பிரேயில்: இனி 8 புள்ளிகளில்தான் எல்லாமே! - B. கண்ணன்

graphic எட்டுப் புள்ளி கொண்ட பிரெயில் புள்ளி வடிவம்

      ஆறு புள்ளிகளுக்குள் அகிலம், ஆறு புள்ளிகளில் ஓர் அதிசயம் என்றெல்லாம் லூயி பிரெயில் தினத்திற்கான கட்டுரைப் போட்டிகளுக்குத் தலைப்புகளை வழங்கியிருப்போம். தற்போது நாம் அதிலிருந்து அடுத்த கட்டத்திற்கு நகரவேண்டியிருக்கிறது. உலக அளவில் பல பயனர்கள் 8 புள்ளி பிரெயில் முறையை ஏற்றுப் பயன்படுத்திவருகின்றனர். பிரெயில் முறை 8 புள்ளிகளை எட்டியது எப்படி? ஏன்? இது குறித்தே இக்கட்டுரையில் சுருக்கமாக விளக்கியிருக்கிறேன்.

      8 புள்ளி பிரெயில் முறை என்பது நாம் பயன் படுத்தும் 6 புள்ளி பிரெயில் முறையின் புதிய பரிமாணம் ஆகும். 21-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அமெரிக்கா & ஐரோப்பிய நாடுகளில் இதன் தேவை உணரப்பட்டது. இம்முறை தொடர்பான பல கருத்தரங்குகள் நடத்தப்பட்டன.

      braille authority of north America-BANA என்ற நிருவனம் இது தொடர்பான பல கருத்துகளைத்  தொகுத்து, 2007 ஆம் ஆண்டு  ஒரு ஆய்வறிக்கை வெளியிட்டது. இந்த ஆய்வறிக்கை உலக நாடுகளால் ஏற்கப்பட்டுள்ளது.

        வளர்ந்துவரும் அறிவியல் தொழில்நுட்பக் காரணங்களால் பார்வையற்றோருக்கான கல்வி முறையிலும் பல புதிய வாய்ப்புகள் வரத் தொடங்கியுள்ளன. அவற்றைப் பார்வையற்றோர் கற்க 6 புள்ளிகளைக் கொண்ட பிரெயில் முறை போதுமானதாக இல்லை. எனவே பிரெயில் கல்வியாளர்கள் 6 புள்ளிகள் கொண்ட முறையை 8 புள்ளிகள் கொண்ட முறையாக விரிவுபடுத்த முடிவுசெய்தனர்.

graphic ஆறு புள்ளியில் ஆங்கில எழுத்துகள் மற்றும் எண்கள்

        6 புள்ளிகளைக் கொண்ட பிரெயில் முறையில் இடப்புறம் மேலிருந்து கீழாக 1, 2, 3 ஆகிய புள்ளிகளும், வலப்புறம் மேலிருந்து கீழாக 4, 5, 6 ஆகிய புள்ளிகளும் இருக்கும். இவற்றில் இடப்புறம் 7, வலப்புறம் 8 என்று இரு புள்ளிகளைச் சேர்த்தனர். இப்போது இடப்புறம் மேலிருந்து கீழாக 1,2,3,7 என்றும் வலப்புறம் மேலிருந்து கீழாக 4,5,6,8 என்றும் புள்ளிகள் அமைந்தன.

6 புள்ளி முறையில் மொத்தம் 63 குறியீடுகளை, [possible dot combinations], அமைக்க முடியும். இந்த 8 புள்ளி முறையில் மொத்தம் 255 குறியீடுகளை அமைக்கலாம். இந்த எழுத்து முறை அறிவியல், கணினி தொழில்நுட்பம், கணிதம், இசை முதலிய துறைகளில் பயனுள்ளதாக இருக்கும்.

8 புள்ளி முறையின் வரலாறு:

      உலக அளவில் கிட்டத்தட்ட 3 இடங்களில் 8 புள்ளி முறை ஏற்கெனவே பயன்பாட்டில் இருந்தது.

1. Abreu Code:

      முதன்முதலில் ஸ்பெயின் நாட்டில் இசைக் குறியீடுகளை எழுதவும், படிக்கவும் 8 புள்ளி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. Gabriel Abreu என்ற பார்வையற்ற இசையாசிரியர் இம்முறையை உருவாக்கினார். இந்த முறை 'Abreu Code" என்று அழைக்கப்பட்டது. இந்த 8 புள்ளி பிரெயில் முறை 1955-ஆம் ஆண்டு 'Royal Spanish Conservatory of Music' என்ற நிருவனத்தால் அங்கீகரிக்கப்பட்டது. பார்வையற்றோர் இசை கற்க இம்முறையே சிறந்தது என்று ஏற்கப்பட்டது.


graphic ஆறு புள்ளி எழுத்து முறையில் அமைந்த பிரெயில் பலகை

      6 புள்ளி முறையை விட 8 புள்ளி முறை இசைக் குறியீடுகளை எழுத எளிதாக இருந்தது. ஆகவே, இந்த 8 புள்ளி முறை ஸ்பெயின் நாட்டில் மிகப் பிரபலமானது. இருந்தாலும், இம்முறையில் இசையின் ஆரம்பப் பாடங்களே உருவாக்கப்பட்டன. இம்முறையில் எல்லா இசைக் குறியீடுகளையும், பாடல் வரிகளையும் எளிதாக எழுதமுடிந்தது. இசையின் ஸ்வரங்களை 8 புள்ளி முறையில் ஒரு செல்லின் முதல் 4 புள்ளிகளில் குறிப்பிடுவார்கள். அது ஒலிக்கப்பட வேண்டிய கால அளவை  அந்த செல்லின் கடைசி 4 புள்ளிகளில் குறிப்பிடுவார்கள். பாடல் வரிகள் வழக்கமான 6 புள்ளிகளில் எழுதப்படும்.

2. "Stenographic Code:

      ஆஸ்திரியாவிலும், ஜெர்மெனியிலும் பார்வையற்ற சுருக்கெழுத்தாளர்கள் 8 புள்ளி முறையை உருவாக்கிப் பயன்படுத்தினர். 1961-ஆம் ஆண்டு ஆஸ்திரியா, ஜெர்மனி ஆகிய நாடுகளில் 8 புள்ளி பிரெயில் சுருக்கெழுத்து முறை அதிகாரப்பூர்வமாக ஏற்கப்பட்டது.

3. Tenkanji and Kantenji:

      Tenji' என்ற ஜப்பானிய பிரெயில் எழுத்து முறை, Kanji' என்ற ஜப்பானிய நவீன எழுத்து முறைக்கு உகந்ததாக இல்லை. எனவே, 'kantenji' என்ற 8 புள்ளி பிரெயில் எழுத்து முறை 1950-ஆம் ஆண்டு ஜப்பானில் அறிமுகப்படுத்தப்பட்டது.

8 புள்ளி பிரெயில் எழுத்து முறையின் நவீன வளர்ச்சி:

      கணினி தொழில் நுட்பத்தின் வளர்ச்சி பிரெயில் எழுத்து முறையிலும் பல மாறுதல்களை  ஏற்படுத்தி உள்ளது. 'Triformation Systems, Inc' என்ற நிருவனம் அறிமுகப்படுத்திய braille embosers பிரெயில் அச்சுக் கலைக்கு வழிவகுத்தது. 1970-களில் அறிமுகமான இந்த இயந்திரம் 6 புள்ளி எழுத்து முறையிலும் 8 புள்ளி எழுத்து முறையிலும் பிரெயில் புத்தகங்களை அச்சிடக்கூடியதாக இருந்தது. இதனால் 255 குறியீடுகளைக் கொண்ட 'ASCII-American Standard Code for Information Interchange என்ற நவீன கணினி எழுத்துருக்களை 8 புள்ளி பிரெயில் எழுத்து முறையில் எளிதாக எழுதமுடிகிறது.      இம்முறையில் பேரெழுத்து & சிற்றெழுத்து (uppercase and lowercase letters), எண்கள், நிறுத்தற் குறிகள், சிறப்புக் குறியீடுகள், கணினிக் குறியீடுகள் என்று அனைத்துக் குறியீடுகளையும் எழுதமுடியும்.

      எனவே இம்முறை பார்வையற்றொருக்கான புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கி உள்ளது.

graphic எட்டுப் புள்ளி எழுத்துகளில் A, B, C, D, E. இதன் உண்மை தன்மை ஆராயதக்கது.

      புதுப்பிக்கத்தக்க பிரெயில் திரையுடன் கூடிய பிரெயில் எழுதும், வாசிக்கும் கருவிகள் (Refreshable Braille Display-Note Taker-Reader) வடிவமைக்கப்பட்ட பிறகுதான் 8 புள்ளி பிரெயில் முறை பார்வையற்றோரால் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இவை கணிப்பொறித் திரையில் தெரியும் எழுத்துகளை பார்வையற்றவர் தொட்டு உணர பயன்படுகிறது. இதனால் பார்வையற்றவர் திரைவாசிப்பானைக் (screen reader)  கேட்டுக் கணிப்பொறியை இயக்குவது போல புதுப்பிக்கத்தக்க பிரெயில் திரைக் கருவியில் உள்ள பிரெயில் எழுத்துகளைத் தொட்டுணர்ந்து கணினியைப் பயன்படுத்தலாம். கணினியில் பயன்படுத்தப்படும் qwerty keyboard-க்கு பதிலாக புதுப்பிக்கத்தக்க பிரெயில் திரையில் உள்ள பிரெயில் பொத்தான்கள் மூலமாகக் கணினியை இயக்கலாம். இவ்வாறே நம்முடய 'android, Iphone' கைப்பேசியையும் பிரெயில் முறையில் இயக்கலாம். இத்தகைய கருவியின் மூலம் கணினியையோ, திறன் பேசியையோ இயக்கத் திரை வாசிக்கும் மென்பொருள் 'screen reading software' அவசியம் ஆகும்.

      எனவே கணினி பிரெயில் முறை அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு 8 புள்ளி பிரெயில் முறை புதுப்பிக்கத்தக்க பிரெயில் திரையின் மூலமாக பெருமளவு பயன்படுத்தப்படுகிறது. இதனால் பிரெயில் முறையில் எழுதப்பட்ட கோப்புகளைக் கணினியில் படிக்கவும், கணினியில் எழுதப் படும் கோப்புகளை புதுப்பிக்கத்தக்க பிரெயில் திரையின் மூலம் படிக்கவும் 'Braille Translators' என்ற மென்பொருள்கள் பயன்படுத்தப்படுகின்றன.

      இருப்பினும் 6 புள்ளி பிரெயில் எழுத்து முறையையே உலக நாடுகள் அனைத்தும் முதன்மையான எழுத்து முறையாக அங்கீகரித்துள்ளன. 8 புள்ளி எழுத்து முறை என்பது பாரம்பரிய 6 புள்ளி பிரெயில் முறையின் விரிவாக்கமே; இது ஒறு புதிய எழுத்து முறை அல்ல. எனவே மேலை நாடுகளில் பார்வையற்றோருக்கான தொடக்கக் கல்வியில் 6 புள்ளி பிரெயில் எழுத்து முறையும், உயர்கல்வியில் தேவைக்கு ஏற்ப 8 புள்ளி எழுத்து முறையும் கற்றுக்கொடுக்கப்படுகிறது. பார்வையற்ற மாணவர்களும் மிகுந்த ஆர்வத்தோடு 8 புள்ளி பிரெயில் முறையைக் கற்றுக்கொண்டு பயன்படுத்துகின்றனர்.

8 புள்ளி பிரெயில் முறையில் தொடரும் வளர்ச்சி:

1. 8 புள்ளி முறையும் அறிவியலும்:

      8 புள்ளி பிரெயில் முறையின் மூலமாக கணிதம், அறிவியல், கணினி தொழில்நுட்பம், கணினி இசை, சதுரங்கம் முதலிய துறைகளில் எழுதப்படும் நூல்களை பிரெயில் முறையில் படிப்பதும், அவற்றைக் கற்பதும் மிகவும் எளிதாகி உள்ளது.

2. 8 புள்ளி பிரெயில் முறையும் கணிதமும்:

      பார்வையற்றோர் கடினமான கணித முறைகளைக் கற்பது முன்பெல்லாம் இயலாத காரியமாக  இருந்தது. 8 புள்ளி பிரெயில் முறையும் புதுப்பிக்கத்தக்க பிரெயில் திரை கொண்ட கருவிகளும் கடினமான கணித  முறைகளை நாம் பயில்வதை எளிதாக்கியுள்ளன. இந்த முறைக்கு 'LAMBDA' என்று பெயர்.

" Linear Access to Mathematics for braille device with audio என்பதன் சுருக்கமே LAMBDA.

8 புள்ளி பிரெயில் முறையின் வறையறுப்பு:

      உலகெங்கும் பயன்படுத்தப்படும் பல்வேறு 8 புள்ளி முறைகளை முறைப்படுத்தி 'American Printing House for The Blind' நிருவனம் கையேடுகளை வெளியிட்டுள்ளது. இவற்றை உலகில் உள்ள அனைத்து பார்வையற்றோருக்கான நிருவனங்களும் ஏற்றுக்கொண்டுள்ளன.

      இவை 'latin based' என்று சொல்லப்படும் ஐரோப்பிய எழுத்து முறையையும், 'unicode' என்று சொல்லப்படும் பிற எழுத்து முறைகளையும் ஒருங்கிணைத்து ISO [international standard organisation] தரச் சான்று பெற்றுக் கொடுத்துள்ளது.

8 புள்ளி பிரெயில் எழுத்து முறையின் சில முக்கிய அம்சங்கள்:

      8 புள்ளி முறையில் பேரெழுத்துகளை (capital letters) குறிக்க அந்த எழுத்துக்குக்  கீழே உள்ள 'புள்ளி 7' பயன்படுத்தப்படும். ஒரு சொல்லையோ, ஒரு வாக்கியத்தையோ அடிக்கோடிட்டுக் காட்ட அந்த எழுத்துகளின் கீழே உள்ள புள்ளி 7 & புள்ளி 8 பயன்படுத்தப்படும்.

      'open braille' என்று சொல்லப்படும் 'english grade 1 braille', 'Unified English Braille code Grade 1' என்ற பெயரில் பெருமளவு பயன்படுத்தப்படுகிறது.  'Grade 2 braille' என்று சொல்லப்படும் 'contractions and abbreviations' முறை பெருமளவு  குறைக்கப்பட்டுள்ளது.  இருப்பினும் நாம் விரும்பினால் 'grade 2 braille' பயன்படுத்தலாம்.

        மேலும், இதன் மூலமாக பிரெயில் முறைக்கு  மாற்றுதல் (Braille translation) என்பது மிகவும் எளிதாகியுள்ளது.

      பிரெயில் எழுத்து முறை 6 புள்ளிகளில் தொடங்கி 8 புள்ளிகளைக் கொண்ட கணினி பிரெயில் எழுத்து  முறையாக வளர்ச்சி அடைந்துள்ளது. அதனால், பார்வையற்றோர் பிரெயில் எழுத்து முறையைப் புறக்கணிக்காமல் அதைப் போற்றி, நம் அன்றாட  வாழ்வில் பயன்படுத்த வேண்டும். குறிப்பாக, மாணவர்கள் 8 புள்ளி முறையைப் பயன்படுத்த கற்றுக்கொள்ள வேண்டும். பார்வையற்றோருக்கான சங்கங்களும்,  அமைப்புகளும் புதுப்பிக்கத்தக்க பிரெயில் திரை கருவிகள் மலிவு விலையிலோ, இலவசமாகவோ பயனாளர்களுக்குக் கிடைக்க அரசுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும். பிரெயில் எழுத்து முறை நம் கண்களுக்குச் சமமானது. ஏனென்றால் பிரெயில் எழுத்து முறை தான் நாம் கசடர கல்வி கற்று வாழ்வில் உயர்நிலையை அடைய உதவும் வழி ஆகும். 

graphic கட்டுரையாளர் B. கண்ணன் அவர்களின் படம்
கட்டுரையாளர் B. கண்ணன்

(கட்டுரையாளர் நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவனத்தின் சென்னை மண்டல அலுவலகத்தில் கணினித் துறை நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றிவருகிறார்).

தொடர்புக்கு: kannan30b@gmail.com

2 கருத்துகள்:

  1. எட்டுப்புள்ளி முறையை குறித்த புரிதல் ஏற்படுத்தும் விதமான கட்டுரைக்கு பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
  2. ஐயா எனது பெயர் பசுபதி உங்கள் கட்டுரை மிகவும் அருமையாக இருந்தது நான் விரைவில் எழுத்துக்களைப் பற்றி பல ஆய்வுகளை செய்து வருகிறேன் அதில் நீங்கள் எழுதிய கட்டுரை எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது இதை போன்று எழுத்துக்களைப் பற்றி நீங்கள் நிறைய கட்டுரை எழுத வேண்டும் என்பது என்னுடைய ஆசைகுழந்தைக்கு உங்கள் கட்டுரையில் இருந்து எனக்கு தெரியாத நிறைய விஷயங்களை நான் கற்றுக்கொண்டேன்

    பதிலளிநீக்கு