மனவோட்டம்: ஜெயிக்கப் போவது யாரு? (விழிச் சவால் கொண்ட கல்லூரி மாணாக்கர்கள் மற்றும் பட்டதாரிகளிடமிருந்து பெறப்பட்ட ஒரு தேர்தல் மதிப்பீடு) ம. முத்துக்குமார்

graphic கருத்துக்கணிப்பு என்ற வாசகம் இடம் பெற்ற படம்

பொறுப்புத் துறப்பு.

      இது ஒரு முழுமையான கருத்துக் கணிப்பு இல்லை. இந்த சமூகத்தின் புரிதல்களை உள்ளடக்கியது. அவ்வளவே.

என்ன சொல்கிறார்கள் விழிச் சவால் உள்ளவர்கள்?

        நண்பர்களின் உதவியோடு, கல்லூரியில் படித்துக் கொண்டிருப்பவர்கள் மற்றும் வேலை இல்லா பட்டதாரிகள் என்று சுமார் 138 விழிச் சவால் உள்ளவர்களிடம் இந்தக் கேள்விகளைக் கேட்டோம். இவர்களில் 36 பேர் மட்டுமே பெண்கள். இருந்தபோதிலும், பெண்களிடம் பதில்களைப் பெறுவது, சவாலாகவே இருந்தது எங்களுக்கு.

      பெரும்பாலான பெண்கள் கூறிய பதில், எனக்கு அரசியலைப் பற்றியெல்லாம் தெரியாது என்பதுதான். சிலர் கேள்வியின் போது அழைப்பைத் துண்டித்துவிட்டார்கள். சில ஆண்களும் கூட, இதில் விருப்பம் காட்டவில்லை.

      அவர்களிடம் கேட்கப் பட்டது, மொத்தம் நான்கு கேள்விகள்தான்.  அந்த நான்கு கேள்விகளில், மூன்று கேள்விகளை முக்கியமானவைகளாகக் கருதுகின்றோம்.

கேள்விகள் இவைதான்.

1.   வரக்கூடிய சட்டமன்றத் தேர்தல்ல, எந்தக் கட்சி ஆட்சிக்கு வரணும்னு விரும்புரின்க?

2.     அந்தக் கட்சி ஆட்சிக்கி வரனுனு விரும்ப, என்ன காரணம்?

3.     நீங்க விழிச்சவால் உடையவர்களுக்காக மட்டும், தனித்து இயங்கக்கூடிய எதாவது அமைப்பு அல்லது  சங்கத்துல உறுப்பினரா இருக்கிங்கலா?

இதுதான், அந்த மூன்று கேள்விகள்.

      விரல்மொழியர் அப்படினு ஒரு E-magazine இருக்கு. உங்களுக்குத் தெரியுமா?

இதுதான், அந்த நான்காவது கேள்வி.

முதல் இரண்டு கேள்விகளுக்கான பதில்களைப் பார்ப்போம்.

 ஒரு சிலரின் சுவாரசியமான பதில்களை கீழெ தொகுத்துள்ளோம்.

      வணக்கம். நான் ஆண்டிப்பட்டியிள் இருந்து, ஆர். சரவனன். என்னுடைய விருப்பம் நாம் தமிழர். காரணம், அந்தக் கட்சி ஜாதி, மத, பேதமற்றக் கட்சி.  இளைஞர்கள் அதிகமானோர் விரும்பக்கூடிய கட்சியாக அது உள்ளது. அவர்களின் கொள்கையும், அண்ணன் சீமான் அவர்களின் பேச்சும் என்னைக் கவர்ந்துள்ளது என்கிறார் இவர்.

        இவரைத் தொடர்ந்து, அவர்களின் திட்டங்கள் தனக்குப் பிடித்துருப்பதாகவும், அதுபோல் பல மாநிலங்களில் நாம் தமிழர் கட்சியில் கூறும் திட்டங்கள் செயலில் இருப்பதாகவும் கூறுகிறார், சென்னை மோகன்.

      மேலும், தாரனி, கலையரசி ஆகியோரும் இதே கருத்தைத் தான் கூறுகின்றார்கள்.

      என் பெயர் அன்சாரி. நான் செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரத்துல இருக்கேன்”.

      அன்சாரி! இந்த 2021 assembly election எந்தக் கட்சி ஆட்சிக்கு வரனும்னு விரும்புரிங்க?” என்று கேட்டோம்.

      எந்தக் கட்சி ஆட்சிக்கு வரனும் அப்படினு பார்த்திங்கனா, எதுவந்தாளுமே அப்படிதான் இருக்கு. ஏன்னா உம்ம்ம்ம்என்னத்தைச் சொல்றதுஎன்று, யோசித்து இழுத்தவர், “எல்லாமே அப்படிதான் இருக்கு ஜிஎன்று, முற்றுப்புள்ளி வைத்தார்.

       அப்படித்தான் என்றால் எப்படி ஜி?” என்று கேட்டேன்.

      My கருத்து what is I'm saying என்று அவர் நினைத்திருக்கலாம்.

          “எந்தக் கட்சியுமே சரியில்ல ஜி. புதுசா ஏதாவது ஆட்சிக்கு வரலாம். இதுதான் என்னுடைய கருத்துஎன்றார்.

      நீங்க இப்படிச் சொல்றதுக்குக் காரணம் என்ன?” என்று கேட்டோம்.

      புதுசா அவங்க வரதுனால அவங்களுக்குக் கொஞ்சம் பயம் இருக்கும். ஊழல் ஓரளவு குறையும். மக்களின் கோரிக்கைகளை விரைவாக நிறைவேற்ற வாய்ப்பு உள்ளது. ஐம்பதுக்கு இருபது சதவிகிதமாவது நல்லது செய்ய வாய்ப்பு உள்ளதுஎன்று, கூறி முடித்தார்.

      நான் M A. B Ed. முடிச்சுருக்கேன். இன்னும் நான் ஓட்டர் ஐடியெ எடுக்கல. எனக்கு அரசியலின் மீது ஈடுபாடு கிடையாது. நம்பிக்கையும் கிடையாதுஎன்கிறார், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த M A. B Ed. பட்டதாரியான, ராம்குமார் (பெயர் மாற்றப்பட்டுள்ளது).

       எங்க குடும்பத்துல எங்க தாத்தா, அப்பா என்று தலைமுறை தலைமுறையா நாங்க காங்குரஸுக்குத்தான் ஓட்டுப் போடுவோம். எங்க ஊருல எங்க குடும்பத்தை காங்கிரஸ் குடும்பம் என்றுதான் அழைப்பார்கள். என்னுடைய ஓட்டு காங்கிரஸுக்குத்தான்என்று கூறினார், பெயர் கூற விரும்பாத ஒரு கல்லூரி மாணவி.

      தி.மு. ஆட்சியில் பார்வையற்றோர்கள் போராட்டம் செவிமடுக்கப் பட்டுள்ளது. எங்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கப் பட்டுள்ளது. எங்களுக்கான உரிமைகளையும் பணி வாய்ப்புகளையும் உறுதி செய்துள்ளது. அரசுப் பேருந்து பயணக் கட்டணம் நான்கில் ஒரு பங்கு என்ற உரிமையை வழங்கியுள்ளது. மாற்றுத்திறனாளி என்ற கண்ணியமான மரியாதைக்குரிய பெயரையும் சூட்டியுள்ளது. அவர்களுக்கு எங்களைப்பற்றிய புரிதல் இருக்கிறது, எங்களுக்கு அவர்களின் ஆட்சியின் மீது மதிப்பும் மரியாதையும்  நம்பிக்கையும் இருக்கிறது. தந்தை வழியில் தனயனும் செயல்படுவார் என்ற நம்பிக்கையோடு, ஒருமுறை அவர்களிடம் ஆட்சியை ஒப்படைத்துப் பார்க்கலாம், எங்களின் அவல நிலை அழியுமா என்று?” என்ற கேள்வியோடு நம்மிடம் கூறி முடித்தார், தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளத்தைச் சார்ந்த எம் ஃபில் பட்டதாரி காத்தனன்.

      முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் பொன்னான ஆட்சிக்காலத்தில்தான் பார்வையற்றவர்கள் பட்டதாரிகளாக அங்கீகரிக்கப்பட்டார்கள். நாங்கள் கேட்டவற்றையும், கேட்காத பல நல்ல திட்டங்களையும் வழங்கி எங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தியதில் முத்தமிழ் அறிஞர் கலைஞருக்கும், திராவிட முன்னேற்ற கழகத்திற்கும் முக்கிய பங்கு உண்டு. எனவே என்னுடைய விருப்பம், திராவிட முன்னேற்றக் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம்”. என்கிறார் தென்காசி மாவட்டம், சங்கரன்கோயில் பகுதியிலிருந்து, கோபிநாத் (M.A, M.Ed. )

      எத்தனை நபர்கள், எந்தெந்தக் கட்சிகளுக்கு விருப்பம் தெரிவித்துள்ளார்கள் என்பதை பார்ப்போம்

graphic தற்போதைய அரசியல் கள தலைவர்களின் படங்களும், தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சர் யார் என்கிற வாசகமும் இடம் பெற்றுள்ள படம்

       நாம் தமிழருக்கு, 9 நபர்களும், , .தி.மு., பா.. கூட்டணிக்கு, 12 நபர்களும், தி.மு., காங்கிரஸ் கூட்டணிக்கு 84 நபர்களும் விருப்பம் தெரிவித்துள்ளார்கள்.

      இவை தவிர, நோட்டாவிற்கு, 6 நபர்களும், புதுக் கட்சி ஏதாவது வரட்டும் என்று, 9 நபர்களும், எந்தக் கட்சி வேண்டுமானாலும் வரட்டும் என்று, 12 நபர்களும் விருப்பம் தெரிவித்துள்ளார்கள்.

மொத்தம் 132 நபர்கள், தங்களின் கருத்துகளை நம்மோடு பகிர்ந்துகொண்டார்கள்.

      மேலே குறிப்பிட்டபடி, 138 நபர்களில், 6 நபர்கள், இடையில் அழைப்பைத் துண்டித்துவிட்டுச் சென்றவர்கள். அவர்கள் அனைவரும் ஆண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 இனி மூன்றாவது கேள்விக்கு வருவோம்.

      இதில் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கென்று, இயங்கக்கூடிய சங்கங்களில் உறுப்பினராக இருப்பவர்கள், 25 நபர்கள். அவர்களில் பெண்கள் யாரும் இல்லை. மீதி நபர்கள், அடையாள அட்டை வாங்கிக் கொண்டதோடு, நின்று கொண்டவர்கள்.

சரி. நான்காவது கேள்வியான விரல்மொழியரின் மகிமையைப் பார்ப்போம்.

      விரல்மொழியர் அப்படினு ஒரு மந்த்லி மேஹஸின் இருக்கு. உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டோம்.

            22 பேர் ஆம். தொடர்ந்து வாசித்துவருகிறேன்என்றும், 72 பேர் அப்படி ஒரு பெயரைக் கேள்விப்பட்டதே இல்லை. அப்படி ஒரு பெயரில் ஓர் இதழ் இருப்பதே தெரியாதுஎன்றும் கூறியுள்ளார்கள்.

        மீதியுள்ள 42 நபர்களில் பாதி பேருக்கு மேல், “கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் வாசித்ததில்லைஎன்றும், ஒருசிலர், “அவர்களுடைய whats app குழுமத்தில் இருக்கிறேன், ஆனால் வாசித்ததில்லைஎன்றும் கூறியுள்ளார்கள்.

      இப்பொழுது எல்லாக் கேள்விகளுக்குமான விடைகளும் உங்களுக்கு வந்திருக்கும் என நம்புகிறேன். மேலே குறிப்பிடப்பட்டிருப்பது பார்வை மாற்றுத்திறனாளிகளில் மிகச்சிலரின் எண்ண ஓட்டம் மட்டுமே.

      இரட்டை இலை தாமரை கூட்டணி மலருமா? , உதயசூரியனின் கை ஓங்குமா? அல்லது மூன்றாம் அணி ஏதேனும் இவர்களை முந்துமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இதையெல்லாம் பார்க்கும்போது, இப்படித்தான் சொல்லத் தோன்றுகிறது.

பெற்றோலே இல்லாத காரு, அத ஓட்டுறது யாரு?

 

(குறிப்பு: இக்கட்டுரைக்கான கருத்துக் கேட்பு தனிநபரால் நடத்தப்பட்டதன்று. கருத்துக் கேட்பை ஒருங்கிணைத்த தூத்துக்குடி மாவட்டம் விலாத்திகுளம் அருகிலுள்ள தல்லாகுளத்தைச் சேர்ந்த முனீஸ்வரன், தென்காசி மாவட்டம் கடையயநல்லூரைச் சேர்ந்த முருகேசன் ஆகிய பார்வை மாற்றுத்திறனாளி பட்டதாரிகளுக்குக் கட்டுரையாளர் சார்பிலும் இதழின் சார்பிலும் நன்றிகள். இவர்களோடு பல பார்வை மாற்றுத்திறனாளி மாணவர்கள் மற்றும் வேலை நாடுநர்களின் தொடர்பு எண்களைப் பெற்றுத் தந்தவர்களுக்கும், கருத்தளித்தவர்களுக்கும் எங்கள் நன்றிகள்).

 

(கட்டுரையாளர் திருநெல்வேலி சதகத்துல்லா அப்பா கல்லூரியில் முதுகலை இரண்டாம் ஆண்டு வரலாறு பயின்றுகொண்டிருக்கிறார்).

தொடர்புக்கு : gmmuthukumar06@gmail.com

3 கருத்துகள்:

  1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  2. இந்த கருத்துக்கள் அனைத்தையும் மிக நேர்த்தியாக தொகுத்து அளிக்கும் முயற்சியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்ட ஒவ்வொரு தோழனுக்கும் எனது பாராட்டுக்கள். அதனை அழகாக கட்டுரை வடிவில் எடுத்து புரியும்படி கொடுத்திருக்கிற தம்பி முத்துக்குமார் அவருக்கு வாழ்த்துக்கள். உயிர்வாழ்வதற்கு தாமரை இலையை காட்டிலும் உதய சூரியனே முக்கியம் என்கிற கருத்தில் நான் உடன்படுகிறேன் அவ்வண்ணமே நடக்கும் என்று நம்புகிறேன் வாழ்த்துக்கள் ஒவ்வொருவருக்கும் மீண்டும்

    பதிலளிநீக்கு
  3. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு