கருத்துக்களம்: ஆசைத்தம்பியும் அறிவுடை நம்பியும் - 6 - வினோத் சுப்பிரமணியன்

graphic இரண்டு நண்பர்கள் பேசிக்கொள்வது போல் அமைந்த கார்டூன் படம்

 என்னடா நம்பி! இன்னைக்கு ரொம்ப பரபரப்பா இருக்கிற மாதிரி தெரியுது?” என்றான் தம்பி நம்பியைப் பார்த்து, அவர்களது வழக்கமான பூங்காவின் இருக்கையில் அமர்ந்தபடி.

அதுவா! நாம போனமுறை ஒரு லிஸ்டு ரெடிபண்ணி கடன் கேட்கப் போனோமே

ஆமாம். பார்வையற்றவங்களுக்கான நவீன தொழில்நுட்பக் கருவிகளை உருவாக்குரோம்னு தோராயமா ஒரு ஆய்வு செஞ்சி கணக்கு பண்ணி அதைத் தூக்கிட்டு வங்கி வங்கியா அலஞ்சோமே. அதுக்கென்ன இப்போ!”

அதுக்கு பலன் கிடச்சிரிச்சு!” என்று சொல்லி நிறுத்திய நம்பி தம்பியின் மறுமொழியை எதிர்பாராமல்,

அதுல ஒரு பிராஜக்டுக்கு மட்டும் லோன் அப்ரூவ் பண்ணி இருக்காங்க.” என்று முடித்தான்.

எது நம்ம பிராஜக்டையா! ஆச்சர்யமா இருக்கே! எப்படி நம்பி! இது சம்மந்தமா  உன்னுடைய கட்டுரை கூட சுமாராதான் இருந்திச்சுனு பேசிக்கிட்டாங்களே! எல்லாத்துக்கும் மேல நாம ஏறி இறங்குன பேங்க் எல்லாம் நம்மள ரொம்பக் கேவலமாதானே நடத்துனாங்க? அதுவும் நம்மளப் பாத்து, நீங்க இந்த பீல்டுக்கு புதுசு. விராத் கோலி இல்லாம ஆஸ்திரேலியாவுக்கு எதிரா விளையாடுர இந்தியன் டீம் மாதிரி. தேரமாட்டீங்க; சத்தியமா தேரவேமாட்டீங்க அப்பிடின்னுதான சொன்னாங்க?”

ஆனா தேறினோமா இல்லையா!”

தேறினோமாவா? அதுதான் தெரிக்கவிட்டிருக்கோமே! விடாமுயற்சி மட்டுமிருந்தா போதும் எவ்வளவு வலிமையானவங்களையும் வீழ்த்தி வரலாறு படைக்கலாம்னு நிரூபிச்சிருக்கோமே.” என்று சொல்லி சட்டென்று நிறுத்திய தம்பி,

அதைப் பத்தி பேசுனா பேசிக்கிட்டே போவ. நீ நம்ம ப்ராஜக்ட் பத்தி சொல்லு. நம்மளுடைய எந்தத் திட்டத்துக்கு கடன் கிடச்சிருக்குனு சொல்லு.”

சொல்லுறேன். ஆனா அதவிட முக்கியமான விஷயம் ஒன்னு இருக்கு.”

எந்த முக்கியமான விஷயமும் எனக்கு வேணாம். எந்த பிராஜக்ட்னு சொல்லு.”

அதைப் பத்தி அப்புறம் சொல்லுறேன். இப்போ இதக் கேளு.”

வாழ்க்கையில மனுஷங்க ரெண்டு ரகம் நம்பி. ஒன்னு நாம கேக்குரத சொல்லணும்னு நினைக்குறவங்க. ரெண்டாவது நாம சொல்லுறத மட்டுமே கேக்கணும்னு நினைக்குறவங்க.”

அவ்வளவு பெரிய தத்துவம் எல்லாம் எனக்குப் பொருந்துமானு தெரியல ஆனா இப்போ நான் சொல்லப்போர விஷயம் ரொம்ப முக்கியமானது. அதனாலதான் இதுக்கு முக்கியத்துவம் கொடுக்குறேன்என்றான் நம்பி.

நீ எதுக்கு வேணும்னாலும் முக்கியத்துவம் கொடுத்துக்கோ. ஆனா எனக்கு மட்டும் எந்த ப்ராஜக்ட் லோனுக்கு அப்ரூவ் ஆகி இருக்குனு முதல்ல  சொல்லு.”

அப்படியா? சரி. அப்படின்னா நான் ஒரு கேள்வி கேக்குறேன். அதுக்கு பதில் சொல்லு.”

உலகத்துல பாதி பேரு பதில் சொல்ல விரும்பாதவங்கதான் நம்பி. அதனால்தான் அவங்க எப்பவுமே அடுத்தவங்கள கேள்வி கேட்டுக்கிட்டே இருக்கணும்னு நினைப்பாங்கஎன்று தம்பி முடிக்க,

நான் அப்படிப்பட்டவன் இல்ல தம்பி. ஆனா நீ சொல்லு. பார்வையற்றவங்களால சமைக்க முடியுமானு கேட்டா உன்னுடைய பதில் என்னவா இருக்கும்?”

இந்த விஷயத்துல என்னுடைய பதில் நீ இப்போ என்கிட்ட கேட்ட அதே கேள்வியாதான் இருக்கும் நம்பி.”

அது கேள்விதான் தம்பி. ஆனா அது வெறும் கேள்வியா மட்டுமேதான் இருக்கும்னு நான் நெனச்சிக்கிட்டிருந்தேன் என்று சொல்லிய நம்பியே இன்னொரு கேள்வியுடன் தொடர்ந்தான்.

எதுவரைக்கும் தெரியுமா?”

தெரியும்என்ற தம்பி,

ஒன்னு அந்தக் கேள்வியைக் கேட்குறவரைக்கும். இல்லனா அதுக்கான பதில் கிடைக்குற வரைக்கும்.”

ஆமாம் தம்பி. ஆனா இந்தக் கேள்வி பார்வையற்றவர்களை இந்த பொதுச் சமூகம் புரிஞ்சிக்குற வரைக்கும் அது கேள்வியாதான் இருக்கும்என்று சொன்ன அறிவுடைநம்பியே தொடர்ந்து பேசினான்.

பார்வையற்றவர்களும் அவர்களது சமையல் அனுபவமும் அப்படிங்குறதுதான் கேள்வியே.”

பதில் கிடச்சிதா?”

பதில் கிடச்சதுனாலதான் உன்கிட்ட அந்தக் கேள்வியையே நான் கேக்குறேன்

தெரியும். நீ பதில வெச்சிக்கிட்டு என்கிட்ட கேள்வி கேப்ப. நான் பதிலை எதிர்பார்த்து உன்கிட்ட கேள்வி கேப்பேன்.”

என்ன கேள்வி தம்பி?”

அதுதான் அந்த ப்ராஜக்ட்.”

அதை அப்புறம் சொல்லுறேன் என்று சொல்லிய நம்பியே தொடர்ந்து பேசினான்.

பொதுவா சமையல் அப்படின்கிறது ஒரு கலை. அதை சரியாச் செய்யுரவங்களே பல தவறு செய்யுறது உண்டு. ஆனா அவங்க தவறு செஞ்சா அது அன்றைய செயல்பாட்டோட குறைன்னு சொல்லுவாங்க. அதுவே பார்வையில்லாதவங்க செஞ்சா,” என்று நம்பி ஒரு நொடிதான் நிறுத்தினான். அதற்குள் தம்பி,

பார்வையைக் காரணம் காட்டுவாங்க. இது எல்லாத்துக்கும் பொருந்துமே!” என்று சொல்ல,

எல்லாத்துக்கும் பொருந்தும். ஆனா இது வேற மாதிரி தம்பிஎன்ற அறிவுடை நம்பி,

பார்வையற்றவர்களாள சமைக்க முடியும் அப்படின்கிற நம்பிக்கை பெரும்பாலான பார்வையற்றவர்களுக்கே கிடையாது. அந்தமாதிரி இருக்கிறப்போ ஒரு பார்வைத்திறன் குறையுடைய கூட்டம் நாங்க சமைச்சிருக்கோம் அப்படினு சொன்னா அதை நம்மள மாதிரியான ஆட்கள் பதிவு பன்னும்போது அது வெறும் பதிவா மட்டும் இருக்கப்போரதில்ல தம்பி. அதுக்கும் மேல அது ஒரு ஆச்சர்யம் கலந்த உண்மையாவும் வரலாறாவும் இருக்கும்னு என்னுடைய நம்பிக்கைஎன்று சொல்லி பெருமூச்சு விட்டு பின்னால் சாய்ந்த அறிவுடை நம்பி சட்டென்று நிமிர்ந்தபடி மீண்டும் பேசினான். இந்தமுறை அவன் பேசவில்லை. அனுபவங்கள் பேசின. அதுவும் அவனுடைய அனுபவங்கள் அல்ல; அவன் தேடிச்சென்று கிடைத்த ஒருசில பார்வைத்திறன் குறையுடைய மக்களின் அனுபவங்கள். அவர்களின் சமையல் அனுபவங்கள். சமையலில் அவர்கள் சரிந்த அனுபவங்கள்; சாத்தியமாக்கப்பட்ட அனுபவங்கள்; அவர்களின் சத்தியமான அனுபவங்கள்; அதில் அவர்கள் சாதித்த அனுபவங்கள்.  இந்தப் புவியில் இருக்கும் பொதுமக்களுக்குப் புரியவைக்கப்படாத அனுபவங்கள்; ஆனால் ஒவ்வொருவருக்கும் புரியவைக்கப்படவேண்டிய அனுபவங்கள். வெளியில் தெரியாத அனுபவங்கள்; வெளிப்படுத்தியே தீரவேண்டிய அனுபவங்கள். பக்கத்திலிருப்பவர்களுக்குக் கூட பரிச்சயப்படாத அனுபவங்கள்; ஆனால் பாராட்டப்படவேண்டிய அனுபவங்கள். அதைத்தான் அறிவுடைநம்பி ஆசைத்தம்பிக்கு விவரிக்க ஆரம்பித்தான்.

இங்க கேளு தம்பி. எல்லாரும் சமையலில கெட்டிக்காரங்க கிடையாது. சிலர் நல்லா சமைப்பாங்க. சிலர் சுமாரா சமைப்பாங்க. சிலருக்கு எத்தனைமுறை குக்கர்லயும் குண்டான்லயும் கிடாயிலயும் சூடுபட்டாலும் சமையல் வராது. இதுல  பார்வை இருக்கவங்க இல்லாதவங்க அப்படின்கிற வேறுபாடு எல்லாம் கிடையாது. செய்யும் முறை வேணும்னா வெவ்வேறா இருக்கலாம். ஆனால் செயல் ஒன்னுதான். சமையல். ஒரு பார்வையற்றவருக்குச் சமைக்கத் தெரியாதுன்னா எந்தப் பார்வையற்றவருக்கும் சமைக்கத் தெரியாதுன்னு முடிவுக்கு வருவது தப்பு. அதேபோல ஒரு சமைக்கத் தெரிஞ்ச பார்வையற்றவரைப் பாத்துட்டு எல்லாருக்கிட்டையும்  அதை எதிர்பார்க்கிறதும் தப்புஎன்றான் அறிவுடை நம்பி. ஆசைத் தம்பி குறுக்கிடவில்லை. எப்படியோ தான் கேட்ட கேள்விக்கு இப்போதைக்கு பதில் கிடைக்காது என்று உணர்ந்ததாலோ என்னமோ அறிவுடைநம்பியின் அடுத்த வார்த்தைக்காக காத்திருந்தான். ஆசைத் தம்பியின் கேள்வியையோ எதிர்வினையையோ அல்லது அமைதியையோ கண்டுகொண்டு பதிலளிக்கும் நிலையில் அறிவுடை நம்பி இல்லை. அவன் தான் பேச விரும்பியதை எல்லாம் பேசிக்கொண்டிருந்தான்.

நான் உனக்கு ஒரு கத சொல்லட்டுமா தம்பி? நீ கேக்கலனாலும் நான் சொல்லுவேன். இது ராஜா வட சுட்ட கத. ஒரு ஊருல முத்துராஜா முத்துராஜான்னு ஒரு பார்வை மாற்றுத்திறனாளி இருந்தாராம். அவருக்கு ரொம்பநாளா தன்னுடைய  மனைவிக்கு சமைச்சு அவங்கள சாப்பிடவைக்கணும் அப்படினு ஆசையாம். அதனால ஒருநாள் தனது மனைவியை உட்காரச் சொல்லிட்டு, கடலைமாவு கருவேப்பிலை எல்லாம் போட்டு எண்ணெயை ஊத்தி வடை சுட முயற்சி செஞ்சா வட வரலையாம். அப்புறம் வீட்டுல இருக்கிற மண்ணென்னேயைத் தவிர எல்லா எண்ணெயையும் உத்திக் கிளருனா வடையே வரலையாம். உள்ளிருந்த அவருடைய மனைவிதான் வந்தாங்கலாம். நுரையே வரலனு அவங்களும் சொல்ல அப்புறம் அப்படி இப்படினு ஏதேதோ செஞ்சு வடையக் கொண்டுவந்து தனது மனைவிக்கு வைக்க, அத அவங்க வாயில வைக்க, ‘என்னால சத்தியமா இதை சாப்பிட முடியாதுனு அவரது மனைவி வடை கிட்ட இருந்து எஸ்கேப் ஆக, சரினு அவங்க வீட்டு நாய்க்கு அந்த வடைய வைக்க நாய் வீட்டைவிட்டே எஸ்கேப். திரும்பி வரலயாம்என்று கதையை சொல்லி தானே சிரித்துக்கொண்ட நம்பி,

பாவம் முத்துராஜா. அவருக்கு வடையோட சேர்ந்து நாயும் போச்சுஎன்று சொல்லி மீண்டும் சிரித்தான். உடனே என்ன தோன்றியதோ தெரியவில்லை. சிரிப்பை நிறுத்திவிட்டு மீண்டும் பேசலானான்.

இப்போ நீ பார்வையற்றவங்களுக்கு சமையலே தெரியாதுன்னுதானே நெனச்ச அதுதான் கிடையாது.  அன்பு ராஜனோட நண்பர்கள் நல்லா சமைப்பாங்களாம். அவங்களும் பார்வையற்றவர்கள்தானாம்.  அவருடைய நண்பர்கள் செஞ்சு கொடுத்த பச்ச பருப்புப் பாயாசமும், உருளைக் கிழங்கு கூட்டும், அப்புறம் சுண்டலும் இன்னும் நாக்குலையே இருக்காம் அவருக்குஎன்று சொல்லிய நம்பி,

உனக்குத் தெரியுமா தம்பி? பார்வையற்றவங்களுக்கு சமையலைக் கத்துக்கொடுக்கவே தனியா ஒரு பாடம் இருந்திருக்கு. ஆனா அது இப்போ இருக்கானு தெரியல. இருக்கும்னுதான் நெனைக்குறேன். அத இங்க்லீஷ்ல ஹோம் சயின்ஸ் அப்படினு சொல்லுவாங்கலாம். வெறும் சமையல் மட்டுமில்ல. ஒரு வீட்ட நிர்வகிக்கத் தேவையான எல்லாத்தையும் கத்துக்கொடுப்பாங்கலாம் தெரியுமா? அதுல ஒருமுறை சரண்யாவோட ஓரளவு பார்வை இருக்கிற தோழிங்க உருளைக் கிழங்கு பொரியல் செய்யும்போது உப்புக்கு பதில் சக்கரையப் போட்டாங்கலாம். அதனால சரண்யாவுக்கும் சமைக்கத் தெரியும்னு நீ நெனைச்சா அதுக்கு நான் பொறுப்பில்ல. சரிவிடு. அதேமாதிரி செலின்மேரிக்கு ஒரு இண்டென்ஷிப் பிரோக்ராமுக்காக டெல்லி போக வாய்ப்பு கிடச்சதாம். அங்க சமையல் கத்துக்கிடவும் வாய்ப்பு கிடச்சதாம். அங்க போயி சப்பாத்தியக் கருக்கி, மிளகுக்கு இந்தியில என்னன்ணு தெரியாம ரசத்தச் சுருக்கி, அப்புறம் இப்போ தன்னுடைய குழந்தைக்கு பாப்கான் செஞ்சி கொடுக்குற அளவுக்கு வந்திருக்காங்களாம்.  இந்த மாதிரி சின்ன சின்ன தப்பு பன்னிதான் பார்வையற்றவங்களும் சமையல் கத்திருக்காங்க. இன்னொரு உதாரணம் சொல்லுறேன் கேளு.  நம்ம தமிழ்மணி நல்ல சமையல்காரர். ஆனா அவரு தொடக்கத்துல போட்ட காபி கார காபியா ஆகிடிச்சாம். அவருக்கும் கொஞ்சமா கண்ணு தெரியும். அதனால உப்புக்குப் பதிலா சரண்யாவோட தோழிங்க சக்கரையப் போட்ட மாதிரி இவரு சக்கரைக்குப் பதில் காபியில மிளகாய் தூளை போட்டிருப்பாருன்னு நீ நெனச்சா அது தப்பு.”

நான் எங்க டா நெனச்சேன். நீதான் நெனைக்குற நீதான் பேசுற.” என்று தம்பி மனதிற்குள் முனுமுனுக்க நம்பி அவன் பாட்டுக்கு பேசிக்கொண்டிருந்தான்.

அவருடைய நண்பர்களெல்லாம் அந்தக் காபியக் குடிச்சிருக்காங்க.  காபியில காரத்தக் கண்டுபிடிக்கத் தெரிஞ்சவங்களுக்குக் காரணத்தக் கண்டுபிடிக்க முடியல. ஆனா காலையில விஷயம் தெரிஞ்சிடுச்சு. அவங்களோட சமயலறையில காபிக்கு பாத்திரம் கேட்டா குழம்பு பாத்திரம் கொடுத்துட்டாங்கலாம். குழம்பு பாத்திரத்த என்னதான் கழுவி காபி போட்டாலும் காரமாத்தான் இருக்குமாம். அதனால காபி கார காபி ஆயிடுச்சு.  கடைசியா அதைத்தான் எல்லாரும் குடிச்சாங்கலாம்!” என்று சொல்லி இலேசாக நகைத்த நம்பி தம்பியைப் பேசவிடாமல்,

இந்தக் கொஞ்சம் பார்வை தெரிஞ்சவங்க எல்லாம் கண்ணுக்கு பதில் நாக்க பயன்படுத்தலாம்  இல்ல?” என்று கேட்டான் நம்பி.

இப்போ இதை எதுக்கு என்கிட்ட கேக்குறான் தெரியலயே? சரி கேட்டுட்டு அவனே சொல்லுவான்என்று மனதிற்குள் நினைத்த தம்பி தனது மௌனத்தைத் தொடர்ந்தான். அவன் நினைத்தபடியே நம்பி பேச்சைத் தொடர்ந்தான்.

ஒருமுறை தமிழ்மணி குழம்புல மிளகாய்த் தூளுக்கு பதில் மஞ்சள் தூளை நெறைய போட்டுட்டாராம். அத போட்டு சாப்பிட்ட எல்லாரு கையிலையும் மஞ்சள். எவ்வளவு தேச்சு குளிச்சாலும் போகலையாம். சில சின்ன தவறுகள் மிகப்பெரிய தவறுகளை காட்டிலும் வலிமையா மாறிடுது. இல்லையா தம்பி?என்ற நம்பி

ஆனா இப்போ அவரு நல்லா சமைப்பாராம். எல்லா நெருப்பும் ஒரு சின்ன தீக்குச்சியில இருந்துதான் பிறக்குது தம்பி. ஆனா அந்த தீக்குச்சியோட நெருப்பு எங்க படுதுன்கிறதுதான் முக்கியம். மண்ணெண்ணெய் அடுப்புல கஞ்சி வச்சு குடிக்கலாம்னு நெனச்ச நம்ம முருகனோட சமையல் அடுப்ப எங்க பத்தவைக்கணும்னு தெரியாம அந்தத் தீக்குச்சியோட சிறு பொறியிலேயே முடிஞ்சிடுச்சு. ஆனா அதே தீப்பொரிதான் நெறைய பேருக்கு சமையலுக்கான தொடக்கமாவும் இருந்திருக்குஎன்பதையும் சொல்லி முடித்தான் நம்பி.

இப்போ இவன் முடிக்கப்போராநா? இல்ல மறுபடியும் தொடங்கப்போரானா? தெரியலயே!” என்று மனதில் நினைத்துக்கொண்டான் தம்பி.

ஆனால் அறிவுடைநம்பி முடிப்பதாகத் தெரியவில்லை. மீண்டும் ஆரம்பித்தான். இந்தமுறை மண்ணெண்ணெய் அடுப்பிலிருந்து சமையல் எரிவாயு அடுப்புக்குத் தாவினான்.

புதுக்கோட்டை ரிஸ்வானா தெரியுமா தம்பி உனக்கு?”

இவனுக்கே தெரியாது. வாத்சப்ள வாயிஸ்நோத் கேட்டுட்டு வந்து கதை சொல்லிக்கிட்டிருக்கான். இதுல என்கிட்ட இந்தராகேஷன் வேற.” என்று மனதிற்குள் முனுமுனுத்த ஆசைத் தம்பி தெரியாது என்பதுபோல் தலையாட்டினான்.

அவங்க சென்னை NIVH லதான் கேஸ் பத்தவைக்கவே கத்துக்கிட்டாங்கலாம். முதல்ல தேநீர் போட, கேசரி செய்ய கத்துக்கிட்டவங்க அதுக்கப்புறம் லோட்டஸ்னு ஒரு பெண்கள் விடுதியில சுமார் 50 பேருக்கு தினமும் சமைச்சுக் கொடுத்தாங்கலாம் தெரியுமா?என்று நம்பி கேட்க ஆசைத்தம்பி ஆச்சர்யத்தில் வாயடைத்துப்போனான். ஒரு பார்வையற்ற பெண் ஐம்பது பேருக்கு சமைத்துத் தருவது அவ்வளவு எளிதான காரியம் இல்லை என்பது அவனுக்குப் புரிந்திருந்தது. இதைக்கேட்ட தம்பியால் பேசவும் முடியவில்லை பேசாமல் இருக்கவும் முடியவில்லை.

சைவம் அசைவம்னு எல்லாம் சமைப்பாங்கலாம் ரிஸ்வானா. அதுமட்டுமில்லாம இப்போ பார்வை உள்ளவங்களே மெச்சும்படியா இருக்கு ரிஸ்வானாவோட சமையல்னும் தகவல் கிடைச்சிது தம்பிஎன்றான் நம்பி.

சும்மா கதைவிடாதீங்க சார். கண்ணு தெரிஞ்ச நாங்களே கையில சூடு வெச்சிக்கிறோம். கஞ்சித்தண்ணிய கையிலையும் கால்லயும் ஊத்திக்கிறோம். காய்கறி நருக்கும்போது விறல்ல வெட்டிக்கிறோம். இதுல பார்வை இல்லாதவங்க சமைக்குராங்கன்ணு சொன்னா எப்பிடி? கொஞ்சமாச்சும் நம்பூ மாதிரி கத சொல்லவேணாமா? என்னதான் கதையா இருந்தாலும் இப்படியா அளந்துவிடுறது?” என்றது ஒரு குரல். அது ஆசைத்தம்பியின் குரலல்ல.

ஏதோ ஒரு பெண்ணின் குரல். அதனால்தான் நம்பியும் திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தான். அவனுக்குப் பின்னால் ஒரு கூட்டமே நின்றுகொண்டிருந்தது. எப்போது வந்தார்கள், எந்தக் கதையைச் சொல்லும்போது இந்தக் கூட்டம் கூடியது என்பதையெல்லாம் நம்பி அறிந்திருக்கவில்லை; அறியவும் அவன் முயற்சி செய்திருக்கவில்லை. அவன் தான் கேட்டுவந்த அனுபவங்களை தம்பிக்குச் சொல்லும் செயலை மட்டுமே செய்துவந்ததால் எதையும் கவனிக்கவில்லை. ஆனால் அந்தப் பெண்ணின் குரல் நம்பியை நார்மல் மோடுக்கு கொண்டுவந்தது. அதே சமையம் ஆசைத்தம்பியின் அமைதிக்கும் இந்தக் கூட்டம்தான் காரணமோ என்று கூட ஐயம் எழுந்தது நம்பிக்கு. ஆனால் அதையெல்லாம் ஒதுக்கிவிட்டு அந்தக் குரலை கண்களால் தேடினான் அறிவுடை நம்பி; அகப்படவில்லை. ஆசைத்தம்பியை ஒருமுறை பார்த்தான். நம்பிதான் அந்தக் குரலுக்குச் சொந்தக்காரியை காணவில்லையே தவிர, ஆசைத்தம்பி அந்தக் கேள்வி வரும்போதே அந்தப் பெண்ணைப் பார்த்துவிட்டிருந்தான். அறிவுடைநம்பியின் பார்வையின் அர்த்தம் விளங்கியிருந்ததால் தனது கண்களாலேயே அந்தப் பெண்ணைக் காட்டிக்கொடுத்தான் நம்பிக்கு. தன்னைக் கதை அளப்பதாகக் கேலி செய்த அந்தப் பெண்ணை தனது கண்களால் ஒருமுறை அளந்தான். அந்த நான்கு இளம் கண்களும் பார்வை விலகாமல் சந்தித்துக்கொண்டன.

ஒரு பத்து வினாடிகள் இருக்கும். பார்வையை விளக்கிய நம்பி தம்பியைப் பார்த்து,

நீ நம்புரியா தம்பி?” என்றான்.

அவங்க கேட்டதுக்கு நான் என்னடா பன்னேன்.” என்பதுபோல் நம்பியைப் பார்த்தான் ஆசைத் தம்பி.

நம்ம ராஜாவைக்கூட இந்தக் கேள்வி கேட்டிருந்தோம். வெந்நீர் கூட வைக்கத்தெரியாதுணு சொன்னாரு. ஒரே ஒரு முறை மனைவி சட்னி அறைக்கும்போது அந்த ஜாரைக் கெட்டியாப் பிடிச்சது மட்டும்தான் அதிகபட்ச சமையல் அனுபவம்னு சொன்னாரு. அவருக்கு அதுக்கான தேவை ஏற்படவில்லை. அதனால அவரு அதைப்பத்தி கவலைப்படவோ, முயற்சி செய்யவோ இல்ல. ஆனா ஒன்னு தம்பி.” என்று கூறிய நம்பி

இந்த உலகத்துல தேவைதான் எல்லாத்தையும் தீர்மானிக்குது. தனக்கும் தன் மனைவிக்கும் யாருமே இல்லங்கிற நிலைமையிலதான் சமைக்க ஆரம்பிச்சாறு யோகேஷ். அதாவது யோகேஷோட பெற்றோர் ஒரு மாசம் வெளியூர் போயிட்டாங்க.  அந்த நேரத்துல மாசமா இருந்த தனது மனைவிக்கு வெந்நீர் வச்சுக் குடுக்குறதுல ஆரம்பிச்ச அவரது சமையல் பயணம், அடுத்த நாள் பார்லி கஞ்சினு கண்டிநியூ ஆகி, இப்போ குழந்தைக்கு பால் காய்ச்சி கொடுக்குற அளவுக்கு வளந்திருக்கு. சில நேரங்களில் அவருடைய மனைவி சமைப்பாங்க. ரெண்டு பேரும் பார்வைத்திறன் குறையுடையவங்க. ரொம்ப கஷ்டப்பட்டுதான் சமைச்சிருக்காங்க. வாய்க்கு ருசியா இல்லைனாலும் வயித்துக்குத் தேவையா இருந்ததால அவங்களே அவங்களுக்குத் தேவையானத சமைச்சுக்கிட்டாங்கலாம்என்று முடித்தான் நம்பி.

எதுக்கு இவ்வளவு கஷ்டப்படனும்? ஆன்லைன்ல ஆர்டர் பண்ணினா வந்துட்டுப்போகுதுஎன்றான் ஆசைத்தம்பி முதன்முறையாக வாயைத் திறந்து.

அந்தக் கூட்டத்தில் சிலர் இதை ஆமோதிப்பதுபோல் தலை அசைத்தனர். அந்தக் கேள்வி கேட்ட யுவதியும் தலை அசைத்தாள். அதைத் தம்பி பார்த்தான் ஆனால் நம்பி பார்க்கவில்லை.

ஆன்லைன் எல்லாம் காசு இருக்கவங்களுக்கு. இல்லாதவங்களால பக்கத்திலேயே ஹோட்டல் இருந்தாலும் வாங்கிச் சாப்பிட மனசு வராது. உனக்கு ஒரு விஷயம் தெரியுமா தம்பி. இந்த முறை கருத்துக் களம் பகுதிக்காக தேர்ந்தெடுத்த தலைப்பே வேற. ஆனா அதைச் சமையலுக்கு மாத்தினவரு ஒருத்தரு. இல்லைனா இந்த தலைப்பு இன்னொரு நாள் தள்ளிப்போயிருக்கும்.” என்றான் நம்பி.

ஆசைத் தம்பிக்கு ஓரளவு அந்த நபரைக் கண்டுபிடிக்க முடிந்திருந்தாலும் வெளியில் காட்டிக்கொல்லவில்லை. காரணம் அறிவுடை நம்பி இந்த பார்வையற்றவர்களின் சமையல் அனுபவங்களைப் பற்றி பேச ஆரம்பித்ததிலிருந்தே குறுக்கிடாமல் இருக்கவே விழைந்தான் ஆசைத் தம்பி. தவிர நம்பி பேசிக்கொண்டிருப்பதைக் கவனிக்க ஒரு சிறிய அளவிலான கூட்டம் கூடுவதையும் அவன் கவனித்துக்கொண்டிருந்தான். எல்லாத்துக்கும் மேல் இந்த தலைப்பிற்கான உடனடி காரணமாய் அமைந்தவரைப் பற்றி குறிப்பிடாமல் நம்பி இந்த உரையாடலை முடிக்கப் போவதில்லை என்று ஆசைத் தம்பிக்குத் தெரியும்.

வெங்கடேஷ். நீ கேட்ட கேள்விக்கு அதுதான் பதில் தம்பிஎன்றான் அறிவுடைநம்பி.

பட்டப் படிப்பு முடிச்சும் கைக்கு ஒரு வேலையில்ல. கையில பெருசா பணமும் இல்ல. ஒருவேள பட்டினி கிடந்து ரெண்டு வேள சாப்பிட்டாலும் கொரஞ்சது 50 ஆகிடும். அதிகபட்சம் 70 ரூபாய் ஆகும். ஒரு மாசத்துக்குனு கணக்குப் போட்டா அதுவே பெரிய செலவாகிடும். சமைக்கவும் தெரியாது வெங்கடேஷுக்கு. அப்போதான் தெரிஞ்சவங்க வீட்டுக்கு போயிருக்காரு வெங்கடேஷ். நிலைமையைப் பத்தி பேச்சுவாக்கில சொல்லி இருக்காரு அந்த மேடம் கிட்ட வெங்கடேஷ். தனக்கு சமைக்கவும் தெரியாதுணும் பட்டன் தட்டுனா சமைக்கு மாதிரி இருந்தா நல்லா இருக்கும் அப்படினு சொல்ல, அந்த மேடம் எலட்ரிக் குக்கரை பத்தி சொல்லிக்கொடுத்தது மட்டும் இல்லாம, அதுல எப்படி சமைக்கணும்னு சொல்லிக்கொடுத்து, ஒரு குக்கரையும் வாங்கிக் கொடுத்திருக்காங்க. அத்தோட கொஞ்சம் பாத்திரங்களையும், அரிசி, பருப்பு மாதிரியான மளிகை சாமான்களையும் வாங்கிக் கொடுத்திருக்காங்க.”

இதை கேட்ட ஆசைத்தம்பியுடன் சேர்ந்து மற்றவர்களும் வாயைப் பிளந்தனர்.

முதல்முறை சாதம் செய்யும்போது வெங்கடேஷுக்கும் காந்துதான் போச்சாம். ஆனா அடுத்தடுத்து செய்யும்போது சரியா செஞ்சிக்கிட்டாராம். கடையில ஒரு இட்லி 5 ரூபாய். அஞ்சி இட்லி சாப்பிட்டாலும் 25  ரூபாய். அதுவே இட்லி மாவு  15 ரூபாய். அந்த மாவை வாங்கினாராம். ஒரு டம்ளர எடுத்து அந்த எலட்ரிக் குக்கர்ல கவிழ்த்தாராம். அந்த கவிழ்க்கப்பட்ட  டம்ளரோட அளவுக்கு நிகரா குக்கர்ல தண்ணீ ஊத்துனாராம். ஒரு தட்டை எடுத்து அந்த டம்ளருக்கு மேல வெச்சாராம். அப்புறம் அவர் வாங்கி வெச்சிருந்த 5 கப்பையும் தட்டு மேல வெச்சு அதுல இலேசா எண்ணெயத் தடவி, அப்புறம் கடையில வாங்குன மாவை எடுத்து ஒவ்வொரு கிண்ணத்திலையும் நிரப்பி குக்கரை மூடி சுவிச்ச ஆண் பண்ணி பத்து நிமிஷத்துல இட்லி ரெடி. எனக்கு 10 ரூபாய் இலாபம். தவிர அடுத்த வேளைக்கும் கொஞ்சம் மாவு இருந்துச்சு. அப்படினு சொன்னாரு. பார்வையற்றவர்களும் சமைக்க முடியும், ஒரு சில உணவுப் பொருட்களைத் தவிர. ஆனால் கொஞ்சம் லேட் ஆகும்னு சொன்ன வெங்கடேஷ், இப்போ இருக்கிற பார்வையற்றவர்கள் குடுத்துச்சவங்க. எதுக்குனா எல்லாத்துக்கும் ரெடிமேட் கிட் வந்திடுச்சு. கடையில வாங்கி குக்கர்ல போட்டா சாப்பாடு ரெடி. அப்படினு சொன்னாரு. தவாவில செய்யுறது தவிர எல்லாத்தையும் செஞ்சி பாத்திருக்கேன்னு சொன்ன வெங்கடேஷ் என்னுடைய கண்ணு தெரிஞ்ச நண்பர்களுக்கும் சமைச்சுக் கொடுத்திருக்கேன்; அவங்க நல்லா இருக்குனு சொல்லி சாப்டும் இருக்காங்கணு சொன்னாருஎன்று சொல்லி இடத்தைவிட்டு எழுந்த நம்பி உடனே சட்டென்று ஏதோ நினைவு வந்தவனாய் தம்பியைப் பார்த்து,

அந்த லோன் கிடச்ச ப்ராஜக்ட் எதுணு கடைசியா சொல்லுறேன்னு சொல்லி இருந்தேன் இல்ல? அது எது தெரியுமா?”

தெரியும். நீ சொல்லவேண்டிய அவசியம் இல்ல நம்பி. உன்ன அவ்வளவு நேரமும் பேசவிட்டுட்டு அமைதியா இருந்தது உன்னுடைய பேச்சிலிருந்தே அதைக் கண்டுபிடிக்கத்தான். கண்டுபிடிச்சிட்டேன்என்று சொல்லிவிட்டு அறிவுடை நம்பியின் தோளைத் தட்டிக்கொடுத்துவிட்டு முன்னே நடந்தான் ஆசைத் தம்பி.

graphic கட்டுரையாளர் வினோத் சுப்பிரமணியன் அவர்களின் படம்
கட்டுரையாளர் வினோத் சுப்பிரமணியன்

 

 (கட்டுரையாளர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பணியாற்றுகிறார். ).

slvinoth.blogspot.com   என்ற தளத்தில் தொடர்ந்து எழுதிவருகிறார்)

தொடர்புக்கு: slvinoth91@gmail.com   

3 கருத்துகள்:

  1. நல்லிரவில் உண்ட நல்ல சமையல். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. கருத்துக்களுக்கு நடுவில் இடம்பெறும் விவரணைகள் கொஞ்சம் அதிகமாகவே நீண்டு செல்வதாகத் தோன்றுகிறது, நம்பியும் தம்பியும் நமக்கு நன்றாக அறிமுகமாகிய நண்பர்கள் என்பதால் அவர்களின் ஆக்ஷன் ரீ-அக்ஷங்களை விளக்காமலேயே ஊகிக்க முடிகிறது. மற்றபடி கட்டுரையின் கருத்துக்களும் தகவல்களும் அருமை!

    பதிலளிநீக்கு
  3. இந்த படைப்புக்கு சொந்தக்காரருக்கு நல்ல நகைச்சுவை உணர்வு இருக்கிறது. risvana மேடம் அவர்களுடய சமயலை மற்றும் வெங்கடேசன் ஐயா அவர்களுடய சமயலை சுவைத்து பார்த்து அவர்களிடம் சமையல் அனுபவங்களை மேலும் அறிந்துகொள்ளும் ஆர்வத்தை உங்கள் பதிவு தூண்டியது. மின்சார சமைப்பான் பற்றிய தகவல் பல பார்வையற்ற நண்பர்களுக்கு சமையல் குறித்த தன்னம்பிக்கை ஏற்பட காரணமாக அமைந்திருக்கும் என்று நான் நம்புகிறேன். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு