சிறப்புக் கட்டுரை: தபால் வாக்குப் பதிவு: புதியதாய் ஒரு புறக்கணிப்பு முயற்சியா? – முனைவர் கு. முருகானந்தன்.

graphic தபால் வாக்குப் பெட்டி என்று எழுதப்பட்டு பூட்டு போடப்பட்ட பெட்டியின் படம்

             கொரோனா பெருந்தோற்றின் அபாயம் இன்னும் நீங்காத நிலையில், ஊனமுற்றோர், 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் ஆகியோருக்கு தபால் வாக்குப் பதிவு நடைமுறை இந்தத் தேர்தலில் அமல்படுத்தப்பட்டுள்ளது. இக்கட்டுரை வெளியாகும் தருணத்தில் தபால் வாக்குப் பதிவு நடைமுறை தொடங்கப்பட்டு, வீடு வீடாகச் சென்று வாக்குகளைப் பெரும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே பீஹார் சட்டப் பேரவைத் தேர்தலில் தபால் வாக்குப் பதிவு நடைமுறைப் படுத்தப்பட்டு, தற்போது நடைபெற உள்ள ஐந்து மாநில சட்டப் பேரவைத் தேர்தல்கள், குமரி நாடாளுமன்ற இடைத் தேர்தல் உள்ளிட்ட இடைத் தேர்தல்களிலும் நடைமுறைக்கு வந்துள்ளது.

      திராவிட முன்னேற்றக் கழகம் சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடர்ந்த தபால் வாக்குப் பதிவுக்கு எதிரான வழக்கில் தடை விதிக்க முடியாது என்று தீர்ப்பளித்துள்ள நீதிமன்றம், ஆனால் அவ்வாறு தபால் வாக்களிக்க விண்ணப்பித்துள்ளோரின் விவரங்களை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு வழங்கவேண்டுமென்று தேர்தல் ஆணயத்திற்கு உத்தரவிட்டுள்ளது. சுமார் பனிரெண்டு இலட்சம் ஊனமுற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் தபால் வாக்களிக்க விண்ணப்பித்திருப்பதாக தேர்தல் ஆணயத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

      தபால் வாக்குப் பதிவு முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள விதமும், அதற்குக் காட்டப்படும் அவசரமும் இம்முறையின் உண்மையான நோக்கங்களைப் பற்றி பாரிய ஐயங்களைத் தோற்றுவிக்கின்றன. தேர்தல் என்பது வாக்குகளைப் பதிவுசெய்வது மட்டுமல்ல, அது ஒரு மக்களாட்சி நடைமுறை. வாக்களிப்பதையும் தாண்டி, அரசியல் கட்சியினரைச் சந்திப்பது, வேட்பாளர்களை நேரில் அணுகுவது, வாக்குச் சாவடிச் சூழலில் மக்கள் சமூகமாக இணைந்து கருத்துக்களைப் பரிமாறிக்கொள்வது என வாக்களிக்கும் நடைமுறையில் பல்வேறு பங்கேற்புக்குரிய அம்சங்கள் உள்ளன. தபால் வாக்குப்பதிவு முறை ஊனமுற்றோரையும் மூத்த குடிமக்களையும் இத்தகையதொரு தேர்தல் பங்கேற்பில் இருந்து விளக்கி வைப்பதாகவே அமைந்திருக்கிறது. மேலும் இரண்டு வாரங்களுக்கு முன்பே தபால் வாக்குகளைப் பெறுவது, போதிய தகவல்கள் சென்று சேராமல் இருப்பது, அரசியல் கட்சிகளின் முகவர்கள் இல்லாமல் முழுவதும் அதிகாரிகள் மட்டத்திலேயே செயல்படுத்தப்படும் வாக்குப்பதிவு போன்றவை வாக்களிப்பவரின் சுதந்திரமான முடிவையும், அவ்வாறு வாக்காளர் முடிவெடுக்கும் திறனையும், வாக்குப் பதிவின் நம்பகத்தன்மையையும் கேள்விக்குள்ளாக்குகின்றன.

      இவற்றைவிட நமக்கு முக்கியமானது அணுகல் தன்மை மிக்க வாக்குப் பதிவுக்கான முயற்சிகள் இனி முன்னெடுக்கப்படுமா என்ற அச்சமே. ஊனமுற்றோருக்கான அமைப்புகளும் செயல்பாட்டாளர்களும் வாக்குப் பதிவு நடைமுறையிலும் வாக்குப் பதிவு மையங்களிலும் ஊனமுற்றோருக்கான அணுகல் தன்மை, சிறப்பு ஏற்பாடுகள், தனிப்பட்ட வசதிகளைச் செய்துதர வேண்டும் என்பதைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். பெரும் போராட்டங்களுக்குப் பிறகே வாக்குப் பதிவு இயந்திரங்களில் பிரெயில் எண்கள், பிரெயிலில் வேட்பாளர் பட்டியல், சக்கர நாற்காலிகள் பயன்படுத்துவதற்கான சாய்தள வசதி போன்றவை பெயரளவுக்காவது செய்யப்பட்டுள்ளன. பிரெயில் வேட்பாளர் பட்டியலை முறையாக பார்வையற்றோருக்கு முன்னரே வழங்குவது, காதுகேளாதோருக்கான சைகை மொழியில் வாக்குப் பதிவு முறைகளை விளக்குவது, சக்கர நாற்காலிகள் பயன்படுத்துவோர், மூத்த குடிமக்கள் சென்றுவர உண்மையிலேயே பயன்படக்கூடிய உருப்படியான சாய்தள வசதி ஏற்படுத்துவது எனச் செய்ய வேண்டியவை ஏராளமாக இருக்கின்றன. கொரோனா பெருந்தொற்றைக் காரணம் காட்டி, இனி அணுகல் தன்மைகளோடு கூடிய (Accessible) வாக்குச் சாவடிகள் மற்றும் தேர்தல் நடைமுறைகள் என்பதற்கு மாற்றாக தபால் வாக்குப் பதிவு முறை திணிக்கப்படுமோ என்ற அச்சம் எழுகிறது. கடந்த ஓராண்டாக கொரோனா என்ற பெயரில் மத்திய மாநில அரசுகள் முன்னெடுத்துள்ள பல்வேறு நடவடிக்கைகளும் நமது அச்சத்தை உறுதிப்படுத்தும் வண்ணமே அமைந்துள்ளன!

      ஊனமுற்றோர் தபால் வாக்குப் பதிவிற்கு விண்ணப்பிக்கும் முறை, அவற்றிற்கு அனுப்பப்படும் குறுஞ்செய்திகள், வீட்டில் சென்று நேரடியாக வாக்குப் பெரும் நடைமுறை எனப் பல்வேறு கட்டங்களில் எப்படிப்பட்ட நிலையான நடைமுறைகள் (Standard Operating Procedures) பின்பற்றப்பட வேண்டும் என்பது குறித்து ஊனமுற்றோருக்கான அமைப்புகளுடனோ, செயல்பாட்டாளர்களுடனோ கலந்தாலோசிக்கப் பட்டதாகத் தெரியவில்லை. இந்நிலையில், பார்வையற்ற, அல்லது கல்வி பயிலாத ஒரு ஊனமுற்ற முதியவருக்கு இந்த நேரத்தில் வந்து வாக்குப் பதிவு செய்துகொள்வோம் என்று அவரது அலைபேசிக்குக் குறுஞ்செய்தி அனுப்பினால் அவருக்கு அந்தச் செய்தி எப்படிச் சென்று சேரும்? அந்த ஊனமுற்றவர் அல்லது முதியவர் வீட்டில் இல்லை என்ற சூழலில் பிறர் அவரது வாக்கை அளிக்கவில்லை என்பதை எப்படி உறுதிப்படுத்துவது? காணொளிப் பதிவுகளை வைத்து முறைகேடுகளைக் கண்டுபிடிப்பது உண்மையில் சாத்தியமா? முழுமையான நம்பகத்தன்மை கொண்டது (Foolproof) என்று சொல்லப்படும் இ.வி.எம். வாக்குப் பதிவு இயந்திரத்தின் உண்மைத்தன்மை குறித்தே அரசியல் கட்சிகள் தீவிரமான ஐயங்களை எழுப்பும்போது, வாக்களிப்பவரின் வீட்டிற்குள் நடக்கும் வாக்குப் பதிவின் நம்பகத்தன்மையை எப்படிச் சந்தேகப் படாமல் இருக்க முடியும்?

      ஊனமுற்றோருக்கான கோணத்திலிருந்து தபால் வாக்குப் பதிவிற்கு எதிராக சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளதாக நம்மிடம் தெரிவித்தார் டிசம்பர் மூன்று இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும் நன்கு அறியப்பட்ட ஊனமுற்றோர் உரிமைச் செயல்பாட்டாளருமான தீபக்நாதன். அவர் மெட்ராஸ் ரிவ்யு இணையதளத்தில் எழுதியுள்ள கட்டுரையில் தபால் வாக்குப் பதிவு குறித்த தனது விமர்சனங்களையும் முன்வைத்துள்ளார். "95% மாற்றுத்திறனாளிகள் வறுமையில் குடும்பத்தினரைச் சார்ந்து வாழ வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறார்கள். அதனால் அவர்கள்  சொல்பவர்களுக்குத் தான் வாக்களிக்க வேண்டிய சூழல் மாற்றுத்திறனாளிகளுக்கு இருக்கிறது. அரசியல் அறிந்து மாற்றுத்திறனாளிகள் நலனுக்கு எந்த கட்சி துணையிருக்கும் என்று எல்லாம் பார்த்து வாக்களிக்கும் சுதந்திரம் இல்லை." என்று அவர் குறிப்பிடுவது இங்கு குறிப்பாக கவனிக்கப்பட வேண்டியதாகும்.

      இத்துணை அச்சங்களுக்கும் ஐயங்களுக்கும் இடையிலும், பல்வகை ஊனமுற்ற, கடுமையான ஊனங்களை உடைய, மிகவும் வயது முதிர்ந்த வாக்காளர்களுக்கு தபால் வாக்குப்பதிவு முறை தேர்தலில் பங்கேற்கும் வாய்ப்பையும், குறைந்தபட்சம் வாக்களிக்கும் அனுகூலத்தையும் வழங்கக்கூடும். ஆனால் அத்தகைய வாய்ப்பு வாக்காளர்களைத் தவிர்த்த பிறருக்கு, குறிப்பாக குடும்பத்தினர், தேர்தல் அதிகாரிகள், இவ்விரு பிரிவினரிடமும் செல்வாக்குச் செலுத்தும் அரசியல் கட்சிகள் ஆகியோருக்கு அனுகூலமாக அமைந்துவிடக் கூடாது. மேலும் தேர்தல் நடைமுறைகள் அனைத்திலிருந்தும் ஊனமுற்றோரை ஒதுக்கி வைத்துவிட்டு, வெறும் சடங்கிற்காக மட்டும் வாக்களிக்க வைக்கும் அடையாள நிகழ்வாக இந்தத் திட்டம் மாறிவிடக் கூடாது என்பதே நமது கவலையாகும். நாம் குறிப்பிட்ட வகை ஊனமுற்றோருக்கு சிறப்புக் கல்வி வேண்டுமென்று கேட்டால் உள்ளடங்கிய கல்விதான் கொடுப்பேன் என்று அடம்பிடிக்கும் அரசு, தேர்தல் என்று வரும்போது நாம் கேட்கும் உள்ளடங்கிய பங்கேற்பிற்கு மாற்றாக சிறப்பு முறையை நடைமுறைப்படுத்துவது நகைமுரண் அன்றி வேறென்ன?

      தற்போதைக்கு ஊனமுற்றோரும் மூத்த குடிமக்களும் விரும்பினால் தபால் வாக்குப்பதிவு முறைக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்தில் 300 ஊனமுற்றோர் மட்டுமே அவ்வாறு தபால் வாக்களிக்க விண்ணப்பித்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனில் பிற மாவட்டங்களில் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரித்திருக்க வாய்ப்பு குறைவே. எனினும், தபால் வாக்குப்பதிவு முறை கொரோனா பெருந்தோற்றைக் காரணம் காட்டி கொண்டுவரப் பட்டாலும், இந்த நடைமுறை தற்காலிகமானது மட்டுமே என்றோ, பெருந்தோற்று அபாயம் நீங்கியவுடன் விலக்கிக்கொள்ளப்படும் என்றோ எந்த உறுதியும் கூறப்படவில்லை. மேலும் இந்த நடைமுறை செயல்படுத்தப்பட்ட அனுபவங்களில் இருந்து நேர்மறையான அல்லது எதிர்மறையான அம்சங்கள் இன்னும் முறையான ஆய்விற்கு உட்படுத்தப்படவில்லை. இச்சூழலில் தபால் வாக்குப்பதிவு எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்தப் போகிறது என்பதை இனிவரும் மாதங்களில்தான் தீர்மானிக்க முடியும். எப்படி உள்ளடங்கிய கல்வி முறைக்கு வீட்டிலிருந்தே கல்வி பயிலும் முறை நிச்சயம் மாற்றாக அமைய முடியாதோ, அதுபோலவே ஊனமுற்றோரின் முழுமையான பங்கேற்பை உறுதிசெய்யும் அணுகல்தன்மை மிக்க தேர்தல் நடைமுறைகளுக்கு தபால் வாக்குப் பதிவு முறையினை மாற்றாக ஒருபோதும் ஏற்க முடியாது.    கொரோனா பெருந்தோற்று காலத்தில் ஊனமுற்றோர் முன்வைத்த பல்வேறு கோரிக்கைகளைக் கண்டுகொள்ளாத அதே அரசுகள் தான் தற்போது ஊனமுற்றோரைத் தேர்தலில் பங்கேற்க வைத்தே தீருவோம், அதுவும் வாக்குச் சாவடிகளுக்கு வராமலேயே என்று கங்கணம் கட்டிக்கொண்டு நிற்கின்றன. இது யாருடைய நன்மைக்கு, யாருடைய அனுகூலத்திற்கு என்பதை நாம் கண்டுகொள்ளும் நாள் வெகுதொலைவில் இல்லை.

 

திரு தீபக்நாதன் அவர்களின் கட்டுரைக்கான இணைப்பு:

https://madrasreview.com/society/problems-faced-by-people-with-disabilities-as-voters-and-candidates/

 

graphic முனைவர் கு. முருகானந்தன் அவர்களின் படம்
கட்டுரையாளர் முனைவர் கு. முருகானந்தன்

 

கட்டுரையாளர்: கள்ளக்குறிச்சியில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழக உறுப்பு கலை அறிவியல் கல்லூரியில் ஆங்கிலத் துறை உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

தொடர்புக்கு: send2kmn@gmail.com

1 கருத்து:

  1. தபால் வாக்கு பதிவிற்கு நம்மை உந்தித் தள்ளும் முயற்சி கட்டாயம் பேராபத்து. முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டிய விஷ விதை! நம் வசதிக்கு என்பதை புறந்தள்ளி அவர்களின் வசதிக்கு ஏற்றார் போன்று நம்முடைய உரிமைகளை வளைப்பது வன்மையாக கண்டிக்கத்தக்க சட்டமீறல்! குரங்கு கையில் கிடைத்த பூ மாலை போல் தபால் ஓட்டு என்கிற முறை ஆட்சியாளர்களின் கையில் சிக்கிக் கொண்டு படாதபாடு படுவதை நாம் கடந்தகாலத்தில் கண்டோம், இனியும் காணத்தான் போகிறோம் என்கிற அச்சம் மேலோங்குவதை தவிர்க்க இயலவில்லை! நல்லதொரு அலசல் நேர்த்தியாய் வழங்கிய உங்களுக்கு பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு