சிறுகதை: கர்த்தாவே உமக்கு கோட்டான கோட்டி நன்றியப்பா. - ஓவியா

graphic ்அப்பாவும் அம்மாவும் குழந்தைக்கு முத்தம் கொடுப்பது போன்ற படம். இதில் கர்த்தாவே உமக்கு கோட்டான கோட்டி நன்றியப்பா என்ற இந்தக் கதையின் தலைப்பு இடம்பெற்றுள்ளது

             I.L.Y இதனை ஆங்கில பிரெயில் சுருக்கெழுத்து விதிப்படி I like you என அர்த்தம் பண்ணிக் கொள்வதா அல்லது 18 கூட்டல் விதிப்படி I love you என அர்த்தம் பண்ணிக் கொள்வதா என்கிற எந்தக் குழப்பமும் இல்லாமல் அந்தக் கடிதத்தின் எழுத்துக்களைத் தடவும் போதே மனம் தானாகவே  I love you எனப் புரிந்துகொண்டு விட்டதால் பதில் கடிதம் சுருக்கெழுத்துப் பயன்படுத்தாமல் I love you என முழுவாக்கியமாகவே எழுதப்பட்டது.

          ஆங்கில பிரெயில் சுருக்கெழுத்து விதிப்படியே l என்கிற ஒற்றையெழுத்துப் புரிந்து கொள்ளப்பட்டிருந்தால் காதலையாரது முதலில் சொன்னது நீயா? இல்லை நானா? என்கிற நகக்கீரல்களால் கண்ணம் வீங்கவைத்துக் கொண்டிருக்கும் ஜாலியான பஞ்சாயத்துகளும் நாம கல்யாணம் பண்ணாம இருந்திருக்கலாமோ என அடி நெஞ்சில் குத்தீட்டியை இறக்கும் கொடூரமான பஞ்சாயத்துகளும் தடுக்கப்பட்டிருக்கும். இப்படியொரு மொக்கை கதையை நீங்கள் வாசிக்க வேண்டிய சூழலும் ஏற்பட்டிருக்காது.

          அப்படியாக அந்த l என்கிற எழுத்தை அந்த இருவரில் ஒருவரைத் தவறாக புரிந்துகொள்ள வைத்து இந்தக் காதல் காவியம் உருவாக காரணமாக இருந்த கர்த்தாவே உமக்குக் கோட்டான கோட்டி நன்றியப்பா.

          இந்தக் கடிதப் பரிமாற்றங்கள் பிரெயில் எழுத்து முறையில் செய்யப்பட்டது என்பதை மேலேயே சொல்லிவிட்டதால் இது இரண்டு பார்வையற்றவர்களுக்கு இடையேயான காதல் என்பதை நான் சொல்லாமலே நீங்கள் புரிந்திருப்பீர்கள் என நம்புகிறேன்.

          அப்பா என்பதன் அர்த்தத்தை அகராதியில் பார்த்துத் தெரிந்து கொள்ள வேண்டிய கட்டாயத்திலிருந்த அவளுக்கு உலகமே அவள் அம்மாதான். அந்த உலகம் தன் சுழற்சியை நிறுத்திய அந்த நொடி அவளின் வாழ்க்கை சூராவளி சுழலில் சிக்கிக் கொண்டுவிட்டது.

          `உறக்கமில்லா இறவுகளும் உணவில்லா பகற்பொழுதுகளும் மிகசாதாரணமாகி விட்ட அந்தக் காலகட்டத்திலும் அவளின் உணர்ச்சிகள் உயிர்ப்போடே இருந்தது.

          தன்னில் ஒரு பாதியாக இருந்த அம்மாவைக் காலன் பிய்த்துக் கொண்டு போனதால் ஏற்பட்ட வெற்றிடத்தைக் காதலால்,  தன் காதலனால் நிறப்பிவிடலாம் என முழுமனதாக நம்பினாள்.

      அம்மாவின் இறப்பிற்கு பின்பான அவளின் வாழ்க்கைப் பாட்டையும் காதலையும் வெறும் வார்த்தைகளால் எழுதி விடுவது புவியின் மொத்த நீரில் 97.2 விழுக்காட்டைக் கொண்டிருக்கும் பிரமாண்டமானதொரு அமைப்பைக் கடல் என்கிற மூன்றெழுத்திற்குள் அடக்கிவிடுவது போன்றது. அத்தகைய குற்றத்தைச் செய்ய என்மனம் ஒப்புக் கொள்ளாததால் விசைப்பலகையை அவளிடம் ஒப்படைத்து விட்டு அவளே தன் கதைகளைச் சொல்ல நான் என் காதுகளை அவளிடம் ஒப்புக் கொடுத்து விட்டேன்.

          அம்மாவின் இறப்பிற்கு பிறகு கொஞ்ச நாட்கள் சின்னண்ணன் வீடு, பெரியண்ணன் வீடு, அக்காமார் வீடு என மாற்றி மாற்றி அலைக்கழிக்கப்பட்டேன். அவர்கள் எல்லோருமே என்னை ஒரு சுமையாக பார்ப்பதைப் புரிந்து கொள்ள துவங்கிய போது எனக்கு வயது 17.

          வாழ்க்கை மீதான பற்றுதல் கரைந்து செத்து விடும் ஆசை மனம் முழுக்கவும் பாரமாய் கணத்துக் கொண்டிருந்ததால் என்றைக்குத் தூக்குக்கயிற்றில் தொங்கலாம் எனத் தொடர்ச்சியாக சிந்தித்துக் கொண்டிருந்த வெறுமையான அந்த நாட்கள் இப்படியாக ஒரு முடிவிற்கு வரும் என்பதை நான் கொஞ்சமும் எதிர்ப்பார்த்திருக்கவில்லை. தூக்குக் கயிற்றை எதிர்நோக்கியிருந்த என்னைக் கொஞ்சம் கொஞ்சமாக தன் காதல் கயிற்றால் கட்டியிழுத்துத் தாலிக் கயிற்றுக்காய் ஏங்கவைத்து விட்டான்.

          கர்த்தரே நம் மீட்பர் என்கிற நம்பிக்கையெல்லாம் அவனோடு பேசியதில் சுக்குநூறாக உடைந்துவிட்டது. இவன்தான் உன்மையான மீட்பர் எனப் புரிய துவங்கியபோது ஞாயிறு தோறும் தேவாலயத்திற்குச் செல்வதை நிறுத்தி விட்டேன். மூன்று வேலை சாப்பாடு, 2 வேலை ஜெபம் என்றிருந்த என் வாழ்க்கை குறைந்த பட்சம் ஒருநாளைக்கு  10 வேளை அவனோடு அலைபேசியில் உரையாடுவது மீதமுள்ள நேரங்களில் அவன் நினைவில் லயித்திருப்பது என மாறியது.

          கல்லூரி காலம் முழுக்கவே காலை உணவு என்பது என் கால அட்டவணையிலேயே இருக்காது. மதியம் மற்றும் இரவு உணவு 2  வேலையும் தினமும் கிடைக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. உணவு கிடைக்காத பல பொழுதுகளில் அவனோடு பேசியே பசியாற்றியிருக்கிறேன் என்று சொன்னால் நீங்கள் நம்பவா போகிறீர்கள்?

          ஆசை, கோபம், தாபம், வெறுப்பு, இயலாமை என என்னுள் ஏற்படும் எல்லாவற்றிற்கும் ஒரே வடிகாலாக அவன் மட்டுமே இருந்தான். பெற்றோரின் அதீத கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும் எனது எல்லா ஆசைகளையும் நிறைவேற்ற அவனை நான் கட்டாயப்படுத்திய போதும் பலத்த மனப்போராட்டங்களுக்கு மத்தியில் செய்தான். அப்போதைய வாழ்க்கையின் மகிழ்ச்சியான நிமிடங்கள் அனைத்துமே அவனோடு கழித்ததாகவே இருக்கும். அதனாலேயே அவன் தனியாக தொலைதூர பயணங்களுக்குத் திட்டமிடும் போது முடிந்தவரை என்னையும் உடனழைத்துச் செல்ல வற்புறுத்துவது அல்லது அவனையே அந்த நிகழ்விற்குச் செல்லவிடாமல் தடுப்பது போன்று மூர்க்கத்தனமாக நடந்து கொள்ள வேண்டியதாயிற்று.

          கல்லூரி முடியும் வரை ஓரளவுக்கு மெதுவாக நகர்ந்து கொண்டிருந்த எங்கள் காதல்,   கல்யாணம் என்கிற அடுத்த கட்ட இலக்கை நோக்கிக் கொஞ்சம் வேகமாக நகர ஆரம்பித்தது. நகர ஆரம்பித்தது என்று சொல்வதை விட என்னால் வேகமாக நகர்த்தப்பட்டது.

          அவனுடனான கல்யாணம் ஒன்றே என்னுடைய எல்லா பிரச்சனைகளிலிருந்தும் என்னை விடுவிக்கும் எனத் தீர்க்கமாக நம்பியதால் கல்யாணம் குறித்த முன்யோசனையும் அவசரமும் தேவையில்லாத சூழலிலிருந்த அவனை கல்யாணத்திற்கான அதிகபட்ச இலக்காக ஒரு குறிப்பிட்ட வருடத்தை ஒப்புக் கொள்ளவைத்தேன். அதன் பிறகான எங்களின் அலைபேசி உரையாடல்கள் அனைத்துமே கல்யாணம் குறித்தே பெரும்பாலும் இருந்தது.

          அடுத்த ஒரு வருடத்தில் அவனுக்கு நிரந்தர வேலை கிடைக்ககாதல் மற்றும் கல்யாணம் தொடர்பிலான அச்சங்களிலிருந்தும் தயக்கங்களிலிருந்தும் தன்னை கொஞ்சம் கொஞ்சமாக விடுவித்துக் கொள்ளதுவங்கினான்.  சுதந்திரம் என்றால் என்ன என்பதை என்னிடமிருந்து கற்றுக் கொண்டிருந்தவன் எனக்கு கற்றுத்தர ஆரம்பித்து விட்டான்.

          கல்யாணம் தொடர்பான உரையாடல்களில் அலைபேசி வழியே என் ஆழ்மண உணர்ச்சிகளோடு விளையாடத் துவங்கியவன் எதிர்பாராத ஒரு நேரடி சந்திப்பில் என் உதடுகளையும் தன் விளையாட்டில் இணைத்து விட்டான். அந்த முத்த அறங்கேற்றத்தால் ஆழ்மனதை மட்டும் பாதித்திருந்த கல்யாண ஆசை என்கிற கரோனா உடலுக்கும் பரவிவிட்டது. அவனோடு சேரும் நாளை எண்ணி தினமும் தனியாக அழுது கொண்டிருந்த கண்களுக்குப் போட்டியாக அன்றிலிருந்து என் மென்னுறுப்பும் சேர்ந்துவிட்டது.

          நாட்கள் ஒரு ஆமையைப் போல நகர்ந்து கொண்டிருந்தது. மேற்கூறையும் நாற்புற மதில் சுவரும் இல்லாத வெட்ட வெளியில் அங்கிங்கென ஒதுங்க இடம்கொடாதவகையில் சுட்டெரிக்கும் சூறியனாய் கல்யாணம் மீதான ஏக்கம் என்னை வதைத்துக் கொண்டிருந்தது. யாருக்கேனும் கல்யாணம் என்று கேள்விப்படும் போதெல்லாம் எனக்கான நாள் எப்போது குறிக்கப்படும் என நான் அடைந்த தவிப்பை நீங்கள் புரிந்துகொள்ள இந்த ஒரு சம்பவம் போதுமானதாக இருக்குமென நம்புகிறேன்.

          எங்கள் பள்ளிக்கூட ஆசிரியர் முருகானந்தம் திருமணத்திற்கு நாங்கள் இருவரும் சென்றிருந்தோம். மணமக்களை வாழ்த்தி கைகுலுக்குவதற்காக அருகில் செல்லும்போதே ஒருமணமகளாக மேடையேறும் நாள் எனக்கு இன்னும் வாய்க்கவில்லையே என என் கண்கள் குளமாகிவிட்டது. கைகுலுக்கிய சமயத்தில் எவ்வளவு முயன்றும் கட்டுப்படுத்த முடியாமல் கரையை உடைத்துக் கொண்டு பாய்ந்து விட்ட எனது கண்ணீருக்கான காரணம் அந்த அக்காவால் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு, அவர்களுக்கிடையே சிறு பூசல் ஏற்பட்டு,   புதுமண தம்பதிகள் என்பதால் உடனேயே மறக்கப்பட்டு விட்டது என்றாலும் இதற்கான காரணம் தெரியாமல் முருகானந்தம் வாத்தியார் நீண்ட நாட்களாக குழம்பியிருக்கிறார்.

          அவர்களுக்கிடையே பூசலை ஏற்படுத்தினாலும் அம்பியாக இருந்த என்னவனை ரெமோவாக மாற்றிவிட்டது இந்த அழுகை. கல்யாண விஷயத்தில் அவனுக்குக் கொஞ்சம் கூடுதல் ஆர்வம் வரவேண்டும் என நான் எதிர்ப்பார்த்திருந்தாலும் அவனது இந்த ஆக்ரோஷமான ஆர்வத்தை கற்பனைக்கூட செய்து பார்த்ததில்லை.

          அன்று சும்மா சந்தித்து கொஞ்ச நேரம் பேசிவிட்டு திரும்புவதுதான் எங்கள் திட்டமாக இருந்தது. கையில் வைத்திருந்த கோன்ஐஸ்க்ரீம் உருகி வழிந்து கொண்டிருப்பது குறித்து பிரக்ஙையற்றவளாய் அவனின் தீர்க்கமான அந்த முடிவை கேட்டு உறைந்துவிட்டேன். இப்பொழுதே என்னோடு வீட்டுக்கு வந்து விடு என வலியுறுத்த துவங்கியவன் நீயில்லாமல் நான் இந்த இடத்தை விட்டு நகரப்போவதில்லை என வற்புறுத்த துவங்கிவிட்டான். தனது பெற்றோரிடமும் என்னை அழைத்து வருவதாக அலைபேசியில் தெரிவித்துவிட்டான்.

          அது சரியான முடிவு அல்ல என்பதை மிகத்தெளிவாக உணர்ந்திருந்தாலும் அவனுக்கு அதனை புரியவைக்கும் ஆற்றல் என்னிடம் இல்லை.

          அங்கிருந்து அவன் ஊருக்குச் செல்லும் ஒன்றரை மணி நேர பேருந்து பயணத்தில் அவனோடு அமர்ந்து பேசி புரியவைத்து விடலாம் என முடிவெடுத்து பேருந்தில் ஏறிய எனக்கு அங்கும் சோதனைதான். பேருந்தின் முக்கால்வாசி இருக்கைகள் நிரம்பிவிட்டதால் இருவரும் அருகருகே அமரும் வகையிலான இருக்கைகள் எதுவும் இல்லாததால் வேறு வேறு இருக்கைகளில் உட்கார்ந்து கொண்டு அலைபேசியில் அழைப்பெடுத்து அவனது இந்த முடிவின் சாதகபாதகங்களைப் புரியவைத்தேன். ஒருவழியாக எனது கருத்துக்களைப் புரிந்துகொண்டவன் தனது ஊருக்கு முந்தைய நிறுத்தத்தில் இரங்க ஒப்புக் கொண்டதால் இருவரும் அவரவர் வீட்டுக்குச் சென்றுவிட்டோம்.

          அதன் பிறகு நடந்ததெல்லாம் எங்கள் காதல் அத்தியாயத்தின் கடைசி மற்றும் கருப்புப் பக்கங்கள். பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு உறுதியான காதலுக்கு ஈடுகொடுக்க முடியாத அவனது பெற்றோர் அப்போதைக்கு அவனை சமாதானபடுத்தும் வகையிலான ஒரு திட்டத்தை முன்மொழிந்திருக்கிறார்கள். இதற்கு அவனும் உடன்பட 26 என்பது இரட்டைப் படை எண் என்பதால் அவனது 27  ஆவது வயதில் கல்யாணத்தை வைத்துக் கொள்ளலாம் எனவும் அது வரை அவர்கள் வீட்டில் வந்து தங்கிக் கொள்ளுமாறும் அலைபேசியில் சொன்னார்கள்.

          அதற்கு முன்பு என் தரப்பில் யாராவது ஒரு உறவினரை அவர்களோடு அலைபேசியில் பேசவைக்குமாறும் அவரோடே தன் வீட்டிற்கு வரவேண்டுமெனவும் சொல்லியிருந்தார்கள். அவனது வற்புறுத்தலும், அப்படியாவது அவனை தினமும் பார்க்கலாம் என்கிற எனது பேராசையும்,  பாதுகாப்பான மற்றும் மனநிம்மதியான சூழலோடு தங்குவதற்கான உரைவிட தேவையும் துளியும் விருப்பமில்லாவிட்டாலும் அவர்கள் சொல்லியபடி அவர்கள் வீட்டிற்கு சென்று தங்கலாம் என என்னை ஒப்புக் கொள்ளவைத்தது. நான் செய்தது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்பதை அங்கு சென்ற மறுநாளே புரிந்துகொண்டேன்.

          அவனது பெற்றோர் நான் அவர்கள் வீட்டிற்கு வந்தது குறித்தும், எங்கள் கல்யாணம் குறித்தும் முன்னுக்குபின் முரணாக பேச துவங்கினார்கள். அலுவலகம் சென்று வரும் வழியிலேயே அவனை மடக்கி அவனது அம்மாவும் அப்பாவும் இப்படி அவளை வீட்டுக்குக் கொண்டு வந்துவச்சிருக்கியே அக்கம்பக்கத்துல என்ன பேசுவாங்கன்னு தெரியுமா? அவளுக்கு விடுதியில் தங்கி பாக்குரமாதிரி ஏதாவது தனியார் வேல கிடைக்காதா? எனக் கேள்விகளால் துளைத்திருக்கிறார்கள்.

          இரட்டைப் படை வயது என்பதே எங்கள் கல்யாணத்தைத் தாமதப்படுத்துவதற்கான காரணமாக முதலில் சொல்லப்பட்டாலும் ஒரு வருடம் என்கிற உறுதியான இலக்கு நகைக்கடன், வீட்டுக்கடன் போன்ற நிதி காரணங்களை முன்வைத்து அவனின் பெற்றோரால் கொஞ்சம் கொஞ்சமாக நீடிக்கப்பட்டுக் கொண்டே வந்தது. கண் தெரியாதவர்களுக்கு காதும் கொஞ்சம் மந்தம் என்கிற பார்வையுள்ளவர்களுக்கே பொதுவான அறியாமையாலோ என்னவோ என் காதுபடவே என்னைப் பற்றியான அவதூறுகள் மெல்லிய குரலில் பேசப்பட்டன.

          எங்கள் காதலோடு ஒப்பிடும்போது இந்தப் பிரச்சனைகளெல்லாம் ஆரம்பத்தில் ஒன்றுமில்லை எனத் தோன்றினாலும் நாள்பட காதலையே கைவிட்டு விடலாம் எனுமளவுக்கு உளவியல் தாக்குதல்கள் தொடர்ந்தது.

          கூடலில் உச்சக்கட்டத்தைக் காணவேண்டிய எங்கள் காதல் ஊடலில் உச்சகட்டத்தை எட்டி பிரிதல் என்கிற முடிவை நோக்கி நகர ஆரம்பித்தது.

          எனது இல்லாமைகளும் இயலாமைகளும் பெரிதுபடுத்தப்பட்டு ஏற்கனவே சீள்பிடித்திருந்த எனது ஆழ்மன காயங்கள் கூறிய வார்த்தைகளால் குத்தி மேலும் பெரிதாக்கப்பட்டது. இத்தகைய தொடர் அழுத்தங்களால் ஒருநாள் அவனிடம் கூட சொல்லிக் கொள்ளாமல் அங்கிருந்து நான் முன்பு சில நாட்கள் தங்கியிருந்த தனியார் காப்பகத்திற்கு கிளம்பிவிட்டேன். சென்ற சில நாட்களிலேயே மீண்டும் அவனது வீட்டிற்கு திரும்பிவிட்டேன்.

          இவ்வளவு பிரச்சனைகளுக்கு பிறகும் அவனது பெற்றோர் சமாதானம் பேசினார்கள், அவன் காதலோடு அழைத்தான் என்பதற்காகவெல்லாம் மீண்டும் அவன் வீட்டிற்குச் செல்லுமளவுக்கு நான் ஒன்றும் குழந்தையில்லை என்றாலும் அங்கு செல்லத் தூண்டியது எது என்பதை என்னால் தெளிவாக சொல்ல முடியவில்லை.

          திருமணத்திற்கு பிறகான உனது வாழ்க்கை அந்த வீட்டில் இப்படித்தான் இருக்கப் போகிறது என ஏராளமான கசப்பனுபவங்கள் என்னை எச்சரித்தும் அவனைத் திருமணம் செய்வதில் உறுதியாக இருந்தேன். எல்லாம் திருமணத்திற்கு பிறகு மாறிவிடும் என உளப்பூர்வமாக நம்பினேன்.

          பாதுகாப்பான வாழ்க்கைச் சூழலும் பாலியல் தேவையும் திருமணத்தால் கிடைக்கும் என்றால், கல்லூரி காலகட்டத்திலிருந்து எனக்கு வந்த ஏராளமான திருமண கோரிக்கைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்திருக்கலாம் அல்லது முழுக்க தனித்துவிடப்பட்ட சூழலில் உதவி எனக் கேட்டுச் சென்றவர்களில் நேரடியாகவும் மறைமுகமாகவும் படுக்கைக்கு அழைத்த சில காமுகர்களின் இச்சைக்கு இனங்கியிருக்கலாம். இந்த இரண்டையும் தாண்டிய ஏதோ ஒன்று அவனை நோக்கி என்னை நெட்டித் தள்ளிக்கொண்டே இருந்தது.

          பலகட்ட போராட்டங்களுக்கு பிந்தைய ஒரு சுபதினத்தில் கள்வனாய் என்னைக் கொள்ளையடித்து வந்தவன் கணவனாய் பதவி உயர்வு பெற்றான். எதிர்ப்பார்த்தது போலவே அவனது பெற்றோரிடமிருந்து எதிர்ப்புகள் கிளம்பியது. பின்னர் தங்களது வழக்கமான சமாதான முயற்சிகளால் எங்களை வெளிப்படையாக ஏற்றுக் கொண்டாலும் மனதளவில் வெறுப்பையே காட்டி வருகிறார்கள்.

          காதலித்த போது இருந்த மகிழ்ச்சி அவனது பெற்றோரால் திருமணத்திற்கு பிறகு திசை தெரியாமல் மறைந்துவிட்டது. கண்ணுக் கெட்டிய தூரம் வரை மகிழ்ச்சிக்கான சிறு வெளிச்சம்கூட இல்லாத நிலையில் எங்களின் மாறாத காதலும் தீராத வேட்கையும் ஒரு குழந்தையைக் கொடுத்து வாழ்க்கையில் மகிழ்ச்சி ஒளியைப் பாய்ச்சியது.

          இப்போதைக்கு அந்த மகிழ்ச்சிப் பாய்ச்சிய சிறு ஒளிக்கீற்றைப் பற்றிக் கொண்டு வருங்காலத்தில் அந்தக் குழந்தையே எங்கள் இருவருக்கும் வழிகாட்டும் என்கிற நம்பிக்கையோடு இல்லறத்தைத் தொடர்கிறோம்.

 

தொடர்புக்கு: viralmozhiyar@gmail.com

1 கருத்து: