம்

      சிறப்புரை ஆற்றிய டேவிட் அவர்கள், இந்தியாவிலேயே முதல் முறையாக பார்வையற்றோருக்காக நடத்தப்பட்ட உடற்பயிற்சிப் போட்டி இதுதான் என்று கூறினார். அதன் வழியாக இது புது முயற்சி மட்டுமல்ல முதல் முயற்சி என்ற விடயத்தையும் விழாவில் பதிவுசெய்தார். பொதுவாக விளையாட்டுப் போட்டிகளில் நகர்ப்புறத்தைச் சேர்ந்தவர்களே அதிகம் பங்கேற்கின்றனர். ஆனால், கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்களின் பங்களிப்பு மிகக் குறைவாகவே இருக்கிறது. ஏனெனில், கிராமப்புறங்களில் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்கான வழிமுறைகளும் வழிகாட்டுதலும் இல்லாமல் நிறைய மாற்றுத்திறனாளிகள் இருக்கின்றனர். இது போன்ற இணையவழிப் போட்டிகள் கிராமங்களையும் சென்று சேர்கின்றன. இதன்மூலம் நல்ல திறமையாளர்களைக் கண்டறிய இயலும். தேசிய அளவிலான போட்டிகளில் 800 ஆண் போட்டியாளர்கள் பங்கேற்றால் வெறும் 200 பெண்  போட்டியாளர்கள் மட்டுமே பங்கேற்கின்றனர். இந்த எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் இந்தியப் பார்வையற்றோர் விளையாட்டுச் சங்கம் பெண்களுக்கான பயிற்சி முகாம்களை ஏற்பாடு செய்துவருகிறதுஎன்று கூறினார்.

      அடுத்து, தமிழ்நாடு பார்வையற்றோர் விளையாட்டுச் சங்கம் கடந்து வந்த பாதை பற்றி அச்சங்கத்தின் இணைச்செயலர் வெங்கலமூர்த்தி பேசினார். அதில் தமிழகம் தாண்டி அதிகமாக தேசிய அளவிலான போட்டிகளுக்கு வீரர்களைத் தமிழ்நாடு பார்வையற்றோர் விளையாட்டுச் சங்கம் அழைத்துச் சென்றதை அறிய முடிந்தது. நீச்சல் போட்டிகளில் சாதிப்பதற்காக சூரியபிரகாஷ் என்பவருக்கு மதுரை எம்ஜிஆர் விளையாட்டரங்கில் பயிற்சி செய்வதற்கான ஏற்பாடுகளைச் சங்கம்  செய்து கொடுத்திருப்பதாக அவர் கூறியது,பார்வையற்றோருக்கான விளையாட்டில் பல புதிய கதவுகள் திறந்துவருவதற்கான அறிகுறியாகத்தெரிகிறது.

      இந்திய கால்பந்துச் சங்கத்தைச் சேர்ந்த நரேஷ், உடற்பயிற்சியின் மேன்மையை எடுத்துரைத்தார்.

      தமிழ்நாடு பார்வையற்றோர் கிரிக்கெட் சங்கத்தைச் சேர்ந்த மகேந்திரன், “விளையாட்டில் தேசிய மற்றும் சர்வதேச அளவில் சாதிக்கும் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்குக் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட  ஒதுக்கீட்டைப் பெறுவதற்கான வழிமுறைகளை உருவாக்க நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்என்றார். விழாவில் பேசிய அனைவருமே இதை வழிமொழிந்தனர்.

      பிரபல எழுத்தாளர் நவராஜ் செல்லையா அவர்களின் மகன் ராஜ்குமார் பார்வைமாற்றுத்திறனாளி வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் வெளிச்சம்என்ற பாடலை இயற்றி இருந்தார். அப்பாடல் இவ்விழாவில் வெளியிடப்பட்டது.

பாடலைக் கேட்க இந்த  இணைப்பைச் சொடுக்குங்கள்.

தொடர்ந்து பேசிய ராஜ்குமார், உலகக் கோப்பையின்போது இந்தியப் பார்வையற்றோர் கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராக இருந்த தன் நினைவலைகளைப் பகிர்ந்து கொண்டார்.

      இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழகத்தைச் சேர்ந்த பார்வை மாற்றுத்திறனாளிகள்தான் ஜூடோவில் சர்வதேச அளவில் சாதித்தனர். பார்வை மாற்றுத்திறனாளி வீரர்கள் ஏழ்மையான பின்னனியிலிருந்தே மேலெழுந்து வருகின்றனர். தேசிய அளவிலான போட்டிகளுக்கு அழைத்துச் செல்ல ஓரளவு நிதி வளங்களைத் திரட்ட முடிகிறது. ஆனால், சர்வதேசப் போட்டிகளுக்குச் செல்லும்போது பல லட்ச ரூபாய் தேவைப்படுகிறது. அதைத் திரட்ட அதிக சிக்கலை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறதுஎன கள எதார்த்தத்தை உமாசங்கர் எடுத்துரைத்தார்.

      தமிழ்நாடு பார்வையற்றோர் கைப்பந்துச் சங்கத்தைச் சேர்ந்த  பழனிச்சாமி, பார்வையற்றோருக்கான கைப்பந்தாட்டத்தை  வளர்த்தெடுப்பதோடு, பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி பயில தங்கள் சங்கம் உதவிகளைச் செய்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

      தமிழ்நாடு பிரேயில் சதுரங்கச் சங்கத்தைச் சேர்ந்த ஜெயபிரகாஷ், பார்வையற்றோருக்கு சதுரங்கத்தில் உள்ள வாய்ப்புகள் குறித்துப் பேசினார்.

      தமிழ்நாடு பார்வையற்றோர் கால்பந்துச் சங்கத்தைச் சேர்ந்த பாரதிராஜா, வளரும் நிலையில் உள்ள பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கான கால்பந்தாட்டத்தை உயர்ந்த இடத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்பதைக் குறிப்பிட்டதோடு, அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டியதன்  அவசியம் குறித்தும் தெளிவாக எடுத்துரைத்தார்.

      இவ்விழாவில் இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் விளையாட்டு ஆர்வலர்கள் பங்குபெற்றனர். M.பாலகிருஷ்ணன், விரல்மொழியர் இணையாசிரியர் பொன்.சக்திவேல் ஆகியோர் அளவாய் பேசி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினர். விழா அரங்கில் நடப்பது போன்று மிக நேர்த்தியாய் தொழிநுட்ப ஒருங்கிணைப்பைச் செய்திருந்தார் விரல்மொழியரின் தொழில்நுட்பப் பிரிவுப் பொறுப்பாளர்  பொன். குமரவேல். இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் பலர் கலந்துகொண்டிருந்ததால், அவர்களுக்குப் புரியும் வகையில் இடையிடையே  ஆங்கிலத்திலும் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.

      உயர்பதவியில் இருப்பவர்கள் விழாவிற்கு அழைத்தால் தலையைக் காட்டிவிட்டுச் சென்றுவிடுவார்கள். ஆனால் இந்திய விளையாட்டுச் சங்கத்தின் பொதுச்செயலர் டேவிட் அவர்கள் விழா முழுவதும் இருந்ததோடு, விழா முடிந்ததும், “விளையாட்டில் சாதிக்கும் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிப்பதற்கான அழுத்தங்களை நாம் அரசுக்குத் தொடர்ந்து தரவேண்டும். பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கான ஒவ்வொரு விளையாட்டுச் சங்கமும்  இணைந்து மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு நம் கோரிக்கைகளை வலியுறுத்திக் கடிதங்களை அனுப்பிக்கொண்டே இருக்க வேண்டும். உங்களுக்கு மத்திய அரசு தொடர்பான விடயங்களில் உதவ இந்தியப் பார்வையற்றோர் விளையாட்டுச் சங்கம் தயாராகவே இருக்கிறதுஎன்றார்..

      இதுவரை பார்வையற்ற விளையாட்டு வீரர்களுக்கான சிக்கல்கள் குறித்து அவரவர் சங்க மேடைகளில் முழங்கியவர்கள், இந்த விழா மேடையில் ஒன்றாக முழங்கியிருக்கின்றனர்.       வழக்கம்போலவே பேசிக் களைந்திருக்கிறோம். உன்மையில் நாம் எப்போதுதான் செயலாற்றப்போகிறோம்?

நிகழ்வைக் காண இந்த  இணைப்பைச் சொடுக்குங்கள்.

 

தொடர்புக்கு: parvaiyatravan@gmail.com

8 கருத்துகள்:

 1. கூடிப் பேசுவதே ஒரு செயல்பாட்டிற்்கான விதைதானே. வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்கள் சொல்வது சரிதான் சார். கடைசிவரை பேசிக்கொண்டே இருந்துவிடுவார்களோ என்ற பயத்தினால்தான் இந்த வினாவை முன்வைத்தேன்.

   நீக்கு
 2. ஜெயராமன் தஞ்சாவூர்24 அக்டோபர், 2020 அன்று 2:04 PM

  மாற்று திறன் கொண்ட விளையாட்டு வீரர்களின் வாழ்க்கையில்

  விடியலை விரைவில் சந்திக்க
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 3. சித்திரம் வரைய நன்றாகவே கற்கத் தொடங்கி இருக்கிறோம் ஆனால் அதற்கான சுவர் இருக்கிறதா என்பதில் போதிய கவனம் செலுத்த தொடர்ச்சியாக தவறி கொண்டே இருக்கிறோம். உடற்பயிற்சியும் அது சார்ந்த விழிப்புணர்வு மிக முக்கியமாக தேவைப்படுகிறது பார்வை மாற்று சகோதர சகோதரிகளுக்கு. இது போன்ற நிகழ்வுகள் அந்த விழிப்புணர்வை கண்டிப்பாக ஏற்படுத்தும் தொடரட்டும் உங்கள் பணி வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 4. நம் பார்வையற்ற வீரர்களுக்கு முறையாக ஒதுக்கீடு வழங்க தொடர்ந்து கோரிக்கைகளைக் கொண்டு செல்ல வேண்டும்.
  சிறப்பான தொகுப்புரை வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு