அரசியலில் நாம்-14: பார்வையற்ற முற்போக்குச் சிந்தனையாளர் பேரவை - ரா. பாலகணேசன்

வணக்கம் வாசகர்களே!

      சென்ற இதழில் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கான சிந்தனை அமைப்பாகத் திகழ்ந்துவரும் பார்வையற்ற முற்போக்குச் சிந்தனையாளர் பேரவை பற்றி அறிந்துகொண்டோம்.

முந்தய பகுதியைப் படிக்க 

இந்த இணைப்பைச் சொடுக்குங்கள்.

 இந்த இதழில் இப்பேரவையின் நிர்வாகக் குழுவினரான முனைவர் கு. முருகானந்தன், முனைவர் . பூபதி, முனைவர் U. மகேந்திரன், G. கார்த்திக் ஆகியோரோடு நடத்தப்பட்ட உரையாடலைச் சுருக்கமாக அறிந்துகொள்வோம்; இவர்களது அரசியல் பார்வையைத் தெரிந்துகொள்வோம்.

நான்: அது என்ன பேரவை (forum)? சங்கம், கழகம் முதலிய சொற்களிலிருந்து அது எப்படி மாறுபடுகிறது?

graphic முனைவர் கு. முருகானந்தன் அவர்களின் படம்
முனைவர் கு. முருகானந்தன்

முருகானந்தன்: பேரவை என்பது சிந்தனையாளர் அமைப்பு. சங்கத்திலிருந்து சற்று வேறுபட்டது. ஆனாலும், பேரவையைப் பதிவுசெய்யும்போது, அதற்கு சங்கம் மாதிரியான கட்டமைப்புகள் தேவை.

நான்: பார்வைக் குறையுடையோரைப் பற்றி மட்டுமே சிந்திக்கவேண்டும் என்று ஓர் அமைப்பைத் தொடங்கியிருக்கிறீர்கள். இத்தகைய அமைப்பு இந்திய அளவில் வேறெங்கும் இருக்கிறதா?

பூபதி: எனக்குத் தெரிந்தவரையில் எதுவும் இல்லை. பொதுவாக மாற்றுத்திறனாளிகளுக்கு என்று பார்த்தால், national platform for the rights of disabilities (NPERD) என்ற அமைப்பு மாற்றுத்திறனாளிகளுக்கான சிந்தனையைத் தொடர்ந்து முன்வைத்துவருகிறது. 

நான்: அந்த அமைப்பில் நம்மவர்களின் பங்களிப்பு இருக்கிறதா?

முருகானந்தன்: அவர்கள் பார்வைக் குறையுடையோரைப் பற்றியும் பேசுகின்றனர். ஆனால், அதில் பார்வைக் குறையுடையோரின் பங்களிப்பு இருக்கிறதா என்பது குறித்துத் தெரியவில்லை.

நான்: உங்கள் பார்வையில் ஊனமுற்றோர் இயல் (disability studies) குறித்த அறிவை வளர்த்துக்கொண்டவர்கள்தான் முற்போக்காளர்கள் என்கிறீர்களா? அல்லது இது வழக்கமாகப் பயன்படுத்தப்படும் அரசியல் சொல்லாடலா?

பூபதி: ‘முற்போக்குஎன்ற சொல்லாடலே பொதுவுடைமைச் சிந்தனையைச் சார்ந்தது. எங்களைப் பொறுத்தவரை பெரியாரியம், அம்பேத்கரியம், மாக்ஸியம் ஆகியவற்றோடு ஊனமுற்றோர் இயல் குறித்த தெளிவும் பெறுவதுதான் முற்போக்குச் சிந்தனை.

மகேந்திரன்: மற்ற மாற்றுத்திறனாளிகளோடு இணைந்து பணி செய்யும் சாத்தியங்களை உருவாக்குவதும் இந்தச் சொல்லாடலுக்குள் இருக்கிறது.

முருகானந்தன்: முற்போக்கு இயக்கங்களுக்கும், நமக்கான இயக்கங்களுக்குமிடையிலான பாலமாகத் திகழ விரும்புகிறோம். நாம் பொது விவகாரங்கள் குறித்துப் பேசுவதும், முற்போக்கு அமைப்புகள் நம்மைப் பற்றி பேசுவதும் முக்கியம் என்று நினைக்கிறேன். 

நான்: ‘முற்போக்குச் சிந்தனையாளர்என்ற தொடரைப் பயன்படுத்தும் போது நீங்கள் திராவிட இயக்க ஆதரவாளர் என்று தமிழகத்தில் அறியப்பட வாய்ப்புகள் அதிகம். அது போலவே, அகில இந்திய அளவில் கம்யூனிஸ்டாக அல்லது ஆர்.எஸ்.எஸ் எதிர்ப்பாளராக அறியப்படுவீர்கள். இந்த அடையாளங்கள் உங்கள் மீது சுமத்தப்பட்ட அனுபவம் இருக்கிறதா?

முருகானந்தன்: அப்படி எதுவும் இல்லை. தமிழகத்தில் பெரியாரைக் கொண்டு சேர்ப்பதில் எங்களுக்கு எந்தத் தடையும் இல்லை; வேறு அடையாளம் எதுவும் தரப்படவில்லை. தேசிய அளவில் நாங்கள் இன்னும் காத்திறமாகப் பணியாற்றவில்லை என்றே நினைக்கிறேன்.

அதே நேரம், ஒரு சிலர்  முற்போக்குச் சிந்தனையாளர்என்று பெயர் இருப்பதால் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் மட்டும்தான் இந்த அமைப்பில் சேரமுடியுமா என்று கேட்டிருக்கிறார்கள். அப்படியெல்லாம் இல்லை என்று நாங்கள் தெளிவுபடுத்தி இருக்கிறோம்.

நான்: மத இயக்கங்கள் பார்வைக் குறையுடையோரை அணுகும் அளவிற்கு முற்போக்கு இயக்கங்கள் நம்மை நெருங்குவதில்லை என்று ஒரு குற்றச்சாட்டு இருக்கிறதே!

graphic பேரா. பூபதி அவர்களின் படம்
பேரா. பூபதி

பூபதி: அப்படியெல்லாம் சொல்லிவிடமுடியாது. 2015-இல் பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் & பட்டதாரிகள் சங்கம் (CSGAB) நடத்திய போராட்டத்திற்கு பல முற்போக்கு இயக்கங்கள் ஆதரவளித்தன. குறிப்பாக, விரல்மொழியர் கலைஞர் சிறப்பிதழ் நூலாக வெளியிடப்பட்டபோது, பேராசிரியர் சுப. வீரபாண்டியன் அவர்கள், “உங்களை நாங்கள் இன்னும் நிறைய புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. உங்களைப் பற்றிய அறியாமை எங்களிடம் உள்ளதுஎன்று கூறியிருந்தார்.

Graphic சுப. வீரபாண்டியன் அவர்களின் படம்
 

நம்மவர்களும் முற்போக்கு இயக்கங்களில் களமாடுபவர்களாக மிகச் சிலர்தான் இருக்கிறார்கள். S.S. கண்ணன் என்ற கம்யூனிஸ்ட் தானே CSGAB என்ற தமிழகத்தின் வலிமையான அமைப்பை உருவாக்கி வளர்த்தெடுத்தார். அதோடு, தமிழகத்தில் இருக்கும் முற்போக்காளர்களால்தானே நாம் வளர்ச்சி அடைந்திருக்கிறோம். இந்தியாவிலேயே தமிழகம் தவிர வேறு எந்த மாநிலத்திலும் ஊனமுற்றோருக்கான இட ஒதுக்கீடு சமூகநீதி அடிப்படையில் வழங்கப்படுவதில்லையே! ஊனமுற்றோர் இயலின் துணை கொண்டு பார்க்கும்போது இதில் சில சிக்கல்கள் இருந்தாலும், இது முக்கியமான முற்போக்குச் சிந்தனைதான்.

 

முருகானந்தன்: முற்போக்கு இயக்கங்கள் நம்மிடையே நேரடியாகத் தாக்கம் செலுத்தவில்லை என்றாலும், மறைமுகமாக மிகப்பெரிய உந்துதலை ஏற்படுத்தியிருக்கின்றன. தமிழகத்தின் வளர்ச்சிக்கு முக்கியக் காரணமே நம்மை ஆண்ட ஆட்சியாளர்கள்அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிஎன்பதில் கவனமாய் இருந்ததுதான். அந்த வகையில் நாம் பிற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் நல்ல வளர்ச்சியடைந்திருக்கிறோம் என்றே சொல்லவேண்டும். நம்முடைய பொருளாதார வளர்ச்சியில் ஆட்சியில் இருந்த, இருக்கும் திராவிட இயக்கங்களின் பங்கு இருக்கிறது. சங்கங்கள் அமைப்பது, உரிமைக் குரல் எழுப்புவது முதலியவற்றில் இங்கு வளர்ந்த பொதுவுடைமை இயக்கங்களின் பங்கு இருக்கிறது.

நான்: இளைய தலைமுறை பார்வையற்றவர்கள் முற்போக்குச் சிந்தனை குறித்த அறிவுடையவர்களாக இருக்கிறார்களா? அது தொடர்பாகப் படித்தறிந்துகொள்ள விரும்புகிறார்களா?

கார்த்திக்: மிகச் சிலர்தான் விரும்புகிறார்கள். முன்பெல்லாம் நமக்கு ஏற்றாற்போல இத்தகைய புத்தகங்கள் கிடைக்காது.  இப்போது பல புத்தகங்களை, இதழ்களை மின்நூல்களாக நம்மால் படிக்கமுடிகிறது. ஆனாலும், மிகச் சில பார்வையற்றவர்கள்தான் தங்கள் பாடப் புத்தகங்களையும் தாண்டி படிக்க விரும்புகிறார்கள்.

graphic அகிலன் அவர்களின் படம்
அகிலன்

மகேந்திரன்: மாணவர்களைப் பொறுத்தவரை கல்லூரிப் பாடங்களையே எவ்வளவு தூரம் சுருக்கிப் படிக்கமுடியும் என்றுதான் நினைக்கிறார்கள். வாசிப்பு மையங்களில் அவர்களால் முற்போக்குப் புத்தகங்களைப் படிப்பதில் ஒரு சின்ன தடை இருக்கத்தான் செய்கிறது. இருந்தபோதிலும், அத்தி பூத்தாற்போல் சிலர் கொள்கைப் பிடிப்புள்ளவர்களாக இருக்கிறார்கள். சான்றாக, நாமக்கல்லைச் சேர்ந்த அகிலன் என்ற பார்வை மாற்றுத்திறனாளி மாணவர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன் தலைமையில் இயங்கும் திராவிட இயக்கத் தமிழர் பேரவையில் தீவிரமாகச் செயல்பட்டுவருகிறார்.

நான்: உங்கள் செயல்பாட்டிற்கான எதிர்வினை எப்படி இருக்கிறது?