கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலை நம் ஒவ்வொருவரையும் கொஞ்சமாவது அசைத்துப் பார்த்துவிட்டுதான் முடிந்திருக்கிறது. நமக்குத் தனிப்பட்ட வகையில் தெரிந்தவர்கள் பலரை இந்த அலையில் நாம் பறிகொடுத்திருக்கிறோம். குடும்பத்தில் சம்பாதிக்கும் நபர்களாக (bread winners) இருந்த பார்வை மாற்றுத்திறனாளிகள் பலர் இத்தொற்றின் காரணமாகத் தங்கள் உயிரைப் பறிகொடுத்திருக்கின்றனர். தங்கள் குடும்பத்தின் பொருளாதார நிலையை உயர்த்திய அத்தகையவர்களை இழந்து தவிக்கும் பார்வை மாற்றுத்திறனாளிகளின் குடும்பத்தாருக்கு விரல்மொழியர் தனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறது.
தொற்றில் பாதிக்கப்பட்டு கடுமையான தொந்தரவுகளை அனுபவித்து மீண்டவர்களும் இங்கிருக்கிறோம். அப்படிப் பாதிக்கப்பட்டவர்கள் இரட்டைச் சுமையைச் சுமந்து மீண்டவர்கள் என்பதை மறுக்கமுடியாது. அவர்களை விரல்மொழியர் மின்னிதழ் வாழ்த்தி மகிழ்கிறது.
கொரோனா முதல் அலையின்போது நம்மை ஒத்த பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு உதவ பல அமைப்புகள் மேற்கொண்ட முயற்சிகளை இந்த அலையின்போது செயல்படுத்த முடியவில்லை. இந்நிலையைத் தாண்டியும் மற்றவர்களுக்கு உதவிய நல்ல உள்ளங்களை இதழ் வாழ்த்துகிறது.
இந்த அலையில் தொற்று ஏற்பட்டவர்கள் மட்டுமின்றி, அவர்களுக்கு நெருக்கமான தொற்று ஏற்படாதவர்களும் கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளாக நேரிட்டது. இந்தப் பெருந்தொற்றைத் தவிர வேறெதையும் சிந்திக்க இயலாமல் நம் மனம் முடங்கிவிட்டது என்பதை மறுப்பதற்கில்லை. இவற்றிலிருந்து தற்போதுதான் நாம் மெல்ல மெல்ல மீண்டுவருகிறோம்.
பல சிற்றிதழ்களும் இக்கொரோனா சூழலில் வெளியிடப்படவில்லை. விரல்மொழியரும் இதிலிருந்து தப்பிக்கவில்லை. இதனால், தாமதமான இதழ் வெளியீட்டிற்காக வாசகர்களிடம் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறோம். இனி வரும் இதழ்களை உரிய கால இடைவெளியில் வெளியிட முயல்கிறோம்.
…
தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்றிருக்கிறது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு திராவிட முன்னேற்றக் கழகம் ஆளுங்கட்சியாகியிருக்கிறது. புதிய அரசு பல முக்கிய மாற்றங்களை நிர்வாகத் துறையில் மேற்கொண்டுவருகிறது. அந்த வகையில் மாற்றுத்திறனாளிகளின் நெடுநாள் கோரிக்கைகளைப் புதிய அரசு தீர்த்துவைக்கும் என நம்புவோம். நமக்கான அமைப்புகள் அதற்கான பணிகளில் மும்முரமாய் ஈடுபடத் தொடங்கியிருக்கின்றன.
புதிய அரசில் மாற்றுத்திறனாளிகள் நலத் துறையை முதலமைச்சரே தன்வசம் வைத்துக்கொண்டிருக்கிறார். முதலமைச்சரின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருப்பதால், மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் செயல்பாட்டில் வேகமும், தெளிவும் இருக்கும் என எதிர்பார்க்கலாம். அதே வேளையில், மாற்றுத்திறனாளிகளாகிய நாம் தனி அமைச்சரைச் சந்திப்பதே சவாலாக இருக்கும்போது, முதலமைச்சரை நேரடியாகச் சந்திப்பதும், அடிக்கடி நம் துறை தொடர்பாக விவாதிப்பதும் சாத்தியக் குறைவுதானே என்ற அச்சமும் எழாமல் இல்லை. எப்படியிருந்தாலும், அதிக கவனம் தேவைப்படக்கூடிய உள் துறை, பொது நிர்வாகம், காவல் துறை முதலியவற்றைத் தன் பொறுப்பிலேயே எடுத்துக்கொண்டிருக்கும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் மாற்றுத்திறனாளிகள் நலத் துறையையும் தன் வசம் வைத்துக்கொண்டமைக்கு இதழின் வாழ்த்துகளும் நன்றியும்.
…
கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலையிலிருந்து நாம் விடுபடத் தொடங்கினாலும், மூன்றாம் அலை என்ற அ்ச்சுறுத்தல் இருப்பதை ஒருபோதும் மறந்துவிடக்கூடாது. நாம் ஒவ்வொருவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளவேண்டும். தடுப்பூசி பற்றாக்குறை நிலவும் இக்காலகட்டத்தில் மாற்றுத்திறனாளி என்ற முன்னுரிமை அடிப்படையில் நம்மவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளவேண்டும். முடிந்தவரை பொது இடங்களுக்குச் செல்வதைத் தவிர்ப்பது, தனிநபர் இடைவெளியைக் கடைப்பிடிப்பது, முகக் கவசம் அணிவது முதலியற்றைத் தவறாமல் மேற்கொள்ளவேண்டும்.
எனவே, முடிந்தவரை கவனமாக இருப்பதோடு, வாழ்வாதாரம் இழந்த பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கும், தொற்றில் பாதிக்கபட்ட பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கும் இயன்றவரை நம்மால் ஆன உதவிகளைச் செய்வோம்; அவர்களின் உறவுகளாகத் தொடர்ந்து கரம் கோர்த்து நிற்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக