அது பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் தொடக்க காலம் என நினைக்கிறேன். அந்தச் சமயத்தில்தான், இந்திய ரிசர்வ் வங்கி புத்தம்புதிய 1 ரூபாய், 2 ரூபாய், 5 ரூபாய் நாணயங்களை வெளியிட்டிருந்தது. அந்த நாணயங்கள் பெரும்பாலும் ஒரே அளவாக இருக்கிறது என்றும், இவற்றை பழைய நாணயங்கள் போல் பார்வையற்றவர்களால் எளிதில் அடையாளம் காண முடியவில்லை எனவும், பார்வையற்றோர்கள் தங்கள் அன்றாட வாழ்வில் புதிய நாணயங்களை அடையாளம் காணுதலில் இருக்கும் சிக்கல்கள் குறித்து புதிய தலைமுறை தொலைக்காட்சியில் செய்தித் தொகுப்பு ஒன்று ஒளிபரப்பானது.
அத்தொகுப்பில், சில பார்வையற்றவர்களிடம் புதிய நாணயங்களைக் கொடுத்து அதன் மதிப்பை அடையாளம் காணச்சொன்னார்கள். ஆனால், பார்வையற்றவர் எவராலும் அந்த புதிய நாணயங்களின் மதிப்பைச் சரியாக அடையாளம் காண இயலவில்லை. குறிப்பாக 5ரூபாயை 50 பைசா என்றும், 50 பைசாவை 5 ரூபாய் என்றும், 2 ரூபாயை 1 ரூபாய் என்றும் 1 ரூபாயை 2 ரூபாய் எனவும் அந்த புதிய நாணயங்களின் மதிப்பை மாற்றிமாற்றி பிதற்றிக் கொண்டிருந்தார்கள் பார்வையற்றவர்கள்.
|
அன்றைய நிலையில், புதிய நாணயங்களை அடையாளம் காணுதலில் பார்வையற்றவர்களுக்கு இருக்கும் சிக்கல்களைச் சமூகத்திற்குப் பட்டவர்த்தனமாக வெளிச்சம் போட்டுக் காட்டி இருந்தது புதிய தலைமுறையின் அந்தச் செய்தித் தொகுப்பு.
அதற்குப் பின்னரும் பார்வையற்றவர்கள் தரப்பில் இருந்து என்னதான் புகார்கள், கோரிக்கைகள், எனக் கடிதங்கள் பறந்தாலும் இன்னமும் கூட ரிசர்வ் வங்கி அந்த நாணயங்களைச் சீர் செய்து வெளியிட்ட பாடில்லை. இன்றும் கூட பார்வையற்றவர்கள் இந்த நாணயங்களைக் கையாள்வதில் பெரிய அளவில் சிக்கல்களை எதிர் கொண்டுதான் வருகிறார்கள். நானெல்லாம் இன்னமும் இந்தப் புதிய நாணயங்களைக் கண்டறிய யாரையாவது கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டிய நிலையில்தான் இருக்கிறேன்.
இப்போது எதற்கு இந்தப் பொழிப்புறை என்றுதானே கேட்கிறீர்கள்? விஷயம் இருக்கிறது. வாருங்கள் காலச்சக்கரத்தில் பயனித்து 2017 பிப்ரவரி மாதத்தின் இறுதி வாரத்திற்குள் சென்று, பூவி்ருந்தவல்லி பார்வையற்றோருக்கான தேசிய மண்டல மையத்தின் (NIVH) சிறப்பு கல்வியியல் கல்லூரியின் இரண்டாம் ஆண்டு வகுப்பறைக்குள் செல்வோம். விஷயம் என்னவெனில், அந்த பிப்ரவரி இறுதி வாரத்தில் சில அயல் தேச நாணயங்களின் வடிவமைப்புகளையும், அத்தேசங்களின் கரன்சி நோட்டுகளின் அமைப்பு முறைகளையும், இந்தியாவில் சுதந்திரத்திற்குப் பின்னர் புழங்கிய சில அறிய நாணயங்களின் வடிவமைப்புகளையும் தொட்டுணர்ந்து பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது.
அந்த அயல் தேச நாணயங்களை எங்களுக்கு வகுப்பெடுத்த கீதா ஆசிரியை அவர்கள் கொண்டுவந்து காண்பித்தார். அந்த நாணயங்கள் அவருடைய மகன் சிறு வயதிலிருந்தே சிறுகச் சிறுகச் சேமித்தவை என்றும், இன்னுமும் இது போன்ற அறிய நாணயங்கள் சேகரிக்கும் பழக்கத்தை எங்கு சென்றாலும் தொடர்வதாகவும் தன் மகனைப் பற்றி மிகவும் பூரிப்புடன் சொன்னார்.
“இன்றைக்கி நீங்களும் இந்த அயல் தேச நாணயங்களின் வடிவமைப்பைத் தொட்டுணர்ந்து அறிந்து கொள்ளவே இவற்றை நான் இங்கு கொண்டுவந்திருக்கிறேன்” எனக் கூறிவிட்டு ஒவ்வரு நாட்டு நாணயங்களாக எங்கள் கைகளில் தவழவிட்டார். அந்த ஆசிரியைக்குப் பக்கபலமாக நின்று எங்கள் வகுப்பின் பார்வை உள்ள மாணவிகளும் அந்த அயல் தேச நாணயங்களின் மதிப்பை வாசித்துக் காண்பித்து எங்கள் கைகளில் கொடுத்தார்கள்.
அந்த நாணயங்களை ஒவ்வொன்றாகத் தொட்டுப்பார்க்கையில் எனக்கு இந்திய ரிசர்வ் வங்கியின் மீது கோபம் கோபமாகத்தான் பொத்துக் கொண்டு வந்தது. ஒவ்வரு அயல் தேச நாணயங்களும் தடிப்புகளிலும் (Embossed), அளவுகளிலும் எவ்வளவோ வித்தியாசங்கள். அயல் தேசங்களுக்கு இங்குள்ள பார்வையற்றவர்கள் ஒரு வேளை சென்று வாழ நேரிட்டால் காசு விஷயத்தில் ஓரளவுக்குப் பிழைத்துக்கொள்வார்கள். அவ்வளவு நாணயங்களையும் படு நேர்த்தியாக வடிவமைத்திருக்கிறார்கள். குறிப்பாக சில நாட்டு நாணயங்களின் சிறப்புகளை நான் இங்கே கண்டிப்பாகச் சொல்லி ஆக வேண்டும்.
அமெரிக்கா.
இங்கேதான் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்றவாறு எல்லா கண்டுபிடிப்புகளும் அமைய வேண்டும், அவர்களுக்கு எல்லாவிதத்திலும் சம உரிமை அளிக்கப் பட வேண்டும் என அந்நாட்டு அரசாங்கம் சட்டமே இயற்றியிருக்கிறது. அச்சட்டங்களுக்கு ஏற்றவாறுதான் பார்வையற்றவர்களுக்கும் வசதிகள் செய்து தரப்பட்டிருக்கின்றன. அந்தச் சட்டம் நாணய விஷயத்திலும் மிகச்சரியாகவே பிரதிபலித்திருக்கிறது.
|
அவர்களது டாலரில் உள்ள எண்கள், அந்த நாட்டு அதிபரின் உருவம், இன்னும் பல இத்யாதி இத்யாதிகள் என எல்லாவற்றையும் மிக தெளிவான பரிமானத்தில் தொட்டுணர முடிந்தது. அவர்களது ஒவ்வரு டாலரும் அளவில் வித்தியாசப்படுகிறது, எடையில் வித்தியாசப்படுகிறது, அவ்வளவு ஏன் அந்த டாலர்களின் மேலுள்ள தடிப்புகளைக் கூட மிக மிகத் தெளிவாக வேறுபடுத்திக் காட்டியிருக்கிறார்கள். அந்த டாலர்களைத் தொட்டுணருகையில் அந்நாட்டுப் பார்வையற்றவர்கள் அடைந்திடும் மகிழ்ச்சியை நான் என்னுள் உனர்ந்தேன்.
இதனால்தானோ என்னவோ, அமெரிக்காவால் பார்வையற்றவர்களுக்கு அளிக்கப்படும் எளிதில் அணுகத்தக்க ஒத்திசைவு முறை (Accessibility Arrangement) வசதிகளை இந்தியா போன்ற நாடுகளால் ஒப்புக்குக்கூட நடைமுறைப்படுத்த முடியவில்லை போலும். “வெல்டன் அமரிக்கா!”
இங்கிலாந்து
இங்கே வாழும் பார்வையற்றவர்கள் குறித்தெல்லாம் எனக்கு அவ்வளவாகத் தெரியாது. ஆனால், இந்த நாட்டு நாணயங்களும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருந்தது என்றுதான் சொல்லவேண்டும்.
|
அவர்களது பவுண்டில் இருந்த எலிசபெத் மகாரானியின் உருவம், அந்த பவுண்டின் மதிப்புகள் என அந்த நாணயத்தில் இருந்த அனைத்து விஷயங்களும் மிகத்தெளிவாகவே பொறிக்கப்பட்டிருந்தன. அதனையும் என்னால் சட்டென தொட்டுணர்ந்து புரிந்து கொள்ள முடிந்தது. அதிலும் குறிப்பாக இங்கே ஒன்றைச் சொல்லவேண்டும். ஏதோ ஒரு நாணயம் கிட்டத்தட்ட நம்மூர் 5 ரூபாய் நாணயம் போலவே இருந்தது. அதன் மதிப்பு எத்தனை பவுண்ட் என்றுதான் எனக்குச் சரியாக நினைவில் இல்லை.
இங்கிலாந்து நாணயங்களைப் பற்றி பார்வையற்றவர்கள் விஷயத்தில் ஒரே வார்த்தையில் சொல்லவேண்டுமானால், ‘இந்திய நாணயங்களைவிட இங்கிலாந்து நாணயங்கள் தரத்தில் ஒசத்திதான்’ மக்களே!
சீனா
பொதுவாக இந்த நாட்டின் பெயரைக் கேட்டதுமே நமக்கெல்லாம் சட்டென நினைவில் ஊசல் ஆடுவது, இங்குள்ள பொருள்கள் சிறியதாகவோ, பெரியதாகவோ இருந்தாலும் அது என்றைக்குமே யூஸ்லஸ்; ஆனால் அவற்றின் பயன்பாடுகள் மட்டும் அதிகம் என்பதுதான். அதே போலவே நாணய விஷயத்திலும் நினைத்துவிடாதிர்கள் என்றுதான் சொல்கிறேன்.
ஏனெனில், நாணயங்கள் பெரும்பாலும் அளவில் சிறியதாக இருந்தபோதிலும், அதன் மதிப்புகளையும் கூட நன்றாகவே என்னால் தொட்டுணர முடிந்தது. குறிப்பாக, சில நாணயங்கள் நம் நாட்டுப் பழைய 5 பைசா, 10 பைசா போலவே வடிவமைக்கப்பட்டிருந்தாலும், அதன் தடிப்புகளைக்கூட நன்றாகவே தொட்டுணர முடிந்தது.
சீன நாணயங்கள் குறித்து ஒரே வார்த்தையில் சொல்லவேண்டுமானால், ‘கடுகு சிறுத்தாலும் காரம் குறையல’ மக்களே!
இதர நாட்டு நாணயங்களும், இந்தியாவின் பழைய நாணயங்களும்!
நான் மேலே விவரித்த அந்த 3 நாட்டு நாணயங்களைத் தவிர, இன்னும் சில நாட்டு நாணயங்களையும் காண்பித்தார்கள். அவற்றில் நாணயங்களின் நேர்த்தியைக் குறிப்பிட்டுச்சொல்ல வேண்டுமானால் ஓரிரு நாடுகளைச்சொல்லலாம்.
முக்கியமாக, பஹ்ரேன், யுரோப், ஜப்பான், கொரியா, ஜெர்மனி, இலங்கை போன்ற நாட்டு நாணயங்களின் வேறுபாட்டைப் பார்வையற்றவர்களால் ஓரளவுக்கு எளிதில் கண்டு பிடிக்க முடியும் என நான் அந்த நாணயங்களைத் தொட்டுணர்ந்த அனுபவத்தை வைத்துச்சொல்கிறேன்.
அதிலும் குறிப்பாக, இலங்கை நாட்டு நாணயங்களின் மீது ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் என தமிழில் எழுத்துகள் பொறிக்கப் பட்டிருந்ததாக எங்கள் வகுப்பின் பார்வையுள்ள மாணவிகள் சொன்னார்கள். இன்னுமும் அந்த நாணயங்கள் அங்கே நடைமுறையில் இருப்பதாக எனது ஈழத்து நண்பர் அருன்தர்சன் அண்ணாவும் சொன்னார். உள்ளது உள்ளபடியே தமிழன் என்ற முறையில் நானும் இலங்கைக்கு ஒரு சலியூட் அடித்துக்கொள்கிறேன்.
|
இந்தியாவில் சுதந்திரத்திற்குப் பின்னர் புழங்கிய நாணயங்கள் குறித்துச்சொல்வது இவ்விடத்தில் மிகவும் அவசியமாகிறது.
|
மெய்யாலுமே இந்தியாவின் பழைய நாணயங்கள் மிகவும் சிறப்பாகவே வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. நாணயங்களுக்கு நாணயம் அளவில் வேறுபாடு, எடையில் வேறுபாடு, அவ்வளவு ஏன் நாணயங்களின் தடிப்புகளை கூட மிகத் தெளிவாக வேறுபடுத்திக் காட்டியிருக்கிறது அப்போதைய இந்திய ரிசர்வ் வங்கி. இப்பொது இந்த ரிசர்வ் வங்கி நானையங்களின் விஷயத்தில் நானையமாக நடந்துகொள்வதில் என்ன சிக்கல் என்றுதான் தெரியவில்லை.
1990-களுக்கு முன்பெல்லாம் அந்தந்த கால கட்டத்தில் நாணயங்களில் தலைவர்களது உருவங்களை அடிக்கடி மாற்றி இருக்கிறார்கள் என்பது மட்டும் அந்த நாணயங்களை அவதானிக்கையில் அப்பட்டமாகத் தெரிந்தது. நான் பார்த்து வியந்த நாணயம் என்றால் அது இந்திராகாந்தி காலத்து 5 ரூபாய் நாணயம்தான். இன்றுவரை ரிசர்வ் வங்கி வெளியிட்ட நாணயங்களிலேயே மிகப் பெரியதும், தடிப்புகள் அதிகம் உள்ளதுமான நாணயம் இந்த 5 ரூபாயாகத்தான் இருக்குமென நினைக்கிறேன். அந்த அளவுக்கு மிகச் சிறப்பாக இந்த 5 ரூபாய் நாணயம் வடிவமைக்கப்பட்டிருந்தது.
|
இன்னும் சில பழைய இந்திய நாணயங்களையும் காண்பித்தார்கள். அக்காலத்தில் புழங்கிய காலனா, அரையனா, 1 பைசா, 5 பைசா, 10 பைசா, 20 பைசா என அவர்கள் காண்பித்த அறிய நாணயங்களைத் தொட்டுணருகையில் அந்தந்தக் காலகட்டத்தில் நிகழ்ந்த நாணயங்கள் மீதான வெவ்வேறு பரினாம வளர்ச்சிகளை என் கைகளால் உணர முடிந்தது.
அரையனா, காலனா |
இந்த அரையனா, காலனாவெல்லாம் நம் மூத்தோர்கள் அரைஞான் கயிற்றில் சொருகி வைத்திருந்தார்கள் என்பதையே இந்த நாணயங்களின் நடுவில் இருந்த ஓட்டையைத் தொட்டுணர்ந்த பிறகுதான் நான் முழுமையாக நம்பினேன். இதற்கு முன்னரெல்லாம் ஏதோ கதை விடுகிறார்கள் என்ற ரீதியில்தான் இந்த அரையனா சங்கதியைக் கடந்துபோயிருக்கிறேன்.
அயல் தேசங்களிலும் தரமில்லாத கரன்சி நோட்டுகள்!
நாணயங்களை முழுமையாகக் காண்பித்த பின்பு, சில அயல் தேசக் கரன்சி நோட்டுகளையும் தொட்டுணரக் கொடுத்தார்கள். உண்மையைச் சொல்ல வேண்டுமானால், அதில் எனக்கு எந்த ஒரு நாட்டு நோட்டும் சரியாகவே பிடிபடவில்லை.
நான் பார்த்த அனைத்து நாட்டு நோட்டுகளிலும் தடிப்புகள் என்பது மிக மிக நுனுக்கமாகத்தான் காணப்பட்டன. ஒத்திசைவுக்கு அதிகம் உழைக்கும் அமெரிக்காவின் டாலர் நோட்டுகள் கூட நம் நாட்டு 500 ரூபாய் தாள்களின் தரத்தைத்தான் ஒத்திருந்ததென்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். இதை வைத்தே மற்ற நாடுகளின் நோட்டுகளின் தரங்களை நீங்களே யூகித்துக்கொள்ளுங்கள். ஒரு வேளை, அவரவர் தேசங்களில் அவர்கள் நாட்டு நோட்டுகளைப் பார்வையற்றவர்கள் கண்டறிய ஏதேனும் சிறப்புப் பயிற்சிகளோ, வசதிகளோ செய்து வைத்திருக்கிறார்களா என்பதும் எனக்குத் தெரியவில்லை.
இந்த நாணயங்களின் அளவுகளையும், தடிப்புகளையும் குறைத்து வெளியிடுவதால் இந்திய அரசுக்கு என்ன இலாபம் கிடைக்கப் போகிறதோ? யார் கண்டது? என்னதான் நம் இந்திய அரசு புதிதுபுதிதாக நாணயங்களையும், நோட்டுகளையும் அச்சடித்துப் புழக்கத்தில் விட்டாலும் அந்த பணப் பரிவர்த்தனையில் பார்வையற்றவர்களுக்கு இருக்கும் இடையூறுகளை இவர்கள் துளியும் கண்டு கொள்ளப் போவதில்லை என்றுதான் இப்போதைக்கு சொல்லத் தோன்றுகிறது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் கரன்சி நோட்டுகளைக் கண்டறிய நம் ரிசவ் வங்கி பார்வையற்றவர்களுக்கெனவே ப்ரத்தியேக செயலி ஒன்றைக் கொண்டுவந்திருக்கிறார்கள். இச்செயலி மூலமாக பணத் தாள்களை மட்டுமே அடையாளம் காணமுடிகிறது. இதன் மூலம் பார்வையற்றவர்கள் தாள்களை மாத்திரம் அடையாளம் கண்டு கொள்ளட்டும் என்பதுதான் ரிசர்வ் வங்கியின் நிலைப்பாடா என்றுதான் தெரியவில்லை. ஆனாலும், பண மதிப்பைக் கண்டறிய தொழில்நுட்பம் என்றுமே மாற்றாகாது என்பதை ரிசர்வ் வங்கி உணர வேண்டும். இன்னுமும் அந்த 5 ரூபாய், 2 ரூபாய், 1 ரூபாய் நாணயங்கள் அதே பழைய தரத்துடன் மீண்டும் வெளி வராதா? என்ற ஏக்கத்துடனே புதிய நாணயங்களை ரிசர்வ் வங்கியை நோக்கி பூவா தலையா போட்டு கேட்டுக்கொண்டபடி காத்திருக்கிறார்கள் பார்வையற்றவர்கள்.
தொடர்புக்கு: kumaravel.p95@gmail.com
காலத்தேவைக்கு ஏற்ற கட்டுரை. டிஜிட்டல் இந்தியா பிறந்ததும் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இதே நவம்பரில்தானே.
பதிலளிநீக்குநாணயமா இல்லாதவங்கே கிட்ட நாணயத்தை பத்தி பேசி என்ன பயன் தம்பி!
பதிலளிநீக்குநான் படிக்கும் பொன் குமாரவேலின் முதல் கட்டுரை இதுதான். நல்ல எழுத்து நடை, அண்ணனுக்குத் தம்பி தப்பாம போறந்திருக்கிங்க! அந்த MANI செயலி நடைமுறையில் பயனற்றது என்பதுதான் உண்மை. மேலும் அதில் ஆங்கிலம் ஹிந்தியில் மட்டுமே அறிவுப்புகள் வரும் என்பது நம்மைப் போன்ற "ஹிந்தி தெரியாது போடா" குறுப்புக்கெல்லாம் கூடுதல் கடுப்பைத்தான் ஏற்படுத்துகிறது. கடையில் போய் நின்றுகொண்டு பார்வையற்றோர் திரன்பேசியை எடுத்து கரன்சி நோட்டின் மதிப்பைப் பார்த்தாள் கடையே நம்மைப் பார்க்கும்! திரன்பேசி இல்லாத பார்வையற்றோர் இந்தியக் கரன்சி நோட்டைப் பயன்படுத்த வேண்டாம் போலும்!
பதிலளிநீக்கு