பேட்டி: இசைத்துறையில் முடிசூடாக் கோமகன் - துரை

graphic கோமகன் அவர்களின் படம்
கோமகன்

     ஆட்டோகிராப் திரைப்படத்தில் ஒவ்வொரு பூக்களுமே பாடலின்மூலம் புகழ்பெற்றவரும், கலைமாமணி விருது பெற்றவருமான பார்வை மாற்றுத்திறனாளியான கோமகன் அவர்கள் 06/05/2021 அதிகாலை 1.15 மணி அளவில் கொரோனா தொற்றின் காரணமாக மறைந்தார். அன்னாருக்கு புகழஞ்சலி செலுத்தும் வகையில் விழிச்சவால் இதழில் வெளியான அவரது பேட்டியை விரல்மொழியர் மீளப்பதிவு செய்கிறது.

 

சாதனையாளருடன் ஒரு சந்திப்பு

      இந்த மாத சந்திப்பு இசையமைப்பாளர் M.C. கோமகனுடன் இவர்தான் தமிழ்த்திரை உலகின் முதல் பார்வையற்ற இசையமைப்பாளர். இவர் 1991ல் ஒன்பது பார்வையற்றவர்களைக் கொண்டு "கோமகனின் ராகப்பிரியா" என்ற இசைக்குழுவைத் தொடங்கினார். 'ஒவ்வொரு பூக்களுமே' பாடலின் மூலம் பிரபலமடைந்த இவரது இசைக்குழு 1999ல் தொடர்ந்து 16 மணிநேரம் 183 பாடல்களைப் பாடி லிம்கா சாதனைப்புத்தகத்தில் இடம்பெற்றது. 2007 ஆம் ஆண்டு தொடர்ந்து 50 மணிநேரம் பாடி கின்னஸ் புத்தகத்திலும் இடம்பெற்றது. இச்சாதனையில் 24 பார்வையற்றோர் கலந்து கொண்டு 682 பாடல்களைப் பாடினார்கள். இத்தகைய சிறப்புமிக்க

இவரை நம் இதழுக்காகச் சந்திக்கிறார் 'அட சிரிங்கப்பா' துரை.

 

துரை: வணக்கம்

கோமகன்: வணக்கம்

கேள்வி: கோமகன்- இது இயற்பெயரா? புனைபெயரா?

பதில்: வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதற்காக என் தந்தைதான் வைத்தார். என் முழுப் பெயர் ஜான்சன் ஷெரி கோமகன்.

கே: உங்களைப் பற்றி ஒரு அறிமுகம் தரலாமே.

: என் அப்பா ஸ்டண்ட் நடிகர் P. மோகன்குமார். மூன்று வயதிலேயே அப்பா தவறிவிட்டார். சென்னை ஆல்வின் மெட்ரிக் மே. நி. பள்ளியில் 8ஆம் வகுப்புவரை படித்தேன். பிறகு தேசிய பார்வையற்றோர் சங்கத்தில் (N.A.B.) சேர்ந்த பிறகுதான் பார்வையற்றோரைப் பற்றி எனக்குத் தெரிந்தது. அங்கு தொழில்கல்வி பயின்றேன். சென்னை ரிசர்வ் பேங் இந்தியாவில் நாற்காலி பின்னும் வேலை கிடைத்தது.

கே: பிறகு படிப்பைத் தொடரவில்லையா?

: குடும்பச் சூழ்நிலையால் படிப்பைத் தொடர முடியவில்லை. ஆயினும் பிறகு M.Phil வரை படித்துள்ளேன். இசையில் மூன்றாண்டு பட்டயப் படிப்பு முடித்துள்ளேன்.

கே: இசைக்குழு தொடங்கும் எண்ணம் எப்படி ஏற்பட்டது?

: நான் N.A.B.ல் பயிலும் போது அங்கிருந்த ஒவ்வொருவரிடமும் இசைத்திறமை இருப்பதைக் கண்டேன். அப்போது தோன்றியதுதான் இந்தச் சிந்தனை. குழு தொடங்கி நான்கு ஆண்டுகள் வரை எதிர்நீச்சல் போட வேண்டியிருந்தது. 1995ல் சிறந்த இசைக்குழுவுக்கான பிரபலமான போட்டி ஒன்றில் இரண்டாம் இடம்பெற்றோம். இதில் கலந்து கொண்ட ஒரே பார்வையற்றோர்குழு எங்களுடையதுதான். இதுதான் எங்கள் குழுவுக்குத் திருப்புமுனையாக அமைந்திருந்தது.

கே: 'ஆட்டோகிராப்' அனுபவத்தைக் கொஞ்சம் பகிர்ந்து கொள்ளலாமே

graphic ஒவ்வொரு பூக்களுமே பாடலின் காட்சியில் கோமகன் அவர்களும் சிநேகா அவர்களும் இணைந்து பாடும் படம்
கோமகன் அவர்களும் சிநேகா அவர்களும் இணைந்து பாடும் படம்

 ப: இயக்குநர் சேரன் முதலில், பார்வையற்றவர்கள் கடற்கரையில் பாடி யாசகம் கேட்பதாகவும், அதை யாரும் கண்டுகொள்ளாத நிலையில் சிநேகா அவர்களுடன் சேர்ந்து பாடி நம்பிக்கையூட்டுவதாகவும் காட்சி அமைத்திருந்தார்.

இதில் எனக்கு உடன்பாடில்லை. ஒரு இசையரங்கத்தில் நாங்கள் பாடுவது போல் இருந்தால்தான் எங்களுக்கு கௌரவம் என்று கூறி நடிக்க மறுத்துவிட்டேன். ஆயினும் சேரன் நன்கு யோசித்து எனது விருப்பப்படியே காட்சியை மாற்றியமைத்தார். படப்பிடிப்பின் போது ஓய்வு நேரத்தில் கலைஞர்களைக் குஷிப்படுத்த சில பாடல்களைப் பாடுவேன். இதைக் கேட்டுதான் சேரன் 'ஒவ்வொருபூக்களுமே' பாடலில் சிலவரிகளைப் பாட எனக்கு வாய்ப்பளித்தார். தெலுங்கிலும் கூட இப்பாடலை நான் பாடியிருக்கிறேன்.

கே: இப்படி விழிப்புணர்வு கொடுத்த நீங்கள் 'சுறா' படத்தில் வரும் காட்சியில் நடிக்க எப்படி ஒப்புக் கொண்டீர்கள்?

: இக்கேள்வியைப் பலர் ஏற்கனவே என்னிடம் கேட்டிருக்கிறார்கள். இக்காட்சி பார்வையற்றோருக்கு நம்பிக்கைத் தரும். பார்வையுள்ளோருக்கு விழிப்புணர்வைத் தரும். இதனால்தான் ஒப்புக் கொண்டேன்.

கே: 'முதன்முதலாய்' படத்தில் இசையமைத்த அனுபவம் பற்றி...

: அது பாக்கியராஜ் சார் படம். பாடல்களுக்குப் பிரபல பாடகர்களின் ஒத்துழைப்புடன் எளிதாக இசையமைத்துவிட்டேன். பின்னணி இசையை இரு உதவியாளர்களின் துணையுடன் முடித்தேன்.

கே: ஏன் இந்தப் படத்தில் பார்வையற்ற பாடகர்களுக்கு வாய்ப்பளிக்கவில்லை.

: இது எனது முதல்வாய்ப்பு. பேராசைப்படக்கூடாது. அடுத்த படங்கள் கிடைக்கும்போது நிச்சயம் வாய்ப்புக் கொடுப்பேன். இந்தப் படத்தில் என்னுடைய இசைக்குழுவினர்தான் கோரஸ் பாடியிருக்கிறார்கள்.

கே: உங்கள் கின்னஸ் சாதனை பற்றிக் கூறுங்களேன்.

: ஹங்கேரியைச் சேர்ந்த சியாம் இசைக்குழு தொடர்ந்து 48 மணி நேரம் பாடி சாதனை படைத்தது. இதை நாங்கள் 50 மணி நேரம் பாடி முறியடித்தோம்.

கே: சாதனையின் போது என்னென்ன நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டியிருந்தது?

: --கின்னஸ் அனைவரையும் சமமாகவே பாவிக்கும்.

--ஒவ்வொரு பாடலுக்குமிடையே 10 வினாடிகள் இடைவெளி வழங்கப்பட்டது.

--1 மணி நேரத்திற்கு 5 நிமிடம் மட்டுமே ஓய்வு.

--நாங்கள் 3 மணி நேரம் தொடர்ந்து நிகழ்ச்சி நடத்திவிட்டு 15 நிமிடம் ஓய்வெடுத்துக் கொண்டோம்.

--இந்த நேரத்திற்குள்தான் எல்லா வேலைகளும்.

--திரவ உணவையும் மாத்திரைகளையும் விழுங்கிப் பசியைத் தீர்த்துக் கொள்ள வேண்டும்.

--6 மணி நேரத்துக்கு ஒருமுறை மருத்துவர்கள் எங்கள் உடல் நிலையைப் பரிசோதனை செய்தனர்.

--50 மணி நேர நிகழ்வும் தொடர்ந்து கேமராவில் பதிவாகியது.

கின்னஸ் சாதனை பற்றி மேலும் அறிய விரும்பினால் www.guinnesrecord.com  என்ற இணையதளத்தைப் பார்க்கலாம்.

கே: தங்கள் இசைப் பயணத்தில் மனம் நெகிந்த நிகழ்வு ...

: கோலாலம்பூரில் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தி முடித்தோம். அப்போது இரவாக இருந்தாலும் மக்கள் நீண்ட வரிசையில் நின்று, நான் கூச்சப்படும்படி ஒவ்வொருவராக என் காலைத் தொட்டு வணங்கிவிட்டு கையெழுத்து வாங்கிச் சென்றனர். என் மனதைப் மிகவும் பாதித்த நிகழ்வு இது.

கே: நீங்கள் பெற்ற பாராட்டுகளில் மறக்க முடியாதது ...

: கமல்ஹாசன், இளையராஜா, எஸ்.பி.பி இவர்களது பாராட்டுகளை என்னால் மறக்கவே முடியாது.

கே: மீள்கலவை (remix) பாடல்கள் பற்றி உங்கள் கருத்து.

: பழைய பாடல்களின் இனிமையைக் கெடுப்பதோடு, இசையமைப்பாளரின் திறமையின்மையையும் காட்டுகிறது, அவ்வளவுதான்.

கே: தற்போது இசைத் துறை கணினிமயமாகி விட்டதே.

: ஆம். இதனால் திறமையற்ற பலர் இசையமைப்பாளர்களாகவும், பாடகர்களாகவும் உலாவர முடிகிறது.

கே: இசைத் துறையில் சாதிக்கத் துடிப்பவர்களுக்குத் தாங்கள் கூற விரும்புவது என்ன?

: பலர் தங்கள் திறமைகளை நடமாடும் இசைக்குழு (mobile rchertra) என்ற பெயரில் தவறாகப் பயன்படுத்துகின்றனர். திறமையுள்ளவர்கள் என்னை அணுகினால் நிச்சயம் உதவ நான் தயார். என்னைத் தொடர்பு கொள்ள தொலைபேசி எண்கள்: 9841180649 மற்றும் 9003107875.

துரை: இசைத் துறையில் நீங்கள் முடிசூடாக் கோமகனாகத் திகழ இதழின் வாழ்த்துக்கள்.

கோமகன்: நன்றி.

 

நன்றி: விழிச்சவால் பிரெயில் திங்கள் இதழ்

இதழ் : 6

 

1 கருத்து:

  1. பிரெய்ல் இதழ் வாசிக்க வாய்ப்புப்பெறாத எங்களுக்கு மின்வடிவில் மறுபதிவு செய்தமைக்கு பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு