களத்திலிருந்து: கொரோனா காலப் பயணம் - சோஃபியா மாலதி

       மனதின் வலிகள் மட்டுமே நம்மை தனி உலகில் பயணிக்க வைக்கிறது. அந்த உலகம் எவ்வகையானது என்பது குறித்து நாம் மட்டுமே முடிவு செய்ய முடிகிறது. எங்கள் மாணவர்களும் பயணித்துக்கொண்டிருக்கிறார்கள் ஒரு தனி உலகில். தனித்த உலகில். கொள்ளைநோய் தந்த வலிகள், குடும்ப உறவுகள் தந்த பாடங்கள் முதலியவை எத்தகைய கொடுமையாக இருந்தது என்பது குறித்த ஒரு ஆழ்ந்த சிந்தனை தான் இந்தக் கட்டுரை.

      அப்படிப் பயணித்துக்கொண்டிருக்கும் ஒரு மாணவனின் கருத்துகளை அவர் மொழியிலேயே கேளுங்கள்.

இடியாய் வந்த செய்தி

            அன்று +2 தேர்வுகள் நடந்துகொண்டிருந்தன. சிறப்பான மனநிலை. வீட்டிற்குச் செல்லப்போகிறோம் என்ற மனநிலையில் அண்ணன்களும் அக்காக்களும். . அவர்கள் 12-ஆம் வகுப்பை முடிக்கவிருக்கிறார்கள். இத்தனை நாட்களாய் ஒன்றாய்ப் பழகிய நண்பர்களின் பிரிவு என் மனதின் ஓரத்தில் சிறு வருத்தமாகத் தொடங்கியது.

            வீட்டிற்குச் செல்லப்போகிறேன். கூண்டுக் கிளியாக இருக்கும் நான்  சிறகடித்துப் பறக்கப்போகிறேன்என்று கூறிக்கொண்டிருந்தார் ஒரு அக்கா. அடுத்த ஆண்டு +2 படிக்கவிருக்கும் எனக்கு ஆலோசனைகளை வழங்கிக்கொண்டிருந்தார்கள் அண்ணன்களும், அக்காக்களும். அன்றுதான் ஒரு அறிவிப்பு வந்தது.

            இன்று இரவு முதல் ஊரடங்குஎன்பதுதான் அந்த அறிவிப்பு. என்ன செய்வது என்ற பதட்ட நிலை மனதிற்குள் குடியேற, அதே மனநிலையோடு ஆசிரியர்களும், தலைமையாசிரியரும் பதைபதைக்க எங்கள் சகோதரர்களும் தேர்வு அறைக்குச் சென்றார்கள். அப்போது துவங்கியது எங்களின் உளவியல் மாற்றங்களும் பிரச்சனைகளும்.

      பதற்றமும் அச்சமும் மேலோங்கத் தேர்வுகள் நடைபெற்றன. எவ்வளவு சீக்கிரம் முடிக்க முடியுமோ, அவ்வளவு வேகமாகத் தேர்வை முடித்துவிட்டு ஊருக்குக் கிளம்பினார்கள்அவசர அவசரமாக நாங்களும் கிளம்பினோம்.

      வாகனங்கள் கொண்டு வந்தவர்கள் விரைவாகப் பறக்கத் தொடங்கினார்கள். வழியில்லாத நாங்கள் குறைந்தபட்சம் இருந்த பேருந்துகளில் ஏறி விரைவாகப் பயணிக்கத் தொடங்கினோம். அதற்கான ஏற்பாடுகளைப் பள்ளி நிர்வாகம் செய்திருந்தது. வழியில் சாப்பிட உணவும், தண்ணீரும் வழங்கப்பட்டன. விரைவாகவும், பத்திரமாகவும் நாங்கள் எங்கள் வீடுகளைச் சென்றடைந்தோம்.

வீடடங்கு தொடங்கியது

      எங்கும் செல்லமுடியாது. யாரையும் தொடக்கூடாது. பார்வையற்றவர்களாகிய எங்களது  உலகம் நிசப்தம்  ஆகிப்போனது. தொடுதலும், தேடுதலும், பேசுதலும்  தான் எங்கள் உலகம்வீட்டிற்கு வந்து சில காலம் ஆகியும் பெற்றோரோடு இணக்கமாய் இருக்க வேண்டும் என்பதுதான் எங்களது ஆசை ஆனால் பெற்றோர்களை அணைத்துக்கொண்டு கைபிடித்து ஒளிந்துகொள்ள இயலவில்லை. எங்கும் கொரோனாவின் கொடூரம் தலைவிரித்து ஆடிக் கொண்டிருந்தது

      வீட்டுக்கு வெளியே எங்கும் சென்று வர இயலவில்லை. எங்களை எப்போதாவதுதான் உறவினர்கள் வீட்டிற்கு அழைத்துச் செல்வார்கள். இந்த முறை அதுவும் இல்லை. ‘எதையும் தொடாதே! எங்கும் செல்லாதே!’. இந்தக் குரல்கள் மட்டுமே மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டிருந்தன.

      மெலிதாய் மனதில் அச்சம் எழுந்தது. என் உலகம் இப்படி ஸ்தம்பிக்க வேண்டுமா என்று நான் யோசிக்கத் தொடங்கினேன். மனதிற்குள் வெறுப்பும், கடுப்பும் ஏற்படாமல் இல்லை. நான் வீட்டிற்கு வருவதே  என் உறவினர்களை, நண்பர்களைச்  சந்திக்க வேண்டும் சந்தித்தால் அவர்களைத் தொட்டு விட வேண்டும். அவர்களோடு என் அன்பைப் பகிர்ந்துகொள்ள வேண்டும். தேடுதல், தொடுதல் தான் என் அன்பின் பரிமாற்றம் என என் நண்பர்களுக்குத் தெரியும் ஆனால் அந்தப் பாழாய்ப் போன கொரோனாவிற்கு எப்படித் தெரியும்? விரல் நுனிகள்தான் என் விழிகள் என்பதை நான் எப்படிப் புரியவைப்பது? கரோணா மீது எனக்குக் கடுப்பு வந்ததுஎன்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. இந்தக் கட்டுப்பாடுகள் ஏன் என்பதை அறிவு ஏற்றுக்கொண்டாலும் மனம் ஏற்க மறுத்தது.

சுமையாகிப் போனோம்

      இது இப்படி இருக்க, நாட்கள்  கடந்து போக வெடித்தது ஒன்றன்பின் ஒன்றாக பல பிரச்சினைகள்வீட்டில் உணவு இல்லை; பெற்றோருக்கு வேலை இல்லை. சுமையாக மாறிவிடும் எங்களை சுமக்க அவர்கள் தடுமாறினார்கள். விடுதி  இருந்திருந்தால் எங்கள் உலகத்தில் நாங்கள் ராஜாக்கள்  ரானிகளாய் வலம் வந்திருப்போம். ‘நேரத்திற்கு உணவு; நிறைந்த வாழ்வுஎன்று எங்கள் பயணம் சுவாரசியமாகக் கடந்து சென்றிருக்கும். ஆனால் பெற்றோரின் மத்தியில் இருந்தாலும் கூட பாசமும் அன்பும் குறைந்தார் போல சில எண்ணங்கள் எங்கள் மனதில் தோன்றத் துவங்கின

      பெற்றோர்களுக்கு வேலை இல்லை. பார்வையுள்ள குழந்தைகள் ஏதோ ஒரு வேலையைச்  செய்து தங்களின் மதிப்பையும், குடும்பத்தையும் காப்பாற்றிகொண்டிருப்பார்கள்ஆனால் என்னால்  என்ன செய்துவிட முடியும்? எதையும் தொட முடியாது. பார்க்கவும் முடியாதுஇப்படி இருக்க என் மனம் தத்தளிக்க ஆரம்பித்தது. பாசமும் நேசமும் குறைவதை உணர்ந்தேன். எங்கு செல்வது? யாரிடம் சொல்வது??

எப்போது பள்ளிகள் தொடங்கும்?

       பார்வையற்றவர்கள் பெரும்பாலும் ஏழ்மை நிலையில்தான் இருக்கிறார்கள். அவர்களுக்கு உணவு, உடை, இருப்பிடம் என்ற அத்தியாவசியத் தேவைகளுக்கு பிரச்சனைகள் இருப்பது உண்மைதான். இதனை  கொரோனா அதிகமாய் உணரவைத்தது

      சத்தான உணவு சாப்பிட வேண்டுமாம். சாப்பிடுவதற்கே வழி இல்லாத எங்களுக்கு எங்கிருந்து கிடைக்கும் சத்தான உணவு? பள்ளிகள் என்று திறக்கும் என்ற ஆர்வம் ஏற்பட்டது நண்பர்களைப் பார்ப்பதற்காக பள்ளிக்கு மகிழ்ச்சியாகச்  சென்ற நாங்கள் இன்று நல்ல உணவிற்கான ஏக்கத்தோடு  பள்ளிக்குச் செல்ல விரும்பினோம்.   இது பெரும்பாலான பார்வையற்றவர்களுக்குப் பொருந்தும்.   

      மனதிற்குள் மகிழ்ச்சி குறைந்தது. என் நிலை என்னவென்று உணரத் துவங்கினேன். வீட்டைவிட விடுதியே பரவாயில்லை என்று தோன்றியது என் விடுதிதான் சொர்க்கம் என்று புரிந்து கொண்டேன்.

கழிப்பறை இல்லாத வீடு

      இப்படி இருக்க, என் நண்பனிடம் பேசிக்கொண்டிருந்தேன். அவன் என்னிடம் கூறியது என் மனதை மிகவும் காயப்படுத்தியதுஅவனுக்கு மலம் கழிக்கச் சரியான இடம் இல்லை என்பது தான் என் மனக் காயத்திற்கான காரணம்.  

      இவை எல்லாம் புதிய பிரச்சனைகள் அல்ல என்று உங்கள் மனதில் ஓடும் ஓட்டம் எனக்குப் புரிகிறது. ஆனால் பார்வையற்றவருக்கு இது மிகப்பெரிய பிரச்சனை.  

      அவன் சொன்னதை உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன். அப்போதுதானே உங்களுக்கு அவன் வலி புரியும்.

      சில நேரங்களில் மளம் கழிக்கச் செல்லவேண்டும் என்றால் அம்மா வீட்டில் வேலை செய்துகொண்டிருப்பார். சாப்பாட்டுக்கு வழியில்லாத காரணத்தால் அப்பா கோபத்தில் அமர்ந்திருப்பார். இருக்கும் காசை கொண்டு வீட்டை சமாளித்துக்கொண்டிருப்பார்கள். முகத்தில் கடுகடுப்பு இருக்கும். மனதில் குழப்பம் இருக்கும். வார்த்தையில் கோபம் இருக்கும். அந்தச் சூழ்நிலையில் நான் சென்று, “என்னைக் கழிப்பறைக்கு வெளியில் அழைத்துச் செல்லுங்கள்என்று கேட்க பயமாகவும் தயக்கமாகவும் இருக்கும். அப்படியிருந்தும் நான் கேட்பேன். நான் என்ன செய்யமுடியும்? இயற்கை உபாதையை என்னால் அடக்கி வைத்துக்கொள்ள முடியாது. அப்படி இருக்கும் காலகட்டங்களில் நான் மெதுவாகச் சென்று அப்பாவிடம் சொல்வேன்

       அவர் செவிகளில் என் வார்த்தைகள் விழுந்தவுடன்முகத்தை கடுகடுவென்று வைத்துக்கொண்டு, “வீட்டிற்கு முன்போ அல்லது பின்போ சென்று கழிவுகளை கழித்து விட்டு வா!” என்று அலட்சியமாக கூறுவார்அதில் ஒரு அதட்டலும் இயலாமையும் தெரியத்தான் செய்தது. என்ன செய்வது என்று புரியாமல் குழப்பத்தில் இருப்பேன்.

வேறு என்ன செய்ய முடியும்? வீட்டுக்குப் பின்புறம் சென்று கழிவுகளை கழிக்க முற்படுவேன்.

      சில நாட்களுக்குப் பிறகு என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. வீடுகளில் குழந்தைகளும் பெரியவர்களும் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். நான் பார்வையற்றவன். என்னை யாரும் பார்த்து விடுவார்களோ என்ற அச்சம் என் மனதிற்குள் எழுந்தது. இது எதார்த்தம் தானே! நான் என்ன பார்க்க முடியும்? குரல்கள் மட்டும் என் உலகம். அதில் யார் எங்கிருந்து பேசினாலும் என் அருகில் வந்து பேசுவது போல் தெரிகிறது. என்னை எட்டிப் பார்க்கிறார்களா அல்லது கடந்து செல்கிரார்களா? அல்லது  பார்த்துவிட்டு கடந்து செல்கிறார்களா? எவரேனும் அமைதியாக என் பின்புறத்தில் இருக்கிறார்களா? என்றெல்லாம் என் மனம் எண்ணி எண்ணி வெதும்புவது  உண்டு”.

      இப்படித்தான் அவன் என்னிடம் புலம்பினான். எங்களை விடுங்கள். ஒருவேளை எங்கள் வகுப்புத் தோழிகள் வீட்டில் கழிப்பறை இல்லையென்றால் அவர்கள் என்னென்ன துயரங்களை அனுபவிப்பார்களோ! நினைக்கவே அச்சமாக இருக்கிறது.

      ஏன் பார்வையற்றவனாக  பிறந்தேன்  என்ற எண்ணம் மெல்ல என்  மனதை அரிக்கத் துவங்கியதுஎன் கஷ்டங்களை யாரிடம் பகிர்ந்து கொள்வது என்று தெரியவில்லை. மனதிற்குள் அழுத்தம் அதிகரித்ததுதொலைக்காட்சி யோடு எவ்வளவு நேரம் தான்  என்னால் பயணிக்க முடியும்?

படிக்க இயலவில்லையே!

      அருகில் இருக்கும் பார்வையுள்ள மாணவர்கள் தங்களது புத்தகங்களை வைத்துக்கொண்டு படிக்கும் சத்தங்கள் என் காதில் கேட்டுக் கொண்டிருந்தன. ஆனால் என்னால் படிக்க முடியவில்லை. நான் அடுத்த வருடம் 12ஆம்  வகுப்பு தேர்வு எழுத வேண்டும். இப்படி இருக்க, எனக்குக் கற்றுத் தருபவர்கள் யார்? என்னால் பள்ளிக்குச் சென்று எனக்குரிய முறையில்  புத்தகங்களைக் கூட வாங்கி வரமுடியவில்லை. அதற்குச் செலவழிக்க வேண்டிய  தொகை ஆயிரக்கணக்கில் இருக்கும். இதைக் கேட்டால் என் பெற்றோர்கள் தேவையில்லை என்பார்கள்.

      இது இப்படி இருக்க, என் நண்பர்களிடம் கேட்டுப் பார்த்தேன் எனக்குத் தேர்வுக்கு படித்துக் காட்டுங்கள் என்று.  “நாங்கள் படிப்பதற்கு அதிகமாக உள்ளதுஎன்றும், “பள்ளி விடுமுறை விட்ட பிறகு எதற்குப் படிக்கவேண்டும்?” என்றும், “ உன் புத்தகங்களை வைத்துப் படித்துக்கொள்என்றும் விதவிதமாய் பதில்கள் வந்தன.  

       என் இரவுகள் பயத்தால் நிரம்பின. நான் தனியொரு உலகில் தனித்து விடப்பட்டதாய் உணர்ந்தேன். என் இயலாமையோடு ஒரு வெறுமையும் சேர்ந்துகொண்டது.

தேர்வுகள் உண்டு; வகுப்புகள் இல்லை

      சில வாரங்களுக்குப் பிறகு பள்ளிகள் திறக்க வேண்டும் என்றும்  பள்ளிகள் திறந்துவிட்டால் மட்டுமே உணவுக்கும், கல்வி கற்பதற்கும், தங்கும் இடத்திற்கும், அன்பிற்கும், ஆதரவுக்கும் பிரச்சினையில்லை என்று நினைத்தேன். ஆனால் என் கனவுகள் பகல் கனவாய் மாறிப்போயின

      மாற்றுத்திறனாளி குழந்தைகள் பள்ளிக்கு வரவேண்டாம்என்றார்கள். ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்படும் என்று அறிவித்தார்கள். ஆன்லைனில் எப்படிப் படிப்பது? சாப்பாட்டிற்கே வழியில்லாத எங்களிடம் ஆண்ட்ராய்ட் மொபைல்கள் எப்படி இருக்கும்? அப்படி இருந்தால் மட்டும் என்ன பயன் விளைந்துவிடும்?  ஆசிரியர்களோடு பள்ளிக்குச் சென்று படிப்பது போல வருமா? சரி, அரசின் நெறிமுறையைப் பின்பற்றுவோம் என்றால், பெற்றோர்களோ நண்பர்களோ உறவினர்களோ தங்கள் ஆண்ட்ராய்ட் மொபைல்களை எங்களுக்குக் கொடுக்க  முன்வரவில்லை.

      தேர்வுகளை எப்படி எதிர்கொள்வது என்ற பயத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் பள்ளி நிர்வாகத்தைத் தொடர்ந்து அழைத்துப் பேசினோம்.

      அவர்கள் கூறிய பதில் இன்னும் அச்சத்தை ஏற்படுத்தியது. “பள்ளிகள் திறக்க அனுமதி இல்லை. ஆனால் தேர்வுகள் நிச்சயம். நீங்கள் படித்தே ஆகவேண்டும். எப்படியாவது குறைந்தபட்ச பாடங்களை மட்டுமாவது படியுங்கள். ஆண்டிராய்டு மொபைல் வைத்திருப்பவர்கள் வாட்ஸப்பில் ஆசிரியர்களோடு இணைந்து படியுங்கள்என்றார்கள். வகுப்புகள் நடைபெற்றன; ஆனாலும் நேரில் படிப்பது போன்ற ஆர்வம் எங்களுக்கு வரவில்லை. சில விடயங்கள் புரிந்தன பல விஷயங்கள் புரியவில்லை.

      ஒரு கட்டத்தில் நாங்கள் கூறினோம் இந்த வருடம் எங்களை விட்டுவிடுங்கள். அடுத்த வருடம் முழுவதுமாகப் படித்துவிட்டு மீண்டும் தேர்வு எழுதுகிறோம்என்று. தலைமை ஆசிரியர் கூறினார் அதற்கெல்லாம் வாய்ப்பில்லை. ஒரு வருடம் முழுமையாகச் சென்றுவிடும். நடக்காத ஒரு விஷயத்தை பேசிக் கொண்டிருப்பதைவிட, எப்படியாவது இந்த வருடத்தைச் சீரிய முறையில் கடந்து செல்ல ஏதாவது ஒரு வழியைத் தேடிவிடுவோம்என்றார்கள் அதன் விளைவாக பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்ட்ராய்ட் மொபைல்கள் பெற்றுத்தரப்பட்டன.

      ஒரு வருட காலம் மனதில் ஏற்பட்ட பயம் தற்சமயம் சற்று நீங்கி இருக்கிறது என்றால் அதில்  மாற்றுக் கருத்து இல்லை.

புதிய அனுபவம்

      இதற்கிடையில் செய்முறைத் தேர்வுகள் நடைபெற்றன. பள்ளிக்கு வந்த  எங்களுக்கு அது பல  புதிய அனுபவங்களைத் தந்தது. எப்பொழுதும் முகக் கவசங்கள் அணிந்து இருக்க வேண்டும், ஒருவரை ஒருவர் தொட்டுப் பார்க்கமுடியாது, எந்தப் பொருளையும் தொடக்கூடாது. இப்படிப் பல விதிமுறைகள்.  தொடாவிட்டால் என் நிலைமை என்ன? என் பார்வை தொடுதல் தானே! நான் என்ன செய்வேன்? பறிக்கப்பட்ட பார்வை மீண்டும் மீண்டும் பறிக்கப்பட்டது.

      இப்படியாகச் செய்முறைத் தேர்வுக்கு வந்த எங்களை  ஒரு பச்சிளம் குழந்தை போல் நடத்தியது  எங்கள் பள்ளிகைகளில் உறைகள், முகக் கவசம், 6 அடி இடைவெளி என்று ஒரு புதிய உலகை இங்கும் காணமுடிந்தது. நிறைய பேர் இங்கே ஒன்றாக இருந்தாலும் ஏதோ ஒரு தனிமை வாட்டி எடுக்கத்தான் செய்தது. .

      செய்முறைத் தேர்வுகள் சிறப்பாக நடந்துமுடிந்தன. இருந்தாலும், அடுத்து தேர்வு எப்பொழுது? அதை எப்படி எதிர்கொள்வேன் என்ற பயம் என் மனதை துளைத்துக்கொண்டுதான் இருக்கிறது.

      செய்முறைத் தேர்வில் எழுதவேண்டியவற்றை (Theory) நாங்கள் பதிலி எழுத்தர் துணையுடன்தான் (scribe) எழுதுவோம். அப்படி எனக்கு எழுத வந்தவரோடு ஒரு நெருங்கிய சூழலை ஏற்படுத்திக்கொள்ள என்னால் இயலவில்லை. அவர் அந்த மூலையில்நான் இந்த மூலையில். நான் கூறியவற்றை வைத்துக்கொண்டு அவர் எழுதியது ஒரு போர்க்களத்தில் எதிரிகள் போர்  புரிவது போல இருந்தது. முகக் கவசம் அணிந்திருந்ததால் என்ன கூறினேன் என்பதை அவர் சரியாகப் புரிந்துகொண்டாரா என்ற ஐயமும் எனக்குள் இருக்கவே செய்தது.

      எந்தச் சூழலிலும் என்னை நான் சமாளித்துக் முன்னேறியாக வேண்டும் என்பது  கொரோணா கற்றுக்கொடுத்த பாடங்களில்  ஒன்று. ஆனால் இவையெல்லாம் பார்வையற்ற எனக்குக் கூடுதலான மன வலியைத் தான் தந்தது”.

      இந்த மாணவனின் மன ஓட்டத்தை உங்களுக்குச் சரியாகக் கடத்தியிருப்பேன் என நம்புகிறேன். பள்ளியில் படிக்கும் மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளில் மிகச் சில துளிகளை மட்டுமே இம்மாணவனின் வழியாகப் பதிவுசெய்திருக்கிறேன்.

மாணவர்களை மறந்திடாத எங்கள் பள்ளி

       பார்வையற்றவர்களைக் கொண்ட  குடும்பங்கள் பெரும்பாலும் வறுமையின் சின்னமாகவே உள்ளன. பார்வையற்ற குழந்தைகளைச் சுமையாக நினைக்கும் பெற்றோர்கள் அவர்களுக்காக புதிதாக என்ன செய்துவிடுவார்கள் என்று பள்ளி நிர்வாகம் யோசித்தது. இங்கு இருந்தால் அவர்களுக்கு உணவு நிச்சயம்; தங்குமிடமும் நிச்சயம். ஆனால் இது சாத்தியமற்ற ஒன்று. அதோடு, அதற்கான அரசின் அனுமதியும் கிடைக்காது.

      இது இப்படி இருக்க மாணவர்களுக்கு எவ்வகையிலாவது உதவிட வேண்டும் என்று பள்ளி நிர்வாகம் முடிவுசெய்தது. அவர்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் பெற்று தருவது என்று முடிவு செய்யப்பட்டது. தலைமையாசிரியர், விடுதிக் காப்பாளர், ஆசிரியர்கள்  என அனைவரும் ஒன்றிணைந்து எங்கள் சம்பலத்திலிருந்து ஒரு சிறு பகுதியைக் கொண்டு உதவத் தொடங்கினோம். பள்ளியைத் தேடிவரும் நன்கொடையாளர்களிடம் மாணவர்களுக்கு உணவுப் பொருட்களைப் பெற்றுத்தருமாறு வேண்டினோம்.  சிலர் எங்கள் எண்ணத்தைப் புரிந்துகொண்டனர்பலர் புரிந்துகொள்ள மறுத்தனர். பரவாயில்லை. எங்கள் மாணவர்களுக்காகக்  கேட்பதுதான் எங்கள் வேலை என்று நாங்கள் இறங்கினோம். எங்கள்  விடுதிக் காப்பாளர் திருமதி வைர வள்ளி அவர்களது  துணையோடும், ஆசிரியர்களின் ஒத்துழைப்போடும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. நன்கொடையாளர்களின் நிதி ஒதுக்கீட்டிற்கு ஏற்ப  பொருட்களை வாங்கிக் கொடுக்கச்சொல்வோம்.

கனிவு காட்டிய கலெக்டர்

      மாணவர்களை ஒவ்வொருவராக அழைத்து அவர்களுக்குக் கொடுக்க முடிவு செய்யப்பட்டதுசரி மாணவர்களை எப்படி அழைப்பது என்று எண்ணிக்கொண்டிருந்த வேளையில், ‘பினோலெக்ஸ் பைப் என்ற நிறுவனம் எங்களை அணுகினார்கள். அவர்கள் தஞ்சை முழுவதும் சுமார் 200 மாற்றுத்திறனாளிகளுக்கு இவ்வாறான பொருட்களைத் தலைக்கு 5000 ரூபாய் வீதம் கொடுப்பதாகவும், தஞ்சை பள்ளிக்கும்  கொடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்கள்.. அதைத் தொடர்ந்து கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றவேண்டிய அவசியமும் கடமையும் இருந்ததால், மாவட்ட ஆட்சியரை அணுகினோம். “எம் பள்ளியில் எம் மாணவர்கள் 150 பேருக்கு தலா 5000 வீதம் உலர் உணவுப் பொருட்கள் வழங்குவதாக பினோலெக்ஸ் நிறுவனத்தினர் கூறுகின்றனர். மாணவர்களை அழைத்துக் கொடுப்பதற்கு பள்ளி வளாகத்திற்குள் அவர்களை அனுமதிப்பதற்குத் தங்களின் அனுமதி தேவைப்படுகிறதுஎன்று கேட்டோம்.

      எமது மரியாதைக்குரிய தஞ்சை மாவட்டத்தின் ஆட்சியர் அவர்கள் உடனடியாக கூறினார் மாணவர்களுக்கு  இத்தகைய அரும்பணிகளைச் செய்ய என்றுமே எனது அனுமதி தேவையில்லைபள்ளி நிர்வாகம் உங்களுடையது. விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டு மாணவர்களை எவ்வாறு அழைக்க வேண்டும் என்று திட்டமிட்டு அவற்றை பெற்று உடனடியாக வழங்குங்கள். இதற்கு அனுமதி உங்களுக்குத் தேவைப்படாது. நிர்வாகம் உங்களுடையதுஎன்றார்அவர் கூறியது எங்களைப் பெரிதும் மகிழ்ச்சி அடையச் செய்தது.

      விழாவிற்கு அவரையும் அழைத்தோம். வந்து   சிறப்பித்தார். 5,5 மாணவர்களாக தனிமனித இடைவெளியோடு பெற்றோர்களது  துணையோடு சரியான கட்டுப்பாட்டு நெறிமுறைகளோடு மாணவர்கள் தங்களுக்கான பொருட்களைப் பெற்றுச்சென்றனர்.

      அடடா! மாணவர்கள், பெற்றோர்கள் மனதில் எவ்வளவு மகிழ்ச்சி! மாணவர்களின் முகத்தில் எவ்வளவு புன்னகை! இதைக்காணத் தான் ஏங்கி கிடந்தோம். இந்த ஜென்மம் நிறைவு பெற்றது போல் ஒரு திருப்தி.

      இது போன்று பல நன்கொடையாளர்கள் உதவினர்.  அவரவர் நிதி நிலைக்கு ஏற்றார்போல மாணவர்களைத் தேர்வு செய்து உலருணவுப் பொருட்களைப் பெற்று வழங்க முடிவு செய்தோம். மாணவர்களைத் தேர்வு செய்வதில் எங்களுக்குள் சில விதிமுறைகளை வகுத்துக்கொண்டோம்.  

graphic மாணவர்களுக்கு உலருணவுப் பொருட்களை வழங்கிய படம்

       வறுமைக் கோட்டிற்குக்  கீழ் உள்ளவர்கள், ஒரே குடும்பத்தில் இருக்கும் இரண்டு அல்லது மூன்று பார்வைமாற்றுத்திறனாளிகள், ஒற்றைப் பெற்றோரால் வளர்க்கப்படுவோர், பெற்றோர் அல்லாமல் வேறு உறவினர்களிடம் வளரும் குழந்தைகள் முதலியோருக்கு முன்னுரிமை அளித்தோம். அவர்களுக்குக் கூடுதல் கவனம் செலுத்தி,, ஒரு முறைக்கு மேலும் உதவிகள் வழங்கப்பட்டன. எங்கள் பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் பலர் சிரமப்படுவதை அறிந்து அவர்களுக்கும் நன்கொடையாளர்கள் துணையோடு உதவிக் கரம் நீட்டினோம்.

சுமையைக் கொஞ்சமேனும் குறைத்திருக்கிறோம்

      பொதுவாக பார்வையற்றவர்கள் பற்றி தெரியாதவர்களுக்காக இந்த விளக்கம். பார்வையற்றவர்களைச் சுமக்க விரும்பாத, பாவத்தின் சின்னமாக எண்ணியிருந்த இந்தச் சமுதாயம் இன்று சுமக்க முற்படுகிறது என்றால் அதற்கு முக்கியக் காரணம், அவர்களால் பார்வை உள்ளவர்களுக்கு கிடைக்கக்கூடிய சில பல நன்மைகள் தான். அதே நேரம், தற்சமயம் பார்வையற்றவர்கள் குறித்த விழிப்புணர்வு மெல்ல துளிர்க்கத் துவங்கியுள்ளது என்பதையும் மறுப்பதற்கில்லை. சம்பாதிக்கும் பார்வையற்றவர்களில் பலர்  ஏடிஎம் மிஷின்களாகத்தான் அவர்களைச் சார்ந்தோரால் கருதப்படுகின்றனர். மாணவர்கள் மட்டும் இதில் விதிவிலக்கா என்ன?

      உலர்ந்த பொருட்களைப் பெற்றுக் கொடுக்கும்பொழுது தொடர்புடைய பார்வையற்றவர்களோடு அவர்களது குடும்பத்தினரும் சேர்ந்து தாங்களும் அதைப் பயன்படுத்திக் கொள்கின்றனர்

      எதுவும்  இல்லாத சூழ்நிலையிலும்  தங்கள் பிள்ளைகளுக்கு உணவு அளிக்கப்பட வேண்டும் என்று எண்ணும் மனநிலையில் புழுங்கிக்கொண்டிருக்கும் பெற்றோர் அவர்களை இன்னும் சீரிய முறையில் பார்த்துக்கொள்ள முற்படுவார்கள். அவர்களைச் சுமையாக நிணைக்க மாட்டார்கள்.

      இப்படியாக உணவுப் பொருட்களையும், அரசாங்கத்திலிருந்து கிடைக்கக்கூடிய ஒவ்வொரு சலுகையையும், சரியான நேரத்தில், சரியான முறையில், சீரிய வழிகாட்டு நெறி முறைகளோடு அவர்களுக்குப் பெற்றுத்தந்தோம்.

      இதுமட்டுமன்றி மாணவர்கள் படிப்பதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தபோது, எப்படியாவது மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளை நடத்திட ஏற்பாடு செய்திட வேண்டும் என முற்பட்டோம். அதைத் தொடர்ந்து பல பேரிடம் ஏதாவது ஒரு வசதி செய்து தர முடியுமா எனக்  கேட்டுக்கொண்டோம். அதன் வாயிலாகத் தான் எங்களுக்கு N.I.V.H நிறுவனத்திலிருந்து   கிடைத்தது ஆன்டிராய்டு மொபைல் போன்கள்.   அந்த போன்களை வாங்கி மாணவர்களுக்கு உடனடியாகக் கொடுத்தோம். இன்று அவர்கள் கையில் ஆண்ட்ராய்ட் மொபைல் போன்கள். சீரிய முறையில் ஆன்லைன் வகுப்புகள்  துவங்கப்பட்டுள்ளன. இது மாணவர்களது மன நிலையை சற்று மாற்றி அமைத்துவிடலாம். இது இறுதியான தீர்வு இல்லைதான் என்றாலும், பயனுள்ள தீர்வே.

      காலத்தைச் சீரிய முறையில் பயன்படுத்திக்கொள்ள அறிவுரைகள் வழங்கிவருகிறோம்நம்மை நாமே பாதுகாத்துக்கொள்ளவேண்டும். பார்வையற்றவர்கள் பெரும்பாலும் தன்னம்பிக்கை மிகுந்தவர்களாகவே இருக்கிறார்கள். ஆனாலும், கொரோனா நம்மை எவ்வாறெல்லாம் பாதித்திருக்கிறது என்று நமக்குத் தெரியாமல் இல்லை. தனித்த ஒரு உலகத்தில் நம்மை அது தள்ளிவிடத் தான் செய்தது.

      கொரோனாவோடு  வாழ பழகிக்கொண்ட பார்வை உள்ளவர்களைப்  போல பார்வையற்றவர்களும் பழகிக்கொள்ளத் தான் நினைக்கிறோம். ஆனால் அவர்களைத் தாண்டி என் உலகம் வேறு, என் தொடுதல் வேறு, என் பார்வை வேறு, என் சிந்தனை வேறு என்று பார்வையற்றவர்கள் ஆகிய நாம் வாழ வேண்டி இருக்கிறதுஏனென்றால், நமது விரல் நுனிகள் விழிகளாய்  மாறிப் போயிருக்கிறது. இந்த மனநிலை எவ்வாறு மாற  வேண்டும் என்பது குறித்து நாம்  யோசிக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம்.

      நம் கையே நமக்கு உதவிஎன்பதுதான் உண்மை. நம் கைகளை நாம் சீரிய முறையில் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். தனியாக நாம் எல்லா இடத்தையும் கடந்துவிட முடியாது. ஆனால் முடிந்த இடங்களைத் தனியாகக் கடக்க முயற்சிக்கலாம்.

      எனக்காக வேறொருவர் என் வேலைகளைச் செய்வார் என்று மற்றவரைச் சார்ந்திருக்காமல், என் வேலைகளை நான் செய்து கொள்வேன் என்ற நிலைக்கு நம்மை நாம் மாற்றிக் கொள்ளலாம்.

      பிறரிடமிருந்து தள்ளியிருப்பது போன்ற விஷயங்கள் நமக்குப் பழகிப்போய் விட்டன. இருந்தாலும் தொடுதல் என்பது நமது அத்தியாவசியத் தேவை. தொடுதல் இல்லாமல் நாம் இல்லை என்றபொழுதில் நாம் உரிய நேரங்களில் கைகளைக் கழுவுவது, கிருமி நாசினிகளைக் கைகளில் பூசி சுத்தம் செய்துகொள்வது முதலியவை  மூலமாகவும் நம்மை நாம் பாதுகாத்துக்கொள்ளலாம்.

      நம்முடைய ஆளுமையை நாம் சரியாக பயன்படுத்தி வந்தோமானால் கொரோனாயோடு நாம் வாழ எளிமையாக இருக்கும்

      அதோடு, நம் மனதையும் நாம் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும் மனமும் உடலும் ஒன்றிணையும் போதுதுதான் சக்தி பிறக்கிறது. அந்த சக்தியை நாம் சீரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதுதான் இங்கு தாரக மந்திரம்.

graphic கட்டுரையாளர் சோஃபியா மாலதி அவர்களின் படம்
கட்டுரையாளர் சோஃபியா மாலதி

 

(கட்டுரையாளர் தஞ்சை பார்வைக் குறையுடையோருக்கான அரசு மே.நி பள்ளியின் தலைமை ஆசிரியர்).

தொடர்புக்கு: sophiamalathi77@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக