அலசல்: பார்வையற்றோர் வாழ்வில் 2020 - ரா. பாலகணேசன்

graphic 2020  என்ற எண் கொண்ட படம்

       2020-ஆம் ஆண்டு பல திட்டங்களுக்கான இலக்கு ஆண்டாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. 2020-இல் இந்தியா வல்லரசாக வேண்டும் என்று கனவு கண்டு, அதைத் தொடர்ச்சியாக வலியுறுத்தியும் வந்தார் மறைந்த முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர் திரு. அப்துல்கலாம் அவர்கள். ஆனால் 2020-இல் உலகம் முழுவதையும் ஆட்டிப்படைத்தது கொரோனா என்னும் பெருநோய். இதனால் யாரும் எதிர்பாராத பல மாற்றங்கள் நிகழ்ந்தன. நிலநடுக்கத்திற்குப் பிந்தைய அதிர்வுகளைப் போல இன்னும் சில ஆண்டுகளுக்கும் தேவையான தாக்கங்களை உருவாக்கிச் சென்றிருக்கிறது 2020.

பார்வை மாற்றுத்திறனாளிகளாகிய நமக்கு 2020 எப்படி இருந்தது? இதோ ஒரு பருந்துப் பார்வை.

ஆளுமைகள்

graphic பூரணசுந்தரி
பூரணசுந்தரி

     *மதுரையைச் சேர்ந்த பூரணசுந்தரி இந்தியக் குடிமைப் பணிகளுக்கான தேர்வில் வெற்றி பெற்று இந்தியாவின் தலைப்புச் செய்தியானார். அகில இந்திய அளவில் 286-ஆம் இடம் பெற்று வெற்றி பெற்ற இவருக்கு வாழ்த்துகள் குவிந்தன. திருப்பரங்குன்றம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சரவணன் இவருக்கு ரூ.3 லட்சம் மதிப்பிலான ஆர்க்கம் (Orcam) என்ற நபர்களையும் பொருட்களையும் அடையாளம் காட்டும் கருவியையும், orbit reader எனப்படும் பிரெயில் திரை கருவியையும் வழங்கினார். இத்தனை மகிழ்ச்சிக்குப் பிறகும் இவருக்கு இந்திய ஆட்சிப் பணிப் பிரிவில் (IAS) பணியிடம் ஒதுக்கப்படவில்லை என்று அறிவிக்கப்பட்டதும், அதை எதிர்த்து இவர் தீர்ப்பாயம் சென்றதும் இந்த ஆண்டில் அதிகம் பேசப்பட்டது.

graphic பாலநாகேந்திரன்
பாலநாகேந்திரன்

      *சென்னையைச் சேர்ந்த பாலநாகேந்திரனும் இந்தியக் குடிமைப் பணி தேர்வில் வெற்றிபெற்று சாதனை படைத்தார். ஆனந்த விகடன் இதழில் வெளியிடப்பட்ட டாப் 10 இளைஞர்கள் 2020’ பட்டியலில்  இடம்பெற்றிருக்கிறார் இவர்.

graphic ஓவியா
ஓவியா

      *நெய்வேலியைச் சேர்ந்த ஓவியா என்ற பார்வைச் சவாலுடைய மாணவி CBSE பள்ளி ஒன்றில் 10-ஆம் வகுப்பில் பதிலி எழுத்தர் துணையின்றித் தானாகவே கணினி மூலம் தெர்வெழுதி, 500-க்கு 447 மதிப்பெண் பெற்று சாதனை படைத்தார். இதேபோல், கேரளாவைச் சேர்ந்த ஹாரூன் கரீம் என்ற மாணவர் மாநில அரசுப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு தேர்வை எழுதிய முதல் பார்வையற்றவர் என்ற பெருமைக்குரியவரானார்.

      *பத்மஸ்ரீ விருது பெற்றார் பார்வை மாற்றுத்திறனாளி ஓவியரான மனோகர் தேவதாஸ். வேதியியல் பட்டதாரியான இவர், இடையில் பார்வையை இழந்தார். அதன் பின்பும் பல சிறந்த ஓவியங்களைத் தீட்டினார். இவர் கண்கள் வழியாக மூளைக்குள் பதிந்திருந்த 60 ஆண்டுகளுக்கு முந்தைய மதுரையை ஓவியமாக்கினார். அவை அக்கால  மதுரையைக் கண் முன் கொணர்வதாக அறிஞர்கள் புகழ்கின்றனர். தேனி சீருடையான் எழுதியநிறங்களின் உலகம்நாவலோடு, இவரது ஓவியங்களையும் இணைத்துநிறங்களின் மொழிஎன்ற பெயரில் விகடன் நூலாக வெளியிட்டிருக்கிறது. ஏற்கெனவே கர்நாடக இசைக் கலைஞரான காயத்ரி சங்கரன், கிரிக்கெட் விளையாட்டு வீரர் சேகர் நாயக், அகில இந்திய பார்வையற்றோர் கூட்டமைப்பு (AICB) நிறுவனர் J.L. கௌல் ஆகிய பார்வை மாற்றுத்திறனாளிகள் பத்மஸ்ரீ விருது பெற்றிருக்கின்றனர்.

தமிழகம்

      *கொரோனா பெருந்தொற்றின் காரணமாக நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்கைத் தொடர்ந்து, அன்றாடங்காய்ச்சிகளாக இருக்கும் பார்வை மாற்றுத்திறனாளிகள் மிகுந்த சிரமங்களை எதிர்கொண்டனர். இதைப் புரிந்துகொண்ட மற்ற பார்வை மாற்றுத்திறனாளிகள் உடனடியாகத் தங்கள் உதவிக் கரங்களை நீட்டி, அவர்களுக்கு உதவத்தொடங்கினர். குறிப்பாக, ஹெலன்கெலர் மாற்றுத்திறனாளிகள் நலச் சங்கம் சமூக ஊடகங்களில் வெளியிட்ட இது குறித்த வேண்டுகோள் பலரையும் சிந்திக்கவைத்தது. இவ்வமைப்பு மட்டுமல்லாமல், பல்வேறு அமைப்புகளும், தனிநபர்களும் நலிவடைந்த பார்வை மாற்றுத்திறனாளிகளுக்குத் தங்களால் ஆன உதவிகளை நல்கினர்.

      *தமிழக அரசும் தன் பங்கிற்கு கட்டணமில்லாத் தொலைபேசி எண்ணை வழங்கி, அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளிடமும் தொடர்பு ஏற்படுத்திக்கொள்ள முயன்றது. தி.மு.கவின்ஒன்றிணைவோம் வாஉள்ளிட்ட பிற அரசியல் கட்சிகளின் செயல்பாடுகளும், பொதுவான தொண்டறம் கொண்டவர்களின் செயல்பாடுகளும் ஆயிரக்கணக்கான பார்வைமாற்றுத்திறனாளிகளுக்கு அப்போது ஏற்பட்ட சிரமங்களுக்கான தற்காலிக நிவாரணங்களாகவேனும் இருந்திருக்கும் என்பதை மறுப்பதற்கில்லை.

      *தமிழக அரசு அடையாள அட்டை பெற்றிருக்கும் அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் 1000 ரூபாய் வழங்கியது.

      *ஈரோடு மாவட்ட ஆட்சியர் ஒரு பார்வையற்ற இணையர்களுக்கு உதவிய நிகழ்வு நெகிழ்வானது. அவர்கள் பண மதிப்பிழப்பால் செல்லாதது என அறிவிக்கப்பட்ட ரூபாய் தாள்களாக ரூ. 25000 வைத்திருந்தனர். அவை செல்லாது என்பதை அறிந்த அந்த வறிய தம்பதியர் பேரதிர்ச்சி அடைந்தனர். இதற்கு மாற்றாக தனது சொந்தச் செலவில் 25000 ரூபாய் பணம் வழங்கியிருந்தார் ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிர்வேல்.

      சென்னையில் தன் கணவர் இறந்தது தெரியாமல் அவரோடு பேசிக்கொண்டிருந்த எளிய பார்வையற்ற பாட்டியின் செயல் நமக்குக் கண்ணீர் வரவைத்தது.

      *பார்வை மாற்றுத்திறனாளிகள் பலரும் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்டிருக்கின்றனர்; குறிப்பாக, பாடகர் திருமூர்த்தி மருத்துவமனையிலும் பாடல்களைப் பாடி மற்றவர்களைப் பரவசப்படுத்தினார். இருந்தபோதிலும், கொரோனா காரணமாக சில பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு நிகழ்ந்த இறப்பைத் தடுக்கமுடியவில்லை.

graphic பிரேயிலில் அந்தகக்கவி என எழுதப்பட்டிருக்கும் அந்தகக்கவி பேரவையின் சின்னம்

      *கொரோனா ஊரடங்குக் காலம் சில நன்மைகளையும் செய்தது. பார்வை மாற்றுத்திறனாளிகள் பலர் தங்கள் பழைய நண்பர்களோடு பேசிப் பழகினர். சமூக ஊடகங்களில் தொடர்ந்து தொடர்பில் இருந்தனர். சூம் (Zoom) செயலி பார்வை மாற்றுத்திறனாளிகளின் புதிய வகை கூடுகைக்கு வழிவகுத்தது. அந்தகக் கவிப் பேரவை என்ற பார்வையற்றவர்களால் நடத்தப்படும் இலக்கிய அமைப்பு தொடங்கி வைத்த இம்முயற்சியில் பல அமைப்புகள் இணைந்துகொண்டன. நமது இதழும் தனது 25-ஆம் இதழ் வெற்றி விழாவை இருந்த இடத்தில் இருந்துகொண்டே சிறப்பாகக் கொண்டாடி முடித்தது.

      *தமிழக அரசு 10000 ரூபாய் மதிப்பிலான தொடுதிரை அலைபேசிகளை பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கும், காது கேளாதோருக்கும் வழங்குவதாக அறிவித்தது. வயதுவந்த, அரசு ஊழியர் அல்லாதவர்கள் இத்திட்டத்தில் பயன் பெறலாம்.

graphic சவால் முரசு  மின்னிதழின் சின்னம்

      *‘நமக்கான ஊடகம், நமக்கு நாமே ஊடகம்என்ற முழக்கத்தோடு உதயமாகியிருக்கிறதுசவால் முரசுஇணைய இதழ். இதில் மாற்றுத்திறனாளிகள் குறித்த செய்திகளும், கட்டுரைகளும் இடம்பெறுகின்றன. பார்வை மாற்றுத்திறனாளியான . சரவணமணிகண்டன் அவர்களை ஆசிரியராகக் கொண்டு இவ்விதழ் செயல்படுகிறது. சரவணமணிகண்டன் அவர்கள் நமது இதழின் ஆசிரியர் குழுவில் பணியாற்றியவர் என்பது விரல்மொழியருக்குப் பெருமை.

      *பல பார்வை மாற்றுத்திறனாளிகள் புதிதாகத் தங்கள் யூடியூப் சேனல்களை இந்த ஆண்டில் தொடங்கியிருக்கின்றனர். முத்தாய்ப்பாக, ஏற்கெனவே தொடங்கப்பட்டிருந்த தனது சேனலில் 50000 சந்தாதாரர்களைப் பெற்றிருக்கிறார் அகிலன் என்ற பார்வை மாற்றுத்திறனாளி. பார்வை மாற்றுத்திறனாளி ஒருவரால் தொடங்கப்பட்ட சேனல் இத்தனை சந்தாதாரர்களைப் பெற்றிருப்பது இதுவே முதல்முறை. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பாச்செத்தி என்ற சிறிய ஊரில் வளர்ந்துவரும் அகிலன் என்ற இளைஞர் நடத்திக்கொண்டிருப்பது இசை தொடர்பான யூடியூப் சேனல். பெயர்டிமிக்கி டப்பா’.

      *’நாம் தமிழர்கட்சியில் மாற்றுத்திறனாளிகள் பாசறை என்ற பெயரில் புதிய அணி ஒன்று உருவாக்கப்பட்டது. இந்த அணியின் உருவாக்கத்தில்  அக்கட்சியில் களமாடிவரும் வெங்கலமூர்த்தி என்ற பார்வை மாற்றுத்திறனாளியின் பங்கு முக்கியமானது.

      *எதிர்மறையான சில நிகழ்வுகளும் நடந்தேறின. சேலத்தைச் சேர்ந்த ஒரு பார்வை மாற்றுத்திறனாளி வேலை வாங்கித் தருவதாகக் கூறிப் பலரிடமும் பணம் பெற்று ஏமாற்றியது, கோயம்புத்தூரைச் சேர்ந்த பார்வை மாற்றுத்திறனாளி ஆசிரியர் ஒருவர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டது முதலியவை நடந்திருக்கக்கூடாதவை.

இந்தியா

      *மாற்றுத்திறனாளிகளுக்கு பதவி உயர்வில் 3% இட ஒதுக்கீடு வழங்கப்படவேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து நமக்கான அமைப்புகள் தமிழகத்திலும், இந்திய அளவிலும் இத்தீர்ப்பைச் செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன.

      *பட்டியல் வகுப்பினருக்கு வழங்கப்படும் சலுகைகள் அனைத்தும் மாற்றுத்திறனாளிகளுக்கும் ஒன்றிய, மாநில அரசுகளால் வழங்கப்படவேண்டும் என உச்சநீதிமன்றம் தனது இன்னொரு தீர்ப்பில் குறிப்பிட்டது.

      *மாற்றுத்திறனாளிகள் நல உரிமைச் சட்டத்தின் அத்தியாயம் 16: பிரிவு 89, 92, 93 ஆகியவற்றில்  திருத்தம் கொண்டுவர இருப்பதாக ஒன்றிய அரசு அறிவித்தது புயலைக் கிளப்பியது. சட்டத்தை மீறுவோருக்கான தண்டனைகளை உறுதிப்படுத்தும் பிரிவுகள் இவை. பெருநிறுவனங்களின் நலன் கருதி இவை திருத்தப்பட இருப்பதாக ஒன்றிய அரசு கூறியது கவனிக்கத்தக்கது. நாடெங்கும் கிளம்பிய எதிர்ப்பைத் தொடர்ந்து அரசு தன் முடிவைக் கைவிட்டது.

graphic இந்திய அரசின் முத்திரை இடம் பெற்ற புதிய கல்விக்கொள்கை - 2020 வெளியீட்டின் முகப்பு படம்

     *இந்திய அரசின் புதிய கல்விக் கொள்கை அதிகாரப்பூர்வமாக இந்த ஆண்டில் வெளியிடப்பட்டது. அதில் மாற்றுத்திறனாளிகள் குறித்து என்ன பேசப்பட்டிருக்கிறது என்பதை தேடிப்பார்ப்பது மிகவும் கடினமாக இருப்பதாகக் கல்வியாளர்கள் தெரிவித்தனர். குறிப்பாக, சிறப்புக் கல்வி தேவைப்படும் பார்வைக் குறையுடையோர், காது கேளாதோருக்கென இயங்கும் சிறப்புப் பள்ளிகள் குறித்து ஒரு வரி கூட செய்தி இல்லை.

      *கொரோனா ஊரடங்குக் காலத்தில் நாடெங்கும் பாதிப்புக்குள்ளான பார்வைக் குறையுடையோர் உள்ளிட்ட மாற்றுத்திறனாளிகளுக்கென ஒன்றிய அரசு எந்தவொரு திட்டத்தையும் அறிவிக்கவில்லை.

      *பீஹாரில் இந்த ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மாற்றுத்திறனாளிகளுக்குத் தபால் வாக்கு முறையைத் தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது. இது 2021-இல் நடைபெறவிருக்கும் தமிழகம், மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலச் சட்டமன்றத் தேர்தல்களிலும் நடைமுறைப்படுத்தப்படும் எனத் தெரிகிறது. இது பரவலாக ஆதரவையும், எதிர்ப்பையும் ஒருங்கே பெற்றுத்தந்துள்ளது. தமிழகத்தில் இம்முறையை எதிர்த்து தி.மு. வழக்கு தொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா

      *மிஸ்கின் இயக்கத்தில் வெளியான சைக்கோ திரைபடம் பார்வையற்ற கதாபாத்திரத்தை நாயகனாகக் கொண்டு வெளியானது. அப்பாத்திரத்தில் நடித்த உதயநிதி ஸ்டாலின் வசதி படைத்த பார்வை மாற்றுத்திறனாளியாக சித்திரிக்கப்பட்டிருந்தார். சைக்கோ கொலைகாரரைத் தேடிக் கண்டறிந்து தண்டிக்கக்கூடிய பாத்திரமாக இப்பாத்திரம் சித்திரிக்கப்பட்டது.

      *V. விக்னராஜன் இயக்கியஅந்தகாரம்திரைப்படம் பார்வையற்றோரை இன்னொரு விதத்தில் சித்திரித்தது. பேய் பிடிக்கும் ஒருவரின் மகனாகவும், நூலகத்தில் பணிபுரியும் அரசு ஊழியராகவும் பார்வை மாற்றுத்திறனாளி சித்திரிக்கப்பட்டது புதுமையானது. இக்கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார் வினோத் கிஷன். இத்திரைப்படம் நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் வெளியானது.

      *வரலட்சுமி சரத்குமார் நடித்து நெட்ஃபிலிக்ஸில் வெளியான திரைப்படம்டேனி’.  இத்திரைபடத்தின் பல காட்சிகள் தஞ்சை பார்வைக் குறையுடையோருக்கான அரசுப் பள்ளியில் எடுக்கப்பட்டன. திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் பகுதியில் இப்பள்ளிக்கும் படக்குழுவின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அறிவியல் தொழில்நுட்பம்

      பார்வை மாற்றுத்திறனாளிகள் பயன் பெறும் வகையில் அன்றாடம் பல புதுப்புது கண்டுபிடிப்புகளும், செயலிகளும் வந்துகொண்டே இருக்கின்றன. ஆனாலும், அவை அனைத்தும் பரவலாகப் பயன்பாட்டிற்கு வருவதில்லை. அதனால் அவை அனைத்தையும் குறித்து விவரிப்பது சாத்தியமில்லை. இந்த ஆண்டு உருவாக்கப்பட்ட முக்கியமான சில கண்டுபிடிப்புகளை மட்டும் பார்ப்போம்.

graphic MANI செயலியின் துவக்கப் படம்

      *இந்திய ரிசர்வ் வங்கி ‘money’ என்ற செயலியை வெளியிட்டது. இச்செயலியின் மூலம் பார்வை மாற்றுத்திறனாளிகள் தங்கள் கைபேசியின் துணை கொண்டு ரூபாய் தாள்களின் மதிப்பை அறிந்துகொள்ளமுடியும்.

      *google lookout என்ற கூகுளின் செயலியும் இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இச்செயலி பொருட்களை, நிறங்களை அடையாளம் காணுதல், படங்களை்ப் புரிந்துகொள்வதோடு அதில் உள்ள எழுத்துகளைப் படிக்க உதவுதல் முதலிய செயல்களை மேற்கொள்ளும். இவற்றை ஏற்கெனவே சில செயலிகள் செய்துகொண்டுதான் இருக்கின்றன என்றாலும்,கூகுளின் சேவை இன்னும் கூடுதல் தரம் வாய்ந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

      *’commentary’ என்ற புதிய திரை வாசிப்பு மென்பொருள் இந்த ஆண்டு பார்வை மாற்றுத்திறனாளிகளால் அதிகம் பேசப்பட்டது. சீனாவைச் சேர்ந்த பார்வையற்றவர் ஒருவரால் கண்டறியப்பட்ட இந்த திரைவாசிப்பான்  ஏற்கெனவே பயன்பாட்டில் இருக்கும் google talkback-ஐக் காட்டிலும் கூடுதல் வசதிகளைக் கொண்டது என்று அடித்துச் சொல்கிறார்கள் இதைப் பயன்படுத்தியவர்கள்.

      *பலரும் அறிந்த envision AI செயலியைத் தயாரிக்கும் நிறுவனம் ‘envision glasses’ என்ற புதிய கருவியை உருவாக்கியுள்ளது. இக்கருவியில் முகத்தில் அணியும் கண்ணாடியும், காதில் அணிய ஒரு ஹெட்போனும் தரப்படும். கண்ணாடி வழியாகக் காணப்படும் பொருட்களை, நபர்களை இது நமக்குக் காது வழியே அடையாளப்படுத்திச் செல்லும். இது கூகுளின் பங்கேற்போடு மேற்கொள்ளப்படும் செயல்பாடு. ஏற்கெனவே ஆர்க்கம் கருவியும் இதே வேலையைத்தான் செய்கிறது.

விளையாட்டு

      இந்த ஆண்டு கொரோனா தொற்று அச்சம் காரணமாக பெரும்பாலான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படவில்லை. 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகளும் இந்த ஆண்டு நடைபெறவில்லை.

      *டெல்லியில் நடைபெற்ற தேசிய அளவிலான பார்வையற்ற பெண்களுக்கான கபடிப் போட்டியில் வாகையர் பட்டத்தை வென்றது தமிழ்நாடு மகளீர் அணி.

grphic மாரிமுத்து
மாரிமுத்து

      *தேசிய அளவிலான அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கான சதுரங்கப் போட்டியில் வாகையர் பட்டத்தை வென்றார் தமிழகத்தைச் சேர்ந்த மாரிமுத்து. விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்த இவர், சென்னை லயோலா கல்லூரியில் பயின்றுவருகிறார். மேலும், இந்த ஆண்டு நடைபெற்ற பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கான சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்துகொண்ட இந்திய அணியில் இடம்பெற்ற தமிழர் இவர் மட்டுமே.

      *தமிழகத்தைச் சேர்ந்த பார்வை மாற்றுத்திறனாளி ஜூடோ வீரர்களான மனோகரன், மகேஸ்வரி ஆகியோர் 2020 பாராலிம்பிக்கிற்கான தகுதிச் சுற்றில் விளையாடத் தெரிவாகியிருந்தனர். இருந்தபோதிலும், போட்டிக்குச் செல்லப் போதிய நிதி இல்லாமல் துயருற்றனர்.

      *தமிழ்நாடு பார்வையற்றோர் விளையாட்டுச் சங்கம் (TABSA) சார்பில் பார்வையற்றோருக்கான உடல்திறன் சவால் (fitness challenge) போட்டி இணைய வழியில் நடத்தப்பட்டது. இத்தகைய போட்டிகள் நடத்தப்படுவது இதுவே முதல்முறை. போட்டியில் கலந்துகொண்டவர்கள் காணொளி வழியே தங்கள் உடல் திறனை வெளிப்படுத்தி அனுப்பிவைத்தனர்.

      *தமிழ்நாடு பார்வையற்றோர் விளையாட்டுச் சங்கம் தேசிய அளவிலான பார்வையற்றோருக்கான விளையாட்டு அமைப்புகளை ஒருங்கிணைத்து ஒரு விழா நடத்தியது.

      *தமிழ்நாடு பார்வையற்றோர் கால்பந்து விளையாட்டுச் சங்கம் தொடங்கப்பட்டது.

      *வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் அரசுகளின் சலுகைகளில் மற்ற விளையாட்டு வீரஅர்களைப் போல் அல்லாமல், பாரபட்சம் காட்டப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் ஒரு வழக்கு தொடுக்கப்பட்டது.

இறப்புகள்

graphic பிரசன்னகுமார் பின்ச்சா
பிரசன்னகுமார் பின்ச்சா

      *இந்திய அரசின் ஊனமுற்றோர் விவகாரங்கள் துறையில் ஆணையராகப் பதவி வகித்த பார்வை மாற்றுத்திறனாளியான பிரசன்னகுமார் பின்ச்சா உடல் நலக் குறைவால் காலமானார். இவர் தனது பணிக் காலத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கென பல நற்பணிகளை மேற்கொண்டிருக்கிறார். குறிப்பாக handicap என்ற சொல்லை மாற்றி persons with disability என்ற சொல்லை அதிகாரப்பூர்வமாக்கியது, பார்வையற்றோருக்கான தேர்வு எழுதும் முறையில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள் முதலியவை இவரை என்றென்றும் நினைவுகூரவைக்கும்.

graphic திரு. A.K. மிட்டல்
திரு. A.K. மிட்டல்

     *அகில இந்திய பார்வையற்றோர் கூட்டமைப்பின் (AICB) பொருளாளராக இருந்த திரு. A.K. மிட்டல் இயற்கை எய்தினார். இவர் world blind union என்ற பார்வையற்றோருக்கான உலகளாவிய அமைப்பிலும் தொடர்ந்து பணியாற்றியவர். அத்தகைய அமைப்பில் பொருளாளர், தலைவர் என்ற பணிகளில் இருந்த ஒரே ஆசியர்.

graphic திரு. முத்துசாமி அவர்களின் படம்
 திரு. முத்துசாமி

      *தமிழகத்தில் பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் & பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் முத்துசாமி அவர்களின் இறப்பு நம்மை அதிர்[ச்சிக்குள்ளாக்கியது. அறியப்படாத விபத்தால்/தாக்குதலால் படுகாயமுற்ற இவர் இறப்பில் இருக்கும் மர்மங்களும் ஐயங்களும் இன்னும் நீங்கவில்லை.

திரு. அருணாச்சலம்

      *அகில இந்தியப் பார்வையற்றோர் முற்போக்குச் சங்கத்தின் நிறுவனரான அருணாச்சலம் கொரோனா பெருந்தொற்று காரணமாகக் காலமானார். ஊரடங்கு காலத்தில் சென்னையின் பல பகுதிகளிலும் இருக்கும் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு நேரடியாக உதவிய பார்வை மாற்றுத்திறனாளி இவர். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல்பாட்டாளர் இவர்.

graphic D.K. patel
D.K. படேல்

     *பார்வை மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மிகப்பெரிய அளவில் நிதியுதவி வழங்கிய D.K. படேல் காலமானார். ஹாங்காங்கில் வசித்த இவர், help the blind foundation என்ற தனது அமைப்பின் மூலம் தமிழகமெங்கும் உள்ள பார்வையற்ற கல்லூரி மாணவர்களுக்கென பல உதவிகளை வழங்கியவர். சென்னை புனித லூயி பள்ளி, மதுரை இந்தியப் பார்வையற்றோர் சங்கம், திருவண்ணாமலை அமலராக்கினி பள்ளி, திருச்சி பார்வையற்ற மகளீருக்கான இல்லம் முதலிய அமைப்புகளுக்குக் கட்டடங்களையும் தனது அமைப்பின் சார்பில் கட்டிக்கொடுத்தவர்.

graphic கோவை ஞானி
கோவை ஞானி

      *தமிழ் நவீன இலக்கிய உலகில் முதன்மைத் திறனாய்வாளராகக் கருதப்பட்ட கோவை ஞானி காலமானார். இவர் தன் வாழ்வின் பிற்பகுதியில்தான் பார்வையை இழந்தார் என்றாலும், அதன் பிறகுதான் தீவிர இலக்கிய விமர்சகராகச் செயல்பட்டார்.

எதிர்பார்ப்பு

      *தமிழக அரசு மாற்றுத்திறனாளிகள் நல உரிமைச் சட்டம் 2016-இன் அடிப்படையில் அனைத்துப் பின்னடைவுக் காலிப் பணியிடங்களையும் நிரப்பவிருப்பதாக அறிவித்துள்ளது. அது இந்த ஆண்டு செயல்படுத்தப்படும் என நம்புவோம்.

      *புதுப்பிக்கத்தக்க பிரெயில் திரை (refreshable Braille display) கருவியான ஆர்பிட் ரீடரை (Orbit reader) முதல் கட்டமாக சில பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்குவதற்குத் தமிழக அரசு நிதி ஒதுக்கியுள்ளது.  அதுவும் இந்த ஆண்டு செயல்படுத்தப்படும் என நம்புவோம்.

      *இந்திய அரசு ஊனமுற்றோர் இயல் தொடர்பான பல்கலைக் கழகம் ஒன்றை ‘University of disability studies  and Rehabilitation sciences’ என்ற பெயரில்  அஸ்ஸாமில் நிறுவத் திட்டமிட்டுள்ளது. அதுவும் இந்த ஆண்டு நிறைவேறவேண்டும்.

      *நயன்தாரா பார்வை மாற்றுத்திறனாளியாக நடிக்கும்நெற்றிக்கண்’, பிரஷாந்த் பார்வை மாற்றுத்திறனாளியாக நடிக்கும் அந்தகன்ஆகிய படங்கள் தற்போது பார்வையற்ற கதாபாத்திரங்களைக் கொண்டவையாக அறிவிக்கப்பட்டுள்ளன. அவை விரைவில் வெளியாகவேண்டும்.

graphic கட்டுரையாளர் பாலகனேசன் அவர்களின் படம்
கட்டுரையாளர் பாலகனேசன்

தொடர்புக்கு: balaganesan22885@gmail.com

2 கருத்துகள்:

  1. மிக அருமையாக அனைத்து தகவல்களையும் திரட்டி வழங்கி இருக்கிறீர்கள். பல புதிய தகவல்களையும் அறிந்துகொள்ள உங்கள் கட்டுரை எனக்கு உதவியது. இந்த கட்டுரையில் உங்கள் கடும் முயற்சி உழைப்பு எல்லாம் தெளிவாகத் தெரிந்தது. தொடரட்டும் உங்கள் பணி.

    பதிலளிநீக்கு