அமைப்புகள் அறிவோம்: அமெரிக்காவிலிருந்து வந்த மடிக் கனினி, உருவானது தமிழ் பேசும் உலக பார்வையற்றோரின் தொழில்நுட்ப மைய்யம்! - பொன். குமரவேல்

graphic கைப்பேசி, கணினி, மகிழுந்து எனப் பல்வேறு தொழில்நுட்பங்களின் படங்கள் அடங்கியது

       தொழில்நுட்பம் நொடிக்கு நொடி எண்னற்ற புதிய கண்டுபிடிப்புகளைத் தந்து மாயாஜாலத்தை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. அவற்றுக்கேற்றவாரு நாமும் நம்மைத் தகவமைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், புதிய கண்டுபிடிப்புகளுக்கேற்பத் தன்னைத் தகவமைத்துக்கொள்வதில் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்குச் சில சிக்கல்கள் இருக்கத்தான் செய்கின்றன.

      அம்மாதிரியான புதிய கண்டுபிடிப்புகள் பற்றியோ, ஏற்கனவே உள்ள தொழில்நுட்பங்கள் பற்றியோ தங்களுக்கு எழும் சந்தேகங்களைக் கேட்டுத் தெரிந்துகொள்ள பார்வை மாற்றுத்திறனாளிகள் ஆறு ஆண்டுகளுக்கு முன்புவரை பெரும்பாலும் மிண்னஞ்சல் குழுமங்களையே நம்பியிருந்தார்கள். அச்சூழலை அப்படியே புரட்டிப் போட்டது வாட்ஸாப் என்னும் இன்ஸ்டண்ட் மெசேஜ் தளம். வாட்ஸாப்பின் வசதிகளை உடனடியாக புரிந்துகொண்ட பார்வை மாற்றுத்திறனாளிகள் விழித்துக் கொண்டனர். மிண்னஞ்சல் குழுமங்கள் உடனடியாக வாட்ஸாப் குழுமங்களாக உருமாற்றம் பெற்றன. அவைகளில் பல குழுமங்கள் 2015 கால கட்டத்திலேயே பொழுதுபோக்கு சார்ந்து இயங்க ஆரம்பித்துவிட்டன. அவற்றில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் பார்வையற்றோருக்குத் தொழிநுட்பம் சார்ந்து எழும் ஐயங்களைக் கேட்டுத் தெரிந்துகொள்ள குழுமங்கள் வாட்ஸாப்பில் வலம் வந்துகொண்டிருந்தன.

      அத்தொழில்நுட்பக் குழுமங்களில் இருந்து நிறம்பவே வித்தியாசப் பட்டு ஒரு குழு 2016, டிசம்பர் 3-ஆம் நாளில் உதயமானது. அக்குழுமத்திற்குடெக்னோ செண்டர்’ (Techno center) எனப் பெயரும் சூட்டப்பட்டது. அப்பெயரையும் பார்வைமாற்றுத்திறனாளிகள்தொழில்நுட்ப மையம்எனத் தமிழில் மொழிமாற்றம் செய்து மகிழ்ந்தார்கள். கடந்த டிசம்பர் மூன்றில்தான் தனது ஐந்தாவது ஆண்டில் காலடி எடுத்து வைத்திருக்கிறது இக்குழுமம். நீங்கள் அனைத்துவிதமான தொழிநுட்பம் குறித்தும்,அவற்றில் எழும் சந்தேகங்கள் குறித்தும் இங்கு அறிந்து கொள்ளலாம். அதற்கேற்ற தொழிநுட்ப வல்லுநர்கள் இக்குழுவில் இருக்கிறார்கள் என்பதே இதன் சிறப்பு. தமிழ் பேசும் உலகப் பார்வையற்றவர்களைச் சத்தமில்லாமல் ஒன்றினைத்து வைத்திருக்கிறது இக்குழுமம்.

      இப்படி, சிறப்புகளை அடுக்கிக் கொண்டே போவதற்கு முன்பு இக்குழுவைத் துவங்கியவரும், தொழில்நுட்பத்தில் பழுத்த அனுபவசாலியுமான பார்வையற்றவர்களால் செங்கல்பட்டு ஜெயராஜ் என்று அழைக்கப்படும் திரு ஜெயராஜ் அவர்களைத் தொடர்புகொண்டு இக்குழு துவங்கப்பட்டது குறித்தும் நோக்கம் பற்றியும் கேட்டேன்.

graphic திரு ஜெயராஜ் அவர்களின் படம்
திரு ஜெயராஜ்

         முதலில் தன்னைப் பற்றி அறிமுகம் செய்து கொண்டு, பிண்னர் டெக்னோ செண்டர் குறித்தும் பேசத் துவங்கினார்.

      எனது சொந்த ஊர் உத்திரமேரூர் அருகில் உள்ள ஆரோக்கியபுரம் என்னும் கிராமம். நான் பாண்டிச்சேரி பிள்ளைச்சாவடி பள்ளி, சிறுமலர் பார்வையற்றோர் பள்ளி, புனித லூயி போன்ற பள்ளிகளில் எனது பள்ளி படிப்பையும், லயோலா, Mcc, சைதாப்பேட்டை கல்வியியல் கல்லூரி, போன்ற இடங்களில் எனது கல்லூரிப் படிப்பையும் முடித்தேன். இப்படி, படிப்புக் காலத்தை நிறைவு செய்துவிட்டு எனது ஆசிரியர் பனியை 2000-ஆம் ஆண்டில் ஒரு தனியார் பள்ளியில் துவங்கிய பொழுதிலிருந்துதான் எனக்குத் தொழில்நுட்பம் அறிமுகமானது. அதற்கு முக்கிய காரனகர்த்தாவாக விளங்கியவர் எனது அண்ணன். அவர் அந்தக் காலகட்டத்தில் அமெரிக்காவிலிருந்து இங்கு வந்திருந்தார். கூடவே தொஷீபா மடிக்கணினி ஒன்றையும் உடன் எடுத்துவந்திருந்தார். அக்கணினியில் அமெரிக்காவிலிருந்தே Jaws demo பதிப்பை நிறுவிக் கொடுத்திருந்தார்கள். ஆனால், அச்சமயத்தில் எனக்கோ கணினி குறித்து எதுவும் தெரியாது. அதற்கும் எனது அண்ணாவே வழிகாட்டினார். Jaws தயாரித்து வரும் ஃப்ரீடம் சைண்டிபிக் நிறுவனத்தாரிடம் இருந்து jaws குறித்த யூசர் மேன்வலையும் பெற்றுக்கொடுத்தார். அதைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்ட நான்,  பிரெய்லில் எழுதி வைத்துக்கொண்டு ஒருவழியாக கணினியை நானாகவே கற்றுத் தேர்ந்தேன். பின்னர் யார் மூலமாகவோ நண்பர் ஈரோடு ஜெகன் அறிமுகமானார். நானும் அவரும் இனைந்து மெய்நிகர் வழியாக நிறைய தொழில்நுட்பம் குறித்து அடிக்கடி உறையாடியே, அவற்றைக் குறித்து கற்றுக் கொண்டோம். நான் கற்றுக்கொண்டதைப் பிறருக்கும் கற்றுத்தர எண்ணி எனது வீட்டிலேயே ஒரு கணினி பயிற்சி மையத்தையும் எனது மனைவியுடன் இனைந்து பார்வை உள்ளவர்களுக்காக ஆரம்பித்தோம். இக்கணினி மையத்திலிருந்தே எனக்குத் தன்நிறைவு வாழ்க்கை வாழும் அளவிற்கு வருமானம் வந்த பொழுதிலும், அதை விடுத்து அரசு வேலையைத் தேர்வுசெய்தேன்.

      இப்பார்வையற்றோர் சமூகத்திற்கு என்னை அடையாளம் காட்டியவர்களாக ஒரு 4 நபர்களைச் சொல்வேன். டெல்லியில் பணிபுரியும் முனைவர் வரதராஜன் சார், நியு  இந்தியா இன்ஷுரன்ஸ் கண்னன் சார், பேராசிரியர் சிவராமன் சார் மற்றும் எனது முதல் மாணவியான AICB முத்துச்செல்வி மேடம். இவ்விடத்தில் முத்துச்செல்வி மேடத்தின் தட்டச்சு வேகத்திற்கு எனது பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். கணினி கற்றுக்கொடுத்தது நானாக இருந்தாலும் இன்று தட்டச்சு வேகத்தில் என்னையே மிஞ்சி விட்டார் முத்துச்செல்வி மேடம்.

      2014-ஆம் ஆண்டுதான் நான் எனது முதல் ஆன்ராய்டு கைபேசியை வாங்கினேன். அக்கைபேசி சாம்சாங் நிறுவனத்துடையது. ஆன்ராய்டு கைபேசி வாங்கியதும் நான் முதலில் எதிர்கொண்ட பிரச்சனை நேவிகேஷன். அந்த நேவிகேஷன் முறையை எனக்கு ஒரு மணி நேரத்தில் விளங்கும் வகையில் கற்றுத்தந்தவர் அண்ணன் ஊரப்பாக்கம் முருகராஜன். அவருக்கு இவ்விடத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பின்னர் எனது பார்வையற்ற நண்பர்கள் சிலர் கொடுத்த யோசனைதான் இந்த டெக்னோ செண்டருக்கான விதை!

      ஒரு குழு வாட்ஸாப்பில் துவங்கலாம் என்று 2016_ஆம் ஆண்டில் யோசித்துக்கொண்டிருக்கையில், சங்கரன் கோவில் பாலமுருகன் சார்தான் டெக்னோ செண்டர் என்னும் இந்தப் பெயரை எனக்குப் பரிந்துரைத்தார். நானும் பெயர் கேச்சியாக இருக்கவும் அந்தப் பெயரையே வைத்து உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தன்று துவங்கிவிட்டேன். இக்குழுவின் நோக்கமே பார்வையற்ற மக்களுக்குத் தெரியாத விஷயங்களைக் கற்றுக்கொடுத்தல் மற்றும் அவர்களுக்கு அவ்வப்போது ஏற்படும் தொழில்நுட்பம் சம்மந்தமான சந்தேகங்களைப் போக்குதல். இக்குழு எல்லாத் தொழில்நுட்ப குழுக்களிலிருந்தும் வித்தியாசப்படக் காரனம், எவ்வித அலட்டலும் கலக்கலும் இல்லாமல் மக்களுக்கு விஷயங்கள் சென்று சேர்வதே. மேலும் இங்கு ஏகப்பட்ட பேர் தொழில்நுட்பத்தில் வல்லவர்களாக இருக்கிறார்கள். கடந்த நான்கு ஆண்டுகளாக பார்வையற்ற சமூகத்திற்கு தொழில்நுட்பம் சார்ந்த எண்ணற்ற விஷயங்களைக் கற்றுக்கொடுத்திருக்கிறது இக்குழுமம். வாட்ஸாப்பில் குறிப்பிட்ட எண்ணிக்கையில்தான் உறுப்பினர்களைச் சேர்க்க முடியுமாதலால், ‘டெக்னோ செண்டர் கடந்த ஒரு வருடமாக டெலகிராமிலும் குழுவை விரிவுபடுத்தி இருக்கிறது. டெலகிராமைப் பார்வையற்றோரும் பயன்படுத்த மிக முக்கியக் காரணியாக இருந்தது டெக்னோ செண்டர் என்றுதான் சொல்வேன்.

      தற்பொழுது நான் உட்பட ஐந்து பேர் கொண்ட நிர்வாக குழுவோடு இயங்கிவருகிறது டெக்னோ செண்டர். நண்பர்கள் திரு இளங்கோவன், ஆரோக்கியசுதன், சகோதரிகளான கனகா, மற்றும் சரன்யா போன்றோர் என்னோடு இணைந்து குழுவை வழிநடத்திக் கொண்டிருக்கிறார்கள்என்றார் ஜெயராஜ்.

      அப்படியே திரு ஜெயராஜ் அவர்களுக்கு விடை கொடுத்துவிட்டு உறுப்பினர்கள் சிலரிடமும் பேசினேன்.

graphic K.J. ஜெகன் அவர்களின் படம்
K.J. ஜெகன்

       ஈரோட்டைச் சேர்ந்த குழுவின் மூத்த உறுப்பினரான K.J. ஜெகன் கூறுகையில், “இந்தக் குழுவில் நிர்வாகியாகவும் இருந்திருக்கிறேன் சாதாரன உறுப்பினராகவும் இருக்கிறேன். முதலில் இந்தக் குழுவில் நான் இருப்பதற்குக் காரணமே இங்கு இருக்கும் நமது நண்பர்கள் தான். தமிழ்நாட்டில் எந்த ஒரு இடத்திற்குச் சென்றாலும் அங்கு ஒரு நண்பர் நமக்காக இருக்கிறார் என்ற எண்ணம் முதலில் ஏற்படும்.    அதுமட்டுமல்லாமல் தொழில்நுட்பத்தில் எனக்கு இருக்கும் ஆர்வம் குறையாமல் இருப்பதற்கு இந்தக் குழு வழிவகை செய்கிறது. ஒருவனுக்கு எவ்வளவு விஷயம் தெரிந்தாலும் புதிய புதிய விஷயங்களைக் கற்றுக் கொண்டே இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட குழு தான் இது.

      நானெல்லாம் கணினி கற்றுக் கொள்ள ஆரம்பிக்கும் போது உதவி செய்ய ஒருவரும் இல்லை. பிறகு ஜெயராஜ் சாருடன் ஏற்பட்ட தொடர்பினால் அவரால் உந்தப்பட்டு உருவானவன் தான் நான். அவரை நான் குரு என்று அழைக்க எப்போதுமே தயங்கியதில்லை.

       உண்மையைச் சொல்லப்போனால் பார்வை மாற்றுத்திறனாளிகளின் முதல் குருவே அவர்தான். அவருக்குப் பிறகு வந்தவர்கள் தான் நாம் எல்லோருமே என்று உறுதியாக சொல்ல முடியும். அவர் நடத்தும் குழுதான் தமிழ்நாட்டில், ஏன் இந்தியாவிலேயே மிக மிக அதிக பார்வையற்ற உறுப்பினர்களைக் கொண்ட குழு என்பதில் மிக்க பெருமை.

      தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொள்வதற்கும் கற்றுக்கொடுப்பதற்கும் உருவான ஒரே நிரந்தரக் குழு இதுதான். உண்மையைச் சொல்லப் போனால், அவரால்தான் அவருக்காகத்தான் இந்தக் குழுவில் நிறைய பேர் இருக்கிறோம். மற்ற யாருக்காகவும் இத்தனை பேர் கூடுவார்களா என்பது கேள்விக்குறிதான்”.

      புதுக்கோட்டை மாவட்டம் வேங்கடகுளத்தைச் சேர்ந்த திரு பிரசாத் அருன் கூறுகையில், “எனக்கு பிஜான் அண்னா மூலமாகத்தான் இக்குழுமம் அறிமுகமானது. கிட்டத்தட்ட குழுமம் ஆரம்பித்த காலத்தில் இருந்தே இதில் நான் உறுப்பினராக இருக்கிறேன். இங்கு நான் கற்றுக்கொண்ட விஷயங்கள் ஏராளம். இக்குழுவில்தான் அடிப்படைப் பயன்பாட்டாளர்கள் முதல், கணினியை அக்குவேரு ஆணிவேராகப் பிரித்துப்பார்க்கும் வல்லுநர்கள் வரை இருக்கிறார்கள். ஆகையாலேதான் இக்குழுவில் நான் தொடர்ந்து பயணித்து வருகிறேன். நான் டெக்னோ செண்டரைப் பார்த்துதான் பார்வையற்றோரும் டெலகிராமைப் பயன்படுத்தலாம் என்று தெரிந்துகொண்டேன்.

      குழு நிர்வாகிகளில் ஒருவரான தஞ்சையைச் சேர்ந்த சரன்யா கூறும்போது, “நான் இக்குழுவில் 2018 காலகட்டத்தில்தான் இனைந்தேன் என நினைக்கிறேன். அப்பொழுதிலிருந்து, இப்பொழுது வரை நிறைய விஷயங்களைக் கற்றிருக்கிறேன், கற்றுக் கொண்டும் இருக்கிறேன். குறிப்பாக, ஒரு மென்பொருளை எப்படிப் பயன்படுத்துவது, அதன் அனுகல் தன்மையை எப்படிச் சோதிப்பது போன்ற இன்னும் பல விஷயங்களைக் கற்றுக்கொண்டிருக்கிறேன். நான் தொழில்நுட்பத்தை ஆர்வமுடன் கற்றுக்கொண்டிருப்பதற்குக் கிடைத்த பரிசுதான் இந்த அட்மின் பதவி என நினைக்கிறேன்.

      இந்தக் கட்டுரையை நான் எழுதிக் கொண்டிருக்கும் இந்நேரம் வரை 664 நபர்கள் உறுப்பினராக டெக்னோசென்டர் டெலகிராம் குழுமத்தில் இணைந்திருக்கிறார்கள். அதுபோக, வாட்ஸாப்பிலும் குழு முழுமையாக நிறைந்திருக்கிறது. இவை எல்லாம் பார்வை மாற்றுத்திறனாளிகள் தொழிநுட்பத்தைக் கற்றுக்கொள்ளவேண்டும் என்ற வேட்கையாலும், செங்கல்பட்டு ஜெயராஜ் என்ற பழுத்த தொழில்நுட்ப அனுபவசாலிக்காகவும்தான். டெலகிராம், டெலி லைட் ப்ரோ, பிலைண்ட்கிராம் என்னும் டெலகிராமின் கிலைண்டுகள் வாயிலாக தமிழ்பேசும் பார்வையற்றோரின் கிராமங்களுக்கும் சென்று சேரட்டும் டெக்னோ செண்டர்!

குழுவில் இணைய: 9790189173 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்புகொள்ளவும்.


graphic கட்டுரையாளர் பொன். குமரவேல் அவர்களின் படம்
கட்டுரையாளர் பொன். குமரவேல்

 

தொடர்புக்கு: kumaravel.p95@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக