ஆலோசனை: பணமில்லாப் பணப் பரிவர்த்தனைகளில் எழும் பிரச்சனைகளைத் தீர்ப்பது எப்படி? - X. செலின்மேரி

graphic இந்தப் படத்தில் CYBER SAFETY என்கிற ஆங்கில வார்த்தைகளும் மடிக்கணினியின் படமும் இடம் பெற்றுள்ளது

     உலகமே இன்று டிஜிட்டல் மயமாகி விட்டது. நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளிலும் தொழில்நுட்பத்தின் ஆக்கிரமிப்பு தவிர்க்க முடியாததாகி விட்டது. பணத்தைக் கொடுத்து பொருள் வாங்கும் நிலை     மாறி Online Transaction, Cashless transaction  போன்ற பதங்கள் அதிகம் பயன்படுத்தப் படுவதோடு, அவற்றுக்கான செயலிகளும், அதை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துவருகிறது.    தொலைபேசிக் கட்டணம், மின் கட்டணம், சமையல் எரிவாயு சிலிண்டர் பதிவுசெய்தல், கிரெடிட் கார்ட் பில் செலுத்துதல் போன்ற பல சாதகமான சூழல்களை வீட்டிலிருந்தபடியே அனுபவித்து வருகிறோம். எனினும் நமது கவனக்குறைவால் சில அசௌகரியங்களைச் சந்திக்க நேரிடுகிறது.

      இன்றைய காலகட்டத்தில் பார்வையற்றோர் பயன்படுத்த வேண்டிய செயலிகள் எவை? எந்தெந்தப் பிரச்சினைகளுக்கு யாரை அணுக வேண்டும்? பணமில்லாப் பரிவர்த்தனையின்போது கவனிக்க வேண்டிய முக்கியமான  வழிமுறைகள் எவை? இக்கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார்கள் தொழில்நுட்பத் திறன் நிறைந்த நம் வல்லுநர்கள்.

 UPI   அறிமுகம்

graphic UPI APP மற்றும் அதனோடு சேர்ந்து இயங்க கூடிய Paytm, Phonepe உள்ளிட்ட APP களின் படம் அடங்கிய படம்

      2016 நவம்பர் எட்டாம் நாள் நடைமுறைக்கு வந்த பண மதிப்பிழப்பு Demonitization நடைமுறைக்குப் பின் National Payment Corporation of India (NPCI) என்ற அமைப்பு UPI (Unified Payment Interface) என்ற புது முறையை அறிமுகப்படுத்தியது. National Electronic Fund Transfer (NEFT) மற்றும் Immediate Payment Services (IMPS)  போன்றவற்றின் எளிமையான வடிவமாக இது உருவாக்கப்பட்டது. போன் பே, கூகுள் பே, அமேசான் பே உள்ளிட்ட பல செயலிகளில் இந்த முறை பயன்பாட்டில் உள்ளது. நமது அன்றாடத் தேவைகளாகிய தொலைபேசி மற்றும் மின் கட்டணம் செலுத்துதல், மொபைல் மற்றும் டிடிஎச் ரீசார்ஜ் செய்தல், சமையல் எரிவாயு பதிவு செய்தல், இன்ஷூரன்ஸ் மற்றும் கடன் தொகையைத் திருப்பிச் செலுத்துதல், அவசர கால உதவியாக நமது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்குப் பணத்தை அனுப்புதல் மற்றும் பெறுதல், ஆன்லைன் மூலம் பொருட்களை வாங்குதல், நமக்குத் தேவையான செயலிகள் மற்றும் புத்தகங்களை வாங்குதல், ஆன்லைனில் வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்களை ஆர்டர் செய்தல், வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக் மூலம் பணம் அனுப்புதல், ஷாப்பிங் மால்கள் துணிக்கடைகள் மற்றும் பெரிய பெரிய உணவகங்களில் அதற்கான கட்டணங்களைச் செலுத்துதல் போன்ற தவிர்க்க முடியாத நடவடிக்கைகளுக்கு  யுபிஐ எண்களைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

graphic திரு. சாம் கார்த்திக் அவர்களின் படம்
திரு. சாம் கார்த்திக்

      UPI வழி பணப் பரிமாற்றத்தில் பார்வையற்றோராக நாம் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் எவை? அவற்றிற்கான தீர்வுகள் என்ன? விவரிக்கிறார் வளர்ந்துவரும் தொழில்நுட்ப வல்லுநரும், ஆன்லைன் மூலம் பல பார்வை மாற்றுத்திறனாளிகளுக்குக்  கணினிப் பயிற்சி கொடுத்து   வருபவருமாகிய திரு. சாம் கார்த்திக்.

1.  இன்றைய காலகட்டத்தில் UPI Payments  அத்தியாவசியம். ஆகையால், ஒவ்வொருவரும் தமக்கென்று தனித்தனி ஆப்ஸ்களை பயன்படுத்தத் தெரிந்திருக்க வேண்டும்.

2. தமது வங்கிக் கணக்கின் இருப்புத் தொகையை அந்தந்த வங்கி கொடுத்திருக்கும் எண்களைப் பயன்படுத்தியோ அல்லது யூபிஐ செயலிகளைப் பயன்படுத்தியோ தெரிந்துகொள்ளும் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

3.  பணப் பரிவர்த்தனை செயலிகள் தொடர்பான கடவுச் சொற்களை எவரிடமும் பகிர்ந்து கொள்ளக் கூடாது.

4.  ஒவ்வொரு முறை அத்தகைய செயலிகளைப் பயன்படுத்தும் போதும் அலைபேசி Dim screen அல்லது Dark Screen முறையில் இயங்குவதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். கணினியைப் பொறுத்தவரை ஸ்கிரீன் ஆப் செய்வது நல்லது.

5. மற்றவர்களிடம் கொடுத்து  இந்தச் செயலிகளைப் பயன்படுத்துவதை முடிந்தவரை தவிர்க்கலாம். பயன்படுத்த நேர்ந்தால் மிகவும்  கவனமாக இருக்கவேண்டும்.

6.  செயலியைப் பயன்படுத்தும் ஒவ்வொரு முறையும் அப்போதைய இருப்புத் தொகையை Check செய்துகொள்வது நல்லது.

7.  இத்தகைய செயலிகளைப் பயன்படுத்த குழந்தைகளை அனுமதிப்பதைத் தவிர்க்கலாம்.

8.  நமது ஆண்ட்ராய்ட் அலைபேசியில் அல்லது கணினியில் ஏடிஎம் எண்கள் மற்றும் வங்கி சார்ந்த எந்தத் தகவலையும் சேமிக்காமல் இருப்பது நல்லது.

9. Remote access  அப்ளிகேஷன்களைத் தவிர்ப்பதும் நல்லது.

10.  பெரிய பெரிய உணவகங்கள் மற்றும் ஷாப்பிங் மால்களில் ஆன்லைன் பணப் பரிவர்த்தனையில் ஈடுபடும்போது சில சமயங்களில் நமது வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டு உரியவரைச் சென்றுசேராத நிலை உருவாகலாம். அதுபோன்ற சமயங்களில், மீண்டும் மீண்டும் பரிவர்த்தனை செய்து,  தவறுதலாக டெபிட் ஆகாதவாறு பார்த்துக்கொள்ளவேண்டும்.

11.  விருப்பம் இருக்கும் பட்சத்தில், ஒரு மாதத்திற்கான செலவுத் தொகையை மட்டும் தனிக் கணக்கில்  சேமித்து, அதற்கென்று யுபிஐ செயலிகளைப் பயன்படுத்திப் பணப் பரிமாற்றத்தில் ஈடுபடலாம்.

graphic திரு ஜெயராஜ் அவர்களின் படம்
திரு ஜெயராஜ்

      அடுத்ததாக,  இது குறித்து செங்கல்பட்டு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வரலாற்று முதுகலை ஆசிரியராக பணியாற்றி வரும் திரு ஜெயராஜ் அவர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. இவர் பார்வையற்றோருக்கு எழும் தொழில்நுட்பம் சார்ந்த கேள்விகளுக்கு விளக்கம் தரும் வகையிலான வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் குழுக்களை நடத்தி வருவதும், தனிப்பட்ட வகையில் அவரை அணுகி ஐயம் கேட்போருக்குத் தெளிவாகப் புரியவைப்பதும் குறிப்பிடத்தக்கது. அவருடைய கருத்துகள் இதோ:

1.  நாம் எந்த வங்கியில் கணக்கு வைத்திருக்கிறோமோ, அதே வங்கியின் ஆன்லைன் சேவைகளைப் பயன்படுத்த வேண்டும்.

2.  மூன்றாம் தர சேவைகளைப் பயன்படுத்தும் போது அவற்றின் நம்பகத்தன்மையை அறிந்திருத்தல் அவசியம்.

3.  கஸ்டமர் சர்வீஸ் இல்லாத எந்த ஒரு சேவையும் பயன்பாட்டிற்கு உகந்தது அல்ல.

4.  மிகச்சிறந்த செயலி எது என்பதை அறிய கூகுள் அல்லது யூட்யூபில் சர்ச் செய்ய வேண்டும் அதில் கொடுக்கப்பட்டிருக்கும் தரவரிசைப் பட்டியலைத் தெளிவாகப் படித்துப் புரிந்துகொண்டபின் நமக்கு விருப்பமான செயலியைப் பயன்படுத்தலாம்.

5. சமீப காலமாக வங்கி மோசடிகள் அதிகமாகி வருகின்றன. இது போன்ற சமயங்களில் களவாடப்படும் பணத்தைக் கேட்டுப் பெற்றுக்கொள்ளும் முறையைத் தெரிந்திருக்க வேண்டும்.

 6.  நமது கடவுச்சொற்கள் ரகசியமாக இருக்க வேண்டும்.

7.   எதிர்வரும் காலங்களில் பணப்பரிவர்த்தனைகளுக்கான செயலிகளை உருவாக்குவதிலும், அவற்றைப் பயன்படுத்துவதிலும் , புகார்களைப் பெற்றுக்கொண்டு முறையான தீர்வு காண்பதிலும் அரசின் தலையீடு இருத்தல் அவசியம்.

graphic திரு. ஜீவானந்த பிரகாஷ் அவர்களின் படம்
திரு. ஜீவானந்த பிரகாஷ்

      மேலும் இது குறித்த  கூடுதல் விளக்கங்களைப் பெறுவதற்காக மதுரை தல்லாகுளம் இந்தியன் வங்கிப் பணியாளராகிய திரு. ஜீவானந்த பிரகாஷ் அவர்களிடம் சில ஐயங்கள் எழுப்பப்பட்டன. எப்போதும் கணினியும் கையுமாக சுறுசுறுப்பாகச் செயல்படும் பார்வையற்ற வங்கிப் பணியாளர்களில் குறிப்பிடத்தக்கவர் இவர்.   இவர் அளித்த தீர்வுகள் வருமாறு: 

அரசு அங்கீகாரம் பெற்ற செயலிகளைப் பயன்படுத்துதல்

    வழக்கமாகப் பயன்பாட்டில் உள்ள யுபிஐ செயலிகளில் போன் பே மட்டுமே இந்திய ரிசர்வ் வங்கியிடமிருந்து முழுமையான அங்கீகாரத்தைப் பெற்றிருக்கிறது. மற்ற யூபிஐ அப்ளிகேஷன்களில் Contact us   அல்லது Customer suppport போன்ற பகுதிகள் இடம்பெறாததை நீங்கள் கவனித்திருப்பீர்கள் .போலியான  செயலிகளைப் பயன்படுத்திச் செய்யப்படும் தவறான பரிவர்த்தனைகளுக்கான பணத்தை வங்கியிடம் கேட்டுப் பெற முடியாது.

      உதாரணமாக, ஒரு அனுபவத்தை இங்கு பகிர்கிறேன். கல்லூரி மாணவி ஒருவர் அத்யாவசிய பொருளை வாங்குவதற்காகத் தவறான வலைதளத்தில் கூகுள் பே மூலம் ஆன்லைனில் பணம் செலுத்தி இருக்கிறார். புகார் என்னிடம் வந்தது. நாங்கள் பதிவு செய்யும் ஒவ்வொரு புகாரும் இந்திய ரிசர்வ் வங்கி வரை சென்று பிறகுதான் தீர்வு காணப்படும். அந்த வகையில் மேற்சொன்ன   சகோதரிக்கு அவர் இழந்த  பணத்தை என்னால் மீட்டுத் தர இயலவில்லை. அவர் சொன்ன பெயரில் ஒரு வலைதளமே இல்லை என்பதுதான் நம்ப முடியாத எதார்த்தம்.

மொபைல் எண்ணிற்குப் பணம் செலுத்துவதைத் தவிர்த்தல்

      பொதுவாகக் கணக்கு தொடங்கும் பெரும்பாலோர் வங்கியில் அவர்களது அலைபேசி எண்களைக் கொடுப்பதில்லை. மொபைல் எண் மாற்றப்படும்போதுகூட முறையான அறிவிப்பு வங்கிக்கு வருவதில்லை. எனவே பிறருடைய அலைபேசி எண்களுக்குப் பணத்தை மாற்றித் திரும்பப் பெற இயலாத நிலையை யாரும் அடையாமல் இருத்தல் நலம்.

புகார்கள்

      பெரிய கடைகள், உணவகங்கள், விடுதிகள், சூப்பர் மார்க்கெட்கள், ஷாப்பிங் மால்கள் போன்ற இடங்களில் யுபிஐ மூலமோ அல்லது ஏடிஎம் கார்டு மூலமோ பணம் செலுத்தும் நிலை உருவாகும்போது ஒரு முறை மட்டுமே பணம் டெபிட் செய்யப்படுவதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். இரண்டு மூன்று முறை டெபிட் செய்யப்படும் பொழுது அந்தப் பணத்தைத் திரும்பப் பெற இயலாது. நமது கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டு உரியவர் கணக்கிற்குச் செல்லாத நிலையில், அவரிடம் நமது கையில் இருக்கும்  பணத்தைச் செலுத்தி பின் அதற்கான ரசீதையும் பெற்றுக்கொள்ள வேண்டும். அடுத்த நாள் நமது கணக்கிற்குப் பணம் திரும்பவில்லை என்றால், உடனடியாக வங்கிக்குச் சென்று பணம் எங்கிருக்கிறது என்பதை அறிந்துகொள்ள வேண்டும். ஒருவேளை பணம் நமது கணக்கிற்குத் திரும்பாமல் உரியவரைச் சென்றுசேரும் நிலையில், நமது ரசீதை எடுத்துக்கொண்டு பணம் செலுத்தியவரிடம் கேட்டுப் பெற்றுக்கொள்ளலாம்.

வங்கி ஊழியர்களுக்கு அபராதம்

      ஒரு வங்கியில் புகார் கிடைக்கப்பெற்ற 5 அல்லது 7 நாட்களுக்குள் அதற்கான தீர்வு காணப்பட்டிருக்கவேண்டும். தவறும் பட்சத்தில் அந்த வங்கி ஊழியர் ஒவ்வொரு நாளுக்கும் ஒரு குறிப்பிட்ட அளவு அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். எனவே 5 முதல் 7 நாட்களுக்குள் நமது பிரச்சனை தீராத பட்சத்தில் மீண்டும் தயங்காமல் வங்கியை அணுகலாம்.

ஆதார் மூலம் பண பரிமாற்றம் செய்தல்

graphic BHIM செயலியின் படம்

      ஆதார் எண்ணில் குறிப்பிடப்பட்டுள்ள 12 இலக்கங்களைப் பயன்படுத்தி BHIM  என்ற செயலியின் மூலம் மட்டுமே பணப் பரிமாற்றம் செய்ய வேண்டும். இது அரசால் வடிவமைக்கப்பட்டது. ஆதார் எண்ணைப் பரப்பும் நோக்கத்தோடு வடிவமைக்கப்பட்டது. மற்ற செயலிகளில் ஆதார் எண்களைப் பயன்படுத்தி பரிமாற்றம் செய்ய முயல வேண்டாம்.

 Wifi  டிடெக்டரைத் தவிர்த்தல்

graphic Wifi  detector கருவியின் படம்

      பெட்ரோல் பங்க் உள்ளிட்ட சில இடங்களில் வைஃபை மூலம் பணம் செலுத்தும் முறை நடைமுறையில் உள்ளது. பாஸ்வேர்டு ஏதும் பெறப்படாமல் wifi மூலமே செலுத்தவேண்டிய கட்டணம் நமது வங்கிக் கணக்கிலிருந்து டெபிட் செய்யப்படும். அந்த ஆப்ஷனைத் தவிர்த்தல் நலம். அவசரத் தேவைக்காக மிகக் குறைந்த அளவு பணத்தை வரையறை செய்து கொள்ளலாம்.

சட்டப் பாதுகாப்பு

      பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற வகையில் இணைய தளங்கள் வடிவமைக்கப்படவேண்டும் என இந்திய அரசு சட்டம் இயற்றியிருக்கிறது. ஆனாலும், பல வங்கிகள் அதைப் பின்பற்றுவதில்லை. அதனால், net banking முறையிலும் நாம் கவனத்தோடே செயல்படவேண்டும்.

      நம் மீது அக்கறையுடைய, நம்மைப் போன்ற பார்வை மாற்றுத்திறனாளி வல்லுநர்கள் வழங்கிய மேற்கண்ட ஆலோசனைகளை மனதில் கொள்ளுங்கள். இணையவழியில் பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளும்போது இவை உங்களுக்கு நிச்சயம் பயன் தரும்.

ஏமாறாமல் இருப்போம்

      நம்மில் பலரை ஏமாற்றுவது அலைபேசியில் நாம் பெறும் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் தாம். எப்படி கவனமாக இருந்தாலும் எதிர்பாராத ஏதோ ஒரு வகையில் நம்மை அறியாமல் நாம் ஏமாற்றப் படுகிறோம். உடனடியாக லோன் கொடுக்கப்படும், வட்டியில்லாக் கடன், புது ஆயுள் காப்பீட்டுத் திட்டம்,  ஆதார் எண்ணுக்குப் பணம் கிடைத்திருக்கிறது, மொபைல் எண் பல கோடிகளை வென்றிருக்கிறது, உங்களுடைய ஏடிஎம் கார்டு செயல் இழந்து விட்டது என்பன உள்ளிட்ட ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் நம்மை அச்சுறுத்திப் பார்க்கின்றன. நம்பிக்கை ஏற்படும் அளவுக்கு அவர்களுடைய உரையாடல் இருப்பதால் பலர் ஏடிஎம் எண்கள் உள்ளிட்ட ரகசியத் தகவல்களைப் பகிர்ந்து, பின் போலி என்று உணர்ந்ததும் வருந்துகிறார்கள். இதுபோன்ற சமயங்களில் நிதானமாகக் கையாளுதல் மட்டுமே நல்ல தீர்வாக அமைய முடியும். எனவே நண்பர்களே போலிகளைக் கண்டு ஏமாறாமல் இருப்போம். ரகசிய எண்களை ரகசியமாக வைத்துக் கொள்வோம்.

      பார்வையற்றோர் பயன்படுத்துவதற்குத் தகுந்த செயலிகளை மட்டும் அடுத்தவர் உதவியின்றிப் பயன்படுத்துவோம். நமது அலைபேசி மற்றும் கணினிகளில் Screen lock, App lock மற்றும்  Password போன்றவற்றை உருவாக்கிப் பாதுகாப்பாகப் பயன்படுத்துவோம்.   உரிமைகள் மீறப்படும் பொழுதும், சலுகைகள்  மறுக்கப்படும் பொழுதும், நாம் ஏமாற்றப்படும் பொழுதும் தொடர்ந்து போராடி நமது உரிமைகளைப் மீட்டெடுப்போம். நமது பணத்தை நாமே கவனமாக பயன்படுத்தி வளமாக வாழ்வோம்.           

graphic கட்டுரையாளர் X. செலின்மேரி அவர்களின் படம்
கட்டுரையாளர் X. செலின்மேரி

(கட்டுரையாளர் புதுக்கோட்டை மாவட்டம் வெள்ளாள விடுதி அரசு நடுநிலைப் பள்ளியின் ஆங்கில ஆசிரியர்).

தொடர்புக்கு: celinmaryx@gmail.com  

1 கருத்து:

  1. ஜெயராமன் தஞ்சாவூர்1 ஜனவரி, 2021 அன்று PM 9:51

    முக்கியமான காலகட்டத்தில் அவசியமான தகவல்களை நேர்த்தியான முறையில் இந்த கட்டுரையில் காண முடிகிறது

    கட்டுரையாளருக்கு பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு