குடும்பம்: நான் தொலைந்து மீண்ட கதை: ஆங்கிலத்தில் - பயல்கபூர், தமிழில் - மு. முத்துசெல்வி

graphic பயல்கபூர் அவர்களின் படம்
பயல்கபூர்

       எனக்குத் திருமணமாகி 14 ஆண்டுகள் கடந்துவிட்டன. அந்தச் சமயத்திலும் நான் முழு பார்வை குறைபாட்டாலும் பகுதி அளவு காதுகேளாமையாலும் பாதிக்கப்பட்டிருந்தேன். எனக்கு இந்தக் குறைபாடு பிறவியிலேயே ஏற்பட்டதன்று. என்னுடைய 22ஆம் வயதில்தான் இக்குறைபாடு எனக்கு ஆரம்பித்தது.

           இளம் வயதிலிருக்கக்கூடிய மணமகளுக்கு உரித்தான அத்துனை காதல் உணர்வுகளும் என்னுள் உலாவிக் கொண்டிருந்தன. என் வாழ்க்கை முழுமைக்கும் இருக்கக் கூடிய அந்த அழகான கனவு நனவாகும் நாளை எண்ணி எதிர்நோக்கிக் காத்திருந்தேன். 

          நீங்கள் ஒரு பார்வையுள்ள ஆணை மணந்ததால் மகிழ்ச்சி அடைகிறீர்களா அல்லது உங்களுக்கு திருமணமானதே மகிழ்ச்சியா? எங்களுக்குத் திருமணம் ஆகி சில காலத்திற்குப் பின் எங்களுடைய திருமண புகைப்படங்களைப் பார்த்துவிட்டு என்னுடைய தோழீயால் கேட்கப்பட்ட கேள்வி இது.

          இந்தக் கேள்வி ஒருகணம் என்னை திகைப்புக்குள்ளாக்கியது. நான் அவர் மீது பைத்தியமாக இருந்தேன் என்றுதான் நிச்சயமாக சொல்லவேண்டும். ஒருவித பரவசத்துடன் கூடிய ஆனந்த நிலையிலேயே நான் இருந்தேன். இந்த உணர்வுகளை நீங்கள் தற்பொழுது பார்த்த புகைப்படங்களே உங்களுக்கு உணர்த்தும் என்று உறுதியாக கூறினேன். காண இயலா என் கண்களால் என் கணவன் விழிகளைப் பார்த்துக் கொண்டே அவருடைய அந்தப் பதிலுக்காக காத்திருந்தேன். அவருடைய பதில் சாதாரணமாகவே வந்து விழுந்தது. 

          அவளை முதன்முதலில் சந்தித்ததில் இருந்தே எனக்கு அவளை மிகவும் பிடித்திருந்தது. அவளுடைய தன்னம்பிக்கை எனக்குப் பிடித்திருந்ததால் அவளுடனான நீண்ட உறவு இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது.    ஆனால், அவளைத் திருமணம் செய்து கொள்ளும் அவசியம் என் மனதில் எழவில்லை என்றுதான் சொல்லவேண்டும். காலம் செல்லச்செல்ல அவள் மீதான காதல் எனக்குள் வளர்ந்து கொண்டே போனதால் அவளைத் திருமணம் செய்து கொள்ளும் முடிவை எடுக்க வேண்டியதாயிற்று.   இப்படிப்பட்ட ஒரு பதிலை அவரிடமிருந்து கேட்டது இதுவே எனக்கு முதல்முறை.

          இந்த முடிவை அவர் எடுப்பதற்கு நான் எவ்வாறேனும் அவரை நிர்பந்தித்து விட்டேனா என்று யோசிக்கத் தொடங்கினேன்.  ஆனால், எனக்குள் தோன்றிய எண்ணங்களை நானே மறுத்தேன். காரணம், அவருடைய வயது மட்டும் அன்று அவர் தனக்கான முடிவுகளை தானே எடுக்கும் திறன் பெற்றவர். இந்த ஒரு அதிர்ச்சிகரமான பதிலுக்குப் பிறகும் இதை அப்படியே அதன் போக்கிலேயே விட்டுவிடுவதற்கான அனைத்துச் செயல்களிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பொழுது சில நினைவுகளால் சிக்கிக்கொண்டேன். நாங்கள் திருமணம் செய்து கொள்ளும் முடிவை எடுப்பதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்பே எனக்கு அவரை நன்றாகத் தெரியும். அவருக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருந்ததினால் அவர் என்னைத் திருமணம் செய்து கொள்ளும் நோக்கத்தை நான் கேள்விக்குள்ளாக்கினேன். அவர் பிரெயிலிலேயே எனக்காக வடித்த கவிதை, அளித்த மலர்கொத்துக்கள் இப்படி காதல் உணர்வில் நாங்கள் திளைத்துக் கொண்டிருந்த நேரத்திலும் எனக்குள் எச்சரிக்கை மணி அடித்துக்கொண்டே இருந்தது.

          ஆனால், அவர் என்மீது பொழிந்த அன்பு மழை, அவர் என்மீது காட்டிய அக்கறை, அவர் அளித்த தொடர் உற்சாகம், எங்களுக்குள் ஒத்துப் போன சில பொதுவான விஷயங்கள் மிகமுக்கியமாக என்னுடைய ஊனம் அவருக்கு ஒருபொருட்டாக இல்லாதது இவை அனைத்தும் என்னை அவருக்குள் கட்டிப்போட்டன.

          நான் நேரடியாக அதளபாதாளத்திற்குள் தள்ளப்பட்டு விட்டேன் என்று சொன்னால் நான் பொய் சொல்வதாக அர்த்தம் ஆகிவிடும். ஆம்! அவருடன் இருந்த இனிமையான நேரங்கள், புதிய அனுபவங்கள், அவரின் மூலம் நான் கற்றுக் கொண்ட பாடங்கள், என்னை முன்பு இருந்ததைவிட அதிக அளவு தற்சார்புடைய பெண்ணாக மாற்றியிருந்தது.

          புதுமணத் தம்பதிகள் ஒன்றாக குடியேறும்போது சந்திக்கக் கூடிய அனைத்து ஏற்றஇறக்கங்களும் எங்கள் வாழ்க்கையிலும் தோன்றி மறைந்த வண்ணம் இருந்தன. நான் எல்லாவற்றையும் ஒழுங்காகவும் சுத்தமாகவும் பராமரிப்பவளாக இருந்தேன்.  அவர் அதற்கு நேர்எதிராக நடந்துகொண்டார். அவர் எந்த விஷயத்திலும் காலம் தாழ்த்துபவராக இருந்தார். நான் எதையும் உடனுக்குடன் செய்பவளாக இருந்தேன். இந்தக் கடினமான தருணங்களை சிரிப்புடனும் கண்ணீருடனும் கடந்து கொண்டிருந்தோம்.

          ஆனால், நாட்கள் செல்லச்செல்ல எங்கள் வாழ்க்கை சரிவைச் சந்திக்கத் தொடங்கியது. திடீரென்று அவர் ஒரு அந்நிய நபர் போல் என்னிடம் நடந்து கொள்ள தொடங்கினார். நான் என்னுடைய பெற்றோரிடமோ என்னுடைய நெருங்கிய நண்பர்களிடமோ பேசுவதைக்கூட பெரும்பிரச்சனையாக பார்க்கத் தொடங்கிவிட்டார்.  அவர் என் பெற்றோர் மற்றும் நண்பர்களைச் சந்திக்க விரும்பவில்லை. 

          அவர் தன் நண்பர்களைச் சந்திக்கச் செல்லும் போதெல்லாம் என்னை என் பெற்றோரிடம் விட்டுவிட்டுச் சென்று விடுவார். என்னுடைய பெற்றோரால் நடக்கும் எதையும் புரிந்து கொள்ள இயலாவிட்டாலும், அவர்களிடம் இவை அனைத்தையும் எடுத்துரைக்க வேண்டியதாயிற்று. அவருடைய இந்த நடவடிக்கைகள் குறித்து அவரிடமே பேசினால்கூட கடைசியில் மிஞ்சியது அவருடைய நீண்ட அமைதி மட்டுமே.  இது பார்வையற்ற பெண்ணாகிய எனக்கு மிகுந்த வலியையும் வேதனையையும் அளித்தது.

          எங்களுக்குள் கருத்துவேறுபாடு வரும்போதேல்லாம், என்னை தண்டிப்பதற்கான புதிய யுக்திகளைக் கையாளத் தொடங்கினார்.  நான் சமைத்த உணவுகளை உண்ண மறுத்துவிடுவார். நான் சமைத்த உணவுகளைத் தொடுவதற்குப் பதில் பசியுடன் இருப்பதே மேல் என்பார். இது எனக்கு எந்த அளவிற்கு வலியை ஏற்படுத்தும் என்பதை அவர் நன்கு அறிந்திருந்தார். அவரை கெஞ்சியும் கொஞ்சியும் சாப்பிட வைக்க முயற்சி செய்வேன்.  நானும் உண்ணாமல் பட்டினியாககூட இருப்பேன். ஆனால் இவை எதுவும் பலனளிக்காது.  நான் வேலைக்குச் சென்று திரும்புவதற்குள் நூடுல்ஸ் சமைத்து சாப்பிட்டு விட்டு விளையாட சென்று விடுவதை சிறிது காலத்திற்கு பின்புதான் கண்டுபிடித்தேன்.

            நான் வீட்டை பராமரிப்பதில் பெருமிதமும் ஆர்வமும் கொண்டிருந்தாலும், அனைத்து வீட்டுவேலைகளையும் நாங்கள் இருவரும் பகிர்ந்துதான் செய்து கொண்டிருந்தோம். திடீரென்று அனைத்து வேலைகளும் என் தலைமீது சுமத்தப்பட்டன. இது எப்படி நடந்தது என்று எனக்கே தெரியவில்லை. நாங்கள் எங்கள் வீட்டை சுத்தம் செய்வதற்கான பணிப்பெண்ணை வேலைக்கு அமர்த்திக் கொள்ளவில்லை. எனவே தினசரி வீட்டு வேலைகளுடன் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே என்னால் எங்கள் வீட்டை பெருக்கி துடைக்க முடிந்தது. அவர் எனக்கு சிறிதும் உதவாமல் நான் வீடு முழுவதும் தவழ்ந்து பெருக்கி துடைப்பதை உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருப்பார்.

      ஒருமுறை அவருடைய அத்தை அவரைப் பார்த்து பணிப்பெண் இல்லாமல் உங்களால் எப்படி வீட்டைச் சமாளிக்க முடிகிறது என்று கேட்டார்.  அதற்குத்தானே இவளைத் திருமணம் செய்திருக்கிறேன் என்று பலத்த சிரிப்புடன் கூறினார்.   இந்தப் பதில் என் கண்களைக் குளமாக்கியது.  நான் நகைச்சுவை உணர்வு அற்றவள் என்று அவரால் முத்திரைக் குத்தப்பட்டேன்.  

      ஒரு ஊனமுற்ற பெண்ணாக யாருடைய உதவியையும் எதிர்பார்க்காமல் மனவலிமையுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் எனக்கு, கிடைக்க வேண்டிய நியமான ஆதரவுகூட என் துணையிடம் கிடைக்கவில்லை. மாறாக, அதிகப்படியான வேலைப்பளு மட்டுமே என் தலைமீது சுமத்தப்பட்டது. இதை எதிர்த்து நான் குரல் எழுப்பும் போதெல்லாம் மிகவும் மோசமாக நடத்தப்பட்டேன். என்னால் தவிர்க்க இயலாத சில காரணிகள் அவரின் கோபத்திற்கு காரணங்களாக மாறத் தொடங்கின.  

      துணி துவைக்கும் எந்திரத்தில் துவைக்கப்பட்ட துணியிலிருந்து நூல் வெளியேறினால் அந்தத் துணி என்மீது வீசி எறியப்படும்.   அவருடைய ஒற்றை சாக்ஸ் தொலைந்ததும் என் தவறாகவே பார்க்கப்பட்டது. நன்கு துலக்கி துடைத்து வைக்கப்பட்டிருக்கும் பாத்திரத்தில் சிறு நூலாம்படை இருந்தால்கூட அது பயன்படுத்துவதற்கு உகந்ததாகாமல் போய்விடும். ஒருமுறை குழம்பில் ஒரேவொரு முடி தென்பட்டதால் அந்தக் குழம்புடன் கூடிய பாத்திரம் என் முகத்தின் மீது வீசி எறியப்பட்டது.

      என்னுடைய காதுகேளாமையும் மிகப்பெரிய பிரச்சினையாக பார்க்கப்பட்டது. அவர் மெதுவாகப் பேசினால் எனக்கு அதைக் கேட்பதில் சிக்கல் ஏற்படும். அவரைத் திரும்பச் சொல்லும்படி கேட்டால் உடனடியாக எழுந்து சென்று விடுவார். இம்மாதிரியான சம்பவங்கள் என் மனதிற்குள் பெரும் வலியை உண்டாக்கின. இதன் விளைவாக என்னுடைய காதுகேட்கும் திறன் மேலும் குறையத் தொடங்கியது.

      பெரும்பாலான இரவு நேரங்களில் தொலைபேசியில் பேசச் செல்கிறாரா அல்லது வெளியில் செல்கிறாரா என்றுகூட சொல்லாமல் வீட்டின் கதவை வெளிப்புறம் தாளிட்டு விட்டுச் சென்றுவிடுவார். இது வீடா இல்லை சிறைச்சாலையா என்ற எண்ணம் எனக்குள் எழத்தொடங்கியது. எங்களுக்குள் இருந்த மொத்த காதலும் எங்கேயோ தொலைந்து போய்விட்டது.  எங்களுக்குள் இடைவெளி மேலும் மேலும் அதிகமாகிக் கொண்டே சென்றது.

      நான் என்னுடைய கலகலப்பாக பேசும் சுபாவத்தையே மாற்றிக் கொண்டேன்.  நான் அமைதியானவளாக மாறுவதை என்னாலேயே உணரமுடிந்தது. நான் பழைய பாடல்களைப் பாடுவதையோ கேட்பதையோகூட அவரால் சகித்துக் கொள்ள இயலவில்லை. லதாமங்கேஷ்கரின் குரலுக்குகூட செவிசாய்க்க இயலாதவளாய் மாறியிருந்தேன்.  இவை அனைத்தையும் குடும்பத்தின் அமைதியின் பொருட்டே நான் விட்டுக் கொடுக்க வேண்டியதாயிற்று.   

      நாங்கள் இருவரும் வெவ்வேறு நிகழ்ச்சிகளைப் பார்க்க விரும்பியதால் நான் தொலைக்காட்சி பார்ப்பதையும் நிறுத்திவிட்டேன். இந்த 14 வருடங்களில் நான் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியைக்கூட முழுமையாக கண்டுகளிக்கவில்லை. ஆனால், என்னுடைய அனைத்து முயற்சிகளுக்கும் எந்தப் பலனும் கிட்டவில்லை.

      அவர் என்னை விட்டுச் சென்றுவிடுவதாக அவ்வப்பொழுது மிரட்ட ஆரம்பித்தார். நான் செய்வது அனைத்தும் அவருக்கு தவறாகவேப் பட்டது. நான் எத்தனை முறை எடுத்துரைத்தாலும் இதுதான் உண்மை என்ற பதில் மட்டுமே அவரிடம் இருந்து வந்தது.  சில அமைதியான தருணங்களில் அவருடைய காம இச்சையைப் பூர்த்தி செய்யும் நோக்கத்தில் மட்டுமே அவருக்கு என்மீதான ஈர்ப்பு திரும்பிவரும். இது எங்கள் வாழ்க்கையை எந்த விதத்திலும் மீண்டும் சுமூகமாக மாற்றவில்லை.    

      மாறாக,  அவர் என்னை தன்சுயநலத்திற்காக மட்டுமே பயன்படுத்துகிறார் என்று எண்ணத் தோன்றியது. இது என்னை மிகுந்த கவலைக்குள்ளாக்கியது.  ஏனெனில் உடல் சார்ந்த உறவு என்பது திருமணத்தின் ஓர் அங்கமாக மட்டுமே பார்க்கப்படுகிறது.

      நான் ஒவ்வொரு விஷயத்திலும் மிகக் கவனமாக இருக்க வேண்டியதாயிற்று. என் கண்களில் இருந்த ஒளி காணாமல் போய்விட்டதாக என் நண்பர்கள் கூறினார்கள். என்னுடைய குடும்பத்தினரும் என்னைத் திரும்பி வந்துவிடும்படி சொன்னார்கள்.  ஆனால், ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வதுதான் திருமணம் என்று வாதிட்டுத் திரும்பவர மறுத்துவிட்டேன்.     உண்மையில், அவர் இப்படி நடந்து கொள்வதற்கு அவருக்குள் ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். ஏன் நானும் ஒரு காரணமாகவே இருந்திருப்பேன்.    எது எப்படி இருந்தாலும் இங்கு வாழ்க்கை நடத்துவது மிகவும் கடினம் என்பதை உணர ஆரம்பித்தேன். ஒருவித பயமும் பாதுகாப்பின்மையும் என்னை ஆட்கொண்டது.  நான் என் சொந்தக்காலில் நிற்பதற்கான தைரியம் என்னிடம் இருக்கிறதா? நான் கட்டி எழுப்பிய இந்த வீட்டை விட்டு என்னால் வெளியேற இயலுமா? இப்படி அடுக்கடுக்கான கேள்விகள் எனக்குள் எழத்தொடங்கின.  

      யாரிடமும் இதைக் குறித்து என்னால் பேச இயலவில்லை. ஏனென்றால் அப்படி பேசினால் அது எங்கள் வீட்டில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். என் பெற்றோரிடமும் இதைக் கூறி அவர்களையும் நான் வருத்தத்திற்குள்ளாக்க விரும்பவில்லை.  அவர் தன்னையும் மன அழுத்தத்திற்குள்ளாக்கிக் கொண்டார். அதுவும் எந்த விதத்திலும் பலனளிப்பதாக இல்லை.

      நாங்கள் பிரிவதற்கான கடைசி காரணம் எதுவென்று யோசித்துப் பார்த்தால் என்னால் அதைக்கூட கண்டுபிடிக்க இயலவில்லை. ஆனால் எனக்கு ஒன்று நினைவிருக்கிறது. மற்றொருமுறை அவர் கூறியது என் காதில் சரியாக விழவில்லை. மீண்டும் பட்டினி போராட்டத்தையும் அமைதியான சிகிச்சையையும் கையில் எடுத்துவிட்டார்.

      உங்கள் வாழ்க்கையில் நான் இருக்கவேண்டுமா? வேண்டாமா? இது நான் அவரிடம் கேட்ட கடைசி கேள்வி. அவருடைய பதில் எனக்கு நிச்சயமாக தெரிந்திருந்தாலும் எனக்குள் நான் மரணித்துக் கொண்டிருந்தேன். மூச்சு விடுவதுகூட எனக்கு சிரமமாகிவிட்டது.   நம்முடைய திருமண வாழ்க்கை இதோடு முடிந்துவிட்டது

உன்னுடைய தவறுகளே இதற்கு காரணம் என்று கூறினார்.             எங்களுடைய பெற்றோரின் வீட்டில் அவர்கள் வெளியூர் பயணம் சென்றிருந்த சமயத்தில் நடந்த சம்பவம் இது. என்னுடைய பொருட்களையாவது எடுப்பதற்காக என்னை நம் வீட்டிற்கு அழைத்துச் செல்வீர்களா? என்று கேட்டேன். நிச்சயமாக! ஆனால் அதற்குப்பின் நீ வேறு நான் வேறு; முடிந்தது முடிந்ததாகவே இருக்கட்டும் என்று உறுதியாக கூறினார். அன்றிலிருந்து அவரை நான் பார்த்ததோ பேசியதோ கிடையாது. 

            அன்று அந்த நேரத்தில், என் இதயம் எந்த அளவிற்கு பதபதைத்தது என்பது எனக்கு இன்றும் நினைவிருக்கிறது.

என் இதயம் முதலில் வேகமாக அடிக்கத் தொடங்கியது. பின் முற்றிலும் மூழ்கியதாக உணர்ந்தேன். நான் தனியாக விடப்படப் போவதன் பயமும் நான் கட்டியமைத்த வாழ்க்கை என்னை விட்டுச் செல்லப் போவதுமே இந்த உணர்வுகளுக்கு காரணமாயிருந்தன.  இதெல்லாம் நடந்தது ஆறு வருடங்களுக்கு முன்னாள்.     வாழ்க்கையில் இனி எதற்கும் கவலை கொள்ள தேவையில்லை என்பதனை ஆறு வருடங்களுக்கு முன்பிருந்தே உணரத் தொடங்கி விட்டேன்.

      ஆம்! என் வாழ்க்கை சுதந்திரமானதாகவும் மிகவும் மகிழ்ச்சிகரமானதாகவும் மாறிவிட்டது. வாழ்க்கையில் என்னால் செய்யவே முடியாது என்று நினைத்த அனைத்து காரியங்களும் இப்பொழுது என் வாழ்க்கையில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. முன்பு இருந்ததைவிட எனக்காக, என்னைச் சுற்றி பல மனிதர்கள் என் வாழ்க்கையில் வரத் தொடங்கிவிட்டார்கள். என்னுடைய வாழ்க்கையின் புதிய அத்தியாயம் இப்பொழுதுதான் தொடங்கியிருக்கிறது. அதைக் குறித்து நான் வரும் நாட்களில் அதிகமாக எழுதுவேன்.

 

 

மொழிபெயர்ப்பாளரைத் தொடர்புகொள்ள: muthump2007@gmail.com

2 கருத்துகள்:

  1. சில அப்பாவி பெண்கள் காதல் என்ற போர்வையில் சில ஆண் சைக்கோகளிடம்மாட்டிக்கொண்டு கஷ்டப்படுகிறார்கள். இதை நன்கு படம் பிடித்து காட்டியது உங்களுடய பதிவு. நல்ல படைப்பு. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு