அமைப்புகள் அறிவோம்: நனவான கனவு! ஐந்தாம் ஆண்டில் வாசக சாலை! - P. ராமானுஜம்

 

graphic நல்ல நூல் படிக்கும் வழக்கம் வெற்றிக்கு வழி வகுக்கும்  என்ற வாசகம் அமைந்த படம்
 

       கண்ணால் உலகைக் காணார் இன்று அறிவால் உலகைக் காண்கின்றனர். அதற்கு அடிப்படையாக அமைந்திருப்பது கல்வி. இத்தகைய சிறப்புமிகு கல்விக் கண்ணைப் பெறுவதற்கு எத்தனை எத்தனை தடைகள். அத்தனையும் தடந்தோல் கொண்டு தகர்த்து இன்று ஆராய்ச்சியாளர்களாக, கவிஞர்களாக, ஆசிரியர்களாக, பேராசிரியர்களாக இன்னும் பல்துறை பணியாளர்களாக தங்களை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

      உதவும் உள்ளங்களைத் தேடி நாடிச் சென்று படித்து அறிந்துகொள்ள வேண்டியவற்றை அறிந்து கொண்டார்கள். அங்கும் தடை, அது என்னவெனில் நினைக்கும் எல்லா நுல்களையும் எல்லோரும் தயக்கமின்றி படித்துக் காட்டுவார்களா? இல்லை இல்லை. இதனால் அனலை ஏக்கப் பெருமூச்சு மூலம் வெளியேற்றிய அவர்கள், மெல்லிய சுகந்தம் தரும் இனிய குளிர் காற்றை உள்ளித்து உவகை எய்த காத்திருந்தார்கள். இதுதான் அடுத்த நிலைக்கு அவர்களை உந்திற்று.

      இதன் விளைவாக நடைபெற்ற கருத்துப் பறிமாற்றங்கள், கலந்துரையாடல்கள் ஒரு அமைப்பை அல்லது தளத்தைத் தோற்றுவிக்க வேண்டும் என்ற எண்ணம் சிலரை அடையாளபடுத்திற்று. அவர்கள் தான் இன்று வாசகசாலையின் நிர்வாகிகளாக உலா வரும் திரு. மு. தமீம் அன்சாரி, திரு. மு. பாண்டியன், திரு. இர. முத்து போன்றோர் ஆவர்.

graphic திரு. மு. பாண்டியன் அவர்களின் படம்
திரு. மு. பாண்டியன்

      60 மற்றும் 70 களில் படிப்பு என்பது பெரும்பாலோர்க்கு எட்டா கனியாகவே இருந்தது. தளராத ஊக்கத்தால் தொடர்ந்து தனி நபர்களும் அமைப்புகளும் மேற்கொண்ட முயற்சிகளால் கல்வி பெறும் வாய்ப்பு கிடைக்கப்பெற்றது. முழுமையாக பிறரை நம்பி இருத்தல் என்ற நிலை மாற உருவாகி இருக்கின்ற தொழில்நுட்பங்கள் பெரும் துணை புரிந்திருக்கின்றன. கல்வி கற்பதில் இந்தத் தொழில்நுட்பம் தான் வாசகசாலை என்கிற ஒரு அமைப்பு தோன்ற வழிவகை செய்திருக்கிறது. அதுதான் பல்துறை புத்தகங்களை வேண்டுவோர்க்கு தந்து கற்போர்க்கும், கற்ப்பிப்போர்க்கும்  அறிவுத்தாகம் எடுப்போர்க்கும் அரும்பணி ஆற்றிவருகிறது.

graphic திரு. மு. தமீம் அன்சாரி அவர்களின் படம்
திரு. மு. தமீம் அன்சாரி

      பல நூற்றுக்கணக்கான நாவல்கள், கட்டுரைகள், அறிவியல் நூல்கள், சமய நூல்கள், ஆகியவற்றையும் வாசகசாலை தன்னகத்தே கொண்டிருக்கிறது. போட்டித் தேர்வுகளுக்கு எண்ணற்ற புத்தகங்கள் கொட்டிக் கிடக்கின்றன.

      படைப்பாளிகளுக்கு உறுதுணையாய் உற்ற நண்பனாய் திகழ்கிறது வாசக சாலை.  எண்ணற்ற படைப்பாளர்களையும், எழுத்தாளர்களையும், கவிஞர்களையும்  இவ்வமைப்பு தன்னகத்தே கொண்டிருக்கிறது. சிலைகளைச் செதுக்கும் சிற்பியைப் போல் படைப்பாளர்களை வாசகசாலை செதுக்குகிறது என்றால் மிகையல்ல.

graphic திரு. இர. முத்து அவர்களின் படம்
திரு. இர. முத்து

       எதிர்காலக் கனவுகள் என்று நிரம்பவே இவ்வமைப்பு வைத்திருக்கிறது! குறிப்பாக ஏழை எளிய அகப் பார்வை மாணவர்களுக்கும் அனைத்து வகையான புத்தகங்களும் சென்று சேரவேண்டும். அவர் தம் அறிவு தாகத்தை நீக்கிட வேண்டும், அந்த வகையில் பள்ளிகள் இல்லாத இடத்தில் கூட வாசகசாலை தனது கால் தடத்தைப் பதிக்க வேண்டும் என்பது தான் தலையாய இலட்சியமாக இதற்கு உண்டு. அதை மனதில் கொண்டு இந்த அமைப்பு முழுமூச்சோடு செயல்பட்டு இன்னும் பல வியத்தகு சாதனைகள் புரியத் தயாராக இருக்கிறது. பயன்படுத்திக் கொள்வதற்கு அனைத்துத் தரப்பிலிருந்தும் தயாராக இருப்போம் என உறுதி ஏற்போம்.

       09.11.2016 ம் ஆண்டு வாசகசாலை உருவாயிற்று. இன்று வியத்தகு வளர்ச்சி பெற்றிருக்கிறது. அது தனது ஐந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைத்திருக்கிறது. எட்டாக்கனியாக இருந்த கல்வியை எட்டும் கனியாக, கைகளில் கிட்டும் கனியாக மாற்றி இருப்பதில் இந்த அமைப்பின் பணியினை எவரும் குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது. குருகிய காலத்தில் விருட்சம் போல்  வளர்ந்து தமிழகம் முழுவதும் கிளை பரப்பி நிழல்  தந்து நிற்கிறது.      தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எப்படி நாம் விரும்பும் புத்தகங்களை விரும்பும் வடிவத்திற்கு உருமாற்றம் செய்துகொள்வது, கூகுள் எழுத்துணரியை எப்படி பயன்படுத்துவது, இன்னும் தொழில்நுட்பத்தின் கூறுகளை எவ்வழியில் நமக்கு ஏற்ற வகையில் உருவாக்கிப் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்பதை ஆய்ந்து தெரிந்துகொள்வதர்க்காக பயிலரங்கு ஒன்று சென்னை மாநிலக் கல்லுரியில் வாசகசாலை நிர்வாகிகளால் ஏற்பாடு செய்யப்பட்டு வெற்றிகரமாக 05.10.2019 அன்று நடைபெற்றது. இதில் தொழில்நுட்ப வல்லுநர்கள் கலந்துகொண்டு தேவைப்படும் விளக்கங்களை அளித்தனர். அன்று நூற்றுக்கணக்கான மக்கள் குழுமினர்; தங்கள் அறிவைப் பெருக்கினர்! இன்று வாசகசாலை டெலகிராமிலும் கால்தடம் பதித்திருக்கிறது. பயன்பெற விரும்புவோரை வாருங்கள்! வாருங்கள்! என நெஞ்சார்ந்து அழைக்கிறது; பயனைத் தரத் துடிக்கிறது. புதிய சமுதாயம் அமைப்பதில் உலகைக் காணாரையும் உலகோர் காணும் வகையில் செயல்திறன் மிக்கவர்களாக ஆக்கிக்கொள்வதில் ஒருங்கிணைந்து செயல்படுவோம் வாரிர்!

      வாசகசாலையில் இணைய விரும்புகிறீர்களா;? நீங்கள் தொடர்புகொள்ள vaasagasaalai2016@gmail.com

 

(கட்டுரையாளர் ஓய்வுபெற்ற வரலாற்று ஆசிரியர். மதுரையில் வசித்துவருகிறார்).

தொடர்புக்கு: vagra@gmail.com

2 கருத்துகள்: