கவிதை, கைபேசியால் கவலை! - அ. கௌரி

graphic ஒரு கைப்பேசியின் படம்

உருவினில் சிறிதிதில்  உலகமும் அடங்குது,

உறவுகள் தொலைவதில் உள்ளங்கள் சுருங்குது!

அருகினில் இருப்பினும் தொலைவதைத் தோற்றுது,

ஆண்டவன் போலதைக் கருதிக்கொண் டாடுது!

 

காதலர் மனதில் முதற்பொரு ளாகுது,

காலையில் விழித்ததும் கையதைத் துழவுது!

கண்ணுக்கும் காதுக்கும் விருந்தென உலவுது,

காண்பதும் கேட்பதும் விரைவினில் குறையுது!

 

குருவிகள் வாழ்வினை கோபுரம் அழிக்குது,

கூடுதல் கணக்கினில் சிற்றுயிர் சரியுது!

இரவுகள் குறைந்தே பகல் பொழு தாகுது,

இயற்கையைத் தவிர்த்தே தொலைவினில் துரத்துது!

 

உழைப்பினைக் குறைத்து நோய்களைப் பெருக்குது,

உண்மையின் தன்மையை அறிந்திடத் தடுக்குது,

களைப்பையும் சோர்வையும் கதிர்உரு வாக்குது,

காகிதப் பூக்களாய் காட்சியைக் கவருது!

 

வெளிவிளை யாடல்கள் அறிதென ஆச்சுது,

வெண்ணிலா வானிலே தனியெனத் தவிக்குது!

அதிர்வுகள் நரம்பினை அயர்வினில் இருத்துது,

ஆக்கமும் ஊக்கமும் அடியோ டழியுது!    

 

குழந்தைகள் மனதைக் குப்பைமே டாக்குது,

கவனமும் சிதறியே கவலையைக் கொடுக்குது,

இளைஞர்கள் வீழ்ச்சியில் பெரும்பங்கு வகிக்குது,

இதனினும் கொடுமையாய் வாழ்வையே முடிக்குது!

 

நல்லதைப் பயின்றால் நன்மையைத் தருகுது,

நால்வகை உதவிகள் நமக்கென இருக்குது,

அல்லவை தவிர்த்தால் ஆறுதல் அளிக்குது,

அளவுடன் இருந்தால் விளைவினைக் குறைக்குது!        

graphic கவிஞர் அ. கௌரி அவர்களின் படம்
கவிஞர் அ. கௌரி

 

(கவிஞர் திருச்சிராப்பள்ளி மாவட்டக் கருவூலத்தில் பணியாற்றிவருகிறார்).

தொடர்புக்கு: gowri.sgg@gmail.com

3 கருத்துகள்:

 1. கவிநயமும் அதில் அடங்கியுள்ள கருத்துக்களும் அருமை. கவிஞருக்கு பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 2. ஜெயராமன் தஞ்சாவூர்1 ஜனவரி, 2021 அன்று PM 10:11

  கைப்பேசியின் நன்மை தீமைகளை நயம்பட கவி உரைத்து

  அல்லவை நீக்கி நல்லவை கொள்ள அறிவுறுத்தி இருக்கும்

  கவிஞரின் நல்ல உள்ளத்திற்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் இவ்வாறு கருத்துரையிடு:

  பதிலளிநீக்கு