அறிவியல்: பார்வையைப் பறித்துச் செல்லும் கறுப்பு மின்னல் - சிதம்பரம் இரவிச்சந்திரன்.

graphic கருப்புப் பூஞ்சையின் படம்

             நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக கொரோனாவின் துயரங்கள் பெருகிக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்தியாவில் கண்ணுக்குத் தெரியாத பூஞ்சை நுண்ணுயிரியும் கொரோனா வைரஸுடன் கைகோர்த்து பீதியை ஏற்படுத்தி வருகிறது. கண்களைப் பறித்துச் செல்லும் இந்தக் கருப்பு மின்னல் தொற்றுப் பற்றி அறிந்திருக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகியுள்ளது.

கறுப்புபூஞ்சை

          மியூகர்மைகோசிஸ் (Mucormycosis) என்று அழைக்கப்படும் கருப்புபூஞ்சை கொரோனா நோயாளிகளிடம் வேகமாக பரவி பீதியை ஏற்படுத்தி வருகிறது. பாதிக்கப்பட்டவர்களின் கண்பார்வையைப் பறிப்பதுடன் மரணத்தையும் ஏற்படுத்துகிறது. நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களைச் சாதாரணமாக இந்தத் தொற்றுப் பாதிக்கிறது. வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள், நோயிலிருந்து விடுபட்டவர்களிடையில் இந்த நோய் காணப்படுகிறது.

          கொரோனாவிற்கான சிகிச்சை நடைபெறும் போது அல்லது நோயிலிருந்து விடுதலை அடைந்தவரிடையில் இத்தொற்று ஏற்படுகிறது. இதனால் மகாராஷ்டிராவில் 52 பேர் மரணமடைந்துள்ளனர்.  குஜராத்,, ஒரிசா, ராஜஸ்தான், ஹரியானா, டெல்லி, கேரளா,, மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட பல இந்திய மாநிலங்களில் இது பரவியுள்ளது.

கறுப்புபூஞ்சை என்றால் என்ன?

          மியூகோரெல்ஸ் குடும்பத்தைச் சேர்ர்ந்த பூஞ்சைகள் மூலம் மியூகோர்மைகோசிஸ் அல்லது சைக்கோமைகோசிஸ் என்ற இந்தப் பாதிப்பு ஏற்படுகிறது. சாதாரணமாக நம் சுற்றுப்புற சூழல், மண், காற்றில் காணப்படும் இந்தப் பூஞ்சை காய்கறிகள், பழங்களில் அழுகும் போது உண்டாகின்றன. இந்தக் குடும்பத்தில் ரைஸோபஸ் ஒரைஸா என்ற பூஞ்சை பொதுவாக மனிதர்களுக்கு நோய்த்தொற்றை ஏற்படுத்துகிறது.

          இந்தியாவில் வெப்பமான தட்பவெப்ப நிலையில் அப்போபைசோமைசஸ் என்ற பூஞ்சையும் காணப்படுகிறது. மனிதருக்கு நோயை ஏற்படுத்தக்கூடிய இந்தப் பூஞ்சைகள் குடும்பத்திற்கு மனிதர்களின் சாதாரண உடல்வெப்ப நிலையில், அமிலத்தன்மை உடைய சூழ்நிலைகளில் நன்றாக வளரும் இயல்புஉண்டு. நம் உடலில் ஒரு செல் அழியும் போதும், நீரிழிவு நோய்கட்டுப்படாமல் போகும் போதும் இவை செழித்து வளர்கின்றன.

கண்டறிவது எவ்வாறு?

          நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களையே சாதாரணமாக மியூகோரெல்ஸ் பாதிக்கிறது. ஓர்ட்டிகோஸ்டீராய்டு போன்ற எதிர்ப்பாற்றலை குறைக்கும் மருந்துகள் இத்தகைய பூஞ்சைகளை உடலில் வளர்ந்து பெருகவழி வகுக்கிறது.

          நோய் எதிர்ப்பு சக்தியைத் தாறுமாறாக்கும் புற்றுநோய், உறுப்பு மாற்று அறுவை போல உள்ள சூழ்நிலைகளும் பூஞ்சை தொற்று ஏற்பட உகந்தவை. பூஞ்சையின் ஸ்போர்கள் / செல்கள் சுவாசம், உண்னும் உணவு, மருந்து மூலம் உடலிற்குள் நுழையலாம். உடலில்  உள்ள காயங்கள் வழியாகவும் இவை உள்ளே நுழையலாம்.

          இதில் சுவாசத்தின் மூலமே அதிகம் உடலிற்குள் புக வாய்ப்பு  உள்ளது. நாம் பொதுவாக பலதரப்பட்ட பூஞ்சைகளின் செல்களை சுவாசத்தின் மூலம் உடலிற்குள் செல்ல அனுமதிக்கிறோம். என்றாலும், நம் நோய் எதிர்ப்பு சக்தியும், சுவாச உறுப்புகளும் ஆரோக்கியத்துடன் இருக்கும் போது இந்தப் பூஞ்சைகளால் தொற்றை ஏற்படுத்த முடிவதில்லை.

          சுவாச உறுப்புகள் தகராறு மூலம், நோய் எதிர்ப்பு சக்தி தாறுமாறாகும் போது இதே சாது பூஞ்சைகள் ஆபத்தானவையாக மாறுகின்றன. கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளில் இதுவே நிகழ்கிறது. பூஞ்சையின் செல்கள் கொரோனா நோயாளிகளில் சுவாச உறுப்புகள், சைனஸ் மூலம் உள்நுழைந்து உடல்முழுவதும் செல்களை ஆக்ரமித்து அடிமைப்படுத்தத் தொடங்குகின்றன.

தொற்றின் மையம்

          மூக்கு, சைனஸ் ஆகிய இடங்களே இந்தப் பூஞ்சையின் மையம். இங்கிருந்து இவை கண்களுக்குப் படர்ந்து பார்வையைப் பறித்தெடுக்கின்றன. தொற்று ஏற்பட்டுப் பார்வை மங்கத் தொடங்குவதுடன் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டாலும் பார்வையை மீட்க முடிவதில்லை. அதனால் அறுவை செய்து கண்களையே அகற்ற வேண்டிய துரதிர்ஷ்ட நிலை ஏற்படுகிறது.

      பார்வையிழப்புக் கொரோனா தொற்று ஏற்பட்ட இளைஞர்களையும் பாதிக்கிறது என்று பெங்களூர் கண் மருத்துவ அறிஞர் டாக்டர் ஹெக்டே (Dr Hegde) கூறுகிறார். இதனால் பார்வை பரிபோகிறது. மருத்துவமனைக்கு வருபவர்கள் காலதாமதமாகவே வருவதால் பலன் ஏற்படுவதில்லை.

      ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டு துயரை அனுபவிக்கும் நேரத்தில் இளம் பெண்களும், இளம் ஆண்களும் இதுபோல பார்வையைப் பறிகொடுப்பது வேதனை தரும் ஒன்று என்று மும்பை சியோன் மருத்துவமனை வருகை பேராசிரியர் டாக்டர் நாயர் (Dr Nair) கூறுகிறார்.

          மியூகோர்மைகோசிஸ் ஏற்படும் போது அதனுடன் தலைவலி, தலைசுற்றல், மனநிலை பாதிப்பு, மூக்கில் இருந்து கரும் திரவம் வெளிவருதல், சளி, முகத்தில் வலி, தோலில் நிறமாற்றம், மூக்கில் வலி, கண்பார்வை மங்குதல், பார்வையிழப்பு போன்ற அறிகுறிகள் தென்படுகின்றன. சிலருக்கு ஒரு கண்ணில் பார்வை பரிபோகும் நிலையில் வேறு சிலருக்கு இரண்டு கண்களிலும் பார்வை இழப்பு ஏற்படுகிறது. பூஞ்சை தொற்றுத் தோலையும் பாதிக்கலாம்.

இந்தியாவில் கருப்புப் பூஞ்சையின் தாண்டவம்

          மேற்கத்திய நாடுகளுடன் ஒப்பிடும்போது கொரோனாவின் இரண்டாம் அலை தாக்கம் இந்தியாவில் தொடங்கியது முதல் இந்தப் பூஞ்சைத் தொற்றும் வேகமாக பரவிவருவது மருத்துவ அறிஞர்களிடம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. மியூக்கர்மைகோசிஸ் விலங்குகளின் கழிவுகளிலும், கட்டுமானம் நடைபெறும் இடங்களுக்கு அருகில் இருக்கும் நீர் நிலைகள், ஈரமான சுற்றுப்புறங்கள் போன்ற இடங்களில் காணப்படுகிறது.

நோய் எதிர்ப்பாற்றலும் கறுப்புப் பூஞ்சையும்

          நீரிழிவு நோயின் பாதிப்பு அதிகமாகும் போது சர்க்கரையின் அளவு கட்டுப்பாடற்ற நிலைக்குச் செல்கிறது. அப்போது உடற்செல்கள் அமிலத்தன்மை உள்ளதாக மாறுகின்றன. இது இந்தப் பூஞ்சை வளர்வதற்கு உரிய வாய்ப்பை உருவாக்கித் தருகிறது. இதனாலேயே இந்தியாவில் இந்தத் தொற்று பீதியை ஏற்படுத்தும் வகையில் காட்டுத்தீ போல பரவி வருகிறது. 2000-2017 ஆண்டுகளுக்கு இடையில் மியோகோர்மைகோசிஸ் பாதிப்பு ஏற்பட்டவர்களில் 40% நீரிழிவு நோயாளிகள்.

          ஆனால், இப்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு பூஞ்சைத் தொற்றிற்கு உள்ளாகியிருப்பவர்களில் 94% நோயாளிகளும் நீரிழிவுநோயாளிகளே. இதில் 67% நோயாளிகளில் சர்க்கரையின் அளவு மோசமாக இருந்தது. நீரிழிவு கட்டுப்பாட்டிற்குள் இல்லாதவர்கள், உடற்பருமன் உள்ளவர்கள் ஆகியோரில் கொரோனா தீவிரமான பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்த நோயாளிகளுக்கு ஓர்ட்டிகோஸ்டீராய்டு மருந்துகள் கொடுக்கப்படுவது அத்தியாவசியமான ஒன்று.

          இந்த மருந்து சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துகிறது. உடலில் நோய் எதிர்ப்பாற்றலைக் குறைக்கிறது. பொதுவாக ஸ்டீராய்டுகள் உடல் எதிர்ப்பு சக்தியைக் குறைக்கும் இயல்புடையவை என்பதால் இந்த நோயாளிகளில் கறுப்புப் பூஞ்சை படர ஏதுவான சூழ்நிலை ஏற்படுகிறது. கொரோனா தொற்று சுவாசக் குழாய்கள், இரத்தம் ஆகியவற்றில் பெருத்த அழிவை ஏற்படுத்துகிறது. இதுவும் பூஞ்சை செழித்து வளர நல்ல வாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறது.

நோய்க் கண்டறிதலும், சிகிச்சையும்

          முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சை எடுத்துக் கொள்வது பூஞ்சையிடம் இருந்து நம்மைக் காக்க உதவும் என்று திறுவனந்தபுரம் அரசுப் பொது மருத்துவமனை தொற்று நோய்ப் பிரிவு இணைப் பேராசிரியர் டாக்டர் எஸ்சிந்தா கூறுகிறார். இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருப்பது, அழிந்த உடற்பகுதிகளை அகற்றுவது, பூஞ்சை எதிர்ப்பு மருந்துகள் எடுத்துக் கொள்வது இந்தத் தொற்றில் இருந்து விடுதலை பெற உதவும்.

          கொரோனா சிகிச்சையின் போது கொடுக்கப்படும் ஸ்டீராய்டுகளின் அளவு துல்லியமானதாக இருக்க வேண்டியது முக்கியம் என்று டெல்லி எய்ம்ஸ் (AIMS) மருத்துவமனையின் தலைவர் டாக்டர் பிரதீப் குலேரியா கூறுகிறார். மருத்துவமனைகளில் நுண்ணுயிரி நீக்கம் செய்யப்பட்ட உபகரணங்களே சிகிச்சையின் போது பயன்படுத்தப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்துகிறார்.

          இயற்கையை சீரழித்து, எதிரியை இருந்த இடம் தெரியாமல் செய்ய நவீன அணு ஆயுதங்களைக் கண்டுபிடித்த மனிதன் இன்று கண்ணிற்குத் தெரியாத கொரோனா வைரஸையும், மியூகர்மைகோசிஸ் பூஞ்சையையும் என்ன செய்வதென்று தெரியாமல் விழிபிதுங்கி நிற்கிறான். கொரோனாவும், மியூக்கர்மைகோசிசும் அன்னை பூமியின் எச்சரிக்கைகளே! இனியேனும் இயற்கையைக் காப்போம். அதனுடன் இணைந்து வாழ்வோம்.

**     **     **

graphic சிதம்பரம் இரவிச்சந்திரன் அவர்களின் படம்
கட்டுரையாளர் சிதம்பரம் இரவிச்சந்திரன்

 (கட்டுரையாளர் ஓய்வுபெற்ற அறிவியல் ஆசிரியர். பல மலையாளச் சிறுகதைகளைத் தமிழில் மொழிபெயர்த்தவர். அறிவியல் இதழ்களில் தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கிறார்).

 

தொடர்புக்கு: nrvikram19@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக