தாய்மை: ஆச்சரியங்கள் ஒய்வதில்லை – ஆங்கிலத்தில் - ஜெர்ரி டெக்கென்ஸ், தமிழில் - முனைவர் கு. முருகானந்தன்

graphic பார்வையற்ற பெண் ஒருவர் குழந்தையை நடவண்டியில் அமர்த்தி , அந்த வண்டியைத் தள்ளிக் கொண்டு கையில் ஊண்றுகோளுடன் வரும் படம்

 (குறிப்பு:  ஜெர்ரி டெக்கென்ஸ் (1951) முழுப் பார்வையோடு பிறந்து, தனது ஆறாவது வயதுக்குப் பின்னர் ரெட்டினாவில் ஏற்பட்ட குறைபாடு காரணமாக சிறிது சிறிதாகப் பார்வையை இழக்கத் தொடங்கினார். தனது பார்வையின்மையை ஏற்றுக்கொண்டு ஒரு பார்வையற்ற பெண்ணாக வாழ்க்கையை அவர் எதிர்கொண்டதை கண்ணாமூச்சி விளையாட்டு (Blind Man’s Bluff) என்ற தனது தன் வரலாற்று நூலில் நேர்மையாகவும், விரிவாகவும் பதிவுசெய்துள்ளார். பார்வையற்றோருக்கான சிறப்புக் கல்விப் பயிற்சியும், சமூகப் பணியில் பட்டமும் முடித்த ஜெர்ரி ஊனமுற்றோருக்கான அமைப்பு ஒன்றில் பணிக்குச் சேர்கிறார். இடையில் ஜெர்ரியின் இணையர் டேவிட் கொண்டிருந்த மனப் பதற்றப் பிரச்சனை அதிகரித்து, அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டுப் பிரிந்துவிடுகின்றனர். ஜெர்ரி தனது மூன்று வயதுக் குழந்தை நோளன் மற்றும் நாய் ஹெர்பெர்ட் ஆகியோரோடு தனியாக வாழ்ந்து வருகிறார்,முற்பகல் வேளைகளில் மட்டும் டேவிட் குழந்தையை கவனித்துக்கொள்கிறார். பிற்பகல் வேளைகளில் குழந்தையைக் கவனித்துக்கொள்ள மேரி என்ற பெண்ணைப் பனியமர்த்தியிருக்கிறார் ஜெர்ரி. இக்கட்டத்தில் அவரது ஒருநாள் மாலை தொடங்கி அதிகாலை வரையிலான வாழ்க்கை (இயல் 41) விரல்மொழியர் வாசகர்களுக்காக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இதன் ஆங்கில மூலம் Book Share இணையதளத்தில் கிடைக்கிறது என்பது கூடுதல் தகவல்!}

      நான் பேருந்தில் இருந்து இறங்கி என் அபார்ட்மெண்டிற்கான படிகளில் வேகமாக ஓடிச் சென்று என் வீட்டின் கதவைத் திறந்தேன். எட்டு மணிநேர வேலைக்குப் பிறகு வீடு திரும்பியுள்ள நான் இதற்கு மேலும் என் மகனைப் பார்க்காமல் காத்திருக்க முடியாது. நான் எனது அபார்ட்மெண்டிற்குள் நுழைந்த போது நோலனின் காலணிகளில் இருந்து கேட்ட எனக்குப் பழக்கமான ஜிங்லிங் மணிகளின் ஒலியைக் கொண்டு அவன் என்னை நோக்கி ஓடி வருவதை என்னால் உணர முடிந்தது.

         "ஏய், நோலி பையா!" என்று அழைத்தபடி எனது வெண்கோலைக் கதவுக்கு அருகில் இருந்த அலமாரியில் தூக்கி எறிந்தேன். ஹெர்பர்ட், நோலன் இருவருமே நான் எனக்கென்று எதையும் செய்துகொள்வதற்கு முன்னர் தங்களுக்குரிய அணைப்பைப் பெற்றாக வேண்டும் என்ற முனைப்பில் எனது கவனத்திற்காக எத்தனித்தனர்.

      நான் ஹெர்பெர்ட்டின் தலையைத் தடவிக்கொடுத்து நல்ல பையன் ஹெர்பெர்ட்!” என்று சொல்லி அவனை மெதுவாக நகர்த்தி எனது அருமைக் குழந்தையைத் தூக்க முன்னேறும் போதே நோலன், “தூக்கு! தூக்கு! தூக்கு!” என்று அடம்பிடித்தான்.

தூக்கிவிட்டேன் எனது நேசக் குழந்தையே!” என்று அவனைப் போலவே சொல்லிக் கொண்டே அவனைத் தரையில் இருந்து தூக்கினேன்.

      "நீ இன்று மேரிக்கு நல்ல பையனாக நடந்து கொண்டாயா?" அவன் இப்போது என் தோள்களில் தொங்கிய சுருள் முடி வழியாக அவனது விரல்களை ஓடவிட்டான். அவன் தனது விரல்களை என் முகத்தின் சட்டகத்தைச் சுற்றி வருடி,என் கன்னங்களின் வழியாக என்வாயை நோக்கி நகர்த்தினான். என் கன்னங்களைத் தனது மூக்கால் வருடி நாக்கால் சுவைக்கும் பழக்கத்தை அவன் ஒரு சடங்காகவே பின்பற்றி வந்தான். இது தாய்க்கும் மகனுக்கும் இடையில் நிகழ்ந்த வினோதமானதொரு நலம் விசாரிப்பாகத்தான் இருந்தது. ஆனால் இருக்கும் எல்லாப் புலன்களையும் பயன்படுத்தித் தொடர்பாடும் ஒரு தாயால் வளர்க்கப்பட்டதே இதற்குக் காரணம் என்பதை நான் உணர்ந்திருந்தேன்.

      ஆமாம்,நிச்சயமாக  நல்ல பையனாக இருந்தான்!” என்றாள் ஒவ்வொரு பிற்பகலிலும் நோலனை கவனித்துக்கொண்ட அந்த அற்புதமான பெண்மணி. குழந்தையைப் பார்த்துக் கொள்ளும் பணியில் டேவிடுக்கு பிற்பகலில் ஓய்வு அளிக்கவே மேரியை பணியமர்த்தியிருந்தேன்.

      "நோலன் இன்று உண்மையில் நன்றாகச் சாப்பிட்டான், பின்னர் இரண்டு மணிக்குத் தூங்கினான். சுமார் ஒன்றரை மணி நேரம் தூங்கினான்; அவன் அவ்வளவு நேரம் தூங்கியது ஆச்சரியம்தானே! அந்த உன்னதமான ஆத்மா ஹெர்பி எல்லா நேரமும் அவனுடன் கூடவே இருந்தான். அவன் எழுந்த பின்னர் நாங்கள் கட்டங்கள் விளையாடினோம், அவன் எனக்கு வாழைப்பழ ரொட்டிகள் தயாரிக்க உதவினான். நான் அதனை குளிர்சாதனப் பெட்டியின் மேல் வைத்திருக்கிறேன். எனக்காகவும் ஒன்றை எடுத்துக் கொண்டேன், அதுபற்றி நீ கோபித்துக் கொள்ள மாட்டாய் தானே?"அட கண்டிப்பாக இல்லை! நன்றி மேரி, உங்களைப்போல மிகச் சிறந்த ஆளை நான் சந்தித்ததில்லை".

      அவள் அபார்ட்மெண்டிலிருந்து வெளியேறுவதற்கு முன்பு தானாக வந்து எனக்கு ஒரு ஹக் கொடுத்துவிட்டு நோலனின் தலையின் மேல் முத்தமிட்டாள். அவளுக்கு இருந்த அளவற்ற தாராள குணத்தை எண்ணி எண்ணி வியந்தேன்,அவளை எப்படி முதலில் கண்டுபிடித்தேன் என்பதே எனக்கு ஆச்சரியமாகத்தான் இருந்தது.

      நான் பணியில் சேரலாம் என்று பாப்பிடமிருந்து செய்தி வந்த உடனே, குழந்தை நோலனை ஏதாவது ஒரு பகல்நேரப் பராமரிப்பு மையத்தில் விடுவதைத் தவிர்க்கும் முயற்சியாக செய்தித்தாளில் ஒரு சிறிய விளம்பரத்தைக் கொடுத்து வைத்திருந்தேன். மூன்று பேர் என்னைத் தொடர்பு கொண்டார்கள்; ஆனால் மேரி மட்டுமே மற்றவர்களைவிட விஞ்சி நின்றாள். நான் கடந்த காலத்தில் பெற்ற அரசாங்க உதவித்தொகையைவிட எனது வருமானம் நன்றாகவே உயர்ந்திருந்த போதிலும்,குழந்தை பராமரிப்புக்காக அதிகம் செலவு செய்யும் நிலையில் நான் இருக்கவில்லை. மேரி தான் பெற்று வந்த சமூகப் பாதுகாப்புச் சலுகைகளைத் தொடர்ந்து பெறுவதற்கு குறைந்த வரம்புக்குள் மட்டுமே ஊதியம் பெறமுடியும் என்பதால், பிறரைவிட குறைவான ஊதியத்தில் பணி செய்ய அவள் தயாராக இருந்தாள். சாப்பிட அல்லது சமைக்கப் பயன்படும் எந்தவொரு உணவுப் பொருளையும் தனது ஊதியத்தின் ஒரு பகுதியாக ஏற்றுக்கொள்ள அவள் தயாராக இருந்தாள். பாத்திரங்கள் சுத்தம் செய்யவோ, பிற வீட்டு வேலைகளிலோ அவள் கைவைக்கவே வேண்டாம் என்று நான் வற்புறுத்தினாலும், நான் வீடு திரும்பும்போது ஒருபோதும் வீடு அலங்கோலமாக இருந்ததில்லை. அவளிடம் இருந்த மிகச் சிறந்த பண்புகள் அவளது எல்லையற்ற உற்சாகமும் அவள் என் மகனைச் சொந்தப் பாட்டி போல நேசித்ததும்தான்.

      என் வாழ்க்கையில் அவளைச் சந்தித்தது எவ்வளவு பெரிய ஆசீர்வாதம் என்று நான் அவளிடம் சொன்னபோதெல்லாம்,"என் அன்புக்குரியவளே! இது ஏற்கனவே நட்சத்திரங்களில் எழுதி வைக்கப்பட்டிருப்பது உனக்குத் தெரியாதா? நம் இருவருமே ஒருவருக்கொருவர் தேவைப்படுகிறோம். அது போக,உலகம் சுற்றுவது அன்பினால் தானே? நம் இருவருக்கிடையேயும் உள்ள அன்பு அனைவருக்கும் சேர்த்து பூமி சுற்றப் போதுமானது!” என்று அவள் அலட்டிக் கொள்ளாமல் மறுமொழி கூறிவிட்டு எனக்கு ஒரு பெரிய ஹக் கொடுப்பாள். இருந்தாலும் அவளுக்கு மீண்டும் நான் நன்றி கூறுவேன்.

         "அப்படியென்றால் நீ இன்று நல்ல பையனாக இருந்துவிட்டாய் போலிருக்கிறதே!" என்று கேட்டபடி நோலனை என் படுக்கையில் கிடத்திவிட்டு வசதியான சாதாரண உடைகளை மாற்றிக்கொண்டேன். ஹெர்பர்ட் அவனருகில் துள்ளிக் கொண்டிருந்தான். "அம்மா  பூங்காவிற்கு அழைத்துச் செல்லவா?"என்று நான் கேட்ட மாத்திரத்தில் "பா-பா!" என்று சத்தமிட்டு அவன் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினான். இந்த மந்திர வார்த்தையின் ஒலி கேட்டதும் ஹெர்பெர்ட் தனது வாலைப் படுக்கையில் வேகமாக அடித்துக்கொண்டான்.

      நீண்ட நேர வேலையின் காரணமாக எனக்குச் சோர்வு ஏற்பட்டிருந்த போதிலும்,  எங்கள் இருவரையும் சேர்த்து அள்ளிக்கொண்டு எழுந்தேன். பணிச்சறுக்கு வண்டியையும் எனது வெண்கோலையும் முன் அலமாரியிலிருந்து இழுத்தேன். ஹெர்பி எழுப்பிய மூச்சின் ஒலியிலிருந்தே தனது டென்னிஸ் பந்தைக் கண்டுபிடித்து எடுத்துக்கொண்டு அவன் செல்லத் தயாராகிவிட்டான் என்பதை நான் அறிந்துகொள்ள முடிந்தது. நோலனைத் தூக்கி எனது வலது இடுப்பில் வைத்துக்கொண்டு, என் கையில் வெண்கோலையும் சேர்த்து அவனை அசையாதபடி உறுதியாகப் பிடித்துக்கொண்டேன். நான் கதவைத் திறந்து அது மூடாமல் என் காலால் பிடித்துக்கொண்டதால் எனக்குப் பின்னால் பனிச்சறுக்கு வண்டியை நான் வெளியில் இழுக்க முடிந்தது. எங்களின் எந்தவொரு விரலோ அல்லது வாலோ மாட்டிக்கொண்டு நசுங்கிவிடாமல் நான் எப்படியோ ஒரே பெரிய மூச்சில் எல்லோரையும் கதவுக்கு வெளியில் அழைத்து வந்துவிட்டேன்.

        வெளியில் வந்ததும் நோலனைப் பனிச்சறுக்கு வண்டியில் அமரவைத்து, வலது கையால் எனது வெண்கோலைப் பயன்படுத்திக்கொண்டே இடது கையால் வண்டியை இழுத்தேன். சாதாரண நிலப்பரப்பில் நடப்பதை விட பனியில் நடப்பது மிகவும் கடினமான ஒன்று. பனி மூடிய நடைபாதை எந்த இடத்தில் முடிந்து சமவெளி நடைபாதை எங்கே தொடங்கியது என்று தெரியாமல் நான் சில நேரங்களில் குழப்பமடைந்தேன்.ஆனால் ஓடிக்கொண்டிருந்த வாகனங்களின் சத்தம் நான் விழிப்புடன் இருக்க உதவியது. ஒருவழியாக நான் என் வீட்டிலிருந்து மூன்று கட்டடங்களுக்கு அப்பால் இருந்த படிக்கட்டுகளைக் கண்டுபிடித்துவிட்டேன். அந்தப் படிக்கட்டு ஒரு குன்றின் மீதிருந்த பூங்காவிற்கு அழைத்துச் சென்றது.

      பனி மூடிய பாதையில் நாங்கள் ஏறி இறங்கிச் சென்று கொண்டிருந்தபோது ஹெர்பி தனது பந்தைத் துரத்திக்கொண்டு முன்னால் சென்றான். மரங்கள் இல்லாத ஒரு குன்றினைக் கொண்ட இந்த சிறிய மறைவிடத்தைப் பற்றி உள்ளூர்வாசிகளுக்கு மட்டுமே தெரியும். பொதுவாக இருப்பதைக் காட்டிலும் பெரிதான பரப்பில் மூன்று பக்கங்களுக்கு வீடுகளின் வெளிப்புறச் சுவர்களுக்கு இடையே இந்தக் குன்றுப் பகுதி அடைக்கப்பட்டிருந்ததால் நோலன், ஹெர்பி,  நான் மூன்று பேரும் அடிக்கடி தனியாக இருக்க நேரிட்டது. எனது கால்கள் தொடர்ந்து தரையில் நிற்க மறுத்தபொழுது நான் என் மகனுக்குச் செய்தியை அறிவித்தேன். 

      "மொட்டைப் பையா, நாம் வீட்டிற்குச் செல்லவேண்டிய நேரமிது!"

      "தூக்கு! தூக்கு!” என்று தொடர்ந்து அடம்பிடித்தான் நோலன். எனவே நான் இன்னும் மூன்று முறை அவனைத் தூக்கினேன். இறுதியில் நாங்கள் வீட்டிற்குச் செல்ல வேண்டும் என்று எனது இரண்டு பையன்களையும் சமாதானப்படுத்தினேன். நான் என் மகனை வீட்டிற்கு வண்டியில் அமரவைத்து இழுத்துச் சென்றபோது ஹெர்பெர்ட் அவனது பந்திணைத் தனது பற்களுக்கு இடையில் உறுதியாகப் பற்றிக்கொண்டு எங்களைப் பின்தொடர்ந்தான். நான் இரவு உணவுக்கு ஏதோ ஒன்றைச் செய்து சமாளித்து, எங்கள் மூவருக்கும் பசியாற்றி, பாத்திரங்களைச் சுத்தம்செய்து, அனைவரையும் படுக்கைக்குத் தயார்படுத்தியபோது தூக்கம் எனது கண்களைப் பாதி மூடியிருந்தது. நோலன் வழக்கத்திற்கு மாறாக அடம்பிடித்த போதிலும், கடைசியில் பத்து மணியளவில் என் மடியில் தூங்கிப்போனான். உடனே ஹெர்பியும் நானும் உறங்குவதற்காக எங்களுக்குரிய படுக்கைகளில் சாய்ந்தோம்.

        அடுத்த அறையில் என் மகன் அழும் சத்தம் கேட்டு நான் விழித்தபோது சிலவினாடிகள் மட்டுமே கழிந்திருக்கும் என்று தோன்றியது. நான் எழுந்து அவனுக்கு என்ன ஆனது என்று பார்ப்பதற்காக அவன் உறங்கிக்கொண்டிருந்த அடுத்த அறைக்குச் சென்றேன்.

         "குட்டிப் பையனுக்கு என்ன ஆச்சு?"என்று கேட்டுக்கொண்டே கீழே குனிந்து அவனது உடலின் மீது கைவைத்துப் பார்த்தேன்.

            "அடடா! இதென்ன உன் உடம்பு இவ்வளவு சூடாக இருக்கிறது?" என்றேன், அவனது தகிக்கும் உடல் எனது கைகளுக்குள் இருப்பதை உணர்ந்தேன். சற்று பீதி அடைந்தவளாக நான் அவனைத் தூக்கினேன். அவனது மேனியும் தசைகளும் வறண்டு, இறுக்கமாக மாறியிருந்தன. நான் அவனை என்னுடைய தோள்களில் வைத்து ஆறுதல் படுத்த முயற்சித்தேன், ஆனாலும் அவன் அழுவதை நிறுத்தவே இல்லை.

        நாங்கள் மூவரும் குளியலறைக்குச் சென்றோம்; நான் அங்கிருந்த மருந்துகளுக்கான பெட்டகத்தில் குழந்தைகளுக்குப் பயன்படுத்தும் டைலெனால் மருந்தைக் கண்டுபிடித்தேன். அந்த மருந்தைக் கீழே சிந்திவிடக்கூடாது என்ற கவனத்துடன் ஒரு கையை மட்டுமே பயன்படுத்தி சிறஞ்சில் நிரப்பினேன். சிறஞ்சை அவனது வாய்க்குள் நுழைத்து மருந்தைச் சொட்டு சொட்டாக உள்ளே செலுத்தினேன்.

        மீண்டும் நாங்கள் வீட்டின் அறைக்குத் திரும்பினோம். அவன் பார்ப்பதற்கு வசதியாக விளக்கைப் போட்டுவிட்டு அவனை ஆட்டத்தொடங்கினேன். என் கைகளில் அழுதுகொண்டிருந்த குழந்தையை வெறித்துப்பார்த்தபடி ஹெர்பி, என் முழங்காலில் அவனது கன்னத்தைச் சாய்த்துக்கொண்டு நின்றான்.

      என்னுடைய சக பராமரிப்பாளனாக இருந்த அவனிடம்,இவனுக்கு என்ன ஆச்சு நு தெரியலையேடா"என்று சொல்லிக்கொண்டே கொதித்துக்கொண்டிருந்த நோலனின் நெற்றியைத் தொட்டுப்பார்த்தேன்.

      என்னால் செய்யமுடிந்த எதுவும் நோலனை அமைதிப்படுத்தவில்லை. அவன் இன்னமும் தொடர்ந்து அழுதுகொண்டேதான் இருந்தான் என்றாலும்,மார்பில் தோன்றிய இறுக்கம் காரணமாக அவனது அழுகை பலவீனமாக ஒலித்தது. என் உடலின் மூலம் நான் உணர்ந்த அவன் உடலின் கொதிப்பு காய்ச்சல் வேகமாக மோசமடைந்து வருவதை எனக்குத் தெளிவாகக் காட்டியது.

         "கடவுளே! என்னால் ஒரு தெர்மோமீட்டரைப் பார்க்கமுடிந்தால் கூட எவ்வளவு நன்றாக இருக்கும்!”என்று இப்போது என் காலடியில் படுத்துக்கிடந்த ஹெர்பியிடம் சொன்னேன்.

         முப்பது நிமிடங்களுக்கும் அதிகமாக நான் அவனை ஆட்டியும், நடந்துகொடுத்தும்,எனக்குத் தெரிந்த பாடல்களையெல்லாம் பாடியும் முயற்சித்த பின்னரும் கூட நோலன் உடலின் வெப்பம் இன்னும் கூடியிருந்ததாகவே தோன்றியது. அவனுடைய உடல் சுருங்கத் தொடங்கியதைப் பார்க்கும்போது அவனுக்கு வலிப்பு  ஏற்பட்டதுபோல இருந்தது. எங்கே அவன் எரிந்து போய்விடுவானோ என்று பயம் கொண்டவளாய் தெர்மோமீட்டரைப் பார்த்துச் சொல்ல என் உதவிக்கு யாரை அழைக்கலாம் என்று யோசிக்க ஆரம்பித்தேன். என் அண்டை வீட்டுக்காரர்கள் அவ்வளவு நம்பத்தகுந்தவர்கள் அல்ல என்பதால் யாரும் நினைவுக்கு வரவில்லை. கடைசியில் அதிகாலை நேரமாக இருந்தாலும் பரவாயில்லை என்று எனது அம்மாவைத் தொடர்புகொள்ள முடிவுசெய்தேன்.

      அவள் "ஹலோ..." என்று அரை மயக்க நிலையில் சொன்னாள்.

         "ஹாய் அம்மா!"என்றேன் நான். அவளுக்கு நோலன் அழுதுகொண்டிருக்கும் சத்தம் பின்னணியில் தெளிவாகக் கேட்டிருக்கும் என்பதில் கொஞ்சமும் சந்தேகமில்லை.

         "என்ன விஷயம்?" என்று உடனடியாகக் கேட்டாள் அவள்.

         " அது வந்து, நோலனின் உடம்பு கொதிக்கிறது, ஆனால் அவனது உடல் வெப்பம் என்னவென்று என்னால் சரியாகக் கூற முடியவில்லை.”

         "என்   தங்கமே!  பக்கத்து வீட்டுக்காரர்கள் அல்லது வேறு யாரையாவது எழுப்பமுடியுமா?"என்று அவள் அனுதாபத்துடன் கேட்டாள்.

   "உண்மையில் அது இப்போதைக்கு முடியாது. இப்போது  அதிக நேரமாகிவிட்டது" என்று நோலனின் அலறலுக்கு மேலே பேசினேன்.

   "அது சரி,மணி என்னஆகிறது?" என்று கேட்டாள்.

  "மணி மூன்றுக்கு மேல் இருக்கும்".

  "அப்படியா? சரி. நீ ஒரு துண்டை எடுத்து அதைக் குளிர்ந்த நீரில் நனைத்து அவனது உடலில் போர்த்திவை.

            "அப்படிச் செய்தால் அவனுக்கு இன்னும் அதிக வேதனையாக இருக்காதா?"

            இருக்கலாம், ஆனால் இதைச் செய்தால்தான் அவனுடைய காய்ச்சல் குறையும். உண்மையில் அவன் அழுவது நல்லதுதான் ஜெர்ரி. அழுகிறான் என்றால் அவன் நன்றாக இருக்கிறான் என்றுதான் பொருள். அவன் அழுவதைக் கேட்டுக்கொண்டிருப்பது கடினம்தான் என்று எனக்குத் தெரியும்,ஆனால் இந்நேரம் நானாக இருந்தால் அவனது நெற்றிச் சூடு குறைவதை நீ உணரும் வரைக்கும் அவனது உடம்பில் குளிர்ந்த ஈரத் துணியைப் போர்த்திவைத்திருப்பேன். ஆனால் அவனது தலையில் ஈரத் துணியை வைக்காதே, அப்போதுதான் உடம்பில் போர்த்தியிருக்கும் ஈரத் துண்டு சூட்டைக் குறைக்கிறதா என்பதை நீ அளவிட முடியும்."

    "ஒருவேளை அது வேலை செய்யவில்லை என்றால்?"

   "அப்படி வேலைசெய்யவில்லை என்றால் நீ ஒரு வாடகை வண்டியை வரச்சொல்லி அவனை அவசர சிகிச்சை மையத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும். உன்னிடம் அதற்குப் பணம் இருக்கிறதா?"

      நல்ல வேலையாக பணம் இருக்கிறது என்று எண்ணியபடி "ஆம்,இருக்கிறது" என்றேன். நான் ஏற்கனவே அதிக நேரத்தைக் கடத்திவிட்டேனோ என்று கவலைகொண்டவளாக   

  ஒருவேளைஇப்போதே நான் அப்படிச் செய்தால் என்ன?" என்று கேட்டேன்.

         "அவன் இப்போதைக்கு நன்றாக இருக்கிறான் என்றுதான் நினைக்கிறேன். நான் சொன்னதுபோல,அவன் அழுகிறான் என்பதே ஒரு நல்ல அறிகுறிதான். குழந்தைகள் அமைதியாக இருக்கும்போதுதான் நாம் கவலைப்பட வேண்டும். ஆனால் அவனது தலை இந்த முயற்சிக்குப் பிறகும் குளிர்ச்சியடையவில்லை என்றால் உறுதியாக அவனை அழைத்துச்செல்லச் சொல்லுவேன்".

  சரி அம்மா,நன்றி".

  அவனுக்குக் காய்ச்சல் குறைந்தாலும் இல்லாவிட்டாலும் நீ எனக்கு அழைப்பாய்தானே!

         "நான் உன்னை மீண்டும் எழுப்பவேண்டாமே என்று பார்க்கிறேன். இப்படிச் செய்தால் என்ன? அவனது நிலைமை இன்னும் மோசமடைந்தால் மட்டும் நான் உனக்கு அழைக்கிறேன்".

         அடடா, சிறுபிள்ளை மாதிரிப் பேசாதே ஜெர்ரி. நான் எப்படியும் விழித்துவிட்டேன்,இதற்குமேல் திரும்பவும் தூக்கம் வருவது சந்தேகம்தான்.என்னுடைய வருத்தமெல்லாம் இந்த நேரத்தில் ஓடிவந்து உனக்கு உதவிசெய்யும் தூரத்தில் நான் இல்லையே என்பதுதான்.”

         "எனக்கும்தான் அம்மா!" என்று இப்போது அவள் என்னோடு இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று ஏங்கியபடி சொன்னேன்.இங்கே எனக்கு உதவுவதற்கு ஹெர்பெர்ட் இருக்கிறான், எங்கள் நிலைமை சரியாகிவிடும் என்று நினைக்கிறேன்என்று அவளுக்குச் சமாதானம் சொன்னேன். அம்மா ஒரு சிறு புன்னகை செய்தால், நாங்கள் விடைபெற்றுக் கொண்டோம்.

      அம்மா சொன்ன வழிமுறையைப் பின்பற்றத் தயாரான நான், நோலனின் எதிர்ப்பையும் மீறி அவனை என் கைகளிலிருந்து அவனுடைய படுக்கையில் வைத்தேன். அவனைத் தூக்கிவைத்துக்கொண்டே துண்டைத் தண்ணீரில் நனைக்க எனக்கு எந்த வழியும் இல்லை. நோலனின் அலறல் சத்தம் அதிகரிக்க அதிகரிக்க ஹெர்பெர்ட்டுக்கு மூளை வெடித்துவிடுமோ என்று பயந்துபோனேன். அவன் ஊளையிட்டுக்கொண்டே என் கால்களுக்கு இடையில் புகுந்து உள்ளேயும் வெளியேயும் சுற்றி வந்து குளியல் தொட்டியின் அருகே நின்றுகொண்டிருந்த என்னை ஒரு நிலையிலிருந்து தள்ளிவிட ஆனமட்டும் முயற்சித்துப் பார்த்தான்.

         "சரி சரி பையா, பரவாயில்லை விடுஎன்று அவனுக்கு தைரியம் சொல்லிக்கொண்டே நான் தண்ணீர் தொட்டிக்குள் சாய்ந்து ஒரு தடிமனான துண்டை நனைத்து வெளியே எடுத்தேன். பின்னர் நான் நோலன் படுத்திருந்த அறைக்குத் திரும்பி, அவன் அணிந்திருந்த பைஜாமாவைக் கழற்றிவிட்டு குளிர்ந்த ஈரமான துண்டை அவனுக்குப் போர்த்திவிட்டேன். அவன் தொண்டையைக் கிழித்துக்கொண்டு கத்திய கத்தில் குரல்வளையே பிய்ந்துவிடக் கூடுமென்று நான் அஞ்சினேன். ஆனாலும் ஏதாவது ஒரு வழியில் அவனை ஆறுதல்படுத்தலாம் என்ற நம்பிக்கையோடு நடப்பதையும் பாடுவதையும் தொடர்ந்தேன்.

      நான் இன்னும் எவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டியிருக்குமோ என்று கடந்துகொண்டிருந்த ஒவ்வொரு நிமிடத்திலும் சிந்தித்தேன். தொடர் வயிற்று வலியினால் துன்புறும் குழந்தைகளின் பெற்றோரைப் பற்றி எண்ணிப்பார்த்து அவர்களுக்கு எனது அனுதாபங்களைத் தெரிவிக்க விரும்பினேன். இந்த மாதிரியான பதற்றம் மிகுந்த சூழ்நிலைகளில் பிரச்சனைகளைப் பகிர்ந்துகொள்ளவும்,நெருக்கடிகளைக் கலைந்து அடுத்து என்ன செய்யலாம் என்று பேசி முடிவுசெய்யவும் ஒருவன் கூட இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நான் மீண்டும் ஏங்கினேன்.

      என்னை மன்னித்துக்கொள்ளடா என்னுடைய குட்டிப்பையா,சீக்கிரமே உனக்குச் சரியாகிவிடும்" என்று தழுதழுத்த குரலில் பரிவுடன் சொன்னேன். நான் வீட்டின் தளம் எங்கிலும் நடந்து கொடுத்துக்கொண்டே இருந்தபோதிலும், நோலன் தொடர்ந்து அழுஅழுவென்று அழுதுகொண்டேதான் இருந்தான். அவனது குழந்தையை நான் ஒன்றும் செய்யவில்லை என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளும் தீர்மானத்துடன் நான் எடுத்துவைத்த ஒவ்வொரு அடியையும் பின்தொடர்ந்து வந்துகொண்டிருந்தான் ஹெர்பர்ட். யுகமாகக் கழிந்த அந்த தருணத்தின் முடிவில் நோலன் தனது சத்தமான அழுகையை சினுங்கல்களாக குறைக்கத் தொடங்கினான். அவன் நெற்றியைத் தொட்டுப்பார்க்கும்போது அவனுடைய காய்ச்சல் குறைந்திருப்பதை என்னால் உணர முடிந்தது.

      நடந்து நடந்து களைத்துப்போயிருந்த நான் அலுங்காமல் அப்படியே அசையும் இருக்கையில் உட்கார்ந்தேன். நோலனின் உடம்பு தளர்வடைந்து அவன் ஓய்வெடுக்கத் தொடங்கியதால் அவன் நல்ல வேளையாக என்னை அப்படி உட்கார அனுமதித்தான்.

         "இப்போ இவனுக்குப் பரவாயில்லைன்னு நினைக்கிறேண்டா ஹெர்பெர்ட்.எனக்கு உதவி செய்ததற்குமிக்க நன்றியடா பையனே.என்று என் அருமையான கூட்டாளியான அவனிடம் சொன்னேன்.

ஹெர்பி அவனது உடலை என்னுடைய கால் விரல்களுக்கு மேலே அழுந்தும்படி வைத்து என் காலடியில் படுத்துக்கொண்டான்.

நான் குட் நைட் சொல்லிவிட்டு,என் குழந்தைக்கான ஜெபத்தைப் படித்தேன்.

      பொன்சிவப்பு வண்ணத்தில் எனக்குச் சில ரிப்பன்கள் வேண்டும், என் தலை முடிக்குச் சில சிவப்பு ரிப்பன்கள் வேண்டும்.

        சோகம் ததும்பும் அந்தப் பாடலின் வரிகளை நான் பாடிக்கொண்டிருக்கும்போதே கண்ணீர் துளிகள் என் கன்னங்களில் உருண்டோடத் தொடங்கின. நடந்துமுடிந்த கொடூரமான சோதனையின் பயம் இப்போது குறைந்திருந்ததால் தெர்மோமீட்டரைப் பார்க்க முடியாமல் இருப்பதற்காக என்னை நானே திட்டிக்கொண்டேன். ஒரு தாயாக எனது திறனைப் பற்றி எனக்குள்ளேயே நான் கேள்வி எழுப்பிக்கொண்டபோது நாங்கள் சந்தித்த மற்றொரு நெருக்கடி நினைவுக்கு வந்தது.

      அவனுக்குத் தையல் போட்டாக வேண்டுமென்று நீ கண்டுபிடித்த தருணம் ஞாபகத்தில் இல்லையா?”என்று பூங்காவில் நோலன் தனது சிறிய மூன்று சக்கர சைக்கிளில் இடித்துக்கொண்ட சம்பவத்தை நினைத்துக்கொண்டு என்னை நானே கேட்டுக்கொண்டேன். அவ்வாறு அவன் இடித்துக்கொண்டதும், வெட்டுக்காயத்தின் ஆழத்தை எனக்கு உணர்த்தக்கூடிய வலிமை என்னுடைய உடலிலேயே நாக்கிற்கு மட்டும்தான் உண்டு என்று இயல்பாகவே எனக்குத் தெரிந்திருந்தது. என் விரல்கள் எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு நன்றாகத் தகவமைக்கப்பட்டவைதான் என்றாலும்,அவை இத்தகைய நுட்பமான விவரங்களைக் கண்டறிய இயலாத வகையில் தடிமனாக இருந்தன. கடைசியில் அவனுக்கு நான்கு தையல்கள் போட்டாக வேண்டும் என்று முடிவானது. அவசர சிகிச்சை மைய ஊழியர்களும்கூட என் நாவின் திறமையை மட்டுமன்றி என் மகனின் குருதி தோய்ந்த முழங்காலைச் சுவைத்துப் பார்க்கும் முயற்சியில் நான் இறங்கியதையும் எண்ணி வியப்படைந்தனர்.

      அந்த நேரத்தில் என்ன செய்யவேண்டும் என்று எனக்கு எப்படித் தெரிந்திருந்தது என்பதை நினைத்து இன்னும்கூட வியப்படைந்தவளாய் நீ அப்படி ஒன்றும் மோசமில்லைஎன்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன்.

      ஆனால் உன்னால் ஒரு தெர்மோமீட்டரைக் கூட பார்க்க முடியாதே?”என்று வாதிட்டு எனக்குள்ளேயே நடந்துகொண்டிருந்த அந்தப் போரைத் தொடர்ந்தேன். இன்னும் எவ்வளவு பெரிய பிரச்சனைகலெல்லாம் வரலாம், அவனை நீ பாதுகாக்க முடியாமல்போனால்?” என்று நான் எனக்கே கேள்வி எழுப்பிக் கொண்டேன். அவன் ஒருநாள் வாயில் சிறு ஆணியைப் போட்டுக்கொண்டதை நீ எப்படி கண்டுபிடித்தாய் என்பது உனக்கு நினைவிருக்கிறதா?”என்று எதிர்க்கேள்வி கேட்டது என்னுடைய மற்றொரு குரல். ஆமாம், அது  உண்மைதான்!” என்று தயக்கத்துடன் ஒப்புக்கொண்டது என்னுடைய சந்தேகக் குரல்.

      நோலனுக்கு அப்போது ஒன்பது மாதங்கள் மட்டுமே இருக்கும். சமையலறையில் இரவு உணவு தயாரித்துக் கொண்டிருந்த நான்,என் கையிலிருந்த பெரிய வருகரண்டியை அப்படியே போட்டுவிட்டுவீட்டின் முன்னறைக்குள் ஓடினேன். தரையில் இருந்த என் குழந்தையைக் கண்டுபிடித்த நான், ஏதோ உள்ளுணர்வில் அவன் வாய்க்குள் கையைவிட்டு ஒரு சிறிய ஆணியை வெளியே எடுத்தேன். அதை நான் எப்படிக் கண்டுபிடித்தேன் என்று முதலில் எனக்கே புரியவில்லை. அது அவன் மூச்சுவிடுவதோடு தொடர்புடையது என்பதைப் பிறகுதான் உணர்ந்தேன். குழந்தைகள் வாய்வழியாகவே மூச்சுவிடுபவர்களாக இருப்பதால், அவனது சிறிய மூக்கின் வழியாகச் சென்றுவந்த காற்றின் ஒலி அவனது உதடுகள் மூடியிருப்பதை எனக்கு உணர்த்தி எச்சரித்திருந்தது.       ஹாம்பர்கர்களில் இருந்து உண்டான சிசில் சத்தத்தையும், தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருந்த சேசிமி ஸ்ட்ரீட் (குழந்தைகளுக்கான தொலைக்காட்சித் தொடர்) இரைச்சலையும் தாண்டி ஏதோ ஒரு வினோத ஒலி கேட்பதை நான் கேட்டிருக்கிறேன் என்பது உண்மையில் வியப்புக்குரியதுதான். "நான் எப்படி அதைக் கேட்டேன் என்று எனக்கு இப்போதும்கூட மிகவும் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது ஹெர்பெர்ட்," என்று தூங்கிக்கொண்டிருந்த எனது நாயிடம் சொன்னேன். எனக்குப் பார்வையில்லாமல் இருப்பது பற்றி நான் பெரிதாக அலட்டிக்கொண்ட கடந்த ஆண்டுகளில் கூட என் உடல் இப்படி ஏதாவது ஒரு வழியில் சமாளித்துக்கொள்ளும் என்று எனக்கு நன்றாகவே தெரிந்திருந்தது.

      ஹெர்பி, நான் உன்னைப்போல் இருந்தால் எவ்வளவு உத்தமம்! நீ ஒருபோதும் அடுத்து வரப்போவது என்ன என்று எண்ணி கவலைப்படுவதில்லையே! நீங்கள் எல்லாம் உங்கள் உள்ளுணர்வை மட்டுமே பயன்படுத்துகிறீர்கள், அடுத்து என்ன வரப்போகிறது என்று எண்ணி ஒருபோதும் கவலைப்படுவதில்லை. உங்களைப் போய் தாழ்ந்த இனம் என்று யார் சொல்லிவைத்தது?” என்று அவனிடம் கேட்டேன். ஆனால் அவன் பதிலேதும் கூறாமல் அவன்பாட்டுக்கு என் காலடியில் நிம்மதியாக ஓய்வெடுத்துக் கொண்டிருந்தான்.

 

graphic முனைவர் கு. முருகானந்தன் அவர்களின் படம்
மொழிபெயர்ப்பாளர் முனைவர் கு. முருகானந்தன்

 

மொழிபெயர்ப்பாளரைத் தொடர்புகொள்ள: sendtokmn@gmail.com

4 கருத்துகள்:

  1. சளிப்பு தராத மொழிபெயர்ப்பு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. சளிப்பு தராத மொழிபெயர்ப்பு நடை வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் வாழ்த்துக்கு நன்றி, ஆங்கில மூலம் 360 பக்கங்கள் கொண்ட பெரிய புத்தகமாக இருந்தாலும் வாசிக்க சுவாரசியமாகத்தான் இருக்கிறது. தமிழில் ஓரளவு சலிப்பூட்டாத நடையில் இந்த ஒரு இயலை மொழியாக்கம் செய்வதே பெரும்பாடாகிவிட்டது! குறைபாடுகளையும் தாராளமாக எடுத்துக்கூறுங்கள், மேம்படுத்திக்கொள்ள உதவும்.

      நீக்கு
  3. சிறப்பான மொழி பெயர்ப்பு. ஒரு பார்வையற்ற தாயின் பிரச்சனை குறித்த பதிவு சிந்திக்க தூண்டியது.
    எல்லோருக்கும் புரியும் வண்ணம் மொழி நடை அமைந்திருந்தது. மிக அருமை.

    பதிலளிநீக்கு