சிறப்புக் கட்டுரை: உள்ளடக்கமற்ற உள்ளடங்கிய கல்வி: சிறப்புக் கல்வியைப் புறக்கணிக்கும் புதிய கல்விக் கொள்கை _2020 - பகுதி_ 2 - முனைவர் கு. முருகானந்தன்.

graphic இந்திய அரசின் முத்திரை இடம் பெற்ற புதிய கல்விக்கொள்கை - 2020 வெளியீட்டின் முகப்பு படம்
 

     புதிய கல்விக்கொள்கை_2019 வரைவில் ஊனமுற்றோர் தொடர்பான முன்வைப்புகள், அவற்றிற்கு நமது எதிர்வினைகள், புதிய கல்விக்கொள்கை_2020 கொண்டிருந்த மாற்றங்கள், ஊனமுற்றோர் தொடர்பான அறிவிப்புகள், அந்த அறிவிப்புகளில் காணப்படும் குறைபாடுகள், இடைவெளிகள்,புறக்கணிப்புகள் ஆகியன குறித்து இக்கட்டுரையின் முதல் பகுதியில் சற்று விரிவாகவே விளக்கியிருந்தோம். சென்ற அக்டோபர் இதழுக்கு அந்தக் கட்டுரையின் தொடர்ச்சியினை எழுத இயலாமல் போனது. அதற்காக விரல்மொழியர் இதழ் ஆசிரியரிடமும் வாசகர்களிடமும் எனது வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

 முதல் பகுதியைப்படிக்க இந்த

இணைப்பைச் சொடுக்குங்கள்.

      ஊனமுற்றோர் கல்வியில் காணப்படும் தற்போதைய குறைபாடுகள், அவற்றைக் களைய தேவைப்படும் நடவடிக்கைகள்,அந்த வகையில் எத்தகையதொரு கல்விக்கொள்கை ஊனமுற்ற சமூகத்திற்கு நலம் க்கும் முதலான விடயங்களை சுருக்கமாக விவாதிப்போம்.

உள்ளடங்கிய கல்வியில் ஊனமுற்றோர் நிலை

         2000-ஆம் ஆண்டிற்குப் பிறகான காலகட்டத்தில் சிறப்புக் கல்வியைவிடவும் உள்ளடங்கிய கல்வி என்றழைக்கப்படும் (Inclusive Education) முறையே ஊனமுற்ற குழந்தைகளின் சமூக ஒருங்கிணைவுக்கும் பாகுபாடற்ற கல்வி பெருவதற்கும் உகந்ததாக இருக்கும் என்ற கருத்தாக்கம் கொள்கை அளவிலும் நடைமுறை நிலையிலும் முன்னிலைப்படுத்தப்பட்டது. விளிம்புநிலைப் பிரிவினர் கல்வி பெறுவதில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளை முறையாகக் களையும் பொறுப்பினைச் சுமக்க விரும்பாத நடுவண் அரசு, பெயரளவில் அத்தகைய விளிம்புநிலைப் பிரிவினர் அனைவரின் கல்விசார் தேவைகளையும் ஒருங்குசேர்த்து கவனிப்பதர்க்கென அனைவருக்கும் கல்வித்திட்டம் (SSA) என்ற திட்டத்தைத் தொடங்கி நடைமுறைப் படுத்தியது. பின்னர் நடுநிலை வகுப்புகள் வரை SSA என்ற திட்டத்தின் கீழும், உயர்நிலை வகுப்புகளில் RMSA என்ற திட்டத்தின் கீழும் ஊனமுற்ற குழந்தைகளுக்கு கல்வி உள்ளடங்கிய முறையில் வழங்கப்படலாயிற்று. தற்போது இவ்விரு திட்டங்களையும் இணைத்து சமாக்ரக ஷிக்ஷிய அபியான் என்ற திட்டமாகச் செயல்படுத்தப்பட்டுள்ளது.

      ஹிந்தியில் சூட்டப்பட்ட பெயர்களுக்கு அதே ஹிந்தி மொழியில் மாற்றி மாற்றி புதிய பெயர்கள் வைக்கப்பட்டாலும், இருக்கும் நடைமுறை என்னவோ கடந்த பதினைந்து ஆண்டுகளாக ஒன்றுதான். அதாகப்பட்டது என்னவென்றால்,ஊனமுற்றோருள் ஏதோ ஒரு பிரிவு குழந்தைகளுக்கு சிறப்புக் கல்வி ஆசிரியராகப் பயிற்சி முடித்த ஒருவர்,ஒரு ஒன்றியத்தில் உள்ள ஐந்து அல்லது அதற்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு நேரில் வாரத்திற்கு ஒருமுறை அல்லது நேரம் கிடைக்கும்போது சென்று,எல்லாப் பிரிவு ஊனமுற்ற குழந்தைகளையும் ஒன்றாக அழைத்து அமரவைத்து,ஏதாவது பேசிவிட்டு, அல்லது அவ்வாறு மாணவர்களைச் சந்தித்ததாகக் கையெழுத்துப் போட்டுவிட்டு வருவார். மேலும் ஊனமுற்ற குழந்தைகள் படிப்பதற்குத் தேவையான பிரெயில் துணைக்கருவிகள்,பிற கற்றல் பொருட்கள், அணுகத்தக்க பிரெயில் மற்றும் பெரிய எழுத்தினாளான புத்தகங்கள், வரைபடங்கள், விளையாட்டுப் பொருட்கள் என எந்தவிதமான அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளையும் ஏற்படுத்தாமல் உள்ளடங்கிய கல்வி அரசுப் பள்ளிகளில் செயல்படுத்தப் படுகிறது. அப்படியே சிற்சில வசதிகள் இருந்தாலும், அவற்றைப் பயன்படுத்தும் பயிற்சி சிறிதும் அளிக்கப்படுவதில்லை.

      வெங்கொள் பயன்படுத்தி எப்படி நடப்பது, பொருட்களை எப்படி அடையாளம் காண்பது போன்ற மிக அடிப்படையான வாழ்வியல் பயிற்சிகள் கூட உள்ளடங்கிய முறையில் கல்வி பயிலும் பார்வைக் குறையுடைய மாணவர்களுக்குக் கிடைப்பதில்லை. காதுகேளாதொருக்குப் பயிற்றுவிக்க சிறப்பாசிரியராகப் பயிற்சிபெற்ற ஒருவர் எப்படி பார்வையற்றோருக்கும், கற்றல் திறன் குறைபாடுகள் கொண்ட குழந்தைகளுக்கும் கல்வி பயிற்றுவிக்க முடியும்? தற்போது நான் பணிபுரியும் கல்லூரியில் இளங்கலை ஆங்கிலம் பயிலும் பார்வையற்ற மாணவன் நாகராஜிடம், “தம்பி உனக்கு பிரெயில் தெரியுமா?” என்று கேட்டேன். “பார்த்திருக்கிறேன் சார், நான் ஒன்பதாம் வகுப்புப் படிக்கும்போது கடலூரில் இருந்து வந்த ஒரு ஆசிரியர் காட்டினார்.”“சரி, வெண்கோளாவது பயன்படுத்துவாயா?” என்றேன். “அதையும் அந்த சார்தான் காட்டினார், பாத்திருக்கிறேன் சார்என்றான். கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் வணிகவியல் இளங்கலை பயிலும் பார்வையற்ற மாணவன் ஒருவனோ இதற்கும் ஒருபடி மேலேபோய்,பற்பசையைத் துளக்கியில் வைப்பதற்குக் கூட அவனது அம்மாவின் உதவியை எதிர்பார்க்கிறான். மிக எளிமையான ‘school’ போன்ற ஆங்கிலச் சொற்களுக்குக்கூட மேற்சொன்ன இரு பார்வையற்ற கல்லூரி பயிலும் மானவர்களால் எழுத்துக்களைச் சொல்ல இயலவில்லை. இவ்விருவரும் கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ளடங்கிய, அதுதான் “Inclusive Education” என்று சொல்கிறார்களே, அந்த முறையில் கல்வி பயின்றவர்கள் என்பதுதான் இங்கு முக்கியமாக கவனிக்கப்படவேண்டியது.

      இப்படி உள்ளடங்கிய கல்வியால் அடிப்படை வாழ்வியல் பயிற்சிகளையும் எண்ணறிவு, எழுத்தறிவையும் இழந்து நிற்கும் ஒரு பார்வையற்ற தலைமுறை உருவாக்கப்பட்டுவிட்டது. எல்லாத் திறன்களையும் பெற்றிருக்கும் பார்வையற்றோர் பணிக்குச் செல்வதிலேயே அரசுத்துறைகளிலும், தனியார் நிறுவனங்களிலும் பல்வேறு புறக்கணிப்புகளையும், மறுப்புகளையும் சந்தித்துவரும் இன்றைய ஈவிரக்கமற்ற தனியார்மயச் சூழலில், நாகராஜ் போன்ற பார்வையற்ற, ஆனால் பிரெயில், கணினி, வெங்கோள் என எதையும் பயன்படுத்தி அறியாத மானவர்களின் எதிர்காலம் என்னவாகப் போகிறது என்பதுதான் தற்போது நாம் எதிர்கொள்ளும் முக்கியமான கேள்வியாக நிற்கிறது. இவர்களைப் போன்று இன்னும் எத்தனை தலைமுறை பார்வையற்றோர் உள்ளிட்ட புலன் ஊனமுற்ற குழந்தைகளைப் படித்திருந்தும் கல்லாதவர்களாக இந்தக் கல்விமுறை உருவாக்கத் துடிக்கிறது என்பதும், அதற்கு நாம் எப்படி எதிர்வினை ஆற்றுவது என்பதும் பதிலற்ற வினாக்களாகவே தொடர்கின்றன.

      உள்ளடங்கிய கல்வியைச் சிறப்பாகவே அளிக்கும் சில பெரும் தனியார் பள்ளிகள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால், அவற்றில் உயர் நடுத்தர அல்லது மேட்டுக்குடிக் குழந்தைகள் மட்டும்தான் சேர்ந்து படிக்கும் நிலை உள்ளது. பார்வையற்றோர் ஆகப் பெரும்பாலும், மிக ஏழ்மையான அல்லது நடுத்தரப் பொருளாதாரப் பின்னணி கொண்டவர்களாகவே இருப்பதால், இத்தகைய பள்ளிகளில் சேர்ந்து பயில்வது அவர்களுக்குக் கனவிலும் கைகூடாத விடயம். உள்ளடங்கிய கல்வியை முன்பிருந்த ஒருங்கிணைந்த கல்வி முறையைப் பின்பற்றும் சில தொண்டு நிறுவனங்களின் முயற்சிகளைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், பார்வையற்றோர் கல்வியைப் பொருத்தமட்டில் இந்தக் கல்விமுறை முழுவதும் தோல்வியடைந்துவிட்டது என்று துணிந்து சொல்லலாம்.

      உண்மை நிலவரம் இப்படி இருக்கும்போது, புதிய கல்விக்கொள்கை முதலாவதாக உள்ளடங்கிய கல்விமுறையில் நிலவும் குறைபாடுகளைக் களையும் பருண்மையான முன்வைப்புகளைக் கொண்டிருக்கும்,இரண்டாவதாக சிறப்புக் கல்வியை மேம்படுத்திப் பரவலாக்கும் திட்டங்களையும் பெற்றிருக்கும் என்ற எதிர்பார்ப்புகளுக்கு விடையளிப்பதாக இக்கல்விக்கொள்கை அமையவில்லை என்பதுதான் இதில் காணப்படும் முதன்மையான இரண்டு குறைபாடுகள். குறிப்பிட்ட பிரிவு ஊனமுற்ற குழந்தைகளுக்குக் கல்வி பயிற்றுவிக்க அதற்கென்று சிறப்புமுறைப் பயிற்சிகளைக் கொண்ட கல்வியியல் பட்ட மற்றும் பட்ட மேற்படிப்புகள் தற்போது உள்ளன. இப்படிப்புகளுக்கு மாற்றாக இக்கல்விக்கொள்கை ஊனமுற்றோருக்குக் கல்வி பயிற்றுவிப்பது தொடர்பான பாடங்களைப் பொதுவான கல்விவியல் படிப்புகளில் சேர்த்து வழங்கப் போகிறது. இனி விரும்பினால் அல்லது தேவைப்பட்டால் ஊனமுற்றோர் கல்வி தொடர்பான சான்றிதழ் படிப்புகளை ஆசிரியர்கள் பயிலலாம், அதுவும் பெரும்பாலும் இணைய அல்லது தொலைநிலை வழியில் மட்டுமே.

குறிப்பிட்ட வகை ஊனமுற்ற குழந்தைகளுக்கு உரிய பயிற்சி முடித்த சிறப்பாசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்ற உறுதியினை இக்கல்விக்கொள்கை வழங்கவில்லை.       மாறாக,குறிப்பிட்ட வகை ஊனமுற்றோருக்குக் கல்வி வழங்கும் சிறப்புப் படிப்புகளைப் பொதுக் கல்விவியல் பயிற்சிகளோடு ஒருங்கிணைத்ததன் மூலம் சிறப்பாசிரியர்கள் உருவாகும் வாய்ப்புகளையே பெருமளவில் குறைத்துள்ளதுதான் இந்தக் கல்விக்கொள்கை செய்திருக்கும் வேலை. அறிவியல் பாடத்தை தமிழாசிரியரும், கணிதப் பாடத்தை ஆங்கில ஆசிரியரும், மொழிப்ப் பாடங்களை உடற்கல்வி ஆசிரியரும் இனி இதே லாஜிக்கில் நடத்தலாம்!

சிறப்புப் பள்ளிகளைப் புறந்தள்ளும் புதிய கல்விக்கொள்கை

      பார்வையற்றோருக்கான சிறப்பு உண்டி உறைவிடப் பள்ளிகள் இந்தியாவின் ஊனமுற்றோர் உரிமைப் போராட்ட வரலாற்றில் தனித்த இடத்தைப் பெற்றவை. டெல்லி, டேராடூன் உள்ளிட்ட வட இந்தியாவின் பார்வையற்றோருக்கான சிறப்புப் பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் ஒருங்கிணைந்து 1970-களிலிருந்து உயர்கல்வி வாய்ப்புகள், பணிவாய்ப்புகள், தனிச்சட்டம் போன்ற உரிமைகளுக்காகப் போராடிய வரலாற்றை ஜக்தீஸ் சந்தர் விரிவாகப் பதிவுசெய்துள்ளார். பல்வேறு இடங்களில் பிரிந்து கிடந்த பார்வையற்றோரைச் சிறப்புப் பள்ளிகள் ஒன்றாக இணைத்ததோடு, அவர்கள் சுய அடையாளத்துடன் உரிமைகளுக்காகப் போராடவும் களமாக விளங்கின. இத்தகைய சிறப்புப் பள்ளிகளில் பயின்று அரசியல் விழிப்புணர்வு பெற்ற பார்வையற்றோர் ஏற்படுத்தியவைதான் NFB, NAB, AICB போன்ற நாடுதழுவிய பார்வையற்றோருக்கான அமைப்புகள். தமிழகத்திலும் கூட பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கம் சிறப்புப் பள்ளிகளில் பயின்றதன் மூலம் ஒருங்கிணைந்த அன்றைய மாணவர்கள் உருவாக்கியதே. மேலும், பார்வையற்றோர் சமூக இனைவுக்கும், தம்மை பார்வையற்றோர் என்று நேர்மறையாக அடையாளப்படுத்திக் கொள்ளவும்,திறன்களை உரிய பயிற்சிகளின் மூலம் வளர்க்கும் கல்வி, விளையாட்டு, வாழ்வியல் என அனைத்தையும் பெறுவதற்கும் சிறப்புப் பள்ளிகள் இன்றியமையாதவை.

      ஆனால் அரசுகளுக்கோ சிறப்புப் பள்ளிகளை உருவாக்கி நிர்வகிப்பதும், அவற்றில் சிறப்புக் கல்வி வழங்குவதும் தேவையற்ற சுமையாகப் படுகிறது.

      பன்னாட்டு அளவிலும் இதே போக்கில் சிறப்புப் பள்ளிகளை பொதுச் சமூகத்திலிருந்து ஊனமுற்றோரை விலக்கி வைத்திருக்கும் தீவிரவாத முகாம்கள் போலச் சித்தரித்து, உள்ளடங்கிய கல்வி முறை வலிந்து திணிக்கப்பட்டுவிட்டது. ஆனால் மேலை நாடுகளில் உள்ளடங்கிய கல்விக்கான கட்டமைப்புகளும், நடைமுறைகளும் உள்ளன என்பதையும், அதனை அப்படியே இந்தியாவில் செயல்படுத்த முடியாது என்பதையும் சிறிதும் கணக்கில் எடுத்துக்கொள்ளாத கல்விக்கொள்கையாக இந்தப் புதிய கல்விக்கொள்கை_2020 இருப்பதுதான் கொடுமை.

      இக்கட்டுரையின் முந்தைய பகுதியில் தெளிவுபடுத்தியதை மீண்டும் இங்கு நினைவுபடுத்திக் கொள்வது நல்லது. அதாவது, புதிய கல்விக்கொள்கை_2020, ஊனமுற்றோர் உரிமைச் சட்டம் (2016) கூறியுள்ளபடி, சிறப்புக் கல்வி பெறுவதை ஊனமுற்ற குழந்தைகளின் உரிமையாக அங்கீகரிக்கிறது. ஆனால் அத்தகைய சிறப்புக் கல்வி என்பது இக்கல்விக் கொள்கையின்படி வீட்டிலிருந்து கல்வி பயில்வதே அன்றி சிறப்புப் பள்ளிகளில் அல்ல. சிறப்புக் கல்வி குறித்துப் பேசும் இக்கல்விக்கொள்கை சிறப்புப் பள்ளிகள் குறித்து ஒரு சொல் கூட உதிர்க்கவில்லை, சிறப்புப் பள்ளிகளில் சேர்ந்து படிப்பதை உள்ளடங்கிய கல்விமுறைக்கு மாற்றான தெரிவாக இக்கல்விக்கொள்கை கருதவில்லை.

தேவை ஊனமுற்றோரை மையப்படுத்திய சிறப்புக் கல்விக்கொள்கை

      மேலும் இந்த புதியக் கல்விக்கொள்கை-2020 ஊனமுற்றோருக்கான உயர்கல்வி,ஆசிரியர் பயிற்சி,தொழில்சார் கல்வி உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து உரிய கவனம் செலுத்தவில்லை. கூடவே பிரெயில் புத்தகங்கள் கிடைக்கச்செய்வது, விளையாட்டு உள்ளிட்ட எல்லா கல்விசார் நடவடிக்கைகளிலும் ஊனமுற்ற குழந்தைகளுக்கு சமவாய்ப்பு வழங்குவது போன்ற உறுதிமொழிகளைச் செயல்படுத்தும் வழிகள் குறித்து எந்த ஒரு தெளிவான செயல்திட்டமும் வகுக்கப்படவில்லை. ஒரு கல்விக்கொள்கை செயல்திட்டங்கள் குறித்துப் பேச இடமில்லை என்ற வாதம் முன்வைக்கப்பட்டாலும்,ஹிந்தி, சமஸ்கிருத ஆகிய மொழிகளுக்கும், பாடத்திட்டங்கள் குறித்த வழிகாட்டுதல்களுக்கும் அளிக்கப்பட்ட முக்கியத்துவத்தில் சிறிதளவாவது ஊனமுற்றோர் கல்விக்கும் அளித்திருக்கலாம்.

இறுதியாக,ஊனமுற்றோர் நலன் என்பது அரசியல் அமைப்பின் மாநிலப் பட்டியலில் உள்ளது. ஆனால் ஊனமுற்றோர் கல்வி குறித்து மாநில நிலைமைகளைக் கணக்கிலேடுக்காத, மேலிருந்து நாடு முழுவதற்கும் வலிந்து திணிக்கப்படும் கல்விமுறையை எப்படி ஏற்க முடியும்?

      சமவாய்ப்பு மற்றும் சமத்துவம் (equality & equity)ஆகிய சொற்கள் இந்தக் கல்விக்கொள்கையில் அறுபது இடங்களில் பயன்படுத்தப்பட்டிருப்பதாகச் சுட்டிக்காட்டும் ஊனமுற்றோர் உரிமைச் செயல்பாட்டாளர் ஷெம்ப்பா செங்குப்தா,உறுதியான நடைமுறைசார் செயல்திட்டங்கள் இல்லாத நிலையில் இந்த வெற்றுச் சொற்களால் விளையப்போகும் பயன் குறித்து கேள்வி எழுப்புகிறார். மேலும் இக்கல்விக்கொள்கை ஊனமுற்றோர் கல்வி குறித்து பேசாமல் தவிர்த்துள்ள அம்சங்கள் பலவும் அறியாமையால் நிகழ்ந்த விடுபடுதல்கள் என்று கடந்துசென்றுவிட முடியாது, அவை வேண்டுமென்றே தவிர்க்கப்பட்ட புறக்கணிப்புகளே என்ற அவரது கருத்தும் இங்கு கவனிக்கத்தக்கது.

      ஒடுக்கப்பட்ட பிரிவினருள் கல்வியில் மிகவும் பின்தங்கிய பிரிவினராக ஊனமுற்றோரை பல்வேறு பன்னாட்டு ஆய்வுகள் அடையாளம் கண்டுள்ளன. கடந்த 2019-இல் ஐக்கிய நாடுகள் அவையின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு (UNESCO) வெளியிட்ட இந்தியாவில் ஊனமுற்ற குழந்தைகளின் கல்வி நிலை குறித்த அறிக்கையில் 75 விழுக்காடு ஊனமுற்ற குழந்தைகள் ஐந்து வயதிலும் 25 விழுக்காட்டினர் ஐந்து முதல் பத்தொன்பது வயதிலும் எந்தவிதமான கல்வியும்  பெறவில்லை என்று குறிப்பிடுகிறது. மேலும், ஊனமுற்ற குழந்தைகளின் இடைநிற்றல் விகிதம் உயர்வகுப்புகளுக்குச் செல்லச்செல்ல அதிகரித்து வருவதையும், ஊனமுற்ற பெண் குழந்தைகள் கல்வி பெறுவதில் அதிகம் பிந்தங்கியிருப்பதையும் இந்த அறிக்கை எடுத்துக்காட்டுகிறது. அதே ஆண்டில் ஜெனிவாவில் சமர்ப்பிக்கப்பட்ட ஊனமுற்றோர் உரிமைப் பிரகடன அறிக்கையும் (Alternate CRPD Report) ஊனமுற்றோருக்கான உள்ளடங்கிய கல்விக்கு எஸ்.‌எஸ்.‌ஏ திட்ட ஒதுக்கீட்டில் வெறும் இரண்டு % மட்டுமே நிதி ஒதுக்கப்படுவதையும்,கழிப்பறை வசதி பள்ளிகளில் இல்லாமல் இருப்பதையும்,22.44 % பள்ளிகள் மட்டுமே ஊனமுற்ற குழந்தைகள் பயன்படுத்தத்தக்க கழிப்பறைகளைக் கொண்டிருப்பதையும் வெளிக்கொணர்கிறது. இந்த மாற்று அறிக்கை இந்தியாவில் செயல்படும் அறுபது ஊனமுற்றோருக்கான அமைப்புகள் இணைந்து உருவாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

      ஊனமுற்றோர் கல்வியில் பிந்தங்கியிருப்பதை ஒப்புக்கொள்ளும் புதிய கல்விக்கொள்கை_2020,இந்த நிலையை மாற்றி ஊனமுற்றோரின் கல்வி முன்னேற்றத்திற்கு இன்றியமையாத அம்சங்கள் குறித்தும், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது குறித்தும் பேசவில்லை. இந்த நிலையில்,சிறப்புப் பள்ளிகளை எப்படி விரிவுபடுத்தி மேம்படுத்துவது, உள்ளடங்கிய கல்வி தொடர்பான உறுதிமொழிகளை எப்படிச் செயல்படுத்துவது, சிறப்பாசிரியர்களின் பயிற்சிகளுக்கான நடைமுறைகள் எப்படி அமையவேண்டும், உயர்கல்வி மற்றும் தொழில்முறைக் கல்வியில் என்னென்ன ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும்,திறந்தநிலை மற்றும் வயதுவந்தோர் கல்வியில் ஊனமுற்றோருக்கான வசதிகளை எப்படிக் கொண்டுசேர்ப்பது முதலானவற்றைப் பருண்மையாகவும் தெளிவாகவும் முன்வைக்கும் சிறப்புக் கல்விக்கொள்கை ஒன்று உருவாக்கப்பட்டால் மட்டுமே நமது எதிர்கால கல்வி குறித்த லட்சியங்களை நோக்கி முன்னேற முடியும், அல்லது இருக்கும் நிலைமை இன்னும் மோசமடைந்து கீழே சென்றுவிடாமலாவது தடுக்க முடியும்.

      அவ்வாறு உருவாக்கப்படும் ஊனமுற்றோர் தொடர்பான எந்தக் கல்விக்கொள்கையும் ஊனமுற்றோரின் அமைப்புகள் மற்றும் உரிமைச் செயல்பாட்டாளர்களின் முறையான பங்கேற்புடன் மட்டுமே உருவாக்கப்படவேண்டும். “நாங்கள் இல்லாமல் எங்களைக் குறித்து எதுவும் இருக்கக் கூடாது(Nothing About Us, Without Us) என்ற உலகளாவிய ஊனமுற்ற உரிமைச் செயல்பாட்டாளர்களின் முழக்கத்தை நாம் வரித்துக்கொள்ள வேண்டிய காலமிது! சிறப்புப் பள்ளிகளின் அவசியம் மற்றும் மேம்பாடு குறித்தும், உள்ளடங்கிய கல்விமுறையின் செயல்பாடு குறித்தும், பார்வையற்றோர் எதிர்கொள்ளும் கல்விசார் சவால்கள் குறித்தும் விரிவானதும் ஆழமானதுமான விவாதங்களை நாம் தொடர்ந்து எழுத்திலும், ஊடகங்களிலும் பிற தளங்களிலும் முன்னெடுக்கவேண்டும். நமது கல்வி தொடர்பான தேவைகளைப் புரிதலுடைய அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில் கொண்டுசேர்க்கும் பணியை தமிழகத்தில் பொதுத்தேர்தல் நெருங்கும் தற்போதைய சூழலில் நாம் விரைவுபடுத்தவேண்டும்.

 

கட்டுரையாளர் கள்ளக்குறிச்சியில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழக உறுப்பு கலை அறிவியல் கல்லூரியில் ஆங்கிலத்துறை உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

தொடர்புக்கு: send2kmn@gmail.com

8 கருத்துகள்:

 1. கடந்த 12 ஆண்டுகளாகப் பேச்இவரும் எனது குரல் உங்கள் எழுத்துகளில் கேட்கிறது. இன்னும் ஆழமாக அழுத்தமாக. முழங்குவோம் சார் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி சார், கண்டிப்பாக உங்களது கருத்துறைகளும் உங்களுடனான தனிப்பட்ட உரையாடல்களும் உள்ளடங்கிய கல்வியின் நிலை குறித்த பல புரிதல்களை எனக்குக் கொடுத்தன. தொடர்ந்து பேசுவோம், எழுதுவோம், இருக்கும் நிலையை மாற்றப் போராடுவோம்.

   நீக்கு
 2. மிக சிறப்பான கட்டுரை. சிறப்பு பள்ளியின் அவசியத்தை நாம் தொடர்ந்து வலியுறுத்த வேண்டும்.
  வாழ்த்துகள்் சார்.

  பதிலளிநீக்கு
 3. இதில் என்ன கொடுமை என்றாள். இந்த உள்ளடங்கிய கல்வியை தமிழகம் மிக சிரப்பாக முண்ணெடுத்து செல்கிரதாம். இதை நான் சொல்லவில்லை. மத்திய அரசுக்கு தமிழக அரசு அணுப்பி இருக்கும் தரவுகள்தான் கூறுகின்றன. மேலும் நாம் பேசி எழுதுவதோடு. நமது இலவல்களுக்காக கலத்தில் இரங்குவது மிக அவசியமான ஒன்று.
  அத்தோடு எனது சிறிய ஆலோசனை கட்டுறையாளருக்கு. அந்த நாகராஜ் பெயரை தவிர்த்திறுக்களாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கண்டிப்பாக நாம் களத்தில் செயலாற்றியே ஆகவேண்டிய காலமிது. பல்வேறு தளங்களில் நமது போராட்டங்களை நாம் முன்னெடுக்கவேண்டும்.

   எனது மாணவன் நாகராஜிடம் ஏற்கனவே பெயர் குறிப்பிடுவது பற்றிச் சொல்லியிருந்தேன். மேலும் பிரேயிலும் வெண்கொலும் பயன்படுத்தத் தெரியாதது நாகராஜின் தவறில்லை, அவை அந்த மாணவனுக்குக் கற்பிக்கப்படவே இல்லை என்பதையும் வலியுறுத்தியிருந்தேன். எனவேதான் பெயரைக் குறிப்பிட்டேன், ஆனாலும் தங்களது கருத்துக்கு நான் உடன்படுகிறேன். அடையாளத்தைச் சொல்லாமல் தவிர்த்திருக்கலாம்தான். பெயரைக் குறிப்பிடுவதை இனி தவிர்க்கிறேன். நன்றி உங்கள் கருத்துக்கு.

   நீக்கு
 4. முக்கியமான கருத்துக்கள்.புதிய புரிதல்களுக்கு ஆற்றுப்படுத்துகின்றன.

  பதிலளிநீக்கு
 5. சிறப்பு கல்வியே நம்மைபோன்ற பார்வையற்றவர்களுக்கு தன்னிறைவும், சுயச்சார்பும் அளிக்கவல்லது. அத்தகைய கல்வியினை நமது இளையவர்களும் பெற்றிட வேண்டும். கட்டுரை தொகுப்பு மிக சிறப்பாக உள்ளது ஐயா.

  பதிலளிநீக்கு